கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 961 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘அது அதற்கு அந்தந்த வேளையென்று ஈசன் நியமித்திருக்கையில், ஒரு காரியம் கைகூடுதலுக்குச் சகுனம் தடையாக இருக்கின்றன என்று பேசுதல் நிரீச்சுவர வாதஞ்ச சார்ந்ததாகும்………’ 

அவாவின் காரிய சித்தி குதிர்ந்து வருவதாகக் கறுத்த பூனைக்குத் தோன்றியது. 

இரையாக்க இச்சை வளர்ந்திருந்த அதே எலி வீதியைக் கடந்து எதிர் வீட்டிற்குள் நுழைவதை அது கண்ணாரக் கண்டது. 

ஆசையும் அவதியும் உந்த, பூனை எதிர்வீடு நோக்கிப் பாய்ந்தது. 

அப்பொழுதுதான் எதிர்வீட்டுக் கிழான் வீதியில் இறங்கிக் கெ ண்டிருந்தான். மொட்டைத் தலை. நெற்றியில் விபூதிப் பட்டை. கழுத்திலே ருத்திராட்ச கொட்டை. கால்களில் மிதியடிக்கட்டை. 

அவனுடைய கண்களில் முதன்முதலில் தென்பட்டது பாய்ந்துவந்த கறுத்த பூனை தான். 

பூனையிலும் பார்க்க அவன் முகம் கறுத்தது. 

‘சனியன் பிடித்த பூனை!’ எனச் சினத்துடன் வைதான். 

மான உணர்வில் பூனையின் மீசை துடித்தது. 

*மானிடனே! ஏன் என்னை அநியாயமாக வைகின்றாய்?’- பூனையின் கேள்வி, 

மங்கள் காரியமொன்று இயற்ற வெளியே புறப்பட்டால், கறுத்த பூனையாகிய நீ, அபசகுனமாக என் முன்னால் வந்து நிற்கின்றாயே!‘ எனச் சலிப்புடன் கூறினான். 

‘அப்படியா சங்கதி? உன் வீட்டிலுள்ள எலியைப் பிடிக்க நான் எத்தனையோ தடவை முயன்றேன். ஒவ்வொரு தடவையும் நீ குறுக்கிட்டாய். உன் குறுக் கீட்டினால் காரியம் கெட்டு விட்டதென நான் முணு முணுத்திருக்கிறேனா? வேளை கைகூடவில்லை என்றே நான் சமாதானம் அடைந்து வருகிறேன். அது அதற்கு அந்தந்த வேளையென்று ஈசன் நியமித்திருக்கையில், ஒரு காரியம் கைகூடுதலுக்குச் சகுனம் தடையாக இருக்கிறது என்று பேசுதல் நிரீச்சுவரவதாஞ் சார்ந்ததாகும். சைவப் பழமாக வேடந்தரித்து இப்படி நடந்துகொள்ளும் உங்களால் பூனை இனத்திற்கு மாறாத களங்கம் ஏற்பட்டுள்ளது’ எனப் பூனை ஆத்திரத்தைக் கொட்டியது. 

மனிதன் நாணத்தினால் தலை குனிந்தான்!

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

எஸ்.பொன்னுத்துரை எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *