கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 4, 2025
பார்வையிட்டோர்: 1,453 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாணிக்கனது மனம் இன்று ஒரு நிலையில் இல்லை. மலர்விழி சொல்லப்போகும் அந்தப் பதிலில் தான் அவனது வாழ்வே தங்கியுள்ளது. நல்லதொரு பதிலை அவள் சொல்வாளா? 

நெஞ்சில் முட்டிமோதும் நினைவலைகள் மத்தியில் படலையைத் திறந்து, கொட்டிலடிக்கு வந்தவன், இடுப்பில் முட்டி மோதிய முட்டிகள் இரண்டினையும் கழற்றி, அருகிலிருந்த வடலியில் கொழுவிவிட்டு, உள்ளிருந்த பனங்கொட்டிலில் குந்திக் கொண்டான். 

இடுப்பில் கனத்த இயனக்கூடு அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. காலில் அணிந்திருந்த காதோலையையும், மார்பை வியாபித்திருந்த மாதோலையையும் கழற்றியவன், வெறுமையாகக் கிடந்த வானத்தை நெடுமூச்சுடன் நோக்குகிறான். 

தலையை அலங்கரித்த தளை நாரை எடுத்து அருகே வைத்தவன் இடுப்பை ஆக்கிரமித்திருந்த இயனக் கூட்டையும், ஏறுபட்டியையும் அவிழ்த்துப் படிப்படியாக…. இறக்கி வைக்கிறான். 

கடந்த ஆண்டு வயலூரிற்கு வட்ட விதானையார் தறைக்கு வெங்காய வைப்புக்குச் சென்றபோதுதான் அது நிகழ்ந்தது! 

வயலூரில் வாழைத்தறையில் வெங்காய வைப்பென்றால் வட்ட விதானையார் கிராமத்தின் கிழக்கேயுள்ள திடலைச் சார்ந்த ‘சம்பளகாரரைக் ‘ கொண்டுதான் முன்னர் செய்விப்பது வழக்கம். தனது நண்பர்களுடன் தறையில் இறங்கிய மாணிக்கன், மத்தியானச் சாப்பாட்டு வேளையில்தான், கொத்திற்கு வந்திருந்த வடலித்திடலாரைவிட, வெங்காய வைப்பிற்கெனச் செம்பாட்டுத்திடல் ‘பெண்டுகள்’ வந்திருப்பதையும் அவதானித்தான். 

வடலித் திடலில் ஆண்கள் சீவல் தொழில் செய்த மீதி நேரத்திற்கு இப்படித் தறைக்கொத்துப் போன்ற பகுதிநேர வேலைகளுக்கும் செல்வது முன்னர் வழக்கத்திலிருந்தது. ஆனால், அயலூரான செம்பாட்டுத் திடலில் நிலைமை முற்றிலும் மாறுபட்டிருந்தது. அப்பகுதி ஆண்கள் செருப்புக் கட்டுவதையும், விறகு கொத்துவதையும் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். பெண்களே இப்படி வெங்காய வைப்பிற்கென்றும், களை பிடுங்குவதற்கென்றும் சம்பளத்திற்காகப் பக்கத்தூரான வயலூரிற்குச் சென்று வந்தார்கள். 

பலரையும் இனங்கண்டுவந்த மாணிக்கனின் கண்கள் ஓர் இடத்தில் நிலைத்தன. வடலிப் பருவம்….. குருத்தோலை மென்மை…. சார்வு நிறம்….. பாளைச் சிரிப்புதிர்த்துப்…… பார்ப்பதற்குப் புதிதாக வார்த்த பனாட்டுத் தட்டாகப் பளபளப்புடன் காட்சியளித்த அவள், தன்னையே வைத்த கண் வாங்காமல்…? 

“மச்சான் பங்கார் பாரடா!” – பரந்த மார்பில் நிறைந்து வழிந்த வியர்வையைத் துவாய்த் துண்டால் துடைத்தவாறே, பக்கத்தில் நின்ற வீரனுக்குத் தட்டிக் காட்டினான் மாணிக்கன். 

“ஆர் வல்லியாற்றை மோளைச் சொல்லுறியே?”

“எந்த வல்லியாற்றை மோள்?” 

“அதுதான் மச்சான்…சிலம்படி வல்லியாரெண்டு முடப்பனை முடக்கிலை இருக்குதுகள்……” 

“என்ன பூராயக்கதை உது? அவருக்கு உப்பிடி ஒரு லட்சணமான பொடிச்சியோ?” 

மத்தியானச் சாப்பாடு முடிந்து பின்னேர வேலை ஆரம்பமாகியது. மூன்று மணியிருக்கும். வானமே இருண்டது. தறையில் நிற்க முடியாதளவிற்குப் பலத்த மழை. சம்பளகாரர் யாவரும் குடிலை நோக்கி ஓடி வந்தனர். 

தலையில் தலைப்பாகையாகச் சுற்றியிருந்த துவாய்த் துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தவாறே திரும்பிய மாணிக்கனுக்கு, உச்சிப்பனையிலிருந்து சறுக்கியதைப் போன்ற ஒரு பிரமை. அந்த ‘வல்லியாற்றை மகள்….. அதே ஏக்கப் பார்வையுடன்! அருகில் நின்ற வீரனை அழைத்தவாறே, அவளை அணுகுகிறான். 

“உங்கடை பகுதிக்கு என்ன மாதிரி விதானையார் சம்பளம் தாறார்?” அவளது பக்கத்தில் நின்ற சின்னிக்கிழவியை மாணிக்கன் வினவினான். 

“ஏன் மோனை அந்தச் சீத்துவக்கேட்டைக் கேக்கிறாய்? நாள் முழுக்க உழைச்சதுக்கு ஐம்பது ரூபாதான் கூலி” – இருமிக் களைத்த கிழவி குடில் கப்பை பக்கபலமாய்ப் பிடித்தவாறே கூறுகிறாள். 

“என்னணை பெத்தாத்தை, அநியாயக் கதை இது? ஏன், கூட்டித் தரச் சொல்லிக் கேக்கிறதுதானே?’ 

“கேட்டாப்போலை கிடைச்சிடுமா?” – ஓ! ஒலித்தது குயிலா? அன்றி அவள் குரலா? அந்த வல்லி மகள் மலர்விழிதான் கூறினாள். 

நிலத்திலிருந்து கொண்டெழும்பிய காற்று நெடும்பனைக் காவோலைகளைச் ‘சரசர’க்க வைத்துவிட்டு, குருத்தோலைகளுக்குத் தாவியது. 

“நாளுக்கு எழுபது கேளுங்கோ! இல்லாட்டி வைப்புக்கு வரேலாது எண்டு சொல்லுங்கோ!” 

“உங்களுக்கு என்ன மாதிரி?” 

“எங்களுக்குக் கொத்து வேலை எண்டபடியாலைக்கும் நூறு தாறார்.” 

“ம்…ம்… மழைதான் விட்டுட்டுதே, பிறகுமென்ன மெனக்கேடு?” – வட்ட விதானையார் தறையில் நின்று சத்தமிட்டார். 

அன்றைய…. அந்தச்…. சந்திப்பின் விளைவு? வயலூருக்கு…. சீவலுக்குச் சென்று வரும் வழியில் செம்பாட்டுத் திடலில் வல்லி வளவுக்கையும் வடலிப் பருவப் பனையொன்றை மாணிக்கன் பார்த்துக் கொண்டான். 

“முன்னை உங்கடை பகுதியார் எங்களோடை வலு வாரப்பாடு தம்பி. அந்த நாளையிலை உன்ரை கொப்பு கோத்தை கூட வயலூருக்குப் போகக்குள்ளை மைமல் பொழுதெண்டாலும், இந்தப் படலையையும் ஒருக்கால் திறந்துதான் போவினம். 

ஆரம்ப காலங்களில் செம்பாட்டுத் திடலைப் போலவே வடலித் திடலும் பொருளாதாரத்தில் இருந்ததையும், காலஞ் செல்லச் செல்லப் படிப்பறிவாலும் தொழில் துறையாலும் வடலித் திடலார் மேம்பட்டு செம்பாட்டுத் திடலாருடன் இருந்த தொடர்பைத் துண்டித்ததோடு, சம்மந்தம் வைத்துக்கொள்வதையும் நிற்பாட்டியதையுமே சுட்டிக்காட்ட வல்லி அதைச் சூசகமாகக் கூறினார் என்பதை மாணிக்கன் நன்குணர்ந்து எதையுமே கூறமுடியாதவனாக மௌனியாகிவிட்டான். 

“அந்த நாளையிலை, நான் ஆடு மாடு வளர்த்த காலங்களிலை அதுகளுக்கு தீனிக்காக சேர்வை சீவுறதுக்கு நொங்கு பொறுக்கவெண்டு கருக்கலோடையே நித்திரைப்பாயை விட்டு எழும்பிப்போடுவன். நொங்கு பொறுக்காலை வந்தபிறகுதான் நான் விறகு கொத்துக்குப் போறது.”

“இரண்டு பனை ஏறி இறங்கவே எங்களுக்கு நாரி சந்தெல்லாம் உழையுது. எப்பிடி அம்மான் இந்த வயதிலையும் உப்பிடி உசாரா விறகு கொத்திறியள்?” 

“அப்பிடிக் கேள் மோனை. இந்த நாளையில் கூப்பன் மா புட்டிலும், மிச்சாட்டு அரிசியிலும் என்ன சத்துக் கிடக்கு? அந்த நாளையிலை ஒடியல் புட்டையும், பாணிப் பினாட்டையும் திண்டு கூழையும் குடிச்சுத்தான் எங்கடை தேகத்தை வளத்து இப்பிடி வலுவாக்கினம். அந்த அத்திவாரத்தாலைதான் இந்த வயதிலையும் இப்பிடித் தொழில் செய்ய முடியுது. இப்பவும் வாற போற ஆக்களுக்கு குடுக்கிறதே தவிர, உந்தக் கோப்பி தேத்தண்ணியளை நான் பாவிக்கிறது கிடையாது கண்டியோ? காலம்பற வெள்ளன முகங்கழுவின உடனை நான் இப்பவும் குடிக்கிறது பழந்தண்ணிதான் மோனை.’ 

வல்லியுடன் கதை கொடுத்தாலும், மாணிக்கனின் கண்கள் அடுப்படியிலேயே நிலைத்திருக்கும். தேத்தண்ணிச் சிரட்டையுடனும் பணங்கட்டிக் குட்டானுடனும் அவள் வந்து ‘தரிசனம்’ கொடுக்கும் அந்த ஐந்து நிமிடத்துக்காக அவன் மணிக்கணக்கில் காத்திருந்த நாட்கள் ஏராளம். 

அன்றும் வழக்கம் போலச் சீவலை முடித்தவாறே மால் பக்கம் வந்தவன், ஒருமுறை உள்ளே எட்டிப் பார்த்தான். எவருமே இல்லை. ஆனால், அடுப்படிப் பக்கத்திலிருந்து ஒரு முனகல் சத்தம் மட்டுமே வெளிவந்தது. கையோடு கையாகக் குசினிப் படலையையும் திறந்தவனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. 

முழங்கால்கள் இரண்டிற்குள்ளும் முகத்தைப் புகைத்தவாறே மலர்விழிதான் முனகிக் கொண்டிருந்தாள். அவசர அவசரமாக உள்ளே நுழைந்தவன், அவளை அணுகியபோது, தாங்க முடியாத வயிற்றுவலியால் அவள் நிலைதடுமாறுவது அவனுக்குப் புரிந்தது. 

வயலூர் சென்று ஆயுர்வேதப் பரியாரியாரை அழைத்து வந்து வைத்தியம் பார்த்து, அவளைத் தூக்கிச் சென்று மாலுக்குள் வாங்கிலில் படுக்க வைத்து, காவோலை வெட்டிக் கொக்காரை, பன்னாடை பொறுக்கி வந்து சூட்டடுப்பை மூட்டி, ‘தேத்தண்ணி’ போட்டுக்கொண்டு வந்து, பரியாரியாரின் தூளைப் பாணி கலந்து தீத்தி, பின்னர் தேநீரைக் குடிக்கக் கொடுத்தபோதுதான் நாவைக் கூட்டி அவள் கதைக்க ஆரம்பித்தாள். 

“இந்தக் கல்லடசல் குத்து இடைக்கிடை எனக்கு வாறது. அந்த நேரங்களிலை ஒண்டுமே எனக்குத் தெரியாது. தலைக்கை ஒரேயடியா அம்மிப்போடும். இண்டைக்கெண்டு பாத்து நறுவிலி வைரவர் கோயிலிலை வேள்வியெண்டு சிலம்படிக்கு அப்ப போனவர்தான்…. அப்புவை இன்னும் காணேலை! நல்லவேளை கடவுள் போலை ஆபத்துக்கு வந்து உதவினியள்….” – என அவள் மால் கப்பில் சாய்ந்திருந்தவாறே கூறியதும்…

அன்றைய அந்த நெருக்கம்…படிப்படியாகக் கூடிக்கொண்டு வந்தது. அச்சமயத்தில்தான் மாணிக்கன் தனது எண்ணத்தை முடிவாக்கி அதை அவளிடம் கூற, ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். 

வயலூர் பிள்ளையார் கோவிலில் மூன்றாந் திருவிழாவிலன்று வடக்கு வீதியில் வல்லியின் சிலம்படியே விசேட நிகழ்ச்சி என வீரன் மூலம் கேள்விப்பட்ட வேளையில்தான் ‘அதைச் சொல்ல’ அன்றே நல்ல நாள் என்று அடுக்கெடுத்த மாணிக்கன் மைமல் பொழுதாக மலர்விழி வளவு மாலிற்குள் நுழைகிறான். 

“மலர்! உன்னோடை ஒரு சங்கதி பறைய வேணும்.”

“என்ன… அப்பிடி… புதுநாணயமா இண்டைக்கு?”

“அப்பிடி ஒண்டுமில்லை மலர்! நான்… உன்னைக் கலியாணங் கட்ட விரும்புறன்.” 

அதைக் கேட்டதும் அவள் எதுவுமே பேசாது பேயறைந்தவள் போல… ‘ஏன் இவளுக்கு ‘இதில் ‘ புறியமே இல்லையா?’ 

“என்ன மலர்… நான் சொல்லுறன், நீ ஒண்டும் பறையாமல்…” 

“நான்… நான் எப்பிடி?” 

“என்ன மலர், என்ன சொல்லுறாய் நீ?” 

“எனக்கு எப்பவோ கலியாணம் நடந்திட்டுது” உச்சிப்பனையில் இருந்தபோது புயல் காற்று வீசியதைப் போல இருந்தது மாணிக்கனுக்கு. 

“என்ன, …நீ … என்ன பூராயம் பிடிக்கிறாய்?”

“எனக்குக் கலியாண எழுத்து முடிஞ்சுது. அதுக்குப் பிறகு அவர் தங்கடை ஊரிலையிருந்து அதுதான் கிளைப்பனையடியிலையிருந்து இஞ்சை அடிக்கடி வந்து போறவர். நல்ல நாளாய்ப் பாத்து இரண்டு பேருக்கும் சோத்தைக் குடுப்பிச்சு விடுவம் எண்டு அப்பு சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அதுக்கிடையிலை வெளிநாட்டிலை வேலை கிடைச்சு… அவர் போட்டார். போட்டு வந்து உனக்குத் தங்கத் தாலியே கட்டுறன் பார் எண்டு சொல்லிப்போட்டுப் போனார். போனவர் போனது தான். போய் ரண்டு வருசமாச்சு… இன்னும் ஒரு கடதாசி கூடப் போடேல்லை”. 

“அப்ப இந்தச் சங்கதியை இவ்வளவு நாளும் நீயோ அல்லது உன்ரை கொப்புவோ ஏன் எனக்குச் சொல்லேல்லை?” 

“அவற்றை பகுதியிலை ஒரு சின்னப் பிசகு இருந்ததாலை அருளாமல்தான் கொப்பி போட்டு கலியாண எழுத்தும் நடந்தது. பிறகு வெளிநாட்டுக்கெண்டு போயும் ஒரு மறுமொழிகூடப் போடாதபடியாலை ஒருநாள் யோசிச்சுப்போட்டு அப்புதான் சொன்னார். ‘எனக்கெண்டால் அவன் திரும்பி எங்கடை வளவுக்கு வருவான் எண்ட நம்பிக்கை ஒல்லுப்போலையும் இல்லை பிள்ளை. எங்களுக்கெண்டு இப்பிடி ஒரு சீலக்கேடு வருமெண்டு நான் கனவிலைகூட நினைக்கேல்லை. பேசாமல்… அந்தக் கதையையே விட்டுடுவம்…’ எண்டு. அதுதான் அதைப்பற்றி நான் மூச்சுக்கூட விடேலை.” 

“கலியாண எழுத்து முடிஞ்சளவிலைதானோ?” 

“இல்லை! மூண்டாம் வருஷம் வயலூர் பிள்ளையார் கோவில் திருவிழாவுக்கெண்டு வந்து இரவிலை இஞ்சை தான் பத்து நாளும் தங்கியிருந்தவர். 

“எட… உப்பிடி எல்லாம் நடந்தவனுக்கு ஒரு கடதாசி கூடப் போட..?” 

“அதுதான் நாங்களும் யோசிக்கிறம்.” 

அன்றைய சம்பவத்திற்குப் பிறகு ஏழெட்டு நாட்களாக மாணிக்கன் வல்லிவளவுப் படலையைத் திறக்கவில்லை. 

பத்தாம் நாள் மைமலுக்குள் மால் வாசலில் நெடும்பனையாக நின்ற அந்த உருவத்தைப் பார்த்து அவள் நிமிருகிறாள். 

“அண்டைக்குப் பறைஞ்ச விசயத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருப்பாய் எண்டு நம்புறன்.” – எரிந்து கொண்டிருக்கும் கைவிளக்கின் சுவாலையைப் பார்த்தவாறே மாணிக்கன் கூறுகிறான். 

“……..” 

“இப்படியெல்லாம் உன்னை மறந்திருக்கிறவன் ஊருக்கு வந்தாலும் உன்னட்டை வருவான் எண்டு நானும் ஒல்லுப்போலையும் நம்பேல்லை. அதனாலை நான் கேட்ட மாதிரி ஒரு முடிவுக்கு வாறதுதான் நல்லதெண்டு நம்புறன்.” 

“பத்து நாளா யோசிச்சு நானும் ஒரு முடிவுக்கு வந்திட்டன். எதுக்கும் அப்புவோடை யோசிச்சுப் போட்டு மறுமொழி சொல்லுறன். 

வல்லியின் அந்த முடிவை ஆவலோடு எதிர்பார்த்து இருந்த நாட்களில்… ஒரு நாள் நடந்த சம்பவம் அது. 

அன்று ஒரு பௌர்ணமி தினம். வயலூர் பிள்ளையார் கோவிலிற்கு காத்தான் கூத்துப் பார்க்கவென இரவுச் சாப்பாடு முடிந்த கையோடு வல்லி சென்றுவிட்டார். கூத்துப் பார்க்கவென தனது வளவிலிருந்து கிளம்பி வந்த மாணிக்கன் ஒருக்கால் மலர்விழியினது வளவையும் எட்டிப் பார்த்துக்கொண்டு போவம் என்ற எண்ணத்துடன் படலையைத் திறந்து உள்ளே நுழைந்தான். 

மாலிற்குள் குந்தியிருந்தவாறே கிழிந்த பாயொன்றிற்கு பொத்தல் போட்டுக்கொண்டு இருந்தாள் மலர்: மாணிக்கனின் வரவால் அவளின் முகம் சார்வோலையாக மலர்ந்தது. 

“வாருங்கோ. என்ன இந்த நேரத்திலை…” 

“காத்தான் கூத்துப் பார்க்கப் போறன். அதுதான் ஒருக்கால்…”

“கூத்து, பிள்ளையார் கோவிவிலை.” 

“அப்ப நான் போட்டு வாறன்.”

“நீங்கள் கூத்துப் பார்க்கப் போறியளோ? இல்லாட்டி கூத்தாடப் போறியளோ?” 

“ஏன் மலர் அப்பிடிக் கேக்கிறாய்?” 

‘இல்லை, முகமெல்லாம் ஒரே பூசல் மாவாக் கிடக்கு.” 

“வேர்வையோடை போட்டது. சுண்ணாம்பு போலைப் படிஞ்சு போச்சுது போலைக் கிடக்கு. அது சரி நீ கூத்துப் பார்க்க வரேலையோ?” 

“ஏன் காத்தான் கதை உங்களுக்கு இவ்வளவு நாளும் தெரியாதோ? அதுபோக, இப்ப நீங்களும் பெரிய பெரிய சங்கதிகள் எல்லாம் செய்யிறியளாம்.” 

“என்னத்தைச் சொல்லுறாய் மலர்?”- முற்றத்து ஒற்றைப் பனையின் கீழ் குவிந்திருந்த வெண் மணலில் குந்தியவாறே மாணிக்கன் கேட்கிறான். 

“வயலூர் சித்திரத்தேர் வெள்ளோட்ட விழாவிலண்டு உங்களுக்கும் வட்டவிதானையாருக்கும் பெரிய போராமே?” 

“எட! அதைச் சொல்லுறியே? உனக்கார் சொன்னது?” 

“அப்புதான் சொல்லிப் புழுகினார். மாணிக்கன் மட்டும் அண்டைக்கு இல்லாட்டில் வயலூரார் எங்களையெல்லாம் ஏறி மிதிச்சிருப்பாங்களெண்டு. ” 

“பின்னையென்ன மலர்? நாங்களும் தேர் வடம் பிடிக்கப் போறம் எண்டு கேட்டம். ‘காவோலை கட்டி இழுத்தவைக்கு வடம் பிடிச்சு தேர் இழுக்கக் கேக்குதோ?’ எண்டு விதானையார் நிண்டார். ‘ஓகோ அப்பிடியோ சங்கதி? அப்ப இண்டு மேற்பட்டு நாங்கள் ஒருதரும் குடிமைத் தொழில் செய்யிறதில்லை’ எண்டு சொல்லிப்போட்டு எல்லாரும் வந்திட்டம். ” 

“உப்பிடிக் குடிமைத் தொழிலை விட்டுட்டு எத்தினை நாளைக்கெண்டு சீவிக்கிறது?” 

“இதுதான் இனி முடிவு மலர். ஆரம்பத்திலை கொஞ்ச நாளைக்கு கயிட்டமாகத்தான் இருக்கும். போகப் போக எல்லாம் பழகீடும். இந்த இரண்டு கிழமைக்கை நடந்த சங்கதியளை நீ கேக்கேல்லை..! இப்ப நாங்கள் சீவிற கள்ளு, கருப்பணியள் எல்லாம் கோப்பிறேசனுக்குத்தான் நேரை போகுது. முன்னைய மாதிரி வீடு வீடாகக் கொண்டு திரிஞ்சு குடுக்கிறதில்லை. அத்தோடை இனி வெங்காய வைப்பு, களை புடுங்கல் எண்டு எங்கடை பகுதிப் பெண்டுகள் எங்கையும் அலையத் தேவையில்லை. மூடல், குட்டான், பாய் இழைக்கிற வேலையோ அல்லது பனங்கட்டி, பாணிப்பனாட்டு, புழுக்கொடியல் போடுற வேலையோ எதுவெண்டாலும் இனி அவையள் எல்லாரும் எங்கடை பனம்பொருள் நிலையத்திலையே வந்து வேலை செய்யலாம். அதேமாதிரித்தான் சலவைத் தொழிலாளிகளையும், சாய்ப்புக்காரர்களையும் குடிமைத் தொழில் செய்ய வேண்டாமெண்டு அறிவிச்சிருக்கிறம். ஆரும் அப்பிடி இசகுபிசகா நடந்தால், எங்கடை சங்கத்தாலை தண்டனை குடுக்கிறதாகவும் முடிவெடுத்திருக்கிறம். இப்ப என்னென்டால் வயலூரிலை ரகசியமா வீட்டிலை வைச்சுக் கள்ளுக் குடிச்சவைக்கு வயித்திலையடி. இப்ப மைமல் பட்டதுக்குப் பிறகுதான் ஒளிச்சொளிச்சு எல்லாரும் கோப்பிறேசனுக்குப் போயினம். கிழடுகட்டைகள் எல்லாரையும் முகச்சவரஞ் செய்யுறதுக்குக் கூட சைக்கிளிலை ஏத்திக்கொண்டு சாய்ப்புக்குப் போயினம். துடக்குத் துணியளையும் அழுக்குத் துணியளையும் அவையவையே பொட்டழி கட்டிக் கொண்டு லோன்றிக்குப் போயினம். அதைவிட முசுப்பாத்தி, வயலூரிலை ஆரும் செத்தாலும் பிரேதம் காவுறது, சவம் எரிக்கிறது எல்லாம் வெள்ளாமாக்கள்தான். எப்பிடி நாங்கள் தொடங்கியிருக்கிற வேள்வி?” 

“பெரிய ஆள்தான் நீங்கள்” என மலர் சொன்னதும், தொடர்ந்தும் அன்று நள்ளிரவு வரை அவளுடன் அங்கிருந்து விட்டு பின்னர் கூத்தே பாராது திரும்பியதும்… எண்ணங்கள் கருப்பனீராக இனித்தன. 

இவை நடந்த சில நாட்களின் பின்னர்தான்… எவருமே எதிர்பார்த்திராத… அது கனவுபோல் நடந்து முடிந்தது! 

வெளிநாட்டிலிருந்து திரும்பிய மலரது கணவன் நேராகச் செம்பாட்டுத் திடலிற்கே ஓடோடிவந்து சேர்ந்தது. விரக்தியின் விளிம்பிலிருந்த வல்லி வாயெல்லாம் பல்லாக மாணிக்கன் பகுதிக்குக் கூட அழைப்பு விடுத்து பெரும் ‘டீங்காக மகளின் சடங்கை முடித்தது. 

ஆறு மாதங்கள் கழிந்தன. இப்போதெல்லாம் வல்லியின் வளவுப் படலையையே மாணிக்கன் திறப்பதில்லை. கள்ளும் காய்வெட்டிக் கள்ளாகிவிட்டதால் அங்கு சீவலையும் அப்போதே அவன் நிறுத்திவிட்டான். 

அண்மையில்தான் அதிர்ச்சி தரும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. திடீரென்று ‘ஹாட் அற்றாக்’ கால் பாதிக்கப்பட்ட மலர்விழியின் கணவனை கிராமத்து ஆஸ்பத்திரியில் ‘டாக்குத்தர் ‘மார் கைவிரிக்கவே யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு ஏற்றினார்கள். பெரிய ‘டாக்குத்தர்’ பரிசோதித்துவிட்டுச் சொன்ன பதில் பேரதிர்ச்சியாகவே இருந்தது. ஏற்கனவே இருமுறை இந்நோய்க்கு ஆளாகியிருக்கிறானாம் அவன். இது இறுதி முறை. “எங்கடை கையிலை ஒண்டுமில்லை. இனிக் கடவுள் விட்ட வழி!” 

“நறுவிலி வைரவா!” மலர்விழி தன் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டாள். 

வேண்டியபடியா விடயங்கள் நடக்கின்றன? ஆறு மாதங்கள்… அவளை வாழவைத்தவன், அதுவே போதுமென்ற ஆறுதலுடன்..! 

“ஐயோ என்ரை ராசா! என்னை விட்டுப் போட்டியோ?”- மலர்விழி ஒப்பாரி வைத்து ஓலமிட்டாள். நெஞ்சு நெஞ்சாக இடித்தாள். 

அயலவர்கள் கூடி வந்து பலவாறும் தேற்றினர். 

‘உனக்கெண்டு உது நடந்ததே பிள்ளை? என்ரை நடுவிலாளுக்கும் உன்னோடை வயதுதானே? அவளின்ரை புருஷனும் சீவலுக்கு பனை ஏறக்குள்ளை, கைதவறி விழுந்து மோசம் போகேல்லையே?” நடந்த கதைகளைச் சிலர் உதாரணம் காட்டினர். 

“உங்கை இளவட்டனுகள் என்னமாதிரி அம்பாளிக்குதுகள். என்ரை பிள்ளைக்கெண்டு இந்த வாழ்மானம்?” – வல்லி தலைதலையாக இடித்தார். 

“உதுகளெல்லாம் எங்கடை கையிலேயே அம்மான்? இன்னும் அதுகளையே யோசிச்சுக் கொண்டிருந்தால், மற்ற அலுவல்களை ஆர் நிண்டு பாக்கிறது?” – வல்லியின் ஒன்றுவிட்ட தங்கைமகன் தெய்வேந்திரன் ஆறுதல் வார்த்தை கூறினான். 

அது நடந்து ஒரு மாதத்தின் பின்பு… அந்தியேட்டி வளவிற்கென்று சென்றபோதுதான் மாணிக்கன் அவளைச் சந்தித்து அனுதாபம் கூற முற்பட்டான். 

மணிக்கணக்காக… வல்லியின் புலம்பலைக் கேட்டுச் சகித்த மாணிக்கன் நேரஞ் சென்றும் அவள் வராததைக் கண்டு ‘பழைய வளவுக்கை சீவலுக்குப் பனை பாத்துக்கொண்டு வாறன்” என்று கூறிச்சென்று அடுப்படிப் பக்கம் தலை நீட்டியும் அவள் வெளிவராது போகவே… “பாளை இன்னும் வெளிப்படேல்லை!” என்று வல்லிக்குக் கூறிவிட்டு மெல்லென மாறிவிட்டான். 

மலர்விழியின் இளமைக்கால விதவைக் கோலத்தைப்பற்றி வடலித்திடலில் கூட பலரும் பரிவாகக் கதைக்க ஆரம்பித்ததன் பின்னர்தான் ‘அவளுக்கு நான் வாழ்வளித்தால் என்ன?’ என்ற எண்ணம் மாணிக்கன் மனதில் தளிர்ப்பு எய்தியது. 

திக்கற்றிருக்கும் அவளது வாழ்வில் மாறுதல்களை ஏற்படுத்தி அவள் வாழ்வில் புத்தொளி வீச, மனதில் வழிவகுத்து அந்த அங்கலாய்ப்பில் அதற்கு அவளது விருப்பறிய வீரனைத் தூதாக மாணிக்கன் அனுப்பிய போதுதான் ‘உத்தரத்து வேள்வியண்டைக்கு வரச்சொல்லுங்கோ மறுமொழி சொல்லுறன்’ என்று சொல்லி அனுப்பினாள் அவள். 

அந்தப் பதிலை… எதிர்ப்பார்த்துத்தான் இப்போது மாணிக்கன் ஆவலோடு காத்திருக்கிறான்! 

‘என்ன மறுமொழி அவள் சொல்வாள்?’ சருகு பத்திப்போன காவோலைகளைப் பிய்த்தெறிந்துகொண்டு 

நெடுப்பனையிலிருந்து மிக வேகமாக விழுந்த ஒரு பனங்காய் உருண்டு வந்து மாணிக்கனின் முன்றலில் நின்றது. 

நறுவிலி வைரவர் கோவிலில் வேள்விப் பறையும்… மேலாக சிலம்படி ஓசையும் ஒலிப்பது மாணிக்கனுக்கு இப்போது தெளிவாகவே கேட்கிறது. 

பனங்கொட்டினின்றும் துள்ளி எழுந்தவன்… கிணற்றடி சென்று கால்முகங் கழுவித் தன்னை அலங்கரித்து… செம்பாட்டுத்திடலை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான். 

எப்படி நடந்தானோ தெரியாது. படலையைத் திறந்து கொண்டு மாலிற்குள் புகுந்தான் மாணிக்கன். 

‘எண்டாலும் ஒல்லுப்போலை கொட்டுப்பட்டுத் தான் போனாள்!’- நீண்ட நாட்களின் பின் அவளைக் கண்ட மாணிக்கன் முதலில் மனதில் எண்ணிக்கொண்ட இது 

“என்ன அப்பிடி யோசனை? நான் ஒருத்தன் வந்ததையும் கவனிக்காமல்.” 

“ஓ! வாருங்கோ இப்பிடி இந்தக் குந்திலை இருங்கோ.” மலரின் முகம் சீக்காயாக இறுகியிருந்தது. 

“வீரன் அண்டைக்கு விசயம் எல்லாம் சொல்லியிருப்பான் எண்டு நம்புறன். “

“ம்!… ” நீண்ட பெருமூச்சு ஒன்று மட்டுமே பதிலாக வந்தது. 

“நடக்கக்கூடாதது நடந்துபோச்சு. இன்னும் அதையே நினைச்சுக் கொண்டிருந்தால்…” 

“அதுக்கு. இப்பிடி நடக்குமெண்டு ஆர்தான் எண்ணியிருந்தது” – நா தடுமாறியது. குரல் ‘தளதள’த்தது. 

“அதுக்கு இப்ப என்ன செய்யிறது மலர்? இதுதான் நியதி எண்டால் ஆராலைதான் மாற்றமுடியும்? இந்த நேரத்திலை… இதை… சொல்லுறதும் சரியில்லை! ஆனால் உன்ரை நிலவரத்தைப் பார்த்துச் சொல்லாமல் இருக்கவும் முடியேல்லை! உனக்குச் சம்மதமெண்டால்… உன்னை நான் கலியாணங் கட்டுறன்.” 

“மாணிக்கன்!” – என்றுமே தன் பெயரைச் சொல்லாதவள் இன்று இப்படிப் பேயறைந்தவளாகக் கத்தியது, மாணிக்கனுக்குப் பேரதிர்ச்சியாகவே இருந்தது. 

“என்ரை வாழ்க்கை முடிஞ்சுபோச்சு. அவருக்குப் பெண்சாதியாக வாழ்ந்த அந்த ஆறு மாதங்களுமே என்ரை வாழ்க்கையிலை பாளை பூத்த நாட்கள். மலர்… மலர்… எண்டு வாய்க்கு நூறுதரம் சொல்லுவியளே, உங்கடை அந்த மலர் இப்ப பூத்து உதிர்ந்து போச்சு.” 

“மலர்! உனக்கென்ன பைத்தியமே?” 

“இல்லை. பைத்தியம் தெளிஞ்சுபோச்சு. கலியாணம் கட்டியிருந்தும் இளமை உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு, உங்களிலை விருப்பப்பட்டு, கண்காணாத தேசத்திலை இருந்த புருசனுக்குத் துரோகஞ் செய்தனே…? ஒரு கடதாசிகூடப் போடமுடியாமல் நோயாலை துன்பப்பட்டுக் கொண்டிருந்த அவற்றை வருத்தங்களைக்கூட நினைக்காமல், என்ரை ஆசையளைப் பெரிசா நினைச்சுக்கொண்டு திமிர் பிடிச்சுத் திரிஞ்சனே… அவர் திரும்பி வந்து என்னோடை வாழ்ந்த அந்த ஆறு மாதங்களிலைதான் என்னாலை எல்லாத்தையுமே உணர் முடிஞ்சுது. வெறும் உடம்பாலை மட்டுமில்லை, நோயோ நொடியோ… வருத்தமோ துன்பமோ… ஒரு நாளெண்டாலும் புருஷனும் பெண்சாதியும் ஒற்றுமையா வாழ்ந்தால் அதுதான் உயர்ந்த வாழ்க்கை எண்டது இப்பதான் எனக்குப் புரியுது”. 

“மலர்! அப்பிடியான ஒரு வாழ்வைத்தான் உனக்கு நான் தாறன்”. 

“பட்டுப்போன பனையிலை பாளையைப் பாத்துக் கொண்டு நிக்கிறியளே…? விட்டுப்போட்டு நானிப்ப சொல்லுறதைக் கேளுங்கோ.” 

“மலர், ஏனிப்பிடி எல்லாம் பறையிறாய்? உனக்கென்ன நடந்தது?” 

“உங்கடை நல்ல மனசுக்கு ஒண்டும் நடக்கக்கூடாது. என்னாலை நீங்கள் ஏமாந்து போனதாகவும் இருக்கப்பிடாது. அதுக்காகத்தான் இதெல்லாத்தையும் சொல்லுறன். சலனமற்ற குளமாயிருந்த உங்களின்ரை வாழ்க்கையிலை இளமை உணர்ச்சிக்கு இடமளிச்சு ஒரு கல்லைப் போலை நான் வந்து விழுந்தன். ஆனால் உங்களோடையும் வாழ முடியாமல், அவரோடை கடைசி மட்டும் வாழுற பாக்கியமும் இல்லாமல் ஒரேயடியா வாழ்க்கையிலை விழுந்து போயிருக்கிறன். நான் அவருக்குச் செய்த நம்பிக்கைத் துரோகத்துக்கு நறுவிலி வைரவராப் பாத்துத் தந்த தண்டனை இது. இப்பிடியான ஒரு வாழ்க்கை வேறை எந்தப் பெண்ணாப் பிறந்தவளுக்குமே வரக்கூடாது!” 

“அதுதானே மலர் சொல்லுறன். உன்னைக் கண் கலங்காமல் கடைசிமட்டிலை நான் காப்பாத்திறன்.” 

“கட்டினவன் விட்டுட்டுப் போட்டான் எண்டெண்ணித்தான் உங்களின்ரை நிழலிலை நான் வாழ நினைச்சன். ஆனால், கண்கண்ட கடவுளா அவரே திரும்பி வந்து எனக்கு வாழுறதுக்கு ஒரு வழியை அமைச்சுத் தந்து, தன்ரை வாரிசா என்ரை வயித்திலை ஒரு சீவனையுந் தந்திட்டுப் போகக்குள்ளை, இன்னொரு வாழ்க்கைத் துணையை எனக்காக நான் தேடிக்கொள்ளுறது எந்த வகையிலை நியாயம்? அதுதான் நான் சொல்லுறன். உங்களை ஏமாத்தினதா என்னை இந்த ஊர் பழி சொல்லாமல் இருக்கவேணுமெண்டால்… நீங்கள் என்மேலை வைச்சிருந்தது… வைச்சிருக்கிறது உண்மையான அன்பாயிருந்தால் நான் சொல்லுறபடி கேளுங்கோ. இன்னும் உங்கடை வாழ்க்கையைச் சீரழிக்காமல் உங்களுக்கெண்டொரு துணையைத் தேடிக்கொண்டு நீங்கள் நலமா இருக்கவேணும். இதுதான் உங்கடை மலருக்கு நீங்கள் செய்யிற பேருதவி.”

“மலர்… உதுதான் உன்ரை முடிவாயிருந்தால்… என்ரை முடிவையும் நான் சொல்லுறன். இன்னொரு துணையைத் தேடிக்கொள்ளுறதெண்டது இனி என்ரை வாழ்க்கையிலை ஒருநாளும் நடக்காதது. எண்டைக்காவது ஒருநாள் நீ மனம் மாறுவாய் எண்டுதான் நான் நம்புறன். அப்ப சொல்லியனுப்பு, நான் உன்ரை வளவுக்கு உன்ரை புருஷனாக, உன்ரை பிள்ளைக்கு தகப்பனாக வாறன். அது வரையிலை ஒற்றைப்பனையாகத்தான் நான் இருப்பன். இப்ப நான் போட்டுவாறன்.”

நறுவலி வைரவர் கோவிலில் வேள்வி முடிந்து, ஒலிபெருக்கியில் ஒலிக்கும் இனிய கானம் காற்றோடு கலந்து கொண்டிருந்தது. 

– சுடர் பரிசுக்கதை, 1982.

– விடியட்டும் பார்ப்போம்..!, முதற் பதிப்பு: மாசி 1997, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.

– திக்கற்றவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *