எப்படி எப்படி..?!
எப்படி? எப்படி என்ற வார்த்தைகளைக் கேட்டதுமே மனசுக்குள் வந்து விழும் பாட்டு….அதுதான்! அதேதான். ‘எப்படி?! எப்படி?! மாமோவ் சக்கர வள்ளிக் கெழங்கு, சமைஞ்சது எப்படீ??!!ங்கற பாட்டுத்தான். அப்படி ஆயிப்போச்சு! அந்தப் பாட்டு நம்மை ஆக்கிரமித்த விதம்!
ஆனால், அதல்ல… இங்க பிரச்சனை! உதயணன் மனசுல வேற மாதிரியான சிந்தனை உதயமாச்சு.
நெல்லைல இருந்து குறும்பூர் வரை போய் வரலாமின்னு ஒரு குட்டி டிரிப்புக்குப் பிளான் பண்ணி போய்ட்டுத் திரும்பும்போது திருச்செந்தூர் எக்ஸ்பிரஸில் ஏறினான். கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். விசாகத்துக்கு முடிகாணிக்கை தர்ற முன்னேற்பாடோடு நிறைஞ்சிருந்த ரயில்ல கால் பெருவிரலை வைக்கக் கூட எடமில்லை. இவன் ஏறியதோ குறும்பூர்ல!. கூடவே குப்புசாமியுமிருந்தான். குறும்பூர் குப்புசாமின்னதும் எழுத்தாளார் குறும்பூர்குப்புசமீன்னு நினைச்சுடாதீங்க! அவர் வேற, இவர் வேற!

வாசற்படியில் வண்டியில் செந்தூரில் ஏறியதும் உக்கார்ந்து கொண்ட பிரகஸ்பதிகள் வழி நெடுக யாரையும் இடையில் ஏற விடவில்லை! திரும்ப இரங்கிவிடலாம்னு நெனைச்சா இறங்ககவும் விடவில்லை. ஒருவழியாய் நெட்டி நெட்டித் தள்ளி உள்ளே போய் மேலே பார்த்தால், ‘சாமான்களுக்கு மட்டும்’னு ஸதன் ரயில்வே எழுதிவச்ச இடத்தில் சர்வ அலட்சியமாக கால்கள் நீட்டிச் சயனித்திருந்தோர் ஏராளம். அந்தக் கம்பியைப் பிடிச்சுட்டு அந்தரத்துல தொங்கின படியே ஆறுமுகனை நேர்முகமாய் நெஞ்சாரத் திட்டி திரும்புகையில் ஒத்தை ஒத்தை சீட்டில் எதிர் எதிராக உக்கார்ந்திருந்த கணவன் மனைவி எங்கே இவன் ஒண்டி ஒண்டி நெருங்கி மிச்ச எடத்தில் தங்ககள் பக்கத்தில் உக்கார்ந்து பயணத்தைப் பங்கிடுவானோங்கற பயத்துல கால்களை நேருக்கு நேர் நீட்டி அமர அவர்கள் பாத தீட்சை பெறும் பாக்கியம் கிடைத்தது.
குப்புசாமி ஆரம்பித்தான்.’ அதான் நான் அப்பவே சொன்னேன். பேசாம பஸ்ல போயிடலாம்னு!’ என்றான்.
‘மாங்காய்..! மாங்காய்!’ ‘பைனாபிள்!’னு வித்துட்டே ஒரு நடுத்தர வயதுக்காரி நகர்ந்து நகர்ந்து உள்ளே போனாள். கூட்டம் ஒன்றும் சொல்லாமல் அவளுக்கு மட்டும் வழிவிட்ட போது, நினைத்தான் உதயணன்
‘நாம் ஒருநாளைக்கு ஒரு டிரிப் வரவே சங்கடப்படறமே…. இந்த வியாபாரிகள் எப்படி தினம் தினம் கூட்டத்தை நெட்டி நெட்டித் தள்ளி தங்கள் குட்டி வியாபாரத்தைக் குதூகலமாய்க் கவனிக்கிறார்களோ?!’ நினைக்க, மனதில் அந்தப் பாட்டுத்தான் எதிரொலித்தது. ‘எப்படி எப்படி? (சமாளிக்கிறார்கள் சிக்கலை?!) யோசிக்கையில்..
‘சாய்ய்…! சாய்ய்.!. டீ…! டீ! காப்பி!.. பால்…! என்றபடி, ஒற்றைத் தூக்கோடு ஒரு சேட்டன் அதே பாணியில் நெட்டித்தள்ளி ‘டீ.. கேட்பவர்களுக்கு டீயாக., காப்பி கேட்பவர்களுக்கு காப்பியை பால் கேட்பவர்களுக்கு எதையும் கலக்காமல் பாலாக, சீனிமட்டும் கலந்து தூக்கி வந்த தண்ணி பாலில் கலந்து கொடுத்து, தன் வியாபாரத்தைக் கவனித்தான். ஊடே, பைனாப்பிள் விற்றவளை, ஒரு சுண்டல் வேர்க்கடலை வியாபாரிப் பெண்ணை, பொசுக்குனு உறவாக்கி,’மதினி டீ சாப்பிட்டுங்க!’ என்று சொல்லி, குனிந்து ஊத்தப்போக அவள் அவசர அவசரமாய் மறுதாள் ..! வியாபாரத்தின் ஊடேயே உறவு உபசாரமும் நடந்தது. நமக்குமட்டும் ஏன் பயணிப்பவர்கள் பகைவர்களாக்கிறார்கள்??!! கணியன் பூங்க்குன்றன் கசந்து போகிறான்.
பைனாப்பிள் விற்பவன் ஒற்றைத் துளையிட்ட ஒரு பிளாஸ்டிக் ஜூஸ் பாட்டிலில் நிரப்பியிருந்த மிளகாய்ப்பொடி உப்புக் கலந்த கலவையை ஒரே அமுக்கில் புசுக்குனு சாரல் மழையாய் பழக்குவியல்மீது சப்ளை செய்து, பைனாபிளைக் குளிப்பாட்ட, அதை வாங்கியவனைத் தவிர்த்து, வந்தவர்கள் அத்தனைபேரும் ‘ஹச்சு’னு தும்மி ‘பொடியை மெதுவாய்போடுய்யா! கண்ணுல படுதுல்ல?!’ என்று எச்சரிக்க,
அவனோ.. வண்டி போற வேகத்துல காத்து பலமா வீசுதில்ல!’ என்றான் வியாபாரத்தைக் கவனித்தபடி…!
படக்குனு ஒரு சப்தம்… ‘அடி! நூற்றம்பது.!. அடி! நூற்றைம்பது ! என்று ஒருவன் சபதம்போட்டு இருட்டுக்கடை அல்வா இருநூறு வித்தது உங்களுக்காக எதுக்கு எங்களுக்காகவோ?! நூற்றைம்பது கிலோ.! அடி! அடி! என்று அளந்தான். இந்த வண்டியில வந்ததால! இல்லேன்னா இல்லை!’ என்று இருட்டுக் கடைக்கும். இரயிலுக்கும் வியாபார அட்வர்டைஸ்மண்ட்டை ‘அல்வா’ கொடுத்து செய்து கொண்டிருந்தான்.
நெல்லை நெருங்க நெருங்க…. குப்புசாமி கூட்ட நெரிசலுக்காக கொதித்துப் போயிருக்க…
எப்படி? எப்படினு?.. சமாளிப்பது எப்படீன்னு சாமியிடம் பதில் கேட்கப்போனவர்களுக்கு அசரீதியாக வியாபாரிகள் குரலில் விற்பனையைச் சான்றுகாட்டினார் சாமி…!
‘எப்படி எப்படி சமைஞ்சது எப்படீன்னு யோசிக்காதே! சிக்கல்களைச் சமாளிப்பது எப்படீன்னு இந்த வியாபாரிகளிடம் கத்துக்கோ சொல்வதாகப் பட்டது..
எல்லா இடத்திலயும் கூட்ட நெரிசலாக குழப்பங்களும் சிக்கல்களும் கூடவே இருக்கும். அவற்றைத் தள்ளி தகர்த்துவிட்டுப் போனால்தான் சாதனை சாத்தியப்படும் என்று புரிந்து கொள்ளும் எண்ணம் உதயணனுக்கு உதயமாச்சு ஞானம்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |