கண்ணான கண்ணே..!





அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-11
அத்தியாயம் – 9

கணேசனும் அம்பிகாவும் தங்கள் இரு சக்கர வாகனத்தில் ஏறி பயணித்தார்கள்.
“இந்தக் குழந்தையைக் காரணம் காட்டி உங்க வாழ்க்கையில நான் குறுக்கே வரமாட்டேன். ஆனால் நீ வருகிறாய் கணேசு!” மனசுக்குள் அமர்ந்து சுந்தரி கேள்வி கேட்டுக் கொண்டே வந்தாள்.
மனசு குறுகுறுத்தது.
ஏதோ தனக்கு உடமையான பொருளை சுந்தரி வீட்டில் விட்டு விட்டு வந்தது போலவும், இப்போது போய் எடுத்துக்கொண்டு வர செல்வது போலவும் அம்பிகா பின்னால் திடமாக இருந்தாள்.
எந்த நம்பிக்கையில் இவள் இப்படி வருகிறாள்..? – இவனுக்குள் யோசனை ஓடியது.
சொத்து இவனுடையதுதான். பட்டா இல்லாத சொத்து. விதை வேறு விலை நிலம் வேறு. எந்த நம்பிக்கையில் வருகிறாள், எந்த உரிமையில், எப்படி கேட்கப்போகிறாள்..? இவனுக்குள் அடுக்கடுக்காய் அதே கேள்விகள்.
இவளுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தால்…இந்தக் குழந்தையை நினைத்துப் பார்த்திருப்பாளா..?
சுந்தரியை மறந்து நாளாகி விட்டது. மறந்து என்று சொல்வதை விட பார்த்து மூன்று வருடங்களாகிவிட்டது. அவமானம் ஒரு புறம் . ஊர் கட்டுப்பாடு ஒருபுறம். அப்புறம் கலியாணம் காட்சி, வேலை என்று பாதை மாறி விட்டது. பார்க்கவே முடியவில்லை. இப்போது செல்கிறோம். ஏறெடுத்துப் பார்ப்பாளா..? எடுத்தெறிந்து பேசுவாளா..?
ஏன் கேட்பாளா..?
வாசலில் வண்டியை நிறுத்தினான். இருவரும் இறங்கினார்கள்.
குடிசை வாசல் திறந்திருந்தது. உள்ளே நுழைந்தார்கள்.
சுவரோரத்தில்….80 வயது மூதாட்டி சுந்தரி தாய்…உரலில் பாக்கு இடித்துக் கொண்டிருந்தாள்.
“யாரது..?” முதுமைக் கோளாறு, பார்வை மங்கல். கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தாள்.
“யாரைம்மா கேட்கிறே..?” அவளைத் தாண்டி அடுப்படி மறைப்பிலிருந்து சுந்தரி குரல். அப்படியே கேட்டுக் கொண்டே வந்தவள்… இருவரையும் பார்த்து திடுக்கிட்டாள்.
எதிர்பாராத விருந்தாளி!
இவளால் நம்பவே முடியவில்லை.
அப்புறம் சுதாரித்து….
“வாங்க… வாங்க…” மலர்ச்சியாய் வரவேற்றாள். சட்டென்று கோரைப் பாயை எடுத்து விரித்து…
“உட்காருங்க…” உபசரித்தாள்.
அமர்ந்தார்கள்.
மாமன் மகளைக் கட்டி வைக்கின்றார்கள். மாமன் மகள் இருக்கிறாள் என்று கேள்வி பட்டிருக்கிறாளேயொழிய சுந்தரி அம்பிகாவைப் பார்த்ததில்லை. கலியாணத்திற்கும் அழைப்பில்லை. எப்படி இருக்கும்..?
அதே போல் சுந்தரியும் அம்பிகாவைப் பார்த்ததில்லை.
இருவரும் ஒருவரையொருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.
‘பெயருக்குக்கேற்றார் போல் அழகத்தானிருக்கிறாள்!’ அம்பிகா மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.
‘கணேசனுக்கு ஏற்ற ஜோடிதான்! நேற்றுப் பறித்தது போல இருக்கின்றாளே..! பிள்ளை பெறாததினால் உடல் கட்டு குலையவில்லை. அழகு குறையவில்லை. பெற்றிருந்தால்தான் உடல் உடைந்திருக்கும். மார்பு தளர்ந்திருக்கும். இடுப்பு பெருத்திருக்கும்!’ இப்படி சுந்தரி அம்பிகாவை எடை போட்டாள்.
‘என்ன ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்கிறார்கள்..? மௌனத்தை உடைக்கலாமா..? எப்படி ஆரம்பிப்பது.? என்ன பேசுவது.? எப்படி தொடங்க, கேட்க…’ கணேசன் உள்ளுக்குள் திக்குமுக்காடினான்.
” வந்து.. வந்து.. என் கண்ணை என்னாலேயே நம்பமுடியலை. ” சுந்தரிதான் முதலில் பேசினாள்.
வராத விருந்தாளி வந்திருக்கிறார்கள். அதுவும் கணேசன் மனைவியுடன் முதல் முறையாக வந்திருக்கிறான்..? எதைக் கொடுத்து உபசரிப்பது..?
”கலர் வாங்கி வரட்டா..? ” அசைந்தாள்.
“வேணாம்க்கா…! ” அசைந்தவள் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள் அம்பிகா.
“இந்தாக்கா… குழந்தைகளுக்கு…” தாங்கள் வாங்கி வந்த தின்பண்டங்கள் பையை அவளிடம் கொடுத்தாள்.
வாங்கி சுவரில் மாட்டினாள்.
”உட்காருங்கக்கா…”
” இரு அடுப்புல இருக்கிற குழம்பை இறக்கி வச்சுட்டு வர்றேன்.! ” சென்றவள் இறக்கி வைத்து விட்டு உடன் திரும்பி வந்து அமர்ந்தாள்.
“எங்கெக்கா…குழந்தைகளை எல்லாம் காணோம்..?” அம்பிகா மீண்டும் தானாகவே பேச்சு கொடுத்தாள். அதற்காகத்தானே வந்தாள்!
“ராஜு, ராகிணி பெரிசு ரெண்டும் வெளியில விளையாடுது. சின்னவனை என் அப்பா – தாத்தா எங்கேயோ அழைச்சுப் போயிருக்கார்.”
“நீங்க இப்படி ரொம்ப கஷ்டப்படுறதைப் பார்க்க ரொம்ப வருத்தமா இருக்கு அக்கா..”
”என்ன பதில் சொல்ல முடியும்..?’ சுந்தரி பேசாமல் இருந்தாள்.
“நானும் இவரும் பேசி கலந்து… உங்க கஷ்டத்தைக் கொஞ்சம் குறைக்க வந்திருக்கோம்..!”
“….’
“எங்களுக்குக் குழந்தை இல்லே. கடைசி பையனை எடுத்துப் போகலாம்ன்னு வந்தோம்..!”
“புரிஞ்சிடுச்சி…!” சுந்தரி மெல்ல சொன்னாள்.
“என்னக்கா…?”
“கணேசு குழந்தை உனக்கு வேணும்…”
“அ… ஆமாக்கா…!”
“தரமுடியாது!”
“அக்கா..! “
“அது என் குழந்தை!”
“வந்து… வந்து…”
“அந்த குழந்தையாலதான் எனக்கு இத்தனை கஷ்டம், அவமானம். அதெல்லாம் சரியாகனும், முறையாகனும்ன்னா என்னையும் உன் குடும்பத்தில் ஒருத்தி சேர்க்கனும்!”
“அக்கா..ஆஆ …!” அம்பிகா அலறினாள்.
“சுந்தரி!” கணேசனும் அலறினான்.
“என்னங்க…?” பக்கத்தில் படுத்திருந்த அம்பிகா திடுக்கிட்டு எழுந்தாள்.
மலங்க மலங்க விழித்தான்.
“கனவா…?” அம்பிகா அவனை அசைத்தாள்.
“ம்.ம்ம்ம்….!” கணேசனுக்கு இது சொல்லவே வெகு நேரமாயிற்று.
அத்தியாயம் – 10
இரண்டு நாட்களாக மூன்று வயது ஹரிக்கு ஜுரம். வாடியக் கொடியாய்த் துவண்டு போய்க் கிடந்தான்.
நேற்றுக் காலையிலேயே ஜுரம் லேசாக அடித்தது. தூக்கிக்கொண்டு அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றாள் சுந்தரி.
டாக்டர் பையன் கையைப் பிடித்துப் பார்த்து…
“சாதாரண ஜுரம்தான்ம்மா. பயப்படும்படி ஒண்ணுமில்லே..” என்று சொல்லி ஏதோ வெள்ளையாய் நான்கு மாத்திரைகளைக் கொடுத்தார்.
வீட்டிற்கு வந்து….அவர் சொன்னபடியே தண்ணீர் கொதிக்க வைத்து ஆற்றி இரண்டு வெவ்வேறு மாத்திரைகளிலும் ஒவ்வொன்று கொடுத்தாள்.
அரைமணி நேரத்தில் ஜுரம் விட்டு உடல் வேர்த்துப் போயிற்று.
‘சரி. இனி பயப்படும்படி ஒன்றுமில்லை..!’ என்று நினைத்து அரை நாள் கருப்பங்காட்டிற்குச் சோலை கழிக்கும் வேலைக்குச் சென்றாள்.
சாயந்தரம் வந்து பார்த்தபோது ஹரிக்கு உடல் அனலாய்க் கொத்தித்தது. தொட்டுப் பார்த்தவள் பதறிப்போனாள்.
“ஹரிக்கு என்னம்மா கொடுத்தே..?” தாயைக் கேட்டாள்.
“ஒன்னும் கொடுக்கலையே..!”
“பச்சைத் தண்ணியில குளிப்பாட்டினியா”
“இல்லே…”
“தண்ணியில நின்னானா..?”
“இல்லே..!”
“பின்னே ஏன் ஜுரம் அடிக்குது..?”
“அது மத்தியானத்திலேர்ந்து அப்படித்தான் அடிக்கிது!”
“ஐயோ..!” என்று அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு எழுந்தவள்… மீதி இருந்த மாத்திரைகளைக் கொடுத்தாள்.
போர்வையைப் போர்த்தி பாயில் படுக்க வைத்தாள்.
‘அம்மா தான் ஏடாகூடமாகச் செய்திருக்கிறாள். நான் சத்தம் போடுவேனென்று மறைக்கிறாள்!’ நினைத்தாள்.
அவளுக்கு இந்தக் குழந்தை என்றாலே ஆகாது. வெறுப்பு!
ராஜி, ராகிணியிடம் ஆசை, பாசமாய் இருப்பதைப் போல் இவனிடம் இருக்க மாட்டாள்.
காரணம்…? இந்தக் குழந்தையால்தானே மகள் இந்தக் கதிக்கு ஆளானாள் என்கிற நினைப்பு. கணேசனை அப்படி அச்சு அசலாய் உரித்து வைத்து பிறந்திருப்பதில் வேறு கசப்பு. அதனால் இந்தக் குழந்தை என்றாலே அவளுக்குக் கோபம், எரிச்சல். அதனால் இவனைக் கவனிப்பதில்லை. மண்ணில் புரள்கிறாயா… புரளு. தண்ணீரில் நிற்கிறாயா நில்லு. விட்டு விடுவாள்.
சுந்தரி அப்பா அப்படி இல்லை. அவருக்கு எல்லா குழந்தைகளும் ஒன்று. ஹரி கொஞ்சம் அழகாகவும், துறுதுறுவென்று இருப்பதினாலும் அவருக்கு அவன் மேல் ஆசை. வெளியே எங்கு செல்வதென்றாலும் அவனை அழைத்துக் கொண்டு செல்வார். அவன் பிஞ்சு கையைப் படித்துக்கொண்டு நடப்பார்.
ஆக…. அப்பா இல்லை. அம்மாதான் தண்ணீரில் விளையாட விட்டுவிட்டாள். சிறிது நேரத்தில் ஹரியின் ஜுரம் விட்டு உடம்பு குப்பென்று வியர்த்துப் போயிற்று.
உடனே சுந்தரி சட்டுபுட்டுவென்று எழுந்து கடைக்கு ஓடி பொறை ரொட்டிகள் நான்கு வாங்கி வந்து வெந்நீரில் நனைத்துக் கொடுத்தாள்.
இரவு மற்ற குழந்தைகளைத் தாத்தா, பாட்டியுடன் படுக்க வைத்து விட்டு சுந்தரி ஹரியோடு தனியே படுத்தாள்.
நடு இரவில் மறுபடியும் ஜுரம்.
“அப்பா! அப்பா!” எழுப்பினாள்.
“என்னம்மா..?” அவர் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்தார்.
“வேலைக்குப் போனீங்களா..?”
“போனேன் ! ஏன்..?”
“ஹரிக்கு மறுபடியும் ஜுரம். டாக்டர்கிட்ட கொண்டு போகணும்…”
“பணம் இருக்கு தர்றேன்!” சொல்லி கொடுத்தார்.
காலையில் தூக்கிக்கொண்டு சென்றாள்.
சேதி கேள்விப்பட்டதும் அம்பிகா துடித்துப் போய்விட்டாள்.
“என்னங்க..?” கணவனிடம் வந்தாள்.
“என்ன..? “‘
“நம்ம ஹரிக்கு நாலு நாளாய் ஜுரமாம். படுத்தப் படுக்கையாய் இருக்கானாம்..!”
“யாரு சொன்னா…?”
“பக்கத்து வீட்டுப் பாட்டி. சொல்லிச்சு.”
“ஓ… அந்த பாட்டிதான் உனக்குத் தூது, யோசனையா..?”
“அப்படியெல்லாம் இல்லே. அங்கே மகள் வீட்டுக்குப் போனது. பார்த்துட்டு வந்து சொல்லுது. போய் குழந்தையை எடுத்துக்கிட்டு வருவோம்ங்க..”
“என்ன அம்பிகா புரியாம பேசறே? அன்னையிலிருந்து இன்னைய வரை… அவளை நானோ, நீயோ திரும்பி பார்க்கல. அவ கஷ்ட நஷ்டத்துல பங்கு கொள்ளலை. இப்போ எந்த முகத்தோட அவ முன்னால் போய் நிக்கிறது..? எந்த உரிமையில் குழந்தையைக் கேட்கிறது, எடுக்கிறது..?”
“அதெல்லாம் பார்த்தால் நம்ம பையன் உயிர் போயிடும். இந்த மாதிரி ஆபத்து நேரத்துலதான்கை கொடுக்கனும்.”
“ஊர் ஒதுக்கலிலிருந்து இன்னும் அவ மீளலை அம்பிகா.”
“ஊர் வந்து உயிரைக் காப்பாத்தப் போறதில்லே. அதுக்கென்ன கண்டதை பேசும். அதுக்குப் பயந்துக்கிட்டிருந்தா நாம சாதி சனத்தை இழந்து, குழந்தையையும் கை கழுவிடுவோம். மேலும் ஊர் பஞ்சாயத்து, கட்டுப்பாடு என்கிறதெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டதில்லே. எனக்கு ஹரி வேணும்..”
“அண்ணன்கள் ரெண்டு பெரும் கோபிச்சுக்குவாங்க..”
“நானே சம்மதப்பட்டு போறேன் என்கிறபோது அவுங்க…கோபிக்கிறதுல அர்த்தமே இல்லே. அப்படி கோபிச்சாலும் நான் அவனுங்களுக்குப் பதில் சொல்லிக்கிறேன். ஹரி வேணும்!”
“அவ கொடுக்க மாட்டாள். நீயும் நானும் அவமானப் படனும்.”
“எந்த அவமானத்தையும் நான் தாங்கிக்க தயார். நீங்க வந்தே ஆகனும்.!” கடுமையாக சொன்னாள்.
அத்தியாயம் – 11
“ஹை..! சித்தப்பாவும் சித்தியும் வர்றாங்க…” பத்து, எட்டு வயது ராஜுவும்,ராகிணியும் குத்தித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினார்கள்.
‘என்னது..!’ சுந்தரி வியப்பு திகைப்புடன் வீட்டை விட்டு வெளியே வந்தாள். பத்தடி தூரத்தில் தன் வீடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் வரும் கணேசன், அம்பிகாவைப் பார்த்ததும் தன் கண்களை அவளால் நம்பவே முடியவில்லை.
இவளின் அப்பாவும், அம்மாவும் வேலைக்கு எங்கேயோ போயிருந்ததால் வீட்டில் இல்லை. பள்ளிக்கூடம் விடுப்பு என்பதால் குழந்தைகள் எங்கும் வெளியில் செல்லவில்லை.
சுந்தரி இரண்டு நாட்களாக ஹரிக்கு அருகிலேயே இருக்க வேண்டி இருந்ததால் அவர்கள்தான் எங்கேயோ கூலி வேலைக்குப் போய் வீட்டிருக்கு வருமானம் கொண்டு வந்தார்கள்.
மகிழ்ச்சியில் சுந்தரிக்குக் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் வீட்டிற்குள் நுழைந்து பாயை விரித்துப் போட்டாள்.
‘என்ன நடக்கப் போகிறதோ…?!’ கணேசன் மனசுக்குள் திக் திக் கலவரம்.
‘வழி இல்லை. மனைவி சொல்லுக்குக் கட்டுப்பட்டு வந்தாகி விட்டாச்சு! இனி எது நடந்தாலும் எதிர் கொள்ள வேண்டியதுதான்!’ – மனதை தேற்றிக்கொண்டான். ஆனால் அம்பிகா எந்தவித எதிர்பார்ப்பு, உணர்ச்சியும் இல்லாமல் ஏதோ நிறைய தடவை வந்து உறவாடிய இடத்திற்குச் செல்வது போல் முகத்தில் எந்தவித அச்சம், பயம், தயக்கம் இல்லாமல் பின்னால் சர்வசாதாரணமாக இருந்தாள்.
வீட்டு வாசல் முன் வாகனத்தை நிறுத்தி இருவரும் இறங்கினார்கள்.
அம்பிகா குழந்தைகளுக்குத் தேவையான தின்பண்டங்கள், பழங்கள் நிறைந்த பையையுடன் இறங்கினாள்.
அடுத்த கணம்…பரபரப்பாக வீட்டை விட்டு வெளியே வந்த சுந்தரி….
“வாங்க..வாங்க…” மலர்ச்சி துடிப்புடன் வரவேற்றாள்.
“அண்ணி..!” கணேசனுக்கு அப்படி அழைப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அழைத்தான்.
“அக்கா..!” அம்பிகாவும் அழைத்தாள்.
“உள்ளாற வாங்க…”
மூவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
“உட்காருங்க…”
அமர்ந்தார்கள்.
குழந்தைகள் நெருங்கவில்லை.
“வாங்க…” கணேசன் அழைத்தும் இருவரும் வரவில்லை.
“வாங்க…” அம்பிகாவும் அவர்களை ஆசையாய் அழைத்தாள்.
அவர்கள் அசையவில்லை.
“வரச்சொல்லுங்க அக்கா!”
“போங்க..”
வந்தார்கள்.
”உன் பேர் என்ன..?”
”ராஜி!”
“உன் பேர்..?”
“ராகிணி!”
“என்ன படிக்கிறீங்க..?”
“நான் நாலாம் வகுப்பு. அவன் ரெண்டாம் வகுப்பு”
“நல்லா படிக்கிறீங்களா..?”
“ம்ம்…” இருவரும் தலையாட்டினார்கள்.
“இது உங்களுக்கு..!” பையை நீட்டினாள்.
அவர்கள் தாயைப் பார்த்தார்கள்.
“வாங்கிக்கோங்க…”
ராகிணி கை நீட்டி வாங்கிகொண்டாள்.
” எடுத்துக்கோங்க…”
அவர்கள் பையை சுவர் ஓரம் வைத்து விட்டு வெளியில் சென்றார்கள்.
கொஞ்சம் தள்ளி சுவர் ஓரமாக ஹரி உறங்கிக்கொண்டிருந்தான்.
“ஹரிக்கு ரொம்ப ஜுரமாக்கா..?” அம்பிகா எழுந்து அவன் அருகில் சென்றாள். அவன் அப்படியே கணேசனாக இருந்தான்.
“ஆமாம்..”
தொட்டுப் பார்த்தாள். கொஞ்சமாக காய்ந்தது.
“எத்தினி நாளாக்கா ஜுரம்…?”
“நாலு நாளாய் விட்டு விட்டு வருது..”
“டாக்டர்கிட்ட போனீங்களா..?”
“ஒரு தடவை போயாச்சு..”
“மறுபடி போகலையா?…”
“இல்லே..”
“இதுக்காகத்தான் அக்கா வந்தேன். ஆபத்துக்கு உதவுறதுதான் உறவு. நமக்குள் தொடர்பே இல்லாததினால் ஒருத்தருக்கொருத்தர் உதவ வாய்ப்பில்லாம போச்சு. நடந்த நடப்பு எல்லாமே தெரியும். தெரிஞ்சுதான் இவரைக் கலியாணம் கட்டிக்கிட்டேன். கிராமத்துல இருந்து கஷ்டப்பட்டாலும் நீங்க நல்லா இருக்கீங்கன்னுதான் நான் வராம இருந்தேன். மத்தபடி வருத்தம், வன்மம் எதுவும் கிடையாது. தங்கச்சி நான் உங்களுக்குத் துணையா இருக்கேன். கவலைப் படாதீங்க அக்கா.”
‘எப்படி பேசுகிறாள்..?!’ – கணேசனுக்கு வியப்பாய் இருந்தது.
அம்பிகா தன் கை பர்ஸைப் பிரித்து இரண்டாயிரம் தாள்கள் இரண்டை எடுத்து…. “இந்தாக்கா…இதை புடிங்க…” நீட்டினாள்.
சுந்தரி வாங்கவில்லை.
“நானும் உங்களுக்கு உதவ கடமை பட்டவள்க்கா. புடிங்க. குடும்ப செலவு, ஹரி செலவுக்கு வச்சுக்கோங்க..”
சுந்தரி அசையவில்லை.
“வாங்கிக்கோங்க அண்ணி!”
வாங்கினாள்.
“புள்ளையைக் காபந்து பண்ணுங்க க்கா. நானும் அடிக்கடி வர்றேன். உங்களுக்கும் ஏதாச்சும் தேவைன்னா இங்கே அடிக்கடி வரும் செண்பகம் பாட்டிகிட்ட சொல்லி அனுப்புங்க. அவசரம்ன்னா நானே வர்றேன்.”
எழுந்து வெளியே வந்தாள்.
வாசலில் ராஜு, ராகிணி வந்து நின்றார்கள்.
“புள்ளைங்களா இங்க வாங்க..” அழைத்தாள்.
வந்தார்கள்.
அவர்களை இரு கைகளாலும் அணைத்து ஆளுக்கொரு முத்தம் கொடுத்தாள்.
“நல்லா படிங்க. சித்தி நான் இருக்கேன்!” சொன்னாள்.
கணேசனுக்கு நடப்பது கனவா நனவா தெரியவில்லை.
“அக்கா வர்றோம்! போகலாம்ங்க” நடந்தாள்.
இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள்.
கணேசன் மௌனமாக வண்டியை விட்டான்.
வீட்டிற்கு வந்ததும்….
“என்ன அம்பிகா என்னமோ சொல்லிப் போனே. ஹரியோட வராம வெறுமனே வர்றே..?” கேட்டான்.
“உடனே கேட்டா.. இதுக்குத்தான் வந்தோம்ன்னு நினைச்சி சுந்தரி அக்கா நினைப்பாங்க. கொடுக்க மறுப்பாங்க. நாலு தடவை நடந்து… அடுத்து நாமே வலிய… இவனை எடுத்துப் போய் கஷ்டத்தைக் குறைக்கிறேன்னு சொல்லி எடுத்து வரலாம் !..” சொன்னாள்.
அம்பிகா புத்திசாலித்தனமாக நடக்கிறாள். காயை நகர்த்துகிறாள்! புரிந்தது.
அதேசமயம்… இவள் அன்பு, அரவணைப்பும் இவனுக்குப் பிடித்தது.
மாலை கூலி வேலை செய்து வந்த அம்மா, அப்பாவிடம் குழந்தைகளை விட்டு விட்டு…. ஹரிக்கு மருந்து வாங்க… கடைக்கு விரைந்தாள் சுந்தரி.
காலையில் ஊர் சனம் மொத்தமும் உருண்டு திரண்டு ஊர் எல்லைக்கு ஓடியது.
‘மருந்து வாங்க போன மகளை ராத்திரி முழுக்கக் காணோமே..!’ என்று கலங்கிக் கிடந்த சுந்தரி அம்மா, அப்பாவும் அவர்களோடு ஓடினார்கள்.
ஹரியைப் பார்க்க காலையிலேயே சுந்தரி வீடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த கணேசன், அம்பிகாவும் விபரம் புரியாமல் அவர்கள் பின் வண்டியை விட்டார்கள்.
அங்கு மூன்று போலீஸ்காரர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார்கள்.
பார்த்த அம்பிகாவும், கணேசனும் உறைந்து போனார்கள்,
ஆலமரக்கிளையில் சுந்தரி உயிரற்றவளாய் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தாள்.
மரத்தடியில் மண்டை பிளந்து சுடலை குப்புறக்கிடந்தான்.
கண்ணுச்சாமி இரு போலீஸ்காரர்கள் பிடியில் இருந்தான்.
‘இந்தப் பய இவகிட்ட வம்பு பண்ணி இருப்பான். அடிச்சிப் போட்டுட்டு அவமானம் தாங்க முடியாம அந்தப் பொண்ணு தூக்கு மாட்டிக்கிட்டாள் போல…”
“ரெம்ப நாளாவே இவன் இவளை நோட்டம் விட்டுக்கிட்டே இருந்தான். இதுக்காகவே இவன் கண்ணுசாமிகிட்ட தொடுப்பு வைச்சிகிட்டு அவனுக்குச் சாராயம் ஊத்தி… கெடுத்துக்கிட்டிருந்தான். கணேசன் கலியாணத்துக்கு முன்னேயே இவள்கிட்ட வம்பு”
கூட்டம் கசகசத்தது.
“சும்மா இருங்க…” கூட்டத்தை அடக்கிய சப்- இன்ஸ்பெக்டர்…
“சொல்லுடா. என்ன நடந்தது..?” கண்ணுசாமியை அதட்டினார்.
“வழக்கம் போல ரெண்டு பேரும் குடிச்சிட்டு வந்தோம். வழியில சுந்தரியைப் பார்த்த சுடலை…சடார்ன்னு அவ மேல பாய்ஞ்சி வம்பு பண்ணினான். சுந்தரி விடாம ரொம்ப முரண்டு பண்ண……அவளைக் கழுத்தை நெரிச்சிக் கொன்னான். அதே வேகத்துல…. தற்கொலையை போவட்டும்ன்னு சொல்லி மரத்துல மாட்டி விட்டுட்டு மல்லாந்தான். என் பொண்டாட்டியைக் கொன்னவனை சும்மா விடலாமா..? ஆத்திரம் ! அதான் தலையில எல்லைக் கல்லை போட்டு கொன்னேன். போலீஸ்ல சரண் அடைஞ்சேன். ” சொன்னான்.
கூட்டம் வாயைப் பிளந்தது.
கணேசனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
விம்மிய அம்பிகா …
“அக்கா ! உங்கிட்ட ஒரு புள்ளைதான் கேட்க வந்தேன். நீ என்கிட்டே மூணு புள்ளைங்களைக் கொடுத்துட்டு போயிட்டீயே…! ” அழுதாள்!
(முற்றும்)
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |