அபலை
கதையாசிரியர்: சரோஜா ராமமூர்த்தி
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 14, 2026
பார்வையிட்டோர்: 6,011
(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“அபலை” என்று பெருமூச்செறிந்தான் ஸ்ரீதரன். “அபலை” என்று சுருதி கூட்டியது தென்றல். அப்பொழுதுதான் மாதா கோயில் கடியாரம் ஒன்பது அடித்து ஓய்ந்தது. சந்திரன் தன் அமுத வெள்ளத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தான். அருகிலிருந்த மாதா கோவில், அதற்கப்பாலிருந்த தென்னந் தோப்பு எல்லாம் அந்த அமுத வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. எங்கும் நிச்சப்தம். குயில் ஒன்று தன் பேடையோடு பிணங்கிக் கொண்டு ‘ஜிவ்’ என்று பறந்து சென்று மற்றொரு கிளையில் அமர்ந்தது. சந்திரிகையை மாசு படுத்த எங்கிருந்தோ ஒரு கருமுகிற் குழாம் ஓடி வந்தது. அதோ சற்றுமுன் அமுத வெள்ளத்தை வாரி இறைத்தவன் மையிருட்டில் வாசம் செய்யப் போய்விடுகிறான். கீழே ஒரு பெண் தேனினும் இனிய குரலில், நீலாம்பரி ராகத்தில் தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்த அடிகளும் மறைந்து கொண்டே வந்தன. ஸ்ரீதரன் உள்ளத்திலும் கருமுகில் சூழ்ந்தது.
***
ஸ்ரீதரன் பக்கத்தில் ஒரு ரூபசுந்தரி வந்து உட்கார்ந்தாள். கரு வண்டைப் போன்ற கண்கள். எடுத்த நாசி. புன்சிரிப்புத் தவழும் வாய். வளைந்து படிப்படியாய்ச் சரிந்த கூந்தன். நெற்றியில் லேசான குங்குமப் பொட்டு. ஒரு தேவமங்கை போல் விளங்கினாள் என்ற ஒரே வார்த்தையுடன் நிறுத்திக் கொள்ளலாம்.
“சுமதி!” என்றான் அவன்.
அவள் தன் முகத்தை ஒருபுறம் திருப்பி, வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
“என் மேல் என்ன கோபம்?” என்றான் மறுபடியும்.
“கோபமா? கோபமே இராதுதான். நான் உயிரோடு இருக்கும்பொழுது ‘சள் சள்’ என்று விழுந்தீர்கள். இப்பொழுது என் அழகில் சொக்கிப் போய் ஏன் உட்கார வேண்டும்?” என்றாள் சற்றுக் கடுமையான குரலில்.
“சுமதி! இன்பத்தை அறியாத பருவம்; எதிலும் அகங்காரம், இறுமாப்பு நிறைந்த பருவத்தில் உன்னை வெறுத்தேன். ஆனால், சுமதி! உன் இணையிலா அழகு என்னை மயக்குகிறதே.”
“ஓஹோ! நான் பன்னிரண்டு வயதுப் பெண்ணாயிருக்கும் போது என்னைக் கண்டால் விஷத்தைப் போல் நினைத்தீர்கள். இப்பொழுது அழகாம், மண்ணாங்கட்டியாம்” என்று படபட வென்று பேசியிட்டு எழுந்தாள்.
“சுமதி! சுமதி! போகாதே” என்று அவள் கையைப்பிடித்துக் கொண்டான் ஸ்ரீதான்.
“இன்னும் என்ன சொல்லவேண்டுமோ சொல்லி விடுங்கள். கேட்டுவிட்டுப் போகிறேன்” என்று உட்கார்ந்தாள்.
“நீயே சொல்லேன், நான் என்ன பண்ணினேன் என்று.”
“சொல்லட்டுமா? கோபங்கொள்ள மாட்டீர்களே?” என்றாள் அவள்.
சிறிது நேரம் ஆழ்ந்த மெளனம் நிலவியது.
“கேளுங்கள்” என்று அவள் ஆரம்பித்தாள்.
“ஒரு நாள் நீங்கள் காலேஜிலிருந்து வந்தவுடன் தலைவலி என்று போய்ப் படுத்துக் கொண்டீர்களே; நினைவிருக்கிறதா?”
“ஆம்” என்று தலையாட்டினான் ஸ்ரீதான்.
“அப்பொழுது உங்கள் அம்மா என்னைக் கூப்பிட்டு, ‘ஸ்ரீதரனுக்கு உடம்பு சரியாக இல்லை. போய்ப் பார்’ என்றாள். நான் வந்தவுடன் நீங்கள் என்ன சொன்னீர்கள்?”
“நினைவில்லையே.”
“நிளைவில்லையா? ஏன் இருக்கும்! ‘சனியனே! உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டது முதல் இந்தத் தொந்தரவுதான். உன்னை யார் இங்கே வரச் சொன்னது?’ என்று சொன்னீர்களே.”
“ஆமாம், ஒரு வேளை சொல்லியிருக்கலாம். அப்பொழுது எனக்குப் பதினாறு வயசுதானே ஆயிற்று? ஆசை உண்டாகும் காலம் அது அல்லவே?”
“சரி, அதுதான் போகட்டும். கல்யாணத்தின்போது நலங்கு இட்டவுடன் தலையைச் சற்றி அப்பளம் உடைத்தீர்களே. அப்பொழுது தலையில் ‘நக்’ என்று குட்டினீர்களே. முதலில் என்னைப் பார்த்த பொழுதே பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவதுதானே?”
“அப்பொழுது உன்னைப் பார்த்தால் எல்லோரும் அப்படித் தான் சொல்வார்கள். இறுக்கி மரவட்டை மாதிரிப் பின்னல். காது, மூக்குத் தெரியாமல் நகை. முழக்கரைப் பாவாடை. முழங்கை வரை ரவிக்கை; தாவணி. பட்டிக்காட்டைவிடக் கேவலம். சுமதி! இப்பொழுது உன்னைப் பார்த்தால், அடடா! எவ்வளவு மாறுதல்!”
“அப்படியானால் வெளி அலங்காரத்தில்தான் உங்களுக்கு நம்பிக்கை! என் உள்ளம் சதா உங்களையே விவரிக்க முடியாத ஸ்தானத்தில் வைத்துப் பூஜித்து வந்தது உங்களுக்கு எப்படித் தெரியப் போகிறது?”
“சுமதி! போனதை யெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு பேசாதேயேன்” என்றான் ஸ்ரீதாள்.
“கடைசியாக நடந்ததையும் சொல்லிவிடுகிறேன்” என்றாள் சுமதி. அதைக்கேட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான் ஸ்ரீதான்.
“மார்கழி மாதத்தில் விடியற்காலை எழுந்து உங்கள் அப்பாவின் பூஜைக்காகக் கிணற்றண்டையில் குளிக்க ஜலம் இழுக்கப் போனேன். உங்கள் வீட்டில்தான் பாசி அதிகமாயிற்றே. சறுக்கி ‘மடார்’ என்று விழுந்து விட்டேன்.”
“ஆமாம், உன் முடிவு அதில்தானே இருந்தது” என்றான் ஸ்ரீ,தான், துக்கங் கலந்த குரலில்.
“அன்று மத்தியானம் என்னண்டை வந்து பார்த்துவிட்டு, ‘நடக்கும் போது பார்த்து நடக்கிற வழக்கமில்லை உனக்கு. எப்படியாவது தொலைந்து போ!” என்று சொல்லிப் போய்விட்டீர்கள்.”
ஸ்ரீதான் முகத்தில் ஆழ்ந்த சஞ்சலம் நிலவியது.
“பிற்பகல் மூன்று மணிக்கு உடம்பு அதிகமாகிவிட்டதன் பேரில் அம்மா காலேஜுக்குச் சொல்லி அனுப்பியும், என் நினைவு தடுமாறுகிற சமயத்தில் தானே வந்தீர்கள்? அப்பொழுதாவது உங்கள் வாயால் ‘சுமதி’ என்று கூப்பிட்டீர்களா? ‘அடே! பிராணன் போகிற சமயத்திலாவது திருப்தியாய் ஒரு வார்த்தை சொல்’ என்று அம்மா சொன்ன போது, ‘நீ பார்த்துப் பண்ணினதை நீயே அனுபவி. திருப்தி என்னவாம், திருப்தி!’ என்றீர்கள். இப்பொழுது ‘சுமதி! சுமதி!’ என்று குலாவத் தெரிகிறதா?”
“அதுதான் சொன்னேனே: ஒன்றும் சரியாகத் தெரியாத பருவத்தில் கல்யாணம், கார்த்திகை என்று செய்து வைத்து விட்டால் என்ன பண்ணுவது? சில சமயம் நான் உன்னைக் கூப்பிட்டால் அப்பொழுது தான் நீ பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கதை பேசிக் கொண்டிருப்பாய்.”
”உங்களை ஏதாவது கேட்டால் ‘சள்’ என்று விழுவீர்கள். இந்தப் பொல்லாத புருஷருடன் இருந்து வாழ்க்கை நடத்த வேண்டாமென்றுதான் போய்விட்டேன்.”
“இப்பொழுது அப்படியில்லையே; என் தப்பை யெல்லாம் மன்னித்துக் கொள்ளேன்.”
“ஹும், முடியாது” என்று சொல்லிச் சுமதி எழுந்தாள்.
”சுமதி! சுமதி! போகாதே. உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது” என்று எழுந்து கையை நீட்டி அவளைத் தொடப்போனான்.
அந்த ரூபகசுந்தரி மின்வெட்டுப் போல் மறைந்து விட்டாள்.
***
நீட்டிய கை மடக்க முடியாமல் ‘சில்’ என்று பனியால் நனைந்து போயிருந்தது. கீழே ஒரு பெண் குரல் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தது.
“கல்யாணி! கல்யாணி!” என்று கூப்பிட்டான்.
கல் கல் என்று மெட்டி சப்திக்க இடுப்பில் குழந்தையுடன் ஒரு பெண் வந்தாள்.
“இன்னும் தூங்கவில்லையா அவன்?” என்றான் ஸ்ரீதரன்.
“இந்தப் போக்கிரி, அவ்வளவு சீக்கிரம் தூங்கிவிடுவானா?” என்றாள் கல்யாணி.
குழந்தை தன் இளந்தளிர் போன்ற கையை நீட்டித் தந்தையிடம் தாவ எத்தனித்தது.
“போக்கிரி! அம்மாவண்டையே இருடா” என்று சொல்லிக் குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தான் ஸ்ரீதான்.
“பனி ‘சில்’ என்று அடிக்கிறதே. உள்ளே போகலாமா?” என்றாள் அவள். அவன் பேசாமல் அவள் பின்னால் நடந்தான்.
குழந்தையைத் தொட்டிலில் விட்டு ஆட்டிக்கொண்டே, “கண்ணு! அப்பா தூங்கணும். பேசாமல் தூங்கு” என்று சொல்லிக் கொண்டிருந்தாள் கல்யாணி.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் குழந்தை ஆழ்ந்த புன்னகையுடன் நித்திரை செய்ய ஆரம்பித்தது.
தொட்டிலண்டை நின்று கொண்டு, “கல்யாணி! எல்லாம் அவன் பெரியம்மா ஜாடையாய் இருக்கிறான்; இல்லையா?” என்றான் ஸ்ரீதரன்.
“ஆமாம், சிரிப்பதுகூட அக்கா மாதிரிதான் இருக்கிறது என்று அம்மா சொன்னாள்” என்றாள் அவள்.
அந்தச் சிரிப்பின் அழகை அனுபவிக்க நாம் கொடுத்து வைக்கவில்லையே என்று ஏங்குவது போலிருந்தது ஸ்ரீதான் முகச் சாயல்.
“மணி பத்துக்கு மேல் ஆய்விட்டதே. தூக்கம் வரவில்லையா?” என்றாள் கல்யாணி.
“ஏன், உனக்கு வருகிறதோ? வேணுமானால் தூங்கு. நான் தாலாட்டுப் பாடுகிறேன்.”
அவள் கன்னங்கள் நாணத்தால் சிவந்தன.
ஸ்ரீதான் அவள் பக்கத்தில் நின்றுகொண்டு கட்டுக் கடங்காமல் பறந்து கொண்டிருந்த அவள் கூந்தலைச் சரிப்படுத்தினான்.
அவள் அங்கிருந்து விடுவிடென்று நடந்து போய் ஜன்னலண்டை நின்று கொண்டாள்.
மறுபடியும் ஸ்ரீதரன் அவள் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு புன்னகையுடன் நோக்கினான். கல்யாணி ஸங்கோசத்துடன் கையை விடுவித்துக் கொண்டு தலை கவிழ்ந்தாள்.
“இதென்ன வெட்கம், அசடு மாதிரி?” என்று லேசாக அவள் கன்னத்தில் தட்டினான்.
கருமுகிலிலிருந்து சந்திரன் வெளிப்பட்டு மறுபடியும் அமுத வெள்ளத்தை வாரி இறைக்க ஆரம்பித்தான். பிணங்கிச் சென்ற குயில் தன் பேடையுடன் குலவ ஆரம்பித்தது. எதிரீல் மாட்டியிருந்த சுமதியின் படம், “என்னைப் பிரிந்து இருக்கமுடியாதா?” என்று கேலி செய்வது போலிருந்தது.
பாவம்! அபலையாகிய அவள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.
நன்றி: https://s-pasupathy.blogspot.com/
![]() |
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க... |
