காய்த்த மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 142 
 
 

அவர்தான் இன்று உயிரோடு இல்லை மாநிலநிர்வாகம் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்குவது என்பதை ஏனோ தானோ என்கிற அளவிலாவது நடத்திக்கொண்டு தான் இருக்கிறது. என் நண்பர் விபாச. அவரது கட்டுரை நூலுக்கு விருது என்று அரசு அறிவிப்பு வந்திருக்கிறது. விபாச என் சஹிருதயர். அப்படித்தான் அவர் என்னை அழைப்பது வழக்கம். தனது இலக்கியப்படைப்புக்களை ஓய்வென்பது கொஞ்சமும் இல்லாமல் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருந்தார். பெரும்பாலும் சிற்றிதழ்களில்தான் அவை கம்பீரமாக உலா வந்தன.

தஞ்சாவூரில் இருந்து வெளிவரும் இலக்கியச் சிற்றிதழ் ‘அழகு இனியன்’ அவர் எழுதிய அந்தக் கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டுவந்தது. அந்த சிற்றிதழின் ஆசிரியருக்கும் தெரியாமல் இல்லை இல்லை இது விஷயம் தெரியப்படுத்தாமலே அவைகளை எல்லாம் தொகுத்து குறிஞ்சிப்படி என்னும் கிராமுமில்லாத நகரமுமில்லாத ஒரு ஊரை மையமாக வைத்து இயங்கும் ஒரு பதிப்பகம் வெளியிட்டது.

இந்த விவகாரத்தில் விபாசவுக்கும் அந்த சிற்றிதழாசிரியருக்கும் சின்னதொரு மனத்தாங்கல். ‘ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமுல்ல. கட்டுரைகள் புத்தகமாக வெளிவருகிறதுன்னு எனக்கும் மகிழ்ச்சி தானே. புத்தகமா வந்த பிறகு யாரோ சொல்லித்தான் பாத்தேன்.’ விபாசவுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதித்தன் வருத்தத்தைக் குறிப்பிட்டிருந்தார். அந்த இனியனும் அவசர அவசரமாக இவ்வுலக வாழ்க்கைப் போதுமென்று போய்ச் சேர்ந்தார்.

எழுத்தாளர் விபாச அந்த நூலை விருதுக்கு என்று அனுப்பி வைத்துவிட்டு இரண்டு மூன்று ஆண்டுகள் காத்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால் அரசாங்கம் விருது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் செய்யவில்லை.

அரசாங்கத்திற்கு என்று நொடிக்கு நொடி ஜனிக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் அவைதான் கொஞ்சமா என்ன, அங்கங்கே சொல்லி மாளாத ஆயிரம் சிடுக்குகள். சரிவுகள் சங்கடங்கள் இடிகள் பேரிடிகள் பூகம்பங்கள். ஒரு நிர்வாகம் என்பது லேசில்லை. அதுவும் ஒரு ராஜாங்கம் என்றால் சொல்லவா வேண்டும். ‘இவைகளும் இல்லாதிருந்தால் விபாசவுக்குத்தான் எங்கே இந்த விருது கிடைத்திருக்கப் போகிறது. யாராவது களை வெட்டித்தான் இருப்பார்கள்’ இப்படிக் கூட இலக்கிய அன்பர்கள் பேசிக்கொள்ளத்தான் செய்தார்கள்.

விபாச உயிரோடு இருந்து இந்த விருது வாங்கத் தலை நகர் சென்னைக்கும் வந்திருந்தால் எத்தனையோ மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவருக்கும் அத்தனை நிறைவு ஏற்பட்டிருக்கும். விருப்பங்கள் இல்லாமலா. ஆயிரம் இருந்திருக்கும். ஆனால் அப்படி எல்லாம் நிகழவில்லை. வினைதான் முடிந்த பின்னே ஒரு தினை போதும் இங்கே நில்லாது கண்டாய் என்கிறார்களே. அப்படித்தான் விபாச விடைபெற்றுக் கொண்டார்.

நான் போய் சடலத்தை பார்த்தேன். பம்பரமாய்ச் சுழன்று ஆயிரம் செய்தி சொல்லும் சொல்லும் அவரது கண்கள் மூடிக் கிடந்தன. நெற்றியில் மூன்று குறுக்குப்பட்டை திருநீறு. வெற்றிலையை கசக்கிச் சுருட்டி உருண்டையாய் சடலத்தின் வாயில் வைத்திருந்தார்கள். நண்பர்களைப் பார்த்துவிட்டால் ஓயாமல் நெகிழ்ந்து நெகிழ்ந்து பேசும் அந்த தெய்வம் அங்கே நீட்டிக் கிடந்தது. கால்கட்டை விரல்களைக் கிழிந்த வெள்ளைத்துணியால் பிணைத்துக் கட்டியிருந்தார்கள். என் சக்திக்கு மாலை ஒன்று வாங்கிப் போட்டேன். பாதம் தொட்டு வணங்கினேன்.

விருதுக்கு அவர்த் தேர்வான சேதியும் அது தொடர்ந்து ஒரு இரண்டு நாட்களில் நிகழவுள்ள ஒரு சம்பிரதாய விருது வழங்கு விழாவும் சென்னையில் எங்கே எப்போது இது விஷயம் பதிப்பகத்தாரிடம் சொன்னர்கள். எல்லாமும் அப்போது அப்போதே தான் தொலைபேசியில் சொன்னார்கள்.

‘பதிப்பகத்தார் என்கிற முறையில நீங்க உங்க பரிச வாங்க வர்ரீங்க. ஏன் சார் அந்த நூலாசிரியர் விபாச ஏன் டெலிபோன போட்டா எடுக்கமாட்டேன்றாரு’

‘அய்யா இப்ப இல்லயே’

‘வெளி நாடு ஏதும் போயிருக்குறாரா’ விருது வழங்கு அலுவலகத்து அதிகாரி மீண்டும் அந்த பதிப்பாளரைக் கேட்டார்.

‘என்ன சார் இது. அந்த படைப்பாளி அய்யா இப்ப உயிரோட இல்ல. காலம் ஆயிட்டாங்க’

‘ அடடா விஷயம் என்ன கடைசியில இப்பிடி ஆயிடிச்சி. சாரி சார். வேற எதாவது போன் நெம்பர் அவரு மனைவிக்கு இல்லை வாரிசுகளுக்கு உங்ககிட்ட இருந்துன்னா எனக்குக் கொடுக்க முடியுமா’

‘அப்படி எல்லாம் நமக்கு பழக்கம் இல்லங்க. அவருகிட்ட தான் பேசுவும் கொள்ளுவோம். அவுரு உயிரோட இல்ல. அவுரு போன் நெம்பரு கட் பண்ணியிருப்பாங்க’ பதிப்பகத்தார் பதில் சொன்னார்.

‘சார் ஒரு உதவி. அவுங்க குடும்பத்துல அவுரு மனைவி இல்லன்னா அவுரு பிள்ளைங்க யாருக்காவது இந்த சேதி போயி அவுங்க வருவாங்களா’

‘எனக்கு அந்த பக்கம் போற வேல ஒண்ணும் இருக்கு. நான் போயி கேட்டுப் பாக்குறேன்’

‘ரொம்ப சந்தோஷம். அப்படியே செய்யுங்க. வேற ஏதாவது விஷயம்னா உங்ககிட்ட தொடர்பு கொள்றேன்’

‘சரி சார், நான் வச்சிடறேன்’ பதிப்பகத்தார் முடித்துக்கொண்டார்.

அருகிலுள்ள சிறு நகரம். அங்கே படைப்பாளர் வாழ்ந்திட்ட இல்லம் பதிப்பகத்தாருக்குத் தெரியும். அவர் வீட்டருகே ஒரு பேருந்து நிறுத்தம். அதனில் இறங்கி நடந்து போனார். அந்தப் புறநகரின் பாரதியார் தெருவில் மையமாக எழுத்தாளர் விபாசவின் வீடு. ஒவ்வொரு பொருளையும் தானே பார்த்து பார்த்து வாங்கிக் கட்டிய அழகு வீடு. பார்க்க வெறிச்சென்று கிடந்தது. அவர் உயிரோடு இருக்கும் வரை அரவம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். ஏதாவது குரல் கொடுத்துக் கொண்டேயிருப்பார். இல்லை அவரைப் பார்க்க யாரேனும் வந்து போவார்கள். பதிப்பாளர் விபாச வீட்டு வாயில் இரும்பு கேட்டினைத் தட்டினார்.

‘ஆரு’

‘அம்மா, நானு குறிிஞ்சிப்பாடி. பொஸ்தகம் போடரவரு’

‘தெரியுமே. வாங்க. என் அய்யா இல்ல. அவுரு இல்லாம நீங்க வர்ரது இதுதாம் மொத நடை’

‘இப்ப ஒரு நல்ல சேதி. அய்யா எழுதின ஒரு கட்டுரைப் புத்தகம். அரசாங்கப் பரிசுக்குத் தேர்வு ஆகியிருக்கு’

‘அப்படியா.சாரு இல்ல. இது கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவாரு. அவுரு இல்ல. நா ஒரு மக்கு. அவுரு இருந்தவரைக்கும் அவர எங்க நான் புரிஞ்சிகிட்டன்’ எல்லோரும் சொல்வது மாதிரியே அவரும் சொல்லி முடித்தார்.

‘விருது மரியாதைங்க இதுக வாங்க அம்மா நீங்க சென்னைக்கு போய் வருவிங்களா’

‘எந்த கதயை நா சொல்லுவன். அய்யாவுக்கு தல திதி குடுத்துப் பிறகுதான் இந்த ஊரை எல்லய தாண்டுலாம். எங்க பழக்கம் அப்பிடி’.

‘சரிதாங்க.உங்க பையன் வருவாருங்களா’

‘அவன் ஒரு பேங்குல ஆபிசரு. அதான் அப்பா சாவுக்கும் பெற காரியத்துக்கும் லீவு எடுக்கவே பெரும் பாடு பட்டான். வேணும்னா கேட்டுப்பாருங்க. அடுத்த வூடு. அய்யாதான் வீடு கட்டி குடுத்தாரு. பையனை பக்கத்துலயே குடியும் வச்சீருக்குறாரு’

‘சரி நானு அவரை பாக்குறன். பாப்பா எங்க இருக்குது?’

‘அது எங்க இங்க இருக்கு. சாரு படிக்க வச்சி ஆளாக்கினாரு. இன்ணைக்கு அங்க பெரிய ரொபசரா வேலை பாக்குதுல்ல. கட்டிகுடுத்ததுலேருந்து அது மொரிஷிஸ் நாட்டுலதான இருக்கு. அய்யா சாவுக்கு வந்துது போச்சி’

‘தெரியுங்க. நானும் கொழந்தயில பாப்பாவ பாத்து இருக்கேன்’.

‘தம்பிய கேட்டுபாக்குறன்’ அவர் விடை பெற்றுக்கொண்டார். வாயிற்கதவு மீண்டும் சாத்திக்கொண்டது. பதிப்பாளர் அடுத்த வீடு சென்று நின்றுகொண்டார். அந்த வீடும் விபாச வீட்டு அந்த காம்பவுண்டுக்குள்ளேயே கம்பீரமாக இருந்தது. எழுத்தாளரின் மகன் வீட்டுத்தோட்டத்திலிருந்து கையில் மாம்பழங்களோடு வாயிலுக்கு வந்தார். அருகிலுள்ள விவசாயப் பண்ணையிலிருந்து விபாச வாங்கி நட்டுவைத்து வளர்த்த அல்போன்சா மரம். பழுத்துத்தொங்குகிறது.

‘சார் வாங்க’

‘நீங்க யாருன்னு’

‘சார் நாந்தான் உங்க அப்பா எழுதினத எல்லாம் புத்தகமா வெளியிடற பதிப்பாளர்’

‘ஓ இந்த குறிஞ்சிப்பாடி அய்யாவா’

‘ஆமாம் சார். அய்யா எழுதின ஒரு கட்டுரை நூலுக்கு விருது கிடச்சிருக்கு.’

‘அய்யாதான் காலமாயிட்டாரே’ சட்டென்று பதில் சொன்னார்.விருது விபரம் எதுவும் கேட்கவில்லை. பதிப்பாளருக்கு இது ஒன்றும் அதிசயமாக இருந்திருக்காது. பெற்ற தகப்பன் செய்ததை எந்த மகன் ஆமோதித்து ஆகா மகிழ்ச்சி என்று சொல்லி விடப் போகிறான். பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொற்கேளான் என்பது தானே இவ்வுலகம்.

‘இண்ணைக்கு ஆடிட் இருக்கு. நான் கொஞ்சம் மின்னடியே போயி எல்லாம் சரியா இருக்குதான்னு பாக்குணும். ஃபைனான்சு சமாச்சாராம். வேல பாகுறது வங்கியாச்சே. ஆர் பி ஐக்கு பதில் சொல்லுணும்’

‘இல்ல அய்யா காலமா கிட்டதாலே. அந்த விருது வாங்க விழாவுக்கு தம்பி வந்தா ரொம்ப நல்லா இருக்கும்’

‘இதுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்லே. அப்பா எழுதினாரு. அது அவுரு சொந்த வெஷயம்.’

‘பேரப்புள்ளிங்க சென்னையிலதான படிக்குது’ பதிப்பகத்தார் ஆரம்பித்தார்.

‘அப்பாதான் பேத்தியையும் பேரனையும் நல்ல கல்லூரியா பாத்து சேத்தாரு. அவுரு இல்லேன்னா அந்தப்பெரிய காரியம் எனக்கு ஆகியிருக்காதுதான்’

விருட்டென்று சமையல் அறையிலிருந்து விபாச வின் மருமகள் வெளிப்பட்டார்.

‘இன்னும் ஒரு பத்து நாளுக்கு பசங்க கிட்டயே பேசமுடியாது. செமஸ்டர் பிராக்டிகல். அதுவும் மெயின் சப்ஜெக்ட்ஸ். அவுங்க கிட்ட இந்த சமாச்சாரம் யாரும் பேசவே கூடாது. அதுவுளுக்கு விழா அது இதுன்னு ஏதும் ஆச காட்டி கொழப்பிவுட்டுடாதிங்க. ஒரு மார்க்கு கொறஞ்சா நாம மெனக்கெட்டது எல்லாம் போச்சில்ல’

விபாசவின் மகனார் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போனார்.

‘நீங்க சொல்றதும் சரிதாங்க. காலம் அப்பிடி இருக்கு. நாம ஏதும் பேசமுடியாது’

பதிப்பாளர் விடைபெற்றுக்கொண்டார்.ஒன்றும் கதை ஆகவில்லை. அவர் மட்டுமே விருது விழாவுக்குப் புறப்பட்டுப் போனார்.

கூடிய கூட்டத்தை வைத்து விழா நிர்வாகிகள் காரியத்தை ஒப்பேற்றினர். அவருக்கு பதிப்பாளர் விருதுச் சான்றிதழும் சால்வையும் கொடுத்தார்கள்.

‘சார் இறந்துட்டாரு. அந்த டெத் சர்டிபிகேட் வேணும். அந்த அம்மா தாசில்தாருகிட்ட அந்த லீகல் ஹேர் சர்டிபிகேட் வாங்கிட்டாங்களான்னு. தெரியுணும். ஒரு நோட்டரிபப்ளிக் கிட்ட கையெழுத்து ஒண்ணும் ‘இதுல எதுவும் பிரச்சனை இல்லன்னு’ வாங்கிடணும். அப்புறம் அவுங்க கைப்பட மனு ஒண்ணு எழுதி அனுப்ப சொல்லுங்க. பாக்குலாம்’ என்றனர் நிகழ்ச்சிக்குழுவினர்.

‘வேற ஒண்ணும் இல்லயே’ என்றார் பதிப்பாளர்.

‘ஏன் விழாவுல எழுத்தாளருக்குன்னு போத்துற ஒரு சால்வ, சர்டிபிகேட்டு எல்லாம் இருக்கு. நீங்க வாங்கிகிட்டு போயி அந்த விபாச மனைவிகிட்ட குடுங்க. உங்கள மாதிரி இப்பிடி தன்மையா பதிப்பாளரு நாங்க பாத்தது இல்ல. நிகழ்ச்சியில எல்லாம் திருவிகிட்டுதான் ஒக்காந்து இருப்பாங்க. விழாவுல பதிப்பாளரும் படைப்பாளியும் உர்ரு உர்ருன்னுல்ல ஒருத்தரை ஒருத்தர் பாத்துகுவாங்க’ என்றார் ஒரு நிகழ்ச்சிப் பொறுப்பாளர். விபாச உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு வந்து சேர வேண்டிய சான்றிதழையும் சால்வையையும் பதிப்பாளர் அவரிடமிருந்து வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டார்.

அடுத்தமுறை பதிப்பாளர், விபாசவின் ஊருக்குப் போகும் சமயம் ஞாபகமாக இந்த சமாசாரங்களை அவர் மனைவியிடம் ஒப்படைக்கவேண்டும்.

அவர்களும் இதை வாங்கிக் கொள்வார்களோ இல்லை ‘இதுக எல்லாம் எதுக்கு சார். வீணா வீட்டுல குப்பைய சேத்துகிட்டு’ என்று சொல்லி விடுவார்களோ என்கிற ஒரு அச்சம் முளைத்துக்கொண்டது.

அவர் குடும்பத்தாரிடம் அரசின் விருதுப்பணம் வாங்குவதற்கான வழிமுறையைச் சொல்ல வேண்டும். கொஞ்சம் தைர்யத்தை வரவழித்துக்கொண்டு அந்த விபாச மகனோடு பேசிவிட்டால் தேவலை. பாழும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒரு தபால் கார்டு வாங்கி அதனில் திருமதி விபாச விலாசம் எழுதி, விருதுத்தொகை பெற விபாசவின் டெத் சர்டிபிகேட், லீகல் ஹேர் விஷயங்களை, இன்னும் நோட்டரி பப்ளிக் கையெழுத்து சமாசாரங்களை குறிப்பிட்டு அதனை அஞ்சலில் சேர்த்தார்.

மூன்றாம் நாளே ஒரு பதில் கடிதம் பதிப்பாளருக்கு வந்தது. அதில் என்ன எழுதியிருந்தது. அந்த பதிப்பாளரும் அதைத்தானே என்னிடம் இன்னும் சொல்லவேயில்லை…

– மே 2017

எஸ்ஸார்சி எஸ்ஸார்சி (பிறப்பு: மார்ச் 4 1954) என்கிற எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இளநிலைக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *