வைரமும் கூழாங்கல்லும்





ஞானம் பெற வேண்டும் என்ற விருப்பத்தில் ஒரு பெண் துறவி இந்தியாவுக்கு வந்தாள். ஒரு பெருந்துறவியைக் கண்டு அவருடைய ஆசிரமத்திலேயே அவரிடம் மாணவியாக இருந்து வந்தாள். அந்தத் துறவியிடம் அவள் விரும்பிய ஞானம் பூரணமாக கிடைக்கவில்லை என்று எண்ணிணாள்.
ஆகவே அங்கிருந்து புறப்பட்டுப் பல இடங்களிலும் அலைந்து, இமயமலைச் சாரலில் ஒரு பெரிய மகான் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்குச்சென்று சில காலம் அவருடைய ஆசிரமத்திலேயே தங்கினார்.
ஒரு சமயம், பக்கத்து ஊர்களைப் பார்க்க மகான் புறப்பட்டபோது, சீடர்கள் பலருடன் அம்மையாரும் உடன் சென்றார். அப்போது –
நடைபாதையில் மாணிக்கக் கல் ஒன்று கேட்பாரற்றுக் கிடப்பதை மகான் பார்த்தார். அவருக்கு அதன்மீது ஆசையோ, எடுக்கவேண்டும் என்ற எண்ணமோ சிறிதும் இல்லை. ஆனாலும் தனக்குப் பின்னால் வரும் துறவிகளில் யாரேனும் பார்த்தால் ஆசையினால் சபலம் அடைவரோ என்று எண்ணி, உடனே அதை மண்ணைப் போட்டு மூடி விட்டுச் சென்றார்.
உடன் சென்ற பெண் துறவி இதைப் பார்த்து விட்டார். மண்ணை விலக்கி, அந்த மாணிக்கக் கல்லின் மேல் ‘தூ’ வென்று காரி உமிழ்ந்துவிட்டுத் திருப்பிப் பாராமல், ஆசிரமத்துக்கும் செல்லாமல், தன் நாட்டுக்கே புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
அவர்கள் நாட்டில் பெண் துறவி திரும்பி வந்ததற்கு அனைவரும் காரணம் கேட்டபோது, அவள் சொன்னான் “உண்மையானதுறவி உலகில் எவருமே இல்லை. இந்தியாவில் இமயமலைச்சாரலில் உள்ள மகானால்கூட கூழாங் கல்லையும், மாணிக்கக் கல்லையும் ஒன்றாக மதிக்க முடியவில்லை. அவர் அதன்மேல் மயங்கி மண்ணிட்டு மூடினார். இரண்டையும் ஒன்றாகக் காணும் உண்மைத் துறவியிடம் தான் மெய்ஞ்ஞானமும் கிடைக்கும். அது எப்போது?” என்று ஏங்கினாள்.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை