கீழ்வானில் ஒரு நட்சத்திரம்
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 51

(கிறிஸ்துமஸ் கவிதை)
கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கினாள். வறுவேலம்மாள் டிரைவருக்கு பணம் கொடுத்து விட்டு ஜார்ஜ் மிஷன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த போது, அப்போது தான் இடலாகுடி இரயில்வே சந்திப்பிலிருந்து வந்த விக்டர், “என்ன வறுவேலம்மா எங்கே ஆஸ்பத்திரிக்கு” என்று கேட்டார்.
“வாங்கண்ணே மும்பையிலிருந்தா வர்றீங்க. கிறிஸ்மஸ் கொண்டாட வந்திருப்பிய. அக்கா சில்வியா வீட்டிலே காத்திருப்பாங்க. கிளம்புங்க. எம் பையனுக்கு ஒரு ஆக்ஸிடெண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்குன்னாங்க. அதான் வந்தேன்”. பதட்டத்துடன் அழ ஆரம்பித்தாள்.
“சும்மா அழாதே. உம் பையனுக்கு ஒண்ணும் ஆயிருக்காது. வா ஆஸ்பத்திரியிலே போய் பார்த்துட்டு வரலாம்” என்றார் விக்டர்.
“நீங்க வீட்டுக்கு கெலம்புங்க. நீங்க வந்த பொறவு தான் இயேசு பாலன் குடில் கட்டி முடிச்சதுல்ல. ஏதேதோ செய்யனும்னு தாமரை குளம் சர்ச்லே பேசிக்கிட்டிருந்தாக. ஏற்கனெவே இருட்டல் போடுது. நடு ராத்திரி பூசைக்கு எல்லாம் தயார் செய்யனும். நீங்க கெளம்புங்கண்ணே” என்றவாறு பதட்டத்துடன் உள்ளே “இறைவா உம்முடைய கோயிலிலே சேவை செய்றவங்களையே ஏன் சோதிக்கியாது. முதல்லே இப்படி தான் போன உயிர்ப்பு விழாவிற்கு கொடி கட்டிகிட்டிருந்த என் புருஷனை பறிச்சிகிட்டியரு. இப்பம் எனக்கு எல்லாமா இருக்கும் என் ஒரே பையன் விஜய்க்கும் இந்த மாதிரி விபத்து”ண்ணு சொல்லிக் கோபமாக கொதித்துக் கொண்டே மருத்துவ மனைக்குள்ளே நுழைந்த போது எதிரே வந்தார் விக்டர்.
“அண்ணே நீங்க…”
“கவலைப் படாதே. நான் லிப்டிலே மேலே வந்தேன். உன் பையனுக்கு கையிலே சின்ன அடி. வேறே ஒண்ணுமில்லே. கட்டுப் போட்டுக் கிட்டிருக்காங்க. கொஞ்ச நேரத்திலே ஒரு இஞ்ஜெக்ஷன் போட்டு அனுப்பி விட்டிருவாங்க” என்றவர் வறுவேலம்மாளை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றார்.
கட்டுப் போட்டுக் கொண்டிருந்த விஜயை பார்த்ததும் வறுவேலம்மாள் ஓ வென்று கதற “ஸ…ஸ்…இது ஆஸ்பிட்டல். யாரும் அழக் கூடாது” என்று சிஸ்டர் அதட்டினார்.
“ஒண்ணுமில்லேம்மா பைக்கிலே வரும்போது கீழே விழுந்ததிலே சின்ன அடி. வேறே ஒண்ணுமில்லே” அம்மாவைத் தேற்றினான் மகன் விஜய். “நடு ராத்திரி பூசைக்குள்ளே போய் சேரமுடியும். பாலன் குடில் வேறே முடியலயாம். போனுக்கு மேலே போன் வருது. உன்னிடம் பணமிருக்கா. கட்டி விட்டு கிளம்பலாம்” என்றார் விக்டர்.
“அப்போ அவரசத்திலே அதிகமாக பணம் எடுத்துட்டு வரலியே”. திரும்பவும் வறுவேலம்மாள் அழ ஆரம்பிக்க, “சரி, கண்ணைத் துடைச்சுக்க நான் பணம் கட்டிட்டு வர்றேன். நீ அவனுக்கு ஊசி போட்டுட்டு வா. சீக்கிரம் கெளம்புனா தான் பூசைக்குப் போய் சேரமுடியும்” என்றவாறு விக்டர் பணம் கட்டப் போனார்.
எல்லோரும் சேர்ந்து திரும்ப ஆட்டோவில் தென்தாமரை குளம் வர, தேவாலயம் வண்ண விளக்குகளினால் பிரகாசிக்க, “நான் கோயில்ல இறங்கிக்கிறேம்மா. நீ வீட்டுக்குப் போய் பையனும் நீயும் சாப்பிட்டுட்டு புறப்பட்டு பூசைக்கு வாங்க” என்றவாறு “கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்” என்ற விளக்கின் வெள்ளத்தில் இறங்கிக் கொண்டார்.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
