அற்றைத்திங்கள் அவ்வெண்நிலவில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை  
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 1,402 
 
 

பறம்பின் உறக்கம்

வட்ட நிலா.வானமகள் பொட்டு வைத்தால் போல உச்சிவானில் பள பளத்துக் கொண்டிருக்கிறது. நிலவொளியில் பாரி இல்லாத சோகத்தில் பறம்பும், யானை ஒன்று தனது கால்களை மடித்து உறங்குவது போலத் தூங்கிவழிந்து கொண்டிருக்கிறது, பறம்பின் உறக்கத்தைக் கெடுத்துவிட விரும்பாதன போல உமணரின் சகடங்கள் மிக மெதுவாக ஊர்ந்தபடி ஏறிக் கொண்டிருந்தன,

புல்லும் மரங்களும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் காட்டுப்பாதை.,ஓரமாக முள் போட்ட வேலி…வேலியை ஒட்டியதாய் ஈச்சம் இலையால் வேயப்பட்ட சிறிய இல்லம். கபிலரின் உறவினரான அந்தணர் ஒருவரின் இல்லம் அது…கூரைமீது சுரைக்கொடி ஏறிப் படர்ந்திருக்கிறது… வீட்டு முற்றத்தில் இலவம் பஞ்சு வெடித்து எங்கும் பரந்து கிடக்கிறது… சற்றுத்தொலைவாக புதர் மண்டியதாய் மலை மேடு ….அதன் மேல் ஏறிநின்ற அங்கவை,சங்கவையின் கையைப் பற்றிய படி நின்றுகொண்டிருக்கிறாள். சங்கவை ஒன்று இரண்டு. மூன்று… என மலை ஏறும் சகடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள். அங்கவைக்கு பத்து அகவையே ஆகிறது.

குழந்தையிடம் தானே மனதுக்கும் செயலுக்குமான இடைவெளி மிக மிகக் குறைந்ததாக இருக்கும். குழந்தையால் தான் அந்தந்தக் கணத்துக்கான வாழ்வை வாழ முடிகிறது,

அங்கவையின் பார்வையும் அந்தச் சகடத்தைத்தான் தொடர்கிறது. அவளும் கூட தங்கையோடு சேர்ந்து ஒன்று இரண்டு….. என முணுமுனுக்கிறாள். ஆனால் அவள் குழந்தையல்லவே… பதினாறு வயது பருவமங்கையாச்சே….இறந்த காலம் பற்றிய நினைவுகளுக்கும் எதிர்காலம் பற்றிய விடையறியா கேள்விக்கும் இடையே நிகழ்காலத்தில் அவள் மனம் உழன்றுகொண்டிருக்கிறது.

இரண்டு திங்களுக்கு முன்னர்…பறம்பு மலைச்சாரலில் முற்றுகையிட்டிருந்த முவேந்தர் படை…பாரியை வெற்றிகொள்ள முடியாத குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருந்தது.

அவள், பறம்பு மலை உச்சியில் தன் தங்கை யோடு நின்று இவ்வாறுதான் மலைச்சாரலில் உலவும் மூவேந்தரின் குதிரைகளை எண்ணிக்கொண்டிருந்தாள் .அப்பொழுது அவள் மனமும் குழந்தையின் குதூகலத்துடன்தான் இருந்தது. தந்தை தூரத்தில் கபிலரோடு உரையாடிக்கொண்டிருந்தார்..அவரது ஸ்தூல கரம் ஒன்று தம்மிருவரையும் எப்பொழுதும் அணைத்தபடி பாதுகாப்பதாய் அவள் உணர்வதனால் சற்று கர்வத்துடனேயே குதிரை ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் இன்றோ….

அதே நிலவு வானில் … சலனம் எதுவுமில்லாது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது….

ஆனால்…பறம்போ மூவேந்தர் வசமாகிவிட்டது-…

அவள் தந்தையும் உயிருடன் இல்லை…

அங்கவை மனதுக்குள் வெம்பிக்கொண்டிருக்கிறாள்.

பறம்பு பாரியின் உயிர் ஏறி இருக்கும் உடல். மூவேந்தர் வஞ்சகமாக அவன் உயிரைப் பறித்து பறம்பினைப் பற்றினர். இதனால் பாரியின் புகழ் வளர முவேந்தர் பழிகொண்டார்..

போர்.. மக்களின் உயிரை மட்டும் பறித்துவிடுவதில்லை.. ..

வெற்றி பெற்றவன் எதிரியின் ஊரை அழிப்பதோடு திருப்தி அடைவதில்லை….

வென்றவன் .. தோற்றவன் பக்கத்துப் பெண்களை அடிமையாக்கி அவர்கள் வாழ்வை அடியோடு வேரறுத்தும் விடுகிறான்.

போர்… கோபிரத்தில் வாழ்ந்தவர்களை புழுதியில் புரளவைத்துவிடுகிறது. கொண்டிமகளிராக….(கொண்டிமகளிர்-போரின் போது பகையரசர்களால் பிடிக்கப்படும் பெண்கள் )போரில் வென்றவனது உடைமைப் பொருளாகி இறுதியில் பரத்தமைக்கு (பரத்தையர் விலை மகளிர் )அப்பெண்களைத் தள்ளிவிடுகிறது.

பாரி கொடையில் மாரிக்கு இணையானவன் ..அவன் கொண்ட அறம் தான் அங்கவையும் சங்கவையும் கொண்டிமகளிராய் ஆகிச் சீரழியாது கபிலர் என்ற நிழற் குடையின் கீழ் வாழவைத்திருக்கிறது.

ஆனாலும்….கபிலர்கூட இவர் வாழ்வைச் சீரமைக்க எவ்வளவு போராடிக் கொண்டிருக்கிறார்…குறிஞ்சிக்கோர் கபிலர் எனப்போற்றப்பட்டவர் கபிலர். குறிஞ்சி நிலத்தின் வாழ்வியலை—காதல் …புணர்ச்சியை… தமது கவிதைகள் பலவற்றில் பாடியவர். பருவ வயதில் ஆணுக்கும் பெண்ணுகும் இயல்பாகத் தோன்றும் காதலும் காமமும் அவர் பாடல் திறனால் அழகிய கவிதைகளாக வடிவங்கொண்டன,

ஆனால்…. இன்று பாரியின் பெண்களுக்கு அவன் தகுதிக்கேற்ற இடத்தில் மணமுடித்துவைப்பதற்காக குறுநில மன்னரிடமும் வேந்தரிடமும் நடையாய் நடக்கிறார்.இந்த முரணை நினைக்கையில் அங்கவையின் உள்ளத்து வெம்மை பெருமூச்சாகி அவளைச் சுடுகிறது..தங்கையும் தானும் பண்டப் பொருளாக விலை கூரப்படுவதாக எண்ணி எண்ணி அவள் மருகிக் கொண்டிருக்கிறாள்.

இவளின் இந்த நிலைக்கு முதலில் வித்திட்டவன் பாண்டியன்…

பொறாமைத் தீ

இரண்டு வருடங்களுக்கு முன்பு பாண்டியன் ……பாரியிடம் ….அங்கவை சங்கவையைப் பெண்கேட்டுத் தூது அனுப்பியிருந்தான்..

இவ்விரு பெண்களையும் கண்டு காதல்வயப்பட்டதால் திருமணம் செய்ய விரும்பினானா… என்ன?

அங்கவை, சங்கவை ஆரோக்கியமான சூழலில் வளர்ந்தவர்கள் .அதனால் இயற்கையான பேரழகு அவர்களிடம் வஞ்சகமின்றிக் கூடியிருந்தது.தந்தை பாரியின் நற்குணங்களையும் மன உறுதியையும் நுண்ணறிவையும் உதிரத்தில் கொண்டவர்கள். தந்தைக்கு நிகரான கபிலரிடம் கல்வி அறிவு பெற்றவர்கள்.இந்த தகுதிகள் கொண்ட பெண்களை மணப்பதற்கு ஓர் ஆண்மகன் தவம் செய்திருக்க வேண்டும்.இந்தச் செய்திகள் எல்லாம் பாரியின் புகழோடு பாணர்களாலும் பாடினிகளாலும் பறம்பு தாண்டி தமிழகம் எல்லாம் எடுத்துச் செல்லப்பட்டே வந்திருக்கிறது.

பாண்டியன் இச்செய்திகளால் ஈர்க்கப்பட்டது உண்மைதான்.

பாரி ஒருவேளை சம்மதித்தால்….!அவன் ஆசைக்கு விருந்தாக …அந்தப்புரத்தை அலங்கரிக்கும் பதுமைகளாக மட்டுமன்றி அவர்களின் நுண்அறிவும் ,கல்வியும்…. கூடவே பாரி மகளிர் என்ற பெருமையும் மேலதிக வருவாய்தானே.

அனால்,,,..

பழமையான இனக் குழுத்தலைவர்கள் தங்களின் விழுமியங்களுக்கு மாறானவர்களாய் தங்களை விழுங்கி முன்னேறிவரும் வம்ப வேந்தர்களினை மனதளவில் வெறுத்தார்கள். அது மட்டுமல்லாது தங்கள் குலக் கொடியினரை வேந்தர்களின் பல மனைவியரில் ஒருவராக அந்தப்புரத்து அழகிகளாக அனுப்புவதிலும் அவர்களுக்கு உடன் பாடில்லை.

இதனால் வேந்தர்கள் தரும் அளவில்லாத செல்வங்கள் பொருட்டோ அன்றி பெரும் படையுடன் போரிட நேரிடும் என்று கருதியோ அவர்கள் வேந்தர்களுடன் சமரசம்செய்துகொள்வதே இல்லை..

அப்படியிருக்க

பெரும் வள்ளலும் மாவீரனுமான பாரி தன் பெண்களை தனக்கு மணமுடித்துத் தரமாட்டான் என்பதைப் பாண்டியன் அறிந்தே இருந்தான்.

ஆனாலும் அவன் பாரியிடம் பெண்கேட்டு அனுப்பியிருந்தான்..

காரணம்….

பாண்டியன் உள்ளத்தின் ஆழத்தில் பாரிமீது கொண்ட பொறாமை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது..

வேளிர் குலத்தலைவனும் குறுநில மன்னனுமான பாரி பெரும் வள்ளல் . அவன்போன்ற குலங்களின் தலைவர்கள் வள்ளன்மை கொண்டு விளங்குவதொன்றும் வியப்புக்குரிய செயலுமன்று. ஆரம்பம் முதல் குலங்களின் தேட்டம் என்பது அக்குலத்தில் உள்ள அனைவருக்குமே பொதுவானதாக இருந்து வந்திருக்கிறது.. குலத்தின் தலைவன் என்ற முறையில் தனித்து உரிமை கொள்ள முடியாது. பாண் கடன் என்றவகையில் பாணர், கூத்தர் என்ற கலைஞர் அந்த தேட்டத்தில் பங்கு பெறும் உரிமையாளர்களே .குல நிலைத்தலைவர்கள் என்ற நிலையில்

இருந்து வளர்ந்து குறுநில மன்னர்களாக வளர்ச்சியடைந்தபோதும் கொடை என்ற பெயரில் தமது செல்வங்களைப் பகிர்ந்து வழங்குவது இயல்பாக இருந்து வந்திருக்கிறது.

பாரியது கொடை வன்மையில் தம்மை நனைத்த பாணர் ,கூத்தர்கள் தாம் பயணிக்கும் இடமெல்லாம் கதைகளாகவும் பாடலாகவும் அவனது புகழைக் காவிச் சென்றனர்.அவன் புகழ் வேந்தர்களை மட்டுமன்றி கபிலர் எனற பெரும் புலவரையும் சென்றடைந்தது..

கபிலர் பறம்பினை நாடி வந்து பாரியிடம் நட்புக் கொண்டார்

நட்பு என்பது காதலை விட உயர்ந்தது என்பதற்கு வாழும் உதாரணமாகவே கபிலரும் பாரியும் வாழ்ந்தனர். அன்பைத் தாண்டிய பேரன்பு அவர்களைக் கட்டிப் போட்டது.

வேந்தரிரிடம் புகழ் வேட்கை இருந்தளவுக்கு அதற்கான தகுதி குறைவாகவே இருந்ததாகக் கபிலர் கருதினார்.

இடம் சிறிது என்றும் பொன்னுக்கும் பெண்ணுக்கும் என்றும் போர் செய்தனர் வேந்தர்கள் .பாரியோ தனக்கு உரிமையான முந்நூறு ஊர்களையும் இரவலருக்கு பகிர்ந்தளித்தான். முல்லைக்கு தேர் வழங்கிய அவனிடம் வாடிய பயிரைக்காணும் போதெல்லாம் வாடும் பேரன்பைத் தரிசித்தார் கபிலர் .. அவர் பாரியுடன் தங்கிய காலத்தில் பாணர் வாயிலாக கேட்ட உயர்வுகளிலும் மேலான பண்புகள் அவனிடம் இருக்கக் கண்டார் . வேளிர் குலத் தலைவன் பாரி தன்னை அந்த மக்களில் வேறானவனாகக் கருதியதே இல்லை. அவன் சிலசமயம் அந்த மக்களின் நண்பனாகவும் சிலசமயம் தந்தையாகவும் சிலசமயம் உடன் பிறபபாகவும் சிலசமயம் ஆசானாகவும் சிலசமயம் சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினானேயன்றி அந்தமக்களைவிட தான் உயர்ந்தவன் என்று கருதியதே இல்லை.

கபிலரால் பாடப்படுவதாகிய பெரும் பேறைப் பெறுவதற்கு மூவேந்தரும் விரும்பினர் என்றால் அதன் பின்னணியில் வேந்தரின் புகழ் வேட்க்கையும் அப்புகழால் அடையவிருக்கும் சமூக ஏற்புடமையுமே என்பதை கபிலர் அறிவார்..காலம் கடந்தும் தலைமுறை கடந்தும் தம் சந்ததி நிலை பெற அவர்களுக்கு இந்த அங்கீகாரம் வேண்டி இருந்தது.

அனால் பாரியோ கபிலர் தம் புகழைப் பாடுவார் என்ற ஆவல் காரணமாக அவரிடம் நட்புக் கொள்ளவில்லை.கபிலரின் சால்வினாலும் அவரது நுண்மான்நுலைபுலத்தினாலும் கவரப்பட்டு அவரை அவன் நண்பராக்கிக் கொண்டான்.

கபிலர் பாரியைத் தான் தரிசித்தவாறு தம் பாடல்களில் விபரித்தார்.

அவ்விபரிப்புக்கள் பாரியின் புகழ் வெளிச்சத்தை ஆயிரம் அயிரம் மடங்கு பிரகாசிக்கச் செய்தது.

கேவலம் ஒரு குறுநில மன்னன் இத்தனை புகழை அடைவதா என்ற பொறாமையால் உந்தப்பட்டே பாண்டியன் பெண்கேட்டு அனுப்பியிருந்தான். பாரி மறுக்குமிடத்து அதனையே காரணமாகக் கூறி அவனுடன் போரிடுவதே அவன் உள் நோக்காக்க் கொண்டிருந்தான் .போரின்பயன்

பாரியினை வென்றான் என்ற பெரும் புகழ் மட்டுமல்ல .மிளகுமுதலான மலைவளம் கொழிக்கும் மலைப்பாகமும்தான்.

பாண்டியன் தன்னையும் சங்கவையையும் ஒருசேர மணமுடித்துத் தருமாறு கேட்டு தூது அனுப்பிய நாள் இன்றும் அங்கவைக்கு நினைவு இருக்கிறது. முப்பது அகவையைக்கடந்து விட்ட பாண்டியன் திருமணமாகி இரு குழந்தைகளின் தகப்பன். சங்கவை அப்பொழுது தான் எட்டாவது அகவையை அடைந்திருந்தாள்,

அங்கவை மனம் வேளிர் குல இளைஞனும் சிறந்த வீரனுமான குயிலன் மீது ஈடுபட்டிருந்த சமயம்.

தூதுவனின் செய்தியைக் கேட்ட கணத்தில் அவள் நெஞ்சம் பயத்தில் படபடத்தது. தந்தை இதற்கு சம்மதிக்க மாட்டார் என்று அவள் அறிவுள்ளம் கூறியபோதும் அவள் உணர்வுள்ளம் துன்பத்தால் துவண்டுதான் போனது.

காதல் காதல் காதல்.

மலைச் சாரல் எங்கும் தினைக் கதிர்கள் சூழ் கொண்டு தலை கவிழ்ந்து நில மகளை நோக்கியிருந்தன.

சாரலின் நடுவே உயர்ந்த வேங்கைமரம்…. அதில் மரம் ஏறுவதில் திறன் வாய்ந்த புலி கூட ஏற முடியாத வகையில் செழுமையான மரத்துண்டுகள் கொண்டு அமைக்கப்பட்ட பரண்…. பரணில் அங்கவையும் அவள் தோழிகள் முல்லையும் ஆதினியும் நின்று கொண்டிருந்தனர்…

அவர்கள் தழல், தட்டை, குளிர் என்ற இசைக் கருவிகளைத் தட்டி ஒலி எழுப்பி கதிர்களை உண்ணவரும் பறவைகளை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

அதுவரை ஒளிர்ந்துகொண்டிருந்த கதிரவன்

மேற்க்கு வானில் திரண்டு வந்த மழைமேகத்துள்ளே மறைந்துகொண்டான்.. பின்மதியப் பொழுதை இருள் கௌவத்தொடங்கியது.குளிர் காற்று ஒவ்வொரு மயிர்க்கால்களிலும் ஊடுருவி உள்ளத்தைச் சிலிர்க்கவைத்தது. மேகங்கள் ஒன்றை ஒன்று மோகத்துடன் தழுவின .முரசு முழங்கினால் போல் இடியின் ஒலி மலை முகடுகளில் தெறித்து எதிரொலித்தது .முருகனின் வேல் மின்னுவது போல மின்னல்கள் மேகமுடிச்சுக்களில் தோன்றித் தோன்றி மறைந்தன..

சோ என்று மழைத் தாரை நிலம் தொட்டது.

பறவைகள் அவசரமாய் கூடு திரும்பின. பெண்களுக்கு பறவைகளை ஓட்டும் வேலை மிச்சமானது.

அங்கவை வானத்தில் இருந்து இறங்கும் மழையினை ரசித்துப் பார்த்தாள் .

அருவியில் மழைநீர் பேரோசையுடன் சலசலத்து ஒடத்தொடங்கியது

“சுனையில் நீராடுவோமா..?”அங்கவைதான் கேட்டாள்.அவள் கேள்விக்கு விடை தராமலே தோழிகள் பரணில் இருந்து இறங்கி அருவியை நோக்கி ஓடத்தொடங்கினர் அங்கவையும் குதூகலத்துடன் அவர்களை முந்திக்கொண்டு ஒடினாள். ஏலவே அருகிலிருந்த தினைப்புனகளில் காவலில் இருந்த பெண்கள் நீராடிக்கொண்டிருந்தனர். புது வரவாய் தூவானமாய் கொட்டும் அருவி மலைமகள் அணிந்த வெள்ளை நிற மேலாடையெனக் காட்சி தந்தது. அருவிநீர் சுனைகளையும் ஓடைகளையும் நீறைத்தபடி ஒடியது.அருவிநீரில் நனைந்தும் அங்கிருந்து சுனையில் குதித்து நீரினைக் குடைந்து நீச்சலடித்தும் நீங்காத ஆசையுடன் இவ்வுலகை மறந்து இருந்தனர் பெண்கள்..

அங்கவையும் தோழிகளும் இரு நாழிகைப்பொழுதின் பின் சுனையை விட்டு வெளியேறினர் …

ஈரம் கோத்துக்கொண்டு பின்னிக்கிடந்த கூந்தலில் நீர்த்திவலைகள் முத்து முத்தாய் அவர்களின் தோள்வழியே சொட்டிக்கொண்டிருந்தன,. முல்லை ,பரணுக்கு ஓடிச்சென்று காய்ந்த அகில் குச்சிகளை எடுத்துவந்து தீ மூட்டினாள், எல்லோரும் கூந்தலினைப் பிழிந்து உலர்த்தி மணம் ஊட்டினர் .

அங்கவையும் ஆதினியும் இன்னும் சில தோழியரும் இணைந்து ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகைபூ முதலான பூக்களைத் தேடிப் பறித்து வந்தனர்.

அவற்றை மழை நீரால் கழுவி சுத்தமாகிக் கிடந்த பாறை மீது குவித்தனர் ,

முல்லையும் மல்லியும் இன்னும் சில தோழிகளுமாய் தழைகளை சேகரித்து வந்தனர்.

எல்லோரும் பூக்களைக் கொண்டு மாலைகள் கட்டி கூந்தலிலும் கழுத்திலும் கைகளிலுமாய்ச் சூடிக்கொண்டனர், தழைகள் கொண்டு ஆடைசெய்து இடையில் அணிந்துகொண்டனர்.

இவர்கள் இவ்வாறு தம்மை மறந்து விளையாடிக்கொண்டிருந்த போது தான் குயிலன் அங்கு வந்தான்.

சுருண்ட தலை மயிருக்கு எண்ணை தடவி உச்சிக்கொண்டை போட்டிருந்தான். மணக்கும் மலர்க்கண்ணித் தொடையல் அவன் கழுத்தை அலங்கரித்திருந்தது. மலைக்குவடுபோல் நிமிர்ந்திருந்த அவன் நெஞ்சு கருங்காலி போல் பள்ளபளத்தது .மார்பு அகலம்

வலிமையும் விம்மித ஏற்றத்தன்மையும் கொண்டு மலர்ந்திருந்தது. தோளில் வலித்த வில்லும் கைகளில் அம்பும் இருந்தன. இடுப்புக் கச்சையில் உருக்குக் கத்தியைச் சொருகி இருந்தான். கால்களில் கழல் அணிந்திருந்தான். அவனை அண்டி இளைஞர்கள் சிலர் வர கம்பீரமாக நடந்து வந்தான்.. சற்று முன்பாகவும் பின்பாகவும் சூழலில் உள்ளவற்றினை முகர்ந்தபடி வேட்டை நாய்கள் வந்தன .

வேட்டைநாய்களின் குரைப்பு… தன்னை மறந்து விளையாடிக்கொண்டிருந்த அங்கவையையும் அவள் தோழிகளையும் திடுக்குற வைத்தன.

வேட்டை நாயில் ஒன்று அவர்களுக்கு மிக அருகில் வந்து அவர்கள் தொகுத்து வைத்திருந்த பூக்களை முகர்ந்தது. இதனால் அங்கவை மிகுந்த கோபம் கொண்டாள். அவளும் தோழிகளும்

“ஏய்..சூய் .:..”என ஒருசேர நாயை விரட்டிய போது அது அவர்களைக் கடிப்பதுபோல ஆக்கிரோசமாகச் சீறியது .

அதைக்கண்ட குயிலன் “டேய் வீரா வா இங்கே” என உரப்பினான்

வீரன் வாலை ஆட்டிய படி தன் எஜமானனிடம் ஒடியது.

பெண்களின் அருகில் வந்த அவன் நாயின் செயலுக்காக மன்னிப்புக் கோரினான்.

அவன் உதடுகள்தான் மன்னிப்புக் கோரின. கண்களோ ..

அங்கவையை கண்ட அக்கணத்தில் திகைப்பால் விரிந்தன.

“நான் தேடும் மலையின் அழகி இவள்தானோ ….இந்த மலையின் அரசி இவள்தானோ…”கேள்விகள் அவன் மனதில் சரமென எழுந்தது.இப்படி ஒரு கம்பீரத்தை அவன் எந்தப்பெண்களிடமும் கண்டதில்லை. அங்கவையின் மானிற பளபளப்பில் தேகம் ஒளிகொண்டு விளங்கியது. அகன்ற அழகிய அவளது கண்களில் துளிகூட பயம் இல்லை. மாறாக கொற்றவையின் தீர்க்கமும் கனிவும் ஒருங்கே கூடி இருந்தன. மார்பின் ஏற்றமும் சிறுத்த இடையுமாய் மயனின் கனவுச் சிலையாய் அவன் முன் அவள் நின்றாள்

அவள் நேர்கொண்டு அவன் கண்களைப் பார்த்தாள்-

இவன் பறம்பின் குடிமகன் அல்லன்..அவள் உள்ளத்தின் எண்ணோட்டம் இவ்வாறுதான் இருந்தது

ஆனாலும் சிறந்த வீரனுக்குரிய அத்தனை இலட்சனமும் அவன் தோற்றத்தில் துலக்கமாவதை அங்கவை உணர்ந்தாள்.அவன் பால் தன் மனம் ஈடுபடுவதை அவளாலும் தவிர்க்க முடியவில்லை.

அவர்களிடம் விடைபெற்று குயிலன் நடந்தான். போகும்போது “என் பெயர் குயிலன் . முது மலை எனது மலை “என அங்கவையைக் குறிப்பாக பார்த்தபடி கூவினான்.

முல்லை, அங்கவையின் நெருங்கிய தோழி. அவள் அங்கவையின் ஒவ்வொரு அசைவுக்குமான அர்த்ததையும் அறிந்தவள் . அங்கவையின் குயிலன் பாலான ஈடு பாட்டை அவளால் படிக்க முடியாதா என்ன…?

“இவள் அங்கவை….பறம்பின் தலைவன் மகள்” ..என்று கத்தினாள்.

“பறம்பின் தலைவன் பாரி ஆச்சே ..பாரியின் மகள் என்றால் ….

இவள் என்னை எச்சரிக்கிறாளா …இல்லை என்னுள்ளமும் அங்கவை உள்ளமும் அறிந்து சொல்கிறாளா….?” குயிலனுக்குக் குழப்பமாகத்தான் இருந்தது…அனாலும் அங்கவையின் காதலைப் பெற்றுவிடவேண்டும் என்ற உறுதி அவன் உள்ளத்தில் ஆழமாய் வேரூன்றியது.

இதன் பின் குயிலன் ஒவ்வொரு நாளும் பறம்புக்கு வரத்தொடங்கினான் .அங்கவையினாலும் எத்தனை நாள்தான் தன் காதலை மறைத்தொழுக முடியும் .இருவரும் தனிமையில் சந்தித்துத் தம் காதலை வள்ர்க்கத் தொடங்கினர்.

முது மலையும் பறம்பினை அண்டியதாக பறம்பின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்தது. குயிலன் காடறிந்தவனாக சிறந்த வேடுவனாக இருந்தான் அவன் வேட்டைக்கான விலங்குகளாக புலியும் கரடியும் கூட இருந்தன.காட்டெருமைளை சிறிதும் பயமின்றி மடக்கிப் பிடிக்க வல்லவனாக இருந்ததனால் மந்தையில் இவன் பெயர் மிகவும் பிரபலமாகி இருந்தது. செங்குத்தான மலைகளில் ஏறி தேன் எடுப்பதிலும் அவன்நிபுனாக விளங்கினான். கரந்தைப் போரில் சில தடவைகள் ஈடுபட்டு வெற்றி கரமாக் எதிரிகளால் ஓட்டிச்செல்லப்பட்ட மந்தைகளை மீட்டுத் திரும்பியிருந்தான் அவனிடம் பாரியால் வழங்கப்பட்ட தீரன் என்ற குதிரை இருந்தது. அக்குதிரைமேல் அவன் தன் உயிரையே வைத்திருந்தான்.தன் பெயருக்கு ஏற்ப அக்குதிரை மிகவும் ஆற்றல் வாய்ந்தது. தீரனின் மேல் ஏறி குயிலன் வருகிறான் என்ற செய்திகேட்டாலே மந்தையைக் கவர்ந்து செல்லும் வீரர் அந்தவிடத்திலேயே அவற்றைக் கைவிட்டு ஓடிவிடுவர்.

அவன் தனியே வீரன் மட்டுமல்லன் .நல்ல கலைஞனும் கூட…யாழிசைக் கருவியையும் குழல் இசைக் கருவியையும் மீட்டுவதில் பாணரை ஒத்த புலமை பெற்றிருந்தான். இதனால்

பாணர் பலருடன் அவனுக்கு நட்பு இருந்த்து . தன் சுற்றத்தை மட்டுமன்றி பாணர்களைப் பேணி அவர்களுக்கு உணவும் மலைப் பொருள்களையும் வழங்கி மகிழ்வடைந்துவந்தான்.

அங்கவையோ தன் தந்தையின் சிறப்புக்கள் பல குயிலனில் இருக்கக் கண்டு அக மகிழ்ந்து போனாள்.

அவள் காதல் தடை எதுவுமின்றி வளர்ந்து இன்பம் தந்த வேளையில்தான் பாண்டியன் பெண்கேட்டு தூது அனுப்பியிருந்தான்.

பயமும் சங்கடமும் அவள் மனதை ஆட்கொள்ள இதுவே காரணம்…

பறம்பில் போர்

ஆனால் அவள் பயமும் துன்பமும் தந்தையின் கோபத்தில் சிவந்த கண்களின் வெப்பத்த்தில் பனித்துளிபோல் மறைந்துபோயின. தூதுவனை ஒறுத்தல் கூடாது என்ற அறம் காரணமாகவே அன்று தூதுவன் உயிருடன் பாண்டியனிடம் சென்றடைந்தான்.

பாரியின் மறுப்பை முன்னமே ஊகித்திருந்த பாண்டியன் படைதிரட்டி பாரியோடு போரிடத் தயாரானான்.

பாரியிடம் தனியான நிரந்தரமான போர்ப் படை என எதுவும் இல்லை. அதேபோல் குடை செங்கோல் என்றோ தனியான முரசென்றோ வேந்தர் கொள்ளும் சின்னங்கள் எதுவும் இல்லை. வேளிர்குலத்துக்கான சின்னமே அவன் சின்னம் . வேளிர்குல முதல்வனான முருகனின் சேவல் கொடியே அவன் கொடி .

பாண்டியனோடு போரிட பறம்பினதும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களதும் இளைஞர்கள் ஒன்று திரண்டார்கள். வெட்சிப்போரிலோ கரந்தைப் போரிலோ ஈடுபட்ட அனுபவமும் வேட்டையின் போது பெற்ற பயிற்சியும் அனுபவமும் ஏறு தழுவிய வீர விளையாட்டும் காட்டில் மேற்கொண்ட கடினமான வாழ்வும் எதிரியோடு போரிடுவதற்ககு போதுமானதாய் இந்தப் புதிய படைக்கு இருந்தது. மிக வேகமாக ஓடும் புலியையும் மானையும் பன்றியை தம் அம்புக்கு இரையாக்குவதை தம் வாழ்வியலாகக் கொண்டவர்கள் வேடர்கள்.மூன்று வயதுப் பருவத்திலேயே கவன் கொண்டு பறவையை வீழ்த்தும் தீரம் வேட்டுவக் குடிக்கு வந்து விடும். குதிரைகள் பறம்பில் குறைவுதான் . சில நூறு குதிரைகளே மொத்தமாக இருக்கின்றன. அவை குதிரை ஏற்றத்தில் மிகுந்த ஆர்வங்கொண்ட இளைஞர்களிடமே வழங்கப்பட்டிருந்தன. பறம்பில் ஒரு குதிரையை இளைஞன் ஒருவன் உடைமையாக்க வேண்டுமாயின் அவன் பாரியினால் வைக்கப் படும் பல பரீட்சைகளில் வெற்றி பெற்றாக வேண்டும். அவ்வாறு ஒர் இளைஞன் குதிரை ஒன்றைப் பெற்றுக்கொண்டான் ஆயின் அதை தனது உயிர் எனக் கருதுவான். அதற்கு நல்ல உணவைத் தேடி மிக ஆரோக்கியமானதாய் வைத்துக் கொள்வான். அதனை மலைச் சிகரங்களில் தடையின்றி ஓடவும்

அதளபாதளமாய் பயமுறுத்தும் பள்ளத்தாக்கில் விழுந்துவிடாது மலைச் சிகரங்களில் லாவகமாக ஏறவும் என அவற்றுக்கு சிறந்த பயிற்சியும் அளிப்பான். இவ்வாறு பயிற்சி அளிப்பதற்கெனவே குடிகள் தோறும் ஆசான்கள் இருப்பார்கள்.இந்தக் குதிரை வீரனையும் குதிரையையும் தரையில் பயிற்றுவிக்கப்பட்ட குதிரையுடனோ வீரனுடனோ ஒப்பிடமுடியாது. பாரியின் ஒரு குதிரை பாண்டியனின் பத்து குதிரைகளுக்கு சமனான ஆற்றலோடு செயற்படும் வீரனும் அப்படித்தான்.யானைகள் பற்றி கூறவே வேண்டாம். யானைகளுடந்தான் பாரியின் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். யானைகளை அமைதியுறவைக்கவும் அவற்றினை ஆக்கிரோசம் கொள்ள வைக்கவும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.ஆக போர்க்காலத்தின் போது மட்டும் உருவாகும் படை ஆயினும் மிகவும் வீரியத்தோடு போரிடும் படையாகப் பாரியின் படை இருந்தது.

இப்படையில் இருந்து தனித்துவமான ஆற்றல்கள் கொண்ட சில வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்கள் படையை வழிநடத்திச் செல்ல வல்ல தலைவர்களாக நியமிக்கப்பட்டனர் .இப்படித்தான் குதிரை எற்றத்தில் நன்கு பயிற்சி பெற்ற குயிலன் குதிரைப் படைக்கான தலைவனாகத் தெரிவு செய்யப்பட்டான்.

பறம்பின் அடிவாரத்தில் போர் நிகழ்ந்தது .ஐந்து நாட்கள் நடந்த உக்கிரப் போரில் இரு பக்கமும் போர்வீர்ர்கள் வீர சுவர்க்கம் அடைந்தார்கள். அப்போரில் அங்கவையின் உள்ளம் கவர்ந்த குயிலன் பாண்டியனின் தளபதியான திதியனைக் கொன்று போரில் பாரியின் பக்கம் வெற்றிவர முக்கிய காரணமானான். தலைமைத்தளபதி திதியன் பெரும் வீரன் . வேந்தர்களோடு பாண்டியன் முரண்பட்டு நடத்திய போர்களின் போது கூட பாண்டியனுக்கு வெற்றிகளை ஈட்டித்தந்தவன்.இவனது இழப்பை பாண்டியன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனது மரணம் பாண்டியனின் படையின் உறுதியையே ஆட்டங்காணவைத்தது. இதுவரை போர் விதிகளுக்கு இணங்கப் போரிட்ட பாண்டியன் நான்காம் நாள் போரில் எந்த விதிகளையும் பின் பற்ற வில்லை. அன்றைய போரின் போது நஞ்சு தடவிய அம்புகள் அவனால் பயன் படுத்தப்பட்டன.

தனது மிகத் தீரம் மிகுந்த குதிரைப் படைக்கும் அதன் வீரருக்கும் போதை கலந்த மூலிகைகளை கொடுத்து அனுப்பிவைத்தான். இவ்வாறு வழங்குவது கத்திமேல் நடப்பதற்கு ஒப்பானதே. ஏனெனில் குதிரைகளிடம் போதை உச்சத்தை அடையும் போது அவை தனது படைக்கே கேடு செய்யத் தலைபடும் .

அலையெனத் திரண்டு வந்த பாண்டியனின் குதிரைப்படையினைக் கண்டு குயிலனோ அவன் கீழ் போரிட்ட படையோ சிறிதும் கலங்கவில்லை. அதனை ஆக்கிரோசத்துடன் எதிர்கொண்டு பலவீரரைக் கொன்று குவித்தது குயிலன் படை …..அன்றைய போர் முடிந்ததற்கான சங்கு ஊதப்பட்டு

குயிலனின் படை திரும்பிய சமயத்தில் தான் பாண்டியனின் படை வீரன் ஏவிய அம்பு தைத்து குயிலன் வீழ்ந்தான்.

அவன் வஞ்சகமாக் போர் விதிகளுக்கு அப்பால் வீழ்த்தப்பட்டதைப் பாரியால் சீரனிக்கவே முடியவில்லை.

ஐந்தாம் நாள் பாரியே களம் இறங்கினான். பாரியின் போர் உத்திகளுக்கும் அவனது படைவீரத்துக்கும் போரிடும் திறனுக்கும் முகங்கொடுக்க முடியாது பாண்டியனின் பெரும் படை சிதறி ஓடியது.

விதிகளை மீறிய போர்கள் எப்பொழுதும் மலைநிலத்தைச் சார்ந்த படைகளுக்கே சாதகமானது.

காட்டெருமைகளும் காட்டு யானைகளும் தேன் குளவிகளும் கூட எதிரியை வீழ்த்த வல்ல படைகளாக சமயத்துக்கு பாரியினால் பயன் படுத்தப்பட்டது.

காட்டின் கொம்பன் யானைகளுக்கு மூலிகை கொண்டுமதம் ஏற்றப்பட்டு பாண்டியனின் யானைப்படைக்கு எதிராகவிடப்பட்டது. மதங்கொண்ட காட்டின் கொம்பன் ஒன்று சூறாவளியென பாண்டியன் படையினுள் நுழைந்த போது நூறு யானைகள் கண்மண் தெரியாது சிதறி ஓடின . அவற்றின் மேல் இருந்த வீரர்கள் நிலைதடுமாறி வீழ்ந்து தமது யானைகளின் கால்களில் மிதியுண்டு இறந்தனர். காட்டின் மூர்க்கன் யானை ஒன்று பத்து யானகளின் குடல்களையாவது கிழித்து எடுத்தது

ஒரே சமயத்தில் கடலென திரண்டுவந்த காட்டெருமைகள் குறைந்தது ஆயிரம் படை வீரர்களையாவது கொன்றொழித்தன.

அலையென ரீங்காரமிட்டு வந்த குழவிகள் பாண்டியனின் வீரர்களைத் துளைத்து எடுத்தன. பாரி ஒருவனே பாண்டியனின் இரண்டாம் நிலைத்தளபதிகள் ஐவரைக் வாளால் வெட்டி வீசினான்.

ஐந்தான் நாள் மாலைப்பொழுதில் பாண்டியன் எஞ்சியிருந்த படை போரிடும் ஆற்றலை முற்றாக இழந்து தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

பாரி என்ற குறுநில மன்னனிடம் தோற்றதை பாண்டியனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .அவமானத்தால் கூனிக்குறுகிப் போனான் பாண்டியன் . பாரியைப் பழிவாங்குவதற்கு தக்க சமயம் பார்த்துக் காத்திருந்தான்.

பாரி பெரும் வெற்றியை அடைந்தான் .ஆனால் அங்கவை தன் காதலனைப் பறிகொடுத்து மீளாத்துயரை அடைந்தாள்.பாரி அங்கவையின் காதலை அறிந்தே இருந்தான். அங்கவை தனக்குத் தக்க துணையைத்தேடியதில் அவனுக்கு பெரு மகிழ்ச்சியே …..அனால் இன்று … தனது காதலனை இழந்து தவிக்கும் தன் செல்ல மகளை ஆறுதல் படுத்த முடியாது அவனும் தவிக்கிறான்.

மூவேந்தரும் தோற்றார்

பாண்டியன் காத்திருந்தது வீண்போகவில்லை .தம்முள் போரிடுவதையே வழக்கமாக கொண்டிருந்த மூவேந்தர் பாரியோடு போராடுவதற்காக ஒன்றிணைந்துவிட்டார்கள். …

இயற்கையின் வழி தன்னிறைவுடன் வாழும் சமூகங்களின் விழுமியமும் நிலங்களில் உபரி வருவாய் பெற்றும் கடல்கடந்து வணிகம் செய்தும் வாழும் சமூகங்களின் விழுமியங்களும் முற்றிலும் வேறானவை. அவற்றின் சட்டங்களும் வேறானவை.எல்லோரும் உழைப்பாளிகள் எல்லோரும் பங்காளிகள் என்பது முதன் நிலை. ஒருவகையில் இதனை ஆதி ஜனநாயகம் எனக் கூறலாம். உழைப்பவன் உடைமையாளன் என இரு பிரிவுகள் தோன்றிவிட்ட பின் உடைமையாளனின் தேவைகள் ஆசையின் வழிப்பட்டதாக பல்கிப் பெருகுகிறது. உழைப்பவன் கூட உடைமையாளனின் கருவிப் பொருளாய் …அடிமையாய் ஆகிவிடுகிறான். இந்த சமனற்ற தன்மையை நியாயப்படுத்த புதிய விழுமியங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

பழைய விழுமியங்களான பகுத்துண்ணுதல், கொடை வழங்குதல் முதலான வற்றையே பாணர்கள் முதலான கலைஞர்களும் கல்வியறிவாளர்களான கபிலர் போன்ற புலவர்களும் போற்றினர்.இந்தச்செயலே வேந்தருக்கான அச்சுறுத்தலாக அமைந்தது.இதனை முறியடிப்பதற்கு பழைய விழுமியங்களைப் போற்றும் பாரி போன்றோரை வெல்லுவது முதன்மை நோக்க மாக வம்ப வேந்தருக்கு அமைந்தது. வேந்தர்கள் மூவரும் ஒன்றிணைய இதுவே முக்கிய காரணம் .

பாரியைத் தோற்கடிப்பதன் மூலம் யவனர் தேசத்தவரோடு வியாபாரம் செய்ய மிளகுவளமும் யானைக் கொம்பும் மலை மடிப்புக்களில் கரந்துரையும் மணிகளும் என கொட்டிக் கிடக்கும் வளங்களும் அவர்களுக்குரியதாய் ஆகிவிடும். அவர்கள் ஒன்றுபட இது இரண்டாவது காரணமே.

பாண்டியனை மலையடிவாரத்தில் நேர் நின்று போராடி வெற்றி கொண்ட பாரி அதே போர்முறையைக் கையாள விரும்பவில்லை.மூவேந்தர் பெரும் படையை எதிர்கொள்ள பாரியிடம் ஆள் பலம் இல்லை. பறம்பு மலையும் அதனைச் சூழ உள்ள காடுகளும் அவனுக்கு அரணாய் அமைந்தன. மலைக் காட்டினுள் ஊடுருவுவதற்கான துணிவும் ஆற்றலும் தரைவழியே போராடிவந்த வேந்தர் படைக்கு இல்லை எனபதை பாரி அறிவான். சிலவேளை அவ்வாறு ஊடுறுவுவார்களானால் அதனை முறியடிக்கும் திறனும் உத்திகளும் பாரியின் படைகளுக்கு மிகுதியும் உண்டு.எனவே பாரி கீழ் வந்து போரிடாது மேலேயே தங்கிவிட்டான்.

பலகாலம் முற்றுகையிட்டால் பாரி உணவுக்காகவாவது வெளிவந்து போராடியாக வேண்டும் என்ற மூவேந்தர் எண்ணம் தவிடுபொடியாகியது. மாதங்கள் மூன்று கடந்த நிலையிலேயே அவர்கள் பறம்பு உணவில் தன்னிறைவுகொண்டதென்பதை உணர்ந்து கொண்டனர்.மூங்கிலரிசி, ,தேன்,

கிழங்கு என இயற்கை தரும் செல்வங்கள் அவர்களுக்கு போதுமானதாய் இருந்தன மழைநீர் அருவி வழி ஓடி சுனைகளிலுல் தேங்கி நீர்த் தேவையைப் பூர்த்திசெய்தன. காட்டாற்றில் மீனும் காட்டின் வேட்டை விலங்குகளும் தினை சாமை முதலான பயிற்செய்கையும் மக்களது உணவுத்தேவைகளை குறைவின்றித் தீர்த்தன,

பறம்பின் உள்ளே நுழைவது என்பது எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருதது.. கபிலர் வேறு வேந்தர்களின் கையாலாகத்தனத்தைக் கேலி செய்து பாடிவிட்டார்

“வேந்தரே உங்கள் படையால் என்றுமே பாரியை வெல்ல முடியாது.பாரி கடவுள் போன்றவன். உயர்வு தாழ்வு பார்க்காது அனைவரையும் ஒன்று போல நடத்துபவன், அவன் கொடையில் மாரிக்கு இணையானவன்.மாரி இடையறாது மழையை வழங்குவது போல அவனும் இடையறாது கொடை வழங்குபவன். அவன் தனக்குரிமையான முன்னூறு ஊர்களையும் இரவலருக்கு வழங்கிவிட்டான்.பறம்பு மட்டுமே எஞ்சியுள்ளது.

அவனது பறம்பின் பாதை எதிரிககளுக்கு மட்டுமே பூட்டப்பட்டுள்ளது. பாணர் முதலான கலைஞர் தடையின்றி பறம்பினில் நுழைந்து பாரியிடம் பரிசில் பெறலாம். நீங்களும் பாணராய் வந்து அவனிடம் இரந்தீர்களானால் அவன் பறம்பினை உங்களுக்கு வழங்கிவிடுவான்”

அவர் பாடல் மான உணர்வை சீண்டுவதாய் அமைந்துவிட்டது. வஞ்சகத்தாலாயினும் பாரியை வென்றுவிடத் துடித்தார்கள் மூவேந்தர்கள். சாத்தன் என்ற பாண்டியனின் படை வீரன் யாழிசைப்பதிலும் பாடுவதிலும் மிகுந்த திறமைசாலி .பாணர்களோடு கொண்ட தொடர்பினால் அவன் இத்திறமைகளை மேலும் வளர்த்துக் கொண்டான். அவனை வஞ்சகத்தால் பாரியை வெல்வதற்குத் தாயார் செய்தார்கள்.

பாரி மறைந்தான்

அன்றும் முழு நிலவு வானில் பிரகாசித்துக்கொண்டிருந்தது.

சாத்தன் பாணர் கூத்தர்களோடு பறம்பினில் புகுந்தான்.பறம்பில் வெற்றித் தெய்வமான கொற்றவைக்கு பாரி பெரு விழா எடுத்திருந்தான். முழுமதி நாளில் தொடங்கி மூன்று நாள் திருவிழா ..

பறம்பின் நடு நகரில் இருந்து புதர் மண்டிய அடர் காட்டு வழியே கொற்றவையின் பொதியிலை நோக்கி பெரும் கூட்டம் பயணித்தது .பாரியும் கபிலரும் இன்னும் சில வீரரும் குதிரையில் பயணித்துப் பொதியிலை அடைந்தார்கள் .பாணரும் கூத்தரும் கோடியரும் தமக்கான இசைக்கருவிகளை காவியபடி சென்றனர் . முதிர் பெண்டிர் தலையில் கலங்களில் மிகவும் புளித்த பனங்கள்ளையும் ஈச்சங்கள்ளையும் சுமந்தபடி நகர்ந்தனர். இளம் பெண்கள், அவரை, மொச்சை இவற்றின் புழுக்கல் (சுண்டல்), பிண்டி (அவல்), நிணம்,

குருதி, குடர், நெய்த்தோர் என்பவற்றால் நிறைந்த மண்டையை சுமந்து சென்றனர்.

குயிலனைப் பிரிந்த வேதனை தன் மனதை அரிக்க, தன் மனதிற்கு அமைதியைத் தர வேண்டும் என்றும் மூவேந்தர் முற்றுகையிலிருந்து தனது நாட்டை மீட்டுத்தரவேண்டும் என்றும் கொற்றவையை வேண்டியவளாய் அங்கவையும் எருமையின் நெய் இட்டு நிரப்பிய மண்டையைத் தாங்கிய படி சென்று கொண்டிருந்தாள். அவள் கையைப் பற்றியபடி சங்கவையும் சிறு கலத்தில் கொற்றவைக்கு நோலை (எள்ளுருண்டை), பொரி எடுத்துச் சென்றாள்.

கொற்றவைக்கான பொதியிலை கருங்கைக் காட்டு மக்கள் ஏற்கெனவே கழுவித் தூய்மை செய்திருந்தனர். கருங்கைக் காட்டில் கொற்றவை போர் முகம் கொண்டிருந்தாள். அதனால் அவள் கண்களில் கனிவு சிறிதும் இல்லை . கோபத்தின் கொந்தழிப்பு அவள் கண்களை அகலமாயும் செந்நிறமாயும் ஆக்கியிருந்தது.

இன்று பாணர் கூத்தரின் கூத்துக்களோ நாடகமோ இடம்பெறப்போவதில்லை. மாறாக கொற்றவையிடம் வெற்றி வேண்டி நடத்தப்படும் சடங்கு இடம்பெறப்போகிறது. குல முது மகள் இச்சடங்குகளை நடத்த இருக்கிறாள். மூர்க்கமான மறி பலி பீடத்தின் முன் சீறிப்பாய்ந்த வண்ணம் இருந்தது. அது அறுக்கவே முடியாத கொடியொன்றினால் கட்டப்பட்டிருந்தது.

வந்தவர்கள் கொற்றவையின் முன் படையல் பொருட்களை வைத்துவிட்டுக் கொற்றவையை வணங்கிநின்றனர். குல முதுமகள் கொற்றவையின் வீரத்தையும் வெற்றியையும் தனது கரகரகரத்த குரலில் பாடிய படி மறிமீது கொண்டுவரப்பட்ட மூலிகை நிறைந்த நீரை ஊற்றினாள். மறி தான் கட்டப்பட்ட கழியில் சுற்றியபடி சீறியது அதன் மேல் ஊற்றப்பட்ட நீர் அதன் அருகில் இருந்தவர் மேல் தெறித்தது.பறையும் ,உருமியும் உரத்து ஒலித்தன. அவ்வொலியை ஒன்றுமில்லை என்று எண்ணும்படி பெண்களின் குலவை ஒலித்தது . குல முதுமகள்தன் கையில் ஏந்திய வாளை மறியின் கழுத்தில் சொருகினாள்.பீறிடும் குருதியை கலம் ஒன்றில் ஏந்தி தினை அரிசியில் குழைத்து வெறிகொண்டு ஆடியவளாய் அதனைத் தூவத் தொடங்கினாள். அந்தக்கணப் பொழுதில் அங்கவை முதல் சில பெண்களுக்கும் அணங்கு கூடியது ,அழகே உருவான அங்கவை பேய்மகள் போல வெறிகொண்டு ஆடினாள் அவள் கண்முன்னே கொற்றவை வானத்துக்கும் பூமிக்குமாய் விஸ்வரூபம்

கொண்டாள்.ஆனால் கொற்றவையின் தரிசனம் அவள் உள்ளத்துக் கொந்தளிப்பை தணித்து அமைதி கொள்ள வைக்கவில்லை.இனம்புரியாத பயம் அவள் மனதை அரிக்கத்தொடங்கியது. ஏதோ நடக்கக் கூடாத நிகழ்வு நடக்கப்போவதை அவள் உள்ளம் உணர்து கொண்டிருந்தது.

இரண்டாம் நாள் பாரியும் வேறு சில வீரரும் வேட்டைக்குகுச் சென்றிருந்தனர்.பின்னிரவில் தான் அன்றைய விழா தொடங்கியது . வேட்டைவிலங்குகள் கொண்டு சமைக்கப்படட உணவும் நறவு நீரும் நிறைவாக எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அன்று கபிலரைப் போற்றும் நாளாக அமைந்தது.கபிலர் பறம்பில் தங்கியிருந்த காலத்தில் பாரி மட்டுமல்ல பறம்பின் மக்கள் கூட அவர் மீது பேரன்பைப் பாராட்டினர். அவர் குறிஞ்சி நிலத்தின் தன்மையை முழுமையாகப் புரிந்து கொண்டதும் அப்பொழுதுதான் . அவரிடம் அங்கவையும் சங்கவையும் மட்டுமல்ல குறிஞ்சிநில மக்களின் பிள்ளைகளும் பாடம் கேட்டனர் . அவரது குறிஞ்சிப்பாட்டுக்கான முதல் கரு உரியும் உருவானதும் இந்த நிலத்தில் தான். குயிலன் அங்கவை காதல் மட்டுமல்ல அவள் தோழிகள் -முல்லை ,மருதன் .ஆதினி ,ஆதன் காதலும் தான் குறிஞ்சிப்பாட்டின் உட்பொருளாயின. அவருக்கு எடுக்கப்பட்ட விழாவின் போது மழை சோவெனப் பெய்தது. அப்பொழுது

‘பாரி பாரி’ என்று பல ஏத்தி,

ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்;

பாரி ஒருவனும் அல்லன்;

இப்படிப்பாடி தமது பாடலை இடை நிறுத்தினார் கபிலர். பறம்பின் மக்கள் பாரியை விட உயர்ந்தவன் ஆர் இருக்க முடியும் என்று புருவம் உயர்த்தி யோசிக்கையில்

மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.

எனப் பாடி முடித்தார் கைதட்டல் மழையை மேவிப் புறப்பட்டது. நேற்றைய கொற்றவை வழிபாட்டின் போது உண்டான மனக் குழப்பத்தைச் சற்று மறந்து அங்கவையும் அவர் பாட்டினைக் கேட்டு மகிழ்ந்துதான் போனாள்.

வேறு புலவராய் இருந்தால் அவர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்காத பரிசில் வழங்கி மகிழ்வித்திருப்பான் பாரி. ஆனால் கபிலரின் நட்பு விலை மதிக்க முடியாதது. அதற்கு தன் உயிரைக் குடுத்தால் கூட ஈடாகாது என எண்ணியவனாய்க் கண்களில்

துளிர்த்த நீரை மறைக்காதவனாய் பாரி, அவர் கைகளை பற்றிக்கொண்டான்.

மூன்றாம் நாள் கொற்றவை முன் பாரியின் வேளிர் குடியின் வரலாற்றை நாடகமாக நடித்துக் கொண்ருந்தது கூத்தர் குழு ஒன்று பாணர் சிலர் பாடியும் சிலர் யாழிசைத்தும் அக்கதைக்கு உயிர் கூட்டிக் கொண்டிருந்தனர். பாரி கல்லாசனம் ஒன்றில் அமர்ந்த படி அக்கூத்தை கண்டுகொண்டிருந்தான் அவன் அருகில் கபிலர் அமர்ந்திருந்தார்.அவர் இக்கூத்தினை முதல் முதல் பார்க்கிறார். முருகனதும் வள்ளியினதும் குடிவழி வந்த வேளிர் வரலாறு சுவையான கதைகள் வாயிலாக அரங்கேறக் கண்டு இரசித்துக் கொண்டிருந்தார்.

பல தடவைகள் இக்கூத்தினை பாரி பார்த்திருத்திருக்கிறான் .எங்கோ சில இடங்களில் யாழிசையில் பிசிரு ஏற்படுவதை அவன் காது உண்ர்ந்தது. சாத்தன் எவ்வளவுதான் யாழிசைப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தொழில் முறைக் கலைஞர் முன் அவனால் ஈடு கொடுக்க் முடியவில்லை. அவன் இசையில் சுருதி விலகக்கண்டு தலைமைப் பாணன் அவனை யாழிசைக்க வேண்டாம் எனக் சைகையால் கையமர்த்தினான் . அந்தச் சந்தர்ப்பத்தை சாத்தன் சரியாகப் பயன் படுத்திக் கொண்டான் . அவன் யாழைத் தரையில் வைத்து விட்டு பாரியிடம் சென்றான் . அவனிடன் வாழ்த்துப் பெறக் குனிபவன் போல குனிந்தவன் கண்ணிமைக்கும் பொழுதில் தன் கைச்சையில் மறைத்திருந்த கத்தியை எடுத்து பாரியின் நெஞ்சிலும் வயிற்றிலுமாக பாச்சினான்.அவனது கத்தி இதயத்தை நேரடியாகத் தாக்கியதால் பாரி நிலைகுலைந்து கபிலர் மடியில் சாய்ந்தான். அவன் இதயத்திலிருந்து பீரிட்ட குருதி கபிலர் உடலெங்கும் தெறித்தது. பாரியின் கைகள் கபிலரின் கைகளை இறுகப் பற்றி இருந்தன . உயிர் பிரியும் போது பாரி சொல்லவந்ததைக் கபிலர் உணர்ந்து கொண்டார். அதனால் தான் தன் வேதனையை அடக்கிக் கொண்டு அவர் இன்னும் உயிர் வாழ்கிறார்…..

கபிலரின் முயற்சி

கபிலர் தன் உறவினரான பரணரின் இல்லத்தில் இருந்து வெளியே வருகிறார். தூரத்தில் அங்கவையும் சங்கவையும் புதர் மண்டிய மேட்டில் நின்றுகொண்டு உமணர் சகடங்களை எண்ணிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவர் மனம் கனக்கிறது .பாரியின் அரவணைப்பில்

….வேளிர்குல குலக்கொடிகளான இவர்கள் வாழ்ந்த சிறப்பென்ன …கபிலர் உள்ளத்தில் குருதிப்புனல் பாய்ந்தது…

பாரியினைப் பிரிந்த பின் உயிர் வாழ்வது கபிலருக்கு பெரும் பாரமாகவே இருக்கிறது .

“நண்பா! உன் உயர்ந்த நட்பினால் என்னைக் காப்பாற்றினாயே …அந்த \ நட்பிற்கு என்னை விட்டுவிட்டுச் சென்றது தகாது அல்லவா?”

என்று அவர் மனம் புலம்பினாலும் பாரியின் பெண்களுக்குப் பொருத்தமான துணையை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வால் உந்தப்பட்டு நடையாய் நடக்கிறார்.

பாரி இல்லை என்ற குறையை அவர்கள் உணராதவாறு அவர்களுக்குத் தக்கதுணையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே கபிலரது ஒற்றை நோக்கமாக இருந்தது.

சமுதாயத்தில் வர்க்க வேறுபாடுகள் வேரூன்றிவிட்டன. கபிலராலும் வர்க்க உணர்வை கடக்கமுடியவில்லை. அதனால் அங்கவை சங்கவைக்கும் அரச குடும்பத்தில் மணம் பேசப் புறப்பட்டுச் செல்கிறார்.

பாரியை வீழ்த்துவதற்கு மூவேந்தர்களுக்கு வெவ்வேறு காரணம் இருப்பினும் அவர்கள் வெளிப்பட கூறிய காரணம் பாரி தமக்குப் பெண்கொடுக்கவில்லை என்பதே …இவ்வாறு போட்டியிட்ட வேந்தர்கள் பாரியின் இறப்புக்குப் பின் கபிலர் என்றகவசத்தை மீறி பாரிமகளிரைச் சீண்டவே இல்லை.

கபிலர் பாரியின் பெண்களை மணமுடிக்குமாறு விச்சிக் கோன் என்ற குறுநில மன்னனை வேண்டிக்கேட்டார்.

விஞ்சிக்கோன் ஒரு மலை அரசன் தான். அவன் ஒருதடவை வேந்தரை எதிர்த்து போரிட்டான் ,அதனால் பாரி மக்களை அவன் திருமணம் செய்வான் என எதிர்பார்த்து கபிலர் சென்றார் . ஆனால் அவன் புலவர் மீதோ தன்னிடம் பரிசில் நாடி வரும் கலைஞர்கள் மீதோபரிவும் அன்பும் இல்லாதவன். கபிலரின் பெருமையைக்கூட அவன் கருத்தில் கொள்ளவில்லை. பாரி மகளிரை மணந்தால் தேவையில்லாது மூவேந்தரையும் பகைக்கவேண்டும் என்று கூட அவன் கருதினான். மூவேந்தரைப்பகைத்தால் தானும்தனது ஊரும் அழிய நேரிடும் .அதனால் கபிலரின் வேண்டுகோளை அவன் ஏற்றுக்கொள்ள்வில்லை.

விஞ்சிக்கோனின் தகுதியை அறியாது அவனிடம் தனது வேண்டுகோளை வைத்ததற்காக கபிலர் மிகவும் வருந்தினார். “

விஞ்சிக்கோன் மறுத்தான் என்பதற்காகக் கபிலர் ஓய்ந்தாரில்லை. அவர் இருங்கோவேளிடம் மிகவும் நம்பிக்கையுடன் சென்றார் .

தமிழர் வடவேங்கடத்தை எல்லையாகக் கொண்டு வாழ்ந்த காலத்தில் வடதிசையில் வாழ்ந்த வேளிர் மரபின் நாற்பத்தொம்பதாவது தலைமுறையினன் இருங்கோவேள். இன்று பொன்படுமால்வரையின் தலைவனாக இருக்கிறான் இவனும் இவன் முன்னோரும்

போர்வன்மையும் கொடை வன்மையும் உடையவர்கள்.புலியைக் கொன்று முனிவர் ஒருவரைக் காப்பாற்றியதால் புலி கடிமால் என இவன் முன்னோன் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

அவனிடம் கபிலர் பாரியின் மகள்களை அறிமுகப் படுத்துகிறார்.

“இவர் யாரென்று நீ வினவுகிறாய் இவர்கள் ஊரெல்லாவற்றையும் இரப்போர்க்கு வழங்கியவனும், தேரை முல்லைக்கு வழங்கியவனுமான பாரியின் பெண்ககள்.நான் பாரியின் நண்பனாதலால் இவர் என் மக்கள்.”

எனக் கூறி நிறுத்தினார் .

கபிலர் பாரியின் பெண்களை அழைத்து வந்ததன் காரணம் எது என ஓரளவு ஊகித்திருந்தபோதும் கபிலரே தொடரட்டும் எனக் காத்திருந்தான் இருங்கோ.

“இவர்களை நான் கொடுக்க நீ வதுவை செய்ய வேண்டும் “

கபிலரின் வேண்டுகோளை இருங்கோவேளும் ஏனோ ஏற்றுக்கொள்ளவில்லை, அவனும் விஞ்சிக்கோன் போலவே பாரியினதும் கபிலரதும் பெருமையைக் கருத்தில் கொண்டவனாகவும் தெரியவில்லை.

கபிலர் , …..நம்பியிருக்கும் விழுமியங்கள் பெருமைகளுக்கும் எதார்த்ததுக்கும் உள்ள முரண்பாட்டை தரிசித்தபோது…. தம்முள் உடைந்து போனார். அவரது வேண்டுகோளை இருங்கோவேள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லைத்தான்.

ஆனாலும் அங்கவை சங்கவை ..,,,,,அவமானத்தால் தலைகுணிந்து கண்களில் நீர் மல்க நின்ற காட்சி,,,,

அவர்கள் அவமானமடையத் தானும் ஒரு காரணமாக அமைந்து விட்டதை எண்ணுகையில் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை ..கபிலரின் ஆற்றாமை கோபமாக வெளிப்படுகிறது.

இருங்கோவேளின் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையாரை இகழ்ந்ததால் அரையம் அழிந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, தன் சொல்லைக் கேளாமல் தன்னை இகழ்ந்ததால் இருங்கோவேளின் நாட்டுக்குக் கேடு வரும் என்று சொல்லாமல் சொன்னார்.

அனாலும் கபிலர் ஓய்ந்தாரில்லை. இனி அங்கவை சங்கவையை தன்னோடு அழைத்துச் செல்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.அவர்களைத் தமது உற்வினரான அந்தணர் ஒருவரின் வீட்டில் விட்டு விட்டு திருனுடிக் காரியிடம்சென்றார்

இறுதியில் அவர் அங்கவைக்கும் சங்கவைக்கும் தக்க துணையைத் தேர்ந்தெடுத்துவிட்டார்.

திருமுடிக்காரி ,,, தனக்கென எதையும் வைத்திருக்காது கொடுக்கும் வள்ளல்…மூவேந்தர்கள் இவன் தயவு வேண்டி நின்றனர். காரி பெரும் வீரன் . அவனிடம் திறமையான…. வீரம் செறிந்த படை இருந்தது.இப்படையை மூவேந்தருக்கு வழங்கி அதன் மூலம் பெற்ற செல்வத்தை மற்றவருக்கு இடையறாது வழங்கி வருபவன் , அவன்

எந்த வேந்தனின் பக்கம் நிற் கிறானோ அப்படை வெல்லும் என்பது நடைமுறையாக இருந்தது. அதனால் வேந்தர் பற்றிய அச்சம் அவனிடம் இல்லை. அவனும் ஒரு மலை அரசன் தான் . அவன் பாரி பற்றி நன்கு அறிந்தவன் .அவன் மீதும் கபிலர் மீதும் பெரு மதிப்புடையவன்.

இதனால் கபிலரின் வேண்டுகோளைத் தலைமேல் கொண்டு தனது மகன்களை அங்கவைக்கும் சங்கவைக்கும் மணமுடித்துக் கொடுக்கத் தயாராய் இருந்தான். சங்கவை காரியின் மகனான உதிரனை மணந்து கொண்டாள்.

ஆனால் அங்கவை….?

ஔவையும் சங்கவையும்

ஔவையார் கபிலரைக்காண வந்திருந்தார்.

அவர் பேரிளம் பருவத்தை எய்தியிருந்தார் . அப்பருவத்துக்கே உரிய முதிர்ச்சியும் அழகும் அவரிடம் கூடியிருந்தன.

“நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே”

என்று பாடிய அவரது அறிவுக்கூர்மை அவரது கண்களிலும் சொல்லிலும் வெளிப்பட்டு அழகுக்கு அழகு சேர்த்தன.

கபிலரும் ஔவையாரும் ஒருவரை சந்தித்த போது பாரி பற்றியும் அதியமான் பற்றியுமே அதிகம் பேசினர் ,உற்ற நண்பர்களை இழந்த சோகம் இருவரது உள்ளத்தையும் வாட்டிவதைப்பதை அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் உணரமுடிந்தது.

பாரி பற்றி ஔவைக்கு பெரு மதிப்பும் அன்பும் உண்டு. பாரியின் பெண்களைக் கண்ட போது பாரியையே கண்டதான உணர்வு மேலிட்டது. சங்கவை இன்னும் குழந்தைப் பருவத்தினளாகவே இருந்தாள்.அனால் அங்கவையோ…

வதுவைக்கான முடிவு எடுக்கப்பட்டு விட்டது.

சங்கவை காரியின் இளைய மகனான உதிரனை மணக்கப்போவதாகவும் அங்கவை மூதவனான நீலனை மணக்கப்போதாகாவும் கபிலர் நிறைவோடு ஔவைக்குச் சொல்லி இருந்தார்.

அங்கவை குழப்பத்தில் இருப்பதையும் அதனைப் பிறர் அறியாத வாறு மறைக்கப் பிரயத்தனப்ப்டுவதையும் அங்கவையைக் கண்டகணத்திலேயே ஔவை புரிந்து கொண்டார். இருவரும் தனியே சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அப்பொழுதுதான் அங்கவையின் கல்வி அறிவு பற்றியும் புலமை பற்றியும் ஔவைக்குத் தெரியவந்தது. இருவரும் உள்ளத்தால் நெருங்கி நட்பை வளர்த்துக் கொண்டனர்.

“அங்கவை உன் புலமை என்னை வியக்க வைக்கிறது. உன் தந்தையின் மரணம் உன்னை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளமையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் உன் உள்ளத்தில் குழப்பம் அதிகமாக இருப்பதை நான் உண்ர்கிறேன் .அதற்கான காரணத்தைத்தான் என்னால்புரிந்து கொள்ள் முடியவில்லை.”

கபிலரால் கூட புரிந்து கொள்ள முடியாதிருந்த அங்கவையின் மனதை ஔவை சரியாகவே விளங்கிக்கொண்டிருக்கிறார்

“ஆம் அன்னையே நான் மிகுந்த மனக் குழப்பத்திலேயே இருக்கிறேன்.கபிலர் எமது ஆசான். என் தந்தையின் மறைவுக்குப் பின்னர் தந்தைக்கு மேலாக என்களிடத்தில் அன்பு பாராட்டிப் பாதுகாப்பாக இருக்கிறார் .இன்னும் சொல்லப்போனால் எங்களுக்கு தக்கதுணையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பதற்காக உயிரோடு வாழ்கிறார். எமக்கு மணம்பேசிச் சென்ற இடங்களில் அவர் அடைந்த அவமானங்கள் அதிகம் அதிகம் . அவற்றைக் கூட அவர் பொறுத்துக்கொண்டு இறுதியில் இந்த வதுவையை ஏற்பாடு செய்திருக்கிறார். “அவரிடம் எனக்கு வதுவை செய்ய விரும்பவில்லை என்று எப்படிச் சொல்வது?”என்னுடைய மனனிலையை எப்படி விளக்குவது?”என்று தவித்துக்கொண்டிருக்கிறேன்.”

“உனக்கு இந்த வதுவையில் விருப்பம் இல்லையா …!”

ஔவையால் தனக்கு ஏற்பட்ட வியப்பை மறைக்க முடியவில்லை.அவள் வதுமையை மறுப்பதற்குக் காரணத்தையும் ஊகிக்க முடியவில்லை.

“ஆம் அன்னையே.. எனக்கு மணம் புரிவதில் விருப்பமே இல்லை.

காதலால் ஒருமித்த உள்ளங்களினாலேயே உண்மை இன்பத்தை அடையமுடியும். தகுதி நோக்கி மணப்பது என்பது நல்ல வணிகமாகலாம் . நல்ல மணமன்று.

வேந்தர் ஒன்றில் பெண்களின் அழகில் மயங்கி அவர்களின் விருப்பத்தினைக் கருத்தில் கொள்ளாது மணம் புரிய நினைக்கிறார்கள். அல்லது ஏதாவது அரசியல் ஆதாயம் கருதி மணம் என்ற பந்தத்தினை வலிந்து ஏற்படுத்திக் கொள்கிறார்கள்..

எம்மை மணந்தால் தமது அரசுக்கும் நாட்டுக்கும் கேடு எனக் கருதியபோது எம்மைப் புறக்கணித்தார்கள்.அவர்கள் புறக்கணித்தது அவர்களைப் பொறுத்தவரை சரியானதே, ஆனால் எமது பெண்மை அப்பொழுது பெரிய அடியை வாங்கியது. நாம் கூனிக் குறுகிப் போனோம். அப்பொழுதுதான் வதுவை மீதான எனது வெறுப்புத் தொடங்கியது.”

ஔவை எதுவும் சொல்லவில்லை .அங்கவையே தொடரட்டும் என்று காத்திருந்தார்.

“என்னை மணம் புரியவிருக்கும் நீலனின் முதல் மனைவியுமான கோதை என்னைக் காண வந்தாள்.. ..அவள் பேரழகி..நீலனும் அவளும் ஒருமித்த உள்ளன்புடன் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகக் கூறினாள். தந்தை காரி, கபிலருக்கு வழங்கிய வாக்கினை காப்பதற்காகவே நீலன் என்னை மணம்

புரியச் சம்மதித்ததாகக் கூறினாள். கருத்தொருமித்த காதலர் இடையே நான் குறுக்கிடுவதாக அவள் கருதுகிறாள்.”

நீண்ட பெருமூச்சுடன் அங்கவை பேசுவதை நிறுத்தினாள்.

“ஆமாம் சாதாரண பெண்கள் கூட தமது ஆசாபாசங்களை வெளிப்படுத்திவிட முடியும். ஆனால் மன்னர் மக்களுக்கு அந்த உரிமைகூடக் கிடைப்பதில்லை. அவர்கள் வாழ்வு கூட பகடைக்காயின் நகர்வாய் ஆகிவிடுகிறது..” ஔவையார் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

“அன்னையே நான் வதுவை செய்விரும்பாததற்கு நீங்களும் ஒரு காரணம்தான் “ என்று நிறுத்தினாள் அங்கவை.

“நானா…!”

“ஆமாம் அன்னையே..நீங்கள் கூறியது போல மன்னர் மகளான எனக்கில்லாத சுதந்திரம் விறலியான் உங்களுக்கு இருக்கிற்து. ஆசான் கபிலர் வதுவை செய்து வைப்பதே எமது வாழ்வுக்கான நிறைவு எனக் கருதுகிறார். நானோ உங்களைப் போன்று கல்வியிலும் புலமையிலும் சிறந்து விளங்கி உல்கைப் புதிய கோணத்தில் தரிசிக்க விரும்புகிறேன்.

எண்ணையும் எழுத்தையும் எல்லா மனிதரும் பாகுபாடு இன்றிப் படிக்க வேண்டுமாயின் அவற்றைக் கற்றுக்கொடுக்கும் ஆசான்களும் அதிகம் அதிகம் தேவைப்படுவர் என்றுதானே பொருள்.

அத்தகைய ஆசானாக மாறவே நான் விரும்புகிறேன்

அரசரின் அந்தப்புரத்துப் பதுமையாக வாழ்வதில் என்க்குச் சிறிதும் விருப்பமில்லை. “

ஔவைக்கு அங்கவையின் மனநிலை நன்கு புரிகிறது. நிர்பந்தத்தால் ஒரு உறவை ஏற்படுத்தி அங்கவையின் வாழ்வை வீணடிப்பதில் யாருக்கு என்ன நன்மை ஏற்படப் போகிறது_

“நான் காரியிடமும் கபிலரிடமும் இது பற்றிப் பேசுகிறேன்”

ஔவை ,அங்கவைக்கு உறுதி அளித்த வாறு இருவரிடமும் பேசுகிறார். ஔவையுன் சொல் அம்பலம் ஏறியது.

சங்கவைக்கும் உதிரனுக்கும் கபிலர் கொடுக்க வதுவை இனிதே நிறைவேறுகிறது.

காரி அங்கவைக்கு இயற்கை அழகும் அமைதியும் ஒருங்கே அமைந்த ஆற்றங்கரையின் அருகே கல்விக்கூடம் ஒன்றை அமைத்துக் கொடுக்கிறான்.

புத்தபிரான் முழுமதிநாளில் ஞானம் அடைந்ததாகக்கூறுவர். அங்கவையின் வாழ்வின் ஏற்ற இறக்கங்களிலும் முழுமதி நாளுக்கு பங்குண்டு போலும்.

முழுமதி நாளில் காரி உருவாக்கிக் கொடுத்த கல்விக்கூடத்தை

கபிலரே தொடக்கிவைக்கிறார். அதில் ஔவையும் சிறிது காலம் அங்கவையுடன் இருந்து கல்வி கற்பிப்பதில் ஈடுபடுகிறார். அங்கவையிடம் ஆணும் பெண்னுமாய் பல வயதில் இருப்பவர்களும் கல்விகற்க

வருகிறார்கள். அங்கவையும் தொல்காப்பியம் முதலான நூல்களைப் பெரும் ஆசான்களிடம் இருந்து கற்று தன்னுடைய அறிவையும் விருத்தி செய்து கொள்கிறாள். அவ்வப்போது ஔவையுடன் பயணித்து உலக அறிவையும் பெருக்கிக் கொள்கிறாள்.

இதனால் தன் வாழ்வுக்குப் பொருள்கிடைத்த நிறைவு அங்கவைக்குக் கிட்டுகிறது.

கபிலர் இதன் பின் சிறிது காலமே வாழ்ந்தார். பாரியைப் பிரிந்த சோகம் அவரை வாட்ட மரணம் அவரை அரவணைத்துக் கொண்டது. சில சமயங்களில் நட்பின் வலிமை காதலிலும் பெரியது என்பதை உலகம் புரிந்து கொண்டது

வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாசுகி யாழ் இந்துக்கல்லூரியில்த மது உயர்கல்வியைக் கற்றார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து கலைமாணி பட்டதை பெற்றோர். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.சண்முகதாஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் "சங்க இலக்கியங்களில் மருதத்திணையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *