வெற்றுக்காகிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2025
பார்வையிட்டோர்: 184 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பள்ளிப் பேருந்து மெல்ல வீட்டை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அனிதாவின் மனத்தில் விவரிக்க முடியாத எண்ண ஓட்டங்கள் அலைமோதிக்கொண்டிருந்தன. இறுதியாண்டுத் தேர்வின் முடிவுகள் அவள் கையில். ‘ரிப்போர்ட் கார்ட்’ அவள் பையில்! நினைத்துப் பார்க்கும்போது மனமும் கனத்தது; பையும் கனத்தது. 

பேருந்தை விட்டு இறங்கியதும் முதல் வேலையாகப் புத்தகப்பையைப் பணிப்பெண்ணிடம் கொடுத்துவிட்டு ஆழ்ந்து யோசித்தபடியே மெல்ல நடந்தான் அனிதா. மோசமான தேர்வு முடிவுகளிலிருந்து தப்பிக்க மூர்க்கமான காரணங்களைக் கண்டறிய மூளை படு வேகமாக வேலை செய்தது அவளுக்கு. இல்லாவிடில், வீட்டில் ஏச்சும் பேச்சும்! சில நேரங்களில் பூசையும் கிடைக்கும். அடித்து வளர்ப்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் தன் பெற்றோரிடத்தில் அனிதாவுக்கு மரியாதை கலந்த பயம் இருந்தாலும், பதினொரு வயதுச் சிறுமியை இப்படி அவமானப்படுத்துவது அவளுக்குச் சரியாகப் படவில்லை. அதிலும் பிரம்படி என்றால், தன் வயதையொத்த சிறுமிகளுக்கு ஏற்படும் அநீதி என்ற நினைவோடு வளரும் சிறுமி அவள். இல்லை இல்லை; இளம் பெண்! அதனால், ‘அதைத் தடுப்பதற்கு எந்த வழியையும் மேற்கொள்ளலாம். அதில் தவறு ஏதும் இல்லை’, என்று திடமாக நம்புகிறவள் அவள். கடந்த காலத்தில் பல காரணங்கள் தோல்வியில் முடிந்தாலும் அவை ஒவ்வொன்றும் வேறொரு புதிய புத்தாக்கக் காரணங்களைக் கண்டு பிடிப்பதற்கு வித்தாக அமைந்தது. அவ்வாறாக, இந்த முறையும் ஒரு காரணம் மூளையில் உதித்தது! 

“அம்மா, என் கூட்டாளிங்க பலர் ஒழுங்காவே செய்யலே. ஏதோ நானாவது ஓரளவுக்குச் செஞ்சிருக்கேன்…” 

அல்லது, “இந்தத் தடவை தேர்வுத்தாளை ரொம்பக் கஷ்டமா அமைச்சிருக்காங்க.. எல்லாரும் திணறிக்கிட்டு எழுதுனாங்க.. நம்பலேன்னா என் தோழி ரேவதிகிட்டே கேட்டுப் பாருங்களேன்..“ 

இந்த இரண்டில் எது பொருத்தமாக இருக்கும்? 

மனத்தில் குழப்பமும் பயமும் ஏற்பட, இப்படி எல்லாம் பல காரணங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன. தேர்வில் ஒழுங்காகச் செய்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? இப்படியொரு ஞானம் சிறிது நேரம் தலைதூக்கும். பிறகு எங்கோ ஓடி மறைந்துகொள்ளும். ஒவ்வொரு முறையும் தேர்வில் தோல்வி அடையும்போது இப்படிக் காரணங்களைச் சொல்லித் தப்பிக்க நினைப்பது தவறு என்று தெரிந்தும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பூசைக்கும் பயந்துதான் அவள் அவ்வாறு செய்கிறாள். அதனால், அது எப்படித் தவறாகும்? இது மறுகணம் எழும் வாதம்! 

அனிதாவின் தேர்வு முடிவுகள் அவள் தோழிக்கு வியப்பை அளித்தன. 

“ஆச்சரியமா இருக்குது! எப்படி இவ்வளவு மோசமா செஞ்சிருக்கே? எனக்குக் கணிதத்துல 90, அறிவியல்ல 75, அப்புறம் தமிழ்ல சொல்ல வேண்டியதில்லை, 90! ஆங்கிலந்தான் கொஞ்சம் இறங்கிடுச்சு, 66.” 

இப்படித் தன் தோழி பெருமையடித்துக்கொண்டதைக் கேட்டு அனிதாவுக்கு ஒரு விதத் தாழ்வு மனப்பான்மை மெல்லத் தலை தூக்கியது. தேர்வில் தமிழைத் தவிர மற்ற எல்லாப் பாடங்களிலும் தோல்வியடைந்துவிட்ட தன் நிலைமையை நினைத்து வருந்தினாள். திடீரென்று தான் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக ஓர் உணர்வு அவளுக்கு ஏற்பட்டது! தான் ஒரு முட்டாள்! தனக்குப் படிப்பே வராது என்ற எண்ணம் வரிந்து கட்டிக்கொண்டு வாசலில் நின்றது! நாற்பது மாணவர்களைக் கொண்ட வகுப்பில் ஆசிரியரின் தனிக் கவனம் அனிதா போன்ற மெதுவாகப்படிக்கும் மாணவிகளுக்குக் கிடைப்பது சிரமம்தான். வீட்டில் தாயாரின் நச்சரிப்பு. தந்தையின் அளவுக்கு மீறிய கண்டிப்பு. 

“எனக்குத் தெரிஞ்ச தோழிங்களோட பிள்ளைங்க எல்லாம் எப்படிச் சொந்தமா படிச்சு முன்னுக்கு வர்றாங்க தெரியுமா?” என்று தாயாரின் பிரபல வசனம் அனிதாவுக்கு மனப்பாடமாகிவிட்டது. 

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனிதாவின் தாயாருக்குத் தன் ஒரே மகளைப் பற்றிய கவலை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது. 

“இப்படியே போய்க்கிட்டிருந்தா எப்படி? தொடக்கநிலை பள்ளிப் பாடங்களே உனக்கு இவ்வளவு கஷ்டமா இருந்தால், உயர்நிலைப் பள்ளிப்பாடங்கள் எல்லாம் எப்படி.. உனக்கு அடிப்படையே சரியா அமையல.. இன்னும் அடுத்த வருஷத்துல ‘பி. எஸ். எல். ஈ’ (PSLE) தேர்வு வேறே.. ‘டியூஷன்’ வச்சும் பயனில்லே.. எல்லாம் வீண்செலவுதான்.. உன் கூட்டாளிங்களப் பாரு.. எப்படிப் படிக்கிறாங்க.. உனக்கு ஏன் படிப்பே வரமாட்டேங்குது.. என்னதான் செய்றதுனு தெரியலே..” தாயாரின் மனக்குமுறல் இது. 

“கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறோம்ல.. அதனாலே, அவளுக்குக் கஷ்டம்னா என்னனு தெரியலே.. கவனம் எல்லாம் வேறெங்கோ போவுது… நான் முழுக்கக் கைத்தொலைபேசியிலேயே பேசிக்கிட்டிருக்கிறாள்.. இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்.. இந்த வயசுல கைத்தொலைபேசி எல்லாம் வேண்டாம்னு.. நீதான் வாங்கிக்கொடுத்தே.. இப்பப் பாரு” காரணத்தைத் தேடிக் கண்டு பிடித்தார் தந்தை. 

“இப்ப இருக்கிற சூழ்நிலையிலே கைத்தொலைபேசி ரொம்ப ரொம்ப முக்கியம்.. அவள் பள்ளி முடிஞ்சி எங்கே போகிறாள்.. வீட்டுக்கு எத்தனை மணிக்கு வந்து சேர்ரானு தெரிஞ்சுக்க வேண்டாமா?..”

தாயார், தொலைபேசியின் தேவைக்கு விளக்கம் கொடுத்தார். 

“சரி.. அப்படின்னா, பள்ளிக்கூடத்துக்கு மட்டும் எடுத்துகிட்டுப் போகட்டும்.. வீட்டுக்கு வந்த உடனேயே கைத்தொலைபேசியைப் பூட்டி வைக்கப்போறேன்!” 

தந்தையின் கோபத்தை அனிதாவால் புரிந்துகொள்ள முடிந்தது. முடிந்துபோன அரையாண்டுத் தேர்வின் முடிவுகளைப் பார்த்துத்தான் இந்த ஆர்ப்பாட்டம். இப்பொழுது இறுதியாண்டுத் தேர்விலும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிந்தால், வீட்டில் கோர தாண்டவம் இன்னும் ஆக்கிரோஷமாகத் தொடங்கிவிடும். இதைத் தடுக்க, இல்லை இல்லை சாந்தப்படுத்தத்தான் அனிதாவின் சிந்தனை நாளங்கள் காரணங்களைத் தேடிப் புடைத்துக்கொண்டிருந்தன. 

திடீரென்று ஒரு யோசனை பிறந்தது! கல்லையும் கரைய வைக்கும். ஏன் எல்லாரையும் கதி கலங்க வைக்கும் ஓர் அபாரமான யோசனை நினைவுக்கூடத்தில் ஒட்டிக்கொண்டது. ‘லபக்’ கென்று அதைப் பற்றிக்கொண்டாள் அனிதா. ஆனால், அதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டுமே? 

வீட்டை அடைந்ததும், விரைவாகக் காலணிகளைக் கழற்றி விட்டு, குளியலறைக்குச் சென்று முகத்தை அலம்பிவிட்டு ஆடைகளை அணிந்து சாப்பாட்டு மேசையில் மதிய உணவுக்காக வந்து உட்கார்ந்தாள் அனிதா. 

“பரவாயில்லையே, என்றும் இல்லாத திருநாளா இன்றைக்குக் கரக்டா வந்து உட்கார்ந்துட்டீயே.. எப்பப் பார்த்தாலும் நான் கத்திக்கிட்டே கிடப்பேன்” பணிப்பெண்ணின் ஆச்சரியக் குரல். 

“அது சரி.. இன்றைக்கு அப்பா எத்தனை மணிக்கு வருவாரு?” என்று கேட்டாள் அனிதா. 

“ஏன் எதுக்கு?” தன்னைப் பற்றி புகார் செய்யவோ என்று ஒரு கணம் பயந்தாள் பணிப்பெண். 

“ஒண்ணுமில்லே; சும்மாதான் கேட்கிறேன்.. சொல்லுங்க..”

“எப்பவும் போலத்தான் வருவாரு…” 

“ஆறு மணிக்கா?” 

“ஆமாம்” 

“அம்மா?” 

“அம்மா எப்பவும்போல அஞ்சு மணிக்கெல்லாம் வந்திடுவாங்க. இடையிலே ஃபோன் பண்றதா சொன்னாங்க.. ஆமா, ஏன் இதையெல்லாம் இப்போ நீ கேட்டுகிட்டு இருக்கிற?” சாப்பாட்டை மேசை மேல் வைத்தபடியே கேட்டாள் பணிப்பெண். 

“ஒண்ணுமில்லே.. நீங்க சாப்பாட்டைப் போடுங்க.. இன்றைக்கு எனக்கு ரொம்பப் பசிக்குது.. நிறைய சாப்பிடணும் போல இருக்குது.. ரசம் இருக்கா.. ஆ.. கொண்டாங்க..” என்று பணிப்பெண் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு அணிதாவின் செயல் அமைந்திருந்தது. முழுச் சாப்பாட்டையும் நன்றாகச் சாப்பிட்டாள். 

“ம்.. அப்படியென்றால் நாடகத்தைச் சுமார் நாலே முக்காலுக்குத் தொடங்க வேண்டும்.. அம்மா வர்றதுக்குச் சரியாக இருக்கும்.” அனிதா தன் திட்டத்தை நினைவுபடுத்திக்கொண்டாள். 

சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் மூன்றரையை நெருங்கிக்கொண்டிருந்தது. 

“இந்த முறை, நான் ஆடவிருக்கும் நாடகத்தால் இனி அப்பாவும் அம்மாவும் மறந்தும் என்னை அடிக்க மாட்டார்கள்; என்னைத் திட்டவும் மாட்டார்கள்”, என்று திடமாக நம்பினாள். 

நேரம் நெருங்க நெருங்க மனம் பலமாகப் படபடக்கத் தொடங்கியது. பணிப் பெண்ணின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள் அனிதா. நாடகத்தைத் தொடங்கி வைக்கப்போவதே அவள்தானே. சாதகமான இடத்தில் அவள் இருந்தால்தானே நாடகத்தைச் சற்று ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம். சமையலறையில் ஏதோ வேலையாக இருந்தாள் பணிப்பெண். உடனே அனிதா மெல்லத் தன் அறையிலிருந்த நாற்காலியைத் தூக்கி வந்து ‘பால்கனி’யின் சன்னல் ஓரமாக வைத்து விட்டு விரைந்து சென்றுவிட்டாள். பின் சிறிது நேரம் கழித்துப் ‘பால்கனிச்’ சன்னலைத் திறந்தபடி வைத்துவிட்டு மீண்டும் தன் அறைக்குச் சென்றாள். பணிப்பெண் மீது எப்போதும் ஒரு கண் இருந்தது அவளுக்கு. மணி நாலு நாற்பத்தைந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பணிப்பெண் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்த்தாள் அனிதா. அவள் சமயலறையில் இருப்பதை உறுதி செய்த பிறகு, நாடகத்தை மெல்லத் தொடங்கினாள். 

பால்கணியில் போடப்பட்டிருந்த நாற்காலிமேல் ஏறிக் கீழே பார்த்தாள். என்றைக்கும் இல்லாமல் இன்று, ஒன்பது மாடி உயரம் அவள் தலையைச் சுற்ற வைத்தது. குதிப்போமா வேண்டாமா என்று மனம் அடித்துக்கொண்டது. 

“எது நடந்தாலும் பரவாயில்லை; குதித்து விடு” என்றது ஒரு மனம். 

‘அம்மா அல்லது பணிப்பெண் வந்து பார்க்கும்வரை பாவனை மட்டும் செய்’ என்றது இன்னொரு மனம். அப்படிச் செய்தால்தான் அம்மா இரக்கப்பட்டுத் தேர்வு முடிவுகளைப் பொறுத்துக்கொள்வார் என்று அசைக்க முடியாத நம்பிக்கையில் அந்த நாடகத்தை அரங்கேற்ற முனைந்தாள் அனிதா. மனி ஐந்தைத் தொட்டுவிட்டது. அம்மா இன்னும் வரவில்லை. பணிப்பெண்ணும் சமயலறையைவிட்டு இன்னும் வெளி வரவில்லை. தன்னை இந்த நிலையில் பார்த்து அம்மாவிடம் அவள் சொன்னாலே போதுமே. அம்மா பதறியடித்துக்கொண்டு என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஆறுதல் சொல்வாளே. 

இப்படியாக எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, ஒரு கணம், ஒரே ஒரு கணம், அவள் நிலை தடுமாறியது. தலை சுற்றியது. கைப்பிடி ‘அலுமீனிய’ கிராதியைவிட்டுத் தளர்ந்தது. அவள் மாடியிலிருந்து அலறியவாறே ‘தட் ‘ என்று தரையில் லிழுந்தாள்! 

“அனிதா, அனிதா.. என்ன ஆச்சு உனக்கு?..” அம்மாவின் குரல். முணுமுணுத்தவாறே எழுந்தாள் அனிதா. 

“என்ன சத்தம் அது?” தூக்கத்திருந்து எழுந்த அப்பாவின் மறுகுரல். 

“கட்டிலிலிருந்து திடீர்னு கீழே விழுந்துட்டாள்.. அனிதா… அனிதா… எழுந்திரு தலையிலே அடிபட்டிருக்கா?..” தலையைத் தடவியபடியே கேட்டாள் அம்மா. 

“வீங்கியிருக்கான்னு பாரு..” என்றார் அப்பா அருகில் வந்து. அனிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் எல்லாமே கனவென்று தெரிந்தது. 

“ஏதாவது கனவு கண்டீயா?” 

“ஆமாம்” 

கனவைச் சொல்லவா வேண்டாமா என்று சற்றுக் குழப்பம். சொன்னாலும் நல்லதுதானே என்று மனம் முணுமுணுத்தது. 

“அம்மா திரும்பவும் நான் தேர்வுல ‘ஃபெயில்’ ஆயிட்டேன். ரொம்ப மோசமா செஞ்சிருக்கேன்..” 

“என்ன திரும்பவும் ஃபெயிலாயிட்டீயா?” 

“ஆமாம்மா… நாளைக்கு ‘ரிப்போர்ட் காரட்டை’க் கொடுப்பாங்க… நீங்களும் அப்பாவும் எப்போதும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்கீங்க.. எனக்குப் படிப்பு வராதுன்னு சொல்லிக்கிட்டேயிருக்கீங்க.. என்னைவிட மற்றப் பிள்ளைங்க எல்லாரும் நல்லா செய்யுறாங்கன்னு சொல்லியிருக்கீங்க.. நான் எதுக்கும் உருப்படியானவள் இல்லேன்னு பல முறை சொல்லிருக்கீங்களே.. அப்பாவும் நான் ஒரு முட்டாள்னு சொல்லி என்னை அடிச்சியிருக்காரு.. நானும் இனிமே எனக்குப் படிப்பு வராதுன்னு நினைச்சுக்கிட்டேன்.. எனக்குக் கைத்தொலைபேசி எல்லாம் வேணாம்.. என் தோழிங்க ‘ஃகிப்டு’ வகுப்புக்கு எல்லாம் போறாங்க. என்னால போக முடியலே.. அடுத்த ஜென்மத்துலாவது நான் கெட்டிக்காரப் பிள்ளையாப் பொறக்கிறேம்மா.. அதனாலதான், செத்துப் போகலாம்னு நெனச்சு மேலேயிருந்து கீழே குதிச்சுட்டதா கனவு கண்டேன்..” என்று கண் கலங்கிக்கொண்டே கூறிய தன் மகளை ஆரத் தழுவிக்கொண்டாள் சாந்தி. இத்தனை நாளாக அடைத்து வைத்திருந்த தன் மகளின் வேதனைகளை இப்போது அவள் நன்கு புரிந்துகொண்டாள். பக்கத்திலிருந்த கணவரைப் பாரத்தாள். மூர்த்திக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இது கனவுதானே என்று அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. 

அறையில் சிறிது நேரம் மெளனம் நிலவியது. அனிதாவைத் தட்டிக்கொடுத்துத் தூங்க வைத்தாள் சாந்தி. 

“நாளைக்கு நான் அனிதாவுடைய பள்ளிக்கூடத்துக்குப் போய் அவள் ‘ரிப்போர்ட் கார்டை’ எடுக்கப் போறேன்.. அவளுக்கு இப்போ தகுந்த ஆலோசனை தேவை.. தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் நாம அனிதாவைத் திட்டக்கூடாது.. வேற மாதிரி இதை அணுகணும்..” 

சாந்தியின் முடிவை ஆமோதித்தார் மூர்த்தி.

“நானும் விடுப்பெடுத்துகிட்டு உன் கூட வர்றேன்.. நாமே தப்புப் பண்ணிட்டோம்னு நினைக்கிறேன்..” 

“சரி .. சரி.. அனிதா இப்பத்தான் லேசா கண் மூடித் தூங்கறாள்.. அவள் தூங்கட்டும்.. நீங்க போய்ப் படுத்துக்கிங்க..” என்று தட்டிக்கொடுத்துக்கொண்டே மகளின் அமைதியான முகத்தைப் பார்த்தாள் சாந்தி. 

வெற்றுக் காகிதமாக மாறிவிடவிருந்த அந்தப் பிஞ்சு முகத்தில் மென்புன்னகை மெல்ல இழைந்தோடியது. 

– வலை, முதற் பதிப்பு: மார்ச் 2010, ஆர்.யோகநாதன் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *