அகதி
கதையாசிரியர்: முல்லை அமுதன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 5,803
அவசரமாக நிலக்கீழ் தொடரூந்திலிருந்து இறங்கி படைகளில் ஏறினேன்.
‘பின்னேரம் வேலைக்கும் போகவேணும்’
‘அதுக்குள்ள எத்தனை அலைபேசி வந்திருக்குமோ தெரியாது’.
சனக்கூட்டம் அதிகமாக இருந்தது.
எல்லோரின் முகத்திலும் அதே அவசரம்…
சிலர் கைகளில் அன்றைய தினசரி…புத்தகம்,சிறிய அல்லது பெரிய கைப்பை..அதை விட அலைபேசியை நோண்டியபடி வருவதும் போவதுமாய் இருந்தனர்.
இரண்டு மூன்று எனப் படிகளில் காலை வைத்துவிட்டேன்.
கடகடவென்று மேலிருந்து வந்தவன் இடித்துவிட்டு ஏதும் நடவாதது போல கீழிறங்கினான்.
எதுவுமே அவனிடமிருந்து வரவில்லை…இடித்ததற்கான சமாதானம் அவனிடமிருந்து இல்லவே இல்லை.
தடுமாறியபடி என்னை நிதானப்படுத்தி திரும்பிப் பார்த்தேன்.
எதிர்பார்க்கவில்லை…
கோபப்பட்டான்.
‘உன்னில தான் பிழை’ என்பது பார்த்தான்.
‘சரி..அவசரமாக்கும்..போகட்டும்’ என்று என்னையே சமாதானப்படுத்திருக்கலாம்.
ஆனால் அவனின் பார்வை ‘வேண்டுமென்றே இடித்தேன்..’
நேற்றிரவு குடித்திருப்பானோ? கஞ்சா..பியர்…அல்லது எல்லாம் கலந்தோ..?அப்படியான துர்மணமே அவனிடமிருந்து வீசியது..அதுவும் நாம் அணியும் உடைகளில் அந்த மனம் படிந்துவிட்டால் அல்லது நமது சுவாசத்துள் நுழைந்துவிட்டால் அந்த மனம் கன நேரத்துக்கு வாட்டும்..குமட்டும்..
அவனின் கண்கள் சிவப்பாய் இருந்தது..வேறு நாட்டிலிருந்து வந்திருக்கவேண்டும்…
மேலிறங்கவும்,கீழிறங்கவும் என்பதற்கான அடையாளங்களை பலகையில் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.
‘நான் சரியாகத்தான் படியேற இருக்கிறேன்..ஆனால் அவன்.. பிழையென்பதையும் ஒத்துக்கொள்ள மறுப்பவனாக கோபப்படுபவனாக….ஏன் இப்படி?
பிழை யாரிடத்தில்..?
அல்லது பிழை இல்லாதவர் யார்…?
நான் கூட மாறி ஏறி பிழைவிட்டிருக்கலாம். உணர்ந்த பின் எனக்கு நானே சமாதானப்படுத்தவும் செய்தேன்..
இங்கு யார் யார் மீது குற்றம் கண்டுபிடிப்பது? கோபிப்பது??
ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்கும் பண்பை யாரும் வளர்த்துக்கொள்ளவில்லை என்பதே இதன் அர்த்தம்…
‘மற்றவர்க்களுக்காக வழிவிட்டுக்கொடுப்பதில் தப்பே இல்லை..முட்டாள்களாக்கினினும்’
சிறுவயதில் அப்பா சொன்னது ஞாபகம் வந்தது..
சிறு புன்னகையைச் செலுத்திவிட்டு நகர்ந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து திரும்பினேன்…
கெட்ட வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வந்தன…’அகதி என்று வந்து நாட்டை பழுதாக்குகிறாய்’
தன்னை மறந்து என்னைப் பேசிக்கொண்டிதவனின் வார்த்தைகள் என்னுள் பாய்ந்தது..
அகதி… அவன்…?
நான் அகதி…சரி..அவன்…
பதில் வரவேயில்லை…
உள்ளுக்குள் அழுதபடி.. விக்கித்து நின்றேன்…
– 23/07/2017
![]() |
எழுத்தாளர் முல்லை அமுதன் கல்லியங்காடு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வருகிறார். அவர் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்தவர். வருடந்தோரும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களின்…மேலும் படிக்க... |
