கார்
கதையாசிரியர்: ஜெயந்தி சங்கர்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 76

வேண்டாமென்று போனில் அத்தனை வற்புறுத்திச் சொல்லியும் தான் சொன்னபடியே வந்துவிட்டிருந்தார் மணி. சாங்கியில் ‘செக் அவுட்’ செய்து நான் வெளியேறும் போது வலக்கையை ஆட்டியபடி மணியின் அண்ணாவைப் போல நின்றிருந்தார். கடந்தோடியிருந்த ஐந்து வருடங்கள் ‘ஓய்வு’ வேண்டிய அவரது உருவத்தில் படிந்திருந்தன பத்து வருடங்களாக.
“ஹாய் ராம், எப்படியிருங்கீங்க? அன்னிக்கி பார்த்தாப் போல! கான்ஃபரன்ஸ் என்னிக்கி வரைக்கும்? உம்… வாங்க போகலாம்..” என்றபடி என் வலக்கையைப் பிடுங்கிக் குலுக்கிக் கொண்டே என் வண்டியைத் தள்ள முன் வந்தார். “உம், நல்லா இருக்கேன். அப்புறம் உங்க சன்ஸ், வொய்ஃப் எல்லாரும் எப்படியிருக்காங்க? ஒரு வாரம் நா இங்க இருப்பேன்,” என்ற படியே உடன் நடந்தேன். அவரது முகங்கள் உள்ளூரிலேயே நல்ல வேலைகளில் செட்டிலாகிவிட்டிருந்தனர்.
வேலை, அமெரிக்கப் பொருளாதாரம் என்று ஏதேதோ பொதுவாகப் பேசிக் கொண்டே நடந்தார். டாக்ஸி நிறுத்ததைத் தாண்டிப் போனவரை, “மணி, உங்களுக்கு ஏன் சிரமம். நான் டாக்ஸி எடுத்து போய்க்கிறேனே. ‘ஆல்பர்ட் கோர்ட்’ல ரூம் போட்டிருக்கேன்.” என்றதும், “என்ன ராம் இதே ரூம்ல தான் தங்கணுமா? சரி, நா டிராப்பாவது பண்றேனே,” என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல், அவர் தன் காரை எடுத்துக் கொண்டு வரும்வரை நின்றேன். பிஸ்கட் நிறத்தில் லெக்ஸஸ் புது மாடல் பளபளவென்றிருந்தது. வெண்ணையாக வழுக்கிக் கொண்டு நின்றது.
இரண்டு பெட்டிகளையும் பின்புறம் அடுக்கினேன். “என்னோட காரை நீங்க பார்க்க வேண்டாமா. அதுக்குத் தானே வந்தேன்,” என்று மணி சொன்னாற் போல ஒரு பிரமை, நான் ஏறி உட்கார்ந்து கொண்டதுமே கிளப்பிக் கொண்டு விரைவுச் சாலையினுள் செலுத்தினார்.
திருமணத்திற்குப் பிறகு, கடந்த ஐந்து வருடங்களாய் கலிபோர்னியாவில் வாசம், நெடுந்தூரம் பயணம் செய்ய காரில்லாமல் முடியாதென்று நானும் நித்யாவும் ஆளுக்கொன்றை வைத்திருக்கிறோம்.
அதற்கு முன்பு சிங்கப்பூரில் தான் இருந்தேன். சிங்கப்பூரில் கார் வைத்துக் கொள்வதற்கும் யானையைக் கட்டித் தீனி போடுவதற்கும் ரொம்பப் பெரிய வித்தியாசமில்லை. சாலை வரியே ஆளை முழுங்கும். தீவின் அளவை ஒப்பிடும் போது, ஓடும் டாக்ஸிகள் ஏராளம். இலகு ரயிலும், பேருந்தும் வெண்ணையாய் வழுக்கிக் கொண்டோடும் போது பயண அலுப்பெல்லாம் தெரியவே தெரியாது. ஒரு அந்தஸ்துக்கும், ஒரு குடும்பத் தனிமைக்கும் அதிக முக்கியம் கொடுக்கும் நபர்கள் நிச்சயம் கார் வாங்கி வைத்திருப்பார்கள். எப்படியிருந்தாலும், சிங்கப்பூரில் கார் வைத்துக் கொள்வது கிட்டத்தட்ட ஆடம்பரமே.
“உம், யூஎஸ்ல காரெல்லாம் இங்கவிட ரொம்ப ரொம்ப சீப் இல்ல?,” என்று ஆரம்பித்தார் மணி. “சீப்போ இல்லையோ, கார் இல்லாம முடியாது. அவ்ளோ தான்” என்றேன். பிறகு அவர் பேச்சு பீட்டில், மினி கூப்பர், வோக்ஸ்வாகன், மினி வேன் என்று கிளம்பி அக்கார்ட், ஹோண்டா, டொயோட்டா, பீஎம்டபிள்யூ, கரோலா என்று முழு வேகத்துடன் ஓடி க்ரூஸ்ர், முரனோ, க்ராண்ட் கேரவன் என்று திரும்பியது. ஒவ்வொன்றின் விலை, சாதக பாதகங்கள், உருவம் என்று பேச்சு ஒரே ‘கார்’ மயமாகிப் போனது காருக்குள்.
லெக்ஸஸ் பற்றி நான் கேட்கவே காத்திருந்தாற் போல், தான் ஒரு வருடம் முன்பு தான் எப்படி ‘நுகர்வோர்’ இதழ், படித்து, ஆராய்ந்து, பல ஏஜெண்டுகளிடம் விசாரித்து சிங்கப்பூரின் சாலைவரி குறைந்திருந்த நேரத்தில் சமயோஜிதமாய் பதிவு செய்தார் என்று வளவளவென்று விளக்கினார்.
விரைவுச் சாலையில் வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டே வந்தேன். அதே வெளிர் வெள்ளை வெயில். மேலும் அதிக கட்டடங்கள் முளைத்திருந்ததைத் தவிர வேறு பெரிய மாற்றங்கள் இருக்கவில்லை சிங்கப்பூரில்.
மணி கொஞ்சம் மாறியிருந்தாற்போலத் தோன்றியது. முற்றிலும் தற்பெருமையில் முன்போலத் திளைக்காமல் சாதாரணமாகவும் தனக்குப் பேசத் தெரியும் என்று நிச்சயம் காட்டிக் கொள்ளப் பிரயத்தனப் பட்டதாகவும் தெரியவில்லை. அவரில் ஏற்பட்டிருந்த மாற்றம் தான் காரணம். எனக்காக வாரயிறுதியைச் செலவழித்தது மில்லாமல் காரை எடுத்துக் கொண்டு வந்து கூட்டிக் கொண்டு போவதென்றால், மணி நிச்சயம் மாறித் தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
முன்பு என்னுடன் பணியாற்றும் போது இருந்த மணி கொஞ்சம் வேறு மாதிரியானவர். தற்பெருமையும் அதுசார்ந்த குழப்பங்களும் அதுவும் தன் வாகன சம்பந்தமாக மிக அதிகம்.
ஒரு முறை பாஸிர் ரிஸில் ‘ஆனுவல் டே’ கொண்டாட்டத்துக்குக் கிளம்பிய போது கார் இருந்தவர்களோடு இல்லாதவர்களையும் என்னைப் போன்ற தனியாட்களையும் கோர்த்து விட்டிருந்தது நிர்வாகமே. நான் கிளம்பி மாடியிலிருந்து கீழேயிறங்கிய போது, பத்தடி தொலைவில் கண்சிமிட்டிக் கொண்டே மணியின் ப்ரோட்டான் சாகா நின்று கொண்டிருக்கவே, ‘அடடா, காத்திருக்க வைத்து விட்டோமே,’ என்று சிறு குறுகுறுப்போடு குடுகுடுவென்று ஓடினேன். “உம்… எதுக்கு இந்த ஓட்டம்? ஒங்கள விட்டுட்டுப் போயிடுவோமா என்ன?” என்றாரே பார்க்கலாம். எனக்கு மிகவும் கூச்சமாகிப் போய்விட்டது. பதின்ம வயதைத் தாண்டியிருந்த அவர் மகன்களின் முகங்களில் சலிப்பு அப்பட்டமாய் தெரிந்தது. மனைவியின் முகம் கவனமாய் இறுகிக் கிடந்தது.
ஒரே வட்டாரத்தில் வசித்ததால், சில நாட்கள் காலையில் கிளம்பும் போது, வழியில் பார்த்தால் ஏறிக் கொள்ளச் சொல்வார். “இட்ஸ் ஓகே நான் எமார்டீல வந்துக்கறேன்” என்று தவிர்த்ததுண்டு நான். அதன் பிறகு வந்த நாட்களில், ஆபீஸ் முழுக்க, “ரகுவுக்கு ஆனாலும் இவ்வளவு தாழ்வு மனப்பான்மை கூடாது,” என்றெல்லாம் பேசிபேசித் தன்னை ‘பிறர்க்கு உதவ காத்திருக்கும் கோவலனா’கவும், என்னை கார் வாங்கவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையில் புழுங்கும் ‘புழு’வாகவும் சித்தரித்து மகிழ்ந்தார்.
சரி, கூப்பிடுகிறாரே என்று நினைத்து ஏறி பின்புறம் உட்காரப் போனால் முன்னால் உட்காரச் சொல்வார். எப்போது என்ன சொல்வார் என்று புரியாது. அவரைப் பற்றித் தெரிந்த பிறகு தான் மனதளவில் தயாராய் இருக்க ஆரம்பித்தேன். கார் நகர்ந்தது கொஞ்ச தூரத்திலேயே செக்ஷன் மானேஜர் திரு. வோங்க் அல்லது வேறு உயர் அதிகாரி ஏதோ காரணத்திற்காக அன்று காரில் வராமல், டாக்ஸிக்கு நின்று கொண்டிருந்தால், உடனே நிறுத்தி ஏற்றிக் கொள்வார். அது போன்ற சமயங்களில், என்னை இறங்கி பின்னால் ஏறிக் கொள்ளச் சொல்வார்.
வேறு ஒரு முறை இதே போல ஏறிய திரு. அஹமத் அவர்களை முன்னால் உட்காரச் சொல்லிவிட்டு என்னை இறங்கிப் பின்னால் ஏறிக் கொள்ளச் சொன்னார். அஹமத் அன்று விடுப்பெடுத்திருந்ததால், பாதி வழியில், இறங்கிக் கொண்டார். அப்போது உடனே, என்னைப் பின்னாலிருந்து முன்னால வரச் சொன்னார். வற்புறுத்தி ஏறச் சொல்லிவிட்டு, முன்னாடி பின்னாடி என்று படுத்தும் மணிக்காகவே வேறு வீடு பார்த்து விடலாமாவென்று யோசித்ததுண்டு.
அவருக்கு சாரதியாக இருக்கவும் ஆசை, பார்த்தனாக இருக்கவும் ஆசை. ஆனால் யாருக்கு சாரதி அல்லது யார் தனக்கு சாரதி என்பதில் தான் மணிக்கு குழப்பமெல்லாம், குழப்பத்தைத் தீர்க்க உதவலாமென்று நினைத்து நகருய்யாவென்று பின் இருக்கைக்குப் போகச் சொல்லிவிட்டுப் பேசாமல் நானே ஓட்டி விடலாமா என்று தான் துறுதுறுவென்று பரபரக்கும். சொன்னால் சரியென்று பின்னால் போவாரா என்றால் அது மட்டும் நடக்காதே. ‘பெண்டாட்டி, பேனா, காரு இதையெல்லாம் நம்மளோட ஒருத்தர் கைப்பட வச்சிருந்தா தான் மதிப்பு,’ என்ற தன் அச்சுப்பிச்சு வியாக்கியானங்களை ஆரம்பித்து அறுத்துத் தள்ளிவிடுவார் மனுஷன்.
இரவு உணவிற்கு வீட்டிற்கு அழைத்திருந்தார் மணி என்னை. மறுக்க முடியாமல் போனேன். அவரது மனைவி எப்போதும் போல சிரித்த முகத்துடன் வரவேற்றார். பரஸ்பரம் விசாரிப்புகள் முடிந்தன. அவர்களுடைய இரண்டு மகன்களும் வளர்ந்து பெரியவர்களாகி விட்டாலும் இன்னமும் என்னை மறக்காதிருந்ததும் அவர்களின் வளர்ச்சியும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருவரும் நல்லவேளை குணத்தில் தாயைக் கொண்டிருந்தனர் என்றும் உடனே தோன்றியது.
மணி வெளியில் சென்றிருந்தார். சீக்கிரமே திரும்பி விடுவார் என்று சொன்னார் அவர் மனைவி. ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றினாலும் என்ன பேசுவது என்று தான் புரியவில்லை. நல்லவேளை திருமதி மணி பேச்சை ஆரம்பித்தார். அமெரிக்க வாழ்க்கையைப் பற்றியும் நித்யாவைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார். மெதுவாக தன் மகன்களுக்கு நல்லபடியாக மணம் முடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு, அமெரிக்காவில் ஏதும் நல்ல பெண் இருந்தால், தனக்குத் தெரிவிக்கும்படியும் சொன்னார். அப்போது தான் மணி உள்ளே நுழைந்து சட்டென்று எங்களின் உரையாடலில் புகுந்து கொண்டார்.
மணியின் மனைவி சமையலறைக்குள் போனார். மணி கொஞ்சம் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு, “ராம், ரெண்டு பேரும் நல்லா படிச்சிருக்காங்க. கைநிறைய சம்பாதிக்கறாங்க. இருந்தாலும் சொல்லி வச்சா மாதிரி, கலயாணத்துக்கு கண்டிஷன், ஒண்ணே ஒண்ணு. வாழ்க்கைல கார் மட்டும் வாங்க மாட்டாங்களாம். வரப் போறவ கார் வாங்க மட்டும் சொல்லக் கூடாதாம் என்ன முட்டாள்த்தனமோ… இதுக்காகவே வர சான்ஸ் எல்லாத்தையும் விட்டுட்டு, யூஎஸ் போகாம இங்கயே இருக்காங்க ரெண்டு பேரும்… பச்… எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். ஹும்ஹும், ஒண்ணுமே கேக்கறதாயில்ல. வர அலையன்ஸ் எல்லாமே தட்டிப் போயிட்டிருக்கு,” என்றார்.
மகன்களின் மனப்போக்கிற்குத் தான் தான் காரணம் என்றறிந்து கொண்டே பேசினாரா, இல்லை அதை உணராமலே பேசினாரா என்று தான் எனக்குப் புரியவில்லை. மணி கொஞ்சமே கொஞ்சம் மாறியிருந்தாலும் மிகவும் தாமதாகிவிட்டிருந்ததோ, சாப்பாடு அதிக ஆர்பாட்டங்கள் இல்லாமல் நிறைவாயும், சுவையாகவும் அமைந்தது. காத்திருந்தாற் போல இரண்டு மகன்களும் விடைபெற்றுக் கொண்டு அவரவர் அறைக்கு விரைந்து சென்றுவிட்டனர்.
![]() |
சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க... |
