ஒரு பக்கத் தாளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 4, 2025
பார்வையிட்டோர்: 12,415 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவள் சிரிக்கிறாள். என்னைப் பார்த்துத்தான். தன் தோழிக்கு ‘எதையோ கூறிவிட்டு நிமிர்ந்து என்னைப் பார்க்கின்றாளே! அண்ணலும் நோக்க..அவளும் நோக்க வகுப்பில் பாடம் நடக்கிறது. யாருக்கு அந்தக் கவலை? 

அவள் அழகி! அழகி என்றால்..உந்த ஐஸ்வர்யா ராய், மனிஷா கொய்ராலா எல்லோரும் எந்த மூலைக்கு? நல்ல உயரம், கட்டுடல், சுருள் கேசம்.அந்தி வெய்யிலை மிஞ்சும் மஞ்சள் நிறம். எனக்கு நல்லா ‘மச்’ பண்ணுவாளாம். நண்பன் சீலனின் அபிப்பிராயம் இது. ஆனால், இவளா அழகி என்பான் நண்பன் ரஞ்சித். எப்போதுமே என்னை அழாக்குறையாகப் பார்க்கும் அலாதிப் பிரியம் அவனுக்கு. 

எல்லாம் சரி. அவள் என்னை ‘லவ்’ பண்ணுகிறாளா?-இது தான் இப்போ எனக்குள்ள ‘தீராத ‘ பிரச்சினை. 

அவளை நோக்குகிறேன். எங்கெல்லாமோ சுழன்றடித்து விட்டு அவளின் ‘சிலுக்கு’ விழிகளும் என் விழிகளுடன் மோதின. ஆ! அவளின் அந்த விழிகளுக்குத்தான் எத்தனை சக்தி?-அவ்வளவுதான். அவள் குனிந்து விட்டாள். காதலனைக் கண்டதும் கால் பார்க்கும் கண்ணகி பரம்பரையைச் சேர்ந்தவளோ? 

இந்த 23 வயதிலேயே… தவத்தான், நெட்டைரவி, சடையப்பன், சிங்கன், முத்துலிங்கன், மூத்தண்ணன், போன்ற என்னுடைய ‘கிளிக்’ நண்பர்கள் எல்லாருக்குமே ‘கேள் பிரண்ட்’ எனக்கு மட்டும் ‘கேள் பிரண்ட் இல்லாததை….. ‘சாட்டெட் எக்கவுண்டன்ஸ்ஸி’ படிக்க வந்த என்னைக்கூட ஏதோ ‘குவாலிவிக்கேஷன்’ குறைந்ததைப் போலக் கருதி பல விடயங்களிலும் அவர்கள் என்னைப் புறக்கணித்த நாட்கள் எத்தனை? இந்த ‘லவ்’ மட்டும் ‘சக்சஸ்’ ஆனா, நண்பர்கள் மத்தியில் நானும் ஒருவனாக…

பாடங்கள் நடக்குந் தோறும் பாவை அவள் என்னைப் பார்த்துப் புன்னகைப்பது ‘ஏதோ’ உண்மைதான். அந்தப் புன்னகை ஒன்றை மட்டுமே வைத்துப் பெண்ணவள் என்னைக் காதலிக்கிறாள் என்று எப்படி? 

“எனி டவுட்ஸ்?” – வகுப்பு முடிவதற்கு அறிகுறியாக ‘லெக்ஷரர்’இறுதியாக வினவுகிறார்.. யாரிற்குப் பாடத்தில் சந்தேகம்? இருநூறு பேர் நிரம்பியிருந்த அந்தக் கட்டிடம் ‘மாக்கெட்’ போலாகிறது. பாதிப்பேரும் ‘கேற்’றைத் தாண்டி விட்டனர். எப்போது இந்த ‘அலுப்பு’ முடியும் என்ற எதிர்பார்ப்பில். இறுதியாக… ‘லெக்ஷரர்’ படி இறங்குகிறார். 

‘ஃபைலை மூடிக்கொண்டு மெல்ல..மெல்ல…..நானும் எழும்பு கிறேன். அருகே ரஞ்சித். என்னவளும், தோழியும் முன்னேறுகின்றனர். 

காதல் -அது புனிதமானது. தெய்வீகமானதுங்கூட. காலத்தால் அழியாத அது இன்று கடற்கரை தாழம் பற்றைகளிலும், விகாரமாதேவி பூங்காவிலும் இருள் சூழ்ந்த பேரூந்து நிலையங்களிலும், ஏன் சில சமயங்களில் வகுப்பறைகளிலுங் கூட படும் பாடு, அப்பாடா. 

“சந்தர்ப்பவசத்தால் இருதூய உள்ளங்களின் அன்பின் இணைவே காதல். எதிலும் அனுபவம் வேண்டும் என்பதற்காக காதலிலும் அதுதேவை என்று எண்ணிச் சந்திக்கும் பெண்களுடன் தவறாகப் பழகாதே!” -படிக்கவென கொழும்பு வந்த போது பருத்தித்துறை ‘பஸ் ஸ்ராண்டில்’ வைத்து எனக்குத் தந்தையார் தந்த ‘அட்வைஸ்’ இது! 

இப்போதெல்லாம்….படிக்கவென நான் மேசையில் அமர்ந்தால், அவளையே பாடப் புத்தகத்தில் காண்பதுண்டு. சட்டப் புத்தகம் கையில் புரள்கையில், அவள் அணிந்த சட்டை நினைவிற்கு வந்து தொலைப்பதும்,.. கணக்கியலைப் பார்த்தால், அவளைக் காண உள்ள நேரத்தை மணிக்கணக்கில் எண்ணிப் பார்ப்பதும் சகஜமாகிவிட்டது. 

மொத்தத்தில் இப்போது. . . நான் நானாக இல்லை. 

“நீ முந்தின மாதிரி நல்லா நடந்தால்… இப்ப அந்த பஸ்ஸிலை நாங்கள் போயிருந்திருக்கலாம்.” ஸ்ராண்டில் நின்ற பஸ்ஸைக்கண்டு பாதிப்பேரும் பறக்கும் போது, ஏக்கத்தோடு ரஞ்சித் சொன்னான். 

இந்த ‘விபத்து’ மட்டும் நடக்கா விட்டால் நான்கூட நன்றாகத்தான் நடந்திருப்பேன். காதல் என்பதும் ஒரு விபத்துத் தான். ஆனானப்பட்ட விசுவாமித்திர முனிவரே மேனகை முன் ‘கிளீன் போல்ட்’ ஆகவில்லையா? 

‘ஸ்ராண்டில்’ நின்ற ‘பஸ்’ஸைக் கண்டு எல்லோரும் ஓடினாலும் என்னவள் மட்டும் ஓடவேயில்லை. 

என்னால் தான் ஓடமுடியாதே. 

“என்னை விட்டு ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?” தேநீர்க் கடையொன்றில் இருந்து சீர்காழி கோவிந்தராஜன் பெருங்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார். ‘ஸ்ராண்ட்’ நெருங்கிவிட்டது. 

எங்கள் ‘றூட்டில்’… அவள்! அருகே தோழி. நான். பக்கத்தில் ரஞ்சித். 

அவளுடன் மனம்விட்டுக் கதைக்க என் மனம் ஆசை கொள்கிறது. நானாக முதலில் கதைப்பது அவ்வளவு அழகல்ல. ஆனால். 

..ஆண்கள் தான் முதலில் ஆரம்பிக்க வேண்டுமாம்,சீலன் அடித்துச் சொல்வான். 

‘பற்றிக் சேட்’டும், பவுடர் பூச்சுமாக திரியும் ‘மொட்’ வாலிபர் பலர் இருக்க….’வைற் அன்ட் வைற்றில்’ வரும் என்னை இவள் காதலிக்கின்றாள் என்றால்? 

சிவபூசையில் இசைக்கப்படும் கரடி வாத்தியம் போல…. எங்களருகில் இன்னொருவன். ‘கிளாஸ் மேற்’. வந்தவன் சும்மா நிற்கக்கூடாது? அவ்வை சண்முகிக்குப் பிறகு கமலஹாசன் என்ன வேடம் ஏற்கக்கூடும் என்பது பற்றி ‘சீரியஸாக’ ஆராய்ந்து கொண்டிருந்தான். ஒரே ‘அறுவை’! 

தேநீர்க் கடையில் பாடல் மாறுகிறது. சீர்காழிக்குச் சளைத்தவரல்ல. தான் என ரி.எம்.எஸ் நிரூபித்துக்கொண்டிருந்தார். 

‘யார் அந்த நிலவு -வந்தவன் வினவினான், என்னவளை கண் ஜாடை காட்டி. போச்சடா- எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. 

“நம்ம ஊர் தான்”- அர்த்தச் சிரிப்போடு அவன். இவனேன் என்னவள் மீது இப்படி சிரத்தை எடுக்கிறான்? ஒருவேளை நான் ‘சுழட்டுவது’ பற்றி ஏதாலும் தெரிஞ்சு வைச்சிருப்பானோ?-என்னுள் பயம் பற்றிக் கொள்கிறது. இவனை எப்படியாவது ‘காய் வெட்ட வேண்டும். 

அவள். . . இப்போதும் என்னையே நோக்குகிறாள். கள்ளமாக அவளது அழகை அள்ளிப் பருகுகிறேன் நான். .. ‘சாய். நான் மட்டும் கண்ணதாசனாகப் பிறந்திருந்தால் அவளையே கவியாக்கியிருப்பேன்.’ 

கற்பனையில் மிதக்கிறேன் நான், கதாசிரியர்களைப் போல. 

துணிந்து சென்று என் காதலியிடம் நேராக விடயத்தைக் கூறுகிறேன். நாணம் மேலிட அவள் கைகளால் முகத்தை மூடிக் கொள்ளவே…. ‘கள்ள்ளீ!’- ஆசை மீதியால் நான் கடிந்து கொள்கிறேன். 

எனக்கும் இப்படி ஒரு அழகான காதலி?…… எனக்கும் இவளிற்கும்….. 

“றிஜிஷ்டேஷன் முடிஞ்சுது. ஆவ்ர த எக்சாம் வெடிங்-‘ 

“என்ன?…” 

அவன் தான் தொடர்கிறான். “உந்தக் ‘கேளைப் பற்றித்தான் சொன்னனான் மாப்பிளை ‘என்ஜினியர்.” 

சொல்லிக் கொண்டிருந்தவன் என் விழித்திரையில் தலைகீழாக விழுந்து கொண்டிருந்தான். அருகில் நின்ற ரஞ்சித்தை மேலும் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். 

தேநீர்க் கடை வானொலியில் மரண அறிவித்தல் போய்க்கொண்டிருந்தது. ‘இத்தகவலை உற்றார், உறவினர் சகலரும் ஏற்றுக் கொள்ளவும். 

தூரத்தே ஒரு ‘பஸ்’ ஆறுதலாக வருகிறது! 

அவள்… ‘பஸ்’ஸில் ஏறுகின்றாள். மெல்ல… மெல்ல நானும் ஏறுகிறேன்……எனக்கு ரஞ்சித் பக்கத்துணை. 

நிலக் கண்ணிவெடி விபத்தில் இழந்துபோன என் வலது காலிற்குப் பதிலாகப் பொருத்தப்பட்ட பொருத்துக் காலை முன்வைத்து நானும்.ஏறுகிறேன். இப்போது….அவளை நோக்குகிறேன். 

அவள் சிரிக்கிறாள். என்னைப் பார்த்துத்தான்.. தன் தோழிக்கு எதையோ கூறிவிட்டு நிமிர்ந்து என்னைப் பார்க்கிறாளே! இப்போது…. அவளது பார்வையில் காந்தம் தெரியவில்லை. வெறும் கிறுக்குகளே தெரிந்தன. 

– மெதபெரதிக.

– விடியட்டும் பார்ப்போம்..!, முதற் பதிப்பு: மாசி 1997, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *