அம்மா ஏன் போகிறாள்…?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 9,008 
 
 

மணி இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அரை நாள் அலுவலக விடுப்பில் இவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். கோவிலைத் தாண்டி தெருவுக்குள் நுழைந்த போதே இவனுக்கு விஷயம் புரிந்து விட்டது. கூடவே கோபமும் தலையெடுத்தது.

குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரரான ஜோஸ்யர் ஆத்து மாமியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் அம்மா… அது காலையில் நடந்த விஷயமாகத்தான்

இருக்கும் என்பது இவனுக்குத் தெரியும். கூடவே அடுத்த வீட்டு மீனாட்சி மாமி யும், அம்மாவின் புலம்பலில் லயித்துப் போய் நின்றிருந்தாள். இவன் வருவது கண்டதும் மெல்ல அவர்கள் விலக, புடவைத் தலைப்பால் அம்மா கண்களைத் துடைத்துக் கொள்வதை இவன் பார்த்தான்.

அம்மாவுக்கு எப்பவுமே மனதில் உள்ளது நிற்காது. எங்கேயாவது கொட்டியாக வேண்டும். அது இன்ன இடம் தான் என்ற விவஸ்தையெல்லாம் கிடையாது. அவளுக்கு வெளுத்ததெல்லாம் பால்.

பதினாறு வயதில் இரண்டாந்தாரமாக இந்த வீட்டிற்குள் நுழைந்த அவள், இன்று அறுபது வயதை எட்டும் நிலையிலும், அன்று கண்ட மேனி அழியாதது போல் என்பார்களே, அதைப் போல அதே குழந்தை சுபாவம் கொஞ்சமும் குறையாது இத்தனை வருஷம் வாழ்ந்து விட்டாள்.

எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை கண்டவள்தான் எனினும், அத்தனை அனுபவமும் தந்த பாடமாய்க்கூட ஒரு மன தைரியம் என்பது அவளுக்குக் கிஞ்சித்தும் கைவரவில்லை .. வீட்டிற்குள் இவன் நுழைந்த போது கேள்விக் குறியோடு அம்மா இவனை நோக்க, அத்தனை கோபத்திலும் இவனுக்கு அவளைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது.

“இந்தாம்மா…” கை நிறைய வாங்கி வந்திருந்த திராட்சைப் பழத்தை நீட்டினான் சுந்தரம்.

மனதில்லாமலும், அதே சமயம் மறுக்க முடியாமலும் கையை நீட்டி சிவகாமியம்மாள் அதைப் பெற்றுக் கொண்ட போது, அவள் கண்களில் நீர் தளும்பியதை இவன் கண்டான்.

“மனசு கேக்கல… அது தான் அரை நாள் லீவு போட்டுட்டு வந்துட்டேன். காலைல நானப்படி பேசியருக்கப் படாது மன்னிச்சுக்கோம்மா…”

இவன் முடிக்கவில்லை; அதற்குள் கண்கள் மன்னிப்பை அருளுவதை அம்மாவிடம் காண தன்னை மீறித் தளும்பிய கண்ணீரை மறைக்க இவன் தலையைக் குனிந்த கொண்டான்.

“சாப்டியோ, தட்டு வைக்கட்டுமா…?” அம்மாவின் கோபம் அத்தோடு முடிந்தது.

இவன் தன்னைத்தானே நொந்து கொண்டான். என்னானாலும் தான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது தான்.

எந்த விஷயமாயினும், எதிராளியின் தரப்பிலிருந்தும் சிந்தித்துப் பார்த்து, சமன் செய்து சீர்தூக்கும் இவன் அன்று ஏனோ அளவுக்கு மீறிக் கோபப் பட்டுப் போனான்.

“ஒரு நாளைக்காவது தலை முடி இல்லாம சாதம் போட்டிருக்கியா நீ? கல்லுக் கடிக்காம நான் என்னிக்காவது சாப்பிட்டிருக்கேனா சொல்லு பார்ப்போம். ஏதோ கடனுக்கு அழுகற. எனக்கும் உன் சமையலை சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போச்சு. என்னிக்குத் தான் இதுக்கு விடிவு காலமோ?

இவன் புலம்பப் புலம்ப அம்மாவின் முகம் காய்ந்த சருகாம் சுருங்கிப் போனது. அடுத்த நிமிடம் உடம்பெல்லாம் நடுங்க நெஞ்சிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு சாமி படத்தின் முன்னால் விழுந்து புலம்ப ஆரம்பித்து விட்டாள் அவள்.

“ஈஸ்வரா! என்னை எப்பத்தான் அழைச்சுக்கப் போறயோ போறுண்டாப்பா நானிந்த லோகத்துல படற கஷ்டம்! என்னைச் சிக்கிரம் கூட்டிக்கோடாப்பா!” அம்மாவின் படபடப்பை ஏற்கனவே இவன் நன்றாக அறிவானென்றாலும், அன்று ஏனோ கோபத்தின் உச்சிக்குப்போய் விட்டான்.

“சே, சே! பெரிய எழவாப் போச்சு! தெனம் இந்த ஆர்ப்பாட்டந்தானா! பேசாம ஒன்னோட இரண்டு பிள்ளேங்க கிட்டயும் போய் ஒரு மாசம் இருந்துட்டு வாயேன்! ஓட்டல்ல சாப்டுண்டு நிம்மதியா இருக்கேன் நானாவது!” கூறி விட்டு விருட்டென்று பாதியிலேயே எழுந்து போனவன் தான். இதோ பாவமன்னிப்புக் கேட்டு வந்து நிற்கிறான்.

“பருப்புத் துவையல் பண்ணியிருக்கேண்டா, உனக்குப் பிடிக்குமே என்று கூறியவாறே ஒரு உருண்டையை எடுத்து அவன் தட்டில் சிவகாமியம்மாள் போட்ட போது இவன் தன் நினைவிற்கு வந்தான்.

இவள் ஏன் தன்னை இப்படி அன்பினால் கொள்கிறாள்? தாய்ப்பாசம் என்பது தொட்டனைத்தூறும் மணற்கேணியோ? அல்ல… அல்ல. அது அட்சயபாத்திரம் என்று தோன்றியது இவனுக்கு. நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது. உடம்பு முழுவதும் அம்மாவே நிறைந்திருக்க இவன் தனக்குள் மிகவும் சிறுத்துப் போனான்.

துடைத்து விட்டாற்போல் பளிச்சென்று எல்லா வேலைகளையும் முடித்து அவற்றிலிருந்து விடுதலைப் பட்டதில் மகா நிம்மதியான ஒரு பெருமூச்சுடன் நடுக்கூடத்தில் தலைக்கு உயரமாய் ஒரு கட்டையை வைத்துக்கொண்டு படுத்த அடுத்த கணமே அவள் உறங்கிப் போனபோது, புஸ்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த இவனுக்கு அக்காட்சியைப் பார்க்க மனம் மிகவும் வேதனைப்பட்டது.

“இந்த அறுபது வயது வாழ்க்கையில் இவள் எதைக் கண்டாள்? முதலில் இவளுக்கு நல்ல ஓய்வு வேண்டும்” முதல் படியாக இவன் இதைச் சிந்தித்த போது, “இரண்டு நாட்டுப் பெண்கள் இருந்தும் சிவனேன்னு உக்கார உனக்கு யோக மில்லை.” என்றான்

“அதுக்கென்ன பண்றது? இதையெல்லாம் நாம சொல்ல முடியுமோ? நாளைக்கு நீயும் எப்படியிருக்கேன்னு பார்க்கத்தானே போறேன்!”

யாரையும் விட்டுக் கொடுக்காமல் பேசிய போதிலும், அம்மாவின் கடைசிக்கேள்வி அவனை உறுத்த ஆரம்பித்தது. எல்லாவற்றையும் பரிட்சார்த்தமாக சிந்தித்துப் பழக்கப்பட்ட அவனுக்கு, இந்தக் கேள்விக்கு மட்டும் ஒரு திடமான பதிலை உறுதி செய்ய இயலவில்லை .

ஏன் அம்மா அப்படி சொல்கிறாள்? அப்பா மூலமாய் அவள் அந்த அனுபவத்தைக் கண்டிருக்கிறாளா? ரத்த பந்தத்தினால் தோன்றும் அதீதமான ஒரு

உறவு அப்படித்தான் இருக்கும் என்று உணர்த்துகிறாளா? இல்லை அதுதான் இயற்கை என்று சொல்கிறாளா? தாய்க்குப் பின் தாரம்என்பதுதான் உண்மையோ?

அம்மாவின் அந்தக் கடைசிக் கேள்விக்கு உடன், தான் பதில் சொல்லாமல் போனதே அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது போல் ஒரு உணர்வை இவனுக்குள் ஏற்படுத்த சகோதரர்களைப் பாடமாகக் கொண்டு அதற்கு மாறாக, அம்மாவுக்கு சார்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று இவன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

இது நடந்தது பதினைந்து தினங்களுக்கு முன்பு. அதற்குப் பிறகு இன்று காலைதான் இவ்வளவு காட்டமான சண்டை மூண்டது.

அவளின் அத்தியந்த காலத்தில் அவளை நிம்மதியில்லாமல் அடித்ததில், தான் பெரும் பங்கு வகித்து விட்டோமோ என்று இவன் தனக்குள் நடுங்கிப் போனான்.

அன்று இரவு தூக்கத்திலிருந்து திடுமென்று விழித்துக் கொண்டான். படுத்தவாறே குறிப்பாகக் காதைத் தீட்டிக் கொண்டபோது அம்மாவின் விசும்பல் ஒலி இவனுக்குக் கேட்டது.

அவளின் செய்கைகள் எதுவும் புரியாத புதராக இருந்தா இவனுக்கு எப்படியாயினும் அதே நிலை தடிக்கண்ட்டாக ஆபத்து என்று மட்டும் தாக்குத் தாய் தகர்த்த போது தான் சற்றே நிம்மதியைத் தருவது போக ஒரு நான் அந்தக கடிதம் வந்தது

குழந்தை ரவிக்குப் பிறந்த நாள் வருவதையொட்டி திருச்செந்தூர் சென்று வேண்டுதல் நிறைவேற்றி அவனுக்கு மொட்டை போட வேண்டுமென்று குறிப்பட்டு, உடன் புறப்பட்டு வரச் சொல்லி எழுதியிருந்தான் பெரிய அண்ணா

கூடவே ஒரு மாதம் அம்மா அங்கு வந்து விட்டு வரட்டும் என்று இவனிடம் கேட்டுக் கொண்டிருந்தான, ஏற்கனவே ஒரு முறை அம்மாவை அனுப்பச் சொல்லி விட்டு இவன் மறுத்திருந்ததால், இம்முறை அது இயலாமற்போனது.

அத்தோடு ஒரு இட மாற்றம் ஒரு புதிய சூழ்நிலை, அம்மாவுக்கு மன நிம்மதி கொடுக்கலாம் என்று நினைத்தான் இவன்,

கடிதத்தைப் பார்த்ததுதான் தாமதம். ஐந்து வருஷம் குறைந்தவளைப் போல் அன்றே புறப்பட்டு விட்டாள் சிவகாமியம்மாள்.

பஸ் புறப்பட இன்னும் சில நிமிடங்கள் இருந்தன டிக்கெட்டையும் எடுத்து கொடுத்து ஒரு வசதியான இருக்கையாயப் பார்த்து அம்மாவை உட்கார்த்தி விட்டு இவன் வெளியே வந்து நின்று கொண்டான்

பல சமயங்களில் எதையெதையோ கொட்டித் தீர்க்கும் அம்மா இப்போது எதுவுமே பேசாது அமர்ந்திருந்தது இவனுக்கு வியப்பாயிருந்தது. ஏதோ ஒரு நிறைவுடனே இருப்பது போல் இவனுக்குத் தென்பட்டது. ஒரு மாதம் இவனை விட்டு இருக்கப் போகிறோமே என்று அவள் நினைத்ததாகவே தெரியவில்லை.

இவள் தனக்காக ஏதாவது சொல்லமாட்டாளா என்று நினைத்தான்.

“வீட்டை பத்திரமா பார்த்துக்கோ. கொல்லைப்பக்கம் கொண்டி போட்டுப் பூட்டிக்கோ. வெறுமனே தாழ்ப்பாள் போடாதே! வெளில , வாசல்ல போகும் போது ஞாபகமா பூட்டி இழுத்துப் பார்த்திட்டுப் போ” என்று சற்று முன்பு என்னென்னவோ கூறினாளே தவிர, ஒரு மாதம் இவன் தனியாக இருக்கப் போகிறானே என்று அவனுக்காக அவள் எதுவுமே கூறவில்லை . அப்படியானால் அம்மா எதில் திருப்தியடைகிறாள்?

மகன் ஒரு மாதம் வந்து தாராளமாய் இருந்து விட்டுப் போகச் சொல்லியிருக்கிறானே. அதிலா? அன்றாடம் செய்யும் வேலையிலிருந்து விடுதலை கிடைக்கிறதே, அதனாலா? இல்லை, இவனை விட்டு ஒரு மாதம் ஒழிவோம், தனியாய்க் கிடந்து மாயட்டும் என்று நினைத்து விட்டாளா? எதில் அவள் நிம்மதியைத் தேடினாள்? கடிதம் வராதா என்று காத்துக் கிடந்தவள் போல் பிடி பிடியென்று கிளம்பி விட்டாளே?

எப்படியோ, அம்மாவுக்கு அங்கு செல்வதில்தான், அங்கு இருப்பதில்தான் போதிய நிம்மதி கிடைக்குமென்றால் அது இவனுக்குச் சம்மதமே.

இதை அவன் நினைத்த கணத்தில், அம்மாவைப் பார்க்காமல் எப்படிதான் ஒரு மாதத்தைக் கழிக்கப் போகிறோம் என்ற துக்கம் மேலிட மனம் பாரமாகிப் போனது. கூடவே தனது இந்த எண்ணத்தை அம்மா ஏன் உணரவில்லை என்ற கேள்வியும், தலை தூக்கியது. என்னதான், அம்மாவுடன் சண்டையிட்டா லும், சிணுங்கினாலும் ஒவ்வொரு நாளும் இரவு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் மறந்து, அம்மா கையால் சாதம் பிசைந்து போடச் சொல்ல அன்றைய ஆபீஸ் விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொண்டே சாப்பிட்டு முடிப்பதிலெல்லாம் ஒரு சுகானுபவத்தை அவன் கண்டானே! இவையெல்லாம் ஏன் தன்னை அம்மாவுக்கு அடையாளம் காட்டவில்லை. அப்படியானால் இவையெல்லாவற்றையும் மீறிய ஏதோ ஒரு குற்றம் தன்னை அவளிடமிருந்து பிரித்துப் பார்க்கச் சொல்கிறதோ!

அவளிடம் போட்ட சண்டைக்கு தண்டனையாய் ஒரு மாதம் ஓட்டல் சாப்பாட்டை தான் எப்படித்தான் சமாளிக்கப் போகிறோமோ என்பதை இவன் நினைத்த போது சற்றே கலக்கமாகத்தான் இருந்தது.

பஸ் புறப்பட்ட போது, அம்மாவைப் பார்த்து கையசைத்தவாறே இவன் நகர, “டேய், டேய், பார்த்துடா சுந்தரம், பின்னால் பஸ் வருது பார்” என்று அவள் கையை நீட்டி கடைசியாய் கூறிய வார்த்தைகள் அவன் செவியில் தேனாய் பாய்ந்தது.

“அப்பாடா! ஒரு மாதத்திற்கு இது போதும்”. உடம்பெல்லாம் ஒருமுறை சிலிர்க்க, கண்களில் நீர் பனிக்க அம்மாவின் வார்த்தைகள் தந்த திருப்தியில் பஸ் ஸ்டாண்டை விட்டு பஸ் வெளியேறும் வரை கூடவே வேகமாக நடந்தவன், அது கண் பார்வையிலிருந்து மறைந்த அந்த கணத்திலிருந்து தன்னை ஒரு அனாதையைப் போல உணர்ந்தான்.

– தேவி, 1984.

உஷாதீபன் 1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *