அண்ணலே உன் வழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 8, 2025
பார்வையிட்டோர்: 47 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“யோவ்!… அப்பாலே போய்யா… மேலே வந்து உரசிக்கிணு நிக்கிறே!…” – எரிச்சல். 

“சே !… ஏ… சே!…” – அருவருப்பு 

“அட! சீ! கர்மம்… கர்மம்!'” – அலுப்பு: 

“இதோ பாரய்யா !… நாங்கள் எல்லாம் போகும்வரை அதோ அங்கே போய் உட்காந்திரு!… எழுந்திருக்கவே எழுந்திருக்காதே !… எல்லோரும் போனபிறகு போய்க் காட்டிக்கொள்… ஏதேனும் தேறக்கூடிய உடம்பாக இருந்தால் சரி… உடம்பைத் தின்னும் இந்த வியாதிக்கு…”- அறிவுறை. 

இத்தனைக்கும் ஆளான அந்த உருவம் துணிப்போர்வைக் குள்ளிருந்து முனகியது. சிறிது கெஞ்சிப் பார்த்துவிட்டு, பய னற்றுப் போகவே ஏமாற்றத்தோடு தொலைதூரத்தில் போய் அமர்ந்து கொண்டது. அதற்குப் பின்னர்தான் அந்தக் கூட்டத் தில் அமைதி நிலவியது. 

ஒவ்வொருவராக உள்ளே செல்வதும், திரும்பி வருவது மாகக் கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. நேரம் சூரியனின் ஒளியோடு ஏறிக்கொண்டேயிருந்தது. 

“ம்!… இந்த ஈக்களுக்கு எப்படித்தான் நான் இருக்கும் இடம் தெரியுதோ !… துணியை இழுத்துப் போர்த்திக் கொண் டாலும் கூட மேய வந்து விடுகின்றன… இவைகளின் தொல்லை களிலிருந்து விடுபடுவதே பெரும்பாடாகி விடுகிறது !…’ – துணி மூட்டத்திற்குள்ளிருந்து நாகலிங்கம் முனகினான். வெயில் ஏற ஏற அவன் உடல் வாதையும் அதிகரித்துக்கொண்டே போயிற்று. அவனுடைய இதயம் அவனைக் குத்திக் காட்டிச் சிரித்தது; 

‘ஏய்!… நாகலிங்கம் ! அரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லுமடா !… தெரியுமா? ஒன்றும் அறியாத அந்த சங்கரமூர்த்தியை, நீ செய்த கொலைக்காகக் குற்றவாளியாக்கி… தண்டனை வாங்கிக் கொடுத்தாயே… அதுதான் அநுபவிக்கிறாய் !…’ 

இதயத்தின் ஓலத்தை அவனால் பொறுக்க முடியவில்லை. 

உள்ளம் குமுறிக் குமுறிக் குன்றியது. 

அவனுடைய கண்கள் நீரால் குளமாயின. 

உடல் நடுங்கியது. இழுத்து மூடிப் போர்த்துக்கொண்டு கண்களையும் மூடிக் கொண்டான் நாகலிங்கம். 

அவன் மனக்கண்கள் விரிந்து கொண்டன. 


எங்கே திரும்பினாலும் மனிதத் தலைகள் கசமுச வென்ற பேச்சு. அனுதாபம், ஆச்சரியம், ஆத்திரம் முதலிய நவரசக் கலவை: கண்டிப்பு, பக்கபலமான வார்த்தைகள், கோஷங்கள் முதலிய ‘பாலிடிக்ஸ். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் போலிசார் கடமையை நிறைவேற்றுவதில் முனைந்திருந்தனர். 

சங்ரமூர்த்தி போலீஸாரின் பாதுகாப்போடு ‘வேனு’க்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

அவருடைய தலை குனிந்திருக்கவில்லை, நிமிர்ந்திருந்தது. 

சுண்கள் நாணத்தோடு இமையினுள் ஒளிந்துகொள்ளவில்லை. ஆத்திரத்தோடு கனத்து நிலைகுத்திக் கிடந்தன. 

கால்கள் சோர்ந்து மெல்லடி பெயர்க்கவில்லை, ராணுவத் தினனைப்போல் வீரநடை பயின்று கொண்டிருந்தது. 

என்னதான் தன் இதயத்தின் உணர்ச்சிக் குவியலை அவர் அடக்கிக் கொண்டாலும்கூட, கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டிருந்த ஆனந்தனால் தாங்கமுடியவில்லை. ஓடிச் சென்று தந்தையின் காலடியில் வீழ்ந்தான்; உடல் குலுங்கக் குமுறிக் குமுறிக் கரைந்தான்; அவர் கால்களைக் கண்ணீரால் கழுவினான். 

சங்கரமூர்த்தி சிரித்தார்… ‘ஓஹோ’ என்று வெறிபிடித் தாற்போல் சிரித்தார்.
 
“பயித்தியமே !… அழுவதால் என்ன பயன் ?… எழுந்திரு” என்றார். 

“சத்திய மூர்த்தியான உங்களுக்கா இந்த நிலை?…அப்பா!… உங்களுக்கு ஆயுள் தண்டனையா?’ ‘- ஆனந்தன் குமுறினான். 

“அதனால் … அழுதால் சரியாகிவிடுமா, ஆனந்தா !… நடக்க வேண்டியதை அல்லவா பார்க்க வேண்டும் ?… பழிக்குப் பழி !… ரத்தத்திற்கு ரத்தம்!…செய்யாத கொலைக்குத் தண்டனை வாங்கியபோது, ஒரு கொலை செய்து அந்தத் தண்டனையை உரியதாக்கிக் கொண்டு விடலாமல்லவா!…” 

ஆனந்தனுக்குப் புரிந்துவிட்டது. கண்களைத் துடைத்துக் கொண்டு விறுட்டென எழுந்தான். தந்தையின் கரங்களைப் பற்றிக் கொண்டான். 

“சத்தியம் அப்பா !…” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று நடக்கலானான். 

சங்கரமூர்த்தியின் பயணம் தொடர்ந்தது. 

ஆனந்தன் செய்த சத்தியத்தின் உண்மை சொரூபம் மூவருக்குத்தான் புலப்பட்டது. ஒன்று ஆனந்தன்; இரண்டா வது அவனுடைய தந்தையான சங்கரமூர்த்தி; மூன்றாவது கூட்டத்தில் மறைந்து ஒளிந்து நின்றுகொண்டிருந்த-ஆனந்தன் பழிவாங்கிவிடுவதாகக் கூறிப் பழிவாங்கத் தேடப் போகிற- நாகலிங்கம்.

ஆனந்தனின் உறுதிவாய்ந்த வார்த்தைகளைக் கேட்டதுமே நாகலிங்கத்தின் இதயம் குளிர்கொண்டு விட்டது. உடனே அங்கிருந்து…நழுவியவன்தான் !… ஆனந்தனின் கரங்களில் படா மல் தப்பி வந்து விட்டான். ஆனால்…இந்தக் கொடிய வியாதி யின் பிடியில் அகப்பட்டு விட்டான்! பாவம்! 


“ஐயா!…”- இனிமையான குரல். 

நாகலிங்கம், யாரோ யாரையோ அழைக்கிறார்கள் என எண்ணி வாளாவிருந்தான். 

“ஐயா !… நான்தான் வைத்தியன் !… உங்களை அழைத்துக செல்வதற்காகத்தான் வந்திருக்கிறேன்” 

நாகலிங்கத்தால் நம்பமுடியவில்லை. 

உலகமே வெறுத்து ஒதுக்கும் நம்மிடமும் ஒருவர் ஆதர வாகப் பேசுகிறாரா ? 

நாகலிங்கம் தள்ளாடி எழமுயன்றான். அவன் தடுமாறிக் கீழே விழ எத்தனிக்கவே, அந்த வாலிபன் குனிந்து அவனைப் பற்றிக் கொண்டான். நாகலிங்கம் குன்றிப்போனான். 

பக்கத்தில் வந்தாலே எட்டி ஓடத்துடிக்கின்ற இந்தச் சமு தாயத்தில் நம்மைத் தொட்டுத் தூக்கவும் ஒருவர் இருக்கிறாரா? 

நாகலிங்கத்தை அழைத்துக் கொண்டு வீட்டினுள் அந்த வாலிபன் அவன் மேற்போர்வையை நீக்கினான். அவனு டைய முகத்தைப் பார்த்ததும் அவ்வாலிபன் முகத்தில் திகைப் பின் வியப்புகள்! 

‘… இவ…ன்.. கொலை… கார… நாக.. லிங்கம்… அல்… லவா’ காம் பழிவாங்க வேண்டிய .. கயவனல்லவா !..’ 

உள்ளத்தில் தோன்றிய உணர்வினது பொழிவால் ஆனந்தனின் உடல் சூடேறியது. 

‘பழிக்குப் பழி! ரத்தத்திற்கு ரத்தம் !. ‘-ஆனந்தனின் மனக்குரல் முனகியது. 

நாகலிங்கம் பேசிக் கொண்டிருந்தான் : “… ஐயா !… ஊரே உங்களைப் பற்றிப் பேசிக் கொள்கிறது… உலகத்தை உய்விக்க வந்த ஆண்டவன் என்று புகழ்கிறது !… இது வரை யாரிடமும் இல்லாத மூலிகைகளைக் கொண்டு தீராத பெரும் வியாதிகளை எல்லாம் குணப் படுத்துகிறீர்களாம்…. அதனால் தான் உங்கள் சந்நிதியைத் தேடி ஓடி வந்தேன் ஆண்டவனே ! …” -என்று கூறியபடி ஆனந்தனின் காலடியில் விழுந்தான். ஆனந்தனின் உள்ளம் என்ன செய்வது என்ற முடிவிற்கு வர முடியாமல் தடு மறித் தவித்தது: 

“நீங்களும் இன்று போய்விட்டு நாளை வாருங்கள்… மருந்து தருகிறேன்!..”. – என்றான். 

நாகலிங்கம் உள்ளம் நிறைந்தாற் போன்ற உணர்வுடன் வாயிலை ல நோக்கி நடந்தான். அவன் சென்ற பின் ஆனந்தன் தந்தையின் படத்தருகில் சென்று வணங்கினான். 

அப்பா !… அன்று எனக்குப் பயந்து ஓடியவன், இதோ, இன்று என் காலடியில் சரணடைய ஓடி வந்திருக்கிறான். அவனை என்ன செய்வதென்று தெரியவில்லை. பழிக்குப் பழி அவனைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன் இத்தனை நாள் ஆனால் இன்று என் முன்னே, ‘இதோ இருக்கிறேன்’ என்று அவன் வந்து நிற்கும் போது என் கரங்கள் கட்டப் பட்டுள்ளதைப் போல் உணர்கிறேன் !… தெய்வமாகி விட்ட நீங்கள் தான் வழி காட்ட வேண்டும். 


‘ஐயா!’ -வாயிற்புறத்திலிருந்து குரல் எழுந்தது. 

”உள்ளே வாருங்கள் !… ”-ஆனந்தனின் பதில். 

ஒருவர் உள்ளே நுழைந்தார். தூயக் கதராடை; தெளிவான முகம். அமைதியான நடை: 

“என்ன வேண்டும் ?” 

“நண்பரே !… என் குழந்தைக்கு இது நாள் வரை, குண மாகாத நோயை நீங்கள் தீர்த்து விட்டீர்கள். அதற்குக் காணிக்கை செலுத்த வந்துள்ளேன்”. 

ஆனந்தன் சிரித்தான். “நான் எதுவும் பெற்றுக் கொள்வ தில்லை என்று உங்களுக்குத் தெரியாதா ? ” 

“நான் பொருள் ஒன்றும் கொண்டு வரவில்லை ஐயா ! எந்தப் பொருளும் உண்மையான அன்பைக் குறிக்காது என்று நினைப் பவன் நான். ஆனால் நான் இப்போது கொண்டு வந்திருக்கும் காணிக்கையை நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்,” என்றபடியே அந்த மனிதர் தம் கையிலிருந்த பொருளை ஆனந்த னின் முன்னர் வைத்தார். ஒரு கதர்த் துண்டு ! காந்தியைப் பற்றிய சில புத்தகங்கள் ! 

“இந்தத் துண்டு நானே நூற்று நெய்தது ஐயா! ” – அவர் குரலில் பெருமையின் இழைகள். 

“இந்தக் கதர் தான், உண்மையின், அன்பின், பக்தியின் சின்னம் என்று நான் கருதுகிறேன்… நன்றி ஐயா, நான் வருகி றேன் !… ” —அந்தத் தொண்டர் விடை பெற்று நடந்தார். 

ஆனந்தன் கதருடையையும், புத்தகங்களையும் எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டான். 

அந்தப் புத்தகத்தில் ஒன்றை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்; 


தென்னாப்பிரிக்காவில் ஒரு நாள். 

இந்தியருக்கு அனுமதிச் சீட்டு அளிக்க வேண்டும் என்று காந்திஜியின் யோசனை பேரில் தென்னாப்பிரிக்க சர்க்கார் தீர்மானித்தது. சீட்டு இல்லாதோர் தண்டிக்கப் படுவார்கள் என்றும் அரசாங்கம் அறிவித்தது. காந்திஜி இவைகளுக்கு ஒப்புக் கொண்டார். சிலருக்கு இந்த ஒப்பந்தம் பிடிக்கவில்லை. அவர்களுள் மீர் ஆலம் என்ற பட்டாணியனும் ஒருவன். 

ஒரு பொதுக் கூட்டத்தில் காந்திஜியை நோக்கி மீர் ஆலம், இந்த அனுமதிச் சீட்டு சமாசாரம் எனக்குப் பிடிக்கவில்லை !… என்று கத்தினான். 

காந்திஜி சாந்தமாக, “பிடிக்காதவர்கள் வாங்க வேண்டாம். நான் வாங்கப் போகிறேன்….” என்றார்: 

“நான் அடிப்பேன் !…” என்று வெறியோடு கூவினான் மீர் ஆலம். காந்திபாபு சிரித்தார். 

ஆனால் … அனுமதிச் சீட்டு வாங்க காந்தியடிகள் சென்ற போது மீர் ஆலம் ஒரு குழுவோடு வந்து அவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, ‘அவர் இறந்து விட்டார் ‘ என்று அப்படியே விட்டுச் சென்றான்; 

நினைவு வந்ததும் பாபுவின் வாயிலிருந்து வந்த முதல் சொற்கள் : “ என்னைத் தாக்கியவரை தண்டிக்கக் கூடாது நான் அவர்களை மன்னிக்கிறேன்…. ” என்பனவே. 

ஆனந்தனின் உடல் புல்லரித்தது. கண்களில் நீர் முத்தெடுத் தது. ஒன்றா இரண்டா? அந்தப் புத்தகம் முழுவதிலும் இதே போன்ற நிகழ்ச்சிகள். அத்தனையும் அண்ணலின் சத்தியமான மன்னிப்புக்களைக் கொண்டவை ! அவற்றைப் படிக்கப் படிக்க ஆனந்தனின் உள்ளம் தெளிந்து கொண்டே வந்தது. மற்றொரு பக்கத்தில்…… 

“மாலை 5 மணி. பிரார்த்தனை நேரம் வரவே காந்திஜி பிரார்த் தனைக்குப் புறப்பட்டார். மக்கள் வந்து குழுமியிருந்தனர். காந்தி மகான் பிரார்த்தனை ஸ்தானத்தை அடைந்த உடனே, எவனோ ஒரு வாலிபன் பாய்ந்து வந்து அவரது உடலில் துப்பாக்கியால் சுட்டான். உடல் தரையில் சாய்ந்தது; ரத்தப் பெருக்கெடுத்தது. இருபது நிமிடங்களுக் கெல்லாம் அத்தெய்வத்தின் இகலோக வாழ்வு முடிந்துவிட்டது. இறந்து கிடந்த மகானின் முகத்தில் தயையும், மன்னிப்பும் அதாவது குற்றவாளியினிடத்தில் மன்னிப்பும் – காணப்பட்டதாம்……!” 

அதற்குமேல் ஆனந்தனால் படிக்க முடியவில்லை. புத்தகத்தை மூடினான். அப்புத்தகத்தின் மேலிருந்த நிர்மலமான காந்திஜியின் முகம் அவனைப் பார்த்துச் சிரித்தது. 

“அன்பனே ! குற்றம் செய்வோரைத் தண்டிக்காதே ! மாறாக அவர்களிடம் அன்புபூண்டொழுகு. அன்பினாலும் பாசத்தினாலும் அவர்களைக் கட்டு. குற்றவாளிகள் குற்றம் செய்வதற்கென்றே பிறந்தவர்கள் என எண்ணாதே!… அவர்களும் திருந்த ஒரு வாய்ப்புக்கொடு. ஹரே ராம்! ஹரே ராம் !…” 

ஆனந்தன் கண்களைக் மூடிக்கொண்டான். அவன் இமையி லிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் கீழே உதிர்ந்தன. அவை அவன் இதயத்திலிருந்த ‘பழி, பழி’ என்ற அழுக்கையும் கழுவிக் கொண்டு விழுந்தன 

“அண்ணலே ! உனது ஆணை !… தவறு செய்பவனை மன்னிப் பதே கடவுள் தொண்டு !… அவர்கட்கு நன்மை செய்வதே தகுந்த தண்டனை” – என்று கூறிக்கொண்டான். 

நாகலிங்கத்தின் கொடிய தொழுநோயைத் தீர்க்க ‘அமிருத சஞ்சீவினி ‘ எனும் அரிய மருந்தைத் தயாரிப்பதில் முழு மூச்சாய் ஈடுபடலானான் ஆனந்தன்.

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *