ஆறாத காயங்கள்!






பரந்தாமனின் வாழ்வில் இப்படியொரு உயர்ந்த நிலை வருமென கற்பனையிலும் நினைத்ததில்லை. ஏழைக்குடும்பத்தில் பிறந்து உணவுக்கே வழியின்றி வறுமை வாட்டிய நிலையில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதும் மனம் தளராமல் இருந்தார்.
வேலைக்கு சென்று குடும்ப செலவுக்கு, தந்தையின் மருத்துவ செலவுக்கு போக மீதமிருப்பதை சேமித்த நிலையில் சிறிய மளிகைக்கடை வைத்து நடத்தினார்.
தொழிலில் நல்ல வரவேற்பும், லாபமும் கிடைத்தாலும் சிறுவயதிலிருந்து தான் விரும்பிய மாயாவை மட்டும் கரம் பிடிக்க இயலவில்லை என்பது மட்டும் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருந்தது.
“சொந்தமா இருந்தாலும் டிகிரி படிச்ச பொண்ண மளிகைக்கடைக்காரனுக்கு குடுக்க முடியுமா? அரிசி, பருப்ப பொட்டலம் கட்டவா இவ்வளவு செலவு பண்ணி படிக்க வெச்சேன்? அவ இருக்கிற அழகுக்கும், அறிவுக்கும் நல்ல கம்யூட்டர் வேலைல மாசத்துக்கு லட்சத்துக்கு மேல சம்பளம் வாங்கிற லட்சணமான பையனை, அதுவும் வெளிநாட்ல இருக்கிற மாப்பிளையத்தான் தான் பாக்கோணும்” என தான் பெண் கேட்டு அனுப்பியவரிடம் பெண்ணின் தந்தை சொல்லி அனுப்பியது பரந்தாமனுக்கு வருத்தத்தைக்கொடுத்தது.
படிக்க விருப்பமிருந்தும் வறுமையால் படிக்க முடியாமல் போனதால் மனம் விரும்பிய பெண்ணை மணக்க முடியாமல் போய் விட்டதே என நினைத்து கண் கலங்கினார்.
மாயாவின் தந்தை எதிர்பார்த்தது போலவே மாயாவிற்கு அமெரிக்காவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை அமைந்தது. முதல் காதலை முற்றிலும் மனதை விட்டு அழிக்க முடியாது என்பது புரிந்தாலும் ‘மாயாவை திருமணம் செய்த மாப்பிள்ளையை விட ஒரு படி உயர்ந்து காட்ட வேண்டும் என உறுதியாக முடிவு செய்த பரந்தாமன் இரவு, பகல் பாராது கடுமையாக உழைத்தார்.
சாதாரண ஏழைக்குடும்பத்தில் பெண் கேட்டு வரதட்சணை எதுவும் வாங்காமல் திருமணம் செய்து கொண்டார்.
ஆண், பெண் என குறையின்றி குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளை அதிக கட்டணத்தில் சிறந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். குழந்தைகளும் அதற்கேற்ப படிப்பில் சிறந்து விளங்கினர்.
மகனுக்கு படிப்பு முடிந்ததும் ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தது. தந்தைக்கேற்ற தனயனாக சிறப்பாக வேலை செய்ததோடு, மேலும் படித்து தனது நிலையை உயர்த்தியதால் சிஈஓ லெவலுக்கு உயர்ந்தவன், தனது புதிய மென்பொருள் கண்டு பிடிப்பால் அமெரிக்காவில் இருந்த தான் வேலை பார்த்த கம்பெனிக்கே பங்குதாரராகி அதிக லாபங்களை ஈட்டினான். பிறந்த ஊரில் அரண்மனை போன்ற வீட்டைக்கட்டி புண்ணிய அர்சனைக்கு ஹெலிக்காப்டரில் சென்று ஊரிலேயே இறங்கினான்.
பரந்தாமனின் மகன் கம்பெனியில் தான் மாயாவின் கணவர் வேலை செய்கிறார். தனது கணவரது முதலாளி நாம் திருமணத்துக்கு ஏற்காமல் நிராகரித்தவர் மகன் என்பதை அறிந்த போது அதிர்ச்சியடைந்தாள். தனது ஒரே மகளை பரந்தாமன் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டால் நாமும் முதலாளியாகி விடலாம் என யோசித்து உறவுகள் மூலம் வலை வீசினாள்.
“பத்தாயிரம் கோடி மதிப்புள்ள இந்தக்கம்பெனியோட முதலாளி நான் இல்லை. தமிழ்நாட்டுல இருக்கிற சின்ன கிராமத்துல ஒரு சாதாரண மளிகைக்கடைக்காரர். அதிகமா உங்களை மாதிரி படிக்காதவர். அழுக்குத்துணியோட வேலை செய்யள அவரைப்பார்க்கவே உங்களுக்கு பிடிக்காது. டிகிரி லெவல்ல படிச்சிட்டு அமெரிக்காவுல லட்சக்கணக்குல சம்பளம் வாங்கிற உங்க குடும்பத்துல பெண் எடுக்கிற தகுதி அவருக்கு இல்லேன்னு நினைக்கிறேன். சம தகுதி பார்க்கிற நீங்க உங்க தகுதிக்கேத்த மாதிரி வரன் பார்க்கிறது தான் நல்லது” என பரந்தாமனின் மகனும் கம்பெனி முதலாளியுமான வருண் கூறிய போது தலை கவிழ்ந்து கைகட்டி நின்றாள் மாயா.
‘எனது தந்தையை மதிக்காத உங்களை நானும் மதிக்க மாட்டேன். ஆனாலும் உங்களது தந்தையைப்போல மற்றவர்கள் மனம் புண்பட மதிக்காமல் பேசி அனுப்பாமல், நான் சாதாணமானவனின் மகன் என்பதால் உங்களது தகுதிக்கு இணையான தகுதி எனக்கில்லை’ என நேரடியாக பேசாமல், மறைமுகமாக பழையதை ஞாபகம் வர வைத்து செஞ்சு அனுப்பியதில், பரந்தாமன் தன்னைப்பெண் கேட்டு தந்தை இல்லையென சொன்னபோது அவருக்கு வலித்தது தற்போது மாயாவிற்கும் வலித்தது.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |