இமயம் தொட்ட இதயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 28, 2026
பார்வையிட்டோர்: 74 

பனி மூடிய இமயமலைச் சிகரங்களின் இடுக்கில், ஒரு சிறிய பதுங்கு குழிக்குள் அமர்ந்திருந்தான் கதிரவன். வெளியே கடும் குளிர். அவனது கைகளில் இருந்த பேனா நடுக்கத்தில் தத்தளித்தது. காகிதத்தின் ஓரங்களில் பனித்துளிகள் படிந்து, அவன் எழுதிய சொற்களை மெல்ல நனைத்துக் கொண்டிருந்தன.

சுற்றிலும் அமைதி நிலவவில்லை; மாறாக, அவ்வப்போது வெடிக்கும் பீரங்கிகளின் சத்தம் அந்தப் பள்ளத்தாக்கையே உலுக்கிக் கொண்டிருந்தது.

“அன்பே…” என அவன் எழுதத் தொடங்கிய போதே, அருகில் இருந்த சக வீரன் ஒருவன் காயத்தோடு முனகினான். அவனது காயத்திலிருந்து வழியும் ரத்தம், தரையில் விழுந்த சில நொடிகளிலேயே பனிக்கட்டியோடு சேர்ந்து உறைந்து போவதை கதிரவன் பார்த்தான். இங்கே ரத்தம் கூடச் சிவப்பாக ஓட முடிவதில்லை, கல்லாகிப் போகிறது.

“இங்கே பனிக்கட்டியில் ரத்தம் உறைகிறது, பீரங்கிகளின் சத்தம் என் என்னவோ செய்கிறது. இந்தக் கடிதம் உன்னை வந்து சேருமா என்று தெரியாது, ஆனால் உன் முகம் என் கண்களுக்குள் இருக்கிறது.”

 எதிரிக் குன்றின் மீதிருந்து வரும் தாக்குதல் எந்த நேரத்திலும் நிகழலாம். சாவைப் பற்றிய பயத்தை விட, தன் மனைவியின் முகம் மறந்தே போய்விடுமோ என்கிற பயம்தான் அவனுக்கு அதிகம் இருந்தது.

கண்ணை மூடினால், கடைசியாக ஊருக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, வாசலில் நின்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அவள் விடைபெற்ற அந்த ஒரு கணம் மட்டும் மின்னலெனத் தோன்றிச் சென்றது.

பீரங்கிகள் மீண்டும் முழங்கின, தேசத்தின் வரைபடத்தில் ஒரு அங்குல நிலத்திற்காக இத்தனை உயிர்கள் பலியாவதை அவன் எண்ணிப் பார்த்தான். வெற்றிக் கொடியை எவன் நாட்டினால் அவனுக்கு என்ன? அவனது இதயம் இப்போது எந்தப் பதக்கத்தையும் விரும்பவில்லை.

“வெற்றி யாருக்கு என்பதில் எனக்கு ஆர்வமில்லை, உன் மடியில் ஒருமுறை தலைசாய்க்கவே விரும்புகிறேன்.”

என எழுதி முடித்து, கடிதத்தை மடித்துத் தன் சீருடையின் உள் பையில் பத்திரப்படுத்தினான். திடீரென ஒரு பெரிய குண்டுவெடிப்பு சத்தம் மிக அருகில் கேட்டது. பதுங்கு குழியின் கூரை அதிர்ந்தது. கதிரவன் தனது துப்பாக்கியை ஏந்திக் கொண்டு எழுந்து நின்றான்.

பல மாதங்கள் பீரங்கிகள் முழங்கின, பின்னர் அமைதி வந்தது… பனிக்கட்டிகள் மெல்ல உருகத் தொடங்கிய ஒரு வசந்த கால காலையில், மீட்புக் குழுவினர் சிதைந்த அந்தப் பதுங்கு குழியைக் கண்டெடுத்தனர். அங்கே, உறைந்த நிலையில் ஒரு வீரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவனது கைகள் மார்போடு அணைத்தபடி ஏதோ ஒன்றை இறுகப் பிடித்திருந்தன. சீருடையின் உள் பையில் இருந்த அந்தக் கடிதம், ஈரத்தால் சற்று மங்கியிருந்தது. ஆனால், சொற்கள் அழியவில்லை.

ஒரு சில நாளின் பின், கதிரவனின் சொந்த ஊரில் அவனது உடலை ஏந்திய ராணுவ வாகனம் ஊருக்குள் நுழைந்தபோது, ஊரே திரண்டு நின்றது.

அவனது மனைவி எந்தச் சத்தமும் இன்றி கல்லாய் உறைந்து நின்றிருந்தாள். கதிரவன் விரும்பியது போலவே அவன் ஊருக்குத் திரும்பிவிட்டான். ஆனால், அவள் மடியில் தலைசாய்த்துப் பேச அவனிடம் உயிர் இல்லை.

ராணுவ அதிகாரி ஒருவர், கதிரவனிடம் இருந்த அந்த நனைந்த கடிதத்தை அவளிடம் ஒப்படைத்தார். நடுங்கும் கைகளால் அவள் அதைப் பிரித்துப் படித்தாள். “வெற்றி யாருக்கு என்பதில் எனக்கு ஆர்வமில்லை, உன் மடியில் ஒருமுறை தலைசாய்க்கவே விரும்புகிறேன்.”

கடிதத்தின் கடைசி வரிகளை வாசித்தவள், அவன் கேட்டது போலவே, அவனது உடலைத் தன் மடியில் கிடத்தி, அவன் நெற்றியை வருடினாள். அவளது கண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்து அந்தக் கடிதத்தில் இருந்த ரத்தக் கறையை நனைத்தது.

கதிரவன் இப்போது நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். பீரங்கிகளின் சத்தம் இல்லாத, பனிக்கட்டிகள் உறையாத, அவனது அன்புக்குரியவளின் மடியில்… நிரந்தரமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *