ஒரு பிரணயம் பிரளயமாகிறது!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 6, 2025
பார்வையிட்டோர்: 1,721
சார்… சார்… அங்க பாருங்க… அந்த கீழ் வீட்டுக்காரர் ரொம்ப நேரமா வீட்டு வாசலுக்கு வெளிய உக்கார்ந்துட்டுத் தனியா பேசீட்டகருக்காரு… ! எனக்கென்னமோ பயமா இருக்கு சார்! என்று ஹவுஸ் ஓனரை அழைத்துக் கம்ப்ளெய்ன் பண்ணினா மேல் போர்ஷன்கார அம்மா…!
பார்க்கையில் பயமாகவும் பரிதாபமாகவும்தான் இருந்தது.!
கீழ் போர்ஷன்ல புருஷன் பெண்டாட்டிக்குள்ள என்ன சண்டையோ? என்ன எழவோ தெரியலை!?
இருந்தாலும் அடுத்த வீட்டு விஷயத்துல என்னதான் ஹவுஸ்ஓனரா இருந்தாலும் அளவை மீறித் தலையிட முடியுமோ?! அது தப்பாச்சே!ன்னு யோசித்தார் யோகேஷ்வரன்.
அது சரி….
நாளைக்கு எதாவது பெரும் பிரச்சனைனா போலீஸ் கீலிஸ் கேசானா? என்ன பண்றது… ?
சரி சரி.. போய்தான் பார்ப்போமே….!? என்னன்னுதான் விசாரிப்போமேன்னு முடிவுக்கு வந்தார்.
சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு மெல்ல மெல்ல நெருங்கினார்.
ஒரு சண்டை சச்சரவுன்னா, கூடமாட ஒத்தாசைக்கு வேறுஆள் யாரும் வேண்டாமோ?!யோசிக்கையில் பயத்தில் உடல் வெடவெடத்தாலும் உள்ளம் நீ ஆம்பள சிங்கம்டான்னு உறுமியது. தனியாவே போனார்.
நெருங்கிப்போய் கீழ்ப் போர்ஷன் காரரைப் பார்த்தா…..
அவர் வாசல் படியருகேதான் ஃபைபர் கேபிள் போவதால் நெட்ஒர்க் கிளியரா கிடைக்கும்னு ஊருக்குப் போயிருந்த தன் மனைவியோடு வாட்ஸாப்பில் வீடியோகாலில் விஸ்தாரமாய்ப் பேசிக் கொண்டிருப்பது புலப்பட்டது.
சொல்லாமலே படத்துல நாக்க அரிஞ்சுட்டு நாயகன் பேசினமாதிரிதான் தூரத்துப் பார்வைக்குத் தென்பட்டாலும்… ஒரு பிரணயம் பிரளயத்தை உண்டு பண்ணிவிட்டு அஙகே உரையாடுவது உணரப்பட்டது!