அரங்கேற்றம்




(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இதோ இன்னும் சில விநாடிகளில் மேடையேறக் காத்திருக் கிறது வயலூர் முத்தமிழ்க் கலா மன்றம் பெருமையுடன் அளிக்கும் சமூகச் சீர்திருத்த நாடகமான ‘அரங்கேற்றம்’! ‘வழி பிறந்தது’, ‘யுகோதயம்’ போன்ற வெற்றி நாடகங்களை உங்களுக்கு அளித்த முத்தமிழ்க் கலா மன்றத்தினரின் மூன்றாவது வெளியீடு முதலாவது தடவையாக இதோ இன்று உங்கள் முன் மேடையேறக் காத்திருக்கிறது” வயலூர் பிள்ளையார் கோவிலின் வடக்கு வீதியில் அமைக் கப்பட்டிருந்த கூத்துக் கொட்டகையிலிருந்து வாடைக் காற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு ஒலிபெருக்கி அலறிக் கொண்டிருந்தது.
விநாயகா ஒளியமைப்பாளர்களது ‘ஜெனரேட்டர் கோவில் தீர்த்தக் கேணியடியில் பெரும் ஒலியை எழுப்பிக்கொண்டிருக்க, சண்முகா ஒலியமைப்பாளர்கள் வாடைக்காற்றிற்கு எதிராக தமது பழைய சாதனங்களை இயக்குவதில் பெரும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அறிவிப்பாளரின் குரலுடன் போட்டி போட்டுக்கொண்டு காற்று ‘மைக்’கினுள் புகுந்து எழுப்பும் ஓசை வேறு பார்வையாளர்களது காதுகளைக் கிழித்து விடும் போல் இருந்தது.
“எங்களது கன்னிப் படைப்பிற்கு நீங்கள் தந்த ஆதரவே மென் மேலும் எம்மை இக்களத்தில் காலூன்ற வைக்கின்றது. சென்ற இடமெல்லாம் புகழ் பரப்பி இதோ மீண்டும் எம் மண்ணில் தமது மூன்றாவது நாடகத்தினை அரங்கேற்றுவதில் வயலூர் முத்தமிழ்க் கலாமன்றம் அகம் மகிழ்கின்றது!” கே.எஸ்.ராஜாவின் குரலினைக் குத்தகைக்கெடுத்து திரைக்குப் பின்னால் ஒலிக்கும் மன்றத்து அறிவிப்பாளரின் அறிவிப்பினைக் கேட்டு, கோவிலின் நாலாபுறமும் சிதறி நின்றவர்கள் வடக்கு வீதிக் கொட்டகையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.
கோவிலில் கூத்து என்பதைச் சாட்டாக வைத்து, வீட்டுக்குத் தெரியாது பருத்தித்துறை, நெல்லியடி திரையரங்குகளுக்கு படம் பார்க்கச் செல்லும் இளவட்டங்கள் கூட இன்று தமது புரோக்கிராமைக் கான்சல்’ பண்ணிவிட்டு நாடகம் பார்க்கவென வந்திருந்தார்கள்.
“உரிமைக்குரல் எழுப்பும் சமூகத்தில் உரிமையற்ற ஒரு பகுதி மக்கள் உள்ளவரை அச்சமூகம் உரிமைபெறப் போவதில்லை! நிலப்பிர புத்துவ யுகத்தை ஒழித்து ஒரு புதிய யுகத்தை அரங்கேற்றுவோம்!”
“ஒரு மூண்டு மணித்தியாலக் கூத்துக்கு இவையள் ஆலாபரணங்கள் பண்ணி முடியவே விடிஞ்சிடும் போலகிடக்கு.” கூத்துப் பார்க்கவென வந்திருந்த வட்ட விதானையார் கொட்டாவி விட்டவாறே அலுத்துக் கொள்கிறார்.
“தமிழ்த்தாத்தா கந்தமுருகேசனாரின் கழலடிக்குச்சமர்ப்பண மாக்கி இதுவரை நீங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த எமது நாடகத்தினை இதோ அரங்கேற்றுகின்றோம்!” மேடைக்கு மட்டும் ஒளி பாய்ச்சப்படுகிறது. அரங்குத் திரை உயர்கிறது. நாடகத்தின் முதலாம் காட்சி அரங்கேறுகிறது!
வயலூர் மகா வித்தியாலத்தில் பணிபுரியும் ஆசிரியர் வளவன். அவனது ஒரே தங்கை வசந்தி. தாய், தந்தையற்ற தன் தங்கையை எக்குறையுமில்லாது வளர்த்து வருகிறான் வளவன். பருத்தித்துறை மகளிர் கல்லூரியில் உயர்வகுப்பு பயிலும் வசந்தியை அவளது படிப்பு முடிந்ததுமே ஒரு மருத்துவனுக்கோ, ஒரு பொறியியலாளனுக்கோ, அல்லது ஒரு பட்டதாரிக்கோ மணம் முடித்து வைப்பதே தனது இலட்சியம் என்கிறான் வளவன்.
“தங்கச்சி, என்னுடைய பன்னிரண்டு வயதிலை-நீ பிறந்தாயம்மா, நீ பிறந்த சில நாட்களிலேயே எங்களைப் பெத்தவங்க கண்களை மூட்ட்டாங்க. உனக்குத் தாய்க்குத் தாயாக தந்தைக்குத் தந்தையாக நின்று என் மடியிலும் தோளிலும் தூங்கவைத்து உன்னை வளர்த்தவன் அம்மா நான். இந்தப் பத்தொன்பது, இருபது வருஷங்களாக எந்த வித துன்பமோ, துயரமோ இல்லாம உன்னை வளர்த்த நாள், ஒரு நல்லவனின் கைகளிலை ஒப்படைத்த பின்புதானம்மா என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப்பார்க்க முடியும்!”
மீண்டும் வடக்கு வீதி வெளிச்சத்திற்கு வருகின்றது. அரங்கில் திரை விழுகிறது. இப்போது மேடை இருளில் மூழ்கிறது.
“கொண்ணர் கலக்கிறாரடி. மேடைக்கேற்ற முக வெட்டு. நடிப்பிலும் வி.வி.வைரமுத்துவை வெண்டுடுவார் போலை கிடக்கு.” மகிழ மரத்திற்குக் கீழிருந்து நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்தியைப் பார்த்து, அவளது கல்லூரித் தோழி நித்தியா கூறுகின்றாள்.
வசந்திக்குப் பெருமையாகத்தான் இருந்தது. இதே அரங் கேற்றத்தினை ஒத்திகைகள் நடக்கும் போது எத்தனையோ தரம் பார்த்திருக்கிறாள் வசந்தி.
நாடக ஒத்திகைகள் வளவனின் வீட்டிலேயே நடப்பது வழக்கம். இரவு ஏழு ஏழரை மணிக்குத் தொடங்கும் ஒத்திகை, நடுச்சாமம் வரை செல்வதுண்டு. அந்நாட்களில் நடிகர்களுக்குத் தேவையான சிற்றுண்டிகள், தேநீர் தயாரித்துக் கொடுப்பது வசந்தியின் பொறுப்பாக இருந்து வந்தது. சமயங்களில் நாடகத்தில் நடிக்கும் நடிகர்களும் அவளுக்கு ஒத்தாசை புரிவதுண்டு. நாடக நடிகர்களுள் வசந்தியை மிகவும் கவர்ந்த…….
“இதோ வயலூர் வளவனின் கதை, வசனம், நெறியாள்கையில் உருவான அரங்கேற்றத்தின் இரண்டாவது காட்சி.” இப்போது ஒளியமைப்பாளர் நாடக மேடையை மட்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றார். திரை உயர்கிறது.
சுந்தரன், வளவனுடன் பணிபுரியும் ஒரு பட்டதாரி ஆசிரியன். வயலூரிற்கு கிழக்குப் புறமாக உள்ள வடலித் திடலில் பிறந்தவன். திடலைச் சார்ந்தவர்கள் தீண்டத் தகாதவர்கள்’ என்பவர்கள் மத்தியில் வளவன் அவர்களுக்கு முன் மாதிரியாக நடந்து காட்டினான்.
“இராமனுக்குக் குகனைப் போல இந்த வளவனுக்கு ஒரு சுந்தரன். பிறப்பாலை உருவாகிறதில்லைப் பேதம். கொண்ட கருத்தாலை உருவாகிறதுதான் பேதம்.” சுந்தரனின் தோளில் வளவன் கைகளைப் போட்டு, அவனை அணைக்கும் காட்சியை ஒளியமைப்பாளர் பல வர்ணங்களில் சுழற்றிக் காட்டிக் கொண்டிருக்கும் போது, அரங்கில் திரை விழுகின்றது.
“வசந்தி……சுந்தரனா நடிக்கிறவரும் வைரமுத்துவுக்கு வாய்ச்ச நற்குணம் மாதிரி, உன்ரை கொண்ணருக்குச் சளைச்சவர் இல்லையடி.’ கச்சான் சரையை வசந்தியிடம் நீட்டியவாறே நித்தியா கூறுகிறாள்.
சுந்தரனின் அழகு, நடிப்பை விட அவனது பண்பும், பழக்க வழக்கங்களுமே வசந்தியை அதிகளவில் ஆகர்சித்திருந்தன. ஒத்திகைகளின் போது மட்டுமல்ல, தன் ஓய்வு நேரங்களிலெல்லாம் சுந்தரன் வளவன் வீட்டிற்குச் சென்றுவர ஆரம்பித்தான்.
சுந்தரனின் வருகையும், அவனது அருகாமையும் வசந்திக்கு இனம் புரியாத ஒரு இன்ப உணர்வினை ஏற்படுத்த ஆரம்பித்தது. சுந்தரனுக்கும் வசந்தியின் பால் ஓர் ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்த போது $101………
மூன்றாவது காட்சிக்காகத் திரை உயர்கின்றது. நாடகத்தின் உச்சக்கட்டம் அது! வசந்திக்குப் பிடித்த கட்டமும் அது தான்!
தனது தங்கைக்கும் தனது நண்பனுக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பது வளவனுக்குத் தெரிய வருகின்றது. நம்பிக்கைத் துரோகி’ என்று தன்னைத் தூற்றி வளவன் சினங்கொள்வானோ என்று சுந்தரனின் மனம் ஏக்கம் கொள்கிறது.
மாறாக வளவன் சுந்தரனின் தோளில் தட்டி “என் தங்கைக்கு ஏற்றவன் நீ தான் சுந்தரா! நான் எங்கு தேடியிருந்தாலும் உன்னைப் போல் அவளுக்கு இசைவான ஒருவனைத் தேடியிருக்க முடியாது. என் தங்கைக்கு நல்ல ஒரு கணவனை தேடிக்கொடுப்பதே எனது இலட்சியமாக இருந்தது. ஆனால் தனது இலட்சியக் கணவனை தேடிக்கொண்டதில் எனது தங்கை இலட்சியவாதியாகி விட்டாள்” என்று கூறி வசந்தியினதும் சுந்தரனினதும் கைகளை வளவன் சேர்த்து வைக்கும்போது அரங்கின் நாலாபுறமும் இருந்து மலர்கள் தூவப்படுகின்றன.
“சாதி, மதம், அந்தஸ்து இவை யாவற்றிற்கும் அப்பாற்பட்டதே காதல். காதல் மட்டுமே இவைகள் யாவற்றையும் உடைத்தெறிந்து புதிய சமுதாயம் ஒன்றிற்கு கால்கோளிடவல்லது!”
மூவரும் சிலைபோல் சமைந்து நிற்க அவர்கள் மீது வண்ண ஒளிக்கதிர்கள் சுழலவிடப்படுகின்றன.பச்சை நிற ஒளிக்கதிர்கள் அவர்கள் மீது பாய்ச்சப்படும்போது அரங்கில் திரை விழுகின்றது.
“இன்று இந்த மேடையில் நிகழ்ந்த அரங்கேற்றம் நாளை உங்கள் வீடுகளிலும் நிகழட்டும்! புதிய யுகம் ஒன்று பிறக்க இந்த அரங்கேற்றம் ஓர் ஒத்திகை ஆகட்டும்” அறிவிப்பாளரின் குரல் உச்சத்தாயியில் ஒலிக்க அரங்கு இருளில் மூழ்கின்றது. கோவிலின் வடக்கு வீதி வெளிச்சத்திற்கு வருகின்றது.
“முந்தின நாடகத்தைவிட இது பரவாயில்லை. நாடகத்திலை நல்ல கருத்தும் இருக்கு. இனி நடிச்ச பொடியங்களும் நல்லா நடிச்சாங்கள். குறிப்பாத் திடலில் பொடியன்ரை நடிப்பு அருமையாக இருந்தது” பின்னால் இருந்து யாரோ சொல்லிக்கொண்டு செல்வது வசந்தியின் காதுகளில் விழுகின்றது.
நாடகம் முடிந்து சனங்கள் மெல்ல மெல்ல கலைந்து கொண்டி ருந்தார்கள்.நித்தியாவும் வசந்தியிடம் கூறிவிட்டு அப்போதே சென்று விட்டாள். வேடம் கலைத்து வரவிருக்கும் தமையனுக்காக காத்திருந்தாள் வசந்தி.
‘நாடகத்தில் இப்பேர்ப்பட்ட கருத்தினைக் கூறும் அண்ணன் நடைமுறையில் எப்படி இருக்கப் போகிறானோ? சுந்தரன் மீது நான் கொண்டுள்ள காதலை அவன் அங்கீகரிப்பானா?’
“எப்படி வசந்தி நாடகம்?” சுந்தரனின் குரல் கேட்டு திரும்புகிறாள் வசந்தி.
“நல்லா இருந்தது…….வழமையைவிட இண்டைக்கு நீங்கள் நல்லா நடிச்சிருந்தியள். என்னுடைய பாராட்டுக்கள்.”
”உண்மையிலை இந்த நாடகத்திலை நான் கஷ்டப்பட்டு நடிக்கவே இல்லை. நாடகத்தின்ரை கதையே என்ரை சொந்தக் கதையாகவும் இருந்தபடியாலை என்ரை நடிப்பு இதிலை இயல்பாக இருந்திருக்கலாம்.”
“இப்ப என்ரை அங்கலாய்ப்புகள் எல்லாம் இந்த நாடகத்தின்ரை முடிவைப் போலை எங்கடை முடிவும் இருக்காதோ எண்டது தான்.”
“பயப்படாதை வசந்தி… வளவனை எனக்கு நல்லாத் தெரியும். இதுக்கு அவன் உடன்படுவானே தவிர, எங்களை ஒரு காலமும் உதாசீனப்படுத்த மாட்டான்.” சுந்தரனின் கைகள் வசந்தியின் தோளில் பதிந்த போது பின்னால் ஏதோ அரவங் கேட்டது.
“றாஸ்கல்! என்ன தைரியமிருந்தா நீ இப்படிச் செய்திருப்பாய்?” வளவனின் குரல் கேட்டு இருவரும் திரும்புகின்றனர்.
“வளவன்;…”
“எளியவா! என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட உனக்கென்னடா தகுதி இருக்கு? உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்திலை வைச்சிருக்க வேணும். கொஞ்சம் இடம்கொடுத்தால் தலைக்கு மேலையே ஏறிடுவியள்.”
“வளவன்! நீயா இப்படி கதைக்கிறது? புதிய யுகம், புதிய சமுதாயம் எண்டு கொஞ்சத்துக்கு முந்தி வாய் கிழியக் கத்தின நீயா இப்படி எல்லாம்…”
“அடவிசரா, அது நாடகம்! நாடகங்களை அப்படி எழுதினால் தான் கதை சோபிக்கும். நாலு பேற்றை பாராட்டுகள் கிடைக்கும்.”
“அப்ப உன்ரை அரங்கேற்றங்களும், உபதேசங்களும் ஊருக்கும் பேர் புகழுக்கும் மட்டும் தானா?”
”உன்னோடை ஏன் எனக்கு வீண் பேச்சு? வசந்தி வாடி இங்காலை!”
“தைரியமிருந்தால் அவளைக் கூட்டிக்கொண்டு போ பாப்பம்.”
“அட….அந்தளவுக்கு உமக்கு வாய் நீளுதோ? கோயிலுக்கு வெளியாலை நிக்கிற சனங்களுக்கு வந்த கொழுப்பைப் பார்!”
“அண்ணா! வீண் கதையை நிப்பாட்டுங்கோ! நான் இப்ப உங்களோடை வாறதாக இல்லை!”
“தங்கச்சி…… என்னைப் பார்த்தா நீ இப்படிச் சொல்லுறாய்?”
“ஓம்! என்ரை அண்ணன் அந்தக் கூத்துக் கொட்டகையிலேயே செத்துப்போனான். இப்ப எனக்கு முன்னாலை நிண்டு கூச்சல்போடுறது மதம் பிடிச்ச, சாதித் திமிர் பிடிச்ச ஒரு மிருகம். என்ரை புருஷனை என்ரை எதிர்காலத்தை நான் நிச்சயித்துப்போட்டன். இனி இதிலை குறுக்கிட எவருக்குமே உரிமை இல்லை.”
“ஓகோண்டானாம்! அதையும் பாப்பம்.”
“சும்மா மிரட்டாதையும் வளவன்! இப்ப முடிவு தெரிஞ்சு போச்சுதுதானே?……… இனி நீர் போகலாம்!”
வடக்கு வீதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆட்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.
“உங்களைச் சந்திக்க வேண்டிய இடத்திலை சந்திக்கிறன்.”
அடிபட்ட நாயொன்று ஊளையிட்டுக் கொண்டு கேணியடிப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தது.
வசந்தியின் கைகளைச் சுந்தரன் பற்றினான். வாடைக்காற்றில் உதிரும் மகிழம் பூக்கள், புதிய தம்பதிகளை வாழ்த்திக் கொண்டிருந்தன.
நாடக அரங்கு உருக்குலைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. வெளுக்கும் கிழக்கை நோக்கி இரு உருவங்கள் நிதானத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தன.
– சுடர், பரிசுக்கதை, 1980.
– விடியட்டும் பார்ப்போம்..!, முதற் பதிப்பு: மாசி 1997, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.
![]() |
புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க... |