கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2025
பார்வையிட்டோர்: 35 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சினிமாவிலும் சிறுகதைகளிலும் நடக்க முடியாத சம்பவம் சின்னத்தங்கச்சியின் வாழ்க்கையில் நடந்தது, இருபத்தி மூன்ற வருஷங்களுக்கு முன்பு அவளுக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததை சொல்லவில்லை. அவர்கள் வளர்ந்து ஒருவருக்கு அடடா! அந்த இரண்டும் பெண்கள் என்பதை முன்பே சொல்ல மறந்து போய் விட்டது. அவர்களில் ஒரு பெண்ணுக்குக் கல்யாணமான பிறகுதான் இவ்வளவும் நடந்தது. 

அந்த இரண்டு பெண்குழந்தைகளுக்கும் கண்மணி, சிந்தாமணியெனப் பெயரிட்டு வளர்த்தாள். இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு இம்மாதிரிப் பெயர்கள் ‘பாஷனா’ யிருந்தன. இப்போது இரண்டெழுத்து மூன்றெழுத்துப் பெயர்கள் நாகரீகமாயில்லையோ, அதைப்போல இருவருக்கும் ஒரே மாதிரி, ஒரே நிற உடைகள் வாங்கிக் கொடுத்தாள். இதென்ன தகப்பன் இல்லாத குழந்தைகளா, எல்லாமே தாய் செய்தது என்று கேட்டால், சின்னத்தங்கச்சிக்கு கணவன் இருந்தும் இல்லாதது போலத்தான். திடகாத்திரமான தேகம் படைத்தவனாயிருந்தும் ஒரு விபத்தில் அகப்பட்டதன் காரணமாக கைகளில் ஒரு நடுக்கம். எந்த வேலையும் அவனாற் செய்ய முடியாது. ஆகவே, சின்னத்தங்கச்சிக்குக் குடும்ப பாரத்தைத் தாங்கும் பொறுப்பு ஏற்பட்டது. 

கொண்டு வந்த சீதனத்தையும் உழைப்பையும் விவேகத்தையும் மூலதனமாகக் கொண்டு முன்னேறிக் கொஞ்சமும் மிச்சம் பிடித்து இருபது ஆண்டுகளைத் தள்ளி விட்ட பிறகு பெண்களின் கல்யாணத்தைப் பற்றிச் சிந்திக்கலானாள். இருவரும் தோற்றத்தில் ஒரேமாதிரியாயிருந்தார்கள். உருவம் மட்டும் ஒத்திருந்ததே தவிர குணமும் நடத்தையும் வெவ்வேறாயிருந்தன. ஒரே பந்தலில் இரண்டு கல்யாணங்களையும் நடத்திவிட்டால்…. நல்ல யோசனை! ஆனால் இரண்டு மாப்பிள்ளைகளுக்கு எங்கேபோவது? எங்யோவது இரட்டைக் குழந்தைகள் ஆண்களாக இருந்தால் …. அடடா! ஆசையைப்பார்! தினமும் எல்லோருக்கும் இரட்டைக் குழந்தைகளா பிறக்கின்றன? 

வாகீசன் வந்தான், பெண் பார்க்க. இரண்டு பெண்களும் அலங்கரித்துக் கொண்டு நின்றார்கள். ‘இவள் தான் பெண்’ என்று முன்னாற் கூட்டி வந்து ‘பாடத்தெரியுமா, ஆடத் தெரியுமா” என்று பரீட்சிப்பது இந்த ஊர் வழக்கமில்லையே. ‘முன்னால் நிற்கிறவள்’ என்று காட்டினார்கள். முன்னால் நின்றவளுக்கும் பின்னால் நின்றவளுக்கும் தான் வித்தியாசமில்லையே! அவனுக்குப் பிடித்துவிட்டது. யாரை? கண்மணியையா சிந்தாமணியையா? 

கண்மணி அடக்கமானவள், கலகலப்பாகப் பேசமாட்டாள். சிந்தாமணி கொஞ்சம் நோஞ்சான். ஆனால் சிரிப்பும் குதிப்புமாக இருப்பாள். இதையெல்லாம் எங்கே கண்டான் வாகீசன். சரியென்று சொல்லிவிட்டான். அவனுக்கு வகை சொல்ல, வழிகாட்ட ஆளில்லை. கன்னியைக் காட்டினார்கள். கண்ணை மூடிக்கொண்டு கல்யாணத்துக்குச் சம்மதித்தான். 

‘யாராவது கல்லுக்குத்தி விட்டாலும் என்ற அச்சத்தில் மேற்கொண்டு கருமங்கள் விறு, விறு என்று நடைபெற்றன. சமயாசார முறைப்படி விவாகம் நிறைவேறுவதற்கு முன்னரே சட்டபூர்வமான விவாகப் பதிவு நடைபெற்றது. விவாகப் பதிவுகாரர் இருவரையும் பதிவுப் புத்தகத்திற் கையெழுத்திடச் செய்தார். அதன் பின் ஒரு பிரசங்கமே செய்தார். “சமயாசாரப்படி அல்லது சாதியாசாரப்படி கல்யாணம் நடக்காது போனாலும் இன்று தொடக்கம் கணவன் மனைவியாகிவிட்டீர்கள்….. இக்கல்யாணப் பதிவு மாவட்ட நீதி மன்றத்தினால் தள்ளப்பட்டாலன்றி, அல்லது இருவரிலொருவர் காலஞ்சென்றாலன்றி இன்னொரு கல்யாணம் செய்து கொண்டால் இலங்கை பீனல் கோட்டிலுள்ள சட்டத்துக்கிணங்க இருதாரம் புரிந்த குற்றத்துக்குள்ளாகி அதற்குரிய தண்டணைக்கு ஆளாவீர்கள் என எச்சரிக்கை செய்கிறேன்.” இவ்வாறு அவர் கூறி முடித்த போது வாகீசனும் கண்மணியும் பயபக்தியுடன் நின்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். பதிவு காரரின் மீசையும், கண்ணாடியும், பெரிய சந்தனப் பொட்டும், விரலுக்குப் பதிலாக சுட்டிக் காட்டுவதற்கு அவர் உபயோகித்த தடித்த ‘பௌண்டன்’ பேனாவும் சிந்தாமணிக்குச் சிரிப்பையுண்டுபண்ணின. கண்மணிக்குப் பின்னால் முகத்திற் புன்னகை தவழ நின்றாள். 

இரண்டு மாதங்களுக்கிடையில் திருமணமும் கோலாகலமாக நடைபெற்றது. சின்னத்தங்கச்சி கெட்டிக்காரி. செட்டாக, சிக்கனமாக காரியத்தை முடித்துவிட்டாள். ஆனால் வெளிப்பார்வைக்கு குறைவில்லாமல் மேளதாளம், ஊர்வலம், அலங்காரம் பலகாரம் எல்லாம் குறைவில்லாமல் ஏற்பாடாகி இருந்தன. தனிக்குடித்தனத்துக்கு கண்மணி கணவனோடு போகவேண்டியிருந்தது. கைக்கு அடங்கிய பிள்ளையாய் வீட்டோடு வாழ்ந்தவளுடன் கூடவே சென்று எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்துவிட்டு கொஞ்சநாட்களின் பின் திரும்பலாம் என்று சின்னத்தங்கச்சி நினைத்தாள். தன் கணவன் கதி என்னாவது என்று கலங்கினாள். எல்லாம் தெரிந்த வாயாடியாக, வல்லமை படைத்தவளாக உள்ள சிந்தாமணியின் விஷயத்தினால் இப்படிக் கவலைப்பட நேராது. 

கணவனும் மனைவியும் சினிமாவுக்குப் போகும் போது குதித்துக் கொண்டு சிந்தாமணியும் போய்விட்டாள். வாசலில் கார் வந்து நின்றதும் “என்ன அத்தான், செருப்பைக் கூட கழற்றாமல் நேரே வீட்டுக்குள்ளே வருகிறீர்களே!” என்று சிந்தாமணி கேட்டதும் காதில் விழுந்தது. எவ்வளவு திறமைசாலி? அன்பு, கனிவு, எதிலும் குறைவில்லை. கருமத்திலும் கண், பெண் என்றால் இப்படியல்லவா பிறக்க வேண்டும். சொல்லுவார் புத்தி கேட்கிற, எதற்கும் பயந்து நடுங்குகிற கண்மணி என்ன செய்யப் போகிறாள்? சின்னத்தங்கச்சிக்கு ஒரு யோசனை ‘பளிச்’சிட்டது. துணைக்கு சிந்தாமணியை அனுப்பி வைத்தால்….. 

அப்புறமென்ன? கண்மணியுடன் சிந்தாமணியும் ரயில் ஏறினாள். சந்தித்த நண்பருக்கு எவன் தன் மனைவியென்று சொல்லிக் காட்டுவதே வாகீசனுக்கு பெரும் சிரமமாகி விட்டது. தோற்றத்தில் ஒற்றமையைத் தவிர்க்க உடையிலாவது வேற்றுமையை புகுத்தியிருக்க வேண்டும். அதுவும் இல்லை. மெதுவாக கண்மணியிடம் விஷயத்தை விளக்க வேண்டும் என்று எண்ணினான். 

அவன் வேலை பாார்த்த இடம் கொழும்பு. அங்கிருந்து பத்து மைலுக்கு அப்பால் பட்டினத்தின் வெளியோரக் கிராமம் ஒன்றில் அவனுக்கு கட்டுப்படியான வாடகையில் ஒரு வீட்டை அமர்த்தி இருந்தான். அங்கு போய் சிலமாதங்களிற் கல்யாண சுவாரசியத்தின் புது மெருகு மறைந்தது. கண்மணியின் கவர்ச்சி குன்றிவிட்டதாகப்பட்டது. எதைச் சொன்னாலும் ஏதென்று கேட்காமல் நசிந்து பணியும் கண்மணியிடத்தில் அவன் கசப்படைந்தான். 

ஆனால்… இதிலே புதுமை என்ன இருக்கிறது? ‘அத்தான்’ என்று கணீரென்று கொக்கரிக்கும் சிந்தாமணி, தகாததை சொன்னாற் சகோதரிக்காக பரிந்து சண்டை போடும் சிந்தாமணி அவன் கருத்தை தொட்டாள். விறைப்பாய் நிமிர்ந்து நிற்கும் மரத்தைத்தான் பாய்ந்தோடும் ஆறு முட்டித் தள்ளுகிறது. மரமும் விழுகிறது. ஆனால் வளைந்து கொடுக்கும் புல்லை அது தடவிவிட்டுச் செல்கிறது. 

பத்து நாள் நிற்கவென்று வந்தவள், மாதமொன்றாகியும் ஊருக்குத் திரும்பவில்லை. சின்னத் தங்கச்சி கடிதம் எழுதினாள். “உடனே வா” என்று ரயிலிலே கூடிக்கொண்டுவர வசதியாகத் துணை கிடைத்ததும் வருவதாகப் பதில் வந்தது. வாகீசனின் போக்கை கண்மணி உணராமல் இல்லை. எதிர்த்தால் எல்லாம் தலைகீழாகி விடுமோ என்று ஏங்கினாள். எதிர்த்தே பழக்கமில்லாதவளுக்கு, அடிமையாக வாழ்வதே இன்பம் என்று நினைப்பவளுக்கு இது வாழ்க்கையிலே தவிர்க்கமுடியாத அம்சம் என்று பட்டது. 

ஊரிலிருந்து வந்த ஒருவர் சிந்தாமணியை அழைத்து வரும்படி சின்னத்தங்கச்சி சொல்லி விட்டாதாகக் கூறினார். சின்னத்தங்கச்சி திடீரென்று முடிவு பண்ணினாளே ஒழிய, அவளுக்கு இரண்டு பெண் பிள்ளையையும் பிரிந்திருப்பது கஷ்டமாய் இருந்தது. கலகலப்பாயிருந்த வீட்டில் ‘உம்மணமூஞ்சி’ மாதிரி இருப்பது கசந்தது. அத்துடன் தான் செய்தது தவறோ என்ற ஐயமும் எழாமல் இல்லை. வாழ்க்கையில் எவ்வளவோ கண்டவளுக்கு இதை உணர்த்துவது முடியாத காரியமா? 

தன்னால் வர முடியவில்லை தகப்பனாலும் முடியாது. அயலவன் ஒருவன் கொழும்புக்குப் போவதை அறிந்தும் ஒத்தாசை கேட்டாள். இவ்வளவுக்கும் இடையில் மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. 

சிந்தாமணி வருவாளென்று காத்திருந்த சின்னத்தங்கச்சிக்கு வாகீசனின் கடிதந்தான் வந்தது. ‘கண்மணி கர்ப்பிணி ஆகிவிட்டாள். இன்னுமிரண்டு மாதங்களில் அவளை ஊரில் கொண்டுவந்து விடுகிறேன். அதுவரை……’ பேரப்பிள்ளையை காணப்போகிறோமென்று குதுகலிப்பதா? பெற்ற பிள்ளையை காணோமேயென்று குழூறுவதா என்று தெரியவில்லைச் சின்னத்தங்கச்சிக்கு, பொறுப்போம்…. வரட்டும்’ என்கிற முடிவைத்தவிர வேறெதுவும் தென்படவில்லை, அவளுக்கு. 

கடைசியில் அவர்கள் மூவரும் வந்து சேர்ந்தார்கள். கண்மணி தாயைக் கண்டதும் களிப்புக் கடலில் மூழ்கினாள். இரண்டு மூன்று நாட்களின் பின் வாகீசன் திரும்ப வேண்டியிருந்தது. சிந்தாமணியும் பெட்டி படுக்கையை தயார் பண்ணுவதைக் கண்ட சின்னத்தங்கச்சி ‘என்னடி’ என்றாள். 

“அம்மா அத்தான் வரட்டுமாம், கொஞ்ச நாளைக்குத்தானே” என்றாள் சிந்தாமணி. 

சின்னத்தங்கச்சி புருவத்தை நெளித்த மாதிரியைப் பார்க்க வேண்டும்! அதில் நாணேற்றியிருந்தால் சிந்தாமணி சிம்பு சிம்பாகியிருப்பாளென்றுதான் தோன்றும். அவள் வாயைத் திறப்பதற்குள் எங்கிருந்தோ வாகீசன் வந்து சேர்ந்தான். 

ஏன் மாமி அவள் இங்கேயிருந்தால் உங்களுக்கு கஷ்டம் தானே என்னோடு வரட்டும்” என்றான். இருபத்து மூன்று வருஷங்களாக கஷ்டம் இல்லாமல் இப்போது என்ன வந்தது என்று அவளுக்கு கேட்கத் தோன்றியது. ஆனால் மருமகனுடன் மரியாதைக் குறைவாக பேச நேர்ந்தாலும் என்று போய் விட்டாள். 

தன் கணவனிடம் கேட்டீர்களா?, என்றாள். அவன் கேட்டாலும் சரிதான், கேட்காவிட்ாலும் ஒன்றுதான். கண்மணியிடமே நேரிற் கேட்டாள். அவள் “தடுக்காதீர்கள் அம்மா, போகட்டும்” என்றாள். சின்னத்தங்கச்சிக்கு கதைகளிலே கூட இப்படி நடக்காதே என்று தோன்றியது. 

மறுநாள் சிந்தாமணியும், வாகீசனும் கொழும்புக்குப் போனது உண்மை. இருதாரக் குற்றத்துக்குத் தண்டணையுண்டு சட்டப்புத்தகத்திலே. ஆனால் இது இருதார மணம்தானா? இதில் நடவடிக்கை எடுப்பது யார்? எப்படி? சுற்றிவளைத்துச் சொல்வானேன். சிந்தாமணியும் வாகீசனும் தெய்வீக உறவு பூண்டு வாழவில்லை தான். ஆனால் அதற்கு மீட்சி எது? மீட்சிமார்க்கமெது? 

தேவன் யாழ்ப்பாணம்

அமரர் தேவன் – யாழ்ப்பாணம் சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர். நாடக ஆசிரியர். மொழிபெயர்ப்பாளர். பேச்சாளர். வாடாமலர், கண்டதும் கேட்டதும் என்பன அவரது நாவல்கள். தென்னவன் பிரமராஜன் நூலுருப்பெற்ற நாடகம். அவருடைய சிறுகதைகள் தேவன் யாழ்ப்பாணம் சிறுகதைகள் என்ற தொகுப்பாக வெளிவந்தள்ளது. 

– 04.04.1959

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *