இழப்பு
கதையாசிரியர்: உஷாதீபன்
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 11,558

அப்பாவின் பொடி டப்பி தொலைந்து போனது. சோகமே உருவாய் வந்து நின்றார். “வெள்ளி டப்பா. அநியாயமாப் போச்சே..” என்றார்.
“போனாப் போகுது. வேறே வாங்கிக்கலாம்.” என்றான் இவன் சாதாரணமாக. ஆனால் மாலை வரை பொடி இல்லாமல் தவிப்பாரே என்றிருந்தது. அப்பாவுக்கு அது உற்ற தோழனைப் போல சிறு வயது முதலே வந்த பழக்கம். ஒரு சிட்டிகை எடுத்து உறிஞ்சினார் என்றால், படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் நூறு இருநூறு பக்கமானாலும் தாங்கும். தாக்குப்பிடிப்பார் அப்பா. காலையில் குளித்து, தியானம் செய்யும் நேரம் தவிர, பிற சமயங்களில் அதைப் பிரிந்திருக்க அவரால் இயலாது.
பொடியை இழுக்கும் சமயங்களில் வீடு முழுவதும் நெடி பரவும். அம்மாவுக்கு இது அலர்ஜி. சட்டென்று தும்முவாள் அவள். அந்தக் காலத்திலிருந்து அப்பாவுக்கு என்.வி.எஸ். பொடி தான். அது தான் காரசாரமாக இருக்கும் என்பார்.
அவரின் மிகக்குறைந்த தேவையே அது ஒன்று தான். அந்தச்செலவையும் தனது ஹோட்டல் பேட்டா காசோடு நிறுத்திக் கொள்வார். வீட்டுக்குக் கொடுக்கும் சம்பளக் காசில் பைசா தொடமாட்டார்.
“நேஸ்டி ஹாபிட்.. விட்டுத் தொலைங்கப்பா..” என்றான் அண்ணா . அவருக்கே அந்த உறுத்தல் இருந்ததோ என்னவோ…. பழக்கத்தை விடமுடியாமல் தவித்தார். அதைப் போட்டால் இந்தப் பிரபஞ்சமே கண்ணுக்குத் தெரிவது போல், அல்லது கைக்குள் வந்தது போல் ஒரு நிறைவு.
சிறு பிராயத்திலிருந்து அப்பாவுக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடிக்குமென்றும், அதை நிறுத்த வேண்டி இந்தப் பழக்கம் கை வந்தது என்றும் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறான் இவன்.
அப்பா எங்களை அனுப்பி என்றுமே பொடி வாங்கி வரச் சென்னதில்லை. ஹோட்டலில் வேலை முடிந்து திரும்பும் வேளையில், கடைவீதி வழியாக நடந்து, தானே வாங்கி வந்து விடுவார். பையன்களை அனுப்பினால், எங்கே அந்தக் கெட்டப் பழக்கம் தொற்றிக் கொண்டு விடுமோ என்று நினைத்திருக்கலாம்.
இதில் எத்தனை உறுதியாக இருந்தாரோ, அதுபோலவே அவர் எங்களின் படிப்பு விஷயத்திலும் கண்டிப்பாக இருந்தார். எக்காரணத்தை முன்னிட்டும் அதற்கு பங்கம் வந்து விடக் கூடாது என்பதில், அவரது உறுதி அசைக்க முடியாதது. தனது பொடிக்கான பேட்டா காசு நாலணாவைக்கூட பென்சில் வாங்க, பேப்பர் வாங்க என விட்டுக் கொடுத்த சந்தர்ப்பங்கள் ஏராளம். அப்போதெல்லாம் பொடியின் தேவையைக் குறைத்துக் கொண்டும் வெறும் மட்டையை இடுப்பில் செருகிக் கொண்டும் கழிப்பார் அப்பா. அவரின் தியாகங்களில் மறக்க இயலாத சம்பவங்கள் இவைகள். ஆனால் ஒருமுறை கூட கடைவீதிச் செட்டியாரிடம் சென்று பொடி கடன் கேட்டதாகவோ, எவரிடமும் ஒரு சிட்டிகை பொடிக்கும் கையேந்தி நின்றதாகவோ சரித்திரமில்லை.
வீட்டு வாசலில் தெருவோடு போகும் போர்டு ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர், “என்ன சீனிவாசன் எப்படி இருக்கீர்?” என்றவாறே நெருங்குகிறார் என்றால் அது பொடிக்குத் தான் என்பது எல்லோருக்கும் துல்லியமாகத் தெரியும். அவர் அப்படித் தன் நடையைக் குறைக்கும் போதே, அப்பா பொடி மட்டையை எடுத்து நீட்டி விடுவார். தன்னிடம் ஓசி வாங்கவும் ஒரு ஆள் இருக்கிறாரே என்ற பெருமையாக் கூட இருக்கலாம்.
இரண்டு விரலிடுக்கிலும் இவ்வளவு பொடியா நிற்கும் என்பது போல் ஒரு பிடிபிடிப்பார் அவர். அப்பாவுக்கு இல்லாமல் போய்விடக் கூடாதே என்று தோன்றும் எங்களுக்கு.
அப்பாவுக்கு குறுக்கெழுத்துப் போட்டிக்கு எழுதும் பழக்கமுண்டு. மட்டையைத் திறந்து பொடியை ஒரு இழு இழுத்தார் என்றால், அவர் மூளை அபாரமாக வேலை செய்யும். ஹிந்து பேப்பரிலும், அந்தக் காலத்து நாரதர் பத்திரிகையிலும் வந்த எத்தனையோ போட்டிகளுக்கு அப்பா எழுதியதுண்டு. பரிசைத் தட்டிய சம்பவங்களும் உண்டு. எல்லாம் பொடி செய்யும் வேலை.
அந்தக் காலத்தில் வெறும் மட்டை தான். அதில் தான் அப்பா பொடியை வைத்திருப்பார். மூத்த அண்ணா வேலைக்குப் போன பின்னேதான் மட்டை டப்பியானது. சின்னச் சொப்பு போல், அழகான வேலைப்பாடுடன் அமைந்த வெள்ளியாலான டப்பி அது.
“மட்டைதான் வசதி. வேட்டிலே சுத்திக்க ஏதுவா இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே அதை வாங்கிக் கொண்டார் அப்பா .
குளித்து முடித்து, உடம்பெல்லாம் விபூதி கமழ, நெற்றியில் குங்குமப் பொட்டோடு தேஜஸாக அப்பா இருக்கையில் கையில் பொடி டப்பியை எடுப்பாரே, அந்த வேளையில் அப்பாவை ‘கிளிக்’ என்று ஒரு ஃபோட்டோ எடுக்கத் தோன்றும்.
ஏறக்குறைய இருபதாண்டு காலச் சரித்திரம் உண்டு அதற்கு. அதைத் தான் இப்பொழுது தவற விட்டு வந்து சோகமே உருவாய் நிற்கிறார் அப்பா.
“லைப்ரரி போயிருந்தேன். அங்கே விட்டிருப்பேனான்னு சந்தேகம்” என்றார் மீண்டும். அவர் இன்னும் அதையே தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.
இது நாள் வரை அப்பா ஒரு பொருளையும் தொலைத்ததில்லை. அவருடைய தேவைகளே மிக மிகக் குறைவுதான். இவனுக்குத் தெரிய இன்று வரை அப்பாவுக்கென இருப்பது இரண்டே வெள்ளைச் சட்டை தான். அதுவும்
அந்தக்கால மாடலில் தலையோடு போட்டுக்கொள்ளும் சட்டை அதற்கப்புறம் அப்பா தனக்கென சட்டையே தைத்துக் கொண்டதில்லை. வேட்டி துண்டுதான். எங்காவது அபூர்வமாய் வெளியூர் செல்ல நேரிடும் போது அதைப் போட்டுக் கொள்வார் அப்பா. சட்டையோடு இருக்கும் அப்பாவை நாங்கள் அதிசயமாய்ப் பார்ப்போம். அவருடைய வேட்டி நைந்து கிழிந்து அது துண்டாகும். அல்லது படுக்கை விரிப்பாகும். அதுவும் கிழிந்தால் கோவணமாகும். ஒரு பொருளின் முழு உபயோகம் அங்கே பூரணத்துவம் பெறும்.
வாழ்க்கையில் இந்த அளவுக்கு ஆசை அபிலாஷைகள் இல்லாமல் மனிதன் இருக்க முடியுமா? அதிசயிக்கும் நம் மனது.
அன்று மாலை நான் அலுவலகத்திலிருந்து திரும்பிய போது, அப்பா வழக்கமாய் வாங்கும் அந்தக் கடைக்குச் சென்று ஞாபகமாய்ப் பொடியை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.
அப்பா நூலகம் போயிருப்பது தெரிந்தது. நான் சொந்தமாய் வீடு கட்டி அந்த ஏரியாவுக்குக் குடிவந்ததிலிருந்து. அப்பாவுக்கு அந்த நூலகம் தான் புகலிடம். காலையும், மாலையும் தவறாது. அப்பா நண்பராக்கிக் கொண்ட ஒருவரும் தினசரி அங்கு வந்து கொண்டிருந்தார். இருவரும் பக்கத்திலுள்ள பூங்காவிற்குச் செல்வர். அப்பாவிடம் ஓசிப் பொடி வாங்கி உறிஞ்சுவார் அவர். எப்படியோ, பொழுது நன்றாய்ப் போயிற்று அப்பாவிற்கு.
அப்பா வீடு திரும்பிய போது, புதிதாக வாங்கிய எவர்சில்வர் டப்பியை அவரிடம் நீட்டினேன். அதைத் திறந்து அவர் பொடி போடும் அழகைப் பார்க்கக் காத்திருந்தேன்.
ஆனால் அப்பாவிடம் எந்த உற்சாகமும் காணப்படவில்லை. ‘இது என்ன விலைடா?” என்று கூடக் கேட்கவில்லை. வாங்கியதை அப்படியே ஓரமாய் ஜன்னல் தடுக்கில் வைத்தார் அப்பா. வழக்கமாய் அப்பொழுது பூஜையறைக்குள் சென்று தியானத்தில் அமருவார். அன்று அதுவும் இல்லை .
மொட்டை மாடியில் தனியே போய் அமர்ந்திருந்தவரைத் தேடிப் போனேன். தலை நிமிர்ந்தவரின் முகம் சோகக் கடலாய் இருந்தது.
“அப்பா! என்னாச்சு?” ஆதரவாய் அவர் கைகளைப் பற்றினேன்.
“சுந்தர், நம்ம வீட்டுக்கு வருவாரில்லையா என் லைப்ரரி ஃபரெண்டு ராஜாமணி… அவர் காலமாயிட்டாருடா.” குரல் உடைந்தது அப்பாவுக்கு. மேல் துண்டை எடுத்து வாயைப் பொத்திக் கொண்டார் அப்பா. நான் அமைதியாய் அவரையே பார்த்தவாறிருந்தேன்.
ஏனோ தெரியவில்லை. அதற்குப் பின் அந்தப் பொடி போடும் பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டார் அப்பா.
– குங்குமம், 1999.
![]() |
1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஏழாம் பொருத்தம்…
யுவராஜ் சம்பத்
April 21, 2026
உனக்கும் எனக்கும்
பானுமதி வெங்கடேஸ்வரன்
April 21, 2026
ஒரு சனிக்கிழமை காலையில்
நிர்மலா ராகவன்
April 21, 2026
