கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2025
பார்வையிட்டோர்: 225 
 
 

பெண்ணைப்பார்த்த மறுகணமே பிடித்திருப்பதாக மகன் சொன்ன போது சுமனின் தாய் அழுதே விட்டாள்.

“டேய் நல்லா பார்த்து சொல்லுடா. பொண்ணு செம குண்டு. போன வாரம் ரதி மாதிரி ஒரு பொண்ணக்காட்டினோமேடா…. அந்தப்பொண்ணப்புடிக்கிலேன்னு சொல்லிட்டு, இந்தப்பொண்ணப்போய் புடிச்சிருக்குன்னு சொல்லறியேடா…. அவங்களும் வாட்ஸ்அப்ல அனுப்புன போட்டோவுல ஒல்லியா இருந்ததப்பார்த்து தான் நானும் பொண்ணு பார்க்க வாரதா பொண்ணு புரோக்கர் கிட்ட சொல்லியிருந்தேன். பழைய போட்டோவ அனுப்பி ஏமாத்திருக்காங்க. வா பேகலாம்” தாயின் பேச்சை காதில் வாங்கிக்கொள்ளாதவனாகவே இருந்தான்.

“சரி கல்யாணத்துக்கப்புறம் ஒடம்பு வெயிட் போட்டா வேண்டாம்னு சொல்லிடுவியா…? என்னமோ தெரியல . ஒத்த வார்த்த தான் பேசினா… அது எனக்கு ஒத்துப்போற வார்த்தையா இருந்ததுனால பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன். போன வாரம் பார்த்த பொண்ணு ஒரு வாரம் போன்ல பேசின மொத்த வார்த்தைகளும் இந்த ஒத்த வார்த்தைக்கு ஈடாகாது…. தெரியுமா உனக்கு…?” மகிழ்ச்சியோடு பேசினான் சுமன்.

“சோசியர் சொன்னது தான் நடந்திருக்குது… பார்த்தியா பாக்யம்? அந்தப்பொண்ணு ஜாதகத்தையும், இந்தப்பொண்ணு ஜாதகத்தையும் வெச்சு பொருத்தம் பார்த்த போது அந்தப்பொண்ணு ரதி மாதிரி இருந்தாலும் புடிக்காது, இந்தப்பொண்ணு சுமாரா இருந்தாலும் புடிக்கும்னு சொன்னாரே… இந்தப்பொண்ணுக்கும், நம்ம பையனுக்கும் வசியம் இருக்குதுன்னு சொன்னாரே… அங்க பாரு எப்புடி ரெண்டு பேரும் சிரிச்சு, சிரிச்சு பேசிட்டு இருக்காங்கன்னு. வாழறதுக்கு அழகு முக்கியமில்லை. ஒற்றுமை தான் முக்கியம்…” சொன்ன கணவன் கணேசனை முறைத்தாள்.

“எனக்கு தலையே சுத்துது. எல்லாமே மறந்து போச்சு. ஏதோ மை வெச்சு என்ற பையனை மடக்கிப்போட்டாங்க. அங்க கொஞ்சம் நல்லாப்பாருங்க. ஜோடிப்பொருத்தமே இல்லீங்க. அம்மா…அம்மான்னு என்னையே சுத்தி வந்த பையன் இப்போ திரும்பியே பார்க்காம பேசறானே…. கார் சாவியக்கொடுங்க. ஒடம்பெல்லாம் வேர்க்குது. போயி ஏஸி போட்டு உக்காந்துக்கிறேன்” காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

ஏஸி போட்டும் மனம் புழுக்கமாக இருந்தது. ‘ஒடம்புக்கு ஏஸி சரி. மனசுக்கு என்ன பண்ணுவது ? உடனே அந்த ஒத்த வார்த்தை என்னன்னு கேக்கணும்’ உடனே அலை பேசியை எடுத்து மகன் சுமனை அழைத்தாள்.

“சொல்லும்மா…”

“பேசுனது போதும் வாடா…”

“இரும்மா… இப்பத்தான் முக்கியமான சப்ஜெக்ட்டே பேச ஆரம்பிச்சிருக்கோம். ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பரா ஒத்துப்போகுது. நான் என்ன பேசலான்னு நெனைக்கிறனோ அத அவ சொல்லறாம்மா….”

“அதெல்லாம் கெடக்குது. அந்த ஒத்த வார்த்தை சொன்னான்னு சொன்னையே… அந்த வார்த்தைய கொஞ்சம் சொல்லுடா… எனக்கு தலையே வெடிச்சுப்போகும் போல இருக்குது. ஏஸிலயும் வேர்க்குது”  

“அது வேற ஒன்னும் இல்லம்மா…. ‘உங்கம்மா ரொம்ப அழகு’ அப்புடின்னு சொன்னாம்மா…”

இந்த வார்த்தையைக்கேட்டதும் பூரித்துப்போன பரிமளம், “அப்படியா சொன்னா என்ற மருமக…? தூக்குடா அந்த தங்கத்த…” என்றாள் உற்சாகத்தில்.

“அம்மா….”

“ஏண்டா….?”

“என்னால தூக்க முடியாது. அவ என்ன விட ரெண்டு மடங்கு வெயிட்டும்மா….”

அசடு வழிந்தாள் பாக்யம். இப்போது ஏஸி உடலைக்குளிர்வித்தது. மனதை மகன் சொன்ன வார்த்தை குளிர்வித்தது. 

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *