ஹீரோ ஆன வீரா
ஞாயிற்றுக் கிழமை . காலை ஏழு மணி. உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வெளியே வந்த கனமான உடல்வாகு கொண்ட இளைஞன் வீர குமார் , அருகில் உள்ள பூங்காவிற்குள் நுழைந்தான். அங்கு உள்ள திண்ணையில் அமர்ந்து கொண்டு மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனருகில் சேலை அணிந்த , பருமானான ஓர் இளம்பெண் வந்து அமர்ந்ததை அவன் கவனிக்கவில்லை. அவள் அவனுடைய பள்ளிக்கால தோழி ராஜேஸ்வரி .

“என்னப்பா … இவ்வளவு பெரிய உருவம் பக்கத்துல வந்து உட்கார்ந்துருக்கேன் தெரியலையா .… அப்படி என்னதான் பார்க்கறே “ கேட்டாள் அந்த இளம்பெண் .
“வா ராஜி … எப்படி இருக்கே கணவர் சுட்டிப் பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க …. “ மலர்ந்த முகத்துடன் வினவினான் வீர குமார் .
“எல்லாம் நல்லா இருக்காங்க … ஜிம் லேந்து வர்றதைப் பார்த்தேன் . ஜிம்முக்கு போக ஆரம்பிச்சுட்டியா ? “
“நீ வேற …. என்னால உடம்பு வணங்கி உடற்பயிற்சி செய்ய முடியுமா ? நான் அந்த ஜிம்மோட இன்சார்ஜ் … நம்ம கூட படிச்சானே விக்கி … அவன் தொடங்கின ஜிம் . அவனுக்கு வெளிநாட்ல வேலை கிடைச்சிடுச்சுன்னு போய்ட்டான் . எனக்குத் தான் ஆபீஸ் பாலிடிக்ஸ்ல தாக்குப் பிடிக்க முடியலயே .. சரி ன்னு நண்பன் கொடுத்த வேலையை ஏத்துக்கிட்டேன். ஜிம்மை திறந்து வெச்சுட்டு கொஞ்ச நேரம் இந்த பூங்காவுல உட்கார்ந்துகிட்டு இருப்பேன் .. இதான் கதை … “
என்று முடித்தான் வீர குமார்.
“ஏம்பா நீ பெரிய நிர்வாக புலின்னு நான் நம்ம பழைய நட்பு வட்டத்தில் சொல்லிகிட்டு வரேன் … நீ ஏன்யா ஒன்ன இப்படி சுருக்கிகிட்டு இருக்கே … “
“அதெல்லாம் சரி … நம்மால போராடி நிற்க முடியலயே … “
“நிக்கணும்யா … இப்பவும் மேனேஜரியல் பொறுப்பு எடுத்து உன்னால ஷைன் பண்ண முடியும் … நீ பின் வாங்காதே … எங்க ஆபீஸ்ல சிஇஓ விலகப் போறாரு .. நீ அப்ளை பண்ணு … “
“நான் சிஇஓ வா ? “
“கண்டிப்பா உன்னால முடியும் …. எங்க ஆபீஸ் மேனேஜ்மென்ட் டீம்ல இருக்கறவங்க எல்லாம் எங்க சேர்மன் அவங்க அவங்கள அந்த போஸ்ட்ல உட்கார்த்தி வெச்சிட மாட்டாரான்னு கனவு கண்டுகிட்டு இருக்காங்க .. நான் ஹெச் ஆர் ஹெட் ஆக இருக்கறதுதானால எங்க சேர்மன் என்ன பண்ணப் போறார்ன்னு எனக்கு தெரியும் …. அவரு ஆட் போட்டு தான் ஆள எடுக்கப் போறாரு … நீ அப்ளை பண்ணு உனக்கு கிடைக்கும் …. அது என்ன சொல்வாங்க வாய்ப்பை கோட்டை விட்டு விடாதே … “
“தேங்க்ஸ் ராஜி .. உனக்கு என் மேல இருக்கற நம்பிக்கையால தான் எனக்கே தன்னம்பிக்கை வருது …. எந்த பேப்பர்ல ஆட் வரும் ? “
“நாங்க நியுஸ்பேப்பர்ல ஆட் போட மாட்டோம். லிங்குடு இன்ல தான் போஸ்ட போடுவோம் … மொபைல்லயே தானே மூழ்கி இருக்கே .. லிங்குடு இன்ல எங்க கம்பெனிய பாலோ பண்ணு. போஸ்ட போட்டப்புறம் மெயில்ல அப்ளை பண்ணு. …. இன்டர்வியூல நானா பழைய கம்பெனில இருந்து விலகி வந்துட்டேன் ஆறு மாசம் சும்மா இருந்தேன் ஜிம்ல இன்சார்ஜ் ஆக இருந்தேன்னு எல்லாம் சொல்லாதே … எங்க சேர்மனுக்கு களத்தில் குத்து வாங்கிகிட்டு நின்னு ஜெயிக்கறவங்கள தான் பிடிக்கும் … அடி தாங்காம களத்திலிருந்து ஓடி வர்றவங்களைப் பிடிக்காது. சும்மா ஒரு ஆறு மாசம் பிரேக் எடுத்தேன்னு சொல்லி சமாளிச்சுடு சரியா … நான் வர்றேன்… வீட்ல ஏகப்பட்ட வேலை எனக்காக காத்துகிட்டு இருக்கே .. ஆல் தி பெஸ்ட் …. “
என்று பேசி விட்டு எழுந்து நின்ற ராஜேஸ்வரி அவனுடைய பதிலுக்குக் காத்திராமல் பூங்காவின் வாயிலை நோக்கி வேகமாக நடை போட்டாள். வீர குமார் அவளை வியப்புடன் பார்த்தான்.
இரண்டு வாரங்கள் கழித்து ஒரு திங்கட் கிழமை அன்று இரவு எட்டு மணிக்கு வீர குமார், ராஜேஸ்வரியின் அடுக்கு மாடி வீட்டின் வாசலில் நின்று கொண்டு இருந்தான். வீடு திறந்து இருந்தது . கூடத்தில் இரண்டு சிறுவர்கள் இவன் நிற்பதைக் கவனிக்காமல் தங்களுக்குள் கைகலப்பில் மும்முரமாக இருந்தனர். ஓர் அறையிலிருந்து பனியன் வேட்டி அணிந்த பெரியவர் ஒருவர் வெளிப்பட்டார். சிறுவர்களை விலக்கி விட்டார்.
“வந்து இருக்கறவங்கள கூட பார்க்காம என்னடா இது ” என்றார் பெரியவர். ஒரு சிறுவன் எல்லாம் உன்னால தான் தாத்தா இவனுக்கு நீ கொடுக்கிற செல்லம்தான் என்று கூறிக் கொண்டே ஓர் அறையை நோக்கி ஓடினான். மற்றொரு சிறுவன் அவனைப் பின்தொடர்ந்தான்.
வீர குமார் “ராஜேஸ்வரி மேடத்தைப் பார்க்கணும் ” என்றான். பெரியவர் வாங்க உட்காருங்க என்று வரவேற்று அவனை சோபாவில் உட்கார வைத்தார். அவர் சமையலறையை நோக்கிச் சென்றார். சற்று நேரத்தில் இரவு உடை அணிந்த ராஜேஸ்வரி வந்தாள். ஒற்றை சோபாவில் இருந்த துப்பட்டாவை மேலே போட்டுக் கொண்டு வாப்பா என்று வீர குமாரை வரவேற்றாள். அவனிடம் தண்ணீர்ப் புட்டியைக் கொடுத்தாள். வீர குமார் புன்னகை பூத்தான். அவன் தன்னுடைய கையிலிருந்த பழங்களும் பிஸ்கட்டும் அடங்கிய துணிப் பையை அவளிடம் கொடுத்தான். அதனை வாங்கிக் கொண்ட அவள் அவன் அமர்ந்திருந்த சோபாவுக்கு எதிரே இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தாள். வீர குமார் , தயக்கத்துடன் ” என்ன ஆச்சு ? என் விஷயம் என்ன முடிவுன்னு தெரிஞ்சுதா … “ என்று கேட்டான் வீர குமார் . ராஜேஸ்வரியின் பிள்ளைகள் இருந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு , வேட்டி சட்டை அணிந்த ஒற்றை நாடி நடுத்தர வயது நபர் வந்தார் . அவர் வீர குமாரின் அருகில் அமர்ந்தார். அவர் ராஜேஸ்வரியின் கணவர் சதாசிவம். சதாசிவம் மலர்ந்த முகத்துடன் பேசினார் – “வாழ்த்துக்கள் வீரா இவங்க கம்பெனில நீங்க தான் ஹீரோ ஆக போறீங்க போல ” அவனுடைய கைகளைக் குலுக்கினார். புரியாமல் வீர குமார் , ராஜேஸ்வரியைப் பார்த்தான் .
ராஜேஸ்வரி பேசினாள் “நான் கொஞ்ச நேரம் வீராவை தவிக்க விட்டு விட்டு சொல்லலாம் ன்னு பார்த்தேன் … நீங்க முந்திரிக்கொட்டை ஆள் ஆக இருக்கீங்க ” .
சதாசிவம் சமையலறைக்குச் சென்று நாட்டுச் சர்க்கரை டப்பாவை எடுத்து வந்து அதிலிருந்து சிறிய கரண்டியில் சர்க்கரையை அவனிடம் கொடுத்தார் . வீர குமார் உள்ளங்கையில் பெற்று வாயில் போட்டுக் கொண்டு நன்றி என்றான். “ராஜி நிறைய பேர் அந்த போஸ்ட்டுக்கு முட்டி மோதினாங்கன்னு சொன்னே … வீரா எப்படி ஒங்க சேர்மன் மனசுல இடம் பிடிச்சாரு …. “ சதாசிவம் கேட்டார் .
“என்ன சதா .. வீரா டிசர்விங் கேன்டிடேட் தானே … என்னவோ சொக்குப் பொடி போட்டு மயக்கிட்டா மாதிரி இல்ல சொல்றீங்க … “ என்ற ராஜேஸ்வரி , வீர குமாரிடம் “வீரா அந்த சீக்ரெட் சொல்லிடுய்யா … இவருக்கு இவரோட ப்ரொபஷனல் லைப் ல உதவும் ” என்று சொன்னாள்.
வீர குமார் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாக இருக்கிறார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
அவன் பேசினான் “இந்த க்ரூப் ஆப் கம்பெனிக்கு தனியார் நடத்தற துறைமுகம் ஒண்ணு இருக்கு .. நான் அந்த போர்ட் பத்தி பப்ளிக் டொமைன் ல இருக்கிற தகவல்களை வெச்சு ஒரு காபி டேபிள் புக் டிசைன் பண்ணி பிடிஎப் ஆக என் டேப்ல வெச்சு இருந்தேன். சேர்மன் , எங்க கம்பெனி பத்தி ஒங்களுக்கு என்ன தெரியும்னு கேட்டப்ப அதை காமிச்சேன்…… “
ராஜேஸ்வரி “அதைப் பார்த்தே சேர்மன் ஒனக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்துட்டாரு .. கில்லி தான்யா நீ “ என்றாள்.
“இனிமே அவர் உனக்கு பாஸ் இல்ல … கொஞ்சமாவது ரெஸ்பெக்ட் வேணாம் ” என்றார் சதாசிவம் . மூவரும் சிரித்தனர்.
– காபி டேபிள் கதைகள்
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |