அவனும் சில வருடங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 98 
 
 

(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம் – 22

அதிபரிடமிருந்து இன்னொரு கடிதம் வந்திருந்தது. மிஸ் வேர்ஜினியா பாமஸ்ரனின் கடிதத்திற்கு ராகவன் பதில் எழுதாத படியால் தன்னை வந்து பார்க்கச் சொல்லி எழுதியிருந்தார். 

கடிதத்தைப் படித்தபின் யோசிக்கும் தமயனை உற்றுப் பார்த்தாள் மைதிலி. 

“அண்ணா எடுத்த விடயத்தை முடிப்பது உனது கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. அந்த அருமையான கொள்கைக்கு என்ன நடந்தது!” 

ராகவன் கேள்வி கேட்கும் தங்கையை அன்புடன் பார்த்தான். மைதிலியைச் சந்தோசப்படுத்தவாவது கல்லூரிக்குப் போக வேண்டும். அவளின் பாசத்தின் வேண்டுகோள், புவனாவின் இந்திராவின், தியாகராஜா மாமாவின், கணேசின் வேண்டுகோள்களை அவன் அறிவான். 

ஸ்ரீவனுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் அவன் மறக்கவில்லை. 

வாழ்க்கையே அழிந்து விட்டது என்ற விரக்தியாயிருந்த அன்ரோனியோவே இறுதி வருடப் படிப்பிற்குத் தன்னைத் தயார் செய்கிறான். 

ராகவன் ஏதோ ஒரு உறுதியுடன் கொலிச்சுக்குப் போனான். கல்லூரிக் கட்டிடம் பதினான்கு மாடியுயரத்தில் பிரமாண்டமாக இவனை வரவேற்றது. ஒரு சில மாதங்களாக இந்த உலகத்தைப் பிரிந்திருந்தது வியப்பாக இருந்தது. 

கதவைத் திறந்தவுடன் கண்ணிற் தென்பட்டவன் மைக்கல். 

கல்லூரி வாழ்க்கையை அநியாயமாக முடித்துக் கொண்டான் என்று நினைத்திருந்த மைக்கலைக் கல்லூரியிற் கண்டது ராகவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

“உனது தமக்கை குடும்பத்தினரின் துயருக்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள்” மைக்கல் ராகவனின் தோளைத் தட்டிச் சொன்னான். 

“நீ கல்லூரியை விட்டு விட்டதாகக் கேள்விப் பட்டிருந்தேன்” 

“ஆமாம்…. போலிஸாருடன் நடந்த விடயங்களால் அவமானம் தாங்காமல் கல்லூரிப் பக்கம் வரவில்லை”. 

மனம் திறந்து சொன்னான் மைக்கல். 

”ஜான் ரொம்பவும் அக்கறையாகப் புத்தி சொல்லி என்னை மீண்டும் கல்லூரிப் படிப்பைத் தொடர உதவி செய்தார்” மைக்கலின் குரலில் உண்மையான நன்றி. 

“அந்த அருமையான மனிதன் இல்லாவிட்டால் இந்த பிலிம் கொலிச்சிலிருந்து எத்தனையோ பேர் ஓட்டம் எடுத்திருப்போம்”. 

ராகவன் சொல்லிக் கொண்டே லிப்டில் நுழைந்தான். ஞாபகங்கள் எங்கேயோ தொலைந்தன. இந்த லிப்ட்டிற் தானே அவனுடன் விதி விளையாடத் தொடங்கியது. எத்தனையோ மாதங்களுக்குப் பின் பிலிம் டிப்பார்ட்மென்ட்டுக்குள் நுழைய மனம் என்னவோ செய்தது. 

முதலாம் வருட மாணவர்கள் சுறுசுறுப்பாகத் சிரித்தார்கள். இரண்டாம் வருட மாணவர்கள் எடிட்டிங் ரூம், சவுண்ட் ஸ்ருடியோ, என்று அலைந்து கொண்டிருந்தார்கள். 

அதிபர் ஜான் பேர்ன்ஸ்ரைனின் கதவடிக்குப் போகும் போது அடிவயிற்றில் பூச்சி நெழிவது போலிருந்தது. 

கதவைத் தட்டக் கையெடுத்தபோது அவரே வெளியே போக வந்து கொண்டிருந்தார். 

“ஹலோ கம் இன்’ அவர் திரும்பவும் போய்த் தன் இருக்கையில் அமர்ந்தார். 

காலை பதினொரு மணி வெயில் ஜன்னலால் அத்துமீறி நுழைந்து அதிபரின் பொன்நிறத் தலை மயிரை பளபளக்கப் பண்ணிக் கொண்டிருந்தது. 

ஆழமான நீல விழிகள் ராகவனைத் துளைத்தெடுத்தன. இருக்கச் சொல்லி சைகை செய்தார். 

ஜன்னலுக்கப்பால் தூரத்தில் பிரித்தானிய பாராளுமன்றம் உயர்ந்து நின்று தன் பெருமையைக் காட்டிக் கொண்டிருந்தது. தேம்ஸ் நதி இதமாக இளம் வெயிலுடன் சரசம் பண்ணுவது போல் மெல்லத் தவழ்ந்து கொண்டிருந்தது. 

“உம், என்ன பிளான், கல்லூரியை விடுவதாக யோசனையா” 

வர் குரலில் கடுமை, அதைப் பார்த்தத் தர்ம சங்கடமாக இருந்தது. 

அவரைப் பார்க்கத் தயக்கமாக இருந்தது. 

“பிலிம் கொலிச்சுக்கு வருவதென்பது கமராவைத் தூக்குவது, சவுண்ட் எடிடிங் செய்வதுமட்டுந்தான் என்று நினைப்பது முட்டாள்தனம். எங்கள் ஒவ்வொருத்தரின் வாழ்க்கையும் ஒவ் வொரு தொடர்கதை, அதை விடுகதையாக்கும் வீண் கற்பனைகள் உன்னை எங்கும் கொண்டு சேர்த்து விடும் என்று நினைக்கிறாய்” 

ஒரு சில வாரங்களுக்கு முன் அவர் குரலிலிருந்து அனுதாபம் இல்லை. அதிபர் என்ற தோரணம் வெளிப்பட்டது. 

“தோல்விதான் எனக்குச் சரியானது என்று சஙகற்பம் செய்பவர்களை என்போன்ற அதிபர்களால் ஒன்றும் செய்ய முடியாது. வாழ்க்கையில் முன்னேற ஆசையிருந்தால் உதவி செய்கிறேன்”. 

அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். 

“இறுதி வருடத் தயாரிப்புகளுக்கான திட்டங்களைச் சமர்ப்பிக்கும் காலக் கெடு முடிந்து விட்டது உனக்குத் தெரியுமா” 

அவன் ‘ஆமாம்’ சொல்லத் தலையாட்டினான். அவருக்கு எரிச்சல் வந்திருக்க வேண்டும். எழும்பிப்போய் ஜன்னலருகில் நின்றார். அவனிடம் தன் கோபத்தைக் காட்டாக் கூடாது என்பதற்காக அப்படிச் செய்கிறார் என்று தெரியும். அவனுக்கு முதுகுப் பக்கத்தைக் காட்டிக் கொண்டு ஜன்னலுக்கப்பால் பார்வையைப் பறித்துக் கொண்டு கேட்டார். 

“அக்காவின், அம்மாவின் நிலைமையால் மட்டும்தான் நீ கல்லூரிக்கு வராமலிருப்பதற்குக் காரணமா” நீதிபதி குற்றவாளியிடம் கேள்வி கேட்ட தோரணை அவனுக்குச் சுரீர் என்றது. 

அவர் அவன் அண்மையில் வந்தார். அழுத்தமான குரலில் சொன்னார், “காதலும் செக்ஸும் வாழ்க்கையில் ஒரு பகுதி, அவைகளே வாழ்க்கையல்ல” அவர் குரல். 

ராகவன் குறுகிப் போனான். டெவீனாவைப் பற்றி யார் சொல்லியிருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியாது. 

”டெவீனா” அதிபரின் குரல் உயர்ந்தது. அடுத்த அறையிலிருந்து டெவீனா வந்தாள். 

அக்டோபர் மாதத்தின்பின் அவன் அவளைக் காணவில்லை. மிகவும் மெலிருந்திருந்தாள். ‘சுட்டும் விழிச்சுடர் தான் சூரிய சந்திரரோ’ என்று பாரதியின் வர்ணிப்புக்கு வரைவிலக்கணமான அவளின் அழகிய விழிகளில் துயரக் கறை. 

“நீங்கள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். இரண்டு மணி லெக்ஸருக்கு வந்தால் சந்தோசப்படுவேன்” அதிபர் வெளியேறி விட்டார். 

அவளும் அவனும் முன்பின் தெரியாதவர்கள் போல் ஒதுங்கி நின்றனர். சட்டென்று நடுப் பாலைவனத்தில் நிற்பது போன்று அவன் உடம்பு கொதித்தது. அவளின் மெலிந்த தோற்றத்தைக் கண்ட பரிதாபம் மறைந்தது. பிலிப்புடன் அவளைக் கண்ட ஞாபகம் இரத்தத்தைக் கொதிக்கப் பண்ணியது. 

மௌனமான அந்த சில வினாடிகள் மயான அமைதியுடன் ஒரு யுகத்தைக் கழித்தது போலிருந்தது. 

“உனது தமக்கையின்…” அவள் குரல் கரகரத்தது. அவனால் அவளை நேரடியாகப் பார்க்க முடியவில்லை. “உனது குடும்பத்தில் நடந்த துயருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்”. 

நாகரீகமான ஆங்கிலேயப் பெண் நமக்குள் ஒன்றும் நடக்கவில்லையே என்பது போல் சொல்கிறாயா? 

தன்னைக் காதலித்தவளாக அவள் அவனுக்குத் தெரிய வில்லை. மிஸ்டர் ஸேர்லிங் என்ற இங்கிலிஸ் பணக்காரனின் மகளாகத் தெரிந்தாள். 

“என்ன நீ இப்படிக் கேவலமாக நடத்துவதை நான் அனுமதிக்கத் போவதில்லை” அவள் குரலில் இப்போது சூடு. 

“உனக்கு என்னைப் பிடிக்காவிட்டால் நான் போய் விடுகிறேன், அதற்கு முதல் சில விடயங்களைச் சொல்லி விட்டுப் போகிறேன். என்னிலுள்ள கோபத்தில் அருமையான எதிர்காலத்தைப் பாழாக்குவது முட்டாள் தனம், ஒரு பெண்ணிடம் முகம் கொடுக்க முடியாமல் ஓடும் ஆண்கள் கோழைகள் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரியும், நீ கல்லூரிக்கே வராமலிருந்தற்குக் காரணம் உனது தமக்கையின் மரணம் மட்டுமல்ல நானும்தான் காரணம், ஆனால் என்னைப் பற்றி நீ மிகவும் அற்பத்தனமாய் உணர்ந்து கொண்டாய் என்பதை நினைக்க உன்னோடு பழகியதற்காக வெட்கப் படுகிறேன்”. 

அவள் மேடையில் ஏறி நின்று பிரசங்கம் செய்வது போல் பேசிக் கொண்டிருந்தாள். 

என்ன பேசுகிறாள்? ‘உன்னை உயிருக்கும் மேலாக நேசிக் கிறேன்’ என்றவளை இன்னொருத்தன் அணைப்பில் கண்ட போது எந்தச் சாதாரண மனிதனும் அவமானப்படுவது எதிர்ப் பார்க்கப் படவேண்டியதில்லையா? 

அவன் குழம்பி விட்டான்? என்ன சொல்கிறாள் இவள்? தகப்பனுக்காக பிலிப்பைக் கல்யாணம் செய்வது என்று முடிவு செய்து விட்டாளா? அல்லது இறக்க முதல் பிலிப்புடன் சேர்ந்து கொள் என்று வாக்குறுதி வாங்கினாளா தாய்? 

பிலிப்பின் அணைப்பில் இருப்பதற்கு ஏதோ ஆழமான காரணம் இருந்திருக்க வேண்டும். 

”கண்ணால் கண்டதும் பொய், காதாற் கேட்டதும் பொய் தீரவிசாரித்தறிவதே மெய் என்பது உனது நினைவில் வரவில்லையா” 

அவள் கண்களில் நீர் சுரந்தது. 

ஜன்னலோரம் போய்த் தன் அழுகையை மறைத்துக் கொண்டாள். 

அவளது அழுகை அவனை இரங்கப் பண்ணவில்லை. ஆனாலும் வார்த்தைகளைக் கொட்டி நிலைமையைக் குழப்ப விரும்பவில்லை. “உனது தாயின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” அவன் பேச்சைத் தொடங்கினான். 

அவள் சாடையாகத் திரும்பிப் பார்த்தாள். 

‘என் தமக்கை குடும்பம் அழிந்த செய்தி கேட்டு அந்தத் துயர் மறக்க உன்னிடம் வந்தால் நீ இன்னொருத்தன் அணைப்பிலிருந்தாய், அதை எப்படி தாங்குவேன்’ அவன் இதைச் சொல்ல நினைத்தான் சொல்ல முடியவில்லை. துயர் தொண்டையை அடைத்தது. ‘நான் உனக்கு அலுத்து விட்டிருந்தால் அதைக் கௌரவமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே! ஒரு சில வாரங்களுக்கிடையில் என்னை மறந்து விட்டு இன்னொருத்தனுடன் போக உனக்கு எப்படி மனம் வந்தது. இதுதான் உனது கலாச்சாரமா’ என்று அலற நினைத்தான். 

அப்படி எல்லாம் கேள்வி கேட்க நினைத்தால் உணர்ச்சிவசப்பட்டு ஏதும் நடந்தாலும் என்று தன்னையடக்கிக் கொண்டான். 

“உன்னைத் துன்பப் படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்.” 

அவன் சட்டென்று வெளியேறினான். இன்னும் சில வினாடிகள் அவளுடன் அந்த அறையில் தனியாக இருக்க நேர்ந்தால் ஏதும் எக்கச்சக்கமாக நடக்கலாம் என்று பயந்தான். 

வெளியில் வரும்போது பிலிப் தூரத்தில் யாருடனோ சிரித்துப் பேசியது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் இருந்தது. 

இவர்களைச் சந்தித்துக் கொண்டு எப்படி இந்தக் கல்லூரிக்கு ஒவ்வொரு நாளும் வருவது? 

தெளிவாக யோசிக்க முடியாத உணர்வு. அலானும் ஜேனும் ஸ்ருடன்ஸ் ரூமில் இவனைக் கண்டதும் சந்தோசத்துடன் கட்டிக் கொண்டார்கள். அவர்களின் ஸ்நேகிதத்தின் பரிவு அவனைச் சந்தோசப்படுத்தியது. ஸ்ரீவன் வந்திருந்தான். மிக மிக மெலிந்திருந்தான். ஆனாலும் அவன் முகத்தில் ராகவனைக் கண்டதும் சந்தோசம். 

“எனக்குத் தெரியும், நீ உனது வாக்குறுதியை நிறைவேற்றுவாய் என்று. என்ன கமரா ‘புக்’ பண்ணலாம். இப்போதே எல்லாம் தயாராய் இருக்கா விட்டால் இன்னும் சில வாரங்களில் கொலிச் ஸ்ரொக் எல்லாம் முடிந்துவிடும்.” 

ஸ்ரீவன் சந்தோச ஆரவாரத்துடன் சொன்னான். 

அன்று இரண்டு மணிக்கு லெக்ஸர் ஹாலில் ராகவனைக் கண்டதும் அதிபரின் முகத்தில் ஒரு சந்தோசம் வந்து போனதை அவன் அவதானித்தான். கடந்த இரண்டு வருடங்களாக டெவீனாவுடன் சேர்ந்திருப்பவன் இப்போது போய் மைக்கலுடன் உட்கார்ந்தான். அன்று பிரன்ஸ் சினிமா பற்றிய விரிவுரை நடந்தது. 

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை பிரன்ஸ் சினிமாவின் வளர்ச்சி பற்றி அதிபர் விரிவுரை செய்தார். 

வழக்கம்போல் அவர் பேச்சு ஒரு மையத்திலிருந்து சுற்றிச் சுற்றிப் பல விடயங்களை உள்ளடக்கியிருந்தது. 

பிரான்ஸ் சினிமா உலகின் மாமேதை என்று மதிக்கப்ப டும் றெனோர் (Renor) பற்றி நீண்ட நேரம் பேசினார். 

பிரான்ஸ் சினிமா உலகத்தில் மட்டுமல்லாமல் அவர் தொடர்பால் இந்திய டைரக்டர் சத்யத்ரே என்போர் புதிய சினிமாக் கண்ணோட்டத்தை வளர்த்தார்கள் என்பதை விரிவாகச் சொன்னார். 

பேச்சின் கடைசியில் மூன்றாம் வருட மாணவர்களுக்குத் தன் புத்திகளையும் மறைமுகமாக எச்சரிக்கைகளையும் சொன்னார். 

“மூன்று வருடப் படிப்புக்கு நீங்கள் இவ்விடம் வந்த போது கமராவை எப்படி இயக்குவது, ஒலியை எப்படி வெட்டி ஒட்டுவது, லைட் அமைப்பை எப்படிப் பார்ப்பது மட்டும்தான் சினிமாப் படிப்பு என்று நினைத்துக் கொண்டு வந்திருந்தால் இன்று உங்கள் மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் போது அந்த நினைவுகள் பிழை என்று தெரிந்திருக்கும். ஒரு சிலர் தாங்கள் படிக்க வந்த படிப்பை முடித்துக் கொண்டு வெளியேறுவோம் என்று வந்தீர்கள், சிலர் இந்த மூன்று வருடத்தில் எத்தனை அனுபவங்கள் வருகின்றதே, அத்தனையையும் அனுபவித்து முடிப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு சிலர் ஏதோ தானோ என்று மச மசப்பாக இருக்கிறீர்கள். யாரையும் தனிப்பட்ட முறையில் நான் தாக்கவில்லை. ஆனாலும் எனது அனுபவத்தில் உங்களிடம் கண்டதைச் சொல்கிறேன். உங்களின் இறுதி வருடப் படிப்புக்கு எனது வாழ்த்துக்கள்.” 

அவர் பேசி முடிய ஜேனின் கண்களில் நீர் துளித்தது. ஒரு அதிபர் என்ற முறையில் மட்டுமல்லாமல் ஒரு சகோதரனாய் சினேகிதனாய் தங்களுக்குச் செய்யும் சேவை எல்லோரும் அறிந்ததே. 

“அவரின் அன்பில்லாவிட்டால் எங்களில் எத்தனையோ பேர் இப்போது லண்டன் தெருக்களில் வேறு வேலை தேடிக் கொண்டிருப்போம்.” உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னாள் ஜேன். 

ராகவன் இன்னும் இறுதியாண்டுத் தயாரிப்புக்கான திட்டங்களைச் சமர்ப்பிக்கவில்லை. சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் மார்கழி மாதக் கடைசியில் முடிந்து விட்டது. இது பற்றி மிஸ் வேர்ஜினியா பாமஸ்ரோன் அவனுக்கு எழுதியும் அவன் இன்றும் பதில் எழுதவில்லை. 

நீண்ட நாட்களின் பின் இன்று கல்லூரிக்கு வந்திருக்கின்றான். அவனிடமிருந்து திட்டம் எதிர்பார்க்கப் படுகிறது என்பது அவனுக்குத் தெரியும். 

கடுமையான உழைப்பு இல்லாவிட்டால் தனது இறுதி வருடப் படிப்பு தோல்வியிலேயே முடியும் என்று அவனுக்குத் தெரியும்.மைதிலியும் புவனாவும் அதைத் தாங்க மாட்டார்கள். 

ஒரு சில மாணவர்கள் இப்போதே தங்கள் தயாரிப்புக்கான முயற்சிகளில் இறங்கிவிட்டார்கள். டெவீனா தனது தயாரிப்பை கென்யா நாட்டில் செய்வதாக எப்போதோ சொல்லியிருந்தாள். 

அலான் பார்டோ தனது தயாரிப்புக்காக பிரான்ஸ் செல்கிறான்.  

விரிவுரை மண்டபத்தை விட்டு அன்ரோனியோவுடனும் மைக்கலுடனும் வெளியேறும்போது தூரத்தில் டெவீனா ஜேனுடன் ஏதோ மிகவும் காரசாரமாக விவாதிப்பது தெரிந்தது. 

அன்ரோனியோ தனது நண்பனைப் பார்த்தான். ‘ஏன் டெவீனாவுடன் கோபமா’ என்று அவன் பார்வையின் கேள்வியாக இருந்ததை ராகவன் அவதானித்தான். 

மைதிலி இன்று வீட்டுக்கு வர லேட்டாகும். அவள் தனது சீனிய வழக்கறிஞருடன் மான்ஸெஸ்டர் நகருக்கு ஒரு வழக்கு விடயமாகப் போய் விட்டாள். 

அன்ரோனியோவுடன் தனது தயாரிப்பு விடயம் பற்றிப் பேச அவனது பிளாட்டுக்குப் போனான் ராகவன். மைக்கலும் வந்தான்.அவர்கள் முதலாவது மாணவர்களால் இருக்கும் போது ஒருத்தருக்கொருத்தர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கௌரவப் படுத்தினார்கள். 

ராகவனின் தயாரிப்புக்கு டெவீனா கமரா வேலை செய்வ தாகவும், மைக்கல் சவுண்ட் செய்வதாகவும், ஸ்ரீவன் லைட்டிங் செய்வதாகவும் அன்ரோனியோ ஸ்கிரிப்ட் எழுதுவதில் உதவி செய்வதாகவும் அவானும் ஜேனும் எடிட்டிங்கில் உதவி செய்வதாகவும் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். 

அதே போல ராகவனும் தனது உதவியைத் தனது சகமாணவர்களுக்குச் செய்வதாகச் சொல்லியிருந்தான். டெவீனா கென்யா போவதால் பிலிப்புடன்தான் அவள் போவாள் என்று சொல்லி யிருந்தாள். டெவீனாவின் தகப்பனைப் போல் பிலிப்பின் மாமனாரும் கென்யா நாட்டில் தேயிலைத் தோட்டம் வைத்தி ருக்கும் முதலாளியாகும். ஆனால் டெவீனாவின் தயாரிப்பின் எடிட்டிங்குக்குத் தான் உதவி செய்வதாக சொல்லியிருந்தான். 

இது பற்றி அவளிடம் எப்படிப் பேசுவது என்று தெரிய வில்லை. மரபுப்படி மூன்றாம் வருட மாணவர்களுக்கு இரண்டாம் வருட மாணவர்கள் உதவி செய்வார்கள். அந்த மாதிரி யாரின் உதவியையும் டெவீனா பெறப் போகிறாளோ என்பது ராகவனுக்குத் தெரியாது. 

“என்ன பெரிய யோசனை? டெவீனாவுக்கும் உனக்கும் பிரச்சினையா” அன்ரோனியோ நேரடியாக விடயத்திற்கு வந்தான். ஆங்கிலேயர் மாதிரி எதையும் கௌரவமாகப் பேச முனைவார்கள். ஆனால் அன்ரோனியோ இத்தாலியன், நேரடியாக விடயத்திற்கு வந்தான். 

”ஒரு பிரச்சினையுமில்லை” அப்பட்டமான பொய்யைச் சொன்னான் ராகவன். தனது சினேகிதனுக்குப் பொய் சொல்ல வேண்டிய தர்ம சங்கடத்தை யுணர்ந்தான். 

“காதலர்களின் ஊடலா?” அன்ரோனியோவுக்கு இவர்களின் பிரச்சினையின் ஆழம் தெரியாதபடியால் அவன் வேடிக்கையாகக் கேட்டான். 

”அன்ரோனியோ தயவு செய்து நாங்கள் எனது ஸ்கிரிப்ட் பற்றிப் பேசுவோமா” 

ராகவின் குரலிலிருந்த கடுமை அன்ரோனியோவை மௌனமாக்கியது. 

லண்டனில் அகதிகளாக வரும் தமிழர்களின் நிலை பற்றித் தான் ஒரு சிறு டாக்குமென்ரரி தயாரிக்க நினைப்பதாகச் சொன்னான் ராகவன். 

“உனது தயாரிப்பு எது பற்றியது” அன்ரோனியோ கொடுத்த மூலிகைத் தேனீரைச் சுவைத்தபடி கேட்டான் ராகவன். 

கொக்கேய்ன், ஹேரோயின், விஸ்கி எல்லாவற்றையும் விட்டாயிற்று. இப்போது மூலிகைத் தண்ணீர்கள் மூலம் தனது உடலையும் உள்ளத்தையும் சுத்தி கரிப்பதாகச் சொன்னான். அன்ரோனியோ முகமும் மலர்ச்சியாக விருந்தது. அவனது மாற்றம் சந்தோசமாக இருந்தது. 

“இதோ எனது ஸ்கிரிப்ட்” அன்ரோனியோ உற்சாகத்து டன் கொடுத்தான். 

அவனது தயாரிப்பின் பெயர் ‘நான்’. 

கொடுத்த ஸ்கிரிப்டில் ‘நான்’ பற்றி ஒன்றுமில்லை. சூரியலிசப் படம் பார்ப்பது போலிருந்தது. அவனது ஸ்கிரிப்டைப் படிக்கும்போது, 

ராகவன் குழப்பத்துடன் நண்பனைப் பார்த்தான். “பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறாயே” ராகவன் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான். 

“ஆமாம் நாங்கள் ஒவ்வொருத்தரின் ‘நான்’ என்ற அகதியை இயக்குபவர்கள் பெண்கள் தானே? பெண்களில்லா விட்டால் நீயும் நானும் பிறந்திருக்க முடியுமா? அவர்களின் அன்பு இல்லாவிட்டால் உலகம் உய்யுமா? என்னைப் பொறுத்தவரையில் பெண் அன்பின் முழுமையைத் தெரியாதவன்தான் மகா அயோக்கியன்களாக கொலைகாரர்களாக, போர் விரும்பிகளாக, போக்கிரிகளாகத் திறிகிறார்கள் என்று நினைக்கிறேன்.” 

அன்ரோனியோ ஆவேசமாகப் பேசினான். 

ராகவன் நண்பனையுற்றுப் பார்த்தான். ஒரு கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை பெண்கள் என்போர் மாயப் பிசாசுகள் என்று திட்டிக் கொண்டிருந்தவன் என்னவென்று மாறினான்? 

அத்தியாயம் – 23

அன்று கல்லூரித் திரைப்பட அரங்கில் ‘சிட்டிஸன் கேன்’ (Citizen Kane) என்ற அமெரிக்கப் படம் திரையிடப்பட்டது. பின்னேர விவாத மேடைக்குச் சில நேரம் உலகில் பிரபலமான படங்கள் திரையிடப்படும். 

“சிட்டிஸன் கேன் 1941ம் ஆண்டு திரையிடப்பட்ட அமெ ரிக்கன் பிலிம் இந்தப்படம், ஓர்ஸோன் வேல்ஸ் (Orson Welles) என்பவராற் தயாரிக்கப்பட்ட மிக முக்கியமான படம் இந்தப் படத்திற்கு இதுவரை எழுதப்பட்ட விமர்சனம் உலகில் எந்தப் படத்திற்கும் எழுதப்படவில்லை. இந்தப் படம் திரைப்படத் தொழில் நுட்பத்தின் ஆழத்தைக் கமராவின் மூலமும், ஆழ மான கருத்துக்களை எப்படி ஒரு ஒளிப் படைப்பின் மூலமும் கொண்டு வரலாம் என்பதையும் காட்டுகிறது. கதையைப் பார்த்தால் இதுவரை நீங்கள் பார்த்த படங்களுக்கு எதிரான நரேற்றில் முறையைக் கொண்டிருப்பதைக் காணலாம். அடுத் தது இந்தக் கதை அமெரிக்கன் வாழ்க்கையை உவமைப்படுத்தி எடுத்த கதை (metaphor) என்பது அறிவாளர்களின் கருத்து” விவாதத்தைத் தொடங்கி வைத்த மிஸ் வேர்ஜினியா பாமஸ் ரோன் சொன்னாள். 

வழக்கமாக ஐந்து மணிக்கு விழுந்தடித்துக் கொண்டு வெளியேறும் மாணவர்கள் அன்று இரவு ஏழரை மணிவரையு மிருந்து படத்தின் பல கோணத்தையும் ஆராய்ந்தார்கள், விவா தித்தார்கள், பூரித்தார்கள். 

வெளியில் வரும்போது ஜேனும் டெவீனாவும் அந்தப் படத்தின் கதாநாயகன் கடைசியாகச் சொல்லிவிட்டு இறந்த சொல்லை வைத்துக்கொண்டு தர்க்கம் செய்து கொண்டிருந்தார் கள். 

கதாநாயகன் ‘றோஸ் பட்’ (Rose bud) என்று சொல்லி விட்டு இறக்கிறான். 

அன்ரோனியோ ஞாபகம் வந்தது. பெண்மைக்குள் பிறந்து, பெண்மைக்குள் புகுந்து பெண்மைக்குள் அழியும். ‘நான்’ களில் சிட்டிஸன் கேன் என்பவனும் ஒருத்தன் என்று முணு முணுத்துக் கொண்டான் ராகவன். 

“Rose bud! பெண்மையின் சொர்க்கத்தின் சிகரம்” ஜேன் சத்தம் போட்டுத் தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தாள். 

“ரோஜாவின் மொட்டு என்று அவன் உவமித்த பெண்மை யின் சொர்க்கத்தின் பரிவிடம் பற்றி ஒரு ஆணுக்கு என்னென்று தெரியும்” ஜேனின் கேள்வி ராகவனுக்குச் சிரிப்பைத் தந்தது. 

அவர்களைத் தாண்டிப் போகும்போது டெவீனா ஜேனுடன் பேசியதை நிறுத்திவிட்டு இவனைப் பார்த்தாள். 

அந்தப் படம் உண்டாக்கிய உணர்ச்சிகளின் நெகிழ்ச்சி அவள் கண்களில் பிரதிபலித்தது. 

”உன்னுடன் கொஞ்சம் பேச முடியுமா” டெவீனா சட்டென்று இவனைக் கேட்டாள். 

ஒரு கணம் ஆடிப் போனாலும், “நானும் கொஞ்சம் உன்னோடு பேச வேணும்” அவன் அமைதியாகச் சொன்னான். இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்கள். 

“எங்கேயாவது வெளியே போவோமா” அவள் பார்வை இவனிற் பதிந்திருந்தது. 

இவர்களுக்கிடையில் இதுவரை நடந்த பூசல்கள் எல்லாம் மறந்து பழைய நெகிழ்ச்சி குரலில் இழைந்தோடியது. அவன் உம் கொட்டினான். அவளுக்குப் பிடிக்காத எதையோ சொல்லி அவளைக் கோபப்படுத்த விரும்பவில்லை. 

”நான் கார் கொண்டு வரவில்லை. உன்னுடன் வரலாமா” அவள் குரல் சட்டென்று இறுகி விட்டதுபோல் இருந்தது. தன் உணர்ச்சிகளை இறுக்கி வைத்திருக்க வேண்டும் என்று முடிவு கட்டி விட்டாளா? 

இவ்வளவு காலமும் அவளுக்குப் பிடித்த பல இடங்களில் தங்கள் தனிமையான காலங்களைக் கழித்திருக்கிறார்கள். இன் றைக்கு அவளுடன் எங்கே போவது என்று தெரியவில்லை. 

டவர் பிறிட்ஜ் பக்கத்திலிருக்கும் ‘கதரின் டொக்’ என்ற இடம் இரவின் வெளிச்சத்தில் ரம்யமாக இருக்கும். அன்ரோ னியோ விஸ்கி குடித்துவிட்டு ஜுலியட்டைப் பற்றி ஒப்பாரி வைக்கும்போது அந்தப் பக்கம் போய் இருக்கிறார்கள். 

அவன் அவளை அந்தப் பக்கம் கூட்டிக்கொண்டு போனான். ‘டிக்கின்ஸ் இன்’ என்ற பாரில் அவளுக்கு ஆரன்ஸ் கேன்களும் தனக்கு பீர் கேன்களும் வாங்கிக் கொண்டு தேம்ஸ் நதிக்கரையோரம் நடந்தார்கள். 

தேம்ஸ் நதி தை மாதம் கடைசிக் குளிரில் ஒடுங்கித் தெரிந்தது. உல்லாசப் பிரயாணிகளின் ஆரவாரம் தேம்ஸில் ஓடிக் கொண்டிருக்கும். பல படகுகளிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. 

டவர் பிரிட்ஜ் கம்பீரமாக உயர்ந்து நின்றது. 

அவள் குளிருக்குப் பயந்து ஓவர் கோட்டை இழுத்து விட்டாள். 

காரில் வரும்போது அதிகம் பேசவில்லை. பொது விடயங்களைப் பற்றிப் பேசினார்கள். கல்லூரி விடயம் பற்றிப் பேசினார்கள். அன்னியர்கள் போல் சம்பாசணையைத் தொடர்ந்தார்கள். 

“என்ன பேசணும்” அவள் கேட்டாள். 

என்ன பேசுவது? 

நீயில்லாமல் நானில்லை என்று உறுதி செய்து கொண்டவர்கள் இன்று பேசுவதற்கே விடயத்தைத் தேடுவது விந்தையாக இருந்தது. 

“உனது எடிட்டிங் விடயமாக” அவன் விடயத்திற்குச் சட்டென்று வந்தான். 

“ஓ” அவள் மங்கிய வெளிச்சத்தில் அவனை உற்றுப் பார்த்தாள். 

“நீ எனது தயாரிப்புக்குக் கமரா வேலை செய்வாய் என்று சொன்னாய்…” 

அவன் முடிக்க முதல் அவள் சொன்னாள். 

“நான் சீக்கிரம் கென்யா போகிறேன். எப்போது வருவேன் என்று தெரியாது. உனது ஸ்கிரிப்ட் கூட நீ எழுதி முடிக்கவில்லை…” அவள் குரலில் தர்ம சங்கடம். 

“உண்மைதான்… கொலிச்சுக்கு வருவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை.” 

“ஆமாம், கோழைகளின் வேலையது” அவள் திட்டினாள். 

அவனுக்கு கோபம் வந்தது. 

“நான் எடுக்கப்போகும் தயாரிப்புக்கு நீ எடிட்டிங் செய்வாயோ தெரியாது.” அவள் சந்தேகத்துடன் சொன்னாள். அவன் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான். 

“கென்யாவில் மஸாய் இனப் பெண்களைப் படம் எடுக்கப் போகிறேன்.” 

“அதற்கும் நான் எடிட்டிங் செய்யக் கூடாது என்பதற்கும் என்ன வித்தியாசமிருக்கிறது.” 

“மஸாய் இனப் பெண்களை எனது சிறிய வயது முதல் அறிவேன். தகப்பனின் சொத்து அவர்கள். அவர்கள் பிறக்க முதலே தகப்பன்கள் தங்களின் பிறக்கப் போகும் பெண்களுக்கு மாப்பிள்ளை பேசிவிடுவார்கள்.” 

”இதற்கும் நான் எடிட்டிங் செய்யக் கூடாது என்பதற்கும் என்ன சம்பந்தம்….. உனக்கு என்னைப் பிடிக்கா விட்டால் நான் எடிட்டிங் செய்யாமல் விடுகிறேன்.” 

அவள் குரலில் கோபம். ஏதோ சாட்டுக்கள் சொல்லித் தன்னிடமிருந்து ஒரேயடியாகப் பிரிந்துக் கொள்ள முயற்சிக்கிறாள் என்று அவன் யோசித்தான். 

“ராகவன் நீ என்ன யோசிக்கிறாய் என்று தெரியும். உடைந்துவிட்ட எங்களின் தனிப்பட்ட உறவு நாங்கள் எங்கள் கல்லூரி வாழ்க்கைக்குச் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று சொல்லத்தான் இங்கு வந்தேன். நான் கென்யாவிலிருந்து வரும்போது உனது தயாரிப்புக்கு எல்லாம் ரெடி என்றால் நான் கமரா வேலை செய்யத் தயார். இல்லை என்றால் இரண்டாவது வருட மாணவர்களில் எத்தனையோ பேர் நல்ல கமராத் திறமையாளர்கள். அவர்கள் உதவி செய்வார்கள்…” 

அவன் மறு மொழி சொல்லவில்லை. ஒரு விதத்தில் அவள் சொல்வது சரிதான். அவன் எத்தனையோ மாத காலத்தை அனியாயமாக்கி விட்டதால் இப்போது எத்தனையோ வேலைகள் தலையை அழுத்தி விடுகிறது. 

“அடுத்தது எனது புரடக்ஸனுக்கு நீ எடிட்டிங் செய்வாய் என்று நான் நினைக்கவில்லை.” 

அவன் கேள்விக் குறியுடன் அவளை நோக்கினான். அவன் பார்வையை நேரடியாக வாங்கிக் கொள்ளாமல் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 

“ராகவன்,நான் எடுக்கப் போவது நாடோடி மக்களான மஸாய் இனமக்களைப் பற்றி மட்டுமல்ல. மஸாய் இனப் பெண்களின் கதை போல் கோடிக்கணக்கான பெண்களின் பெண்மையின் மொட்டு அதுதான் இன்று ‘றோஸ் பட’ (Rose bud) இன்று முனகிவிட்டு இறந்தானே அந்த மொட்டுக்கள் எப்படி ஆணாதிக்கக் கொடுமையால் சிதைக்கப்படுகிறது என்பதைப் படம் எடுக்கப் போகிறேன். Female Circumcision என்று கேள்விப் பட்டிருக்கிறாயா? ஆபிரிக்காவின் வட பகுதி மக்களிடையே கலாச்சாரம் என்ற போர்வையில் இந்தக் கொடுமை நடைபெறுகிறது. இந்தப் பெண்களின் மொட்டுக்கள் (clitoris) எப்படி வெட்டித் தைத்து சித்திரவதைப் படுகின்றன என்பது பற்றி எடுக்கப் போகிறேன். அதை எடிட் பண்ணுவாயா.” 

அவனுக்கு எரிச்சல் வந்தது. அவனுடைய பெண்ணிய சித்தாந்தத்துக்கும் இவன் எடிட்டிங் செய்வதற்கும் என்ன சம்பந்தம்? 

”உன் போன்ற ஆண்களின் சிந்தனைகள் பெண்கள் தங்கள் உடமைகள் என்ற தத்துவத்தைச் சார்ந்திருக்கிறது.” 

”ஓ சட் அப் டெவீனா… உனக்கு நான் எடிட் பண்ணுவது பிடிக்காவிட்டால் நேரடியாய்ச் சொல்வதெற்கென்ன? ஏன் இப்படித் தேவையில்லாத தர்க்கங்களை எல்லாம் எடுக்கிறாய்?” 

அவனுடைய கோபம் அவளுக்குப் புரிந்தது. அதற்காக அவனிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற மனப்பான்மை அவள் குரலில் தொனித்தது. 

“ராகவன், ஒரு பெண்ணின் மனத்தைப் புரியாதவன் பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க முடியாது.” 

அவன் கேள்விக் குறியுடன் அவளைப் பார்த்தான். 

“ஆண் பெண்ணின் உறவு செக்ஸ்க்கு அப்பால் இருக்க முடியாது என்று நினைக்கும் உனக்கு பெண்கள் விடுதலை பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது.” 

அவள் வெடித்தாள். மின்னல், இடி எல்லாம் அவள் குரலில். தூரத்தில் தேம்ஸ் நதியில் போய்க் கொண்டிருக்கும் படகுகளிலிருந்து ஆடலும் பாடலும் இவர்களின் சம்பாஷ ணையைக் கேலி செய்வதுபோல் ஒலித்துக் கொண்டிருந்தது. 

“ஜேர்மனியில் ஓபர் ஹவுஸன் பிலிம் பெஸ்டிவலின் போது நீ பிலிப்பையும் என்னையும் பொறாமையுடன் பார்த்ததை நான் ஆழமாக யோசித்திருக்க வேணும். சாதாரண காதலர்களின் பொறாமை என்று தான் நினைத்தேன். அந்த விஷம் உனது மனத்தில் எப்படி வளர்ந்திருக்கிறது என்பது இப்போதுதான் தெரிகிறது.” 

“டெவீனா நான் சாதாரண மனிதன், ஆனாலும் உன்னை பிலிப்புடன் ஒரு கட்டிலில் கண்டபோது எல்லாம் துறந்த முனிவர் போல் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு வாழ முடியவில்லை.” 

“ராகவன், அக்டோபர் ஆறாம் திகதி லண்டனைச் சூறாவளி அழித்துக் கொண்டிருந்தபோது உன் மார்பில் நான் தலை பதித்து அழுதது ஞாபகமிருக்கிறதா?” 

அவள் இப்போது அழுதாள். அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் கடந்து வெடித்துச் சிதறுவது போல் அவள் கதறி னாள். 

“அம்மா இறந்தால் அந்தக் கொடுமையை என்னாற் தாங்க முடியாது. உன் அணைப்பில் என்னையிணைத்து அந்தத் துன்பத்தை மறக்க வேணும். நான் கெஞ்சியது ஞாபகம் இருக்கிறதா” 

அவன் மௌனமானான். 

“அம்மா இறந்து கொண்டிருக்கும்போது அவளை விட்ட கலமாட்டேன். உனக்கும் போன் பண்ண மாட்டேன். ஆனால் எல்லாம் முடிந்தபின் உன்னிடம் ஓடோடி வருவேன் என்றழுதேனே ஞாபகமிருக்கிறதா.” 

அவள் குரல் அடைத்துக் கொண்டது. முகத்தைக் கைகளாற் பொத்திக் கொண்டு குலுங்கி யழுதாள். பார்க்கப் பாவமாக இருந்தது. 

“தகப்பன் வழிப் பாட்டி இங்கிலாந்தின் தெற்குத் தொங்கலான ஈஸ்ட்போனிலும், தாய் வழிப்பாட்டி ஸ்காட்லாந்தின் வடக்கு மூலையிலான கிளாஸ்க்கோவிலு மிருக்கிறார்கள். அப்பா தன் துயர் தீர்க்க அவரின் கேர்ள் பிரண்ட்டிடம் நியுயோர்க் போய்விடுவார், நான் உன்னைத்தேடி லண்டனுக்கு ஓடோடி வருவேன் என்று உறுதி சொன்னேனே அது கூட ஞாபகமில்லையா.” 

எல்லாம்தான் ஞாபகமிருக்கிறது. ஆனால் இவளை பிலிப் தன் அரவணைப்பிற் கண்டதை ஞாபகத்திலிருந்து அழிக்க முடியவில்லையே! 

“ராகவன், நாற்பத்திரண்டு வயதில் என் தாய் இறந்தாள். அப்பாவிலுள்ள ஆத்திரத்தில் இருபத்தைந்தாவது வயதில் சன்னியாசி மாதிரி தனியாக வாழ்ந்தவள். முப்பத்தி ஏழு வயது தொடக்கம் மார்புக் கான்ஸரால் துயரப் பட்டவள். அந்தத் தாய் எனக்குத் தந்த அன்பு அளப்பரியது. அவள் இறப்பை நிவர்த்தி செய்ய நீ யிருக்கிறாய் என்று ஓடோடி வந்தேன்.” 

அவள் குரல் அடைத்துக் கொண்டது. அவளின் தாய் இறந்த அதே நாளிற்தான் கீதா குடும்பத்தினரின் மரணச் செய்தியும் வந்தது. உலகமே தலைகீழாகத் தெரிந்த நாட்கள் அவை. 

“உனது தமக்கை குடும்பத்தின் அழிவுக்கு மிக மிக மனம் வருந்துகிறேன், ஆனால் உனது தாய் அப்படி என்னைப் பேசியிருக்கத் தேவையில்லை.” 

ராகவனின் தலையில் இடிவிழுந்தது போலிருந்தது. அம்மா மூளை குழம்பிப் போயிருந்தபோது என்ன பேசியிருப்பாள்? 

“என்னைப் போன்ற ஒழுக்கம் கெட்ட பெண்கள் உங்கள் குடும்பத்தில் தலையிட்டதாற்தான் கடவுள் இப்படிச் சாபம் போட்டதாக உன் தாய் என்னைத் திட்டினாள்.” 

“டெவீனா என் தாய் என் தமக்கையின் குடும்பமும் அழிந்த பின் சுய உணர்வின்றியிருப்பது உனக்குத் தெரியுமா” அவன் குரலில் கெஞ்சல் தாய்க்காக மன்னிப்புக் கேட்கும் தோரணையிற் சொன்னான். 

“ஆமாம் அடுத்த நாள் உங்கள் மைதிலிக்குப் போன் பண்ணியும் நீங்கள் ஏன் தொடர்பு கொள்ளவில்லை.” 

மைதிலி இது பற்றி அவனுக்கு ஒன்றுமே சொல்லவில்லையே. 

எத்தனை குழப்பங்கள்?

”ஞாபகமிருக்கிறதா ராகவன்? அன்ரோனியோவின் நிலை ஞாபகமிருக்கிறதா? ஜூலியட்டின் மரணத்தின் பின் அவன் என்ன நிலையிலிருந்தான்? பித்தம் பிடித்திருந்தானே ஞாபகமிருக்கிறதா? நானும் நீயும் டாக்டரைக் கூட்டிக் கொண்டு வந்து நித்திரை மருந்து கொடுத்து அவனைத் தூங்கப்பண்ணியதை மறந்து விட்டாயா? உனது அம்மா உனது தமக்கைக்காகத் துடித்தபோது உங்கள் வீட்டில் எத்தனைபேர் இருந்தீர்கள்?” 

அவன் கண்களை மூடிக் கொண்டான். அவள் என்ன சொல்கிறாள் என்று ஆழமாக யோசித்தபோது அவன் தனது செயலை இன்னொருதரம் யோசித்தான். 

அவள் தொடர்ந்தாள். 

”பெரியம்மா தன்னுடன் கிளாஸ்கோவில் நிற்கும்படி சொன்னாள். அப்பாவின் தாய் ஈஸ்ட்போனுக்கு வரச் சொல்லிக் கேட்டாள். அப்பா தன்னுடன் நியுயோர்க் வரச் சொல்லிக் கேட்டார். மூன்று நாட்கள் நித்திரையில்லாமல் விறைத்துப் போன கண்களுடன் லண்டன் வந்தால் உனது வீட்டில் எனக்குக் கிடைத்த அவமானம் தாங்க முடியாதிருந்தது. 

நித்திரையின்றிப் பைத்தியம் போலிருந்த எனக்கு நித்திரை மருந்து வாங்கித் தந்து என்னைத் தன் தங்கை மாதிரி பார்த்துக் கொண்டவன் பிலிப்” அவசர புத்தியால் அவன் செய்த பிழை அவனுக்குப் புரிந்தது. அவனுக்கு அவமானம் வந்தது, உடம்பு கூசியது. 

“எனது தாயின் அன்பும் சினேகிதியின் மகன் பிலிப் என்னைத் தெரிந்த ஒரு நல்ல ஜீவன். அவனுக்கு என்னில் உள்ள அன்பின் காரணம் வித்தியாசமானது. ஆனால் இப்போது உன்னோடு பழகுவதால் தனது ஆசைகளையடக்கிக் கொண்டவன். எங்களை ஒன்றாய்க் கண்டதும் உனக்கு ஆத்திரம் வந்தது எனக்குத் தெரியும். நீ தலை தெறிக்க ஓடியபோது பிலிப் உன்னைக் கூப்பிட்டானே, நான் உன் பின்னால் ஓடிவந்தேனே உனக்குத் திரும்பிப் பார்க்கக் கூட முடியவில்லையா? திரும்பிப் பார்த்திருந்தால் தெரியும். ஐந்து நாளாக மாற்றாத ஜுன்சுடனும் அழுக்குப் படிந்த சேர்ட்டுடனும் நான் பைத்தியம் போல் ஓடிவந்தது.” 

தனது அவமானத்தைத் தீர்க்க தேம்ஸ் நதியில் விழுந்து சாகவேண்டும் போலிருந்தது. 

இவளிடம் என்ன மொழியில் மன்னிப்பு சொல்வது?

“ராகவன், நான் பழகிய எத்தனையோ ஆண்களை விட நீ கண்ணியமானவன் என்று உன்னை என் அன்புக்குரியவனாகத் தேர்ந்தெடுத்தேன். என் மதிப்பை அவமானம் செய்து விட்டாய். உனது கண்ணியத்தை மதித்து என் கன்னிமையைத் தந்தேன்… ரொம்ப அவமதித்து விட்டாய் ராகவன்…” டெவீனா இப்படி அழுததை அவன் கண்டதில்லை. 

“எனது கடிதத்தை உடைத்துப் படிக்காமலேயே குப்பையிற் போட்டாயா? எனது கடிதத்தை மட்டும் குப்பையிற் போடவில்லை. எனது காதலையும் தான் குப்பையிற் போட்டாய் ராகவன்.” 

மைனஸ் நாற்பது பாகையிலுள்ள பனியில் அமிழ்ந்தது போல் உறைந்து போனான் ராகவன். 

தமக்கையின் மரணம். தாயின் நிலை எல்லாம் சேர்ந்து அவன் அசாதாரணமான நடத்தைகளுக்குக் காரணமா? அல்லது ஆயிரம் கோடி வருடங்களாக ‘ஆண்மை’ என்ற போர்வைக்குள் மூடப்பட்டிருக்கும் ஆழமான கருத்துக்கள் அவளைச் சந்தேகித்து அவனிடமிருந்து பிரித்தது? 

இருவரும் அந்நியர் மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். 

”உனக்குத் தெரியுமா ராகவன், எனது தாய் கடைசி வரைக்கும் அப்பாவின் தொழிலிடமான கென்யாவுக்கு வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள். எனது ஆறு வயதில் முதற்தரம் எனது ஹாலிடேயில் அப்பாவிடம் போனேன். எனது பாதுகாப்பாளன் பிலிப் அவனுக்கு அப்போது வயது எட்டு. இருவரையும் எயார் ஹொஸ்டரின் பராமரிப்பில் பிளேயினில் ஏற்றிவிட்டார்கள். ‘டோன்ட் வொரி நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றான். ஜேர்மனியில் என்னுடன் பிலிப்பைப் பார்த்துப் பொறாமைப் பட்டுத்தானே நீ ஸ்ரீவனுடன் லண்டனுக்கு ஓடிவந்தாய். ராகவன், ஜேனும் நானும் தனியாகப் போகக் கூடாது என்று பிலிப் தானாக வந்தான். உனக்கோ பொறாமை வந்து விட்டது.” 

“ரொம்பவும் கொடூரமாக நடந்து கொண்டேன், மன்னித்துக் கொள்.” 

அவள் கூர்மையாகப் பார்த்தாள். 

“நான் இதெல்லாம் சொன்னது நீ என்னைத் துன்பப்படுத்தியதற்கு உன்னிடமிருந்து ‘மன்னித்துக்கொள்’ என்ற ஒரு வார்த்தை வரவேண்டும் என்பதற்காக அல்ல, இனி என்றாலும் இன்னொரு பெண்ணை இப்படித் துன்பப்படுத்தாதே என்று சொல்லத்தான்.” 

இன்னுமொரு பெண்! 

தன்னை மூன்றாமவளாக்கிச் சொல்கிறாள் இந்தப் பெண்!

அவனால் நம்ப முடியவில்லை. அவனிடமிருந்து அவள் தன்னைப் பிரித்துக் கொண்டதை நம்ப முடியவில்லை. இரவு நீண்டு கொண்டு போனது. இருவரும் காரில் மௌனமாக வந்து கொண்டிருந்தார்கள். கார் செயிண்ட் போல் கரீட்ரல் பக்கம் வந்து கொண்டிருந்தபோது அவள் சோகத்துடன் சிரித்தாள். அவன் காரணம் கேட்பதுபோல் திரும்பிப் பார்த்தான். 

“இந்தத் தேவாலயத்திற்தான் இளவரசர் சார்ள்ஸ் லேடி டயானாவைத் திருமணம் செய்து கொண்டார்கள். இப்போது இழுபறிப் படுகிறார்கள். உறவுகளே இப்படித்தானா? எனது அப்பாவும் அம்மாவும்தான் பிரச்சினைப்பட்டார்கள் என்றால் இப்போது பார்த்தால் பெரும்பாலான உறவுகளே போலியாகத் தான் தெரிகிறது. உண்மையான அன்பென்று ஒன்று உலகில் இல்லையா?” 

அத்தியாயம் – 24

நவம்பர் 1988 (நடுப்பகுதி) 

எப்படியோ ஆரம்பித்த எண்பத்தி எட்டாம் ஆண்டு இலையுதிர்காலத்தின் பொல்லாத காற்றின் வேகத்தில் ஆடிப் போய் விட்டது. 

நவம்பர் மாதம் மழை, குளிர்,காற்று,புகார் என்று ஏதோ ஒன்றால் நிறைந்து கொண்டிருந்தது. 

ராகவனின் திரைப்படப் பட்டப் படிப்பு முடிந்து விட்டது. பட்டம் பெற்றுவிட்டான். அவன் இலட்சியம் நிறை வேறி விட்டது. 

சில சினேகிதர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு சிறிய படக்கம்பனி தொடங்கியிருக்கிறான். சமுதாயக் கருத்துக்க ளைப் பிரதிபலிக்கும் சில டாக்குமென்ட்ரறிஸ் எடுத்தார். ஒன்றிரண்டு தயாரிப்புகளுக்கு பிரிட்டிஷ் நாலாவது சனல் (Channel 4) நிதியுதவி செய்தது. 

அலாதும் ஜேனும் கிழக்கு யூரோப்பிய சோச லிஸ்ட்டுகளுடன் சேர்ந்து ‘புதிய உலகம்’ தேடும் அரசியல் வேலைகளின் தங்களையீடுபடுத்திக் கொண்டார்கள். 

ஸ்ரீவன் இவர்களின் படவிழா முடிய அமெரிக்கா போய் விட்டான். அக்டோபர் கடைசியில் அவன் இறந்து விட்ட சேதி வந்தபோது ராகவனும் சில சினேகிதர்களும் துடித்துப் போய் விட்டார்கள். 

இறப்போடு போராடிக் கொண்டு தன் இலட்சியத்தை நிலைநிறுத்தத் தன் பட்டப் படிப்பை முடித்துக் கொண்ட ஸ்ரீவனின் உறுதியான வாழ்க்கை முறை ராகவனை மெய் சிலிர்க்கப் பண்ணியது. 

அன்ரோனியோவின் கடைசி வருடப் படமான ‘நான்’ பலரது பாராட்டையும் பெற்றது. ‘நான்’ என்ற சூரியலிசப் படம் மூன்றாம் இடத்தைப் பெற்றது. அதன்பின் தாய்நாடான இத்தாலிக்குப் போய்விட்டான். 

மார்பியாக் காரரை அம்பலப்படுத்த எடுத்த டாக்குமென் டரிப் படப்பிடிப்பின் போது தாக்கப்பட்டு ஹாஸ்பிட்டலில் இருப்பதாகப் போன் பண்ணிச் சொன்னான். 

மைக்கல் ஒரு மியூசிக் கம்பனியில் சவுண்ட் எடிட்டிங் செய்து கொண்டிருக்கிறான். பல காதலிகள் வேண்டாம் ஒன்று மட்டும் போதும் என்று அவன் சொன்னபோது சினேகிதர்கள் சிரித்தார்கள். பிலிப் எல்லோரும் எதிர்பார்த்ததுபோல் BBC யில் வேலை எடுத்துக் கொண்டு போய்விட்டான். 

டெவீனாவுக்கு மாணவர் தயாரிப்பாளருக்கான முதற் பரிசு கிடைத்தது. அவள் தயாரித்த Female buds (பெண்மையின் மொட்டுக்கள்) என்ற டாக்குமென்டரி பிபிசியின் கவனத்தைக் கவர்ந்தது. பெண்கள் சம்பந்தமான தயாரிப்புக்களுக்கு அவ ளுக்கு உடனடியாக கொமிஷன் கிடைத்தது. 

அதிபர் தனது மாணவர்களின் தயாரிப்புக்களில் மிகவும் பெருமைப் பட்டுக் கொண்டார். 

உலகத் திரைப் படச் சரித்திரத்தில் எத்தனையோ மேதை கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களில் எத்தனைபேருக்கு அதிபர் ஜான் பேர்ன்ஸ்ரைன் மாதிரி நல்ல உள்ளம் இருந்திருக் கும் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். 

மாணவர் தயாரிப்புக்கான இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு காலை இந்திரா பெட்டியும் படுக்கையும் அழுத கண்ணுமாய் வந்து சேர்ந்தாள். 

மைதிலியின் மார்பில் முகம் புதைத்துக் குலுங்கி யழு தாள். குடும்பத்துக்காக ஒரு குடிகாரனைக் கல்யாணம் செய்து கொண்டு பட்ட கஷ்டத்தைச் சொல்லிக் கதறினாள். 

“கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன், என்ன செய்வது எல்லாம் உன் தலைவிதி.” 

அம்மா சமாதானப் படுத்தினாராம். 

”நீ நல்ல பெண்சாதியாய் இருந்தால் அவன் ஏன் குடிக்கிறான்” இது மாமியின் திட்டல். 

தகப்பன், மகளின் துயரை முகம் கொடுக்க முடியாமல் மௌன சாமியாகிவிட்டாராம். 

”என்னால் அங்கே இருக்க முடியாது” இந்திரா நாட்டை விட்டோடி வந்து இன்னொரு தரம் அகதியாய் வந்து நின்றாள். 

அம்மா அப்போது கணேஸ் வீட்டிலிருந்து வரவில்லை. அவள் இருந்திருந்தால் இந்திராவைக் கட்டிக் கொண்டு கதறியி ருப்பாள். 

படத்தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் இந்திரா வின் துயர் தீர்க்க ராகவனால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. 

ஏதோ பட்டப்படிப்பு முடிவதே பெரிய விடயமாக இருந்தது. 

இந்திராவைச் செய்பவன் கொடுத்து வைத்தவன் என்று மனதாக எண்ணியவன் ராகவன். அழகான, கெட்டிக்கார, சங்கீத ஞானமுள்ள, சமயலால் யாரையும் திருப்திப் படுத்தக்கூ டிய சகல நற்குணங்களும் கொண்ட இந்திராவை கலியாணம் செய்பவன் அதிர்ஷ்டசாலி யாகத்தானிருக்க வேண்டும் என்று மனதாக ஆசீர்வதித்தவன் ராகவன். 

லண்டன் வந்து சேர்ந்து சில நாட்கள் ராகவனை நேர் பார்க்காமல் நழுவிக் கொண்டிருந்தாள். தனது கண்ணீரையும், காயம் பட்டிருந்த கன்னத்தையும் மறைக்கத் தான் இந்திரா அப்படி நடந்து கொள்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. 

தானாக வந்து சகஜமாகப் பேசும் வரைக்கும் தானும் ஒதுங்கியிருப்பது நல்லது என்று நடந்தான் ராகவன். 

அன்று சனிக்கிழமை. நவம்பர் மாதத்தின் நடுப்பகுதி. 

ஒரு பின்னேரம் நாலு மணியிருக்கும். கீழே டெலிபோன் அடிப்பது கேட்டது. மைதிலி இவனுக்குத்தான் போன் என்று சொன்னாள். இவன் அவசரமாக இறங்கி வந்தான். 

“ஹலோ நான் பிலிப் பேசுறன்” 

ராகவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

பிலிப் ராகவனின் வீட்டுக்குப் போன் பண்ணுமளவுக்கு பெரிய நட்பில்லை. 

“ஹவ் ஆர் யு ராகவன்” பிலிப்பின் குரலில் அசாதாரணக் கனிவு. 

”ஓகே…” ராகவன் பிலிப் பேசட்டும் என்று பேசாமலிருந்தான். பிலிப்புக்கும் அவனுக்கும் பெரிய சினேகிதம் இருந்திருக்கவில்லை. 

“பின்னேரம் எங்கேயும் போகிறாயா” பிலிப்பின் குரல் பரிவுடன் தொனித்தது. 

“அவசரமாகப் போகக் கூடிய ஒரு முக்கியமான வேலையுமில்லை” ராகவனுக்குக் குழப்பம். என்ன பிலிப் இப்படி நினையாப் பிரகாரமாய்ப் போன் பண்ணுகிறான்? 

“பின்னேரம் என்னைச் சந்திக்க முடியுமா.. உன்னிடம் ஒரு முக்கிய செய்தி சொல்ல வேண்டும்.” 

ராகவன் ஒரு கணம் யோசித்தான் பின்னர் “எங்கே சந்திக்க வேண்டும்?” என்று கேட்டான். 

“றொனி ஸ்காட் ஜாஸ் கிளப்பில் சந்திப்போமா” டெவீனாவுக்குப் பிடித்த ஜாஸ் கிளீப். 

“சரி” ராகவன் போனை வைத்து விட்டான். 

டெவீனாவின் தொடர்புகளோடு சம்பந்தப்பட்ட இடங்களில் றொனி ஸ்காட் ஜாஸ் கிளப்பும் ஒன்று. ராகவனின் மனத்தில் தர்ம சங்கடமென்றாலும் பிலிப் கேட்டபடி சொன்னான். 

டெவீனாவுடன் கடைசிப் பேச்சு ஏனோ மனதைக் குழப்பியது.  

ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் அவளுக்குப் போன் பண்ணினான். அவளைப் பார்க்கமலிருக்க முடியவில்லை. அவள் குரலைக் கேட்க வேண்டும் போலிருந்தது. 

நவம்பர் மாதற் குளிர் காற்றில் நடனமாடும் அவளின் பொன் நிறத் தலையைக் கோதி விட வேண்டும் போலிருந்தது. கடலாழ நீல நிறவிழிகளில் நர்த்தனம் செய்யும் நிலவுத் துண்டுகளைத் தேடவேண்டும் போலிருந்தது. 

சம்மர் காலத்தில் அகோர வெயிலின் புழுக்கத்தோடு அடுத்தடுத்த அறையில் எடிட்டிங் செய்த போது கடந்த வருடம் புவனாவின் படத்தை இருவரும் ஒன்றாக எடிட்டிங் செய்ததும் எடிட்டிங் ரூமில் காதல் புரிந்ததும் கருத்தை கத்தியாய் வெட்டித் தொலைத்தது. 

வசந்த காலத்தில் காதலர்கள் கையோடு கை பிணைந்து கண்ணோடு கண்பதித்து லண்டன் தெருக்களில் உலவும்போது அவளின் நினைவு பாய்ந்தது. 

படத் தயாரிப்பு நாட்களில் தேவையுடன் மட்டும் அவள் பேச்சுக்களை முடித்துக் கொண்டு போனபோது உயிரின் ஒவ்வொரு அணுக்களையும் அசைப்பது போலிருந்தது. 

மாணவர் தயாரிப்பின் முதற்பரிசை அவளது “பெண்மை யின் மொட்டுக்கள்” தட்டிக் கொண்டபோது தன் பெருமையை அவளுக்கு ஆயிரம் முத்தத்தின் மூலம் அர்ப்பணிக்கத் துடித்தான். அவள் தூரத்தில் எங்கேயோ போய்க் கொண்டிருந்தாள். “நாங்கள் காதலர்களில்லை. சினேகிதர்களாக இருப்போம்” என்று கௌரவமாகச் சொல்லிவிட்டாள். அவள் போட்ட கோட்டை அவளாற்தாண்ட முடியவில்லை. மாணவர்கள் படவிழாவிற்கு மைதிலியுடன் இந்திராவும் வந்திருந்தாள். பாவ்ரர் தியேட்டருக்குள் நுழைந்தபோது அவள் இந்திரா வைக் கூர்ந்து பார்த்தாள். 

“நாங்கள் இவர்கள் வீட்டுக்குச் சாப்பிடப் போனோம் இல்லையா” என்று டெவீனா கேட்டாள். 

”ஆமாம்” போட்டான். 

“இவள் எங்களுக்குத் தமிழ்ப் பாட்டுப் பாடினாள் ஞாபகமிருக்கா” டெவீனா தொடர்ந்தாள். 

இந்திராவின் பாரதிபாடல்களை என்னவென்று ராகவன் மறப்பான்? 

பழைய ஞாபகங்கள் வந்திருக்க வேண்டும். டெவீனா பார்வையைத் திருப்பிக் கொண்டாள். பாரிஸிலிருந்து வரும் போது அவள் தந்த முதல் முத்தத்தையும் மறந்து விட்டாளா? ‘கதரின் டொக்’ அருகில் ஒரு இரவு சந்தித்து நீண்ட பேச்சுக்களை வைத்துக் கொண்ட பின் அவர்கள் தனியாகச் சந்திக்க வில்லை. அவள் ஸ்ருடன்ஸ் ரூமில் கூட இவனுடன் ஒரு ஐந்து நிமிடம் கூடத் தனியாக இருக்கவில்லை. அவள் நடத்தை மனத்தை யுறுத்தினாலும் அவையெல்லாவற்றையும் பொறுத் துக் கொண்டான். 

மாணவர் படவிழா ஜுலை மாதக் கடைசியில் முடிந்தது. 

தகப்பன் தனது இரண்டாவது மனைவியுடன் லண்டன் வந்திருப்பதாகவும் அவர்களுடன் ஒரு மாதம் உலகம் சுற்றிப் பார்க்கப் போவதாகவும் சொல்லி விட்டாள். ஆகஸ்ட் மாத வெயில் மட்டுமல்ல அவளில்லாத துயரமும் அவனை வாட்டி எடுத்தது. செப்ரம்பர், ஒக்டோபர் மாதங்களில் அவன் தன் படப் பிடிப்பு விடயமாக பிஸியாக இருந்தான். இப்போது பிலிப் என்ன சொல்லப் போகிறான்? 

தர்ம சங்கடமான கேள்விகள் ராகவனின் மனத்தைக் குதறியெடுத்தது. 

“டெவீனா என்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டு விட்டாள்” என்று பிலிப் சொல்லப் போகிறானா? 

டெவீனா ஒரேயடியாக கென்யாவிலோ அல்லது நியுயோர்க்கிலோ வாழப் போகிறாள் என்று சொல்லப் போகிறானா? 

நினைவுகள் எங்கேயெல்லாமோ ஓடியது. லண்டன் ட்ரவிக் பைத்தியக்காரர் விடுதி போல் அல்லோல கல்லோலமாக இருந்தது. சனிக்கிழமை ஷாப்பிங் செய்வோரின் தொகை திருவிழாக்களை ஞாபகப்படுத்தின. 

கார் பார்க் பண்ணவே அரை மணித்தியாலம் எடுத்தது. கடைசியாக றொனி ஸ்காட் ஜாஸ் கிளப்பிற்கு ஒரு மைலுக்கப் பால் எங்கேயோ கார் பார்க் பண்ணிவிட்டு நடந்து சென்றான். 

கிளப்பில் இவனுக்காகக் காத்திருந்தான் பிலிப். இவனைக் கண்டதும் ஹலோ சொல்லிக் கொண்டான். முகம் ராகவனை நேரடியாகப் பார்க்காமல் தாழ்ந்திருந்தது. 

விஸ்கி ஆடர் பண்ணினான். “பீர் போதும்” ராகவன் சொன்னான். பிலிப் தலையாட்டினான் விஸ்கியே எடுப்போம் என்பது அதன் கருத்து. 

“பரவாயில்லை விஸ்கியே எடுப்போம்.” 

இவனின் சம்மதத்தைப் பற்றி பிலிப் அதிகம் அக்கறைப் படாதவனைபோல் இரண்டு  டபுள்  விஸ்கி ஆடர் பண்ணினான். 

மௌனமாக ஒரு சில நிமிடங்கள் ஓடின. விஸ்கியைக் குடித்தபடி பிலிப் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். தூரத்தில் மேடையில் ஒருவன் ஜாஸ் வாசித்துக் கொண்டிருந்தான். 

“நீ எப்படியிருக்கிறாய்” ராகவனைக் கேட்டான். ஏதோ சாட்டுக்குக் கேட்பது போலிருந்தது. அவன் குரல் டெலிபோனிலேயே அவன் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறானே! வியப்புடன் பிலிப்பை ஏறிட்டுப் பார்த்தான் ராகவன். 

“என்னைப் பார்க்காமல் விஸ்கியைக் குடி” பிலிப் உத்தரவு போடுவதுபோற் சொன்னான். ராகவனுக்கு எரிச்சல் வரத் தொடங்கியிருந்தது. ஏன் பிலிப் கூப்பிட்டான்? என்ன சொல்லப் போகிறான்? மனம் இறக்கை கட்டிக் கொண்டு எங்கேயோ பறந்தது. தான் பட பட வென்று குடித்து முடித்தான் ‘டெவீனா ஏதும் சொல்லியிருப்பாளா?’ ராகவன் குடிக்கும் வரைக்கும் காத்திருந்து விட்டு இன்னொரு விஸ்கி ஆடர் பண்ணிக் கொண்டான். 

ராகவனுக்கு வெறியேறத் தொடங்கி விட்டது. “ராகவன்…நான் சொல்லப் போகும் செய்தி உனக்கு அதிர்ச்சியாயிருக்கும்… தயவு செய்து இந்த விஸ்கியையும் குடித்து முடி” 

பிலிப்பின் குரல் வித்தியாசமாக இருந்தது? ராகவனின் உடம்பிற் சூடேறிவிட்டது. தான் டெவீனாவைத் திருமணம் செய்யப் போகிறேன் என்று பிலிப் சொல்லப் போகிறானா? அதை எப்படி ராகவன் தாங்குவான்? அந்த நினைவு வந்ததும் ராகவன் தானாகப் போய் மூன்றாவது விஸ்கி ஆடர் பண்ணிக் குடித்தான். 

உள்ளத்தின் தயக்கமெல்லாம் போய் விட்டது. அவளுடன் இவனைக் கட்டிலிற் கண்ட ஞாபகம் இன்னொருதரம் வந்தது. உண்மையை வெறி மறைத்தது “என்ன சொல்லப் போகிறாய்?” ராகவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். நிதானமிழந்து கொண்டு வருவதையுணர்ந்தான். பிலிப் ராகவனை விட ஒன்றிரண்டு அங்குலம் உயரமானவன். மிகவும் கம்பீரமான உயரமுடையவன். ராகவனின் கூர்ந்த பார்வையைத் தாங்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். 

பிலிப் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.

“ராகவன்…” பிலிப் ராகவனை ஒரு தரம் ஏறிட்டுப் பார்த்தான். 

பிலிப் தயங்கினான். பின்னர் மெல்லிய குரலில் “டெவீனா…” பிலிப் வார்த்தைகளை முடிக்க முதல், 

“டெவீனாவைக் கல்யாணம் செய்யப் போகிறாயா” ராகவனின் குரல் அதிர்ந்தது. பக்கத்திலுள்ளோர் திரும்பிப் பார்த்தார்கள். 

”வாட்” பிலிப் குழப்பத்துடன் ராகவனைப் பார்த்தான். என்ன உனக்கு பைத்தியமா என்பதுபோல் பிலிப்பின் பார்வை விரிந்தது. 

“ஒரு முக்கிய விடயம் சொல்வதாகக் கூட்டிக் கொண்டு வந்தாய்…. விஸ்கி ஊற்றித் தந்தாய்… என் டெவினாவை உன்னுடையவளாக்கப் போகிறேன் என்று சொல்லப் போகிறாயா யு பாஸ்ரட்” ராகவன் வெடித்தான். ராகவன் பயங்கரமான வெறிகாரன் போல் தோற்றமளித்தான். பிலிப் முன்னால் இருக்கும் ராகவனைக் கூர்ந்து பார்த்தான். 

“ராகவன்… ராகவன் மனதைத் திடப்படுத்திக் கொள்… டெவீனா இறந்து விட்டாள்” பிலிப் சொல்லிவிட்டு முகத்தை மூடிக்கொண்டான். கண்ணீரை மறைக்கிறான் என்பது புரிந்து ராகவனுக்கு முன்னால் உலகம் சுழன்றது. நிதானம் எங்கேயோ பறந்தது. பாய்ந்து பிலிப்பின் கழுத்தைப் பிடித்தான் “பாஸ்ரட் உனக்கு இப்படிச் சொல்ல என்ன துணிவு எனது டெவீனா இறந்து விட்டதாகச் சொல்கிறாயே” அவன் பிலிப்பை வெறியு டன் உலுக்கினான். 

இவர்கள் இருவரும் இப்படித் தகராறு படுவதைப் பார்த்த இருவர் ஓடிவந்து இருவரயும் பிடித்தார்கள். யாரும் வராவிட்டால் ராகவன் பிலிப்பின் கழுத்தை நெரித்திருப்பான். மானேஜர் வந்து இருவரையும் உடனடியாக வெளியேறும்படி சொன்னார். 

இருவரும் வெளியே வந்தார்கள். உலகத்தில் எந்தச் சந்தடியும் ராகவனுக்குக் கேட்கவில்லை. தன்னால் நிற்க முடியாது என்று தெரிந்தது. 

”நீ என்ன சொன்னாய் பிலிப்” ராகவன் குரல் அதிர்ந்தது.

“ஐயாம் சாரி ராகவன். இன்று காலை டெவீனா கார் விபத்தில் இறந்து விட்டாள்.” 

பிலிப் தனது கண்ணீரைக் கஸ்டப்படுத்தி அடக்கிக் கொண்டான். தன் முன்னால் குழந்தைபோல் வீறிடும் இந்தப் படித்த வாலிபனை பிலிப் பரிதாபத்துடன் பார்த்தான். ராகவன் தெருவில் குந்தியிருந்து முழங்கால்களுக் கிடையில் தலை புதைத்துக் குலுங்கி குலுங்கி யழுதான். 

ரோட்டால் போனோர் ராகவன் அழுவதற்குக் காரணம் இந்தக் கம்பீரமான ஆங்கிலேயன் என்ற சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டு போனார்கள். 

அந்தப் பக்கம் போன போலிஸ் ஒருத்தன் வந்து என்ன பிரச்சினை என்று கேட்டார். “எனது நண்பனின் காதலி கார் விபத்தில் இறந்து விட்டாள். அந்தச் செய்தியைச் சொன்னேன். அவராற் தாங்க முடியவில்லை.” 

போலிஸ்காரன் சந்தேகத்துடன் பார்த்து விட்டு நகர்ந்தான். பிலிப் பொறுமையுடன் ராகவனைப் பார்த்துக் கொண்டு நின்றான். பிலிப் ராகவன் இப்படித் துடிப்பான் என்று எதிர் பார்த்து வந்திருந்ததால் பொறுமையுடன் நின்றான். ராகவன் வெட்கம் விட்டு அழுதான். எப்படி இறந்தாள்? எங்கேயிறந்தாள் என்றெல்லாம் ஒன்றும் கேட்கவில்லை. 

பிலிப் ராகவனை அன்புடன் அணைத்துக் கொண்டான். “இன்று அதிகாலை தனது பாட்டியைப் பார்க்க ஈஸ்ட்போன் போய்க் கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த லாரியுடன் மோதி மரணம் சம்பவித்ததாம்.” 

பிலிப் தானாகச் சொல்லிக் கொண்டிருந்தான். நேற்றுத் தானே ராகவன் அவனுக்குப் போன் பண்ணினான். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை, இவனுடன் பேசுவதாகச் சொல்லியிருந்தாள்? இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் இப்படியும் ஒரு இறப்பா? 

அடுத்த கிழமை கென்யாவுக்குப் போகிறாளாம். தகப்பனின் இரண்டாவது மனைவி கற்பமாகிவிடும் தருணம். இருபத்தைந்து வயதான தனக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறப்பது மிகவும் சந்தோசமாம். 

குழந்தை போல கும்மாளம் போட்டாளே! எத்தனை குதூகலம் குரலில்! அவையெல்லாம் நேற்றுத் தானே நடந்தது? ‘இன்று என்னைப் பிரியலாமா?’

“ராகவன் எங்கே போகப் போகிறாய்” பாய்ந்தோடும் ராகவன் பின்னால் விரைந்தான் பிலிப். 

“டெவீனா போகுமிடத்திற்குப் போகப்போகிறேன்” பைத்தியம் போல் சொன்னான். என்னவென்று பிலிப் ராகவனைப் புவனாவிடம் சேர்த்தானோ தெரியாது. ராகவனுக்குத் தான் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. 

கண் விழித்தபோது தலை விண் விண் என்று வலித்தது. எழும்பி நிற்க முயன்றான். முடியவில்லை. தன் உடம்போடு கற்தூணைக் கட்டிய கனம். 

வாந்தி வந்தது. கஷ்டப்பட்டுக் கண்களைத் திறந்த போது அழகிய குழந்தையின் படம் தன் முன்னால் தொங்கியது. கனவா நனவா என்று தெரியாத மயக்க நிலை? யார் குழந்தை யிது? 

அக்கா மகன் கண்ணனின் படமா இது? கண்ணன், சத்தியா, அக்கா, டெவீனா, ஆனந்தன் எல்லோரும் ஒரு குறுகிய காலத்துக்குள் அவனிடமிருந்து பிரிக்கப் பட்டு விட்டார்களே. நிலை சாடையாக வரத் தொடங்கியதும் ‘டெவீனா’ அவன் பைத்தியம் போல் அழுதான். யாரோ வரும் காலடி கேட்டது. தலையை மெல்லத் தூக்கிப் பார்த்தான். 

புவனா, றிச்சார்ட், மைக்கல், பிலிப் எல்லோரும் இவனைச் சுற்றி நின்றார்கள். அவர்களின் பின்னால் நிற்பது அவனின் மதிப்புக்குரிய அதிபர் ஜான் பேர்ன்ஸ்ரைன். 

எல்லோர் கண்களிலும் கண்ணீர். புவனா வந்து பாசத்துடன் அணைத்துக் கொண்டாள். அந்தப் பாசம் அவனை இன்னும் பலவீனப்படுத்தி விட்டது. குலுங்கிக் குலுங்கியழுதான். 

“அழு, அழு, மனதில் உள்ள துயரெல்லாம் போகட்டும் அழு” புவனா தானும் விம்மினாள். ராகவன் தலையலடித்துக் கதறினான். “எனக்கேன் இந்த வேதனை” அவன் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. 

அவன் அடிமனத்தில் அவள் முதல் நாள் லிப்ட் மூடும் போது ஓடிவந்து இவன் மார்பில் மாலையாக விழுந்தது ஞாபகம் வந்தது. 

என்னவென்று அந்த முகத்தை பிணப்பெட்டியில் வைக்க முடியும்? 

மூன்று வருட வாழ்க்கையின் முடிவு இதுதானா? ‘நான் பிலிம் கொலிச்சுக்கு வந்திருக்கக் கூடாது’ அவன் விம்மினான். கமராக் கோணங்களைப் படிக்க வந்தவனுக்குக் காதல் மிகவும் பயங்கரமான படிப்புக்களைத் தந்து விட்டதே. 

ஒலியெல்லாம் எப்படிச் செய்வது என்று தேடியவனுக்கு அவன் ஓலம் நிலைத்து விட்டதே. 

ஒளி எப்படிப் பாய்ச்சி நிழற்படத்திற்கு உயிர் கொடுப்பது என்று படிக்க வந்தவனின் வாழ்க்கை இருண்டு விட்டதே. 

தன்னைச் சுற்றி நிற்பவர்களின் குரல் அந்நியமாகக் கேட் டன. அவள் மடியிற் படுத்திருந்து பேத் ஹோவனின் பியானோ கொன்சேர்ட்டோ கேட்கவேண்டும். 

லூயிங் ஆர்ம்ஸ்ரோங்கின் ஜாங் இசையில் அவளுடன் நடக்க வேண்டும். இந்திராவைச் சொல்லி பாரதியின் பாடல்க ளைப் பாடச் சொல்லி ரசிக்க வேண்டும். 

அவன் தலையைத் தடவி விடுவது புவனாவாக இருக்கக் கூடாது. 

“டெவீனா, டெவீனா…..” அவன் அலறல் பயங்கர மாகவிருந்தது. டாக்டர் வந்து ஊசி போட்டார். அவன் இன்னொரு தரம் மயங்கி விட்டான். நண்பர்கள் துயருடன் அவனருகில் இருந்தனர். 

புவனா மைதிலிக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லியிருக்க வேண்டும். 

ஒரு கிழமை கழித்து அவன் வீட்டுக்கு வந்த போது மைதிலி தமயனை ஆதரவுடன் பார்த்தாள். அவனால் யாரையும் கண்ணெடுத்துப் பார்க்க முடியவில்லை. 

இந்திரா ஓடிவந்து அன்புடன் பார்த்தாள். அவள் முகத்தை அவன் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் வாயாற் சொல்ல முடியாத எத்தனையோ ஆதரவான செய்தி அவள் கண்களிலி ருந்தது அவனுக்குத் தெரிந்திருக்கும். 

“ராகவன்….. ” இந்திராவின் குரல் மெல்லமாக ஒலித்தது. 

அவன் தன் அறைக்குள் போய்க் கொண்டிருந்தான் “டெவீனா போய் விட்டாள் என்பது உங்கள் மனத்தில் எடுபட எவ்வளவோ நாள் எடுக்கும்… இந்த வீட்டில் மூன்று பெண் கள் இருக்கிறோம்… அம்மா உங்கள் நிலை தெரிந்தால் இன்னொருதரம் சுய நிலையிழந்தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. மைதிலி…” இந்திரா இவளின் பதில் எதையும் எதிர்பார்க்காமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் மறு மொழி சொல்லாமல் தனது கட்டிலிற் தொப்பென்று விழுந்தான். 

மைதிலிக்கு என்ன என்பதுபோல் இந்திராவைப் பார்த் தான். இருவர் கண்களும் மோதிக் கொண்டன. சோகம் படிந்த இரு சோடிக் கண்கள், பரிதாபமாகவிருந்தன. “மைதிலியின் நாஸர் இலங்கையில் தனது சமயத்தைச் சேர்ந்த பெண்ணைச் செய்து விட்டதாக எழுதியிருக்கிறார்.” 

ராகவன் முகத்தை மூடிக் கொண்டான். இடிக்கு மேல் இடியா? டெவீனா, அக்கா, குழந்தைகள், மைத்துனர், ஆனந்தன் எல்லோரும் போய்விட்டனர். அவனுக்கு ஒன்றுமே விளங்கவேயில்லை. பாவம் மைதிலி எத்தனை கற்பனையோடு வாழ்ந்திருப்பாள். 

எதிரே நிற்கும் இந்திராவைப் பார்த்தான் அவர் அசையாமல் நின்றிருந்தாள். அடைக்கலம் தேடி வந்த இந்தப் பெண்ணுக்கு எத்தனை கடமைகள், பொறுப்புக்கள்? அரைப் பைத்தியமாயிருக்கும் ராகவனை பார்க்க வேண்டும், மன நிலை சரியில்லாத தாய், காதலில் தோல்வியுற்ற மைதிலி! 

இந்தப் பெண்ணைக் கடவுள்தான் அனுப்பியிருக்க வேண்டும் ”நன்றி இந்திரா” அவன் குரல் அடைத்தது. அவள் முகத்தில் சாந்தம், பரிவு, கனிவு. 

“சாப்பாடு ஏதும் கொண்டுவந்து தரட்டுமா” இந்திராவின் தாய்மை மனதைத் தொட்டது. டெவீனாவும் உலகத்துத் துன்பத்துக்கெல்லாம் துயர் படுபவள். 

“வேண்டாம் இந்திரா. டெவீனா இறந்து விட்டாள் தெரியுமா” குழந்தை போல் அவளிடம் சொன்னான். 

“சாப்பிடா விட்டால் அம்மா யோசிப்பாள்” அவள் பிடிவாதமாகச் சொன்னாள். 

”நான் சாப்பிட்டதாகச் சொல்” எரிச்சலுடன் முணு முணுத்தான். அவள் மறுமொழி சொல்லவில்லை. 

“என்ன பொய் சொல்ல மாட்டாயா” 

“சொல்கிறேன்” இந்திரா போய்விட்டாள். 

அடுத்தடுத்த நாட்கள் இவன் வேலை செய்யும் கம்பனியைச் சேர்ந்த ஒரு சிலர் போன் பண்ணினர். செய்து கொண்டிருக்கும் புரடக்ஸனை முடிக்க வேண்டும் அவர்கள் முணு முணுத்தார்கள். 

வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. இரவும் பகலும் டெவீனாவின் ஞாபகமாக இசையையும் பியானோவையும் கேட்டுக் கொண்டிருந்தான். 

ஒரு நாள் இந்திரா தோசையுடன் இவன் அறைக்குள் வந்தாள். 

“இந்திரா துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா என்ற பாட்டைப் பாடு” 

இந்திரா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். குழந்தையை தாய் பார்க்கும் பார்வை. 

மிக மிக மெலிந்திருந்தான்; சோர்ந்திருந்தான் “மனதிலுறுதி வேண்டும் என்று பாடட்டா” அவனைப் பார்த்தாள். தாடி வளர்ந்திருந்தது. பேச்சு பைத்தியக்காரன் போலிருந்தது. 

அணைத்து வைத்து ஆறுதல் கொடுக்க வேண்டும் போலிருந்தது.”என்ன பார்க்கிறாய் எனக்குப் பைத்தியம் என்று பார்க்கிறாயா” அவன் குரலில் ஒலித்த சோகம் அவள் கண்களில் பனிபடர வைத்தது. 

“இல்லை” என்று தலையாட்டினான். அவனுக்கு முன்னால் அழுது அவனைத் துன்பப்படுத்த விரும்பவில்லை. 

“எனது நண்பன் அன்ரோனியோ என்பவன் தனது காதலி யிறந்த போது ஒரு வருடம் வரைக்கும் போதை மருந்தென்றும் குடிவகைகளென்றும் பாவித்துத் தன் துன்பத்தை மறந்தான். நான் உன்னைப் பாடச் சொல்கிறேன், இது பைத்தியத் தனமில்லையே?” 

“சாப்பிடுங்கள் பேசலாம்” 

அவள் சாப்பாட்டை அவனின் கட்டிலுக்கு அருகில் உள்ள மேசையில் வைத்தாள். அவன் மௌனமாகப் பார்த்தான். அவள் மௌனமாய் நின்றிருந்தாள். குழந்தையைச் சமாதானம் செய்யும் தாயைப் போல் அவள் தெரிந்தாள். 

இந்திராவுக்கு இப்போதுதான் இருபத்திரண்டு வயது. வாழ்விழந்தவள். அடைக்கலம் தேடிய இடத்தில் மூன்று துயர் படிந்த மனிதர்களை பார்க்க வேண்டிய பொறுப்பு. அவளிற் பரிதாபம் வந்தது. தன்னைவிட்டுப் போன டெவீனாவில் கோபம் வந்தது. பாவம் இந்திரா அவன் சாப்பிட்டான். வாழ்க்கை தொடர வேண்டும். டெவீனாவை மறக்க முடியாது, 

அதே நேரம் வெளியில் போய் உழைக்காமலிருக்க முடியாது. மைதிலியை இவன் தேற்ற வேண்டும். அம்மாவை யோசிக்கப் பண்ணக் கூடாது, அவள் இன்னொருதரம் தன் சுய நிலையி ழந்து விடுவாள். 

அவன் சாப்பிடுவதை அமைதியாக இருந்து பார்த்தாள் இந்திரா. அவள் கணவனில்லாதவள். அவன் காதலியில்லாத வன். இவர்களை யிணைக்க அம்மா கண்ட கனவுகள் ஏராளம். சாப்பிட்டு முடிய அவளை நேரடியாகப் பார்த்தான். அப்படி நேரடியாகப் பார்த்தது அவளுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. 

“இந்தப் பொன்னான கைகளை அந்தக் குடிகாரன் அடித் தானா? இந்தப் புனிதமான மனத்தைப் புண்ணாக்கினானா அந்த மடையன்” ராகவன் ஏதேதோ கேள்விகள் கேட்டான். அந்தக் குரலில் பரிவு அவளைத் துடிக்கப் பண்ணிவிட்டது. 

தனது சொந்த விடயத்தை அவன் நேரடியாகக் கேட்க அவள் தர்ம சங்கடப் பட்டாள். “பெரும்பாலான பெண்கள் அடியையும் உதைகளையும் அட்டிகைகளுக்கும் கம்மல்களுக்கும் பொறுத்துக் கொள்கிறார்கள், காயங்களைக் காஞ்சிபுரப் பட்டால் மறைத்துக் கொள்கிறார்கள். கல்யாணம் என்ற கலாச்சாரப் பிணைப்பில் நன்மை யடையவர்கள் ஆண்கள். அவர்கள் படைத்த சட்ட திட்டங்களின் மரபு மீறினால் கேவலப்படுத்தப் படுபவர்கள் பெண்கள் அதனால் எத்தனையோ கொடுமைகளைச் சகித்துக் கொண்டு சந்தோசமாயிருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்” இந்திரா தனக்குத்தானே சொல்வது போல் சொல்லிக் கொண்டாள். ஏதோ சுருக்கமாக மறுமொழி கூறத் தொடங்கியவள் பெரிதாகப் பிரசங்கம் வைத்தது போல் இருந்தது. 

இருபத்திரண்டு வயதில் வேண்டாத கணவனை விட்டுப் பிரிந்த இந்தப் பெண்ணின் துணிவுதான் என்ன? தன்னைப் பாதுகாக்கும் அவள் பரிவை அவன் மெச்சினான் அன்று பிலிப் போன் பண்ணினான். ராகவன் எப்படி யிருக்கிறான் என்று விசாரித்தான். டெவீனாவின் மரணச் சடங்கு! 

அவளின் இறுதிச் சடங்கு அடுத்த நாள் நடக்கப் போகிறதாம். ராகவன் பற்களையிறுகக் கடித்துக் கொண்டான். என்னால் வரமுடியாது என்று சொல்லி விட்டான். 

சேர்ச்சில் அவள் பிணப்பெட்டி வைக்கப்பட்டு பிரார்த்தனை செய்தபின் எரிக்கப்படும் என்று பிலிப் சொன்னான். அவன் சொன்னது ஒன்றும் முழுமையாக ராகவனால் உணர முடியாதிருந்தது. 

“என்னால் அந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.” ராகவன் இன்னொருதரம் பைத்தியமாகக் கத்தினான். 

அறைக்குள் ஓடிப் போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டான். “ஐ லவ் யு டெவீனா” அவள் படத்தை வைத்துக் கொண்டு ராகவன் கெஞ்சினான். நினைவுகள் விரிந்தன. 

“உண்மையாகவா” டெவீனா கேட்டாள். அவள் இறக்கும் சிலநாட்களுக்கு முன் நடந்த சம்பாஷணை இறுதியாக அவள் அவனுடன் பேசுகிறாள் என்று தெரியாமல் அவன் மனக் கிடக்கையைச் சொன்னான். 

தன்னை மன்னிக்கும்படி சொன்னான். அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று ஆரம்ப கால காதலன் போல் வெட்கத்தை விட்டுச் சொன்னான். 

”உண்மையாக நீ விரும்பும் எதையும் சிறை பிடிக்கக் கூடாது” அவளின் வாதம் இது. 

”என்ன செய்யச் சொல்கிறாய்” ராகவன் கெஞ்சும் குரலிற் கேட்டான். 

“நாங்கள் ஒருத்தரை சந்திப்பது பிரச்சினையைக் கொண்டு வரும் என்று நினைக்கிறேன்” அவள் நிதானமாகச் சொன்னாள். 

“அப்படியானால்” அவன் பொறுமையின்றிக் கேட்டான். 

“நீ உண்மையாக என்னை விரும்புவதானால் தயவு செய்து என்னைச் சந்திக்காதே… என்னால் இன்னொருதரம் உனது சந்தேகத்தைச் சகிக்க முடியாது.” 

அவள் குரலில் உறுதி. அவனாலும் இனியும் கெஞ்ச முடியாது. அவள் கொஞ்ச நாளில் கென்யா போக இருக்கிறாள். ஒன்றிரண்டு மாதம் போகவிட்டு அவள் மன நிலையை அறியலாம். 

“If you love me truly please let me go” இதுதான் அவள் கடைசியாக அவனிடம் கேட்ட வாக்குறுதி. அவன் மறுமொழி சொல்ல முதலே போனை வைத்து விட்டாள். இன்று ‘முழுமையான’ சுதந்திரத்துடன் எரிக்கப் படப்போகிறாள்! தலையைப் பிய்த்துக் கொண்டழுதான். இந்திரா பெருமூச்சு விட்டாள். அந்த நினைவே சித்திரவதையாக இருந்தது. 

லண்டனில்லாமல் எங்கேயாவது ஓடவேண்டும் போல் இருந்தது. 

அடுத்த நாள் அம்மாவும் மைதிலியும் கோயிலுக்குப் போய்விட்டார்கள். இன்று அவளின் இறுதிச் சடங்கு என்பதை எப்படிச் சீரணிப்பது என்று தெரியவில்லை. 

சமயலறையில் காலைச் சாப்பாட்டின் மணம் மூக்கைத் துளைத்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்திரா சாப்பாட்டு டன் வருவாள் என்று தெரியும். இந்திரா இவனைப் பாதுகாப்ப தில் கண்ணாக இருக்கிறாள். சாப்பாடு இறங்குமா அவனுக்கு? 

அவன் எதிர்பார்த்ததுபோல் அவள் வந்தாள். சாப்பாடு தயார் என்று சொல்ல வந்தாள். 

“இந்திரா……” அவன் குரல் கரகரத்தது. 

அந்த வீட்டில் அவர்கள் இருவரையும் தவிர யாரும் இல்லை. அவள் இருபத்திரண்டு வயது வாழாவெட்டி. அவன் இருபத்தி எட்டு வயதில் காதலியை நெருப்பில் எரியக் காத்திருப்பவன். 

‘என்ன’ என்பதுபோல் அவனை நிமிர்ந்து பார்த்தாள். “இன்று டெவீனாவின் உடல் இந்த உலகை விட்டு மறையப் போகிறது.” 

அவள் மறுமொழி சொல்லாமல் நின்றாள். “லண்டனிலிருந்தால் பைத்தியம் பிடிக்கும்…” 

இந்த மன நிலையில் எங்கே போகப் போகிறான். பரிதாபத்துடன் அவனைப் பார்த்தாள். 

“நானும் வரட்டுமா” அவள் கேட்டது அவனைத் திடுக்கி டப் பண்ணியது. 

”மனம் சரியில்லாத நேரத்தில் எங்கேயாவது போவது நல்லதல்ல… நான் வருவது பிடிக்கா விட்டால்…” தயங்கித் தயங்கிச் சொன்னாள். அவன் அவளைக் கூர்ந்து பார்த்தான். எத்தனை தாய்மை அவள் பார்வையில்; இருபத்திரண்டு வய தில் இப்படியான ஒரு தெய்வீகமான முகமா? இவளில்லா விட்டால் பைத்தியமாயிருப்பானே. ”தயவு செய்து என்னோடு வா… டெவீனாவுடன் நான் போன இடங்களுக்குத் தனியாகப் போனால் எனக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடிக்கும்.”
 
அவள் முகத்தில் பிரகாசம். அவசரப்பட்டாள். பிளாஸ்கில் காப்பி யூற்றிக் கொண்டாள். மைதிலிக்கு ஒரு நோட் எழுதி வைத்துவிட்டு வெளியேறினாள். குழந்தைக்குப் பின்னால் ஓடும் ஒரு அன்பான தாயின் பரிவு அவள் செய்கையில் மிளிர்ந்தது. கார் லண்டனை விட்டு வெளியேற ஒரு மணித்தியாலத்திற்கு மேல் எடுத்தது. லண்டன் ஆரவாரத்தைக் கடந்து நாட்டுப்பக்கம் போகக் காட்சிகள் வித்தியாசமாக இருந்தது. 

“நான் லண்டனை விட்டு ஒரு நாளும் வெளியில் வரவில்லை” அவன் கடந்து போகும் காட்சிகளைப் பார்த்தபடி சொன்னாள். 

“நீ உலகத்தில் பார்த்த விடயங்கள் மிக அற்பம் என்று நினைக்கிறேன்” ராகவன் முணு முணுத்தான். 

“பார்த்ததே போதும். வாழ்க்கை அலுத்து விட்டது”. அவள் குரலில் விரக்தி. வராதா என்ன? காதலித்தவனையே தேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டது. விரக்தியை உண்டாக்காதா? கார் ஏதோ நாட்டுப்பக்கம் போய் ஏதோ ஒரு வளைவிற் திரும்பியது. 

“எங்கே போகிறோம்” இந்திரா அங்கும் இங்கும் பார்த்த படி கேட்டாள். லண்டனிற் தெரியாத புதிய காட்சிகள். பசுமையான வயல்கள் பரந்த காடுகள். “அதோ தெரிகிறதே உயர்ந்த மேடு, அந்த இடத்திற்குப் போகிறோம்” அவன் கனவிற் சொல்வதுபோற் சொன்னான். 

இந்திரா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். அவன் பார்வை எங்கேயோ பதிந்திருந்தது. 

“அந்த இடத்திற்குப் பெயர் சன்ரப்பரி சேர்க்கிள், ஆதி கால மனிதர் பூஜை செய்த புண்ணிய தலம். ஒரு பெரிய திடலில் பெரிய ஒரு பரப்பான திடலைச் சுற்றி வளைத்து புராதன மரங்கள் நிற்கின்றன. அந்த இடத்திலிருந்து பார்த்தால் நாலு பக்கமும் மைல்க் கணக்கில் சமவெளி தெரியும். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் மக்கள் இந்த இடத்தைப் புனித தலமாகப் பாவித்து யாத்திரை வந்தார்களாம்’ 

இந்திரா அவன் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டாள். தமிழர்கள் மாதிரி இவர்களும் இந்த மேட்டில் ஒரு முருகனைக் கும்பிட்டிருப்பார்களா? 

“இயற்கையை விரும்பும் டெவீனாவுக்குப் பிடித்த இடங் களில் இதுவும் ஒன்று. இப்படியான இடங்களுக்கு அவள் என்னையிழுத்துக் கொண்டு வரும்போது அவளின் விசித்திர மான மன உணர்வு என்னையாச்சரியப் படுத்தும். அவளின் உணர்வு இயற்கையைக் கௌரவிக்கும் உணர்வு” 

“இன்றைக்கு ஏன் வருகிறீர்கள்” டெவீனாவுடன் தன்னை யிழுத்துக் கொண்டு வந்தது, இருதயத்தைத் தொட்டது “இரண்டு மணிக்கு அவள் உடல் சிதையில் ஏறும்.” 

அவன் குரல் அந்நியமாக இருந்தது. இருவரும் அந்த மேடான இடத்திற்குப் போனதும் அவன் நேரத்தைப் பார்த்தான்: 

“இந்திரா இன்னும் ஒரு பத்து நிமிடங்களுக்கு என்னைத் தனியாக விடு” 

அவள் விழுந்து கிடந்த ஒரு மரக்கிளையில் அமர்ந்து கொண்டு அவன் போவதைப் பார்த்துக் கொண்டாள். தன்னை ஒரு நெருக்கமான சினேகிதியாக நடத்துவதை உணர்ந்தாள். காதல் எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது? 

ஆறு மாதத் திருமண வாழ்வில் அவளுக்குக் காதல் என்ன என்று தெரியாது. முதல் இரவே கணவனின் குடித்த பேச்சு அவளைக் கண் கலங்கப் பண்ணியது. 

காலம் கணவனின் நடத்தையை மாற்றும் என்ற பிரார்த்த னையின் பலன் நாலாம் மாதம் கன்னம் பழுக்கவும், கை கால் நோகவும் தொடர்ந்த போது இவனுடன் என்னவென்று நாற் பது, ஐம்பது வருடத்தைச் செலவழிப்பது என்று நடுங்கி விட்டாள். 

அவள் நினைவு எங்கோ போய் விட்டது. இந்திரா பெருமூச்சு விட்டாள். 

அவன் திரும்பி வந்தான், அழுதிருக்கிறான் போலும் கண்கள் சிவந்திருந்தன; நேரத்தைப் பார்த்தான். 

“டெவீனா இப்போது சாம்பலாகியிருப்பாள்” அவன் தன் பாட்டுக்கு முணு முணுத்தான். 

இந்திரா மௌனமாக இருந்தாள். இவன் அவளில் எவ்வ ளவு அன்பாக இருந்திருக்கிறான்? 

ராகவன் முகிலோடும் நீலவானத்தை வெறித்துப் பார்த் தான். வானம் நிர்மலமாக இருந்தது. நவம்பர் மாதத்தில் இங்கிலாந்தில் இப்படித் தெளிவான ஆகாயத்தைக் காண்பது மிக மிக அரிது. 

மரக்கிளைகள் இலையிழந்து காணப்பட்டாலும் ஆங் காங்கே சில பறவைகள் கீச்சிட்டுக் கத்திக் கொண்டிருந்தன. 

“டெவீனாவின் வாழ்க்கையில் நான் குறுக்கிடாமலிருந் தால் அவள் இப்போது உயிரோடு இருந்திருக்கலாம்.” 

தனக்குத் தான் சொல்லிக் கொள்கிறானா அல்லது எனக் கும் சேர்த்துச் சொல்கிறானா என்பதுபோல் இந்திரா அவனைப் பார்த்தாள். ”நான் அவளுடன் தர்க்கம் பண்ணி மனதைக் குழப்பாமலிருந்தால் கவனமாக ட்ரைவ் பண்ணியிருப்பாள்.” அவன் பார்வை பிரபஞ்சத்தில் எதையோ தேடியது. தான் அருகில் இருப்பது கூடத் தெரியாத உலகில் அவன் சஞ்சரிப்பது தெளிவாகத் தெரிந்தது. 

அவன் இன்னொரு தரம் தன் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான். முகத்தை மூடிக் கொண்டான். பார்க்கப் பரிதாப மாக விருந்தது. என்ன நினைக்கிறான்? டெவீனா என்றொரு உயிர் இவனோடு இணைந்த சரித்திரத்தை நினைத்துக் கொள்கி றானா? 

இந்திரா, டெவீனாவையும், ராகவனையும் பாரிசில் சந் தித்த அடுத்த வினாடியே தனது கனவு தகர்ந்து விழுந்ததையு ணர்ந்து கொண்டாள். 

அந்தக் காந்த விழிகளில் நர்த்தனமிடும் நளினத்தின் அடுத்த பெயர் காதல் என்று சொல்ல எந்தக் கவிஞனும் பிறக்கத் தேவையில்லை. 

‘பாவம் டெவீனா’ இந்திரா பெருமூச்சு விட்டாள். ராகவ னின் நினைவோடு தன்னையும் இணைத்து அவன் மனக்குகை யில் அவன் தேடும் பதில்களைத் தானும் தேடினாள். 

இப்போது கதை சொல்லும் அந்தக் காந்தக் கண்கள் நிரந்தரமாக மூடியிருக்குமா? 

கமரா பிடித்த கைகளை புழுக்கள் அரிக்குமா? தாளம் போடும் அவள் நடை சரித்திரமாகி விடுமா? சங்கீதம் ரசித்த மனம் மௌன உலகில் சங்கமிக்குமா? இவனையணைத்த உடலை இறப்பு தழுவிக் கொண்டது கொடுமை இருபத் தைந்து வயதில் இப்படியான ஒரு சாவு யாருக்கும் வரவேண்டாம். 

அவனின் சோகம் அவள் கண்களை நனைத்தது. 

“அழாதே ராகவன்” அழுது கொண்டு அவள் சொன்னாள். “அவளுடன் மிகவும் பாரதூரமான தர்க்கம் செய்தேன். அந்த யோசனையால் கவனக் குறைவு ஏற்பட்டிருக்கலாம்.” திருப்பித் திருப்பி இந்த வார்த்தைகளைச் சொன்னான். 

அவன் அவளின் இறப்புக்குத் தன்னை பிணைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் சொன்னான். 

”அவள் என்னை முதற்தரம் தனிமையாகக் கூட்டிக் கொண்ட போன இடத்தைக் காட்டுகிறேன்.” இவளின் சம்ம தத்தை அவன் எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. எழுந்தான், நடந்தான், அவள் தொடர்ந்தாள். நியு ஹேவனுக்குப் போய்ச் சேர்ந்தபோது பின்னேரம் நான்கு மணியாகி விட்டது. 

“இந்த வழியால் ஈஸ்ட்போன் என்ற நகரம் போக வேண்டும்” புகாரை ஊடறுத்துக் கொண்டு கார் போய்க் கொண்டிருந்தபோது ராகவன் சொன்னான். 

பத்தடிக்கு முன்னால் எந்தக் கார் வந்தாலும் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத புகார். 

அதிலும் அதிகாலையில் புகாரின் அடர்த்தி பயங்கரமாக இருக்கும். மிகக் மிகக் கவனமாக ட்ரைவ் பண்ணாவிட்டால் உயிருக்காபத்து வருவது நிச்சயம். 

கிராமப் புறமென்ற படியால் விளைவுகளும் நெளிவுகளுமான சிக்கலான பாதையது. 

ராகவன் சொல்வதுபோல் அவர்கள் செய்து கொண்ட தர்க்கத்தின் தாக்கம் மனத்தில் அழுத்தமாயிருந்து. துன்பம் கொடுத்திருந்தால் அதுதான் அவள் இறப்புக்குக் காரணமாக இருந்திருக்குமா? 

அதற்கப்பால் இந்திராவால் எதையும் நினைக்க முடிய வில்லை. எத்தனையோ பேர் விபத்தில் இறப்பதுபோல் டெவீனாவும் இறந்து விட்டாள். சோகமான நிகழ்ச்சி.நியுஹே வன் பீச் புகாரில் மூடி பயங்கரமாய்த் தெரிந்தது. வெள்ளைத் தோல் உடுத்த அரக்கர்கள் படுத்திருப்பதுபோல் வெண்குன்று கள் புகாரில் மங்கலாகத் தெரிந்தது. குன்றில் அடிபடும் அலைகள் மயான அமைதியைக் குலைப்பது மனத்தில் எத்த னையோ பயங்கரக் கற்பனைகளை வரவழைக்கப் பண்ணியது. 

இவள் தன்னுடன் வருகிறாள் என்று கூட தெரியாதவன் போல் நடந்தான். கனவில் நடப்பது போலிருந்தது. 

தான் இவனுடன் வராவிட்டால் இந்தக் குன்றிலிருந்து இவன் கீழே குதித்து உயிரை மாய்த்தாலும் மாய்த்திருப்பான் என்று நினைத்ததும் ஓடிப்போய் அவனருகில் இணைந்து கொண்டாள். 

”இந்த இடம் நடு இரவில் மிக மிகப் பயங்கரமாக இருக்கும்.என்னை முதற்தரம் இவ்விடம் டெவீனா அழைத்து வந்தபோது எனக்குப் பயம் வந்தது. தனக்குப் பிடித்த அமைதி யான இடங்களில் இதுவும் ஒன்று என்று டெவீனா சொன் னாள். பாட்டியுடன் இளம் வயதில் இந்தப் பீச்சில் விளையா டிய ஞாபகங்களைச் சொன்னாள்.” 

ராகவன் ஆழ்ந்த கடலில் அப்பால் எதையோ தேடுவது போலத் தெரிந்தான். அவளுடன் பழகிய ஞாபகங்களுக்கு உயிர் கொடுப்பதுபோல் அவன் தனது வார்த்தைகளை அளந்து பேசினான். 

எவ்வளவு நெருக்கமாக அவனுடன் நிற்க முடியுமோ அவ்வளவு தூரம் நெருங்கி நின்றாள். அந்த இடத்திலிருந்து எப்போது வீடு போய்ச் சேருவோம் என்றிருந்தது. 

அவள் நினைத்துபோல் அவன் உடனடியாக லண்டன் போகவில்லை. அவள் தன்னுடன் இருக்கிறாள் என்ற பிரக்ஞை அவனுக்கிருக்கிறதோ என்று கூடச் சந்தேகப் பட்டாள். 

அவன் நிலை மிகப் பரிதாபமாக இருந்தது. ஒரு ஆண் மகனால் இப்படித் துயர்பட முடியும் என்பதை முதற் தரம் உணர்ந்து கொண்டாள். 

அவர்கள் வீட்டுக்குப் போனபோது மைதிலி இன்னும் விழித்திருந்தாள். இந்திராவை நன்றியுடன் பார்த்தாள். நீயில்லாவிட்டால் அம்மா போல் அண்ணாவும் பைத்தியமாயிருக்கலாம் என்று சொல்ல நினைத்தாள். ஆனாலும் மைதிலி ஒரு கேள்வியும் கேட்கவில்லை. மைதிலியும் இந்திராவும் சிங்கள ராணுவத்தினராலும் சிங்களக் காடையர்களாலும் கொலை செய்யப்பட்ட பலரைத் தெரிந்தவர்கள். அவர்களின் குடும்பத்தைத் தெரிந்தவர்கள். அவர்கள் துயரத்தை முகம் கொடுத்தவர்கள். 

ஒரு சில மாதங்களுக்கு முன் தங்கள் அன்புக்குரிய கீதாவின் குடும்பத்தை ஒரேயடியாக இழந்தவர்கள் அந்தத் துயர் என்னவென்று தாயைத் துயர் படுத்துகிறது என்று தெரிந்தவர்கள். 

அவன் தன் அறைக்குள் நுழைந்தபின் “பாவம் அண்ணா” மைதிலி பெருமூச்சு விட்டாள். 

“இந்திரா நீயில்லாவிட்டால் இந்த நிலையை எப்படி நான் சமாளித்திருப்பேன் என்று தெரியாது.” மைதிலி மனம் விட்டுத் தன் நன்றியைச் சொன்னாள் “எனது துன்பம் எனக்குப் பெரிதாக இருந்தது. ஆனால் உங்கள் குடும்பத்திற்கு நடந்த துயர்கள் மிக மிக ஆழமானது. உங்களுக்கு உதவ முடிந்ததற்கு மிகவும் சந்தோசப் படுகிறேன்.” 

மைதிலியை ஆறுதல் படுத்தச் சொன்னாள். ஆனாலும் தான் உடன் செல்லாதிருந்தால் ராகவன் சிலவேளை தற்கொலை செய்திருக்கலாம் என்ற சிந்தனை அவள் மனத்தை அரித்துக் கொண்டிருந்தது. எதிரிக்கும் இந்த நிலை வரவேண்டாம் என்று மனம் சொல்லிக் கொண்டது. 

ஒரு சில நாட்களின் பின் பிலிப் வந்தான். மிஸ்டர் ஸேர்லிங் ராகவனைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னான். 

ராகவனுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. அவரை என்ன வென்று முகம் கொடுப்பது என்று தெரியவில்லை. ஒரு சில மாதங்களில் மனைவியையும் மகளையும் இழந்த அந்த மனிதனை ராகவன் பரிதாபமாக நினைத்தான். பிலிப்பின் ஆதரவுடன் ஹாம்ஸ்ரெட் போன போது மிஸ்டர் ஸேர்லிங்கின் துயரமான முகம் அவனை நிலை குலையப் பண்ணியது. 

“உனது துயரை நான் புரிவேன்” இவன் தோளில் கை போட்டு உள்ளே அழைத்துச் சென்றார். அவர் அன்பை அவனாற் தாங்க முடியாதிருந்தது. தன் துயரை மறைத்து விட்டு இவன் துயர் பற்றிப் பேசுகிறார் என்ன பேசுவது என்று தெரியவில்லை. 

“டெவீனாவைப் புதைக்கவில்லை, எரித்தோம் என்று பிலிப் ‘சொல்லியிருப்பான் என்று நினைக்கிறேன்” ராகவன் மௌனமானான். 

“உனக்காக அவள் இந்துவாக மாறிவிட்டாளோ என்று யோசித்தேன்” அவர் சொன்னார். 

அவனுக்குக் குழப்பமாக இருந்தது. அவள் அப்படி ஒருநாளும் நினைத்திருக்க மாட்டாளே! “அவள் தாயின் மரணச் சடங்கின்போது தான் எனக்கு முன் இறந்தால் எரித்துவிடச் சொன்னாள்” தகப்பன் சொன்னார். 

ராகவன் வேதனையுடன் சிரித்தான். “அவள் இந்துவாக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்காது. இந்து சமயத்தைச் சேர்ந்தவனாக நான் இருப்பதையிட்டு வெட்கப்பட வேண்டும் என்று சொன்னாள்.” 

இப்போது தகப்பன் ராகவனை ஆச்சரியத்துடன் பார்த்தார். அவர் முகத்தில் தோன்றிய கேள்விகளுக்கு அவன் விளக்கம் சொல்ல வேண்டி வந்தது. இந்து சமயத்திலுள்ள சாதிக் கொடுமைகளை அவள் பாரதூரமாக வெறுத்ததை அவன் விளக்கிச் சொன்னான். 

அவர் புரிந்து கொண்டாரா தெரியாது. நடராஜர் சிலைக்கருகில் வைக்கப் பட்டிருந்த பேழையைக் காட்டினார். 

“அதுதான் என் மகள். என் மகளின் அஸ்தி” தகப்பனின் குரல் கசிந்தது. ராகவனுக்கு இதயம் வெடிக்கும் போலிருந்தது. 

இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளையணைத்த கைகளில் அவள் அஸ்தியைத் தொடுவதை அவனாற் கற்பனை செய்ய முடியாதிருந்தது. 

“என்னை விட உனக்குத்தான் அவளில் கூட…” அவருக்கு மேலே சொல்ல முடியவில்லை. 

“லண்டனில் பூங்காவனங்களில் இப்படி அஸ்தியைப் பரப்புவோம். நீ என்ன செய்யலாம் என்று சொல்” இந்தத் தகப்பனின் மனித நேயம் அவன் இருதயத்தைத் தடவியது. மகளின் ஒரு காலக் காதலனுக்கு எவ்வளவு மதிப்பு இவர் தருகிறார்? 

“டெவீனாவின் அறையை அடுக்கும்போது இந்தக் கடிதம் கிடைத்தது. உனக்கு எழுதி அனுப்பபடாத கடிதம் என்று நினைக்கிறேன்.” 

தகப்பன் ஒரு கவரை எடுத்துக் கொண்டு ராகவனிடம் கொடுத்தார். ராகவன் வாங்கிக் கொண்டான். 

எதிர்பாராத விடயங்களை ராகவன் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. 

“டெவீனாவின் றெக்கோர்ட், ரேப், கலக்ஸன் ஆயிரக் கணக்கிலிருக்கிறது. உனக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்.” 

டெவீனாவின் கதவைத் திறந்து விட்டார். மிஸ்டர் ஸேர் லிங்.

“இன்னொரு நாள் பார்க்கலாம்” அவன் எழுந்தான். அவனால் அந்த இடத்தில் இருக்கமுடியவில்லை. எங்காவது தனிய ஓட வேண்டும் போலிருந்தது. 

பிலிப் அவனுடன் வந்தான். “டெவீனாவின்…” பிலிப் ஏதோ சொல்ல வாயெடுத்தான். 

“அவனுக்குப் பிடித்த ஹாம்ஸ்ரெட் பார்க்கில் பரப்புவோம். அவள் அஸ்தியில் ஆயிரம் றோஸ் பொட்டுக்கள் மலரட்டும்” ராகவன் பிலிப்பின் கரங்களைப் பற்றிக் கொண்டு சொன்னான். டெவீனாவைக் காதலித்த இரு மனிதர்கள் அந்த ஆடவர்கள். 

“என் அருமை ராகவன், இரவின் தனிமையில் என்னருகில் நீ வேணும், உனது விழிகளின் மொழிகள் நினைவில் உரசுகின்றன. உன் ஆசையணைப்புக்கு என்னுடல் ஏங்குகிறது. என் இளமைக்கனவுகள் வெறுமையாய்ப் போகணும்? உன் மெல்லிய மூச்சு என் நினைவைக் கலைக்கிறது இன்னொரு காலம் இறந்த காலம் வரவேண்டும். உன்னோடு நான் உலகமெலாம் வலம் வர வேண்டும். செயின்ட் நதி ஓரத்தில், செயின்போல் கதீட்ரலில் உன் அணைப்பில் நானிருக்க உலகம் உறங்கட்டும் நீயில்லா நாட்கள் நிலவற்ற வானம். உடைந்த இதயம், சிதைந்த கனவுகள் இறை பிடிக்கும் உறவுகள், இதுதான் யதார்த்தமா? நீதான் என் முதற்காதல், இறுதிவரை என் காதல், நீ யெனக்கு வேணும்,  பதிலெங்கே ராகவன்,” 

டெவீனாவின் பெரிய கடிதத்தின் சுருக்கமிது. இவன் அவளுடன் தொடர்பு வைக்காத காலத்தில் எழுதப்பட்டு இவனுக்கு அனுப்பப் படாத கடிதம் என்று தெரிந்தது. 

பிலிப் அடிக்கடி வந்தான். கல்லூரியில் ஒருத்தரை ஒருத்தர் ஏனோ தானோ என்று நடத்திக் கொண்டவர்கள் இப்போது டெவீனா இறந்த பின் ஆறுதலுக்காக நெருக்கமாய் விட்டார்கள். 

அவளுக்குப் பிடித்த பேத்ஹோவனின் பியானோ கொன் சேர்ட்டோவைக் கேட்பது இருவருக்கும் பிடித்திருந்தது. 

“நீ அதிர்ஷ்ட சாலி” பிலிப் திடீரென்று ஒரு நாள் ராகவனிடம் சொன்னான். 

ராகவன் அவன் என்ன சொல்கிறான் என்று தெரியாமல் பிலிப்பை ஏறிட்டுப் பார்த்தான். 

“உன் வீட்டில் இருக்கும் இந்திராவுக்கு உன்னில் அன்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.” 

“அவள் எனது சொந்தக்காரப் பெண்” பிலிப்பின் முகத்தைப் பார்க்காமல் சொன்னான் ராகவன். 

“அவ்வளவுதானா” பிலிப் ஆச்சரியத்துடன் கேட்டான்.

”கல்யாணத்தில் தோல்வி கண்டவள்.” 

“நாங்கள் காதலில் விரக்தி கொண்டவர்கள்” பிலிப் விரக்தியுடன் சொன்னான். 

“இந்திரா இல்லாவிட்டால் நான் அன்ரோனியோ மாதிரி விஸ்கியிலோ, கொக்கேயினிலோ நிம்மதி தேடியிருக்க வேணும்” ராகவனின் குரலில் 

“டெவீனாவின் இடத்தை இந்திரா எப்போது எடுக்கப் போகிறாள்” பிலிப் நேரடியாகக் கேட்டான். 

ராகவன் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. “இந்திராவில் எனக்கு அபிமானம், மரியாதையிருக்கிறது. இந்திரா டெவீனாவாக முடியாது” 

“ஞாபகங்கள் புதிய கோளத்தில் ஒருகாலத்தில் தெரியும். உண்மையான அன்பை உதைத்துத் தள்ளாதே” பிலிப் சினேகிதத்துடன் ஆலோசனை சொன்னான். 

1989 மார்கழி மாதம் வந்தது. ஒரு வருடம் ஓடிப் போய் விட்டது. 

இந்திரா இந்தியா போக ஆயத்தம் செய்கிறாள். தனது இலட்சியத்தை நிறைவேற்ற இசையிலுள்ள காதலைப் பரிபூரணப்படுத்த சங்கீதம் படிக்கப் போகிறாள். 

பாரிசிலிருந்து மாமியும் மாமாவும் வந்தார்கள். மகளின் முடிவை அவர்கள் தர்ம சங்கடத்துடன் ஏற்றுக் கொண்டார்கள். 

மனம் மாறித் தன் கணவனிடம் வருவாள் என்று எதிர்பார்த்திருந்தார்கள். இப்போது இந்தியா போகிறாள். கஷ்டப் பட்டு உழைத்துத் தன் படிப்புக்குத் தேவையான பணத்தைச் சேர்த்து வைத்திருப்பதாகச் சொன்னாள். 

அவள் துணிவும் விடாமுயற்சியும் எல்லோரையும் மெச்சப் பண்ணியது. 

அவள் இந்தியா புறப்பட முதல் மைதிலியையும் அவளை யும் சாப்பிடக் கூப்பிட்டான். 

கடைசி நேரத்தில் மைதிலி ஏதோ காரணம் சொல்லி விட்டு நின்று விட்டாள். இந்திரா ராகவனின் காரில் ஏறிக் கொண்டாள். பாரிஸ் அம்மாவும் ராகவனின் அம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் ஏதோ அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர். 

”எனக்குச் சாப்பாடு வேண்டாம்.” அவள் குரலில் ஏதோ ஒரு வித்தியாசம். 

“ஏன்” 

“நீங்கள் டெவீனாவுடன் போகும் இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போங்கள்'” 

இந்திரா ஏன் அப்படிச் சொல்கிறாள் என்று தெரிய வில்லை. இந்திராவுக்கும் டெவீனாவுக்கும் எத்தனையோ ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் அவர்களுக்கு இயற்கையிலும் இசையிலுமுள்ள ஈடுபாடும் ஒன்று. ”உங்களை இப்படி அவள் ஆக்கி வைத்திருக்கிறாள் என்றால் நீங்கள் மிகவும் ஆழமாக அவளை நேசித்திருக்க வேண்டும்” அவள் தன்னை டெவீனாவாக வைத்துக் கற்பனை செய்கிறாளா? 

”ஆறிக் கொண்டிருக்கும் புண்ணை இன்னொருக்கா வெட்ட நான் தயாராவில்லை” அவன் குரலிற் கடுமை. 

“‘டெவீனா ஒரு விதத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலி” அவள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் மறுமொழி சொல்லவில்லை. “காதலே என்னவென்று தெரியாமல் ஆயிரக் கணக்கான பெண்கள் அழிந்து போகிறார்கள். ஒரு சில வருடமென்றாலும் உங்களின் அன்பை இவ்வளவு தூரம் கவர்ந்தது அதிர்ஷ்டம்தான்.” 

“இந்திரா பிளீஸ் ஸ்ரொப். நான் இன்று சாப்பிடக் கூப்பிடக் கூட்டிக் கொண்டு வந்தது ஏதோ ஒரு முக்கிய விடயம் பற்றிப் பேசுவதற்கு” 

அவள் கேள்விக் குறியுடன் அவனைப் பார்த்தாள். “உன்னிடம் ஒரு முக்கிய விடயம் பற்றிப் பேச நான்தான் மைதிலியைக் கடைசி நிமிடத்தில் வரமுடியாது என்று நடிக்கும்படி சொன்னேன்.” 

இந்திராவின் குழப்பத்தை அவன் நீடிக்க விரும்பவில்லை. 

டெவீனாவுடன் அவன் சேர்ந்திருந்து உலகத்தை மறைந்த இடமான N.F.T (Nation Film Theatre)பக்கம் கூட்டிக் கொண்டு போனான். இந்திராவின் பார்வையில் ஏதோ தேடல்கள். 

இவனின் மனத் திட்டத்தைத் தேடியா? வழக்கம்போல் மார்கழிக் குளிர் உயிரை வதைத்தது. 

தேம்ஸ் நதிப் படிக்கட்டுகளுக்கப்பால் போடப்பட்டிருக் கும் பென்சில் உட்கார்ந்தார்கள். தேம்ஸ் நதி சோம்பேறி வேலைக்காரன் போல் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. “எவ்வளவு காலம் இந்தியாவில் இருப்பாய்” அவன் தன் பார்வையை அவளிற்பதித்தபடி கேட்டான். “பெரும்பாலும் இரண்டு, மூன்று வருடம் இருப்பேன் என்று நினைக்கிறேன்” குரலில் சோகம் பார்வையில் இன்னும் ஏதோ ஒரு கலக்கம். 

“உனது கணவர் உன்னைத் தேடி வந்தால் என்ன செய்வாய்” ராகவன் அவள் முகத்தின் உணர்ச்சிகளின் மூலம் மறுமொழியைத் தேடினாள். 

அவள் விரக்தியாய்ச் சிரித்தாள். அவனுக்கு அந்தச் சிரிப்பு தர்ம சங்கடமாக இருந்தது. “என்ன சிரிக்கிறாய்.” 

“வெளிநாட்டு மாப்பிள்ளைகளைக் கட்ட எத்தனையோ இலங்கைப் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தியை இவர் திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறதாம்.” 

“உனது டிவோர்ஸ் இன்னும் வரவில்லையே” 

“சட்டப்படி கல்யாணத்திற்குத்தான் இரண்டு வருடம் டிவோர்ஸ் பைனலைஸ் பண்ணக் காத்திருக்க வேணும், இவர் இந்தியாவில் தாலி கட்டுகிறார், இன்னும் சில மாதங்களில் சட்டப்படி கல்யாணம் செய்யலாம்.” 

அவன் ஆச்சரியத்துடன் வாயைப் பிழந்தபடி இருந்தான். சிலருக்குக் கல்யாணம் சடங்கு எல்லாம் தங்களின் சுய நலத் தின் அடிப்படையிற்தான் நடக்கிறது” இந்திராவின் குரலில் எரிச்சல் இல்லை வேதனை தெரிந்தது. “ஐயம் ஸாரி இந்திரா” டெவீனாவைப் போல் இந்திராவும் மிகவும் இரக்க மனம் படைத்தவள், அவளின் வேதனை பரிதாபமானது. அவள் கொஞ்ச நேரம் விம்மினாள். அவன் மௌனமாக இருந்தான். அவள் கணவன் இவளைத் துன்புறுத்தினான். தானும் டெவீனாவைத் துன்புறுத்தினேனா என்று ஒருகணம் யோசித்தான். தான் சொல்ல வந்ததை அவள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகி றாள் என்று தெரியவில்லை. 

“என்ன சொல்லவேண்டும் என்று கூட்டிக்கொண்டு வந்தீர்கள்” கண்ணீரைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு இவனைக் கேட்டாள். 

“சொல்லவில்லை… கேட்க வேண்டும் என்று கூட்டிக் கொண்டு வந்தேன்.” 

கேள்விக் குறியுடன் அவனைப் பார்த்தான். 

“அதாவது….” அவன் முகத்தில் அவள் கண்கள் மொய்த்தன.  

அவன் தயங்கினான், எதிர்காலத்தைப் பற்றிய பேச்சை என்னவென்று இரண்டு நிமிடத்தில் பேசுவது என்று தெரிய வில்லை. 

“அதாவது…. உனது சங்கீதப் படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்யும் யோசனையிருக்கிறதா” 

“சூடு கண்ட பூனை நான்” அவள் இன்னொரு தரம் விரக்தியுடன் சிரித்தாள். 

“எல்லாரும் குடிகாரர்கள் இல்லை…. எல்லா ஆண்களும் பெண்களைக் கொடுமை செய்பவர்கள் இல்லை. உனது தகப்பன், எனது தகப்பன், தியாகராஜா மாமா எல்லோரும் எவ்வளவு நல்லவர்கள்.” அவன் ஆண் வர்க்கத்திற்கு வக்காலத்து வாங்கினான். 

அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவளின் நேரடியான பார்வை டெவீனாவை ஞாபகப்படுத்தியது. 

“ஏன் அப்பா உங்களிடம் கல்யாணம் பேசச் சொன்னாரா” அவள் குரலில் வியப்பு. ராகவன் கல்யாண விடயம் பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை. 

“அப்பா சொல்லவில்லை நான்தான் யோசித்தேன்.”

என்ன யோசித்தீர்கள் என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தாள். அவள் பார்வை அவன் இருதயத்தை ஊடறுத்தது. 

“இன்னும் சில வருடங்களில்… அதாவது தற்போதைக்கு இல்லை… இன்னும் சில வருடங்களில் யாரையும் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஆசை வந்தால், அல்லது யோசனை வந்தால்…” 

சொல்ல வந்ததைச் சொல்லாமற் தயங்கினான். 

ஏன் மென்று விழுங்குகிறாய் என்பதுபோல் அவள் அவனையுற்றுப் பார்த்தாள். 

“நீ என்னைக் கல்யாணம் செய்தால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பேன்.” ராகவன் சொல்லி முடிப்பதற்கிடையில் இருதயம் படபடவென அடித்துக் கொண்டது. அவள் திடுக்கிட்டாள். 

போன வருடம் காதலியைப் பறிகொடுத்தவன். ஒரு வருடதிற்கிடையில் இப்படிக் கேட்பதை அவளால் நம்ப முடியாதிருந்தது. 

“இந்திரா… மைதிலி மிகவும் வாடிப்போய் இருக்கி றாள்… அவள் மனம் அறிந்து கல்யாணத்திற்குச் சரி சொல்ல எத்தனை நாள் எடுக்குமோ தெரியாது. ஒரு காலத்தில் அவள் ஒரு நல்ல மனிதனைச் சந்திப்பாள் என்று நினைக்கிறேன். அம்மாவின் மூத்த மகன் நான். மூத்த மகனின் குடும்பத்தை யிழந்த தாய் இன்றோ நாளையோ அடுத்த வருடமோ என்னை ஒரு கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்காமல் விடப் போவதில்லை.” அவன் குரலில் கெஞ்சல். 

“உங்கள் தாய்க்காக நான் உங்களைக் கல்யாணம் செய்ய வேணுமா” அவள் குரலில் கோபம். 

”இல்லை என்னையுணர்ந்த ஒரு ஜீவன் நீதான் என்பதால் எனக்கு நீ தேவை….” அவளின் வேண்டுகோள் அவன் ஆத்மாவைப் பிழிந்து கொண்டு வந்தது. அவள் சிலையாக இருந்தாள். உதட்டைக் கடித்துத் தன் உணர்ச்சிகளை யடக்கிக் கொண்டாள். “இந்திரா நீ ஒரு நாளும் டெவீனாவாக மாற முடியாது. டெவீனா ஒரு நாளும் இந்திராவாக மாற முடியாது. இந்த நிமிடத்தில் எனக்கு எந்தப் பெண்ணுமே அருகில் வரவேண்டாம். இன்னும் சில வருடங்களில் என் தாய் நச்சரிக்கும் போது நான் ஏதோ பண்ணித்தான் ஆக வேண்டும். ” 

“உனது வெறுமையை நிரப்ப என்னைப் பாவிக்கிறாயா” 

“இல்லை என்னையுணர்ந்த, என்னைப் பைத்தியமாகாமல் காப்பாற்றிய ஒரு அன்புள்ள பெண்ணின் ஆதரவை எதிர்பார்க்கிறேன்” அவன் அவள் முகத்தில் ஒரு நல்ல பதிலைத் தேடியது அப்பட்டமாகத் தெரிந்தது. அவனின் நேர்மை அவளைச் சிலிர்க்கப் பண்ணியது. 

அவள் அவனைப் பார்க்காமல் திரும்பியிருந்து அழுதாள். அதையவனாற் சகிக்க முடியாது. 

”நான் சொன்னது பிடிக்காவிட்டால் மன்னித்து விடு பிளீஸ் தயவு செய்து அழாதே… தயவு செய்து அழாதே” 

“ராகவன்…” அவள் விம்மி விம்மியழுதாள். ஏதோ சொல்ல வேண்டியவை தொண்டைக்குள் சுருண்டு கிடப்பது போல் கேவிக் கேவியழுதாள். 

“என்னைத் திட்ட வேண்டுமென்றால் திட்டு ஆனால் அழாதே” அவன் கெஞ்சினான். 

“ராகவன் என் நினைவு தெரிந்த நாளிலிருந்து நீதான் எனக்குத் தாலி கட்டப் போகிறாய் என்று சொல்லி வளர்த்தார்கள். நீ வெள்ளைக் காரியுடன் உறவானதும் யாரையாவது கட்டிக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டேன்…. ராகவன் உனக்குத் தெரியுமா உன்னில் வைத்த அன்பை என் மனதிலிருந்து எடுக்க எவ்வளவு பாடுபட்டேன் என்று” 

அவள் கதறல் அவனை நிலை குலையப் பண்ணியது. 

“இப்போது என்னிடம் அன்பில்லாவிட்டாலும் அனுதாபம் இல்லையா இந்திரா” அவன் கெஞ்சல் அவளை நெகிழப் பண்ணியது. 

”எனக்குத் தெரியாது. என்னை இந்தியா போகவிடு. காலம் வந்தால் பதில் சொல்கிறேன்” அவள் எழுந்தாள். 

இவன் பின்னால் வருகிறானா என்று திரும்பிப் பார்க்காமல் நடந்தாள். அவன் பொறுமையுடன் தொடர்ந்தான். இரண்டோ மூன்று வருடங்கள் வாழ்க்கையில் மிகவும் நீண்ட காலங்கள் ஆனாலும் அவன் காத்திருப்பான்.

(முற்றும்)

– அவனும் சில வருடங்களும் (நாவல்), முதல் பதிப்பு: ஜூலை 2000, குமரன் பப்பிளிஷர்ஸ், சென்னை.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *