கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 8,261 
 
 

ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உயர்ந்து விட்ட தொழிலதிபர் சுந்தரம், தனது கார் ஓட்டுநர் பரமன் காலையில் வராமல் போனதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

பத்துக்கு மேற்பட்ட கார்கள் இருக்கின்றன. பல ஓட்டுநர்கள் கார் ஓட்டக்காத்திருக்கின்றனர். ஆனால் சுந்தரத்தின் மனம் ‘பரமன் தான் ஓட்ட வேண்டும், பரமனோடு சென்றால் தான் போகும் காரியம் வெற்றியாகும்’ என்று அவரைத்தொந்தரவு செய்தது. வேறு ஓட்டுநரை அழைத்துச்செல்ல பிடிவாதமாக மறுத்தது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

‘நம்பிக்கைக்குரியவர், நல்லவர், கை ராசிக்காரர், யாரைப்பார்த்தால் காரை நிறுத்த வேண்டும், யாரைப்பார்த்தால் நிறுத்தக்கூடாது என்பதை நூறு சதவீதம் அறிந்தவர். முப்பது வருடங்களுக்கு மேலாக முதலாளி சாதாரண நிலையிலிருந்த போதிலிருந்து கூடவே இருப்பவர், சம்பளம் உயர்த்திக்கேட்காதவர், மாத சம்பளத்தை வருடமே ஆனாலும் கொடுக்கும் வரை கேட்காதவர், பல இடங்களை அத்துப்படி தெரிந்து வைத்திருப்பவர், கை சுத்தமானவர்’ என உயர்ந்த குணங்களுக்குச்சொந்தக்காரராக உள்ளவரை நிறுவனத்தில் மட்டுமல்லாமல், முதலாளியின் வீட்டிலும் பிடிக்காதவர் யாருமில்லை.

வீட்டுப்பெண்களை நம்பிக்கையுடன் எங்கு வேண்டுமானாலும் அனுப்பி விட்டு நிம்மதியாக இருக்கலாம். முதலாளியின் குடும்ப ரகசியங்களை இது வரை யாரிடமும் சொன்னதாக புகாரும் வந்ததில்லை. கேட்டாலும் சொல்ல மாட்டார். நேரம் சிறிதும் தவறாதவர். வாரத்தில் ஏழு நாட்களும் வேலைக்கு வருபவர்.

பரமனின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டதாக தனது அலைபேசி தகவல் சொன்னதும் மனம் படபடக்க இன்றைய பணிகளை ஒத்திப்போடச்சொல்லிவிட்டு வேறு ஓட்டுநரை அழைத்துக்கொண்டு நேராக பரமன் வீட்டிற்கு போகச்சொன்னார்.

முப்பது வருடங்களுக்கு முன் தான் பைக்கில் வந்து, முதன் முதலாக வேலைக்கு பரமனை அழைத்துச்சென்ற போது இருந்த அதே ஓட்டு வீடு. வீடு பூட்டியிருந்தது. கார் சத்தம் கேட்டதும் அந்தப்பகுதியில் ஒரு வீட்டிலிருந்த வெளியில் வந்த வயதான பெண் காருக்கருகில் வந்து “காத்தாலிருந்து காய்ச்சல்னு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போயிருக்கறாரு” என சொன்ன பெண்ணின் கையில் ஐநூறு ரூபாய் நோட்டை திணித்து விட்டு அரசு மருத்துவ மனைக்குச்சென்றார்.

தான் நன்கொடை கொடுத்த பணத்தில் கட்டிய அரசு மருத்துவனை கட்டிடத்தை திறந்து வைத்த போது இங்கு வந்தவர் தற்போது வந்துள்ளார். அவரது காரைக்கண்டதும் அங்கிருந்த பலரும் மரியாதையாக வணக்கம் வைத்தனர். ” வருசத்துக்கு பத்துக்கோடி பணம் ஊர் நல்லதுக்காக வாரி வழங்கிற தெய்வம்” என ஒருவர் பேசியதைக்கேட்கையில் மகிழ்ச்சியடைந்தார்.

இது வரை ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல், ஊசி, மருந்து, மாத்திரை பார்க்காமல், தனக்கு ஏதாவது உடல் நிலை சரியில்லை என்று சொன்னாலும் ‘கசாயம் வெச்சுக்குடிச்சா காய்ச்சல் சரியாப்போகும், ஆஸ்பத்திரி போக வேண்டாம்’ என சொன்ன பரமன், தனக்கு இருதய அறுவை சிகிச்சை நடக்கப்போவதைச்சொன்ன போது, கதறி அழுததோடு ‘என்ற உசுர வேணும்னாலும் கொடுப்பேன். பயப்படாதீங்க’ என சொன்ன பரமன், இன்று எழுந்து பேச முடியாத மயக்க நிலையில் ஐசியு வார்டில் இருந்தது சுந்தருக்கு கவலையளித்தது.

வார்டில் பரமனுக்குத்துணையாக அவரது மனைவி கிழிந்த சேலையுடன் பஞ்சையாக,  கண்ணீர் மல்க சுந்தரைப்பார்த்து” முதலாளி…” எனக்கூறி கையெடுத்து வணங்கினாள்.

“ஐயா உங்கள கடவுளா நெனைச்சு கும்பிடறனுங்க. நான் உங்கள வந்து பார்க்கிறேன்னு சொன்னா இந்த மனுசன் விடலீங்க. பொண்ணுக்கு கண்ணாலம் ஏற்பாடு பண்ணினாருங்க. கண்ணால செலவுக்கு காசில்லாம கந்து வட்டிக்கு, மீட்டர் வட்டிக்குன்னு கடன வாங்குனாருங்க. நீங்களுந்தான் கோயில்ல நடந்த கண்ணாலத்துக்கு வந்து பூ போட்டு வாழ்த்தீட்டு போனீங்க. அதுக்கப்புறம் வாங்குன கடன கட்ட முடியலீங்க. கடனக்கட்ட நம்பியிருந்த நான் மேச்ச ஆடு, மாடுக நோயில செத்துப்போச்சுங்க. இன்னைக்கு காத்தால வந்த வட்டிக்கு பணம் கொடுத்தவங்க ‘கடங்குடுத்த பணத்துக்கு அடமானங்குடுத்த உன்ற ஊட்ட வித்துப்போட்டோம். ஒரு வாரத்துல ஊட்டக்காலி பண்ணோனும்’ னு சொல்லீட்டு போனதுக்கப்பறம் இந்த மனுசன் பாயில போயி குப்புறப்படுத்து சித்த அழுது போட்டு, எனக்குத்தெரியாம எலிக்கு வெச்சிருந்த மருந்த எடுத்து தண்ணீல கலந்து குடிச்சுப்போட்டாருங்க” சொல்லி பரமனின் மனைவி கண்ணீர் விட்டுக்கதறி அழுதாள். 

பரமனின் மனைவி அழுததைப்பார்த்த போது தான் பல கோடிகளைச்சம்பாதித்தும், பல கோடிகளை தானமாகக்கொடுத்தும் தன்னுடனேயே தன் வாழ்நாளைக்கழித்த பரமன் விசயத்தில் அவனது நிலையை கேட்டறிந்து அவசியத்தேவைக்கு உதவாமல் தான் கடமை தவறிய பெரும் பாவியாகி விட்டதை நினைத்து  வேதனை கொண்டார். அவரது மனசாட்சி அவரை உடும்பைப்போல் வேதனையை அதிகரிக்கும் பொருட்டு இறுக்கிப்பிடித்துக்கொண்டது. 

உடனே தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரமனை அனுப்பி வைத்ததோடு, பரமனது பெயரில் புதிதாக ஒரு வீடு வாங்கும்படி உடனிருந்த தனது மேளாளரிடம் கூறிய பின் மனசாட்சியின் வேதனை தந்த பிடியிலிருந்து விடுபட்டு சாந்தமானார் தொழிலதிபர் சுந்தரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *