வெள்ளச்சி




செழியன் அந்த தெருவுக்கு குடி வந்து ஒரு வருடமாகிறது. ஏரியா கொஞ்சம் நசநசவென இருந்தாலும் வாடகை குறைவு என்பதால் தேடிப் பிடித்து குடும்பத்தோடு குடியேறினான். சுவற்றுக்கு வண்ணம் அடிக்கும் வேலை. ஒரு பெண் குழந்தை தன்யா ஏழு வயதாகிறது.

செழியன் அன்று காலை ஆறுமணி வேலைக்கு கிளம்பினான்.காலையில் ஆறுமணிக்கே சென்றால் தான் ஒன்னரை நாள் கூலி கிடைக்கும். பெயிண்டர் என்றாலே தண்ணி போடுவார்கள் என்ற ஒரு வழக்கம் இந்த சமுதாயத்தில் இருக்கிறது. ஆனால், செழியனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அதனால், அவன் சம்பாத்தியம் போக சேமிப்பும் இருந்தது. அவன் வீட்டுக் கதவை திறந்து வெளியே வரும் போது வீட்டிற்கு வெளியே, பிறந்து ஒரு மாதமிருக்கும் நாய்க் குட்டி ஒன்று மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.
‘அடச்சே! காலங்கார்த்தால இங்கே என்ன பண்ணற போ அங்கே’ என்று விரட்டி விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அந்த நாய்க்குட்டி, எதிரும், புதிருமாக இருக்கும் அந்த தெருவின் வீடுகளின் முன் ஊறத் தொடங்கியிருந்தது.
ஒவ்வொரு வீட்டின் கதவின் தாழ்ப்பாள் விலகியதும் பெரியவர்களின் கண்களில் அந்த நாய்க்குட்டி தென்பட்டது. அவரவர் வேலை அவரவருக்கு. அங்கே அடிக்கடி இப்படி தான் நாய்க்குட்டிகள் வரும் அப்புறம் காணாமல் போய்விடும். ஊரச் சுத்தி நாய்களா மேயுது. இது எங்கிருந்து வந்து தொலைஞ்சதோ, அரசாங்கம் தெருநாயை ஒழிக்கிறதுக்கு எப்பத்தான் வழி செய்யுமோ? இதுல சில அமைப்புகள் நாய்களை இம்சிக்க கூடாதுனு வேற சொல்லறாங்க. ஆனால்,தெருவில் நடந்து போனால் பத்து இருபது தெருநாய்கள் ரவுண்ட் கட்டி நின்னு நம்மள பயமுறுத்தும். இரண்டு சக்கர வாகனத்தில் போகும் போது, எங்கிருந்துதான் வருமோ அசுரன் போல் வேகமா குரைத்துக் கொண்டே ஓடி வந்து வாகனத்தில் மோதி கீழே விழ வைச்சிடும். சில நேரங்களில் உயிர் சேதம் கூட நிகழும் யார் பொறுப்பேத்துக்கிறாங்க? என்று மனசுக்குள் முணுமுணுப்பு செய்யாமல் பெரும்பாலோர் தெருநாய்களை கடந்து செல்வதில்லை.
அந்த நாய்க்குட்டி நல்ல வெள்ளை வெளேறுனு இருந்தது. என்னை எடுத்துக் கொஞ்சுங்களேன் என்று சொல்வது போல, தன்னை கடக்கும் மனிதர்களின் கால்களை பிரண்ட ஆரம்பித்தது.பெரியவர்கள், “அடச்சே!அந்தாண்டா போ” என விரட்டினாலும் அதன் அழகை ரசிக்காமல் நகரவில்லை..
செழியன் சென்ற பிறகு அவன் மனைவி குழாய் தண்ணீர் பிடிக்க வீட்டுக்கு வெளியே இருக்கும் தெருமுனைக்கு வந்தாள். அவளைப் பின் தொடர்ந்து மகள் தன்யாவும் வந்து கொண்டிருந்தாள். அப்போது, தன்யாவின் கால்களுக்கிடையே வெள்ளை நாய்க்குட்டி புகுந்து ஊர்ந்தது.
“அம்மா நாய்க்குட்டி” எனக் கத்தினாள். அதன் அழகைப் பார்த்ததும் கையில் எடுக்கப்போனாள் தான்யா.
“ச்சீ விடு அது எங்கத்த நாயோ என்ன கண்றாவியோ தெரியல கீழே போட்டு வா” என கத்திக் கொண்டே அவள் அம்மா தண்ணீர் பிடிக்கும் வரிசைக்கு சென்றாள்.
அம்மா சென்றதும் அந்த நாய்க்குட்டியை எடுத்து கையால் தொட்டு தடவிய போது, தன் குட்டி வாலை ஆட்டிக் கொண்டு நாக்கை நீட்டி “க்ர் க்ர் “என மெல்லிய குரலில் கத்த ஆரம்பித்தது. தன்யா குறுகுறுப்பாக அதைக் கவனித்தாள். அதற்குள் அந்த தெருவிலிருக்கும் குழந்தைகளின் கூட்டம் கூடியிருந்தது.
“ஏய் நாயி ரொம்ப அழகா இருக்குல்ல”
“ஆமாப்பா, நாம வளத்தலாமா? இன்னொரு குழந்தை கேட்டது.
“நம்ம வீட்டுல ஒத்துக்க மாட்டாங்களே கொஞ்சம் வளர்ந்த பையன்”.
“நாம திங்கிற சாப்பாடு இருக்கில்ல அதில ஆளுக்கு ஒரு வாய் கொண்டு வந்தா போதும்” என்றான் இன்னொரு சிறுவன்.
தன்யா பெரிய மனுஷி போல் “அய்யோ அது இப்ப போய் சோறு திங்குமா? அதுக்கு இன்னும் பல்லு முளச்சிருக்காதே”என்றாள்.
“அட ஆமாம்ல்ல அப்புறம் என்ன செய்யறது?”
“அதுக்கு பால் தான் கொடுக்கணும் அதுக்கு எங்க போறது?”
“எங்க வூட்டுல எனக்கே காபிதான்” என்றது ஒரு குரல்.
“எங்கம்மா எனக்கு பால் கொடுப்பாங்க. நான் குடிக்கும் பாலில் பாதியை அதுக்கு கொண்டு வந்து ஊத்தறேன்” என வீட்டுக்குள் சென்ற தான்யா டம்ளரிலிருந்த பாலை எடுத்து வந்தாள்.
பாலை ஊற்றி வைக்க டப்பா தேடினார்கள். அங்கே காளான் அடைத்த காலி டப்பா ஒன்று நீல நிறத்தில் கிடந்தது. அதை எடுத்து சுத்தம் செய்து பாலை ஊற்ற அந்த நாய்க்குட்டி டபலபக், டபலபக் என்று குடித்தைப் பார்த்த குழந்தைகள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
“இந்த நாயிக்கு என்ன பேரு வைக்கலாம்?”
“இது வெள்ளையா இருக்கு அதனால அதுக்கு வெள்ளையன் பேர் வைக்கலாமா?” ஒரு சிறுவன் குரல் உயர்த்த ஓ….வைக்கலாமே!
அங்கே இவர்களின் கூடுகையை களைக்க தன்யாவின் அம்மா, “ஏய் இன்னுமா அந்த நாயிக்கிட்டையே இருக்க? இரு வரேன்” என்று கத்தினாள்.
குழந்தைகள் கலைந்தார்கள். வெள்ளையன் தனிமையானான். வயிறு நிரம்பி இருந்தது.
தன்யா வீட்டின் முன்னால் இருந்த வேப்பமர நிழலில் அதுக்கு ஒரு பழைய துணியை சிறுவர்கள் விரித்துப் போட்டார்கள் படுத்துக் கொண்டது.
குழந்தைகள் தாங்கள் குடிக்கும் பால், காபி, கூழ் எதுனாலும் அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் கொடுக்க வெள்ளையன் வந்த மூன்று மாதத்தில் புஸ்டியாகி நின்றது.
அந்த தெருவில் இருந்த பெரியவர்கள் வெள்ளையன் வளரும் வரை சரியாக கவனிக்கல. அது வளர்ந்த பிறகு தனக்கு சோறு போட்ட குழந்தைகள் வீட்டின் முன் நின்று கொண்டு வாலாட்டி விளையாட ஆரம்பித்தது. அங்கே வந்த பெரியவர் ஒருவர் “அட! இது பொட்ட நாயி இது எதுக்கு இங்கே திரியுது மொதல்ல அடிச்சு விரட்டுங்க” என சொல்லிச் சென்றார். ஆனால் அதை விரட்டி விட யாருக்கும் நேரமில்லை.
தன்யா தன் வயதொத்த சிறுவர்களிடம், “டேய் இது வெள்ளையன் இல்லை வெள்ளச்சி” எனக் கூறியதும் அனைவருக்கும் சந்தோஷமானது. குழந்தைகள் வளருவது போல் நாயும் வளர்ந்து நின்றது.
தன்யா, தன் வீட்டில் அப்பாவும், அம்மாவும் வேலைக்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் நாயுடன் விளையாடினாள். ஒரு நாள் வெள்ளச்சியின் உடல் பெருத்து வயிறு கீழே தொங்க நல்ல மினுமினுப்பு தெரிந்தது ஏழு வயது தன்யாவுக்கு காரணம் புரியவில்லை.
“டேய் இப்போ வெள்ளச்சியைப் வந்து பாருங்க நல்லா கொழுக்கு மொழுக்குனு இருக்கா” எனச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்த போது, அங்கே எதோச்சையாக வந்த செழியன் தன்யா பேசியதைக் கேட்டு, அப்போது தான் அந்த வெள்ளச்சியை நன்கு கவனித்தான். அது தாய்மை அடைந்திருக்கிறது என்று புரிந்து போனது.
“தன்யா இந்த வெள்ளச்சி இன்னும் கொஞ்ச நாள்ல குட்டி போடப் போவுது எதுக்கும் அதுக்கு கொஞ்சம் சோத்த சேத்திப் போடுங்க” என்று சொன்னதைக் கேட்டதும் தன்யாவிற்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆயிரம் தான் ஒருவரை வெறுத்தாலும் தாய்மை அடைந்ததை பார்க்கும் யாருக்கும் மனதில் ஒரு பரிவு இயல்பாகவே வந்து விடும். அந்த இயல்பு வரவில்லை என்றால் அவர்கள் மனிதர்களே இல்லை.
தன்யா தெருவுக்குள் ஓடினாள். அங்கே விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களுடன் “டேய் நம்ம வெள்ளச்சி குட்டி போடப் போவுதாம்” எனச் சொல்லியதும் எல்லோரும் “ஹைய் ஹைய்” எனக் குதித்து குதித்து சந்தோஷப்பட்டார்கள்.
தன்யாவின் அம்மாவிற்கு இது பிடிக்கவேயில்லை. ‘எந்த நேரமும் வெள்ளச்சி, வெள்ளச்சினு வீதியில திரியுற படிக்கற நேரம் கூட இப்ப வீட்டுல இருக்கிறதில்லை’ என்று திட்ட ஆரம்பித்தாள்.
குடிநீர் குழாயில் கூடிய பெண்களும் “இந்த புள்ளைங்க எந்த நேரமும் இந்த பொட்ட நாயி பின்னாலையே சுத்திட்டுத் திரியுதுங்க. இந்த நாயை மொதல்லையே விரட்டி விட்டிருக்கணும். நாமளும் பாக்கம வுட்டு, இப்ப பாரு வவுத்த தள்ளிட்டு நிக்குது இது எத்தனை குட்டிப் போடப் போவுதோ? ஏற்கனவே இந்த ஒத்த பொட்ட நாயிக்கு, பத்து நாயி நம்மளையும் சேந்து ராத்திரிக்கு தூங்க விடாம தொரத்திட்டு சண்டைப் போட்டுட்டு பின்னால திரியுதுக. இது குட்டி போட்டு இன்னும் நாலஞ்சு வந்தா நம்ம தெருவே பிடிக்காதே. அதனால், குட்டி போட்டதும் எங்காவது கண்காணத இடத்தில கொண்டு போய் சாக்குப் பையில போட்டு எடுத்தெறிஞ்சடுணும்..”
“ஆமாம் நீ சொல்லறது தான் சரி” என பெண்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள்.
அங்கே குழந்தைகள் “டேய் வெள்ளச்சி குட்டி போட்டா நாலஞ்சு போடுமாம். அதுகளுக்கு எப்படி நாம பால் ஊத்த முடியும்” என தன்யா சோகமானாள். “அய்யோ, தன்யா, நாம வெள்ளச்சிக்கு மட்டும் நல்ல சாப்பாடு போட்டாப் போதும். அது குட்டிகளுக்கு பாலைக் கொடுத்துடும்.” என்றான் வளர்ந்த சிறுவன்.
“அட அப்படியா?” என எல்லாக் குழந்தைகளும் ஆச்சரியத்தில் நின்றார்கள்.
குழந்தைகள் எல்லோரும் வெள்ளச்சியின் குட்டிகளை எதிர் நோக்கி காத்திருக்க, பெற்றவர்கள் அந்த குட்டியை எங்கே விடுவது என ஆலோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த சம்பவம் நடந்தது.
வெள்ளச்சி தன் வயிற்றை தொட்டலிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பகுதியில் அதிக அளவில் வெறிநாய்கள் சுற்றிக் கொண்டு இருந்தது. அந்த தகவல் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு யார் மூலமாகவோ சென்றது.
அதனால், அங்கே இருக்கும் தெரு நாய்களைப் பிடிக்க ஒரு பெரிய வாகனத்துடன் வந்திருந்தார்கள் நாய் பிடிக்கும் பணியாளர்கள்.
“நாங்க நாய் பிடிக்க வந்திருக்கோம்மா. இந்த தெருவில் ஏதாவது நாய்கீது சுத்திட்டு இருக்குதாம்மா?” என வீட்டுக்கு வெளியே நின்று தன்யாவின் அம்மாவிடம் தான் விசாரித்தார்கள்.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அதைக் கேட்டதும், “அய்யோ நாய் பிடிக்கிற வண்டியாம் இப்ப என்ன செய்வது? வெள்ளச்சியைப் பிடிச்சிட்டுப் போயிடுவாங்களே” என்ற கவலையில் தேய்ந்து கொண்டிருந்த போது, தன்யாவின் வீட்டு முன் இருந்த மருதாணிச் செடியின் ஓரத்தில் வெள்ளச்சியிடமிருந்து ‘ம்ம்..ம்ம்ம் ..ஊஊ…ஊ ஊ’ என முனகல் சத்தம் கேட்க ஆரம்பித்தது.
குழந்தைகள் அங்கே ஓடிப் பார்க்க அங்கே வெள்ளச்சி பிரசவித்து இருந்தது.
புதியதாக வந்த நபர்கள் வெள்ளச்சியை எட்டிப் பார்க்க, வெள்ளச்சி ‘கொர் ..உர் ..உர்’.. என கத்தி முறைக்க ஆரம்பித்தது. “அய்யோ நாய் குட்டி போட்டிருக்கும் போலயிருக்கு. இந்த நாயை நாம பிடிக்க முடியாது. வேறு நாய் ஏதாவது இருந்தால் பிடிக்கலாம் வாங்க” என களைந்தார்கள்.
வேடிக்கை பார்க்க வந்த ஆண்களும், பெண்களும் ‘அடச்சே எப்படியாவது இந்த தெருவை விட்டுத் தொரத்திடலானு பார்த்தால் இப்படி ஆகிடுச்சே!’ என பேசிக் கொண்டு இருந்தார்கள். வெள்ளச்சி ஈன்ற குட்டிகள் அரிசியும் உளுந்தும் கலந்தது போல், கறுப்பும் வெளுப்புமாக, வெள்ளச்சியின் நெட்டி தொங்கிக் கொண்டிருந்த முலைக்காம்பை பிடித்து சப்பிக் கொண்டு இருந்ததைக் கண்ட பெரியவர்கள், “டேய், அந்த நாய்கிட்ட போயி, அது குட்டிகளை தொட்டுடாதீங்க கடிச்சாலும் கடிச்சிடும்.” என அறிவுறுத்தி விட்டு நகர்ந்ததும் குழந்தைகள் ஒன்று சேர்ந்து குதுகலித்தார்கள்.
வெள்ளச்சி சிறுவர், சிறுமியர்களைக் கண்டதும் தன் வாலை மெதுவாக ஆட்டிக் கொண்டு, தலையைத் தூக்கி பார்த்து விட்டு பிரசிவித்த களைப்பில் கண் மூடிக் கொண்டது.
வெள்ளச்சியையும், குட்டிகளையும் குறுகுறுப்போடு பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.
அப்போது நாலைந்து நாய்கள் வெள்ளச்சியைத் தேடி வந்தது. அந்த நாய்கள் வெள்ளச்சி அருகே போனதும், எந்த அயர்ச்சியும் இல்லாமல் விருட்டென எழுந்து வந்த வெள்ளச்சியின் ஆக்ரோஷத்தை பார்த்து சிறுவர் சிறுமிகள், மிரண்டார்கள். அருகே வந்த நாய்களை ‘லொள் ..லொள்..லொள் உர் உர்’ என மிகப் பெரும் சத்தத்துடன் விரட்டி அடித்தது. அந்த நாய்களும் அதன் குட்டியை எடுக்க விழைந்தது. வெள்ளச்சியோ எந்தப் பக்கமும் வேறு நாய்கள் வராமல் ஓடி ஓடி குலைத்து தடுத்து தன் குட்டிகளை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தது.
அப்போது அங்கே வேகமாக சைக்கிளை அழுத்தியபடியே ஓடி வந்த செழியன். வெள்ளச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களின் அருகில் ஓடினான். ‘எல்லாரும் இங்கே என்ன பார்க்கறீங்க? சீக்கிரமாக ஓடி வாங்க’ என்று அழைக்க தெருவாசிகள் வேகமாக பின் தொடர்ந்தார்கள். தெருமுனையிலிருந்த குப்பைத் தொட்டியின் அருகில் உடல் முழுவதும் துணியை சுற்றி முகம் மட்டும் தெரிய சூரிய வெளிச்சம் கண்களில் வெப்பத்தை கொடுக்க தாங்கயிலாத குழந்தை ஒன்று ‘க்யா க்யா’ என கத்திக் கொண்டிருந்தது. அதன் சத்தம் கேட்டு அங்கேயிருந்த தெருநாய்கள் குழந்தையைப் பார்த்து வேகமாக குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. பெத்த குழந்தையை தூக்கி எரிந்த அரக்கமற்றவரின் ஈனச் செயலை திட்டிக்கொண்டே, அந்தக் குழந்தையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைக்க திரும்பியபோது, இரக்கமற்ற மனித ஜென்மங்களுக்கு புத்தி சொல்வது போல் தன் குட்டிகளை காக்க போராடிக் கொண்டிருந்த வெள்ளச்சியின் தாய்மை உணர்வு ஏரியவாசிகளை மெய்சிலிர்க்க வைத்தது.