வேறு





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘நீங்கள் சுவாமியைப் புத்தியால் ஏமாற்றப் பார்க்க, அவர் உங்களைத் தன் சக்தியால் ஏமாற்றி விட்டார் போலிருக்கிறது…’

அவன் ஈசுவர தரிசனத்திற்காக ஆலயஞ் சென்றிருந் தான். அவனுடைய பட்டிக்காட்டு மனைவி வெளியே காத்திருந்தாள்.
வெகு நேரமாகியது. முகமெல்லாம் சிரிப்பாகப் பொலிய அவள் ஆலயத்திலிருந்து மீண்டான்.
‘என்ன விசேடம்? வெகு சிரிப்பு…. ‘ என்றாள் மனைவி
‘கடவுளைக் கண்ணாரக் கண்டால் ஆனந்தமாக இருக்காதா என்ன?’ என்றான் கணவன்.
ஆவல் மீதூர, ‘அவர் எப்படி இருந்தார்? என்ன கூறினார்’ எனக் கேட்டாள்.
‘ஆயிரம் சூரியர்கள் ஒரே சமயம் உதித்ததுபோல அவர் ஜெகஜோதியாகக் காட்சி தந்தார். திருவாய் திறந்து அருள் பேசினார். குமின் நகையே அவராகி, என்னைப் பார்த்து, ‘பக்தா! முதலில் உன் ஆணவத்தை உடை’ என்றார். நான் தேங்காயை எடுத்துச் சிதற அடித்தேன்….’
‘உன் உள்ளத்தை என் பாதங்களிலே அர்ப்பணிக்கவும்‘ என்றார். நான் இரு கைகள் நிறைய மலர்களை அள்ளி அவருடைய பாதங்களிலே சொரிந்தேன்…., ஞானச் சுடரிலே நீ ஒன்றுதல் வேண்டும்’ என்றார். நான் சூடத்தை எரித்துக் காட்டினேன். ஒரு கணம் சிந்தனையில் ஆழ்ந்தார். மறுகணம், என் கிரியைகளுக்கான விளக்கத்தைக் கேட்டார். நான் ‘ஈசா! நீ அளித்துள்ள அறிவின் துணைபற்றி உருவகமாகச் சிந்திக்கவும், அவற்றைச் செயற்படுத்தவும் கற்றுக் கொண்டேன். என் ஆணவத்தை உடைத்ததற்கு அடையாள மாகத் தேங்காயை உடைத்தேன். என் இதயத்தை அர்ப்பணிக்கும் கிரியையாக மலர்களை வைத்தேன். ஈற்றில் தங்களுடைய பக்தியிலே தன்னையே அழித்துக்கொள்ளும் சூடத்தைக் காட்டினேன்….’ என விளக்கினேன். ஈசன் மகிழ்ச்சியுடன் முறுவலித்தார். ‘பக்தா! உன் சாமர்த்தியத்தை மெச்சினேன். நீ சென்று வா’ என்றார்….’ கணவன் நடந்தேறிய வர்த்தமானத்தைக் கூறி முடித்தான்.
‘உங்களுடைய சாமர்த்தியத்தைச் சுவாமியே மெச்சினார் என்றால் பெரிய சாதனைதான்….அது சரி, என்ன வரம் பெற்றீர்கள்?’
‘வந்து….வரமா? ஈசன் என்னைப் புத்திசாலியெனப் புகழ்ந்ததும் நான் மெய்மறந்து போனேன். வரம் கேட்கும் விஷயம் நினைவிற்கு வரவில்லை. அதற்கிடையில் ஈசன் மறைந்துவிட்டார்….’
‘நீங்கள் சுவாமியைப் புத்தியால் ஏமாற்றப் பார்க்க, அவர் உங்களைத் தன் சக்தியால் ஏமாற்றி விட்டார் போலிருக்கிறது’ எனக்கூறிய பட்டிக்காட்டு மனைவி, மனம் சவுங்கினாள்.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.