கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2025
பார்வையிட்டோர்: 244 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கங்காதரன் கௌரிக்கேற்ற கணவன்’ என்று வாழ்த்துத் தந்திகளும், கடிதங்களும் ஏகோபித்து முழக்கின. கங்காதரனுக்கு அவற்றைப் படிக்கும் போது வெகு ஆனந்தமாயிருந்தது. ஒரு நண்பன் ‘நீங்களிருவரும் கங்காதரனும் கௌரியும் போலவே ஈருடல் ஓருயிராய் வாழ்வீர்களாக’ என்று எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தை உடைத்துச் சட்டைப் பைக்குள் சொருகினவன், நெஞ்சிலேயே சொருகி விட்டான். 

அந்தக் கடிதம் சொன்னது போல, இருவருக்கும் பெயர்ப் பொருத்தம் எல்லாம் சரியாய்த் தானிருந்தது. ஆனால்….? 

2

புருஷன் வீட்டிற்கு வந்து சில தினங்களுக்குள் கெளரி பெரிய வீட்டுப் பெண்களை யெல்லாம் சிநேகம் பிடித்து விட்டாள். கௌரியை அவர்கள் எல்லாருக்கும் மிகவும் பிடித்திருந்தது. 

அவளுடைய பெயர் கௌரி. அழகிலோ என் றால் அவள் கவரிமான்தான். அவளுடைய விளை யாடும் விழிகள் கவரிமானின் விழிகள். அவள் நடையின் ஒயிலிலோ, இன்பக் கானகத்தில் மெல்ல மெல்ல மிதித்துச் செல்லும் ஒரு இளமானின் கதி துலங்கும். அவளுடைய நிறமோ மானின் நிறம். ஆனால்… ஆனால் …….? 

ஆனால், இந்த மானுக்கு வாய்த்த கணவன்? கருப்பில் அழகுள்ளவர் எத்தனை பேர்? கங்காதரன் அதற்கும் ஒரு விதி விலக்காக இருந்தான்! 

பிரமன் கௌரியைப் படைக்கும்போது, அவளு டைய கண்டத்திலே ஒரு அமுத கலசத்தைப் பதித் திருந்தான். ஆனால், எந்த மனிதன் அந்த அமுத கலசத்திலிருந்து இன்பம் பருக வேண்டுமோ அந்த மனிதனுடைய செவிகளிலே பிரமன் செவிச் செல் வத்தை வைக்கத் தவறிவிட்டான். இவ்வளவு பெரிய தவறு செய்த சிருஷ்டிகர்த்தா, இன்னொரு பெரிய தவறும் செய்துவிட்டானே – கௌரியி னுடைய பூங்கொத்துப் போன்ற விரல்களில் வீணை யின் நரம்பிடை அமானுஷ்யமான தெய்விக இசையை வர்ஷிக்கக் கூடிய ஒரு மந்திரசக்தியையும் பின்னி ஓடவிட்டிருந்தான்! பாவம், கங்காதரன்? 

மனித சமூகம், இவ்விருவரையும் சதிபதிகள் என்றது. இவ்விருவரையும் சேர்த்துப் பிணைத்துக் கொண்டு ஒரு பொற்சரடு கௌரியின் கழுத்திலே சுற்றிக்கொண்டு கிடந்தது. ஆனால், அவர்களுடைய இதயங்களோ என்றால்….. 

3

“நான் வீணை வாசிக்கிறது உங்களுக்குப் பிடித் திருக்கிறதா?” என்று கேட்டாள் கௌரி. மனைவி வீட்டிற்கு வந்த புதிதில் ஒரு மாதிரியாக இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி வந்தான் கங்காதரன். பிறகு வர வர அவனுக்கு அருவருப்பாய் இருந்தது. வீணை என்ற உயிரற்ற வஸ்துவின் மூலம் எப்படி த்தனை இன்பத்தை உயிருள்ள மனங்கள் அனுப வித்துவிட முடியும். பி றரையுந்தான் எப்படி இன்பப்படுத்திவிட முடியும்-என்றே அவனுக்குப் புரியவில்லை. 

இந்த நிலையில், அடிக்கடி தன் மனைவி தன் சிநேகிதிகளின் வீட்டிற்கு வீணை வாசிக்கப்போவது அவனுக்குப் பரிகாசமாயிருந்தது. பிறகு இந்தப் பரிகாச உணர்ச்சி வெறுப்பாக மாறியது. கௌரியோ? – அவள் இதை யெல்லாம் லக்ஷியம் செய்வதே இல்லை. அவளுடைய இதயம் சதா சர்வதா சங்கீத சரஸ்வதியோடேயே உறவாடிக் கொண்டும் உரையாடிக் கொண்டும் இருந்தது. சாதாரண மனிதனுடைய பொருளுலகத்து இன்னல்கள், ஏக்கங்கள், சாமானிய மனித இதயத்தின் சகஜமான உணர்ச்சிகள் வேகங்கள் – இவற்றிற் கெல்லாம் அப்பால் நின்று சுடர்விட்டது கௌரியின் இசை ஞான ஜோதி! 

4

அவள் கேட்டாள். “உங்களுக்கு டாக்டர் ரங்கனாதனைத் தெரியுமா?” என்று. 

“இந்த ஊரில் முழத்துக்கொரு டாக்டரும் சாணுக்கொரு பிசாசும் உண்டு. இதையெல்லாம் யார் கண்டார்கள்?” என்று பதில் சொன்னான்- கங்காதரன். 

“அவர் ரொம்ப ஞானஸ்தர். வீணை என்றால் அவருக்கு உயிர். என்னுடைய வாசிப்பை ரொம்ப அனுபவித்தார். உங்களைக் கூடப் பார்க்க வர வேண்டும் என்று சொன்னார்…” 

“காபி தயாராய் விட்டதா?” என்று கேட்டுக் கொண்டே, மாடியிலிருந்து கீழே இறங்கினான் கங்காதரன். 

5

கங்காதரனுக்கு அசாத்தியக் கோபம் வந்தது. சகிக்க முடியவில்லை. சாயந்திரம் ஆறு மணியிருக் கும். ஆபீஸிலிருந்து அப்போதுதான் களைப்போடு வீட்டுக்கு வந்திருக்கிறான். ஆனால், வீட்டில் கௌரி இருந்தால்தானே? மேஜைக்கு மேல் ஒரு குறிப்பு இருந்தது. அதை எடுத்து வாசித்துப் பார்த்தான் 

“டாக்டர் ரங்காவின் வீட்டில் ஒரு டின்னர்.கட்டாயம் வீணை வாசிக்க வேண்டும் என்று ரொம்ப வற்புறுத்து கிறார்கள். அவருடைய மனைவி வந்து என்னை அழைத்துப் போகிறாள். சௌகரியப்பட்டால் நீங்களும் வாருங்களேன். 

கௌரி 
பிற்குறிப்பு: அடுப்பில் காபி போட்டு வைத்திருக்கிறேன்”. 

கங்காதரன் சிரித்தான். அந்தச் சிரிப்பிலே மனித இதயத்தின் கோரமான உணர்ச்சிகள் அனைத் தையும் சிதறினான்.”என் மனைவி தன்னுடைய சாமர்த்தியத்தை விளம்பரப்படுத்துகிறாளாம். இந்த விளம்பரத்தில் நானும் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டுமாம்!’ என்று தலையிலடித்துக் கொண்டே, சிரித்தவண்ணம், வானொலிப் பெட்டியின் விசையை முடுக்கினான். அது சிரித்தது. ‘உலகம் சிரிக்கிறது’ என்று ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்தார் அறிவிப் பாளர். ‘உலகம் யாரைப் பார்த்துச் சிரிக்கிறது?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் கங்காதரன். 

இரவு, கௌரி வருவதற்கு மிகவும் நேரமாகி விட்டது. வந்ததும் சமையலறைக்குள் போய்ப் பார்த்தாள். காபிப் பாத்திரம் அடுப்பில் அப்படியே இருந்தது. ஆனால், காபி முழுதும் திரைந்து ஆடை படர்ந்து புளித்துப் போயிருந்தது. 

“ஏன் நீங்கள் காபியைக் குடிக்கவில்லையா? திரைந்து போய் விட்டதே!” 

“அது என் குற்றமா?” 

“நீங்கள் குடித்திருந்தால் திரைந்திருக்குமா?”

“நீ அதை இப்படி அலக்ஷியமாக வைத்துப் போன தால் தானே, அது திரைந்து விட்டது?” 

கங்காதரன் இரவு ஒன்றும் சாப்பிடவில்லை. பேசாமல் படுத்துக் கொண்டான். மறுநாட் காலை சீக்கிரமாக எழுந்து, வெகு சுரு சுருப்போடு ஆபீஸுக்குப் போய் விட்டான். ஆனால், ஆபீஸில் வேலை ஓடவேண்டுமே. முதல் நாள் இரவு கௌரி அவ் வளவு நேரம் கழித்து வந்தது, அவனுக்குப் பலவி த சந்தேகத்தைக் கொடுத்தது. மேஜைமேல் தலையைச் சாய்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். 

“சார்!” என்று யாரோ கூப்பிட்டார்கள். தலையை நிமிர்த்தி ஏறிட்டுப் பார்த்தான். முன்பின் தெரியாத ஒரு மனிதர் எதிரே நின்று கொண்டிருந் தார். 

“தாங்கள் தானே கங்காதரன்?” என்று கேட் டார் அந்தப் புது மனிதர். 

“அந்த அபாக்கியசாலி நான் தான்!” 

“நன்றாயிருக்கிறது. தங்களைப் போல் பாக்கிய சாலி யாரிருக்கிறார்கள்? ஸ்ரீமதி கௌரியின் கணவ ரல்லவா தாங்கள்!” 

கங்காதரன் உதட்டைக் கடித்துக்கொண்டான்.

“சார், நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்வதற்காகத்தான் வந்தேன். தயவு செய்து மன்னிக்க வேண்டும்!” என்றார் அந்த மனிதர். 

கங்காதரன், “மன்னிக்கவேண்டியது என்ன இருக்கிறது, சொல்லுங்கள்” என்றான். 

அந்த மனிதர் சற்று மௌனமாயிருந்தார். ஏதோ தான் சொல்லக்கருதியதைச் சொல்லத் தயங்குபவர் போல இமைகளை மூடி மூடி விழித்தார். பிறகு சொன்னார்: 

“ஒன்றுமில்லை. தங்கள் மனைவியின் கச்சேரியை டாக்டர் ரங்காவின் வீட்டில் கேட்டேன். ரொம்ப அற்புதமாயிருந்தது.” 

கங்காதரன் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 

“தங்கள் மனைவி கட்டாயம் அடிக்கடி கச்சேரி செய்ய வேண்டும். அப்பொழுதுதான், நமது நாட்டிற்கே பெரிய தொண்டு செய்தவர் ஆவீர்கள்” என்று சொல்லிவிட்டு, நகர்ந்தார். சற்றுத் தூரம் போனவர், மறுபடியும் நின்றார். கங்காதரனைப் பார்த்துத் திரும்பினார். தான் சொல்லியிருக்க வேண்டிய விஷயத்தைச் சொல்லாமல் வேறு ஏதோ சொல்லி மழுப்பி விட்டவர் போல, மீண்டும் திரும்பினார். 

கங்காதரனுக்கு ஆத்திரம் வந்தது. நெற்றியைப் பிசைந்து கொண்டான். 

அந்த மனிதர் மிக்க தைரியத்தை வரவழைத்துக் கொள்ளுபவர் போல ஒரு தரம் இருமிக் கொண்டு சொல்லுவார்: 

“ஐயா, தயவுசெய்து உங்கள் மனைவியை ரங்காவின் வீட்டிற்கு அடிக்கடி அனுப்பாதீர்கள்!” 

இப்படிச் சொல்லிவிட்டு, ஒரு கணம்கூட அவ் விடத்தில் நிற்க விரும்பாதவர் போல மறைந்து விட்டார் அவர். 

ஏதோ ஒரு உலகத்திலிருந்து வந்து போன மாயாவி ஒருவனுடைய வார்த்தைகள் போல இந்த மொழிகள் கங்காதரன் செவியில் விழுந்தன. 

கங்காதரன் நாற்காலியை விட்டு எழுந்தான். ‘விறு விறு’ என்று வீட்டை நோக்கி நடந்தான். 

வீட்டில் அவளைக் காணோம். ஒரே விரக்தியோடு மாடிக்குப் போய், வானொலிப் பெட்டியின் அருகே உட்கார்ந்தான். பிரடையை முடுக்குவதற்காக அதில் கையை வைத்தான். அந்தச் சமயத்தில் வெளியே யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டது. கௌரி அறையில் நுழைந்தாள். 

“டாக்டர் ரங்காவின் வீட்டிற்குத்தானே போயிருந்தாய்?” 

“உங்களுக்கு ஜோஸியம்கூடத் தெரியும் போலிருக்கிறதே” – இந்த வார்த்தைகள் அந்த நிரபராதியினுடைய இதயத்திலிருந்து பொங்கி வந்தன. 

”ஜோஸியம் மட்டுமா தெரியும்? எல்லாம் தெரியும் எனக்கு!” என்று பல்லைக் கடித்தான் கங்காதரன். 

கெளரி மான்போல மிரள மிரள விழித்தாள். “உங்களுக்கு உடம்பு என்ன? ஏன், ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே மாடிப் படிகளில் இறங்கினாள் கௌரி. 

வீணையின் நரம்புகளை சுருதி மீட்டியவண்ணம் படிகளில் ஏறி ஒரு வினாடியில் மான்போல் துள்ளி அறையில் நுழைந்தாள். அவளுடைய பூங்கொத்துப் போன்ற விரல்கள் வீணையின் தந்தியிலே ஊடாட ஆரம்பித்தன. அவளுடைய கண்டத்தின் அமுத கலசத்திலிருந்து, 

“சங்கடமே இகம் 
சங்கடமே இகம் 
சங்கீதமே சுகம்” 

என்ற வார்த்தைகள் வந்தன. 

இதுவரை சகித்துக்கொண்டிருந்த கங்காதரன் இப்போது நாற்காலியை விட்டு எழுந்தான். வெறி பிடித்தவன்போல் பாய்ந்தான். கௌரியின் கரங் களிலே தவழ்ந்து கொண்டிருந்த அத்தெய்விக வாத் யத்தைக் காலால் ஓங்கிப்’படார்’ என்று இடறினான். ஐயோ…சுருதி கலைந்து நரம்பு சின்னாபின்னமாகி அலங்கோலமாய்க் கதறிக்கொண்டு சுண்டிச் சிதறியது வீணை! பாவம்! கெளரியினுடைய உடலின் நரம்புகள் அனைத்தும் சுண்டிச் சிதறின. 

‘இது என்ன கூத்து’ என்று ஒரே திகைப் போடு கங்காதரனைப் பார்த்தாள் கௌரி. அப்போது அவளுடைய விழிகள் நீர்மல்கி அங்குமிங்கும் மருண்டன. “டாக்டர் ரங்காவின் வீட்டிற்குப் போகும் காலைத் தறியாது விட்டதால் தானே இது என்ன என்று கேட்கிறாய்? அன்றே தறித்திருந்தால் இன்று மத்தியானம் எவனோ ஒரு பயல் வந்து என்ன வெல்லாமோ அபவாதம் சொல்லும்படி…”

இதற்குள், அந்த கெளரிமானின் நெஞ்சிலே எண்ணத்தொலையாத அம்புகள் ஊடுருவிப் பாய்ந்து விட்டன. ‘ஓ’ என்று கூச்சலிட்டாள் அவள். என்ன தோன்றிற்றோ, தெரியவில்லை. இந்த சம்பவத்திற் கெல்லாம் காரணமாய் இருந்த வீணையை ஓடியே போய் எடுத்தாள். தலைக்குமேலே அதை உயர்த்தி ஒரு ஓங்கு ஓங்கினாள். தடால் என்று அதைக் கங்காதரனுக்கு முன்பாகப் போட்டு உடைத் தெறிந்துவிட்டு, விம்மி விம்மி அழுதாள். மறுகணம், அழுது கொண்டே மாடியிலிருந்து இறங்கினாள். 

கங்காதரன் அந்தச் சிதறுண்ட வீணையின் உடைந்த துண்டுகளையே பார்த்துக்கொண்டு அறை யில் அங்குமிங்கும் உலாவினான். அவனுக்குப் பைத்தியம் பிடித்ததுபோ லாகிவிட்டது. 

அந்தப் பைத்திய வெறியில், ஏனோ, வானொலிப் பெட்டியின் விசையைத் திரும்பினான். அதன் வாயி லிருந்து யுத்தச் செய்திகள் வெளி வந்துகொண் டிருந்தன. உடனே, மேஜையின் டிராயரைக் கீழே இழுத்துப்போட்டான். அதிலிருந்து கடிதக் கட்டு உலைந்து விழுந்தது. அதை எடுத்தான். 

கல்யாணத்தன்று வந்த வாழ்த்துக் கடிதங்கள் அவை! ஒவ்வொன்றாய் எடுத்துக் கிழித்தெறிந்தான். அந்தக் கடிதமும் கையிலகப்பட்டது. ‘நீங்களிரு வரும் கங்காதரனும் கௌரியும் போலவே, ஓருடல் ஒருயிராக…….’ முழுதும் வாசிக்கும் முன், அதைச் சுக்கு நூறாகக் கிழித்துக் காற்றில் ஊதிப் பறக்க விட்டான். 

மனிதனுக்கு உணர்ச்சி வேகத்தில் என்ன செயல் எல்லாம்தான் செய்யத்தோன்றுமோ! டிராயரை ஓங்கி மேஜைக்குள் சொருகினான். அந்த அதிர்ச்சியில், மேஜை மேலிருந்த புத்தக ஷெல்பி லிருந்து ஒரு புத்தகம் கீழே விழுந்தது. அதை எடுத்தான். அது ஒரு தனிப்பாடற் திரட்டு. ஒரு பக்கத்தில் அடையாளம் வைத்திருந்தது. அந்தப் பக்கத்தைத் திரும்பினான். அவ்வையார் பாட்டு: 

அற்றதலை போக அறாத்தலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ – முற்றும்
மரமனையா னுக்கிந்த மானைப் படைத்த
பிரமனையான் காணப் பெறின் 

ஒருதரம் படித்தான். சற்றுப் புரிந்தது. பிறகு, கீழே எழுதியிருந்த விளக்க உரையைப் படித்தான். 

அன்று பரமசிவன் பிரமனுடைய தலை ஒன்றை அற்றுவிட்டான். அது போக அறாமல் நிற்கும் தலைகள் நான்கு உண்டு. நான் பிரமனைக் காண்பேனானால், அந்த நான்கு தலைகளையும் கொய்துவிடுவேன். (ஏன்?) முற்றிலும் மரத்தைப்போன்ற வனுக்கு, ஐயோ, இவ்வளவு அழகிய மானை மனைவி என்று ஆக்கிவிட்டான் அல்லவா அவன்?

அவ்வளவுதான்! அந்தப் பாட்டைத் திரும்பத் திரும்பப் படித்தான். ஒவ்வொரு முறை படிக்கும் போதும், இதுவரை கண்டறியாத புதிய உலகத்துக் காட்சிகளை எல்லாம் அவன் கண்முன் கொண்டு வந்தது அந்தப் பாட்டு! 

“அவளுடைய புத்தியின் கூர்மை, வாளின் கூர் மையைப் போன்றது. என் இதயம் என்னை அறியா மலே, அந்தக் கூர்மைக்கு அஞ்சி அவளுடைய அருகில் என்னை அழைத்துச்செல்லத்தவறிவிட்டது. அவளுடைய இதய விலாசத்தை நெருங்க முடியாத படி, அவளுடைய அறிவுச் சுடர்என்னைத் தகித்தது. ‘என்னுடைய நிலைக்கு உன்னைத் தாழ்த்திக்கொள்’ என்றேன். அவளுடைய நிலைக்கு என்னை நான் உயர்த்திக்கொள்ள விரும்பினேனில்லை.” 

கங்காதரனுடைய கண்ணில் நீர் தேங்கியது. அவனுடைய நாவில் வறட்சி ஏற்பட்டது. ‘கௌரி’ என்று கூப்பிட்டான். கெளரி …….? 

6

டாக்டர் ரங்காவுக்கு ஒரே திகைப்பாய் இருந் தது; ரொம்பவும் எதிர்பாராத விதமாயிருந்தது. 

என்றும், எப்பொழுதும், இன்பமான இசை பொங்கும் அவளுடைய இதயத்திலிருந்து, இந்த அலங் கோலமான துன்பப் பிரலாபம் வருவா னேன்? டாக்டர் ரங்காவுக்குப் புலப்பட்டது, கெளரியினுடைய இதயவீணை சுருதி கலைந்து: விட்டது என்று! 

“கௌரி, ஏது இவ்வளவு எதிர்பாராதவித மாக இப்பொழுது இங்கு வந்தீர்கள்…?” 

ரங்காவிற்கு நா குழறிற்று. 

“இனி இங்கு வரப்போவதில்லை என்று சொல்லுவதற்காக வந்தேன்……” 

கௌரி விம்மி விட்டாள். 

“அதற்காக இந்த நேரத்தில்…..” 

அடைபட்டுக் கிடந்த வெள்ளம் உடைப் பெடுத்துக்கொண்டு பாய்வதுபோல, அவளுடைய இதயத்தில் பெருகிநின்ற சோக வெள்ளம் கண்களை உடைத்துக் கொண்டு பாய்ந்தது. ஒரே ஆற்றாமை யோடு ஓலமிட்டாள் அவள்! 

ரங்காவுக்கு மனம் தாங்க முடியவில்லை. கண் களை மூடிக்கொண்டு சோபாவில் சாய்ந்து விட்டார். 

“நான் இனி இங்கு வரக்கூடாதாம். எவனோ ஒரு பாவி அவரிடம் போய் ஏதோ உளறினானாம்…” 

ரங்கா மௌனமாக இருந்தார். 

“அந்த முட்டாள் தான் உளறினான். அவரும் அதை..” 

“கௌரி. தயவுசெய்து தாங்கள் அப்படிச் சொல்லாதீர்கள். அவர் தங்கள் கணவர்……” 

‘என்ன! அவர் சொல்வதை நீங்களும்……!”

டாக்டர் ரங்கா சோபாவை விட்டு எழுந்தார்.

”கௌரி, உங்களிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேன். இன்று மத்தியானம் உங்கள்கணவரிடம் போய்ச் பேசினவன் நான்தான்….” 

கெளரியின் கண்களிலே சொல்ல முடியாத வேதனை உணர்ச்சி தோன்றியது. 

“அப்படியானால் என்னை இங்கு வரக்கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்களா?” என்று அவள் கேட்டாள். ரங்கா கொஞ்சநேரம் பதில் பேசவில்லை. ”கௌரி, நான் அப்படிச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், சொல்லுகிறேன். நேற்று என் வீட்டில் தங்கள் கச்சேரியின்போது பலர் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதைக் கவனித்தேன். தங்களுடைய நன்மைக்காகச் சொல்லுகிறேன், தாங்கள் இங்கு வரவேண்டாம் என்று. மனித சமூகம் தயக்கமின்றிக் கூறும் பொய் அபவாதத்திலிருந்து தங்களைத் தப்புவிக்கும் பொருட்டு…” 

அதற்குமேல் கௌரி ஒரு கணம்கூட அங்கு நிற்கவில்லை. ‘போய் வருகிறேன்’ என்று சொல்லி விட்டு வெளியேறினாள். 

அப்பொழுது நன்றாய் இருட்டிவிட்டது. கார் காலத்து வானத்தைக் கன்னங்கரிய இருள் திரையிட்டு மூடியிருந்தது. வடகோடி மூலையில், ஒரு நக்ஷத்திரம் ஏகாந்தமாகச் சுடர்விட்டுக்கொண்டு தொங்கியது, மனித இலட்சியத்தைப் போல. அதைப் பார்த்துக் கொண்டே நடந்தாள் கௌரி! “கௌரீ, தயவு செய்து அப்படிச் சொல்லாதீர்கள். அவர் தங்கள் கணவர்” என்று ரங்கா கூறியது இன்னும் அவள் செவிகளில் கேட்டுக்கொண்டே யிருந்தது. அப்பொழுது மேற்கே இருந்து வீசிய காற்று கௌரியின் காதோடு கீழ்க்கண்டவார்த்தை களைச் சொல்லிப் போயிற்று. 

“கல்லானாலும் கணவன் 
புல்லானாலும் புருஷன் ” 

டாக்டர் ரங்காவின் வீட்டு வானொலிப் பெட்டியி லிருந்து வந்த குரல் அது! யாரோ ஒரு தமிழ்ப்பெரியார் தமது ரேடியோப் பிரசங்கத்தை அவ்வாறு முடித்துக்கொண்டிருந்தார். 

உண்மையில். அது வானொலியா? அல்லது அசரீரியா? இல்லை, கௌரியினுடைய இதயத்தின் எதிரொலிதானா? 

– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *