ஆட்டின் வால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 12 

காளி கோயிலுக்கு முன்னால் ஓர் ஆடும் ஒரு மாடும் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடு மாட்டைப் பார்த்தது. மாடு ஆட்டைப் பார்த்தது. ஆடு மாட்டின் வாலைப் பார்த்து, “இதற்கு வால் எவ்வளவு அழகாய் இருக்கிறது! நுனியில் குஞ்சம் கட்டினது போலல்லவா இருக்கிறது!” என்று வியந்தது. மாடோ ஆட்டின் வாலைப் பார்த்து, “எவ்வளவு அழகாக, சின்னதாக இருக்கிறது; நமக்குத்தான் எவ்வளவு நீளமான வால்?” என்று எண்ணியது, ஒவ்வொன்றும், “நமக்கு அந்த மாதிரி வால் இருந்தால்?” என்று ஏங்கியது.

⁠இரண்டும் ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டு “இந்தக் காளியை நோக்கித் தவம் புரிவோம். கம் வால்களை மாற்றிக் கொள்வோம்” என்று சொல்லித் தவம் புரிந்தன. காளியின் அருளால் ஆட்டுக்கு மாட்டின் வாலும், மாட்டுக்கு ஆட்டின் வாலும் வந்துவிட்டன. இரண்டு பிராணிகளுக்கும் ஒரே ஆனந்தம்.

⁠ஒரு வாரம் ஆயிற்று முன்பெல்லாம் மாடு தன் முதுகில் ஈ வந்து உட்கார்ந்தால் தன் நீண்ட வாலினாலேயே அவற்றை ஒட்டும். இப்போது அப்படி ஈ உட்கார்ந்தால் தன் குட்டையான வாலை ஆட்ட முடிந்ததே அன்றி ஈயை ஒட்ட முடியவில்லை: என்னடா இது? சங்கடமாக இருக்கிறதே!’ என்று எண்ணியது.

⁠ஆடு முன்பெல்லாம் முள் வேலிப் பக்கத்தில் போய் மேயும். அந்த வேலியைத் தாண்டிப்பாயும் பழைய நினைவோடு இப்போதும் வேலியைத் தாண்டியது. இப்போது வால் வேலியில் அகப் பட்டுக் கொண்டது அதை மெல்ல எடுப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது. “ஏண்டா இந்தவாலை வாங்கிக் கொண்டோம்?” என்று முணுமுணுத்தது.

⁠கடைசியில் ஒரு நாள் காளி கோயில் முன் அவைஇரண்டும் மீண்டும் சந்தித்தன. “தம்பி, எப்படி இருக்கிறாய்?” என்று மாடு ஆட்டை விசாரித்தது. “அண்ணே, நீ எப்படி இருக்கிறாய்?” என்று ஆடு மாட்டை விசாரித்தது.

⁠”அப்பப்பா! உன் வாலை நான் வைத்துக் கொண்டது தப்பாகப் போயிற்று. முதுகில் ஈ அமர்ந்தால் ஒட்ட முடியவில்லை. இதை வைத்துக்கொண்டு நீ எப்படித்தான் காலம் கடத்தினாயோ தெரியவில்லை” என்று வருத்தத் தோடு மாடு சொல்லியது.

⁠”ஆமாம் அண்ணே! உன் வாலை வைத்துக் கொண்டு நான் படுகிற பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல. வேலியைத் தாண்ட முடியவில்லை. வால் எதிலாவது சிக்கிக்கொண்டால் படாத பாடு படுகிறேன். அவரவர்களுக்கு ஆண்டவன் எதெது கொடுத்திருக்கிறானோ, அது தான் சரி” என்றது ஆடு.

⁠”ஆமாம் தம்பி, ‘ஆட்டுக்கு வாலை அளந்து தான் வைத்திருக்கிறான்’ என்று சொல்கிறார்களே, அது எவ்வளவு சரியென்று இப்போது தான் தெரிகிறது” என்றது மாடு.

“சரி, நாம் இருவரும் இந்தக் காளியை வேண்டிப் பழையபடியே நம் வால்களைப் பெற்றுக்கொள்வோம்”என்று சொல்லி,இரண்டும் தவம் இருந்து இரண்டும் பழையபடியே தம் வால்களைப் பெற்றுக்கொண்டன.

– தேன் பாகு (சிறுவர் கதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1991, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

Ki.Vaa.Ja கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *