கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,952 
 
 

”ஏய்யா சந்துரு…பத்து நாளைக்கு பெங்களூரு போயிட்டு வராலாமுன்னு நினைக்கிறேன்.”

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஜெராக்ஸ், பிரவுஸிங் சென்டர் என்று தொடங்கி, யாருடைய தலையீடும், எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பவர் அப்பா.

ஓய்வு என்ற வார்த்தைக்கே ஓய்வு கொடுக்கணுமின்னு சொல்பவர் அப்பா. அவரா ஓய்வு தேடி? ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தான் சந்துரு.

ரயிலில் அப்பாவுக்கு விருப்பமான சன்னலோர இருக்கை கிடைத்ததில் கூடுதல் மகிழ்ச்சி அவருக்கு. ரயில் கிளம்ப இன்னும் சற்று நேரம் இருந்தது.

‘’ல்லிதா மகால்..கெம்போர்ட்…கப்பன் பார்க்..சாமுன்டீஸ்வரி அம்மன் கோவில்..ஊருக்குள்ளே இருக்கும் இஸ்கான்…அத்தனை பெரிதாய்
பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவன் கோவில்..முடிஞ்சா இதையெல்லாம் பாருங்க…’’

சந்துரு சொன்னதும், புன்னகைத்துக் கொண்ட சிவராமன சொன்னார்.

‘’இது ஓய்வுக்கான பயணம் இல்ல, டிஜிட்டல் சிட்டிங்கிறாங்களே…அங்கேயிருந்து ஒரு நல்ல செய்தியைத் தெரிஞ்சுகிட்டு வந்தா, இங்கெ இருக்கிற இளைஞர்கள் ஒரு நாலு பேருக்காவது வேலை வாய்ப்பு கொடுக்க முடியுந்தானே? அதுக்கானத் தேடல்…”

இந்த வயசுலேயும் நாலு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைத் தரணுமின்னு தேடல் பார்வையோடு பயணிக்கும் தன் அப்பா முன், சனியும் ஞாயிறும் வீட்டில் விழுந்து கிடக்க நினைக்கும் தன்னை நினைத்து தலை குனிந்து நின்றான் சந்துரு.

– ந.ஜெயபாலன் (27-2-13)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *