கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 4,748 
 
 

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம் – 5

சுந்தரி வீட்டிற்குள் குப்புறப்படுத்துக் கேவிக்கொண்டிருந்தாள்.

கணேசன் வாசலில் கோபத்தோடு அமர்ந்திருந்தான்.

தான் வராவிட்டால் அண்ணியின் நிலை…? – நினைக்க அவனுக்கு வேதனையாக இருந்தது.

சுந்தரி எத்தனை தடவை அழைத்தும் அண்ணன் வீட்டிற்குச் செல்லவில்லை கணேசன்.

இரண்டு நாட்களாக வேலைக்குச் சென்று வந்து தானை பொங்கி சாப்பிட்டான்.

மனசு பொறுக்காத சுந்தரி முதல் நாளே தன் மூத்த மகனிடம் கொடுத்தனுப்பிய சாதத்தைக் கூட ஏற்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டான்.

இந்த இரண்டு நாட்களில் கண்ணுசாமி வீட்டில் அடிதடி, ரகளை. அவன் வேலைக்குச் செல்லாமல் சுந்தரி சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் போய் குடித்து, சீட்டாடி விட்டு வந்து விட்டான். இரண்டு நாட்களாக இருப்பதை பொங்கிப் போட்டாள் சுந்தரி. மூன்றாம் நாள் ஆக்கவும் பண்டமில்லாமல் வாங்கவும் பணமில்லாமல் பிள்ளைகளுக்கு மட்டும் பக்கத்து வீட்டில் வாங்கிப் போட்டு ஆக்கி பசியாற்றி… கணவன் வரட்டும் என்று அமர்ந்திருந்தாள்.

அவன் வழக்கம் போல் தள்ளாடி வீட்டிற்கு வந்தான்.

போதையில் உள்ளே வந்து பார்த்தவனுக்கு சோத்துப் பானை, குழம்பு சட்டிகளெல்லாம் வெறுமையாய் இருப்பதைப் பார்க்க பகீர் என்றது. போதையே கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது.

“ஏண்டி ! சோறாக்கலையா…?” பேசாமல் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த சுந்தரியைக் கேட்டான்.

“கஞ்சி வைக்கவே காசில்லே ஆக்கலை…”

“ஏன் நான்தான் குடுக்கணுமா..?”

“பின்னே யார் குடுப்பா..?”

“தம்பி குடுக்கல..?”

“நீ எப்பவும் நிதானத்துல இருந்தாத்தானே வீட்டு நடப்பு தெரியும்….?”

“புரியும் படி சொல்லு…?”

“நீ கண்டபடி பேசினதுலேர்ந்து அது வீட்டுப் பக்கமே வரலை.”

“சாப்பாடு..?”

“அது தான் வீட்ல தானா பொங்கி, தானா சாப்பிடுது. வெட்டியா இருக்கிற உனக்கு தினம் குடிக்க ஏது காசு..?”

“அந்த சுடலை வாங்கிக்கொடுத்தான்…”

“காளிப்பய அவன் ஏன் உனக்கு வாங்கி குடுக்கிறான்..?”

“குடிக்கிறவனுக்குத்தாண்டி குடிக்காம இருக்கிற கஷ்டம் தெரியும்..”

“ஓ…. அப்படி வாங்கி குடுக்கிறானாக்கும். அப்படியே குடும்பம் நடத்தவும் வாங்கி வர வேண்டியதுதானே..?”

“நீ படுக்கிறேன்னு சொல்லு வாங்கி வாரேன்..”

“நான் படுத்து குடும்பம் நடத்த நீ எதுக்கு இருக்கே..?”

“குடிக்க…!”

“வெக்கமா இல்லே..???…” சீறினாள்.

“இல்லே…” சொல்லி சாய்ந்தான்.

சந்தரி மறுநாளே வயல் வேலைக்குச் சென்றாள்.

சென்று தனியே வந்தவளிடம்தான் சுடலை கையைப் பிடித்து கரும்பு காட்டுப் பக்கம் இழுக்க.. குய்யோ முறையோ என்று கத்தியவளை கணேசன்தான் சரியான நேரத்தில் வந்து அவனை அடித்து உதைத்து துரத்திக் காப்பாற்றினான்.

வாசலில் இருக்கும் கணேசனுக்கு விடாமல் அழும் அண்ணியைப் பார்க்க பரிதாபமா இருந்தது.

“விடுங்கண்ணி. இந்தக் குடும்பத்துக்கு நான் இருக்கேன். நீங்க வழக்கம் போல வீட்லே இருங்க ” சொன்னான்.

எதை நினைத்து எவ்வளவு நேரம்தான் அழ முடியும்..? சுந்தரியும் கண்களைத் துடைத்தாள்.

அன்றிலிருந்து அண்ணன் குடும்பத்தில் ஐக்கியமானான்.

குழந்தைகள் குடிகார அப்பாவை மறந்து விட்டன.

இவனிடம் ”சித்தப்பா..! சித்தப்பா!” என்று ஒட்டிக்கொண்டார்கள்.

வேலைக்குச் சென்றுவந்த மீதி நேரத்தில் மாலை அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தான். இது குழந்தைகளுக்கு ரொம்ப உற்சாகம். குதூகலம்.

பெற்ற அப்பா பொறுப்பில்லாமல் இருக்க, கன்னிக்கழியாத சித்தப்பா பெத்த அப்பாவாக இருந்து எவ்வளவு பொறுப்பாக நடந்து கொள்கிறான்..? – சுந்தரிக்கு அவன் மேல் மதிப்பு, மரியாதை, கூடுதலானது.

இவன் மட்டும் நல்ல சமயத்தில் வந்து தாங்கவில்லை என்றால்… தன் குடும்பம்..? இவளுக்கு நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்கியது.

“அண்ணன் கண்டிச்சிட்டானேன்னு ஒரு வாரம் பல்லைக் கடிச்சிக்கிட்டு தனிகுடித்தனம் பண்ணினான். அண்ணியை எவனோ புடிச்சி இழுத்தானம். தொட்டது சாக்குன்னு வந்து ஒட்டிக்கிட்டான்.!”

“தின்ன ருசி எப்படி பிரிஞ்சி இருக்கும்…?”

“அவ சம்மதிக்கிறாள்! இவன் தொட்டுக்கிறான்.! கூந்தல் உள்ளவங்க அள்ளி முடிஞ்சிக்கிறாங்க. நமக்கென்ன…?”

‘தன் காதுபட, இவன் காதுபட எவ்வளவு பேச்சுகள். எதற்கும் சளைக்காமல், வருத்தப்படாமல் எப்படி தாங்குகிறான்..?!’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே கணேசன் தலைமாட்டில் இருக்கும் தண்ணீரை எடுத்துக் குடித்துப் படுத்தான்.

அதற்கு மேல் அவள் யோசிக்கவில்லை.

அன்று இரவு நல்ல தூக்கத்தில் இருப்பவன் அருகில் வந்து அமர்ந்து அவன் நெஞ்சில் கை வைத்து சாய்ந்தாள்.

திடுக்கிட்டு விழித்த கணேசன் ….

“அண்ணி…!” மெலிதாக அலறினான்.

“நீ இந்த குடும்பத்தை தாங்குறதுக்கு, உன் கஷ்டத்தைப் போக்க….என்கிட்ட இதைத் தவிர கொடுக்கிறதுக்கு வேற வழி இல்லே…” இறுக்கினாள்.

பெண் ஸ்பரிசம் படாத உடல். பஞ்சு மேல் நெருப்பு பட்டது போல் இவனுக்குள் சட்டென்று தீப்பிடித்தது.

அத்தியாயம் – 6

ஒரு நாள் தொடுப்பு பலநாட்களாக தொடர்ந்து விட்டது.

ஒரு நாள் இரவு….

“கணேசு! நீங்க அப்பாவாகப் போறீங்க..?” மலர்ச்சியாச் சொன்னாள் சுந்தரி.

“சுந்தரி!” அலறினான்.

“ஏன் அலறீங்க…?”

“வேணாம் கலைச்சிடு..”

“ஏன்..?”

“துரோகம் உடலோடு இருக்கட்டும். மனசோட இருக்கட்டும். வெளியேத் தெரிய வேணாம்..!”

“எப்படித் தெரியும்…?”

“அண்ணன் வீட்டுக்கே வர்றதில்லே. ஏற்கனவே நம்மைப் பத்தி கசமுசா பேச்சு. இது கண்டிப்பா ஊர் சிரிக்கும். நமக்கு அவமானம். அண்ணன் மனசும் வேதனைப் படும். பிரச்சனை சுந்தரி.”

“எதையும் சமாளிக்க நான் தயாராய் இருக்கேன். கணேசு! இது நன்றியால் வந்த சமம். சந்தோசமா ஏத்துக்கிறேன். செய்யிறது தப்புன்னு தெரிஞ்சேதான் செய்தேன். ஏன் செய்தேன்.? எனக்கும் என் புள்ளைகளுக்கும் உழைச்சிப் போடும் உனக்கு வெறும் சொத்தை மட்டும் போட்டு நன்றி காட்டிச் சொல்றீயா..? அந்த சோறு கூட நீ சம்பாதிச்சது. உன் சம்பாத்தியத்துல நாங்க வாழும்போது உனக்கு எதைக் கொடுத்து நான் நன்றி சொல்றது.

எத்தனைக் காலம் தான் புரண்டு புரண்டு படுப்பே. காலாகாலத்துல உனக்கு ஒரு கலியாணம் ஆகி இருந்தால்… இப்படி புரண்டு படுப்பியா..? தலைமாட்டுல இருக்கிற பச்சைத்தண்ணியை எடுத்துக் குடிப்பீயா..?

என் கஷ்டத்தைத் தீர்க்கிற உனக்கு உன் கஷ்டத்தைத் தீர்க்கிறது சரிதானே!

கணேசு ! நான் தப்பை நியாய படுத்தல. புருசனுக்குத் துரோகம் செய்யிற மனைவி மகாபாவிதான். இல்லேங்குல. குடும்பத்தைக் கவனிக்காம அவனே மகாபாவி ஆகிட்டபிறகு மனைவி மகாபாவி ஆவதில் என்ன தப்பு..? குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாய், வீட்டுக்குச் சம்பாதித்துப் போடும் மனிதனாய், குடும்பத்தைத் தாங்கும் நல்ல ஆண்மகனாய் இருக்கிறவன்தான் நல்ல கணவன். அப்படி நீ இருக்கே. அதனால் எனக்குத் துரோகம் என்கிற நினைப்பே வரலை. இந்தக் கருவை கலக்கிறது ரொம்ப பாவம். இதைக் கலைச்சேன்னா… நான் உன்னிடம் உடல் சுகத்துக்காகப் படுத்ததாய் மனசை உறுத்தும். அந்த உறுத்தல் எனக்குத் தேவை இல்லே.

கணேசு! இந்த புள்ளையைக் காரணம் காட்டி நாளைக்கு உன் வாழ்க்கையில் குறுக்கிடுவேன் என்கிற பயம் வேணாம். தாராளமாய் நீ திருமணம் முடிச்சி சந்தோசமாய் இருக்கிறதுதான் எனக்கு சந்தோசம். என்னைக்கிருந்தாலும் நான் இன்னொருத்தன் சொத்து. உன் அண்ணன் மனைவி. நாளைக்கு நீ வேறொருத்திக்கு கணவனாகப் போகிறவன். என்னை நீயோ, உன்னை நானோ எந்த விதத்திலும் உரிமை கொண்டாட முடியாது. உன் வாழ்க்கை உன்னோடது. எதையும் காரணம் காட்டி நான் எள்ளவும் உரிமை கொண்டாட மாட்டேன்.” – நிறுத்தினாள்.

சுந்தரியின் தெள்ளத் தெளிவான பேச்சில் கணேசன் விக்கித்துப் போனான். அடுத்து எதுவும் பேசாமல் சிலையாகிப் போனான்.

இந்த முதல் கருவை தன்னால் மகிழ்ச்சியாய்க் கொண்டாட முடிவில்லையே என்று மனதின் ஓரத்தில் சின்னதாய் ஒரு வருத்தம் வந்தது.

ஆனால் கண்ணுசாமிதான் சுந்தரியிடம் ரொம்ப எரிச்சல் பட்டான்.

”ஏண்டி! குடிச்சிட்டு நிதானம் இல்லாம வர்றானேன்னு எட்டப் படுத்துக்கக் கூடாதா..? கிட்ட கிட்ட வந்து படுத்து இப்படி ஆகிப் போச்சு. ஏற்கனவே ரெண்டு. இது தேவை இல்லே கலைச்சிடு.” சொன்னான்.

“போனாய் போவுது மச்சான். இதை மட்டும் பெத்துக்குவோம். இது பொறக்குற ராசி. அப்பவாவது நீ திருந்துவியானது பார்ப்போம்” சொன்னாள்.

ஆனால்… அது பிறந்த பிறகுதான் கதையே வேறாகிப் போனது.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *