கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2025
பார்வையிட்டோர்: 39 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோளகக் காற்றின் வேகமான வீச்சால் பனை மரங்கள் சரசரத்து ஆடின. உடுக்கின் லயந்தப்பா ஒலிக்கு இணங்க, கலைகொண்டு தலைவிரித்தாடும் பெண்போல் பனை மரங்கள் ஆடின. பிடிப்பிழக்கத் தயாரான நிலையில் காய்ந்து செத்துக்கிடந்த காவோலைகள் இறுதிப் பற்றுதலோடு மரத்தோடும் தம்முடனும் மோதிச் சோளக்காற்றின் வீரியத்தைப் புலப்படுத்தின. மெல்லிய மழைவேறு ஓயாது தூறிக்கொண்டிருந்தது. 

இடையிடையே பனைஓலைகளும் கங்கு மட்டைகளும் சுழன்றடித்தபடி நிலத்தில் விழுகின்ற ஓசைகள் எழந்து மடிந்தன. 

சின்னாச்சிக்கிழவர் கனத்த கம்பளி ஒன்றினால் நன்கு போர்த்தபடி வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்து சோளக்காற்றின் அமர்க்களத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய கைகள் நாட்டுப் புகையிலை ஒன்றைக் கிழித்து நரம்பு நீக்கிச் சுருட்டுவதில் ஈடுபட்டிருந்தன. கண்கள் வெளியே எங்கோ அர்த்தத்துடனோ இன்றியோ நிலைத்துப் பார்த்தன. 

இரண்டு நாட்களுக்கு முன்தான் அவர் படுக்கையில் கிடந்து எழும்பினார். பத்து நாட்களுக்க மேல் அறிவு நினைவற்றுப் படுக்கையில் கிடந்தார். அந்த வருத்தத்தால் தோன்றிய பலவீனம் முற்றாக நீங்கிவிடவில்லை. திண்ணையில் குந்தியிருக்கும் போது முதுகெலும்பு வலித்தது. இது ஒரு மறு பிறப்புப் போலஅவருக்கு இருந்தது. அவள் மட்டும் இல்லாதிருந்தால் இன்று நான் எங்கே என்று அவர் கூறிக்கொண்டார். 

முதுமை குடிகொண்ட அவர் உடல் மெதுவாக நடுங்கியது. எனினும் கண்களின் தீட்சண்யம் மங்கிவிடவில்லை. 

எல்லா புலன்களும் ஒன்றில் நிலைக்கவில்லை. அவரைப் பொறுத்தவரையில் அவை அப்படி நினைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கிரகித்துக் கொள்ளக்கூடிய திறன் அவருக்கு இருந்தது. 

சின்னாச்சிக் கிழவர் ஏனோ சிரித்துக்கொண்டார். 

அவருடைய பெயர் பொன்னம்பலப் பிள்ளை ஆனால் அவருக்கு அந்தப் பெயர் நிலைக்கவில்லை. மனைவியின் பெயரோடு ஒரு கிழவரையும் சேர்த்து ஊரார் சின்னாச்சிக் கிழவர் என்று அழைத்தார்கள். அப்படியே நிரந்தரமாகிவிட்டது. 

பொன்னம்பலம் பிள்ளை என்ற பெயரை அவருக்கு ஆசையோடுதான் ஆச்சி வைத்தாள். ஆனால் வீட்டில் அவளும்அப்பும் அவரை ‘பெரியதம்பி’ என்றே அழைத்தார்கள். திருநெல்வேலி என்ற தின்னவேலியிலேயே முதன் முதல் ஓட்டு வீடு கட்டியவர் பொன்னம்பலம் பிள்ளையின் தந்தையார்தான். 

ஆசையோடு ஆச்சி வைத்த பெயர் சிறுவயதில் கூட அவருக்கு நிலைக்காது போய்விட்டது. கலியாணத்திற்குப் பிறகாவது அவருடைய பெயர் வழங்கியதா என்றால் அதுவுமில்லை. சின்னாச்சி அம்மாளை அவர் தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்ட கால தொடக்கத்தில் கூட ‘ஓட்டு வீட்டுத் தம்பி’ ‘பெரிய தம்பி’ என்ற பெயர்களே வழங்கின. மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனாகிய பிறகு அவர் ‘சின்னாச்சிக்கிழவர்’ என்ற கௌரவப் பட்டத்தை பெற்றார். 

அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. என்றாலும் பொன்னம்பலப்பிள்ளை என்ற பெயர் இடையிடையே வழங்கத்தான் செய்கிறது. கொழும்பிலிருந்து மூத்த மகன் சிவசுப்பிர மணியம் எப்போதாவது மணியோடர் அனுப்பும் போதோ, சிலாபத்திலிருந்து இளைய மகள் பூரணி எப்போதாவது கடிதம் எழுதும் போதோ முகவரியில் பொன்னம்பலப் பிள்ளை என்றே குறிக்கிறார்கள். 

தபால்காரர், சின்னாச்சிக் கிழவர்தான் பொன்ம்பலப்பிள்ளை என்று தெரியாது அலைந்து திரிவது வேறு கதை. 

மூன்றாண்டுகளுக்கு ஒரு தடவை வீடு வீடாக ஏறி இறங்கி வாக்குப் பிச்சை கேட்கிறவர்களும் பொன்னம்பலப்பிள்ளை’ என்று அழைத்துக்கொண்டெ வருகிறார்கள். பணம் கொடுத்து வாங்கிய காலத்திலும், பணம் கொடாமல் வாங்குகிற காலத்திலும் அரிசி பெற உதவும் கூப்பனிலும் ‘க. பொன்னம்பலப்பிள்ளை’ என்றே பெயர் இருக்கிறது. 

மற்றையபடி அவர் சின்னாச்சிக் கிழவர்தான். 

அவருடைய பெயர் வழங்காமல் வேறு பெயர்களில் அவரை அழைப்பதற்குக் காரணம் இல்லாமலில்லை. பெற்றோருக்கு அடங்கிய பிள்ளை, மனைவிக்கு அடங்கிய கணவன், பிள்ளைகளுக்கு அடங்கிய தந்தை என்பவைதான் அவர் வாழ்க்கைச் சுயசரிதையின் மூன்று பெரும் பாகங்கள். 

அவர் இயங்கப்படுபவர் இயங்குபவர் அல்லர். 

அவர் பெற்றாருடன் இருக்கும் போது அவரை ஊரார், “தாய்தேப்பனுக்கு அடங்கிய பிள்ளை…… தாய் தேப்பன்ரை சொல்லை மீறாது….’ என்கிறார்கள். 

‘உண்மைதான்’ என்று சின்னாச்சிக்கிழவர் இப்போது தலையை ஆட்டிக் கொண்டார். 

சோளகக்காற்று வீசிக் கொண்டிருந்தது. மழையும் தூறிக்கொண்டிருந்தது. கொட்டிப் பொழிகின்ற மழையை கண்ணிமைக்காமல் பார்ப்பதிலும், நுரைபரப்பி விரைகின்ற வெள்ளத்தைப் பார்ப்பதிலும் அவருக்கு மிகுந்த ஆசை. சிறுவயதில் வெள்ளத்திடையே நீர் எற்றியபடி விரைந்து ஓட அவருக்கு ஆசைதான். ஆனால் அந்த ஆசை நிறைவேற முடிவதில்லை. 

தாழ்வாரத்தில் நின்று மழைத்தாரைகள் வெள்ளிக் கம்பிகளாக இறங்குவதைப் பார்த்துக் கொண்டு நிற்பார். 

“பெரிய தம்பி….” என்று அப்புவின் குரல் இடியாக முழங்கும். “உள்ளுக்கு வந்திரு…” 

மறுத்து நிற்க அவருக்குத் துணிவிருக்காது. சொல்வதும் சரிதான் என்று மனதிற்படும். 

ஒரு சம்பவத் துணுக்கு இன்றும் பசுமை மாறாமல் அவர் நினைவில் இருக்கிறது. 

நான்கு நாட்களாக மழை ஓயாது பொழிந்ததால் வளவெல்லாம் வெள்ளம். முழங்காலள விற்குத் தேங்கி நிற்கிறது. அந்த வெள்ளத்தினுாடே நடந்து திரியவேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஆச்சியும் அப்புவும் தடையாக இருந்தனர். 

ஒரு நாள் பக்கத்து வீட்டுக் கிழவிக்கு வருத்தம் கடுமையென்று ஆச்சியும் அப்புவும் போய்விட்டார்கள். வீட்டில் அவரும் அவரது தங்கை பாக்கியமும்தான். 

அவர் காலாற மனமாற வெள்ளத்தினுாடே நடந்து திரிந்தார். எவ்வளவு குளிர்மை? எவ்வளவு இனிமை? 

ஆச்சியும் அப்புவும் திரும்பி வந்தபோது பாக்கியம் உண்மையை கூறிவிட்டாள். அவர் செய்யாத ஒன்றையும் கூட்டிக் கூறிவிட்டாள். 

“அப்பு….. அண்ணை வெள்ளத்துக்குள் திரிந்தவர். வெள்ளத்துக்குள் குளிச்சவர்……” 

அப்பு எரிமலையெனக் குமுறினார். 

“டேய் தம்பி…..பெரிய தம்பி ! 

சர்வமும் ஒடுங்கிப் போய் பலிபீடத்திற்கு வரும் உயிராக, அப்புவிற்கு முன் வந்து நின்றார். அப்புவின் கைகளில் அகப்பட்டது இரட்டை மாட்டு வண்டி துவரம்கம்புதான். ‘பளார்’ என்று ஒரு விளாசல். அவரின் முதுகுச் சதை பிழந்து கொண்டது. அன்றைய அடியோடு அவர் எவ்வளவோ மாறிவிட்டார். பெற்றார் கூறியவை அவருக்கு தேவவாக்கு. தனக்கு என்று ஓர் உணர்வை அவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சில வேளைகளில் மறுத்துக் கூற மனந்துடித்தாலும் முதுகில் நிரந்தரமாகத் தங்கி விட்ட பிரம்படி வடுவும், அவர்கள் சொல்வது சரிதான் என்ற உணர்வும் தடுத்தன. 

அப்புவோடு தோட்டத்திற்குப் போவார். சிலவேளைகளில் தண்ணீர் இறைப்பார். வரம்பு கட்டுவார். அதிலேயே அவர் சுவை கண்டார். அவரை ஒத்த பையன்கள் சினிமா, திருவிழா கூட்டம் என்றெல்லாம் திரிவதைக் கண்டாலும் இவருக்கு இவருக்கு அவற்றில் நாட்டம் ஏற்படவில்லை. ஏற்பட்டாலும் ஏதோ ஒருவித பயம் தடுத்தது. 

அவரிலும் பார்க்க நான்கு வயது குறைந்த தங்கை பாக்கியம் கூட அவரை அடக்கி ஆண்டாள். 

“உனக்கு ஒன்றும் தெரியாது… நீ சும்மா இரு அண்ணை….!” என்று அவள் உறுக்கிளால் போதும், அவர் பேசாது அடங்கிவிடுவார். அவருக்கும் எதுவும் தெரியாதது போலவே இருக்கும். அவர் கலியாணம் செய்து கொண்ட பிறகு அவரை ஊரார் “பெஞ்சாதிக்கு அடங்கிய மனுஷன். அவள் கீறின கோட்டைத் தாண்டாது” என்று கூறிக்கொண்டார்கள். 

‘உண்மைதான்’ 

அவருடைய பத்தொன்பதாம் வயதில் அவருக்கு கலியாணம் நடந்தது. கலியாணப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதென்பது அவருக்குத் தெரியும் பாக்கியத்திற்காக்கும்’ என்று பேசாது இருந்து விட்டார். திருமணப் பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்து நாள் வைத்த பின்புதான் அப்பு அவரைக் கூப்பிட்டார். 

“பெரியதம்பி, உனக்கு வருகிற புதன் கிழமை கலியாணம்….” 

எங்கு எப்படி என்ற விபரங்கள் அவருக்குத் தெரியாது. யார் மணப்பெண் என்பதும் அவருக்குத் தெரியாது. கேட்டு அறிவதற்கு விருப்பம் இருந்தது. ஆனால் முடியவில்லை. 

அவருக்கு என்றொரு ஆசை, விருப்பம் இல்லையா? 

பக்கத்து தோட்டத்தில் அதிகாலை வேளைகளில் தகப்பன் துலாமிதிக்க நீரிறைக்கும் ஓர் இளம் பெண்ணை அவர் கண்டிருக்கிறர். அவளது அழகு அவரைக் கவர்ந்ததுதான். அவளைத்தான் அவருக்கு மனைவியாக்கப் போகிறார்களோ? 

அப்படியாயின் எவ்வளவு நன்றாக இருக்கும்? 

ஆனால் அவருக்கு மனைவியாக வந்தவள் வேறொருத்தி சின்னாச்சி அம்மாள். 

சின்னாச்சியைப் பொறுத்தளவில் அவருக்கு நல்ல அபிப்பிராயம். அவள் மிகவும் கெட்டிக்காரி. குடும்பத்தை நிர்வகிப்பதில் அவளுக்கு இணை அவள்தான். அவருக்கு என்றொரு பொறுப்பையும் விடாது அவளே யாவற்றையும் நிர்வகித்தாள். 

“இந்த முறை புகையிலையை எனக்கு தந்திடுங்கோ….” என்று பட்டணத்திலிருந்து வந்த வியாபாரி கேட்பார். 

“அவவைக் கேளுங்கோ….” என்பார் அவர். 

“உங்கடை மகனின் சாதகத்தை தாருங்கோவன் ஒரு பெண் பார்ப்பம்” என்று வருவார் தரகர். “அவவைக் கேளுங்கோ……” 

“ஒரு நூறு ரூபா இருந்தால் கடனாகத் தாருங்கோ…. மூன்று நாளிலை திருப்பித்தாறன் ….’ என்று பக்கத்து வீட்டுக்கு கந்தப்பர் வருவார். ” அவவைக் கேளுங்கோ…. ” 

என்பார் அவர். காலகதியில் அப்படிக் கூறவும் வேண்டிய வேலை இல்லாமல் போய்விட்டது. எல்லோரும் அவரை எதுவும் கேளாது சின்னாச்சியையே கேட்டார்கள். 

சின்னாச்சியும் அவரை ஒன்றுக்கும் கேட்பதில்லை. அவருக்கு என்ன தெரியும் என்ற நினைவு. அவராகவே ஏதாவது செய்ய முயன்றாலும் “நீங்க சும்மா இருங்கோ நானே செய்யிறன்….” என்பாள். 

மறுத்துகூற அவருக்கத் துணிவிருக்காது. எனக்கு என்ன தெரியும்? என்று எண்ணிப்பார்ப்பார் மழை ஓய்ந்து வானம் சற்று வெளுத்தது போல் இருந்தது. அவர் சுருட்டைச் சுவைத்துச் சுவைத்து புகைத்தார். முதுகுத்தண்டு வலியைத் தந்தது. 

வளவு முழுவதும் பனை மட்டைகளும், கங்குமட்டைகளும், பன்னாடைகளும், குவிந்து கிடந்தன. ஐந்நூறு பனைகளுக்கு மேல் நின்ற காணியது. இன்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு விட்டது. அவருடைய கண்பார்வை பதியக்கூடிய தூரத்தில்தான் காணியை பிரிக்கும் பனை மட்டையால் வரிந்த வேலி இருக்கிறது. ஆங்காங்கே மட்டைகள் உக்கி விலகியிருந்தன. தென்மேற்கு மூலையில் மழைக்கும் காற்றுக்கும் தாக்குக் கொடுக்க முடியாத வேலி உட்புறமாகச் சாய்ந்து கிடந்தது. 

பாசத்தையும் பிரித்து வைத்திருப்பது அந்த வேலிதான். 

சின்னாச்சிக் கிழவர் பெரு மூச்சொன்றை வெளிப்படுத்தினார். காலம் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றது. நேற்றுப்போல இருக்கின்றது. இந்தப் பனைவளவு முழுவதும் அவரும் பாக்கியமும் ஓடித்திரிந்து கங்குமட்டைகள் பொறுக்கி அடுக்கியமை இன்று ஓட முடிகிறதா? வேலிக்கு அப்பால் யாரோ ஒரு கிழவி பனை மட்டைகளைப் பொறுக்கி அடுக்கிக் கொண்டிருப்பதை அவர் கண்டார். பாக்கியம் கூட கிழவியாகப் போய் விட்டாள். மெலிந்து கறுத்து தள்ளாடிப் போனாள். ஒரு காலத்தில் “அண்ணை, நீ சும்மா இரு’ என்று தன்னை உறுக்கிய சிறுமி பாக்கியமா இவள்? 

காலம் எவ்வளவு கொடுமைகளைச் செய்துவிட்டுக் கழிகிறது. 

பாக்கியம் மட்டைகளைப் பொறுக்கி அடுக்குவதைக் காண அவருக்கு ஏக்கமாக இருந்தது. இந்தக் காத்துக்கையும் மழையுக்கையும் உதுகளைப் பொறுக்க வேணுமே? 

பனை மரங்கள் காற்றில் சிலிர்த்தன. காணி பிரிக்கும்போது பாக்கியத்தின் வளவில் நின்றிருந்த பனைகள் இப்போது இல்லை. அரைப்பங்கிற்கு மேல் தறிக்கப்பட்டு விட்டன. அவளுடைய பிள்ளைகள் வீடு கட்டுவதற்கெனத் தறித்துக்கொண்டு போன பனைகள்தான் எத்தனை? 

பாக்கியத்தின் வீட்டில் ஒவ்வொரு முறையும் பனை தறிக்கும் போது சின்னாச்சிக் கிழவருக்கு தன்னையே தறிப்பது போல உணர்வு பிறக்கும். பனையின் மீது இறங்குகின்ற ஒவ்வொரு கோடரி வெட்டும் தன் மீது விழுவது போலத் துடிப்பார். 

அவருக்குப் பிடியாத ஒன்று ஒண்டென்றால் அது பனைகளைத் தறித்து வீழ்த்துவதுதான். பனையிலிருந்து கிடைக்கின்ற பயன்களைக் கொண்டே வாழ்க்கை நடாத்துகின்ற பலரை அவர் கண்டிருக்கிறார். கூப்பன் அரிசியும் அமெரிக்க மாவும் சீனியும் மனிதரின் வாழ்வைச் சோம்பேறியாக்கிவிட்டன. அவர் அறியத்தக்கதாக சுற்றாடலில் இருந்து பனங்காணிகள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன. பாழ்வெளிகளாக அவை இன்று கரடு பற்றிக்கிடக்கின்றன. 

பாக்கியம் இப்போதும் பனைமட்டைகளையே பொறுக்கிக் கொண்டிருந்தாள். ‘விசர்பெட்டை’ என்று தங்கையை அவர் மனம் ஏசுகிறது. நேரில் போய் ஏசுவதற்கு அவருக்கு துணிவில்லை. எப்படிப் பேசுவார்? 

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அவரது அப்பு மரணப்படுக்கையில் கூறியவை மறந்துவிடக் கூடியவை தாமா? 

“பெரியதம்பி…. உவளாலை தான் நான் சாகப்போகிறேன். எனக்கு என்று மகளாகப் பிறந்தாளே? அவளாளை என் மானம் மரியாதையெல்லாம் நாசமாய் போச்சுது…. அவளை எப்படி எல்லாம் வளர்த்தன்…. போகட்டும். ஆனா, உனக்கு ஒன்று, பெரியதம்பி! அவளோடு நீ இந்தப்பிறப்பிலை சகவாசம் வைக்கக் கூடாது…. பேசக் கூடாது,” 

அப்புவின் வார்த்தைகளை அவர் மீறவே மாட்டார். 

அவரும் பாக்கியமும் பேசித்தான் எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? அவளுடைய பதினேழாவது வயதிற்குப் பின் அவளோடு அவர் பேசவில்லை. இல்லை…. இல்லை…. மூன்று தடவைகள் அவர் பேசியிருக்கிறார். நாற்பது ஆண்டுகளில் பாக்கியத்தோடு அவர் மூன்றே தடவைகள் பேசியிருக்கிறார். 

அந்த நாட்கள் – 

வெளியே பழையபடி காற்றின் வேகம் தலைப்பட்டது. வானமும் அழத்தொடங்கியது. சின்னாச்சிக் கிழவர் சுருட்டை வீசி எறிந்துவிட்டு, உள்ளே போய் அடுப்பை மூட்டினார். ‘இந்தக் குளிருக்குச் சூடாக ஏதாவது குடித்தால்தான் நன்றாக இருக்கும். 

தனக்குத்தானே சமைத்துச் சாப்பிடும் பொறுப்பை அவராகவே ஏற்றுக்கொண்டார். அவருடைய மூன்று பிள்ளைகளில் இரண்டாவது மகன் அகாலமாக இறந்து போனான். மற்றைய இருவரும் குழந்தையும் குட்டியுமாக நல்லாக இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவரை பலதடவை வருந்தி அழைத்தார்கள். அவர் மறுத்துவிட்டார். 

தான் பிறந்து வளர்ந்த வீட்டையும் காணியையும் விட்டு அவர் போவதா? 

அடுப்புப் பற்றி எரியும் போது சின்னாச்சிக் கிழவருக்கு அந்த நாட்களே நினைவில் வந்தன. பாக்கியத்தோடு அவர் பேசிய சந்தர்ப்பங்கள்- 

சந்தைக்குப் போய்விட்டு அவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். உடலில் ஒரே அசதி, சந்தியில் திரும்பும் போதுதான் அவர்களை எதிரில் கண்டார். 

அவள் கனகசபையோடு நின்றிருந்தாள். அவனைப் பார்க்கவே அவருக்குப் பிடிக்கவில்லை. ஒன்றும் அறியாத ஒரு பெண்ணை ஏமாற்றிக் கூட்டிச் சென்றவன் அவன். கனகசபையிடம் என்னத்தைக் கண்டு இவள், தாய்தந்தை அண்ணன் வீடு வளவு எல்லாவற்றையம் துறந்து ஓடினாள்? முரடன் என்று ஊரின் பெயர் பெற்ற கனகசபையிடம் இவள் எதைக் கண்டாள். அவனிலும் பார்க்க உயர்ந்த ஒருவனை இவளுக்குக் கணவனாக்கி இருப்போம். 

அண்ணை என்று அழைத்தாள் பாக்கியம். அவர் அவளை நிமிர்ந்து பார்த்தார். அவளின் விழிகள் கலங்கித் தவித்தன. அவர் எதுவுமே பேசாது வெறுப்போடு ஒதுங்கிப் போக முயன்றார். “அண்ணை, நீயுமா என்னை வெறுக்கிறாய்?” 

பாக்கியத்தின் இவ்வார்த்தைகள் அவரை நெகிழ வைத்தன. ‘அவளோடு நீ இந்தப்பிறப்பிலை பேசக்கூடாது என்று அப்பு சத்தியம் செய்த வார்த்தைகளும் நினைவு வந்தன. மானத்திற்கு பயந்து இறந்துபோன அப்புவின் மகன், மானத்தை விற்று ஓடியவளுடன் பேசுவதா? 

அவர் அவளை ஏளனமாகப் பார்த்தார். 

“உன்னோடு எனக்கென்ன கதை…” 

அவர் வந்துவிட்டார். 

சூடாக தேநீர் கலக்கி எடுத்துக்கொண்டு வெளித்திண்ணைக்கு வந்தார். பாக்கியத்தைக் காணவில்லை. வீட்டிற்குப் போய்விட்டாள் போலும். 

அவளுடைய வீட்டைச் சுற்றி நின்ற பனைகள் வேகமாக அசைந்து ஆடின. சோளகம் பெயர்வதற்கு முன்பே ஓலைகளை வெட்டுவிக்க வேண்டும். பாக்கியம் இம்முறை ஓலைகளை வெட்டுவிக்காததால், தலைப்பாரத்தில் பனைகள் அசைந்து ஆடின. சின்னாச்சிக்கிழவர் எப்போதோ ஓலைகளை வெட்டுவித்துவிட்டால், கங்குமட்டைகள் கூட இப்போது காய்ந்து விழத் தொடங்கியுள்ளன. 

அவளுக்கு யார் இருக்கிறார்கள்? உரிய காலத்தில் காரியங்களைச் செய்வதற்கு அவளுக்கு இன்று எவர் உள்ளனர்? கணவன் சிறையில் இருக்கிறான். மூத்த மகனோ போன இடம் தெரியாது, ஊமைப் பெண் ஒருத்தி கூட இருக்கிறாள் வேறு யார்? 

‘பளார்’ என்ற சத்தத்தோடு திண்ணையில் ஏதோ வந்து விழுந்தது. கங்கு மட்டை ஒன்று அவருக்குப் பக்கத்தில் விழுந்து கிடந்தது நல்லவேளை, கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தால் சின்னாச்சிக் கிழவருக்கு மேலேதான். 

“பத்து நாள் காய்ச்சலால் சாகாதவன்….. இந்த மட்டையாலையா சாகப்போறன்?” 

கங்குமட்டையைத் துாக்கி எறியப்போனவர் சற்றுத் தயங்கினார். அவர் கைகள் அம்மட்டையை ஏந்தி நிற்க, விழிகள் அதன்மேலேயே மொய்த்தன. 

“கங்கு மட்டை….” 

கறுத்துக் காய்ந்து பொருக்குட்பட்டுக்கிடந்த அக்கங்குமட்டையில் அவர் என்னத்தைக் கண்டாரோ? பனை ஓலையின் அடிமட்டை அது பாளைக்கத்தியின் கூரான வெட்டின் வாய் அதில் இருந்தது. நுனி ஒரு மட்டையாகப் பொருந்தி அடி இரு கிளைகளாக விரிந்து இருந்த அக்கங்குமட்டை அவருக்கு என்ன இரகசியங்களைக் கூறினவோ? 

இத்தகைய கங்குமட்டைகளைத்தான் அவரும் பாக்கியமும் முன்பு பொறுக்கினார்கள். பாக்கியம் அப்போது சிறுமியாக இருந்தாள். உலகின் கள்ளம் புகாத வயது. சிலவேளைகளில் கங்குமட்டை ஒன்றைக் கையில் எடுத்துக் கூறுவாள். 

அண்ணை … இது நீயாம் .. இது நானாம்….” அவளது சிறு விரல் கங்குமட்டையின் இரு கிளைகளையும் ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டும். அப்போது அது அவருக்கு இன்று புரிந்தது போல விளங்கவில்லை. இப்போது நன்கு புரிகிறது. ஒரே அடியில் பிறந்த இரு கிளைகள். ஆனால் பாக்கியம் அவரது குடும்பத்திற்கு மாறாதவசையை ஏற்படுத்திவிட்டாள். ஆச்சி அப்புவின் மரணத்திற்கு அவளே காரணமாக அமைந்தாள். ஆச்சி, அப்புவின் மரணத்திற்கு மட்டுமா? அவருடைய இரண்டாது மகன் சின்னத்துரையின்…

அச்சம்பவத்தை அவர் நினைத்துப் பார்க்கவே விரும்பவில்லை. ஆனால், நினைவுகள் அழியக்கூடியனவா? அதை எப்படி அவரால் மறக்க முடியும்? பாக்கியத்தோடு அவர் பேசிய இரண்டாவது சந்தர்ப்பமும் அதுதானே? 

பாக்கியம் வீட்டை விட்டு கனகசபையோடு ஓடி இருபத்திநான்கு ஆண்டுகள் கழிந்து போயின. அதற்குள் எத்தனையோ நிகழ்ந்துவிட்டன. அவரின் மனைவி இறந்து போனது அவரின் பிள்ளைகளுக்கு திருமணங்கள் நடந்தது. எல்லாம் அக்காலத்துள்தான். 

பாக்கியம் கணவனோடு துணுக்காயில் இருப்பதாக எப்போதோ அவர் அறிந்திருந்தார். இரண்டு பிள்ளைகளும் இருப்பதாக எவரோ கூறியிருந்தார்கள். 

இருந்தாற் போல் ஒருநாள் கனகசபை அவர் வீட்டிற்குள் வந்தான். வாசலில் பாக்கியமும் பிள்ளைகளும் நின்றிருந்தார்கள். அவர்கள் வந்தது ஒரு மாலை வேளையில்தான். நல்ல நினைவு இருக்கிறது. 

கனகசபையை முதலில் அவரால் அடையாளம் காணமுடியவில்லை. 

“நான்தான் கனகசபை….” என்றான். அவன் 

“பாக்கியத்தின்…” 

“ஓம்…ஏன் வந்தாய்? உனக்கு இங்கு என்ன அலுவல்…?” என்று அவர் கேட்டார். 

கனகசபை மெளனமாக நின்றான். பின் கூறினான். “பாக்கியத்தின் பங்கைப் பிரித்துக் கொடு… 

இவ்வளவு காலமும் நீங்கள் அனுபவிச்சது போதும்…..” 

அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார்! 

“எந்தப் பங்கு….?” 

“காணி தோட்டம்” 

அப்போதுதான் சின்னத்துரை வெளியே வந்தான். அவரது பிள்ளைகளில் அவன் சற்று முன்கோபமும் படபடப்பும் மிகுந்தவன். 

“என்னத்தைப் பிரிக்க வேணுமாம், அப்பு? உவர் ஆர்…” என்று அவன் கேட்டான். 

அதன் பின் நடந்தவற்றை நினைக்க அவரது இதயம் கலங்கியது. வார்த்தைகள் படிப்படியாகத் தடித்தன. கனகசபையும் சின்னத்துரையும் வாக்குவாதப்பட்டுக் கொண்டார்கள். 

“இது எங்கடை சொத்து. உனக்கு என்னடா பங்கு? எளிய நாய்ப்பிறவிகள்……” என்று ஏசினான் சின்னத்துரை. “கனக்க கதைத்தாய் என்றால் உன்னைக் கழுத்திலை பிடித்து வெளியே தள்ளுவன்…” 

“செய்யடா பாப்பம்…” என்றான், கனகசபை. 

“சின்னத்துரை…சின்னத்துரை…” என்று அவர் எவ்வளவு தடுத்தும் அவன் கேட்கவில்லை. அவர் பயந்து போய் நின்றார். 

கனகசபையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டான் சின்னத்துரை தள்ளின வேகத்தில் கனகசபை பனையோடு மோதி விழுந்தான். விழுந்தவன் கண்ணிமைக்கும் நேரத்துள், திண்ணையிள் சாத்தியிருந்த கோடரியை எடுத்து…

சின்னாச்சிக் கிழவர் கண்களைத் துடைத்துக் கொண்டார். அதோ அந்த இடத்தில்தான் சின்னத்துரை தறித்துப் புரட்டிய பனைமரமாக விழுந்து கிடந்தான். 

பாக்கியமும் பிள்ளைகளும் ஓடிவந்து கனகசபையை பிடித்துக் கொண்டார்கள். 

“பாக்கியம் இது உனக்கே நல்லாயிருக்கா….?” இவைதாம் அவர் பாக்கியத்தோடு பேசிய வார்த்தைகள். 

‘கொலைகாரி… கொலைகாரி…’ என்று இதயம் ஓலமிட்டது ‘பாவி’ 

வழக்கு நடந்தது. கனகசபை சிறை சென்றான். பாக்கியமும் வழக்காடித் தன் பங்கைப் பெற்றுக்கொண்டாள். 

கார் ஒன்று வாசலில் வந்து நின்ற சத்தம் கேட்டது. சின்னாச்சிக் கிழவர் வாசலைப் பார்த்தார். “இந்தக் காத்துக்கையும் மழையுக்கையும் யார்தான் வருவினம்?’ 

“அப்பு…!” என்று அழைத்தபடி சிவசுப்பிரமணியம் வந்தான். அவனைத் தொடர்ந்து அவனது மனைவியும் பிள்ளைகளும் வந்தனர். அவருடைய மகள் பூரணியும் கூடவே வந்தாள். 

“பத்து நாட்களாகச் சுகமில்லாமல் கிடந்தாயாம், அப்பு! எங்களுக்கு அறிவிக்கப்படாதே…..? இங்க தனியக் கிடந்து கஷ்டப்படவேணுமே?..” என்றாள், பூரணி 

“உனக்குச் சுகமில்லையெண்டு சோமப்பாவின் மகன் கொழும்பிலை சொன்னான். உடனே வர வசதிப்படவில்லை…. நேற்றுத்தான் சிலாபத்துக்குப் போய் அப்படியே பூரணியையும் கூட்டிக்கொண்டு வந்தன்… கடுமையான காய்ச்சலே, அப்பு! எங்கை மருந்து வாங்கின…?” என்று பொரிந்து தள்ளினான், மகன். 

சின்னாச்சிக் கிழவர் எல்லாரையும் பார்த்துச் சிரித்தார். 

வேலிக்கு அப்பால் பாக்கியம் கங்குமட்டை பொறுக்கிக்கொண்டிருந்தாள். அவள் மீது பூரணியின் பார்வை பட்டது. 

“உவள் இன்னும் திரியிறாளே? பற நாய்கள்…. தாங்களும் ஒரு மனிசரெண்டு சீலை உடுத்துக்கொண்டு திரியினம்… உதிலை தானே சின்னண்ணையை சரிச்சவள்…” என்றாள், பூரணி. அவள் பேசியவை பாக்கியத்தின் காதுகளில் விழுந்திருக்காது. விழுந்திருந்தாலும் அவள் எதுவும் பேசாள். 

பாக்கியத்தின் வீட்டுப்பனைகள், அம்மன் கோவில் பூசாரியின் உடுக்குக்கு இணங்கத் தலைவிரித்தாடும் கலை வந்த பெண் போல, சிலிர்த்து ஆடின. 

உள்ளே சமையல் நடந்து கொண்டிருந்தது. இன்று சமைக்கிற வேலை அவருக்கு இல்லை. அவர் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார். 

பாக்கியம் வேலியோரம் நின்று அவரைப் பார்ப்பது போல அவருக்குப்பட்டது. 

அவள் மட்டும் இல்லாமலிருந்தால்…? 

நாற்பது ஆண்டுகளில் பாக்கியத்தோடு மூன்றாவது தடவையாகப் பேசிய சந்தர்ப்பம் மனதில் கனத்தது. அவர் புகையிலையை எடுத்துச் சுருட்டத்தொடங்கினார். 

பதினைந்து நாட்களுக்கு முன் நடந்தது. அவருடைய தோட்டங்கள் இன்று குத்தகைக்கே செய்கை பண்ணப்படுகின்றன. இடையிடையே சென்று தோட்டங்களைப் பார்ப்பதில் அவருக்குத் தனி ஆவல். பதினைந்து நாட்களுக்கு முன் தோட்டங்களுக்குப் போய்விட்டு வரும் வழியில் மழை பிடித்துக்கொண்டது. 

எல்லாம் வருவதற்கு காலவேளை இருக்கிறது போலும். 

வீட்டிற்கு வந்து தலையைத் துடைத்த போது மெதுவாகத் தும்மல் கிளம்பியது. இரவு பத்து மணியளவில் உடம்பெல்லாம் பற்றி எரிவது போன்ற உணர்வு. உடலும் மெதுவாக நடுங்கத் தொடங்கியது. நாக்கு வேறு வறண்டு தாகத்தால் துடித்தது. சின்னாச்சிக் கிழவர் எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. 

நேரம் செல்லச் செல்ல நோயும் கடுமையாகியது. அவரை அறியாமலே அவருள் பயம் தலைதூக்கியது. 

“ஒருவரும் பக்கத்தில் இல்லாமல் அனாதையாகச் சாகப்போகிறேன்…..” 

உடம்பிற்குள் ஏதேதோவெல்லாம் நடந்தன. 

“ஐயோ……” என்று கூச்சலிட முயன்றார். வார்த்தைகள் வெளிவர முடியவில்லை. அதற்குப் பிறகு நடந்தது அவருக்குத் தெரியாது. 

அவருக்கு அறிவு வந்த போது அவருக்குப் பக்கத்தில் பாக்கியம் அமர்ந்திருந்தாள். அவரால் அதை நம்பவே முடியவில்லை. பாக்கியம் எப்படி இங்கே வந்தாள்? நான் வருத்தமாகக் கிடப்பது அவளுக்கு எப்படித் தெரிந்தது? 

“நீயா?” என்றார் “ஏன் வந்தாய்” 

“பத்து நாளாகிறது அண்ணை!” 

அவர் திடுக்கிட்டுப் போனார். பத்து நாட்களாக அவர் வருத்தத்தில் ஒன்றும் தெரியாமல் கிடந்திருக்கிறார். பாக்கியத்தை நன்றியோடு பார்த்தார். அவர். அவள் அவரை பாசத்தோடு பார்த்துவிட்டு வெளியேறினார். 

அவள் போனதன் பின்பு வைத்தியர் சோமப்பா வந்தார். 

“நீர் பிழைச்சது பெரிய விஷயம்காணும். ஒருவரும் இல்லாமல் சாகக்கிடந்தீர்….. பாக்கியமெல்லோ உம்மைக் காப்பாற்றியது….” 

அவர் சுகமாகி எழுந்ததன் பின் அவரைக் கண்டு போக அவரது பிள்ளைகள் வந்திருக்கிறார்கள். அவர் செத்துக்கிடந்தால் இன்று வந்து அடக்கம் செய்துவிட்டுப் போவார்கள். 

அவர்களிலும் தவறில்லை. கம்பிளியால் இறுக்கிப் போர்த்திக் கொண்டு அத்திண்ணையில் அவர் உட்கார்ந்திருந்தார். மாலை தேய்ந்து இரவு படர்ந்து கொண்டிருந்தது. முன்னால் வெகுதூரத்தில் இருந்த வேலிக்கு அப்பால் பாக்கியத்தின் வீட்டினுள் எரியும் விளக்கின் ஒளி செத்தைக்கு ஊடாக ‘மினுக் மினுக்’ கென்று தெரிந்தது. 

பாக்கியம் இப்போது படுத்திருப்பாள், மழைக்குள் நனைந்தாளோ? வருத்தம் ஏதாவது வந்திருக்குமோ? போய்ப் பார்த்தால் என்ன? 

அப்புவின் வார்த்தைகள் நினைவு வந்தன. சின்னத்துரை இரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சி கண்முன் தெரிகிறது. 

‘கொலைகாரி’ என்று உள்மனம் ஓலமிட்டது. ஒரு பெண் சரிவர நடக்காது போனால், அதனால் எத்தனை அனர்த்தங்கள் விளைந்துபோகின்றன? பாக்கியம் எவருக்கும் பிடிக்காத, ஆனால் தனக்குப் பிடித்தமான ஒரு காரியத்தைத்தான் செய்தாள். அதனால் நிகழ்ந்தவை….? 

“அப்பு, உள்ளுக்கு வாணை காற்று நல்லா வீசுது…” என்று பூரணி கூப்பிட்டாள். அவர் நினைவு எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. 

அவருக்கு ஒரு கோதாரியும் விளங்காது எழும்பி வாணை, அப்பு!” என்று சிவசுப்பிரமணியம் உரக்கக் கத்தியது காதில் விழுந்தது. உள்ளே போக எழுந்தவரின் கண்கள் எங்கோ நிலை குத்தி நின்றன. 

இதென்ன, பாக்கியத்தின் வீட்டிற்கு அருகில் நின்றிந்த பனை பேயாட்டம் ஆடுகிறதே? மற்றப் பனைகளிலும் இதன் ஆட்டம் சற்றுக் கூடுதலாக இதென்ன அது சரிவதுபோல சரிகிறது… சரிகிறது… ஐயோ பாக்கியம்…

“ஐயோ….” என்று சின்னாச்சிக்கிழவர் கத்தினார். அவரது கூச்சலைத் தொடர்ந்து படீர் என்ற பெருஞ் சத்தத்துடன் பாக்கியத்தின் வீட்டின் மீது பனை மரம் சாய்ந்தது. 

“ஐயோ… அம்மா…” என்ற ஓலம் எழுந்து தேய்ந்தது. 

பூரணியும் சிவசுப்பிரமணியமும் வெளியே ஓடிவந்தார்கள். சின்னாச்சிக்கிழவர் பாக்கியத்தின் வீட்டை பார்த்தபடி திக்பிரமை பிடித்து நின்றார். 

பூரணி நிலைமையைப் புரிந்து கொண்டாள். 

“உவளுக்கு இது நல்லா வேணும் பனை மட்டுமே, இடியே விழும்….”
 
சின்னாச்சிக்கிழவர் மகளை வெறியோடு பார்த்தார். மறுகணம் பாக்கியத்தின் வீட்டை நோக்கி ஓடத்தொடங்கினார். 

“அப்பு, நில்…!” என்று உறுமினான். சிவசுப்பிரமணியம், “எங்கே போறாய்…” என்று ஓடிப்போய் அவர் கையைப் பற்றினான். “தம்பியை வெட்டிய’ சரித்ததை மறந்து போனாயே? உனக்கு ஒன்றும் தெரியாது… நீ போகக்கூடாது…. 

‘இவன் சொல்வதும் சரியோ…’

அவர் ஒரு கணம் தயங்கி நின்றார். 

“அப்பு….நீ போகக்கூடாது…” என்று தடுத்தாள் பூரணி. 

‘இவள் சொல்வது சரியோ?’ 

அவர் ஒரு கணம் பேசாது நின்றார். பாக்கியம் வீட்டில் ஓலம் எழுந்தது. மறுகணம் ஏதோ ஓர் உணர்வு கைகளை உதறிவிட்டுப் பாக்கியத்தின் வீடு நோக்கி ஓடத்தொடங்கினார். நில்லணை, அப்பு.. நீ அங்கை போனால் நான் பொலிடோல் குடிச்சுச் சாவன்…” என்றாள் பூரணி 

“அப்பு… நீ அங்கை போனால் இனி உன்ரை முகத்திலை விழிக்கவும் மாட்டன் கொள்ளியும் வைக்கமாட்டன்…… என்றான். மகன். 

சின்னாச்சிக் கிழவருக்கு அவை கேட்டன. 

அவர் அவற்றை எல்லாம் உதறினார். 

தாய் தகப்பனுக்கு அடங்கிய பிள்ளை, மனைவிக்கு அடங்கிய கணவன். பிள்ளைகளுக்கு அடங்கிய தந்தை பொன்னம்பலப்பிள்ளை என்ற சின்னாச்சிக் கிழவர் தன்னுணர்வோடு தங்கை வீட்டை நோக்கி ஓட்டமாய் ஓடிக்கொண்டிருந்தார். 

கங்கு மட்டைகள் விழுந்து கொண்டிருந்தன. 

செங்கை ஆழியான்

ஈழத்தின் புகழ் பூத்த நாவலாசிரியர். பல சிறுகதைகள் படைத்துள்ளார். அவை நான்கு தொகுதியாக வெளிவந்துள்ளன. வரலாற்று ஆய்வு நூல்கள் சிலவும் வெளிவந்துள்ளன. 40க்கு மேற்பட்ட நாவல்களைப்படைத்துள்ளார். பல தடவைகள் சாகித்ய மண்டலப் பரிசில் பெற்றவர். காட்டாறு, மரணங்கள் மலிந்த பூமி என்பன புகழ் பெற்ற நாவல்கள். காட்டாறு சிங்கள மொழியிலும் யானை ஆங்கில மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

– 06.07.1969, 13.07.1969

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

செங்கை_ஆழியான் செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 - 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார். இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *