அகதிகள் முகாமில்… ஒரு குரல்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2025
பார்வையிட்டோர்: 52 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நாயர்…நாயர்…” 

இருபது இருபத்திரண்டு வயது நிரம்பிய இளைஞன் சற்று அதட்டல் போட்டதும்தான் குஞ்சன் நாயர் நிமிர்ந்து உட்கார்ந்தார். 

“சாயா… சாப்பிடலை…” -நாயர் பக்கத்தில், தகரக் குவளையில் நிரம்பியிருந்த குளிர்ந்த தேநீரைச் சுட்டிக்காட் டிக் கேட்டான் அவ்விளைஞன். 

முகாமிற்கு வந்து ஏழெட்டு வாரங்களாகியும். இந்த எழுபது வயதுக் கிழத்தை நம்மால் திருத்த முடியவில்லை என்பது போல் இளைஞனின் முகத்தில் விரக்திப் புன்னகை படர்ந்திருந்தது. 

சரஸ்வதி மண்டபத்தில் வந்து ஒதுங்கியவர்கள்- நாளுக்கு நாள் இடம் மாறுவதையும், உறவினர்கள், நண் பர்களைப் பார்த்ததும் புனர்ஜன்மம் எடுத்தவர்கள் போல் கண்ணீரில் நனைபவர்களையும, கட்டித் தழுவியவர்களையும் பார்த்துப் பார்த்து அலுத்த அவ்விளைஞனின் கண்களுக்கு குஞ்சன் நாயரின் போக்கு மட்டும் சற்று விசித்திரமாகப் பட்டது. 

வந்ததிலிருந்து மண்டபத்தின் தெற்குப் பக்கத்து மூலையைவிட்டு ஓரடிகூட விலகி உட்கார்ந்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும் முழங்காலையே சுமைதாங்கியாக்கி தலையை அதில் கவிழ்த்தபடியே உட்கார்ந்திருப்பதைத் தவிர நாலு பேருடன் அவர் சகஜமாகப் பேசியதை இளை ஞன் மட்டுமல்ல, எவரும் பார்க்கவில்லை. 

அம்மண்டபத்தில் பலபேர் நிறைந்திருந்தாலும் எப் பொழுதும் மயான அமைதிபோல் ஓர் சோகச்சூழ்நிலை நிலவியது. சாப்பாட்டு வேளைகளில் மட்டும்தான் சற்றுக் கலகலப்புத் தென்படும். ‘கால் கிலோ’ ரொட்டியும், ஒரு டம்ளர் ‘சாயா’வும்கூடத் தவறிப் போய்விடுமோ என்கிற அவசரத்தில் எல்லோரும் பரபரப்பாக அங்குமிங்கும் அலை யும் அந்தச் சமயத்திலும், குஞ்சன் நாயர் பற்றற்ற துறவி போல் அமைதியாக உட்கார்ந்திருப்பார். 

இரண்டொரு நாட்கள் வரை இதையே தொடர்ந்து அவதானித்துக்கொண்டு வந்த அவ்விளைஞன் தானாகவே அப்பெரியவரிடம் போய்ப் பேச்சுக் கொடுத்தான். 

அவனது அந்நியோன்யமான விசாரணைகளுக்கு அப்பெரியவர் ‘சட்’டென்று நெகிழ்ந்துவிடவில்லை. நான்கைந்து தினங்கள்வரை அவ்விளைஞனின் பிடிவாதமான உபசரணையின் பின்னால்தான் குஞ்சன் நாயர் ஓர் முன்னிரவு வேளையில் தன் மவுனத்தைக் கலைத்துப் பேச ஆரம்பித்தார். பேச்சின் ஆரம்பத்தில் நாயரின் கண்டத்திலிருந்து தேம்பல் ஒலியைத் தவிர வார்த்தைகளே வரவில்லை. பின்னால் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வேதனையை விழுங்கியபடியே கதையைக் கூற ஆரம்பித் தார். அதைக் கேட்டதுக்கப்புறம்தான் குஞ்சன் நாயர் மேல் அவ்வாலிபனுக்கு இனம் புரியாத பற்றுதல் உருவானது. 

“நாயர், இப்படியே குந்திகிட்டிருந்தால்” என்னாகிறது… இந்தியாவுக்குப் போக விரும்பறவங்க பெயர்களை ஆபீஸ்காரங்க வந்து இங்கேயே பதிவு பண்ணறாங்க… உங்க முடிவுதான் என்ன?… பெயரைக் கொடுக்க வேண்டியதுதானே…” – ஏழெட்டு வாரங்கள் பழகிய உரிமையுடன் கேட்டான். 

“….”

தன் கேள்விக்குப் பதில் வராது போகவே, பெரியவருக்கு ஆதரவளிப்பதுபோல், அவர் பக்கத்திலேயே குத்துக் காலிட்டு அமர்ந்து, “ஏதாவது அடையாளப் பத்திரங்கள் வைத்திருந்தால் கொடுங்கள் நாயர்… நானாவது போய் பதிந்துவிடுகிறேன்…” என்றான். 

அவ்விளைஞனின் வற்புறுத்தலைத் தாங்கமுடியாதவர் போல் இறுகிய முகத்துடன், தன் வேட்டி இடுக்கில் பத்திரமாகச் செருகிவைத்திருந்த நைந்துபோன “பிரவுன் கவரை” வெளியே எடுத்தார். அதற்குள் அவரது பழுப்பேறிக் கலர் மங்கிப்போன கடவுச் சீட்டுப் புத்தகம் பத்திரமாக இருந்தது. 

கடவுச் சீட்டிலிருந்து, முக்கியமான தஸ்தாவேஜுகள் எனத் தான் கருதுபவைகளை, தன் மடியிலேயே கட்டிக் கொண்டு திரிவது குஞ்சன் நாயரின் வெகுநாளைய பழக்கம். கொஞ்ச நாட்களுக்கு முன்னால் அந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டுமென எண்ணிச் சின்னதாக தனக்கென ஒரு ‘சூட்கேஸ்’ வாங்கி அதில் இவைகளைப் பத்திரப்படுத்தியும் பார்த்ததுண்டு… ஓரிரண்டு மாதங்கள் வரை நடை முறையில் அது சாத்தியமாக இருந்தாலும்… பின்னால் பழக்கதோஷம் விடவில்லை. வெளியே புறப்படும் சமயம் குஞ்சன் நாயருக்கு அவற்றை மடியில் எடுத்துக் கட்டிக் கொண்டு போனால்தான் திருப்தி. காலப்போக்கில் சூட்கேஸ்ஸில் வைத்துப் பத்திரப்படுத்துவதை மறந்து பழையபடி மடியிலேயே கட்டிக் கொண்டு அலைந்தார். 

கடவுச்சீட்டுப் புத்தகத்தை அவ்விளைஞனின் கையில் கொடுத்த பின்னால்; அவரால் முன்போல் அமைதியாக உட்கார முடியவில்லை. முகத்தை முழங்காலில் கவிழ்த்துப் பார்த்தார்… ம்… ஹும்… 

கண்களை இறுக மூடிக் கொண்டார்…ம்… ஹும்… 

“அச்சன… அச்சன்… அச்… அச்…” என்கின்ற மெல்லிய அழைப்பொன்று அவர் காதிற்குள் திரும்பவும் திரும்பவும் வந்து ஓங்காரமிட்டன… கண்களை இடுக்கித் தன்னைச்சுற்றி உற்றுப்பார்த்தார். எவரையுமே தெரிய வில்லை. 

குஞ்சன் நாயரின் நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்தன. 

குஞ்சன் நாயர் தன் மூன்றாவது பெண் அம்முவின் மேல் உயிரையே வைத்திருந்தார். தனக்கு இரண்டே பெண்கள் தான் என முடிவுகட்டி வெகு நாளைக்கப்புறம் தான் அம்மு பிறந்தாள். பிறந்த வீட்டிற்குள்ளேயே தாயைப் பறிகொடுத்து விட்டாளாதலால் தானே அவளைப் பக்கத்தில் போட்டு வளர்த்தார் முதல் இரண்டு பெண்களுக்கும் வந்து வாய்க்காத மலையாளத்துப் பொன் வண்ண நிறமும், அவருடைய தாயின் அழகும் அம்மு விடம் தான் அச்சாகப் பதிந்திருந்தது. அதனால் அவள் மேல் ஒரு அலாதி பிரியம். 

அம்முக்குட்டிக்குப் பத்துப் பதினொரு வயதாகும். வரை ‘பெரதெனியா முத்துவெலமாவத்தை’யின் மூலை யிலிருந்த நாயரின் ‘ரீ’க்கடை சுமாரான இலாபத்தில் போய்க் கொண்டிருந்தது. அந்த நாட்களில் இரண்டு வருடத்திற்குள் ஒரு தட வையெனக் கணக்குப்பண்ணித் தன் ஊரிற்கும் நாயர் செல்லத் தவறுவதில்லை. 

அப்படிப் போய் வரும்பொழுதே, உறவுக்காரக் குடும்பத்தில் மூத்தபெண்கள் இருவரையும் கல்யாணம் பண்ணி வைத்து விட்டார். அதன்பின் தான் அம்முவின் எதிர்காலத்தைப் பற்றி மிக மகோன்னதமான கற்பனை களை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினார். அந்தச்சமயத் தில் தான் அவருக்குச் சனிதிசை ஆரம்பமானது. 

குஞ்சன் நாயரின் ‘ரீ’க்கடைக்குப் பக்கத்திலிருந்த பழைய புத்தகக்கடை திடீரென்று இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் நவீனமயமான ‘அசைவ ஓட்டல்’ ஒன்றை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புகையிலை வியாபாரி யொருவர் மள மளவென்று கட்டி முடித்தார். அதற்கப் புறம் அந்த ஓட்டலில் இடியாப்பத்துக்கும், பால் சொதிக்கும், கருவாட்டுக் குழம்பிற்கும் அந்த வட்டாரத்தில் ஏக கிராக்கியாகி விட்டது. அதனால் நாயரின் ‘ரீ’க்கடையை நாடுவாரில்லை. 

அந்தச் சமயம் பார்த்து ஆண்டவன் சோதனைபோல் தோன்ற அவர் பார்வையிலும் ஓர்வகைக் கோளாறு ஆரம்பித்தது. அரசாங்கம், தனியார்துறையென மாற்றி மாற்றி வைத்தியம் பண்ணியும் குணம் தெரியவில்லை. 

மாலையானால் வாடிக்கையாளர்களிடம் வாங்கும் பணத்தைக் கணக்குப் பண்ணத் தெரியவில்லை. அம்முக் குட்டியைத்தான் அடிக்கடி அழைக்க வேண்டும். இளம் சிட்டுப்போல் வேடிக்கையும், விளையாட்டுமாகத் திரியும் அம்மு ‘சட்’டென்று கூப்பிட்ட குரலுக்கு வரமாட்டாள். வந்தாலும் அவளைச் சில இளவட்டங்கள் முறைத்து முறைத்துப் பார்ப்பது குஞ்சன் நாயருக்கு வயிற்றில் ‘தீ’ மூட்டியது. 

“ஒருசமயம் பார்வை முற்றாகப் போய்விடலாம்…” என ஒரு டாக்டர் கூறிய கையோடு, கடைக்குத் திரும்பியதும் இந்தியாவிலுள்ள தன் பெண்களுக்குக் கடிதம் எழுதினார். 

பதிலை எதிர்பார்த்து, எதிர்பார்த்து… இனிமேல் வராது என முடிவுகட்டிய பின்னால், அவர் பெண்களிட மிருந்து வந்த பதில் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. 

நோயின் வேதனையும், மனக்குழப்பமுமாக – அவர் ‘ரீ’க்கடையைப் பாதி நேரம் மூடி வைக்கத் தொடங்கினார். அந்த நேரம் யாழ்ப்பாணத்து முதலாளி கூப்பிட்டு ஒரு யோசனையைக் கூறினார். 

“கடையை என்னிடமே கொடுத்து விடுங்கள் நாயர்.. நியாயமான விலையைத்தருகிறேன்… பெண்ணின் பெயரில் போட்டு வையுங்கள் … நீங்களும் சும்மாயிருக்க வேண்டு மென்பதில்லை… என் ஓட்டலிலேயே சமையல் பகுதியை ‘சுப்பரவைஸ்’ பண்ணுங்கள்… சம்பளம் போட்டுத் தருகிறேன்…” 

அந்தச் சமயத்திற்கு அதுதான் நல்ல யோசனையாக நாயருக்குத் தெரிந்தது. இருந்தாலும் இன்னுமொரு பிரச்சனை நாயர் மனதில் ‘சுள்’ளென்று உறைத்தது. 

‘ரீ’க்கடையும், இருக்கின்ற ஜாகையும் கை மாறி விட்டால், தான் ஓட்டலிலேயே ஒன்றிக் கொள்ளலாம். அது சாத்தியமானதே. அம்முக்குட்டியை என்ன பண்ணுவது? ஏழெட்டுப் பையன்கள் வேலை செய்யும் இடத்தில் வளர்ந்து வரும் பெண்ணை வைத்திருக்கலாமோ…? பின்னால் அவளுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாமோ… 

யாழ்ப்பாணத்து முதலாளியிடம் அதை எடுத்துக் கூறினார். 

“நானும் நான்கைந்து பெண்களைப் பெற்றவன் தானப்பா… இதை யோசியாமல் பேசுவனோ… கொழும்பு வில் என் மூத்த பெண் ‘டாக்டர்’ ஆக இருக்கிறாள். இரண்டு குழந்தைகள் தான். இரண்டும் பையன்கள். பெண் குழந்தையென்றால் அவளுக்கு நல்ல விருப்பம்… அவளுடன் சென்று அம்முக்குட்டி இருக்கட்டும்… என் பெண்ணிற்கும் ஒரு துணை… உன் பெண்ணிற்கும் ஒரு பாதுகாப்பு…” வாழைப் பழத்தில் ஊசியேற்றுவது போல் நயமாக எடுத்துக் கூறினார். 

இதனால் இரண்டு மூன்று வாரங்களாக நாயருக்கும், அம்முக்குட்டிக்கும் கருத்துமாறுபாடுகள் தோன்றி மோதிக் கொண்டன. அம்மு, “…கடையைக் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஊரிற்கே போய்விடுவோம்… அச்சன்…” என்றாள். 

நாயருக்கு அந்த யோசனை சரியாகப்படவில்லை. கடைப்பணம் அவ்வளவு தேறாது. கடையின் வரும்படி அடைத்தாக குறைந்ததிலிருந்து பட்ட கடன்கள் வேறு வேண்டும். மிகுதிச் சொற்ப பணத்துடன், அம்முக்குட்டி யையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு ரயிலேற அவர் விரும்பவில்லை. மனிதனைவிட… பணத்தை அளவிடும் கிராமம் அவரது பூர்வீகம். 

இவராகப் பிரச்சனையைத் தீர்வுபண்ணுவதற்கு முன்னால் யாழ்ப்பாணத்து முதலாளி ஒவ்வொரு நாளும். தன் விருப்பத்தைச் சொல்லி வற்புறுத்தினார். நாயரும் பெண்ணின் ஆலோசனையைக் கைவிட்டுவிட்டு; யாழ்ப் பாணத்து முதலாளியின் யோசனைக்கு இணங்கினார். இரு வரும் இந்துக்கள். அதனால் ராகுகாலத்தைத் தள்ளி இரவு பத்துமணியளவில் பத்திரத்தை முடித்தார்கள். 

அம்முக்குட்டி ஒன்றிலும் பற்றில்லாமல் ‘ரீ’க்கடைக் குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். 

முதலாளியிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டதும்; வழக்கம் போல் மடியில் கட்டிக்கொள்ளாமல் அம்முவிடம் கொடுத்தார். அவள் வேண்டா வெறுப்புடன் வாங்கித் தன் தலையணைக்கடியில் வைத்துக் கொண்டதும் மறுபடியும் தூங்கிப்போனாள். 

காலை விடிந்ததும், வழக்கம் போல் நெற்றியில் திரு நீறும், சந்தனப் பொட்டுமாக வெளியே வந்த நாயரை அவசரமாகக் கூப்பிட்டார் முதலாளி. 

 ‘போன்’ அலறியது. காதிலே அதை எடுத்துப் பொருத்திக்கொண்டே, கண்களினால் நாயரை நிற்கும்படி வற்புறுத்தினார் முதலாளி. அவ்விடத்தில் வழக்கத்திற்கு மாறானதொரு பரபரப்பு நிலவுவதை நாயர் அவதானித்தார். 

‘ஓட்டல்’ சிப்பந்திகள் முதலாளியைச் சுற்றிக் குழுமினர். ‘போன்’னில் வந்த செய்தியைக் கேட்கக் கேட்க முதலாளியின் முகம் இறுகிக்கொண்டு வந்தது. 

‘”நாயர்… நிலைமையெல்லாம் தலைகீழாகி விட்டது… ‘சிற்றி’யில தமிழர் கடைகளெல்லாம் எரிக்கிறாங்களாம்… தமிழனை வெட்டி அந்த நெருப்பிற்குள்ளேயே… வீசப்படுகின்றதாம்… கொழும்புவிலிருந்து என் மகள் ‘போன்’  போட்டிருக்கிறாள். இங்கும் நிலைமை எப்படியாகுமோ…” என்றவர்; படபடப்புடன்… “…நீர் பேசிப் பழகிய தமிழை மறந்து… மலையாளத்தைப் பேசியாவது… உன் பெண்ணை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப் பாரும்… நாங்கள் ஆண்கள்… எப்படியோ தப்பிக் கொள்ளலாம்… முதலிலே நெற்றியில் இருக்கிற திருநீற்றையும், சந்தனத்தையும் அழியும்…” எனச் சிப்பந்திகளுடனும், நாயரிடமும் மாறிமாறிப் பேசினார். 

நாயர் எதையும் புரிந்து கொள்ள முடியாமல் விக்கித்துப் போய் நின்ற சமயம், “ஓட்டல்’ வாசலில் ‘லாரி’ யொன்று வந்து நின்றது. ‘திபுதிபு’வென்று, இரும்புக் கம்பியும் பெற்றோல்டின்’னுமாகப் பலர் இறங்கினார்கள். 

முதலாளி ‘கவுண்டரை’ வீட்டு இறங்கிய வேகத்தில்; ‘…நாயர் அம்முக்குட்டி… பத்திரம்…’ என்றபடியே. ‘ஓட்டலின்’ பின்னால் ஓடுவது நாயர் கண்களுக்குத் தெரிந்தது. 

”அச்சன்… அச்…சன்…” அம்மு ‘ரீ’க்கடையைத் திறந்து கொண்டு முன்னால் ஓடிவருவதை ஒரு வினாடிப் பொழுதில் உணர்ந்த நாயர் முன்பக்கமாகப் பாயந்தார்.

அம்முக்குட்டியைப் பார்த்ததும் ‘லாரி’யிலிருந்து யாரோ ‘தொப்’பென்று குதிப்பது தெரிந்தது. மஞ்சள் போர்த்தியவர்… ஓ… புத்த சாமியார்……. பெண் பிள்ளையின் மேனியில் யாரையும் கை வைக்கவிடமாட்டார். 

“சாமி…என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள்… என் குழந்தை மேல் கை வைக்க விடாதீர்கள்… சாமி… சா…மி…” 

நாயர் கூப்பிய கரங்களுடன் சாமியை நோக்கி ஓடினார். 

‘பட்’டென்று குதித்த மஞ்சட் துறவியோ, அம்முக் குட்டியின் கூந்தலை இறுகப் பற்றியிழுத்தபடி சென்று ‘லாரி’க்குள் அவளைத் தள்ளுவதில் குறியாக இருந்தார். 

”சாமி, இதென்ன… என் அம்மு… என் அம்முக் குட்டி…” 

‘லாரி’க்குள் அம்முவைத் தள்ளிவிட்டுப் பின்னால் ஏறிய பிக்குவின் மஞ்சள் காவியை ஆவேசத்துடன் இழுத்தார். 

“அச்சன்… அச்சன்… இந்தியாவுக்கு… அக்காவிடம். அச்சன்… அச்…” என்ற அம்முக்குட்டியின் பரிதாபக் கூச்சல் நாயரின் நெஞ்சைப் பிளந்தது. 

இதற்குமேல் அவர் செவியில் அம்முவின் குரல் எதுவும் விழமுடியவில்லை. ‘படீ’ரென்று தோளில் விழுந்தட இரும்புக் கமபியின் பலமான தாக்குதலால் சுருண்டு நிலத்தில் விழுந்தார். 

“அச்சன்… அச்…”  மீண்டும் அந்த அழைப்பொலி  வலுக்கவே – பரபரவென்று எழுந்த நாயர் அகதிகள் முகாமிற்குள் அங்குமிங்குமாக ஓடினார். 

அவரின் பெயரைப் பதிந்து விட்டுத் திரும்பிய அந்த வாலிபனின் கரங்களைப் பரிதாபமாகப் பற்றிக் கொண்டார். 

“தம்பி… நான் இந்தியா போகவில்லை… இந்தியா போகவில்லை… என் பழைய இடத்திற்கே போகப் போகிறேன்….என் பொண்ணு அம்மு என்னைத் தேடி வருவாள்… அம்முக்குட்டி என்னைத் தேடி வருவாள்…” – உரத்த குரலில் கதறியவர்; பக்கத்தில் நின்ற இளம் பெண்ணின் கரங்களை எட்டிப் பிடித்து; “அம்மு… அம்மு…” என்று அவள் கண்களை வெறித்தபடி விம்மி விம்மியழுதார். 

நாயரின் உண்மை நீலையைத் தெரிந்துகொண்ட அவ் விளம்பெண்ணின் கண்களிலிருந்து நீர்த்துளிகள் உருண்டு விழுந்தன. 

நாயரின் ‘ரீ’க்கடை, யாழ்ப்பாணத்தவரின் ‘ஓட்டல் யாவும் சாம்பலாகிவிட்ட சோகக்கதையையும், துண்டம் துண்டமாக வெட்டிச் சிதைக்கப்பட்டிருந்த அம்முக்குட்டியின் விபரத்தையும் சொல்லக் கேட்டிருந்த வாலிபனின் நெஞ்சம் நாயரின் நிலையைக்கண்டு விம்மிப் புடைத்தது. 

இந்நிலையை பார்த்துக்கொண்டு நின்ற பத்திரிகை நிருபருக்கு இது ஒரு சேதியாகிவிட்டது. ”அகதிகள் முகாமிலிருக்கும் இந்திய வம்சாவழித் தமிழர் இந்தியா செல்ல விரும்பவில்லை”.

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *