கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 3, 2025
பார்வையிட்டோர்: 1,189 
 
 

(1933ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

மன்மத பீட மகா யோகீசுவரர்

திவ்ய மங்கள விக்ரகங்களாய்ப் பரமாத்மா கோவில் கொண்டிலங்கித் திருவருள் கொழிக்கும் தென்னாட் டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து திருவையாற்றிற்குச் செல் லும் இராஜபாட்டையில், 1895-ம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பகல் சுமார் ஒரு மணி சமயத்தில் ஒரு குதிரை வண்டி தடதடவென்று நிரம்பவும் விசையாக வந்துகொண் டிருந்தது. வண்டியின் முன்னும் பின்னும் திரைகள் கட் டித் தொங்கவிடப்பட் டிருந்தமையால், அவைகள் உள்ளே இருந்தவர்களை மறைத்துக்கொண்டிருந்தன. அந்த இராஜ பாட்டையின் இரு புறங்களிலும் மரங்கள் அடர்ந்திருந்தன வாயினும், வெயிலின் கொடுமை தாங்க இயலாததா யிருந்தது. வாயுபகவான் போன இடம் தெரியாதபடி ஓடி ஒளிந்து கொள்ளவே, சகலமும் ஓய்ந்து ஒடுங்கிப்போ யிருந்தது. மரஞ் செடி கொடி முதலியவை ஸ்தம்பித்து அசைவற்று நின்றன. இலை பூ காய் கனி முதலியவை வாடித் துவண்டு வீழ்ந்துபோயின. மிருக பட்சி முதலிய ஜீவ ராசிகள் யாவும் சோர்ந்து தளர்ந்து உணர்வற்று அதனதனிடத்தில் தலை சாய்த்து உறங்கின. மனிதரது நடமாட்டமும் அரிதாயிற்று. அத்தகைய கொடிய நடுப்பகலில் வந்துகொண்டிருந்த வண்டி யின் குதிரை,மாதம் காதவழி பறக்கும், பட்டணத்து மாயப் புரவிபோல் இல்லாமல், திடகாத்திர தேகமும், கம்பீரத் தோற்றமும் உடையதா யிருந்ததானாலும், அதிகாலை முதல் மிக தூரமான இடத்திலிருந்து ஓயாமல் ஒரே தொடர்ச்சி யாய் ஓடி வந்துகொண் டிருந்ததுபற்றி, அலுத்துப் போன தாய்த் தோன்றியது. அதன் உடம்பின் சர்வாங்கங்களிலிருந் தும் வியர்வை ஊற்றுநீர் போல் விசையாய்ப் பொங்கி வழிந்தபடி இருக்க, வாயிலிருந்து வெண்மையான நுரை வெளிப்பட்டு விகாரமாய்த் தொங்கிக் கட்டி கட்டியாய்த் தரை யில் விழுந்தபடி இருந்தது. 

வண்டிக்காரன் சுமார் நாற்பது வயதடைந்தவனாயும், பூதாகாரமான கறுத்த திருமேனி யுடையவனாயும் இருக் தான். அவன், ஒரு சாணகல மிருந்த இடத்தில் உடம் பின் ஒரு சிறிய பாகத்தை வைத்துக் காலைமுதல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டே வந்தவனாதலால், அவன் தனது பெரிய உடம்பை அப்புறம் இப்புறம் நகர்த்தி நெளித்துப் புரட்டிக் கொடுப்பதும், நிமிர்ந்து குனிந்து தத்தளிப்பதும், அப்படியே உட்கார்ந்திருக்கவும், கீழே இறங்கவும் மாட்டாமல் தவித்து, பஞ்சாக்னி மத்தியில் இருந்து தவம் புரிந்து, அடிக்கடி கண் களை மூடி நிஷ்டை செய்து உடம்பை அயரவிடுவதும்,அப்போ தைக்கப்போது திடுக்கிட்டு விழித்துக்கொண்டு சாட்டைக் குச்சியை வண்டிச் சக்கரத்தில் கொடுத்து சடசட கடபுட லொடலொட படபட என்று ஓசையுண்டாக்கிக் குதிரையை அடிக்காமல் அச்சுறுத்தி ஊக்குவதுமாய்த் தனது வேலையை அபார சாமர்த்தியத்தோடு செய்துகொண்டிருந்தான். 

திரைகளுக்குள் ளிருந்து ஒரு சிறுமி அடிக்கடி மெது வாய் அழுத குரலொலியும், அவளுடைய தாய் சமாதானப் படுத்திய குரலொலியும் உண்டாயின. “அடீ, சுந்தரீ, வெறு மனே அழுகாதேடி, அழுதழுது மூஞ்சி யெல்லாம் வீங்கிப் போச்சுடீ. விச்சா அழுதா, தலையெ வலிக்கும்டீ, நம்ப ஊரு இன்னும் கொஞ்ச தூரத்துலெதான் இருக்கு. இன்னம் கொஞ்ச நாழீலெ நம்ப ஊரு வந்துடும். எறங்கினோணே சாப்பிடலாம். கொஞ்சம் பொறுத்துக்கோடீம்மா. இப்பி டியே எம்மடீலெ சாஞ்சுண்டு, கண்ணெ மூடித் தூங்கி டீம்மா ” என்று, ஒரு யௌவன மாது குயிலொலியைத் தோற்கச் செய்த அதிமாதுரியமான குரலில், மிக உருக்கமாக வும் பரிவாகவும் கூறித் தன் குழந்தையான சிறுமியை சமா தானப்படுத்தி, அவளைத் தன் உடம்போடு சேர்த்து அணைத் துக்கொண்டு இதமாய் அதன் உடம்பில் தட்டிக் கொடுத்தது தெரிந்தது. 

அந்த யௌவன மாது தன் குழந்தைக்கு அவ்வாறு கனிகரமாய் இதோபதேசம் செய்தாளானாலும், அவளுடைய சுய நிலைமை அந்தக் குழந்தையின் நிலைமையை விடப் பன் மடங்கு கேவலமாயிருந்ததென்றே கூறவேண்டும். அப்பெண் மணி விடியற்காலையிலிருந்து தண்ணீர்கூட அருந்தாமல் ஒரே நிலைமையில் பெட்டிகளுக்கும் மனிதருக்கும் இடையில் நெருங்கிக் கால்களை முடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்த தனால், அவளுடைய உடம்பு முழுதும் நெருப்பால் வெதுப் பப்பட்டதுபோலப் பற்றி எரிந்தது. நா வறண்டுபோயிற்று. கண்கள் இருண்டிருண்டு மூடிக் கொண்டன. இரத்தக் கட்டி னால் கைகால்களெல்லாம் மரத்துப்போய் விண்விண்ணென்று தந்தி மீட்டின. உடம்பு கட்டி லடங்காமல் துவண்டு துவண்டு அங்குமிங்கும் சாய்ந்தது. அந்த நிலைமையில் அவள் தன் குழந்தைக்கு இதோபதேசம் செய்து தட்டிக்கொட்டி அணைத்து, அதன் வேதனையை சமனப்படுத்தியபடி நரக மத் தியி லிருந்து தத்தளித்தாள். 

ஆனால் அந்த இளஞ் சிறுமியோ தன் தாய் கூறிய சொற் களைச் சிறிதும் கவனியாதவளாய், மழலை மாறாத மொழிகளால், கல்லுளிப் பிடிவாதமாய், “அம்மா, நேக்குப் பசிக்கறதுடீ, சாதம் போட்றீ; அம்மா நேக்குப் பசிக்கறதுடீ, சாதம் போட்றீ” என்ற பல்லவியையே திரும்பத் திரும்பப் பாடிக் கண்களை மூடுவதும் திறந்துகொள்வதும், தாயின் விலாப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவதும் நிமிர்வதுமாய் சாமியாடிக் கொண்டிருந்தாள். 

அவர்கள் இருவருக்கும் அடுத்தாற்போலப் பின் பக்கத் தில் உட்கார்ந்திருந்த, அந்தச் சிறுமியின் தகப்பனார் அத் ருப்தியாலும், மன வேதனையாலும் அடிக்கடி தமது முகத் தைச் சுளித்துக்கொண்டவராய், “என்ன கஷ்டம் இது! வழியா மாள மாட்டேங்கறது! கொழந்தையா தவிக்கறது! ஆத்துலே இருந்தா இத்தருவா மூணுதரம் சாப்பிட்டிருப்பா. இண்ணைக்கிக் காப்பிக்கிக்கூட இழுப்பாப் போச்சு. அடீ, பாப்பா, அழுகாதே! இன்னோரு பிஸ்கோத்துத் தின்னூட்டுக் கொஞ்சம் தூத்தம் குடிக்கிறியா? அடீ, கொழந்தைக்கி பிஸ்கோத்து எடுத்துத் தாடீ” என்று அன்பொழுகக் கூறிய தன்றி, பின்பக்கத்துத் திரைத் துணியை அடிக்கடி தூக்குவ தும், “உஸ், அப்பாடா, உஸ் ஆப்பாடா” என்று அதன் அடிப் பாகத்தை விசிறியாய் உபயோகித்துத் தடிக்கும் குழந் தைக்கும் காற்றை உண்டாக்கிக் கொள்வதுதா யிருந்தார். 

தமது மனைவிக்கும் காற்று இன்றியமையாத வஸ்து என் பதை அவர் உணர்ந்தாரானாலும், இராஜபாட்டையில் தாம் தமது மனையாளுக்குக் காற்று ‘சப்ளை’ செய்வதை யாராவது பார்த்துவிட்டால், தமக்கு கௌரதைக் குறைவு ஏற்படு மென்று கருதி, அவர் அவளை விலக்காக விட்டுவிட்டார். அவ ருடைய வீட்டின் உட்புறமா யிருந்தால், அவர் தமது மனை விக்குப் பங்காப் போடுவாரோவென்று சிலர் ஐயமுறலாம். அப்போது அவர் விசிறியை அவளுடைய கையில் கொடுத்து தமக்கும், தம் குழந்தைக்கும் விசிறிக்கொண்டே இருக்கச் செய்வாராகையால், இவ்வித ஐயத்திற்கே இடமில்லை. 

அவர் கூறிய சொற்களைக் கேட்ட அந்த யௌவனப் பெண்மணி, “ஏண்டீ பாப்பா, அப்பா பிஸ்கோத்துச் சாப் பிடச் சொல்றா ; எடுத்துக் குடுக்கட்டுமா? சாப்பிட்றியாடீ?” என்று மிக உருக்கமாய் வினவ, சிறுமி கண்களைத் திறவாமல் தலையை மாத்திரம் அசைத்து, “நேக்குப் பிச்சுக்கோத்து வாண்டாம்; வயத்தைப் பெரட்டி வாந்தி யெடுக்க வரது. நேக்குச் சாதம் போடு,” என்று திக்கித் திக்கி மழலை மொழி யாய் உத்தரம் கொடுத்தபடி மயங்கி உறங்கித் தலையைத் தாயின் உடம்போடு சார்த்தி ஆடி ஆடி விழுந்தாள். 

அந்த வேதனையைக் கண்ட தகப்பனார் தாம் என்ன செய் வதென்பதை அறியாதவராய்த் தலையை அழுத்தமாய்த் தடவிக் கொண்டு, ஓங்கிய குரலில் பேசத் தொடங்கி, “ஏம்பா,வண் டிக்காரா,எதிரக்க பிராம்மணா ஸத்ரம் கித்தரம் ஏதாவது இருக்கோ? நோக்குத் தெரியுமோ?” என்றார். 

கண்களை மூடி சுஷுப்தியில் ஆழ்ந்து போய்க் குதிரை யின் வால்வரையில் தனது தலையைக் கொண்டு போவதும் நிமிர்வதுமாயிருந்த வண்டிக்காரன் திடுக்கிட்டு, சிவந்து போய் பயங்கரமாய்க் காணப்பட்ட தனது கண்களைக் கசக்கி விட்டு நன்றாய் விழித்துக்கொண்டு, தெளிவும் உற்சாகமும் அடைந்து நிமிர்ந்து உட்கார்ந்து கனைத்துத் தொண்டையை சுத்தப்படுத்திக்கொண்டு,’எனக்குத் தெரியாதுங்க சாமி; நானும் இந்த ரஸ்தாவுலே இதுபரியந்தம் வந்ததே இல்லீங்க. துதான் மொதப்பயணமுங்க. சத்தரம் ஏதாச்சும் தெம் பட்டா, வண்டியெ நிறுத்தறேனுங்க. விடிகாத்தாலெ மொத ஒரே முசுவா ஒட்டியாறத்துலெ, குருதையும் ஜக்கிப் போச்சு துங்க. என்னமோ ரொம்ப அவசரமின்னு எசமான் சொன் னீங்களேன்னு ஒரே ஒட்டமா ஒட்டியாறேனுங்க. இப்பிடியே இன்னும் ஒரு மணி நேரம் ஒட்டினா, முன்னூறு ரூபாக் குருதெ செத்துப்பூடுங்க” என்று கூறியபடி, மேலும் கூறியபடி,மேலும் குதி ரையை ஊக்க, அது, “ஆ,தலைவிதியே, கிராதகப் பிரம்மா என் தலையில் இப்படியும் எழுதுவானா என்று நினைப்பது போல் பரம ஸாதுவாய் மேலும் அரை நாழிகை காலம் ஓடியது. 

வண்டிக்காரன், தான் உட்கார்ந்திருந்தால், தூக்கம் வருமென்று நினைத்து எழுந்து ஏர்க்கால்களின்மேல் நின்று கொண்டு, எதிரிலோ பக்கத்திலோ ஏதேனும் சத்தரம், அல் லது, வீடுகள் காணப்படுகின்றனவோ என்று கவனித்தபடி இருக்க, எதிரில் சிறிது தூரத்தில் வந்துகொண் டிருந்த ஒரு பிராம்மணருடைய வடிவம் அவனுக்குப் புலனாயிற்று. உடனே அவன் குதிரையின் வேகத்தை மிதப்படுத்தி, அந்தப் பிராம்மணர் அருகில் நெருங்கிய இடத்தில் வண்டியை நிறுத்தி, “சுவாமிகளே தண்டம்; வண்டிக்குள்ளற ஒங்கள வங்க ஐயமாரு இருக்காங்க. அவுங்க திருவையாத்துக்குப் போறவங்க விடிகாத்தாலே மொத கொணசேகரத்துக்கு அண்ணாண்டையிருந்து வாராங்க. இன்னம் யாரும் பூசைகீசை பண்ணல்லீங்க. பச்சைக் கொளந்தை பசி தாங்காமெ துடிக்கு துங்க. எதுருலே சத்தரம் கித்தரம் ஊரு கீரு ஏதாச்சும் இருக்குதுங்களா? எங்கநாச்சும் ரவை யூண்டு சாதம் அம்பிடுமா?” என்று தனது கைகளை அஞ்சலி செய்தபடி விநயமாகக் கேட்டான். 

அந்தப் பிராம்மணர் மாநிறமான மெல்லிய தேகமுடை யவர். அவருடைய வயது சுமார் ஐம்பதிருக்கும். அவர் தம் நெற்றியில் சந்திரப்பிறைபோல சந்தனத்தினால் கீற்று நாமம் இட்டிருந்ததன்றி,கழுத்து, கைகள், மார்பு ஆகியவற்றிலும் சந்தனத்தை ஊர்த்துவ புண்டரம்போல மொத்தாகாரமாய்ப் பூசிக்கொண்டிருந்தார்; நீர்க்காவி ஏற்றப்பட்டிருந்த ஒரு வஸ் திரத்தை இடுப்பில் பஞ்சகச்சமாய் அணிந்து, பழூர்த்துண் டொன்றை நீளத்தில் கொசுவி இடது தோளின்மேல் போட் டிருந்தார்.அவரது முன் கச்சம் நான்கு விரலகலமும், பின்கச் சம் இரண்டு விரலகலமும் இருந்தன. அவருடைய மார்பில் ஒரு துளஸி மணி மாலையும், உள்ளங்கழுத்தில் தங்கக்கொடி யில் கோக்கப்பெற்றிருந்த ஒற்றை உருத்திராக்ஷமும் பிர காசித்தன. வெற்றிலை, புகையிலை, வெட்டுப்பிளவு, கற்றைக் காம்பு, காசுக்கட்டி, சுண்ணாம்புக்கரண்டம், பாக்குவெட்டி முதலியவை நிறைந்த ஒரு சிறிய ஓலைப் பெட்டியை அவர் தமது இடது கக்கத்தில் வைத்துக் கையால் இடுக்கிக்கொண் டிருந்தார். அவரது வலது கையின் ஆள்காட்டி விரலிலும் பவித்திர விரலிலும் இரண்டு வெள்ளி மோதிரங்கள் காணப் பட்டன. பாதங்களில் நுணாக்கட்டைப் பாதக்குறடுகள் இருந்தன. அவர் தமது வலது கையில் ஒரு சிறிய குமிழ்ப் பிரம்பை ஊன்றிக்கொண்டு விசுக் விசுக்கென்று மிக சுறு சுறுப்பாக நடந்து வந்துகொண்டிருந்தார். அவ்வாறு வந்த ஐயர், வண்டிக்காரன் தம்மோடு பேசியதைக் கேட்டு சடக் கென்று நின்றார்.அவர் எப்போதும் தமது வாயின் ஒரு பக்கத்தில் ஒரு பெரிய புகையிலைச் சுருளை அடக்கி, வாய் நிறைய உமிழ்நீரைத் தேக்கி, அதை உமிழ மனமற்றவராய், வாயிலேயே வைத்துக்கொண்டிருப்பாராதலால், அவருடைய வாய் ஒத்தூதுகிறவனுடைய வாயும் கழுத்தும் உப்புசமா யிருப்பதுபோல எப்போதும் வீங்கியே இருக்கும். எவரே னும் அவருடன் பேச விரும்பினால், அவர் தமது வாயில் நிறைந்திருந்த அருமையான வஸ்துக்களை, வஸ்திரங்களில் எச்சில் சிந்தாதபடி உதடுகளை இறுக மூடிக்கொண்டு, ஜாக்கிர தையாக ஒருபுறம் ஒதுக்கி வழி செய்து, மறுமொழி கொடுப் பதற்குள், அவருடைய முகத்தில் ஏற்படும் குணக்குகளும் கோளாறுகளும் அவர் எதிரிலிருப்போரைப் பரிகசித்துக் கோணங்கி வேடிக்கை காட்டுவதுபோ லிருக்கும். உலகமே இடிந்து விழுவதாயிருந்தாலும், அவர் அந்த விஷயத்தில் பத றாமல் நிதானம் தவறாமல் மிக சாந்தமாகவே நடந்து கொள் வார். இனி தமது வாயில் இடமில்லையென்றும், வஸ்திரங் களுக்கு அபாயம் வந்துவிடுமென்றும் அவருக்கே பட்டால் தான், அவர் சதக்கென்று ஒரு தரம் எச்சிலின் ஒரு பாகத் தைக் கீழே உமிழ்வார். அவர் பேசும்போது உதடுகளைத் திற வாமலேயோ, அல்லது, முகத்தை மேலே திருப்பி வாயை சொற்பமாகத் திறந்துகொண்டோ பேசுவாராதலால், அவ ருடைய சொற்கள், வெள்ளைக்காரர் பேசும் இங்கிலீஷ்போல, வழவழ கொழகொழவென்று விளக்கெண்ணெயாயிருக்கும். வண்டிக்காரன் திடீரென்று தம்மோடு பேசவே, ஐயர்,காக்கை தன் முகத்தை அப்புறமும் இப்புறமும் மேலும் கீழும் திருப் புவதுபோலத் தமது முகத்தைத் திருப்பி, சிறிதளவு எச்சிலைக் கீழே உமிழ்ந்துவிட்டு, மிகவும் நிதானமாய்ப் பேசத் தொடங்கி ‘ ஒ! அப்பிடியா ! எங்களவங்களா! எங்கே, நான் அவாளைப் பாக்கட்டும்” என்று மறுமொழி கொடுத்தவராய், இரண் டோரடி நடந்து, வண்டியின் பின் பக்கத்தை யடைந்து சிறிது தூரத்தில் நின்றபடி உட்புறத்தில் இருந்தவர்களைப் பார்க்க முயன்றார். 

அப்போது வண்டிக்காரன் உள்பக்கம் திரும்பி, “சாமீ, சாமீ, ஒங்களைத்தானே; இதோ ஐயரு ஒருத்தரு பின்பக்கம் வந்திருக்கிறாரு. அவருக்கிட்ட கேளுங்க” என்றான். 

அதற்குள் ஐயருடைய வாயில் புகையிலை ரஸம் மறுபடி பெருக்கெடுத்துப் பூர்த்தியாய் நிறைந்துபோகவே, அவர் தமது உதடுகளை மூடி முகத்தை மேல்பக்கம் நிமிர்த்திய படி பேசத் தொடங்கி,”என்னப்பா பிழாம்மணாங்கழே, ஆக் குடுமி தீக்ஷதா சம்பிரதாயமாத் தெழை போட்டிழுக்கே ! ஆழையா ஹழிகீ! தெழையைத் தூக்குங்கோ; நேக்கு ஒங்க மொக தெழிசனம் கொஞ்சம் கெடைக்கட்டும் ” என்று ஏள னம் செய்வதுபோலப் பேசினார். அது சரியான தமிழில், “என்னப்பா, பிராம்மணாளென்கிறாய்! வாய்க்குடுமி தீக்ஷி தாள் சம்பிரதாயமாய்த் திரை போட்டிருக்கிறதே! யாரையா ஹரிகீ, திரையைத் தூக்குங்கள்; எனக்கு உங்கள் முக தரிசனம் கொஞ்சம் கிடைக்கட்டும் ‘ என்றாகிறது. 

அவ்வாறு மேற்படி ஐயர் பேசியதை, வண்டிக்குள் இருந்தவரான கிருஷ்ணமூர்த்தி ஐயர் என்பவர் கேட்டு வெட்கமடைந்து, பின்புறத் திரையின் ஒரு பக்கத்து முடி ச்சை அவிழ்த்து விடவே, திரை விழுந்து எதிர்ப்பக்கம் போய் ஒதுங்கியது, வாய்க்குடுமி தீக்ஷிதர் இருப்பதாகப் புரளிசெய்த ஐயர் உடனே தாம் எங்கேயோ கோவிலின் ஸங் நிதியில் நிற்பதுபோலவும், தமக்கு ஸ்வாமி தரிசனம் கிடைப் பது போலவும் நினைத்து திடுக்கிட்டு பிரமித்துப் போனார்; அவர் தம்முடைய வாயிலிருந்த ‘ரஸ குல்லா’வை அசட்டை செய்து, உடனே தூரத்தில் துப்பிவிட்டு, மிக விநயமாகப் புன்னகை செய்து உள்ளே இருந்த மூவரையும் அன்பாகக் கடாக்ஷித்தார். 

(ஸ்மார்த்தப் பிராம்மணர் மரியாதைப்பட்ட மற்ற பிராம்மணர் களை அழைக்கும்போது ‘ஹரிகி’ என்று அழைப்பது வழக்கம். அந்த வழக்கம் தஞ்சை ஜில்லாவில் அதிகமாய் உபயோகத்தில் இருந்து வருகிறது. ‘வாய்க்குடுமி தீக்ஷிதர்’ என்பது தாடி வைத் திருக்கும் துருக்கரைக் குறிக்கும் சங்கேதச் சொற்கள்.)

வண்டியில் இருந்த புருஷருக்கு சுமார் முப்பது வய திருக்கலாம். அவர் பரம்பரையான கோடிசுவரருடைய புத் திரர்போல் அற்புதமான தேஜஸோடு விளங்கினார். உடம்பு சிவப்பாகவும் மினுமினுப்பாகவும் அழகான அமைப்புடைய தாகவும் இருந்தது. முகம் வசீகரமும் ஜ்வலிப்பும் பெற்று, காண்போர் மனதை உடனே கவரத்தக்கதா யிருந்ததன்றி, பெருந்தன்மை, உயர்குடிப் பிறப்பு, பரம்பரையான செல்வச் செழுமை முதலிய தன்மைகளைப் பெரிதும் காட்டியது. அவ ருடைய செவிகளில் வைரக் கடுக்கன்களும் கைவிரல்களில் இருந்த வைர மோதிரங்களும் நட்சத் திரங்கள்போலப் பிரகாசித்தன. அவருடைய இடுப்பில், பட்டு ஜரிகையும் பளிச்சென்று மின்னிய கரைகளுமுடைய விலை யுயர்ந்த வஸ்திரமும், உடம்பில் ‘ஸில்க் ஷர்ட்டும்’ இருந் தன. அவருக்கப்பால் வண்டியின் மையத்தில் உட்கார்ந் திருந்த பெண்பாவைக்கு வயது சுமார் இருபத்திரண்டிருக்க லாம். திரை விலக்கப்பட்டவுடன், அவளுடைய அற்புத மான தோற்றம், காரிருள் மேகத்தினிடையில் திடீரென்று மின்னல் தோன்றிப் பளிச்சென்று மின்னுவதுபோல் இருந் தது. ஸ்வர்ணத்தை உருக்கி அச்சில் வார்த்துக் கடைந் தெடுத்து மெருகு கொடுத்தாற்போல அந்த சுந்தரவனிதையின் அங்கங்களின் அமைப்பும் தேக நிறமும் அத்யாச்சரிய கரமான சிருஷ்டியா யமைந்திருந்தன. அந்த மடந்தையின் அழகை நாம் ஒரே வாக்கியத்தால் சுலபத்தில் விளக்கி விடலாம். 

அதாவது, அவ்வளவு ஸொகுஸான பெண்மணி இது வரையில் இந்த உலகில் பிறந்ததுமில்லை : இனி பிறக்கப்போவ துமில்லை என்று கூறும்படியும் எவரும் பிரமிக்கும்படியும் அவள் ஓர் அபூர்வமான கவர்ச்சியைப் பெற்று தேஜோமயமாய் விளங்கினாள். அவளுடைய அங்கங்கள் ஒவ்வொன்றும் அதீத மான உப்புசம், அல்லது, மெலிவு என்ற குற்றத்திற்கு இட மின்றி கணக்கான உருட்சி திரட்சி பருமன் அழகு செழுமை தளதளப்பு முதலியவை அமையப் பெற்றவையா யிருந்தன. அவளுடைய சிரத்தில் எவ்வித பிசிருமில்லாமல், ஒன்றோ டொன்று சிக்காமல், ஒரே அளவாய் நீண்டு செழித்து அலை யலையாய் நெளிந்து மினுமினுப்பாய் சுத்தமாய்ப் பெருஞ் சுமையாய் அடர்த்தியாய் வளர்ந்திருந்த அளக பாரத்தை அப்பெண்பாவை சாதாரணமாய் முடிந்து, மெருகு கொடுக் கப்பட்ட தங்கப் பாளம்போ லிருந்த பின்கழுத்தின் கீழ் தொங்க விட்டிருந்த மகா திவ்யமான இயற்கைக் காட்சி, கோடி மகாலக்ஷ்மிகள் ஒன்றுகூடித் தாண்டவமாடு வதுபோல் அமைந்திருந்த முக வசீகரத்தைப் பன் மடங்கு பெருக்கிக் காட்டும் சாதனமாயிருந்தது. அரக்குக் கரையும் கறுப்பு உடலுமுடைய தகத்தகாயமான பட்டுச் சேலை, சுவர்ணச் சாயலாயிருந்த உடம்பின் ஜ்வலிப்பை அமோகமாய்ப் பெருக்கிக் காட்டுவதாயிருந்தது. செவிகளில் வைரக் கம்மல்கள், மூக்கில் வைர மூக்குப் பொட்டுகள், வைர புல்லாக்கு, கழுத்தில் கல் அட்டிகை, காசுமாலை முதலிய வைகள், கையில் வைரம் பதித்து புது மோஸ்தர் வளையல்கள், இடுப்பில் அழகான முகப்பு வைத்த தங்க ஒட்டியானம், விரல்களில் வைர மோதிரங்கள் ஆகிய சிறந்த ஆபரணங்கள் புது நாகரிக முறைமைப்படி ஆங்காங்கு பொருத்தந் திருத்த மாய் அமைந்திருந்தன வாதலால், ரவிவர்மாவின் படங்களில் தீட்டப்பட்டுள்ள மங்கையருள் மகா சிலாக்கியமாய்க் கருதப் படும் வடிவங்களில் இப்பொற்கொடியாளின் நிழற் சாயலி லுள்ள அழகுகூட இராதென்று நாம் துணிந்து கூறலாம். 

ஸ்வர்ணாம்பாள் என்ற பெயருடைய அம்மடந்தை யின் வயது உண்மையில் சுமார் இருபத்திரண்டிருக்கலாமாயி னும், பார்வை மதிப்பு பதினெட்டிற்குமேல் போகவே இல்லை. அந்த யௌவனப் பூங்கொம்பின் பக்கத்தில் உட்கார்ந்திருந்து, சாய்ந்து கண்களை மூடித் தபசுசெய்துகொண் டிருந்த சுந்தரி என்ற சிறுமிக்கு ஐந்தாவது வயது நடந்தது. தாயின் வடி வத்தை சிறிய அளவில் படமாய்ப் பிடித்தால் அது எப்படி இருக்குமோ அப்படியே அந்தச் சிறுமி அசலுக்குச் சரியான நகலாயும், ஐந்து வயதில் தாய் எப்படி இருந்திருப் பாள் என்பதைக் கண்கூடாய்க் காட்டும் போட்டோப் படம் போலும் காணப்பட்டாள். ஒரு வடிவம் பெரியது, ஒரு வடி வம் சிறியது என்ற ஒரே ஒரு தாரதம்மியத்தைத் தவிர வேறு எவ்வித வேறுபாடும் காணப்படவில்லை. 

பின் பக்கத்துத் திரை திடீரென்று விலக்கப்படவே, உள்ளே இருந்த மாது சுறுசுறுப்பாகச் சரேலென்று நிமிர்ந்து உட்கார்ந்து, ஆடையை இழுத்திழுத்து உடம்பை நன்றாக மூடி, நாணிக்கோணி இலஜ்ஜையோடு குனிந்து, அடக்கமாய் உட்கார்ந்துகொள்ளவே, கண் கொள்ளாக் காட்சியாயிருந்த அந்தத் திருக்கோலம் இராஜபாட்டையில் நின்ற ஐபருடைய மனதையும் கண்களையும் உடனே கவர்ந்து, அவர் பிரமித்துப் போகும்படி செய்தது. சாதாரணமான மனிதர்கள் எவரேனும் வண்டிக்குள் இருப்பார்கள் என்று நிரம்பவும் அலட்சிய மாய் மதித்து முதலில் மிக அசட்டையாய்ப் பேசத் தொடங் கிய ஐயர் உள்ளே இருந்து காட்சி கொடுத்த மூன்று அற் புத வடிவங்களையும் கண்டு வியப்படைந்து அடக்கமும் விநய மும் மதிப்பும் மரியாதையும் காட்டிப் புன்னகை தவழ்ந்த முகத் தோற்றத்தோடு பார்த்து, “ஐயரவாள் எந்தூருக்குப் போறாப்பலெயோ?” என்று அடக்கமாகவும் பணிவாகவும் வினவினார். 

உள்ளே இருந்தவரான கிருஷ்ணமூர்த்தி ஐபர்,”நாங்க திருவையாத்துக்குப் பக்கத்துலெ ஒரு கிராமத்துக்குப் போக ணும். கொழந்தை பசிச்சு அழறது, ஆகாரம் கிடைக்கக் கூடிய எடம் ஸமீபத்துலே எதாவது இருக்குமோ ?” என்றார். 

கீழே நின்றவரை இனி நாம் கைலாசையர் என்று குறிப்போம். அவர் கிருஷ்ணமூர்த்தி ஐயரைப் பார்த்து “திருவையாத்துக்கு இன்னம் அஞ்சு கல்லுக்குமேலே போக ணுமே ! குதுரெக்கிப் பின்னங்கால் ரெண்டும் தொவண்டுபே முட்டிதட்றதே! இன்னம் அரைக்கல்லு போறத்துக்குள்ளெ குதுரெ கீழே பள்ளிகொண்டுடும்போலிருக்கே!இது ஒங்களெத் திருவையாத்துலெ எப்பிடிக் கொண்டுபேச் சேக்கப் போறது! நீங்க எல்லாருமே சுத்த ஏகாதசி விரதம்போலிருக்கே! மொக மெல்லாம் வாடிக்கெடக்கு ! கொழந்தைக்கிமேலே அம்மாள் சோந்து கெடக்கறா. அதுக்குமேலே நீங்களும் களைச்சுப் போயிருக்கிக. ஏது, இந்தக் குதுரெயை நம்பினா, மண் குதுரெயை நம்பி ஆத்துலே எறங்கினாப்புலெதான். இண்ணக்கி ராத்திரிகூட நீங்க போஜனத்தைக் காணுவிகளோங்கறதே நேக்கு சந்தேகமா யிருக்கு. ஒங்களெ யெல்லாம் பாத்தா ரொம்பப் பெரிய எடத்து மனுஷாளாத் தோண்ட்றது.. ஆரோ வழியோடெ போற பைத்தியக்காரப் பிராம்மணன்னு என்னை நீங்க எண்ணாமெ, தயவு பண்ணி என் பேச்சுக்குக் கொஞ்சம் மதிப்புக் குடுக்கணும். இதோ கூப்பிடு தூரத்திலே எங்க ஊர் இருக்கு. முழுக்க நம்படவாள் அக்கிராரந்தான்” என்றார். 

கிருஷ்ணமூர்த்தி ஐயர் :- ஒங்க ஊருக்குப் பேரென்ன? 

கைலாசையர் :-விஷ்ணுபுரம்னு சொல்லுவா. 

கிருஷ்ண :- அங்கே பிராம்மணா ஸத்ரம் இருக்கோ? 

கைலா:- ஸத்ரமும் இருக்கு. நம்படவா எத்தனை பேர் வந்தாலும் தினம் ரெண்டு வேளையும் கருக்கான போஜ னமும் உண்டு. ஐயங்கார் ஜாதியாரா யிருந்தா, அவனே சொயம்பாகம் பண்ணிக்கத் தனியான எடமிருக்கு. அந்த ஸத்ரத்து மணியம் உத்யோகம் பாக்கறவன் நான்தான். ஆனா, இண்ணக்கி ஸத்ரத்து அடுப்புலெ பூனை தூங்கறது. 

கிருஷ்ண :- ஏன், நாங்க வரப்போறோமுன்னு ஆரா வது மின்னெயே வந்து சொல்லிப்புட்டாளோ! 

கைலா:- (சிரித்துக்கொண்டு) ஐயரவாள் நண்ணாப் பேசறெகளே ! கேவலம் ஏழைப் பிராம்மணா வந்தாக்கூட ஆசார ஒபசாரமா அவாளுக்குக் கருக்கான போஜனம் பண்ணி வைக்கற வழக்கமாச்சே! அப்பிடியிருக்க, இப்பேர்ப்பட்ட பெரிய மனுஷா வரான்னா, அடுப்பெ அணைப்பமோ. ஒங்களைப் போலெ இருக்கப்பட்ட சீமான்கள் வரக் குடுத்து வைக்க ணுமே! ஆனா, நீங்க சொன்னதும் ஒருவிதத்துலெ பொருத் தமாத்தான் இருக்கு. அதுக்கு ஒங்க வாய்க்கி சக்கரை போடணும். இப்பேர்ப்பட்ட பெரிய மனுஷாளுக்கு ஏழைப் பிராம்மணா சாப்பிடும் ஸத்ரம் சரியான எடமல்லத்தான். தெய்வ சங்கல்பமா இண்ணெக்கி எங்க ஊருலெ ஒரு சுப காரியம் நேந்திருக்கு. 

கிருஷ்ண :- என்ன சுப காரியமோ? 

கைலா:- இந்தக் கிராமம் இருக்கோன்னோ. இது பெரிய பண்ணை ராமாமிர்த ஐயரவாளோடே ஏக போக கிரா மம். ஸத்ரம்,சாப்பாடெல்லாம் அவளோடே ஏற்பாடுகள் தான். இண்ணெக்கி அவாளாத்துலெயே ஒரு பெரிய விசே ஷம் நடக்கறது. அதுக்காக அவாளாத்துலெயே ஆயிரக் கணக்கான பிராம்மணாளுக்கு லட்டு ஜிலேபியோடெ ஸந்தர்ப் பணை நடக்கறது. அதுனாலெ ஸத்ரத்துலெ இண்ணைக்கி அடுப்பே பொகையல்லெ. இப்ப ரெண்டாம் பந்தி போஜ னம் நடந்துண்டிருக்கு, இன்னம் மிச்சமிருக்கும் ஸாப்பாடு ஐநூறு பேருக்குக் காணும். தாங்கள் தயவுபண்ணி அம் மாள் குழந்தை ஸகிதம் அங்கே விஜயம் பண்ணி, போஜன காரியத்தை நடத்திக்கணும். அம்மாளைப் பாத்தா, ஸாக்ஷாத் மகா லக்ஷ்மியைப் பாக்க வைகுண்டத்துக்குப் போகவே வேண்டியதில்லைப்போ லிருக்கு. தங்களைப் பாத்தா,ஸ்ரீ ராம பிரானைப் போலையே இருக்கு. ஒங்களையெல்லாம் பாத்தா, பெரிய பண்ணை ஐயரவாள் அப்பிடியே பூரிச்சுப் பொங்கிப் போவா. அவாளோடெ தர்மபத் இருக்காளோன்னோ ; அந் தப் புண்ணியவதி இந்த மகா லக்ஷ்மியைப் பாத்துட்டா, அப்பிடியே புஷ்பமாட்டமா ரெண்டு கையாலெயும் தாங்கித் தலைமேலே வச்சுக்குவா. எஜமான், எஜமானியம்மா ரெண்டு பேரும் தங்கமான மனுஷ்யாள். அன்னியாளிடத்துலெ, அவாளுக்கு இருக்கற பக்ஷமும் பாசமும் இவ்வளவுதான்னு சொல்ல முடியாது. நீங்க அங்கே விஜயம் பண்ணி அவ ளோடெ மொகத்தைப் பாத்திகளானா ஒங்கிளுக்கே நெஜம் புரிஞ்சுபோம். 

கிருஷ்ண :- ஒ, அப்பிடியா! அவ்வளவு நல்ல மனுஷ் யாளா! சந்தோஷமாச்சு. அவாளாத்துலெ இண்ணைக்கி என்ன விசேஷமோ? 

கைலா :- அவாளாத்துலெ அடிக்கடி சுப காரியம் நேந் துண்டுதா னிருக்கும்; இந்த மாதிரி பிராம்மண ஸந்தர்ப்பணை நடந்துண்டுதா னிருக்கும். இண்ணைக்கி ஒரு பெரிய விசே ஷம். வட தேசத்துலெ இருந்து மன்மத பீடத்து மடாதிபதி ஸ்வாமிகள் திருவையாத்துக்கு வந்து சுமார் மூணுமாஸ கால் மாத் தாமஸிச்சு, தினம் லக்ஷார்ச்சனை பண்ணி, வேளை ஒண் ணுக்கு ஆயிரம் பிராம்மணாளுக்குப் போஜனம் பண்ணி வச்சு, ஜெஞ்சாமிருதமா உபந்நியாஸம் நடத்தி, திக் விஜயம் பண்ணிண்டிருக்கா. அவாளுக்கு வயஸு இருபத்தஞ்சுகூட இருக்காது. மொகத்துலே அருள்பால் சொட்டறது; ஒடம்பு கொடிபோலே தங்கப் பாளமாட்டமாப் பழுத்துப்போயிருக்கு. அவாளே சரஸ்வதி அவதாரமின்னுதான் சொல்லணும். அவாள் கையாலெ விபூதி எடுத்துக் குடுத்தா, தீராத வியாதி யெல்லாம் தீந்துபோறதாம்; கொழந்தை யில்லாதவாளுக் குக் கொழந்தையுண்டாறதாம்; பேய் பிசாசெல்லாம் போன எடம் தெரியாமெப் பறந்துபோறதாம். பெரிய பண்ணை ஐயரவாள்,நாலஞ்சு தினங்கள் இங்கே பிக்ஷைபண்ணி வைக் கறதாக ஸ்வாமிகளை அவாளோடெ பரிவாரங்களோடெ அழைச்சிண்டு வந்திருக்கா; ஒங்கிளுக்கும் ஸ்வாமி தரிசன பலன் ஸித்திக்கும். 

கிருஷ்ண :- ஒங்க ஊருக்கும் ரஸ்தாவுக்கும் எவ்வளவு தூரமிருக்கும்? 

கைலா :- இங்கே இருந்து ஒரு கால் கல்லு தூரம் போனா, எடது பக்கமா ஒரு வழி திரும்பறது. அப்பிடியே வண்டியெ விட்டா, அது ஒரு பெரிய தென்னந்தோப்புக்குள் ளெயே போகும். அப்பிடியே ஒரு கூப்பிடுதூரம் போனா, அங்கே அக்ராரம் ஆரம்பமாறது. மின்னாலெ ஸத்ரமும் தாம ரைக் கொளமும் இருக்கு. ஸத்ரம் சின்னதாத்தான் இருக் கும். அதுலெ ஸ்வாமிகளோடெ பரிவாரங்கள்ளாம் தங்கி யிருக்கா. ஸ்வாமிகளும் முக்கியமான மனுஷ்யாளும் பண்ணை யாராத்து மெத்தைமேலே தனியான ஒரு பாகத்துலெ இருக்கா. பிராம்மண போஜனமெல்லாம் பண்ணையாராத்துக் கீழ்ப்பாகத்துலெ நடக்கறது. நீங்க ஸத்ரத்து வாசல்லெ எறங்கி, கொளத்துலெ ஸ்நானத்தை முடிச்சுண்டு மடிபண் ணிக்கிங்க. நான் இதோ கால்நாழீலே அங்கே வந்துசேந்து, ஒங்களை அழைச்சிண்டுபே ஸ்வாமி தெரிசனம் போஜனம் எல்லாம் ஒரு க்ஷணத்துலெ முடிச்சு வைக்கறேன். 

கிருஷ்ண:- (சிறிது தயங்கி) நாங்க இது வரையிலெ புதுசா ஆராத்துக்கும் போஜனத்துக்குப் போனதில்லை.எங் களைப்பத்தி அக்கரையில்லை ; இந்தக் கொழந்தைதான் பசிச் சுப் பறக்கறது ; நீங்களும் இப்பிடியே எங்களோடெ இந்த வண்டீலெயே வரலாமே. 

கைலா:- இல்லெ, நேக்குக் கொஞ்சம் அவசரக்காரிய மிருக்கு. இதோ பக்கத்துலெ பண்ணையாரோடெ மாட்டுப் பட்டி இருக்கு; பால் பாயஸம் பண்ணினது இழுத்துக்கும் போலிருக்கு. இன்னும் ஒரு கொடம் பால் அவசரமா வேணும். அதை ஒடனே அனுப்பச் சொல்லிப்புட்டு நான் இதோ ஒங் கிளுக்குப் பின்னாலெயே வந்துட்டேன். 

கிருஷ்ண:- சரி; பெரியவா இவளவு தூரம் சொல்லச் சே, தட்றது பெசகு; நீங்க வரவரையிலே நாங்க ஸத்ரத்து வாசல்லேயே இருக்கோம். சரி; வண்டிக்காரா, ஒட்டு வண்டியே; ஐயா சொன்ன அடையாளத்தைக் கேட்டுண்டியோன்னோ? 

கைலா:- அப்பா, வண்டிக்காரா, நேருலெ கால் கல்லு தூரம் போ. எடது கைப் பக்கம் வண்டிப்பாதை திரும்பறது; கண்ணெ மூடிண்டு அதுலெபே வண்டியெ விட்டுண்டுபோ. மொதல் கட்டடம் ஸத்தரம்; அங்கெயே நிறுத்திக்கோ; சீக்கிரம் ஓட்டீண்டு போ ; இண்ணைக்கி நீ நரி மொகத்துலெ முழுச்சி ருக்கே; ஒம்பாடும் வேட்டைதான். 

என்று கூறியவண்ணம் விரைவாகப் போய்விட்டார். மறுபடி திரை வண்டியின் பின்பக்கத்தை மறைத்துக் கொண்டது. கடுமையான பசியினால் களைத்து வாடி யிருப் போருக்கு போஜனமென்றால் சந்தோஷம் உண்டாகுமென்று நாம் சொல்லவும் வேண்டுமா? அந்த சந்தர்ப்பத்தில் வடை, பாயஸம்,லட்டு, ஜிலேபி, கனிவர்க்கங்கள், சித்திரான்னங் கள் உள்பட விருந்து போஜனம் கிடைப்பதென்றால் அதைப் பற்றி வண்டிக்காரன் குதூகலமடையாமல் இருப்பதுசா சாத்திய மான விஷயமா? அவனைக் கப்பிக்கொண்டிருந்த களைப்பு, சோர்வு, உறக்கம், கண்ணிருளல், காதடைப்பு முதலிய துர்த் தேவதைகளெல்லாம் இருந்த இடம் தெரியாதபடி ஒரே நொடி யில் பறந்து போயின. அவன் மிகவும் தெளிவாய் நிமிர்ந்து உட்கார்ந்து குதிரையைத் தட்டிக் கொடுத்து தாஜாப்படுத்தி மறுபடி ஓட்டத்தொடங்கினான்.மேலே விவரித்த சம்பாஷணை நடந்த காலத்தில் சுமார் பத்து நிமிஷ காலம் ஓடாமல் நின் றது அந்தக் குதிரைக்கு சுவர்க்க போகம் போலவே இருந்த தாகையால், அதற்குள் அதன் இறைப்பு, வியர்வை, நுரை ஆகியவை சிறிது அடங்கிப் போனதன்றி, அதன் கால்கள் ஓய்வும் இரத்த ஓட்டமும் பெற்றன. எனவே, அது முன்னி லும் சிறிதளவு தெளிவாக ஓடத்தொடங்கியது. 

வண்டி சத்திரத்தை அடைவதற்கு அரை நாழிகை காலம் பிடிக்குமா தலால், அதுவரையில் நாம் அந்த வழியின் இயற்கை அமைப்பைப்பற்றி சில முக்கியமான தகவல்களைக் குறிப்பிடுவோம். அது திருச்சிராப்பள்ளியிலிருந்து திருவை யாற்றிற்கு வரும் இராஜபாட்டையென்று முன்னரே குறிப் பிட்டோமல்லவா. அந்த இரஸ்தா பெரும்பாலும் காவிரி யாற்றின் கரை யோரமாகவே வருகிறது. அந்த ஆறு பொன்னி நதி என்ற சிறப்புப் பெயரால் குறிக்கப்படுகிற தென்பது எல்லோர்க்கும் தெரிந்த செய்தியே. பரம புருஷ னுடைய இருதய கமலத்தைத் தனக்கு உற்பத்திஸ்தான மாய்ப் பெற்றிருத்தலால் ‘கமலாசனி’ என்று பெயர்பெற்ற திருமகளின் கிருபாகடாக்ஷம் காவிரி நீரில் அடங்கி இருப் பது எல்லோர்க்கும் நிதரிசனமாய்த் தெரிந்ததாகையால் அதற் குப் பொன்னியென்ற பெயர் கிடைத்தது முற்றிலும் பொருத்தமானதே யன்றோ. சோழ நாட்டின் செல்வம், செழுமை, புனிதம்,கலைக்ஞானம், நற்குண நல்லொழுக்கம், சிறந்த பகுத்தறிவு, அபாரமான புத்தி நுட்பம், தெய்வ பக்தி,ஈகை,தயாளம், பெருந்தன்மை முதலிய சகலமான ஐசுவரியங்களும், அந்த தெய்விக நதியின் தீம்புனலின் அரு ளொளியில் அடங்கி இருத்தலால், அதுவே சோழ நாட்டின் உயிர்நிலை என்று நாம் கூறுவதும் பொருந்தும். 

அத்தகைய பெருமை வாய்ந்த மகா பரிசுத்தமான காவிரி நதி, உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக் கும் இடம் வரையில், வெவ்வேறு வித வடிவையும், புதுப் புது வனப்பையும் பெற்றுத் திருநடனம் புரியும் அற்புதக் காட்சியை நாம் உள்ளபடி வர்ணிக்கப் புகுந்தால், அதுவே ஒரு தனி நூலாய்ப் பெருகும். அதன் தோற்றம், சில இடங்களில் மகா பயங்கரமாகவும், வேறு சில இடங்களில் மிக கம்பீரமாகவும், மற்றும் சில இடங்களில் கண்கொள்ளா எழிலைச் சொரிவதாகவும், இதர இடங்களில் முதிர்ந்து களர்ந்து மெலிந்து, ‘இதுவோ தெய்விகப் பொன்னி நதி’ என்று எவரும் சங்கை கொள்ளும்படி வறுமை நிலையடைந்து உருக்குலைந்து தோன்றுவதாயும் அமைந்திருக்கிறது. 

அதன் உற்பத்தி ஸ்தானம் முதல் ஈரோடு வரையில் அது மலைகளைப் பிளந்து, குன்றுகளைக் குடைந்து, காடுகளைத் நகர்த்து பயங்கரமான பள்ளங்களை நிறைத்து, கீழும் மேலு மாய் விழுந்தெழுந்து திக் விஜயம் செய்து ஜெயக்கொடி தாங்கி வரும் காட்சி, உலகம் முழுதையும் அழித்துக் கபளீ நரம் செய்துவிடுவதாய் அச்சுறுத்தும் பிரளயகால ருத்திரனோ என்று எல்லோரும் அஞ்சி நடுங்கும்படி, மகா கொடிய பெரும்பேய் இரத்த வெறிகொண்டு தலைவிரித்தாடிக் கடும் போர் புரிவது போன்றிருக்கிறது. 

ஈரோடு முதல் குணசேகரபுரம் வரையில், அது இரை விழுங்கி, நகர மாட்டாமல் தரையில் கிடந்து புரண்டு தத்த ளிக்கும் பிரம்மாண்டமான மலைப்பாம்போ, அல்லது, பூர்த்தி பான சூல்கொண்டு காலடி பெயர்த்துவைக்க யலாது நெடுமூச்செறிந்து திணரித் தவிக்கும் திக்கஜமோ என்று உவ மிக்கத் தக்கதாய் இருப்பதன்றி, அது அப்புறத்தில் நடா டாத திய பயங்கரமான கொடிய யுத்தத்தினால், அலுத்து உணர் வற்றுக் கீழே கிடந்து புரளுகிறதோ, அல்லது, அது அந்த அபாரமான போரில் சூரையாடித் திரட்டிச் சுமந்து வரும் கொள்ளைப் பொருளின் சுமை அழுத்துவதால், நகரமாட்டா மல்கிடந்து உழன்று ஊடாடுகிறதோ என்று ஐயுறும்படி கண் காணாத் தூரம் பரவி, அகண்ட காவிரி”யாய் அகன்று, மந்த கதியோடு வரும் திருக்கோலம் பெருந் திகைப்பையும், பேரச்சத்தையும் உண்டாக்கி மனதைப் பரவசப்படுத்துவதா யிருக்கிறது.குணசேகரபுரத்திற்கு வந்தவுடன் பொன்னித்திரு, “ஆகா, நம் குழந்தைகள் ஏராளமாய்ப் பெருகிப் பல இடங் களில் ஆவலோடு காத்திருக்கின்றனரே. நாம் இப்படி மந்த கதியில் போவது தவறு ; இரண்டுருக் கொண்டுபோய் எல் லோரது கலிபையும் விரைவில் தீர்ப்போம்” என்று கருது கிறவள்போல இரண்டு வடிவங்களடைந்து, மூத்தவள் கொள் ளிடமாகவும், இளையவள் காவிரியாகவும் பிரிந்து செல்லும் பரவசக் காட்சியைக் காணாக கண்களும் கண்களோ ! அந்த இடத்திலிருந்து திருவையாறு வரையில் பொன்னித்தாய் இளநங்கை வடிவம் பெற்று கண்கொள்ளா வனப்பையும் கணக்கிலடங்காக் கல்யாண குணங்களையும் அள்ளிச் சொரி யும் தெய்விகத் திருக்கோலத்தை உள்ளபடி வர்ணிக்கும் திறமைபெற்ற தெய்விகப் புலவர் யாவரே இருக்கின்றனர். அழிந்துபோன கோசல தேசத்திற்கு நாட்டுப் படலமென் றும், நகரப் படலமென்றும், ஆற்றுப்படலமென்றும் நூற் றுக்கணக்கில் விருத்தங்களை அள்ளித் தூவிய பாவள்ளலான கல்வியிற் பெரிய நம் கம்பநாடர் தமது பொன்னி நாட்டின் அழகை வர்ணித்த இடத்தில் பரமலோபியாய் மாறித் தமது அமிர்த கலசத்திலிருந்து கேவலம் நான்கு துளிகளைச் சொட்டவிட்டு நம்மை முற்றிலும் ஏமாற்றி விட்டாரன்றோ. அம்மகான் தமது தாயாகிய பொன்னித் திருவைப்பற்றி ஒரு நூறு விருத்தங்களாகிலும் பாடி இருத்தல் கூடாதா? காவி ரியை அடுத்துள்ள நாட்டைத் தமது இராமாயணத்தில் அவர் எப்படி வர்ணித்திருக்கிறாரென்பதை கவனிப்போம்:- 

  1. கொடிறு தாங்கிய வாய்க்குழு நாரைவாழ் 
    தடறு தாங்கிய கூன் இளந் தாழையின் 
    டேறு தாங்கும் விருப்புடைத் தீங்கனி
    இடறு வார்நறுந் தேனினி முக்குவார்.
  2. குழுவு மீன்வளர் குட்ட மெனக்கொளா
    எழுவு பாடல் இமிழ்கருப் பேந்திரத் 
    தொழுகு சாறகன் கூனையின் ஊழ்முறை
    முழுகி நீர்க்கருங் காக்கை முளைக்குமே.

3.பூநெ ருங்கிய புள்ளுறு சோலைகள்
தேனொ ருங்கு சொரிதலில் தேர்வில
மீனெ ருங்குறும் வெள்ளம் வெரீப்பல
வான ரங்கள் மரங்களில் வைகுமால்.

  1. தாறு நாறுவ தாழைகள் தாழையின்
    சோறு நாறுவ தூங்குறு மாங்கனி
    நாறு நாறுவ நாறுவ ளர்க்குறும்
    சேறு நாறுவ செங்கழு நீரரோ. 

ஆகா! அச்சில் வார்த்தெடுக்கப்பட்ட சர்க்கரைப் பதுமைகள்போலல்லவா பாக்கள் அமைந்திருக்கின்றன. சொற் களை வெகு சுத்தமாயும் பணிக்காயும் ஆய்ந்து சேர்த்து தேனும், பாகும் கசியும் லட்டு ஜிலேபிகள்போல இப்படி உருட்டிவிடத் தக்க கவிராயர்கள் இனி இந்நாட்டில் வந்து பிறக்கப் போகின்றனரா? பிறந்தாலும், அவரை ஆத ரிக்க சடையப்ப வள்ளல் ஒருவர் தோன்றப் போகிறாரா? இனி தமிழன் ஒருவன் இந்நாட்டின் அரசனாய் வந்தால்கூட, அவன் அடியோடு உருமாறி சட்டைக்கார துரையாய் இலங்கி, இங்கிலீஷையே பலுக்கித் தமிழை இளக்கரப்படுத்துவா னன்பதை நாம் நிச்சயமாய் நம்பலாம். இனி நாம் கம்ப ரையும், வள்ளுவரையும் நினைத்து நினைத்துருகி நெடுமூச் செறிந்து கண்ணீர் விடுத் தேங்குவதால் என்ன பயன் உண்டாகப்போகிறது? 

இது நிற்க, நாம் மேலே குறித்த குதிரைவண்டி வந்த ராஜபாட்டை கம்பரால் வர்ணிக்கப்பட்ட சோழநாட்டின் இடையே வருவதாகையால், அந்தப் பிரதேசத்தின் அழகை உள்ளபடி எடுத்துரைக்க நம்மால் இயலுமோ? பார்க்குமிட மெல்லாம் ஒரே பசுமையாய்த் தோன்றி, காய்களைத் தாறு தாறாய்ச் சுமந்து வனமாய் வளர்ந்து செழித்திருக்கும் வாழை வனங்களும், ஓர் ஆளை மறைக்கும் உயரம் தழைத் தோங்கி நிற்கும் நெற்பயிர்களும், ஆகாயத்தையளாவி வண்டி வண்டியாய்க் குலைகளைச் சுமந்து நிற்கும் தென்னை கழுகு முதலியவற்றின் தோப்புகளும், வெற்றிலைக் கொடிக் கால்களும் ஒன்றன்பின் னொன்றாய் மாறிமாறி வந்து கொண் ருக்கும் கோலாகலத்தை நாம் எப்படித்தான் விஸ்தரிக்கப் போகிறோம் ! இடையிடையில் ஆயிரக்கணக்கான கால்வாய் களில் தண்ணீர் சலசல வென்று ஓடிக்கொண்டிருக்கும் அற் புதக் காடசியும், தாமரை, அல்லி, நீலோத்பலம், செங்கழுநீர் முதலியவற்றின் இலைகளும் பூக்களும் தண்ணீரே தெரியாத படி மறைத்துவனமாய்த் தழைத்துக் கிடக்கப்பெற்ற தடாகங் கள், வாவிகள், வதிகள் முதலியவற்றின் மனோகரத் தோற்ற மும் மனதைப் பரவசப்படுத்து மென்பதைக் கூறவும் வேண் டுமோ? ஆங்காங்கு சிவாலயங்கள் விஷ்ணுவாலயங்கள் ஆகிய வற்றின் கோபுரங்களும், கொடிமரங்களும் தலையை நீட்டி எல்லா உலகங்களையும் படைத்து, எங்கும் எப்போதும் வியாபித்து, தோன்றாத் துணைவனாயிருந்து எல்லோரையும் காத்து ரக்ஷிக்கும் பரம்பொ,நளின் நினைவை ஒவ்வொருவரது உள்ளத்திலும் சதா காலமும் இருத்தி, அவர்களது மனோ மெய்கள் பரிசுத்த நிலையடையும்படி ஊக்கும் சாதனங்களாய் அமைந்திருக்கின்றன. அத்தகைய மனோக்கியமான பிரதேசத் தின் இடையில் வந்த இராஜபாட்டையின் பக்கங்களில் பிரம்மாண்டமான மண்டபங்களும், சத்திரங்களும், சாவடிகளும் ஒன்றன் பின்னொன்றாய் மாறிமாறி வந்து நம்முன்னோரின் தயாள மனப்போக்கை விளம்பரப்படுத்துவனவாய் அமைந் திருக்கின்றன. ஜீவகாருண்யத்தைக் கருதி, பாதையின் இரண்டு பக்கங்களிலும் வைத்து வளர்க்கப்பட்டுள்ள ஆல மரங்கள், நாவல் மரங்கள், மாமரங்கள், நெல்லிமரங்கள் முதலியவை பிரம்மாண்டமாய் வளர்ந்து கண்பார்வை நுழையாதபடி பந்தல் போல அடர்ந்து, காய்களையும், கனிகளையும் குலை குலையாய் சரம் சரமாய்த் தொங்கவிட்டும் அவற்றைத் தரை யில் சொரிந்தம் தோன்றும் வசீகரக்காட்சியின் தன்மை நேரில் காண்போருக்கே உள்ளபடி விளங்கும். அம்மரங்களில் நூற்றுக்கணக்கில் நிறைந்து தாவிக்குதித்து விளையாடி ஒன் றோடொன்று சண்டையிட்டுப் பெரும்பூசல் விளைத்துக் கொண்டிருக்கும் குரங்குகள் பாட்டைசாரிகளை வியப்போடு பார்த்து, அதற்குமுன் எங்கேயோ பழக்கமானவரைக் காண் பது போல, அதிசயித்துப் பல்லிளித்துப் புரளி செய்யும் கோலம் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஒரு தன்மைத்தாய் மறைந்திருக்கும் பிரம்ம ரந்திரத்தின் பெருமையை விளக்கு வதாயிருக்கும். காக்கைகள் குயில்கள் முதலிய பறவை இனங் கள் மேற்படி விருக்ஷங்களில் கோடிக்கணக்கில் நிறைந்து சமுத்திர கோஷப்போன்ற கம்பலையை உண்டாக்குவது உண்மையில் பேராநந்தக் காட்சியாயிருக்கும். 

அத்தகைய இராஜபாட்டையில் வந்துகொண்டிருந்த குதிரைவண்டி கால் நாழிகை காலத்தில் விஷ்ணுபுரம் சத்தி ரத்தின் முன்னால் போய் நின்றது. 

உடனே வண்டிக்காரன் சொர்க்க லோகத்தில் நுழை பவன் போல அளவற்ற மகிழ்ச்சியோடு வண்டியை கீழே குதித்து, “சாமீ, இதா சத்தரம் வந்துடிச்சிங்க; ஏறங்குங்க” என்றான். உடனே கிருஷ்ணமூர்த்தி ஐயர், உறக்கத்தில் ஆழ்ந்துபோயிருந்த தமது மனையாட்டியின் தோள்பட்டையில் மெதுவாய் இரண்டொரு தட்டுகள் தட்டி, “அடீ, அடீ, ஸத்ரம் வந்துட்டுது; எறங்கணும்; கொழந்தையை இழுப்பு’ என்று கூறிய வண்ணம், பின்பக்கத்துத் திரையை அவிழ்த்து விட்டுக் கீழே குதித்துத் தமது ஆடைகளை சரிப்படுத்திக் கொண்டார். 

ஸ்வர்ணாம்பாள் சுந்தரியைத் தட்டி எழுப்பி, “அடி பாப்பா, ஊரு வந்துட்டுது; ஏந்திரு. ஆத்துக்குப்பே சாப்பிட் லாம்” என்று கூறி அவளுக்குத் தெளிவுண்டாக்க, கிருஷ்ண மூர்த்தி ஐயர் அந்தச் சிறுமியைக் கீழே இறக்கிவிட்டார். உடனே ஸ்வர்ணாம்பாள் தனது ஆடைகளை இழுத்திழுத்து உடம்பை செவ்வையாய் மூடிக்கொண்டு, பம்பரம் சுழலுவது போல விசையாய்த் திரும்பி நகர்ந்து, பின்னால் வந்து கீழே குதித்து உடம்பை அப்புறம் இப்புறம் திருப்பிக்கொடுத்து, புடவையிலிருந்த தூசி முதலியவற்றைத் தட்டிவிட்டுக் கீழே குனிந்து கொசவத்தை சரியாய் இழுத்து விட்டு,கைகால் களிலிருந்த நகைகளை ஒழுங்காய்த் தள்ளிவிட்டு சுந்தரியைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு, புருஷருக்குப் பின்னால் போய் அடக்க வொடுக்கமாய் நின்றாள். 

கிருஷ்ணமூர்த்தி ஐயர் வண்டிக்காரனை நோக்கி, “இந் தாப்பா, மின்பக்கத் தெரையை அவுத்துட்டு, டிரங்குப் பெட்டி ரெண்டையும் எடுத்துண்டுவந்து ஸத்ரத்துத் திண்ணை யிலே வை” என்றார். 

அவன் அவ்வாறே செய்து, உடனே குதிரையை வண் டியை விட்டு அவிழ்த்து விட்டான். பக்கத்திலிருந்த சத்திரம் இரண்டு வாசல்களும் விசாலமான திண்ணைகளும் உடைய தாய் இருந்தது. திண்ணைகளில் மூலைக்கொருவராய் சில பிராம்மணர்கள் உட்கார்ந்திருந்தனர். சத்திரத்திற்கு எதிரில், சுத்தமான படித்துறையுடைய பெரிய தாமரைத் தடாகம் ஒன்று காணப்பட்டது. தாமரை இலைகளும், பூக்களும்,மொட் டுகளும் ஒரே வனமாய்த் தழைத்து அடர்ந்து தண்ணீரே தெரியாமல் குளம் முழுதையுர் மூடிக் கொண்டிருந்தன வா னாலும், படித்துறையின் ஓரத்தில் தெரிந்த தண்ணீர் பளிங்கு போல நிர்மலமாய்க் காணப்பட்டது. சத்திரத்திற்கும் தடா கத்திற்கும் நடுவில் பிரம்மாண்டமான வாதா மரங்களும், தென்னை மரங்களும், பாக்குமரங்களும் அடர்ந்து தமது கிளைகளாலும், இலைகளாலும் இயற்கைப் பந்தல் போட்டிருந் தன. சத்திரத்தின் பக்கத்தில் இருநூறு கஜ தூரம் இடை வெளி விட்டு, அதற்கப்பால் விசாலமான ஒரு தெருவை அமைத்திருந்தனர். அதில் சுமார் ஐம்பது ஒட்டுவீடுகள் இரட்டைச் சரகாய்க் காணப்பட்டன. தெருவின் நடுவில், சத் திரத்தைவிடப் பன்மடங்கு பெரியதாயும், இரண்டுவாசல் களும், விசாலமான திண்ணைகளும், மேன் மாடங்களும் உடையதாயும், அரண்மனைபோல் ஓங்கிநின்ற மாளிகையே பெரிய பண்ணை இராமாமிர்த ஐயருடைய ஜாகையாயிருக்க வேண்டு மென்று கிருஷ்ணமூர்த்தி ஐயர் யூகித்துக் கொண் டார். அந்த மாளிகையின முன் பக்கத்தில் இருந்த கொட்ட கைப் பந்தலில் வாழை மரங்கள், மாவிலைத் தோரணம், தென்னங் குருத்துத் தோரணம் முதலியவை காணப்பட்டன. குரங் காட்டிகள், திருவோட்டுப் பரதேசிகள், சுரைக்குடுக்கை, நரித் தோல்பை முதலியவற்றோடிருந்த தொம்பர்கள் ஆகியோர் பந்தலுக்கு வெளியில் காணப்பட்டனர். சமயல்காரர்கள் கூடை கூடையாய்க் கொணர்ந்து பந்தலிற்கு வெளியில் கொட் டிய எச்சில் இலை முட்டுகளைச் சுற்றிப் பல ஏழைகள் உட் கார்ந்து, துணிகளை விரித்துப் போட்டு பெரிய பெரிய அப்பளங்கள், லட்டுருண்டைகள், வடைகள், வாழைப்பழங்கள், மாம்பழங்கள், பலாச்சுளைகள், சித்திரான்னங்கள்,சாதம், காய்கறிகள் முதலியவற்றைப் பிரித்து முட்டுமுட்டாய் வைப் பதும், இடையிடையில் சிலவற்றை ஆவலோடு வாயில் பொட்டு மென்று உள்ளே செலுத்துவதுமாய் மிக சுறு சுறுப் பாய் வேலை செய்து கொண்டிருந்தனர். 

நமது கதையை நாம் மேலும் விஸ்தரிக்குமுன் சில முக்கியமான தகவல்களைத் தெரிவிப்பது அத்யாவசியமாத லால், அதை முதலில் கவனிப்போம். அந்த விஷ்ணுபுரம் கிராமத்தைச் சுற்றிலும் சுமார் முப்பது மயில் அகலச் சுற்று வட்டத்திலுள்ள ஸ்மார்த்தப் பிராம்மணர்களுடைய அகராதி யின்படி “ஐயாவாள்” என்றால், விஷ்ணுபுரம் பெரிய பண்ணை இராமாமிர்த ஐயரையே குறிப்பதாகக் கொள்ளவேண்டும். ஐயரவாளுடைய கிரகத்தில் ஒவ்வொரு மாதத்திலும் இன் னின்ன தினங்களில் பிராம்மண போஜனம் நடக்குமென்பது மேற்படிச் சுற்றுவட்டத்திலிருக்கும் ஸ்மார்த்தப் பிராம்மணர் களுக்கு மனப்பாடமாய்த் தெரியும். ஒவ்வொரு ஸந்தர்ப்பணை யைப் பற்றியும் பல தினங்களுக்கு முன்னிருந்தே ஜனங்கள் ஆவலோடு பிரஸ்தாபித்து, வயிற்றில் இடங்கோலிக் கொண் டிருப்பார்கள். 

ஒருவரையொருவர் காணும்போது, ஏண்டா வைத்தா, ஆச்சு, நெருங்கிப்போச்சு. நீ வரியோன்னோ?” என்று குசலம் விசாரிக்கத் தொடங்கிவிடுவார். வைத்தா, “என்னடா, கிட்டுச் சாமி, அப்பிடிக் கேக்கறே! பருப்பில்லாமெக் கல்யாணம் உண்டாடா என்னன்னியிலே ஸந்தர்ப்பணை பண்ண ‘ஐயரவாளுக்கு’ அவ்வளவு தைரியமாடா! நான் மொத்னாளே போயி ஆஜர் சொல்றவனாச்சே” என்பார். 

இன்னொருவர், ட சாமா,அடே முத்து, போன தபா குடுத்தமாதிரி இந்தத் தபாவிலெயும் ஒத்தொத்தரூவா பூரி தக்ஷணையாண்டா. இந்த தபா தலை பாமங்கலத்துலே இருந்து பத்துவண்டி மாம்பழம் வந்திருக்காம். ஒரொரு வழமும் சொம்பு சொம்பா இருக்காம். உள்ளே கொட்டை, அறைக் கொழந்தை அரசெலை அவளவே இருக்காம். தோலைக் கொஞ்சம் கிள்ளவேண்டியதுதான்; உள்ளே இருக்கற ஸாரமெல்லாம் தயிர்க்கட்டி தயிர்க்கட்டியா அப்பிடியே பூர்த் தியா வெளீலெவந்துடுமாம். லவலேசம் நாறு, நரம்பு, பால் காரல், புளிப்பு இருக்கணுமே; பேசப்படாது. ஒரு பழம் ஸாப்ட்டா வயறு ரொம்பிப்போமாம்” என்பார். 

தஞ்சை ஜில்லாவின் வடக்குக் கோடியிலிருந்து இராமே சுவரம் வரையில் ஐந்து மயிலுக்கொன்று,பத்து மயிலுக் கொன்றாய் புண்ணியவான்கள் பிராம்மண சத்திரங்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள். வழிப்போக்தர்களுக்கு தினம் தினம் மேற்படி சத்திரங்களில் போஜனம் கிடைப்பதன்றி, அந்த தர்மத்தை ஏற்படுத்தியுள்ள சீமான்களுடைய வீட்டில் சுபா சுபங்கள் நிகழும் தினங்களிலும் மூன்று வித பழங்கள், ஐந்து வித பக்ஷணங்கள், பாயஸம், பலவகைச் சித்திரான் னங்கள், பத்துப் பதினைந்து கறிகள், ஐந்தாறு பச்சடிகள், மோர்க்குழம்பு, பொரித்த குழம்பு, பருப்பு ஸாம்பார் முத லிய அலங்காரங்களோடு போஜனம் கிடைக்குமாதலால், அந்த ஜில்லாவிலுள்ள பெரும்பாலான பிராம்மணர்களுக்கு அந்த இலாகாவில் பூர்த்தியான அநுபவமுண்டு. அவர்கள் அடிக்கடி சென்று மேற்படி வைபவங்களில் குதூகலமாய்க் கலந்து கொண்டு ஆநந்தமாய் விருந்துண்டு பூரிதக்ஷிணை பெற்றுக் கொண்டு வீடு திரும்புவார்கள். 

ஆனால், அதில் ஐயங்கார் ஜாதியார்தான் கொடுத்து வைக்காத பாவிகள். பரான்ன போஜனம் செய்தல்கூடா தென்று அவர்களுடைய மூதாதை சாஸ்திரங்களில் எழுதி வைத்திருக்கிறாராம். அதைக் குரங்குப் பீடியாய்ப் பிடித்து, தம் சுய ஜாதியார் வீட்டில்கூட ஒருவருக்கொருவர் போஜனம் செய்துகொள்ளாமல் வைதிகர்கள் பல தினங்கள் வரையில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு பட்டினி கிடப்பார்களென்றால், அவர்கள் பொதுச் சத்திரங்களில் சாப்பிடுவதில்லையென்பதை நாம் கூறவேண்டியதே இல்லை. மகாராஜாவின் சத்திரத்தில் முதல் தரமான இராஜ போஜனம் நடந்தால்கூட, ஐபங்கார் கள் அதை விட்டு, அதற்குப் பக்கத்தில் எங்கேயாகிலும் ஒரு விஷ்ணுகோவி லிருந்தால், அங்கே தயாரிக்கப்படும் களிமண் உருண்டையை தேவாமிருதமாய் சிலாகித்து,”பெருமாள் பிரஸாதம், பெருமாள் பிரஸாதம். தளிகை போக்யமாய் அமைஞ்சிருக்கு. பெருமாள் போக்யமாய் அமுது செய்திருக் கிறார்’ என்று கொண்டாடி, இலை,தண்ணீர், தொட்டுக் தண்ணீர்,தொட்டுக் கொள்ளப் பதார்த்தம் முதலிய எந்த உபநாணமு மின்றி, கீழே விழ விழக் கையில்வாங்கி, வாயில் போட்டுக் கொண்டு கையலம்பக் குளத்தங்கரைக்குப் போய்ச் சேருவார்கள். நல்ல மாதுரியமான பதார்த்தங்கள் அவர்களுக்குத் தள்ளுபடி யானவை. உதாரணமாய்,முருங்கைக்காய், வெங்காயம், முள்ளங்கி, பீர்க்கங்காய், சுரைக்காய் முதலியவற்றை உண் டால், அவற்றிலிருந்து தாமஸகுணம், மோகாந்தகாரம் முதலியவை பெருகுமாம். அதீதமான ஸ்திரீ சம்போகம், ஏராளமான குழந்தைகளைப் பெறுதல், அதனால் தமது மனைவி அருகமற்றவளாய்ப் போவதனால் பரஸ்திரீ நாட்டம் ஏற்படுதல் முதலிய துர்க்குணங்களை விலக்கும் பொருட்டு சுத்த ஸாத்விகமான வஸ்துக்களையே உண்ணவேண்டுமாம். வைதிக ஐயங்கார்கள் இவ்வித விபரீதமான பிடிவாதமான கொள்கைகளை உடைய அபூர்வப் பிறவிகள். 

இது நிற்க, விஷ்ணுபுரம் ஐயரவாள் வீட்டில் போஜன மென்றால், முதல் நாளிலிருந்தே அந்த ஊர் முழுதும் ‘ஹரிகி’ சப்தங்களும்,எச்சில் இலைகளுக்காக அடித்துக் கொள்ளும் தொம்பர்கள், நாய்கள் ஆகியோர் சண்டைகளும் பெருகி ஊரைக் கிடுகிடுக்க அடித்துவிடும். ஒவ்வொரு பிராம்மணரும் மறந்து போகாமல் கையில் ஒவ்வொரு பஞ்சபாத்ரத்தையோ, ஸ்தாலிச் செம்பையோ எடுத்துக்கொண்டு வருவார். ஒவ்வொருவரிடத்திலும் மூன்றாவது துண்டுவஸ்திரம் ஒன்று தவறாமல் இருக்கும். இலைகள் போட ஆரம்பித்தால், அவரவர் தம் தம் மூன்றாவதுசவுக்கத்தை இலைக்குப் பக்கத்தில் விரித் துப்போட்டு ஆசனங்கோலிவிட்டு, சந்தலக்கல், சந்தனக் கட்டை, தொன்னை, ஜலம் முதலியவை இருக்குமிடங்களுக் குப்போய்விடுவார்கள். சிலர் தாம் எதிர்பார்க்கும் நண்பர்கள் அல்லது, உறவினருக்கும் சேர்த்து இரண்டு மூன்று இலைக் ளுக்குப் பக்கத்தில் மேல் துணியை நீளமாய்ப் போட்டிருப்பார்கள். 

போஜனத்திற்கு முன் அவர்கள், முன் திண்ணைகளில் உட்கார்ந்திருக்கையில் அவரவர் தம் தமக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் காட்டிக் கொண்டிருப்பார்கள்.சிலர் தேவாரம்,அருட்பா, தாயுமானவர் பாடல் முதலிபவைகளைப் பாடுபவர்கள். சிலர் வாயால் மிருதங்கம் வாசிப்பார்கள். பலர் தாளம் போடுவார்கள். சிலர் விகடம் செய்வார்கள். சிலர் பதினைந்தாம் புலி யாடுவர்கள். சிலர் தாமே அதிகமாய்ப் படித்த பண்டிதர்கள் என்று காட்டிக்கொண்டு, எவரோடும் பேசாமல் கம்பீரமாய் உட்கார்ந்து துளசிமணி மாலையை வைத்து மணிகளை உருட்டி,”ராம, ராம, ராம, ராம,’ வென்று உரத்த குரலில் ஜெபம் செய்துகொண்டிருப்பார்கள். வேறு எவரேனும் பிராம்மணர் அவருக்கு அருகில் நெருங்கிவந்து விட்டால், ஜெபம்செய்பவர் உடனே தூர்வாச மகாமுனிபோல மாறி, ‘என்னங்கிணும் சுத்த அஸப்பமாயிருக்கீரே ! மனுஷா ஒக்காண்டிருக்காளேங்கற மரியாதை மட்டு இல்லைப்போலிருக் கே” என்று பிரமாதமாய்க் கூச்சலிட்டுத் தம்மை விளம்பரப் படுத்திக் கொள்வார். எதிராளியும் சண்டைக்காரரா யிருந் தால், அவரும் கூச்சலிட்டு, “அடெ ஏங்கிணும் சுத்தப் பிச்சு மாதிரி பேத்தறீர் ! கூட்டத்துலெ ஒத்தர்மேலே ஒத்தர் படா மெ இருக்க முடியுமோங்கிணும் நீர் ஒத்தர்தான் மகாமோஷ்டு போலிருக்கே, மத்தவாள்ளம் சுத்தப் பாஷாண்டீன்னி எண் ணிண்டீரா! விழுந்து கெடங்கிணும் சும்மா! அதியமா ஓங்கினா, ஒடப்புக் காகாதுங்கிணும். வாயை மூடிக்கும் செத்தநா செருப்பைக் கடிச்சாப்பலே” என்பார். உடனே அந்த இடத்தில் பெருத்த அமளி ஏற்பட்டுப் போகும். ஒவ்வொரு வரும், தாம் போய்விட்டால் தர்மம் நடத்தும் கர்த்தாவுக்குப் புண்ணியமே இல்லாமல் போய்விடு மென்று கருதி, அற்ப சண்டையானாலும், உடனே எழுந்து, “நான் போறேங்கிணும்; நான் போறேங்கிணும். ஆருங்கிணும் இந்த போஜனத்துக்கு வீங்கிக் கெடக்கறா! என்னமோ பெரிய மனுஷா வருந்தி அழைக்கறாளேன்னு, அவா வார்த்தைக்கு மதிப்பு வச்சு வந்தா, நடுவுலே கெடக்கற நாபே யெல்லாம் கண்டபடி பேசறதாவதுங்கிணும், இந்த மாதிரி நடக்குமின்னு தெரிஞ் சிருந்தா, நான் ஸர்வதேவ இந்த எடத்துலெ காலடி வச்சிருக்க மாட்டேங்கிணும்’ என்று கூறிக் கூச்சலிட்டு வெளியில் போக முயற்சிப்பார். சிலர் வழி மறித்து அவரை சமாதானப் படுத்தி வேறிடத்திற்கு அழைத்துப் போய் உட்காரவைப்பார்கள். சில குள்ளநரிகள் சமயல் செய்யப்படும் இடத்திற் குப்போய், மேல் விழுந்து உதவி செய்யக் கிளம்பி விடுவார்கள். ஒருவர் பலாப் பழப்பத்தைத் திருத்திச் சுளைகளை எடுக்கத் தொடங்குவார். ஒருவர் காய்கறி நறுக்கிக் கொடுப்பார். ஒருவர் இலைகள், பழவகைகள் முதலியவற்றை அலம்பி வைப்பார். ஒருவர் வடை முதலியவற்றிற்கு மாவறைத்துக் கொடுப்பார். ஒருவர் தேங்காய்களைத் துருவுவார். பலர் கட்டி லடங்கா ஆவேசத்தோடு பரிமாறக் கிளம்பி, அதற்கு சமயல்கா நர்களை விடாமல், தமக்குள்ளாகவே இன்னின்ன வஸ்துவைப் இன்னின்னார் பரிமாறுவதென்று ஏற்பாடு செய்து கொள்வார் கள். “அடெ சுப்புக்குட்டீ, நீ மாம்பழம் பரிமாறு,””ஓய் சாமி ஐயரே, நீர் நெய் பரிமாறுங்கிணும்,” “எலே சீனு, நீ தூத்தம் விசாரீடா” “டேய் நாணு, நீ கறி பரிமாறுடா,” “இந்தாடா கோபு,நீ குஞ்சாலாடு பரிமாறுடா,””ஓய் நாகநாதையனே, நீர் பரமன்னம் பரிமாறும்” என்று தமக்குத் தாமே நியமன உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டு, பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு தலைவிரித்தாடத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் அங்குமிங்கும் ஓடி ஓடித் துள்ளித் துள்ளிப் பாய்ந்து உற்சாகத்தோடு குனிந்து நிமிர்ந்து பரிமாறும் விதரணையை நேரில் கண்டே நாம் ஆனந்திக்கவேண்டும். 

அவர்கள் கணக்கு வழக்கின்றி பக்ஷண பதார்த்தங்களை யெல்லாம் வாரிக் கொட்டுவார்கள்; தேங்காய்ப் பருமனிருக் கும் குஞ்சாலாடுக்களை இரண்டு மூன்று தூக்கி அலட்சிய மாய் வீசுவார்கள். அதில் ஒன்றை உதிர்த்தாலே பாதி இலை நிறைந்து போகும். (பெரும்பாலோர் தமக்குப் பின்புறத்தில் தமது மூன்றாவது சவுக்கத்தை விரித்துப் போட்டிருப்பராத லால், முக்கியமான பக்ஷண பலகாரங்களை மேன்மேலும் இடது கையால் வாங்கி வாங்கி மேற்படித் துணியில் வைத்துக் கொண்டு, எழுந்து போகும்போது, சவுக்கத்தின் நான்கு மூலைகளையும் சேர்த்து இடதுகையால் தூக்கிக்கொண்டு போ வார்கள்.) பலர் புத்துருக்கு நெய்யை, மண்மொந்தைகளில் எடுத்துக் கொண்டு அடிக்கடி வந்து சித்திரான்னங்களின் மேலும், பக்ஷணங்களின் மேலும் ஜலம்போலச் சாய்ப்பார்கள் சிலர்பாலைக்கொணர்ந்து போளி முதலியவற்றின்மேல் கொட்டு வார்கள். அவர்கள் போடும் கூச்சல் அடுத்த வரையில் கேட்கும். ஒரு தடவை பரிமாறப் பட்ட வஸ்துவை மறுபடியும் எடுத்துக்கொண்டு வருவோர் அதன் பெயரைச் சொல் லிச் சொல்லிக் கதறி ஏலம் போட ஆரம்பித்து விடுவார்கள். ஒருவர், “ரஸவாங்கீ, ரஸவாங்கீ” என்று கூறிக்கொண்டே ஓடுவார். இன்னொருவர், ” பயத்தம்பருப்புக் கோசுமலி யாருக்கு வேணும்?” என்று கேட்டுக்கொண்டே போவார். வேறொருவர், “ஐயா ரஸம், ஐயா பங்களூர் ரஸம், ஐயா பன்னீர் ரஸம், ஐயா மைசூர் ரஸம்” என்று ரஸத்தை அபாரமாய் வர் ணித்து ஏலம் போட்டுக்கொண்டே செல்வார். இன்னொருவர் பொடலங்காப் பிட்லே, பொடலங்காப் பிட்லே”, என்று சொல்லிக்கொண்டே அடிக்குப் பயந்து ஓடுகிறவர்போலஓட்ட மாய்ப்போவார். வேறொருவர், “ஐயா கொழும்பு, ஐயரவாளுக் குக் கொஞ்சம் மோர்க் கொழம்பு, ஐயர் ஸாம்பார், ஐயா சாண்பார், ஐயா கொழம்பு” என்று புன்னகையோடு கேலி செய்துகொண்டே போவார். ஒரு பையன், “ஐயா கெங்கா மிருதம், ஐயா கெங்காமிருதம், சந்தேகத்துக்குக் கொஞ் சம் தீர்த்தம், ஐயா பச்சைக் கற்பூரம் கெங்காமிர்தம், ஆருக்குவேணும் தூத்தம், சந்தேகத்துக்குக் கொஞ்சம் தண், ஐயா தயவு செய்து கொஞ்சம் கெங்காமிர்தம்” என்று உற்சாகத்தோடு கூறிக் கொண்டே போக, நடுவில் ஒருவர், “அடெகொழந்தை, கொஞ்சம் வென்னீர் தயவு பண்ணப்பா’ என்பார். “ஓ, உஷ்தேகமா வேணும்? இதோ பின்னாலே வரப் போறது, வந்திண்டிருக்கு, வந்துட்டுது’” என்று மிக குஷியாய் ஆசை வார்த்தை கூறி விட்டு அப்பால் நழுவிவிடுவான். 

அவரவர் தம் தமக்கு அறிமுகமானவர்களைப் பார்த்து கண்ஜாடை கைஜாடைகள் காட்டி, இலையில் உள்ள வஸ்து வில் எது தமக்கு இன்னம் தேவையோ, அதைத் தொட்டுக் காட்டுவார்கள். அந்த மனிதர் அடுத்த தடவை வரும் போது, அதைக் கொணர்ந்து ஏராளமாய்க் கவிழ்த்து விட்டுச் செல் வார். பாயஸம் பரிமாறப்படும் போதுதான் அது பெரிய கள்ளுக்கடைபோ லாகிவிடும். இலையில் விடப்படும் பாயஸம் கட்டிலடங்காமல் தறுதலைத்தனமாய் நாலாபக்கங்களிலும் வெள்ளமாய் ஓடுமாதலால், எல்லோரும் ஒரே காலத்தில் வெள் ளத்தைக் கட்டுப்படுத்த முனைந்து ஆவேசத்தோடு, கையை யும் வாயையும் உபயோகித்து ‘புஸ்’ ‘புஸ்’ (Booz) என்று உரிஞ்சுவதும், நாக்கை நொட்டையிடுவதும் ஊரை கிடுகிடுக்க அடித்துவிடுவதோடு, ‘குருட்டுப்பறைச்சி நத்தை உரிஞ்சுவது’ என்ற பழமொழியை நினைப்பூட்டும். சிலர் பெரிய தொன்னை களை வரவழைத்துக் குளம் குளமாய்ப் பலதடவை வாங்கி நெட்டுவதில் தொன்னைகள் சக்கை சக்கையாய்க் கிழிந்து பாயஸத்தோடு வாய்க்குள் பிராயாணம் போய்விடும்; சில ருக்கு இலைகள் கிழிந்து போகத் தரையின் அழுக்கும் பாய ஸத்தோடு சேர்ந்துவிடுமானாலும், பெரு நெருப்பிற்கு ஈரமில்லை யென்கிறபடி, தேவாமிர்தம்போ லிருக்கும் பரமான்னத்தின் யோக்யதைக்குமுன் தரையின் சாணி யழுக்கு எம்மாத்திரம் என்று கருதி, அதைப் பொருட் படுத்தாது தமது காரியத்தைப் பார்ப்பார்கள். அவ்வாறு பரமான்னம் உரிஞ்சும் பரவசத்தில் ஸ்வாமியை ஸ்தோத்திரம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் சிலருக்கு உதித்து விடும்; கழுத்தில் ருத் ராக்ஷம் கட்டிக்கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்துச் சிலர், “ஓய் பஞ்சுவையரே, ம், ஆகட்டும்,” என்பர். 

அவர் தமது பாயஸத்தை அருந்திவிட்டு, தமது வயிறு, தொண்டை, மூச்சு முதலியவற்றை சரிப்படுத்திக் கொண்டு, தமக்கெதிரிலுள்ள ஒரு சிறுவனைப் பார்த்து, “அடே,மிருத் திஞ்சயா, நோக்கு சுதிபோடத் தெரியும்னு பக்கத்து ஊரெல்லாம் பிரஸ்தாபமா யிருக்கு. எங்கே, ஆகட்டும் கொஞ் சம்; காட்டு ஒன் சாமர்த்தியத்தை” என்று நயமாய்க் கிளப்பி விடுவார். அவன் ஒத்து ஊதுவதுபோல் வாயினாலேயே சுருதி போடத்தொடங்குவான்; உடனே பஞ்சுவையர் தமது காளைவாய்த் தொண்டையைக் கிளப்பி, இரண்டு மூன்று தடவை கனைத்து சுருதியைத் தமது குரலுக்கு சரியாய்ச் செய்து கொண்டு, வீட்டின் எஜமானர் எங்கே இருந்தாலும், அவருடைய காதில் படும்படி அடியில் வரும் ஸ்லோகங் களைப் பாட ஆரம்பித்துவிடுவார்:- 

“நிகமே ஸ்ரஸி ரத்நம், நித்யமாஸ்க்த ரத்நம்,
நிகில ஸூக்ருதி ரத்தம், ஜாநகீ நப ரத்தம்,
புவந வலய ரத்தம், பூப்bருதா மேக ரத்நம்,
ப்ரக்ருதி ஸூலபரத்நம், மைதிலீப்ராண ரத்நம். 

பக்தாபரிய புஜங்க கா8ருடமணிஸ் 
த்ரைலோக்ய ரக்ஷா மணிஹி, 
கோபீலோசன சாதகாம்புbadhமணிஸ் 
சௌந்தர்ய முத்ரா மணிஹி, 

யக்காந்தாமணீ ருக்மணி கனேகுசத்dh வம்த்dhவைக 
பூஷாமணிஸ் 
சீரேயோதேdவ சிகாமணீர் திdhசதுநோ 
கோபோல சூடாமணிஹி, 

சத்ருஸ் சேதைdhக மந்த்ரம், ஸகலழப நிஷத் 
வாக்ய ஸம்பூஜ்ய மந்த்ரம்,
ஸம்ஸாரோத்தர மந்த்ரம், ஸழபச்சித 
தமஸ்ஸங்க நிர்யாண மந்த்ரம், 

ஸர்வைச்வர்யக மந்த்ரம், வ்யஸன புஜகgஸ்
ஸந்தdhஷ்ட ஸந்த்ராணமந்த்ரம், 
ஜிக்வே ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரம் ஜெபஜெப 
ஸததம் ஜென்ம ஸாபல்ய மந்த்ரம்”. 

என்று இராகங்களை மாற்றி மா ற்றி, இராக மாலிகையாய்ப் பாடி, முடிவில், “ஸர்வத்ர கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்” என்று மதயானை கதறுவதுபோலப் பிரமாதமாய்க் கூச்சலிடு வார். மற்ற ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து, “கோவிந்தா, கோவிந்தா” என்று சமுத்திர கோஷம்போல ஒரே அலற லாய் அலறுவார்கள். மறுபடி பஞ்சுவையர், “நமப்பார்வதீ பதயே’ என்று முறை வைக்க, மற்றவர், “ஹரஹர மகா தேவா” என்று முன்னிலும் அதிகமாய் ஓங்கிக் கூச்சலிடுவர். முடிவாய்ப் பஞ்சுவையர், அன்னதானதா (dh)தா ஸூகீப வா’ என்று முறை வைக்க, மற்றவர், “ததாஸ்து” என்று கூறி முற்றுப்புள்ளி வைப்பர். அதற்குள் சாதமும் மோரும் பரிமாறப்பட்டு விடும். அவ்வளவோடு போஜன நாடகம் ஸமாப்தியாகும்; வயிற்றுப் பளுவைத் தாங்கமாட்டாத சிலர், 4′ உத்தரா போஜனம், உத்தரா போஜனம்” என்று அவசர மாய்க் கூச்சலிடுவார்கள்.”அவாளவாளே வாத்துக்குங்கோ” என்பர் பலர். அந்த சாங்கியமும் நிறைவேறும். உடனே எல்லோரும் குபீரென்று எழுந்து மூட்டையிலிருந்து கொட் டப்பட்ட நெல்லிக்காய்களைப் போல நாலா பக்கங்களிலும் சித ரிச் சென்று கைவாய் முதலியவற்றை அலம்பிக்கொள்ள, எல்லோரையும் ஒரு கோவிலுக்குள்ளோ, பெரிய கட்டிடத்திற் குள்ளோ அடைத்து, சந்தனம், வெற்றிலை பாக்கு முதலி யவை வழங்குவார்கள். அந்த சமயத்தில் மேற்படி பிராம்மணர் கள் இரண்டு கோஷ்டிகளாய், ஆ எதனம் வேதா, ஆ எதனவான் பவதி,” “பசுமான், புஷ்பவான், பிரஜாவான் பவதி, “ஆ எதனம் வேதா,” “ ஆ எதனவான் பவதி என்று மாறி மாறி, முறை வைத்து சமுத்திர கோஷம் செய்து தாம்பூலம் பெற்றுக்கொள்வர். 

முடிவில்,எஜமானோ, அவருடைய காரியஸ்தரோ அந்தக் கட்டிடத்தின் வாசலில் நின்று, உள்ளே இருப்போரை ஒவ் வொருவராய் வெளியில் விட்டு, கையில் அரை ரூபாய், கால் ரூபாய் பூரிதக்ஷிணை கொடுத்து அனுப்பி வைப்பார்கள்.சிலர் படுத்துப் புரள வசதியான திண்ணைகளைத் தேடிச் செல்வர்; சிலர் ஆறு குளங்களைத் தேடி, தேக பாதை நிவர்த்தியின் பொருட்டு ஓடுவார்கள். சிலர் தம் தம் ஊருக்குப் புறப்படுவர். இதுவே ஸந்தர்பணை நடக்கும் தோரணை. 

இம்மாதிரி முதலாவது இரண்டாவது பந்திகள் முடி வடைய, மூன்றாவது பந்தி போஜனம் ஆரம்பமான சமயத் தில் நமது நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி ஐயர்,ஸ்வர்ணாம் பாள் ஆகியோர் வண்டியை விட்டிறங்கி தாமரைத் தடாகத் தில் தமது ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, வேறு ஆடை களை அணிந்து ஆயத்த மாயினர். வண்டிக்காரன் குதிரையை அவிழ்த்து, அதற்குத் தண்ணீர் காட்டி, அதை ஒரு வாதா மரத்தடியில் கட்டி, வண்டியின் அடியிலிருந்த புல்லை எடுத்து அதற்கு முன்னால் போட்டுவிட்டு, குளத்தில் இறங்கி நன்றாய் ஸ்நானம் செய்து, வஸ்திரத்தைக் காயவைத்துக் கட்டிக் கொண்டு, கட்டுக்கட்டாய்ப் பளிச்சென்று விபூதி பூசி ஸந் தர்ப்பணையில் கலந்து கொள்வதற்கு எவ்விதத்திலும் அருக மான வைதிகப் பழமாய் நின்று கொண்டிருந்தான். 

அந்த நிலைமையில், மணியம் கைலாசையர் விரைவாக நடந்து வந்து சத்திரத்து வாசலை யடைந்தார். அவருக்குப் பின்னால் பால் குடத்தைத் தலையில் வைத்திருந்த ஆள் ஒருவனும் வந்து சேர்ந்தான். கைலாசையர் அவனைப் பார்த்து, “அடே முத்து வீரு, சுருக்கா நடந்து, பண்ணையார் ஊட்டுப் பின் பக்கமாப் போயி, சொயம்பாகி சாம்பசிவையனைக் கூப் பிட்டு, பாலை ஒப்பிச்சுடு. இதோ நான் பின்னாலே வறேன். போ, ஓடு” என்றார். அவன் அப்படியே விரைவாகச் சென் றான். 

கிருஷ்ண மூர்த்தி ஐயர் முதலியோர் ஸ்நானம் செய்து, இலக்ஷணமாய் இருந்த காக்ஷியும், தகப்பன் தாய் குழந்தை ஆகிய மூவருடைய அபூர்வமான அழகும், தேஜஸுபம், பெரிய மனிதத் தோற்றமும், அலங்காரமும் எவரையும் பிரமிக்கச் செய்வனவாயிருந்தன வென்பதை நாம் மீண்டும் கூறுவது மிகையாகாது. அவர்களைக் கண்டு முகமலர்ச்சி யடைந்த கைலாசையர், “நேக்கு இப்பதான் மனஸு குளுந்துது, லஜ் ஜைப் பட்டெகளே, இஞ்செ வராமெ ரஸ்தாவோடெ சவாரி வச்சுட்டெகளோன்னு ஸந்தேகப்பட்டுண்டே வந்தேன். ரொம்ப ஸந்தோஷமாச்சு; களம்புங்கோ, போகலாம்” என்றார். உடனே கிருஷ்ணமூர்த்தி ஐயர் சிறிது தயங்கி, “டிரங்குப் பொட்டி ரெண்டிருக்கு; அதை ஆராவது பாத் திண்டிருக்கணும்; என்ன சேயலாமுன்னு யோஜிக்கறேன் ” என்றார். 

கைலாசையார், “அதென்ன மொள்ளச் சொல்றகளே. அது அவசியம் யோஜிக்க வேண்டிய விஷயந்தானே. பொட் டீலே வெலை பெத்த சாமான் எவளவோ இருக்கலாம்.வண்டிக் காரனும் அலுத்து வந்திருக்கான்; பசி வேதனேலெ தூங்கிப் போனாலும் போயிடலாம். ஸத்ரத்துக்குள்ளே ஒரு உள்ளு காலியாயிருக்கு. அதுலெ வச்சுப் பூட்டிண்டு போகலாம்” என்றார். 

கிருஷ்ண மூர்த்தி ஐயர் அதை ஆமோதிக்க, உடனே பெட்டிகள் ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டன. கைலா சையர் வண்டிக்காரனை நோக்கி, “வண்டிக்காரா, நீ இப்பிடியே இரு. நோக்கு சாப்பாடு இஞ்செயே அனுப்பறேன்” என்று அவனை நிறுத்தி விட்டு, மற்ற மூவரையும் அழைத்துக் கொண்டு, அக்கிரகாரத்திற்குள் சென்று ஐயரவாள் வீட்டுப் வந்தலை யடைந்தார். அங்கே பிச்சைக்காரர் வழியை மறைத் துக் கொண்டு நிற்க, கைலாசையர் அவர்களைப் பார்த்து பல மாக அதட்டி, “ஆர்றா அது? எடு செருப்பு; போங்க அந்தண்டை; மனுஷா போறத்துக்குவரத்துக்குக்கூட வழியில்லாமெ சொவரு வச்சுட்டிகளே! போங்கடா அந்தண்டை” என்று கூச்சலிட்டு, வழி விலக்கியபடி மூவரையும் அழைத்துக் கொண்டு குறட்டில் ஏறினார். 

திண்ணைகளில் உட்கார்ந்திருந்த பிராம்மணர்கள் புதிய விருந்தினர் மூவரையும் பார்த்து பிரமிப்பும் வியப்பும் அடைந்து, அவர்கள் பண்ணையாருக்கு உறவினர்களாயிருக்க வேண்டு மென்று கருதி ஒருவரோடொருவர் இரகசியமாய்ப் பேசிக் ெ காண்டனர். கைலாசையர், வழிநெடுக நின்று கொண்டிருந்த பிராம்மணர்களைப் பார்த்து,”ஒத்துங்கோ, ஒத்துங்கோ, நகருங்கோ, வழிவிடுங்கோ” என்று மிக ஆடம் பரமாய் அதிகாரம் செய்தபடி மூவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். 

அந்த மாளிகை ஒன்றுக்குப் பின் ஒன்றாய் இருந்த மூன்று கட்டுகள் உடைய பிரம்மாண்டமான கட்டிடம். ஒவ் வொரு கட்டின் நடுவிலும் சுமார் 20 கஜ சதுரமான முற்ற மும், அதைச்சுற்றி,நாற்புறங்களிலும் மும் மூன்று கஜ அகல முள்ள தாழ்வாரங்களும், பத்துகஜ அகலமுள்ள கூடங்களும் அமைந்திருந்தன. இரண்டிரண்டு ஆள்கள் சேர்த்துப்பிடிக் கத் தக்கவையும், அடியிலும் தலையிலும் பித்தளைப் பூண்கள் கட்டப்பட்டவையுமான, மெருகு கொடுக்கப்பட்ட கருங்கா லித் தூண்கள் கம்பீரமாயும் அழகாயும் நின்று கொண்டிருக் தன. ஒவ்வொரு கட்டிலும் பெரிய பெரிய தலைவாழை இலைகள் 200 க்குமேல் போட இடமிருந்தது. மேற்படி மூன்று கட்டுகளின் மேலும், சன்னகாரை பூசப்பெற்ற வழுவழுப் பான மேன்மாடம் அமைந்திருந்தது. மேன்மாடத்தில் முத லாவது, இரண்டாவது கட்டுகள் மன்மத பீட மகா யோகீசுவரருடைய வாசம், பூஜை முதலியவற்றிற்கு ஏக போகமாய் ஒழித்துவிடப்பட்டிருந்தன. மூன்றாவது கட்டில் பண்ணையாரும் அவருடைய சம்சாரமும் இருந்தனர். மேன் மாடத்தித்தின் முதல் கட்டில் அமைக்கப்பட்டிருந்த பூஜை மண்டபத்தில் யோகீசுவரர் அம்பிகையின் விக்ரகம்,படங்கள், ஸாளிக்ராமங்கள், பூஜைப் பாத்திரங்கள், தீப ஸ்தம்பங்கள் முதலியவற்றை அலங்காரமாய் வைத்துக்கொண்டு, முன்னால் ஒரு பீடத்தில் மான் தோலின்மேல் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அந்த மண்டபம் முழுதிலும் அலங்காரங் களும் புஷ்பங்களுமே மயமாய் நிறைந்து, காண்போர் மன தைப் பிரமிக்கச் செய்தன. புஷ்பம், தசாங்கப் பொடி, கஸ் தூரிக்கதம்பம், பச்சைக்கற்பூரம் முதலியவற்றின் பரிமள கந்தம் மனிதரைப் பரவசப்படுத்தி ஆநந்த மூட்டியது. யோகீசுவரர் இருபத்தைந்து வயதுகூட அடையாத அத பால்ய விட புருஷர். உடம்பு மெருகு கொடுத்த தங்கப் பாளம்போல் அதீத தேஜஸோடு ஜ்வலித்ததன்றி, மிதமான பருமனும் உயரமும் உடையதாயிருந்தது. முகம் அழகாயும், மிக வசீகரமாயும் அமைந்திருந்தது. தலை முழுதும் முண்ட னம் செய்யப்பட்டிருந்தது. காஷாயத்தில் நனைக்கப்பட்ட தகத்தகாயமான முழுப்பட்டு வஸ்திரத்தை அவர் இடுப்பில் தரித்து தலையிலும் போட்டு மறைத்துக் கொண்டிருந்தார். முகம், மார்பு, கைகள் முதலிய பாகங்களில் விபூதி பளிச் சென்று பிரகாசித்தது. நீளமாயிருந்ததும், உச்சியில் கிருஸ் தவர் சிலுவைபோல குறுக்குக் குச்சி கட்டப் பெற்றதுமான ஒரு தண்டம் அவருடைய இடது தோளில் சார்த்தப்பட் டிருந்தது. எதிரில் செம்புஸ்தாலி, பஞ்சபாத்திரம், உத்தி ரணி முதலியவை காணப்பட்டன. அன்றைய தினம் காலை முதல் அம்பிகைக்கு லக்ஷார்ச்சனை முதலியவற்றை நடத்தி விட்டு, எல்லோருக்கும் குங்குமப் பிரஸாதங்கள் வழங்கிவிட் தமது குக்ஷி பாதையை நிவர்த்திசெய்துகொண்டு உட்கார்ந்த படியே அப்போதுதான் யோகீசுவரர் யோக நித்திரையில் ஆழ்ந்தார். வெள்ளித் தடி தாங்கிய கட்டியக்காரர் இருவர் வாசற்படியில் மறைவாக இருந்தனர். அந்த மேன்மாடத்தின் இரண்டாவது கட்டில், அவருடைய முக்கிய சிஷ்யர்களும், நிர்வாகஸ்தர்களும் அவருடைய விலையுயர்ந்த பெட்டி,பேழை, கஜானாக்கள் முதலியவற்றை வைத்துக்கொண்டு தம் தம் காரி யங்களை கவனித்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரு கட்டிற் கும் மறு கட்டிற்கும் வாசற்படியைத் தவிர, வேறு ஜன்னல் கள் முதலிய திறப்புகள் இல்லையாதலால், ஒரு கட்டில் இருப் பவர் என்ன செய்கிறார்கள் என்பது மறுகட்டில் இருப்பவர் களுக்குத் தெரிய வகையில்லை. கீழே இருந்த ஒவ்வொரு கட்டிலிருந்தும், அததற்குமே லிருந்த மேன்மாடத்திற்கு ஏற ஒவ்வொரு கட்டின் தாழ்வாரத்திலும் படிக்கட்டு அமைக்கப் பட்டிருந்தது. கிருஷ்ண மூர்த்தி ஐயர் முதலிய மூவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கைலாசையர் அவர் களை நேராய் இரண்டாங் கட்டிற்கு அழைத்துப்போய், அங் கிருந்த படிக்கட்டின் வழியாக மேலே நடத்திக்கொண்டு போனார். ஏனென்றால், தாங்கள் முதலில் ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு அதன் பிறகு போஜனத்தை முடித்துக் கொள்ள உத்தேசிப்பதாய் கிருஷ்ணமூர்த்தி ஐயர் கைலா சையரிடம் தெரிவித்தாராதலும், ஸ்வாமிகளை தரிசிக்க யாரே னும் விரும்பினால், அவருடைய முக்கிய நிர்வாகஸ்தரிடம் முதலில் தெரிவிக்க, அவர் ஸ்வாமிகளிடம் போய் அநு மதி பெற்றுவந்த பிறகே, எவரும் பூஜை மண்டபத்திற்குப் போக வேண்டுமாதலாலும், கைலாசையர் அம்மூவரையும் இரண்டாவது படிக்கட்டின் வழியாக அதற்குமே லிருந்த உப் பரிகைக்கு அழைத்துக்கொண்டுபோய், அங்கு தனிமையான ஓர் அறையிலிருந்த முக்கிய நிர்வாகஸ்தரைக் கண்டு கிருஷ்ண மூர்த்தி ஐயரைப்பற்றிய வரலாறு முழுதையும் கூறினார். அப்போது ஸ்வாமிகள் யோக நித்திரையி லிருந்தாரென்பது மேற்படி முக்கிய நிர்வாகஸ்தருக்குத் தெரியுமாதலால், அப் போது ஸ்வாமிகளின் தரிசனம் கிடைக்காது என்று கூற உத்தேசித்த முக்கிய நிர்வாகஸ்தர் கிருஷ்ணமூர்த்தி ஐயர் ஸ்வர்ணாம்பாள், சுந்தரி ஆகிய மூவருடைய அபூர்வமான தேஜஸையும், ஜ்வலிப்பையும் கண்டு பிரமித்துப் போனாராத லால் அவர் தமது வாயைத் திறக்கவில்லை. முக்கியமாய் அவர் ஸ்வர்ணாம்பாளின் ஒப்புயர்வற்ற கட்டழகைக் கண்டு தேனில் வீழ்ந்த எறும்புபோலாய், இரண்டொரு விநாடி மௌனமா யிருந்தபின் கைலாசையரைப் பார்த்து, “ஸ்வாமிகள் யோகாப்பியாசம் பண்ணிண்டிருக்கா. திருநேத்ரம் படைச் சவாளா யிருந்தாக்கூட இந்த ஸந்தர்ப்பத்துலெ அவாள் தரி சனம் கொடுக்க மாட்டா. ஆனா இவாளோடெ வாலாற் றைக் கேட்ட மொதக்கொண்டு எப்பிடியாவது பாடுபட்டு ஸ்வாமிகளோடெ தரிசனம் பண்ணி வைக்கணுமின்னு நேக் குள்ளே ஒரு சிந்தனை உண்டாறது. எல்லாரும் இப்பிடியே இருங்கோ. நான் போயி ஸந்தர்ப்பம் எப்பிடி இருக்குன்னு பாத்துண்டு வறேன்” என்று கூறி, அவர்களை அவ்விடத்தி லேயே நிறுத்திவிட்டு, முதல் கட்டில் நுழைந்து, ஸ்வாமிகள் உட்கார்ந்தபடி தூங்கிக்கொண்டிருந்த இடத்தை அடைந்து, பத்து நிமிஷகாலம் கழித்து புன்னகை தவழ்ந்த முகத்தோடு திரும்பி வந்தார். வந்தவர் கைலாசையரை நோக்கி தாத்துப் பண்ணையார் ஸ்வாமிகளை தரிசிக்கப் பிரயத்தனப்பட் டிருந்தாக்கூட, இந்த அசந்தர்ப்ப வேளேலெ, அவரோடே பிரார்த்தனை கைகூடி இருக்காது. நான் போன ஸமயத் துலே ஸ்வாமிகள் ஆசமனம் பண்ணறத்துக்காகக் கண்களைத் தறந்தா. நானும் உள்ளே நொழைஞ்சேன். எங்கே போனா லும் புண்ணியாத்மாக்களுக்கு ஜெயந்தான். மத்தவாள் வருஷக் கணக்குலெ பகீரதப் பிரயத்தனம் பண்ணாக்கூட வழிவிடாத இரும்புக்கோட்டையா யிருந்தாலும், புண்ணி யாத்மாக்களைக் கண்டா ஒடனே வெண்ணெபோலெ எளகி எடங்குடுக்குமுன்னு பெரியவா சொல்லுவா. அதை இப்ப இவா விஷயத்துலெதான் நான் நிதரிசனமாப் பாக்கறேன். என்னமோ தெரியல்லே; ஸ்வாமிகள் இப்ப ரொம்ப ஸுமு கமா இருக்கா. அது இவாளோடெ பாக்யந்தான்னு நெனைக் கறேன். ஆனா ஒரு விஷயம். ஸ்வாமிகள் நிஷ்டையிலெ இருக்கச்சே, பொண்ணாப் பொறந்தவாளுக்கு தரிசனம் குடுக் கற வழக்கமில்லெ. நீங்க ஒரு காரியம் சேயுங்கோ. அம்மாள்  பூஜை மண்டபத்துக்கு வெளீலெ நிக்கட்டும். ஐய ஏவாள் கொழந்தையை மாத்தரம் எடுத்துண்டு வாங்கோ. சந் தர்ப்பம்போலெ பாத்துக்குவோம்” என்றார். 

கிருஷ்ணமூர்த்தி ஐயர் சுந்தரியைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாராதலால், அவர் அப்படியே முன் கட்டுப் பக்கம் நடந்தார். அவருக்குப் பின்னால் ஸ்வர்ணாம்பாள் சென்றாள். முக்கிய நிர்வாகஸ்தர் அவர்களுக்கு வழிகாட்டி முன்னால் நடந்தார். கைலாசையர் அவர்களுக்குப் பின்னால் தொடர்ந்து சென்றார். இரண்டொரு நிமிஷத்தில் எல்லோ ரும் பூஜை மண்டபத்திற்கு வெளியில் இருந்த தாழ்வா ரத்தை யடைந்தனர். கைலாசையரையும், ஸ்வர்ணாம்பாளை யும் அவ்விடத்திலேயே நிற்க வைத்துவிட்டு, முக்கிய நிர்வா கஸ்தர், சுந்தரியைத் தூக்கிக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி ஐயரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். பின்னவர் பூஜைமண்டபத்தின் வைபவத்தையும், பால சந்நியாசிகளின் அதிஜாஜ்வல்லியமான தெய்விக தேகஜஸையும் கண்டு பிரமித்து ஆநந்த பரவசமடைந்து பக்திப் பெருக்கினால் நெக்குவிட் டிளகி ஸ்வாமிகளுக்கு சிறிது தூரத்தில் நின்றபடி “பாப்பா, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண் என்று கூறி குழந்தை யைக் கீழே குப்புறப் படுக்கவைத்து, தாமும் கீழே வீழ்ந்து சாஷ்டாங்கமாகப் பன்முறை நமஸ்காரம் பண்ணி, அபிவாத சொல்லிவிட்டுக் கைகட்டி வாய் புதைத்து நிற்க, பெரும் போதையில் இருப்பவர் நலிந்து கண்களைத் திறப் பதுபோல, யோக நிஷ்டையிலிருந்த ஸ்வாமிகள் மிகப் பாடு பட்டுத் தமது கண்களைத் திறந்து பார்த்து, ஆகா! ஆர் இவா! வா ! கொஞ்ச நாழிக்கி மின்னே என் யோக நிஷ்டையில் பரமேச்வரனும், பார்வதியும், பாலாம்பிகையும் காக்ஷிகொடுக் கறாப்புலே என் அகக்கண்ணால் கண்டேன். பார்வதி மாத்ரம் அந்தரத்யான மாய்விட்டாள். மத்த ரெண்டுபேரும் சாக்ஷாத் அப்படியே இதோ நேருலெ வந்திருக்காளே!” என்று தமக்குத்தாமே உரக்கக் கூறிக்கொண்ட பின்னர், கிருஷ்ணமூர்த்தி ஐயரைப் பார்த்து, “கொழந்தை கிருஷ்ண மூர்த்தி, ஒன்னையும், ஒன் ஸம்சாரம் கொழந்தைகளையும் அம் பாள் குளுாக் கடாக்ஷித்திருக்கா; கிரகசாரத்துனாலே இப்ப கொஞ்சம் சலனம் ஏற்பட்டிருக்கு. ஆனாலும், அம்பா ளோடெ கிருபை ஒங்கிளுக்கு ஸம்பூர்ணமா உண்டாகப் போறது. எதைப் பத்தியும் இனி நோக்குக் கவலையே வாண் டாம். தீர்க்காயுஷ்மான்பவா” என்று கூறி அம்பாளுடைய பாதத்தடியிலிருந்து குங்குமம், புஷ்பம் முதலியவற்றை சிறி தளவு எடுத்து கிருஷ்ணமூர்த்தி ஐயரிடத்தில் கொடுக்க, அவர் குங்குமத்தைத் தமது நெற்றியில் இட்டுக்கொண்டு, குழந்தை யின் நெற்றியிலும் இட்டு, புஷ்பத்தைத் தமது தலையில் சூடிக் கொண்டு, குழந்தையின் தலையிலும் சூட்டிவிட்டு, கைகட்டி வாய்பொற்றி பக்தி பரவசராய் நிற்க, மேலும் ஸ்வாமிகள் பேசத் தொடங்கி, “குழந்தை கிருஷ்ணமூர்த்தி, நீ மகா பாக்யவான். ஒன் கொழந்தை சுந்தரி சாக்ஷாத் பாலாம்பி கைபோலவே இருக்காள். ஸாமுத்ரிகா லக்ஷணங் களுக்கு அல்பமும் பழுதில்லாமல் பொண் கொழந்தைகள் கெடைக்குமானால் அவாளை அம்பிகை ஸ்தானித்தில் வச்சுப் பூஜை பண்ணும்படி சாஸ்தரம் சொல்லறது. இந்த மாதிரிக் கொழந்தை ஆப்பிடுமான்னு நான் பல வருஷமாப் பாக்க றேன். எங்கெயும் அகப்படல்லெ. இப்பதான் அந்த பாக் யம் நேக்குக் கெடைச்சுது. இந்தக் கொழந்தையை வச்சு நான் பூஜைபண்ண உத்தேசிக்கறேன். இண்ணைய பூஜை முடிஞ்சு போச்சு. நாளைய தினம் காலையிலெ அதை வச்சுக் கலாமுன்னு யோஜிக்கறேன். நீங்கள் இருந்து அம்பாள் கிரு பைக்குப் பாத்ரராய், அதுக்குமேல் ஊருக்குப் போகலாம்” என்றார். 

உடனே கிருஷ்ணமூர்த்தி ஐயர் ஸ்வாமிகளின் உத்தரவை மறுக்க மாட்டாதவராய், “அப்பிடியே ஹித்தமாகக் காத்துண்டிருக்கேன்” என்றார். 

அப்போது சிறிது தூரத்திற் கப்பால் வணக்க ஒடுக்க மாய்க் கைகட்டி, வாய்பொற்றி நின்றுகொண்டிருந்த முக் கிய நிர்வாகஸ்தர், “ஐயரவாளோடெ ஸம்சாரம் தரிசனத் துக்காக வெளிலே காத்துண்டிருக்கா. ஸந்நிதானத்துலெ நியமனமாகணும் என்று மிக விநயமாய்க் குனிந்து விக்ஞா பனம் செய்துகொள்ள, ஸ்வாமிகள் திடுக்கிட்டு சிறிது மௌனமாயிருந்த பின், “இது ஸம்பிரதாயத்துக்கு விருத்தமானது. இருந்தாலும் பாலாம்பிகைக்குத் தாயார் சாக்ஷாத் பரமேச்வரிக்கு ஸமானமல்லவா. சரிபோய் அனுப்புங்கோ என்று கிருஷ்ணமூர்த்தி ஐயரை நோக்கிக் கூறினார். 

உடனே கிருஷ்ணமூர்த்தி ஐயரும், முக்கிய நிர்வா கஸ்தரும் வெளியில் சென்றார்கள். அதுவரையில் உள்ளே நிகழ்ந்த சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு மறைவில் நின்றுகொண்டிருந்த ஸ்வர்ணாம்பாளை முக்கிய நிர்வா கஸ்தர் அழைத்துக்கொண்டு மறுபடி உள்ளே சென் றார். கிருஷ்ணமூர்த்தி ஐயர் சுந்தரியை வைத்துக் கொண்டு வெளியிலேயே நின்றார். ஸ்வர்ணாம்பாள் நாணிக் கோணி உடம்பை நெளித்துக் குனிந்து நிமிர்ந்து மான்போல் மருண்டு மருண்டு உள்ளே சென்று, யோகீசுவ ருக்கு சிறிது தூரத்தில் நின்று, மண்டியிட்டுப் பன்முறை அஞ்சலி செய்து எழுந்து கைகூப்பி வணக்க வொடுக்கமாய்க் குனிந்து நின்றாள். ஒரே அழகுத்திரளாய், இன்பமயப் பது மையாய், மின்னற்கொடி போல வந்து எதிரில் நின்ற வடி வழகியை யோகீசுவர் அப்போது ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவள் வாசற்படியில் நுழைந்த போதும், நமஸ்காரம் செய்த போதும் அவர் கீழ்ப்பார்வையாய் அவளுடைய உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் இரண்டுமூன்றுதரம் நன்றாகக் கடா க்ஷித்து விட்டாராதலால், அவள் எழுந்து நின்றகாலத்தில் ஸ்வாமிகள் தமது கண்களை மூடியபடியே குங்குமம் புஷ்பம் கியவற்றை யெடுத்து மௌனமாய் இருந்தவண்ணம் கையை ட்டினார். அப்போது பின்னாலிருந்த முக்கிய நிர்வாகஸ்தர், “அம்மா, பிரஸாதம் வாங்கிக்குங்கோ.” என்று ஊக்கினாரா தலால், ஸ்வர்ணாம்பாள் ஸ்வாமிகளுக் கருகில் போய் பிர ஸாதம் பெற்றுக் கொண்டாள். 

உடனே யோகீசுவரர் முக்கிய நிர்வாகஸ்தரைப் பார்த்து, “இந்த அம்மாளோடெ கொழந்தையை வச்சு நாளையதினம் பூஜைபண்ணும்படி அம்பாளோடே ஆக்ஞை ஆயிருக்கு. இவாளோடெ பர்த்தா அதுக்கு எணங்கி இருக்கா. நாளையை தினம் பூஜை முடியறவரையிலே இந்தம்மா தன் கொழந்தையெ வச்சுண்டு, சுத்தமான எடத்துலெ இருக்கணும். இண்ணை ராத்திரி தாயும் கொழந்தையும் புருஷாமேலே படாமெ தனியாப்படுத்துக்கணும். இந்த மாதிரி பூஜை நடக்கற காலத் துலெ, மொத நாள் ராத்திரி கொழந்தைக்கித் தாயார் படுத் துண்டிருக்கச்சே, ஸொப்பனத்துலேயோ நேருலெயோ அம் பாள் பிரஸன்னமாய்ப் பரீக்ஷிக்கிறதுண்டு. இதுக்குமின்னெ பல எடத்துலெ இந்த மாதிரி பூஜை நடந்த காலத்துலெ, அம்பாள் அப்பிடித்தான் பிரஸன்னமாய் சோதனை பண்ணினா அது போலயே, இப்பவும் ஒரு வேளை நடக்கலாம்; அம்பாள் ஆணுமல்ல, பொண்ணுமல்ல, அலியுமல்ல, ஆணாகவும்மாறு வாள், பொண்ணாகவும் மாறுவாள், அலியாகவும் மாறுவாள். எந்த ரூபத்துலெயும் அவள் பிரஸன்னமாவாள்; அதைப் பாத்து இந்தம்மாள் பயப்படாமெ, கூச்சப் போடாமெ,பய பக்தியோடெ ஏந்திருந்து நமஸ்காரம் பண்ணி, அம்பாளுக் குத் திருப்தி உண்டாறாப்லெ நடந்துக்கணும். ஜாக்ரதை;ஏமா றிப் போகவாண்டாம்.” என்றார். 

உடனே முக்கிய நிர்வாகஸ்தர், “ஆமா, வாஸ்வந்தான். போன தபா அம்பாள் ஒரு ஸுமங்கலி மாதிரி வந்து வாயிலே தம்பலத்தை உமிஞ்சுட்டுப்போனான்னு, அந்தக் கொழந்தையோடெ தாயார் சொல்லல்லியோ” என்றார். 

யோகீசுவரர், “அது அவாளவாளோடெ பக்தியைப் பொருத்தது. இவாளுக்கு நெஜமான பக்தி இருந்தா, அம் பாள் தன் பிரியத்தை எப்பிடி வேணாலும் காட்டுவா; தூர நின்னாலும் நிப்பா; ஆலிங்கனம் பண்ணினாலும், பண்ணு வா; முத்தம் கொடுத்தாலும் கொடுப்பா; அது அம்பாள் பிரி யத்தையும், இவாளோடெ பக்தியையும் பொருத்தது. ஆனால், அம்பாள் சேவதெல்லாம் அத்தனையும் இவாளுக்கு அமோக மான க்ஷேமத்தை உண்டாக்கும். இவா பயப்படாமெ, வாயைத் தறக்காமெ அம்பாள் மஸு போலெ நடந்து அம் பாளை சந்தோஷப்படுத்தி அனுப்பிச்சுட்டா, ஜெயிச்சமாதிரி தான். நாளைய பூஜைக்கு பூர்த்தியான பலன் ஹித்திக்கும்” என்றார். 

உடனே நிர்வாகஸ்தர் ஸ்வர்ணாம்பாளைப் பார்த்து, “ஏனம்மா ஸந்நிதானத்துலெ ஏற்பட்ட வாக்கைக் கேட்டுண்டிகளா?” என்றார். 

பெண்மணி தனது கைகளைக் குவித்தபடி “சரி; அப் பிடியே நடந்துக்கறேன்” என்று கூறினாள். 

யோகீசுவரர் அப்போதும் கண்களைத் திறவாமல் நிர் வாகஸ்தர் இருந்த பக்கம் தமது முகத்தைத் திருப்பி, “சரி; நேக்குக் காலஹரணமாறது. மறுபடி நிஷ்டைபண்ணனும்; ராத்திரி இவாளுக்கு மடியான எடத்துலே படுக்கைக்கு ஏற்பாடு பண்ணும். போகலாம்” என்றார். 

உடனே நிர்வாகஸ்தர் ஸ்வர்ணாம்பாளை அழைத்துக் கொண்டு வெளியில் வந்து சேர்ந்தார். உள்ளே நடந்த சம்பாஷணை வேண்டுமென்றே தணிவான குரலில் நடத்தப் பட்ட தாகையால் அதன் விவரம் கிருஷ்ண மூர்த்தி ஐபருக்கு சிறிதும் தெரியாமல் போயிற்று; நிர்வாகஸ்தர் அவ்விடத்தில் நின்ற கைலாசையரிடம் மறு நாள் பாலாம் பிகை பூஜை நடக்க ஸ்வாமிகளின் ஆக்ஞை பிறந்திருப்பதை யும், அதற்கு கிருஷ்ணமூர்த்தி ஐயர் இணங்கி இருப்பதை யும் கூற, கைலாசையர் அதைக் கேட்டு, மிகுந்த களிகொண் டவராய் அவர்களை அழைத்துக் கொண்டு போய் தனியான இடத்தில் உட்காரவைத்து விமரிசையாக போஜனம் செய்து வைத்து, அந்த சந்தோஷச் செய்தியை பண்ணையார், அவரு டைய சம்சாரம் ஆகியோரிடத்தில் தெரிவிக்கும் பொருட்டு அவர்கள் இருந்த இடத்திற்குச் சென்றார். அவர்கள் எல்லோ ரும் அப்பால் போனவுடன் முக்கிய நிர்வாகஸ்தர் மறுபடியும் பூஜை மண்டபத்தை யடைந்து யோகீசுவரரண்டை போய் நின்று சம்பாஷிக்கத் தொடங்கினார். 

யோகீசுவரர்,”இந்த எடம் ஸௌகரியமா இருக்கோன் னோ?” என்றார். 

நிர்வாகஸ்தர், “பேஷான எடம். ஒவ்வொரு கட்டும் ஒவ் வொரு தனித்தனி ஊருமாதிரி இருக்கு. கொலைபண்ணாக் கூடக் கேக்கறவா இல்லை. கீழே தண்ட பிண்டம் கொட்டிக்கற காக்காப்பாளைய மெல்லாம் ஸாயாங்காலத்துக் குள்ளெ போன எடம் தெரியாமெப் பறந்து போம். இந்தாத்தைச் சேந்தவா ஒரு நாலஞ்சு பேர் எங்கயோ ஒரு மூலேலெ இருப் பா. எல்லாத்துக்கும் ராத்திரி நேவேத்தியத்துக்குப் பஞ்சா மிர்தம் பண்ணச் சொல்றேன். இவா மூணுபேருக்கும் இந் தாத்து மனுஷாளுக்கும் குடுக்கறத்துலெ கொஞ்சம் தூக்க மருந்தெக் கலந்துக் குடுத்துட்றேன். எல்லாரும் வாயைப் பொளந்துண்டு லக்ஷணமாத் தூங்கட்டும். இதோ பக்கத்துலெ ஒரு உள்ளு இருக்கு. அதுலெ அந்தப் பொண் படுத்துக்க ஏற்பாடு பண்ணறேன். நீங்க அம்பா வேஷம் போட்டிண்டு பிரத்தியக்ஷமாக் குளுரக் கடாக்ஷியுங்கோ” என்றார். 

யோகீசுவரர், ‘சரி; தலைக்கு வச்சுக் கட்டிகற டோப்பா, நல்ல பட்டுப் பொடவை, ரவிக்கை, நகைகள் எல்லாத்தியும் மத்தவாளுக்குத் தெரியாமெ எடுத்துண்டு வந்து அம்பாள் பீடத்துக்குப் பின்னாலெ வச்சுடு.” என்றார். 

நிர்வாகஸ்தர், “சரி; அப்பிடியே ஆகட்டும். ஒங்கிளுக்கு ராத்திரிக்கு என்ன ஆகாரம் கொண்டுவரட்டும்?” என்றார். 

யோகீசுவரர்,”நான் எப்போதும் ராத்திரி சுத்தப்பட் டினியா யிருக்கறவன்ங்றது எல்லாருக்கும் நண்ணாத்தெரியும். நீ ஒரு காரியம் பண்ணு. அம்பாளுக்கு நேவேத்தியம் பண்ண மனு சொல்லி, வாதாப்பருப்பு ஹல்வா ஒரு தேங்கா யள வும், கெட்டியாக் காச்சினபால் ஒரு அரைப்படியும், பஞ்சா மிர்தமும் கொண்டுவந்து வைக்க ஏற்பாடு பண்ணு ணு என்றார்.

நிர்வாகஸ்தர், “சரி; அப்பிடியே ஆகட்டும்; நீங்க நிஷ்டை பண்ணுங்கோ. நான் போறேன்’ என்று கூறிவிட்டு, மெதுவாய் நழுவி வெளியில் போய்விட்டார். 

அதுவரையில் ஸ்வாமிகளுக்கு ஏற்பட்டிருந்த தூக்கக் கலக்கம் போன இடம் தெரியாமல் பறந்துபோய்விட்டது. அவர் இரவு எப்போது வரப்போகிறது என்ற ஜெபத்தில் மும்முரமாய் ஆழ்ந்துபோய்த் ததேவத்யானமாய் உட்கார்ந்து கொண்டிருந்தார். 

– தொடரும்…

– ஸதாநந்த போதக சாமியார் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1933, எம்.எஸ்.ராமுலு கம்பெனி, மதராஸ்.

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *