வெற்றிக்குப் பின்




(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கிருஷ்ண தேவராயர் திடீரென்று ஏன் அப்படிக் கவக்கம் கொண்டு விட்டார் என்று மந்திரி திம்மரசுக்கு விளங்கவில்லை. பிள்ளைப் பருவ முதலே அரசரைப் பயிற்சி செய்து அவருடைய மனப்போக்கை தெருங்கி அறிந்தவர்; ஆனாலும் அந்த வெற்றிக்குப் பிறகு ஏற்பட்ட மன்னனின் மனநிலையை அவரால் ஊகிக்க முடியவில்லை. ஆசிரியர் என்ற முறையிலும் வயது சென்றவர் என்ற முறையிலும் அவருக்குச் சலுகை அதிகமாக இருந்தது; இருந்தாலும் அப்பொழுது அரசர் பட்ட சங்கடத்தைக் கண்டு அவர் கூடச் சட்டென்று அருகில் நெருங்கிக் காரணத்தைக் கேட்க முடியவில்லை.
சரித்திரத்தின் மகத்தான போர்களில் ஒன்று அன்றையதினம் நடந்து முடிந்தது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் கௌரவமே அன்றுதான் நிலை பெற்றது. ஹிந்து ராஜ்யங்களை ஒவ்வொன்றாக வீழ்த்தி ஹிந்துஸ் தானத்தில் தமக்கு மிஞ்சினவர்கள் இல்லை என்று தலையெடுத்து நின்ற மகமதியர்களுக்கு அன்றுதான் முதல் முதலாக பெருத்த தோல்வி ஏற்பட்டது.
ஹிந்துக்கள் மறுபடியும் தம் நாட்டில் தலை தூக்க வேண்டும் என்ற பேரவாக் கொண்டு விஜய நகர சாம்ராஜ்யத்திற்கு அடி கோலினவர்கள் ஹரிஹரர் – புக்கர் என்ற இருசகோதரர்கள் என்பது சரித்திரம். இந்திய நாகரிகத்திலும் இலக்கியத்திலும் அழியாப் பெயர் பெற்று விட்ட பம்பாதீரத்தில் நான்கு புனிதமான பருவதங்கள் கோட்டைச் சுவர்கள் போல நின்ற புண்ணிய பூமியில் வித்தியா நகரம் என்ற விஜய நகரத்தை அவர்கள் ஸ்தாபித்தார்கள். அதில் அவர்களுக்கு ஊக்கமும் ஒத்தாசையும் அளித்தவர் வித்தியாரண்ணிய ஸ்வாமி.
அந்த சிம்மாஸனத்தில் ஏறினதுமே கிருஷ்ணதேவராயர் முன்னோர்கள் துவக்கிய தூய வேலையில் மும்முரமாக ஈடுபட்டார். ஹிந்து சாம்ராஜ்யம் ஒன்றை அசையாத அஸ்திவாரத்தில் கட்டி உயர்த்த வேண்டுமென்ற
ஒரே லட்சியத்தை உயிர் நோக்கமாகக் கொண்டு அல்லும் பகலுமாகப் பாடுபட்டார். விஜய நகரத்தையே சீர்திருத்தி நாட்டின் வளத்தை அபிவிருத்தி செய்தார். விஜய நகரம் செல்வக் களஞ்சியம் என்று அயல் நாட்டு யாத்திரிகள் ஏகமனதாகப் புகழும்படி நாட்டைப் பல வகை களிலும் சிறப்பித்தார். பெரிய படை திரட்டி அதற்குத் தக்க பயிற்சி அளித்தார். இந்த வேவைகள் எல்லாவற்றிலும் அவருக்குத் துணையாக இருந்து யோசனை கூறி உதவி செய்தவர் அப்பாஜி என்று பெயர்போன திம்மரசு.
தம்முடைய ஏற்பாடுகள் யாவற்றையும் சரிவரச் செய்த பிறகு தான் கிருஷ்ணதேவராயர் பீஜபூர் சுல்தான் அடில்ஷாவுடன் போர் புரிய முனைந்தார். முதலில் விஜய நகர ராஜ்யத்தைச் சேர்ந்திருந்து பிறகு பீஜபூர் சுல்தானால் கைப்பற்றப்பட்ட ராயச்சூரை மறுபடியும் அதில் சேர்க்க வேண்டியது தமது முதல் கடமை என்று தீர்மானித்தார். 1520ஆம் வருஷம், தாம் பட்டத்துக்கு வந்த பனிரண்டாவது வருஷம், தமது முப்பத்திரண்டாவது வயதில், ராயச்சூரின் மேல் படையெடுத்துக் கடும்போர் புரிந்து மகமதிய அரசனைத் தோற்கடித்து ராயச்சூரைக் கைப்பற்றினார்.
அன்றிரவுதான் ராயர் அவ்வளவு கலங்கிப்போனது. ராயச்சூர் கோட்டையின் ஒரு பகுதியின் மேல் தளத்தில் உலாத்திக்கொண்டிருந்தார். பூர்ணிமை நிலா பளிச் சென்று காய்ந்து யுத்தத்தைக்கூட ஒளியில் அமுக்கிக்கொண்டிருந்தது. தூரத்தில் தெரிந்த பீஜபூர் எல்லையைப் பார்த்த வண்ணம் திடீரென்று ராயர் யோசனையில் ஆழ்ந்துவிட்டார்.
வீராவேசத்துடன் தாமே முன் நின்று ராயர் போரை நடத்தினார். கல்தானின் சேனை எதிர்பாராத வகையில் முறியடிக்கப்பட்டு பீஜபூரை நோக்கி ஓடிவிட்டது. அதைப் பார்த்துப் பெரும் மகிழ்ச்சி அடைய வேண்டியிருக்க அரசன் விசனம் அடைந்திருந்தது அப்பாஜிக்கே அர்த்தமாகவில்லை. வெகு நேரம் பொறுத்தபிறகு மெதுவாக அரசனை நெருங்கினார்.
‘இன்று அடைந்த தோல்வியிலிருந்து சுல்தான் தலை தூக்கமுடியாது. விஜய நகரம் இன்று உண்மையிலேயே விஜய நகரம் ஆகிவிட்டது… இனிமேல் மேற்கொண்டு அரசர் தம் கவனத்தைத் தெற்கே செலுத்தலாம்’ என்று அப்பாஜி ஆரம்பித்தார்.
அப்பாஜி,நாம் இப்பொழுது இன்று, வெற்றி பெற்றுவிட்டது உண்மைதான். ஆனால் அது பெரிதன்று. இந்த வெற்றியைப்பற்றிப் பூரணமாக இப்பொழுது யோசிக்கிற பொழுதுதான் அதன் பொருளும் தொடர்பும் எனக்கு விளங்குகிறது. இதற்கு முன் வெற்றியில் என் மனது சென்றது. இப்பொழுது என் திருஷ்டி வெற்றிக்குப் பின் சென்று பார்க்கிறது.
‘வித்தியாரண்ய முனியின் லட்சியம் இன்று நிறைவேறி விட்ட தென்றே சொல்லலாமல்லவா?’ என்று அப்பாஜி கொஞ்சம் ஊக்கங் கொடுத்துப் பேசினார்.
சொல்லலாம், அவரும் அவருடைய சகோதரர் ஸாயனரும் நம் மூதாதையருடன் ஆதி மூர்த்திகளாக நின்று ஆரம்பித்த இந்தப் புத்துயிர் இயக்கம்-ஆமாம். இது நமது ஹிந்து தர்மம் மறுபடியும் நிலைபெற வேண்டி ஏற்பட்ட ஊக்கம் தான் – இன்று இந்த வெற்றியில் கொடி கட்டிப் பறக்கிறது. நமது நாகரிகம் சோர்வகன்று திரும்பவும் கிளைக்க வேண்டும் என்று பெரியோர்கள் அன்று செய்த சங்கல்பம் இன்று பலன் பெற்றுவிட்டது… ஆமாம். அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
‘பல்லாயிரம் வருஷங்களாக அலைமேல் அலையாக வந்த படை யெடுப்புகளை யெல்லாம் வசிஷ்ட தண்டம் போல வாங்கி ஐக்கியம் செய்துகொண்ட நமது நாகரிகம் ஐநாறு வருஷங்களுக்கு முன் தோன்றிய இந்தப் படையெடுப்பின்முன் நாணல்போலத் தணிந்து விட்டது. வெள்ளம் நாடெங்கும் பரவி இந்தத் தென் தேசத்திற்கும் வந்து விட்டது. இதன் எல்லையிலாவது அதை அணைபோட்டு நிறுத்தவேண்டும். அந்தமட்டில் நமது வெற்றி சரிதான். ஆனால், இந்த வெற்றி நிரந்தர மாக வேண்டுமே! இந்த அணை நிற்குமா?
‘ஏன் நிற்காது ? நாம் தெற்கே சென்று ஹிந்து சமுதாயத்தை ஒன்று படுத்தி விஜய நகரத்தை பலப்படுத்தவோம்.’
‘அதற்குத் தான் இப்பொழுது எனக்கு வகை தெரியவில்லை!”
‘அரசர் சொல்லுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வெற்றியை நாம் எந்த வகையில் பெற்றோம். அதே வகைதானே!’
‘அப்பாஜி, இந்த வகை நீடித்து நடக்காது. பலாத்காரத்தினால் ஏற்பட்ட இந்த வெற்றி தாற்காலிகமான வெற்றிதான். எதிரிகள் இன்றில்லை யென்றாலும் என்றாவது மறுபடியும் படை திரட்டிவருவார்கள் அதைத் தடுக்கவில்லை இந்த வெற்றி. எதனால்?’
‘எனக்கு இப்பொழுது தெரியவில்லை. ஆனால் நமது வெற்றி நிலைக்காது என்றுமட்டும் இந்த நிமிஷமே எனக்குப் பட்டுவிட்டது. ராயச்சூர் யுத்தத்திற்குப் பின் அதன் பலனாக, மற்றொரு யுத்தம் வரும், இந்த வெற்றியின் தொடர்பாக…” என்று மேலே சொல்லப் போனவர் நிறுத்திக்கொண்டார்.
இல்லை. அவர் நிறுத்தவில்லை. அவர் ஏதோ சொல்லித்தான் இருப்பார். அதற்குள் என் கனவு கலைந்து விட்டது.
‘என்னடா, தூங்கவா இங்கே வந்தாய்? மணி இரண்டாகிறது எழுந்திரு. பம்பாஸரஸைப் பார்த்து விடுவோம் இன்று. நாளைக்கு
யானை லாயங்கள். சபாமண்டபம் முதலிய சின்னங்களைப் பார்ப்போம்’ என்று என் நண்பன் எழுப்பினான்.
ஹம்பி சின்னங்களைப் பார்க்கச் சென்ற முதல் நாளே எங்கள் திகைப்பு மிதமிஞ்சி விட்டது. விஜய நகரத்தை அவ்வளவு பிரமாதமாக அமைத்த சிறப்பைப்பற்றி அல்ல! இணையற்ற இயற்கை வசதிகள் ஏற்பட்டிருந்த பம்பைக் கரையில் மகத்தான சாம்ராஜ்யம் சூழ்ந்து ஒரு விசித்திர நகரத்தை மயன் சிருஷ்டிபோல, காலமே கண்டு பிரமிக்கும் படியாக நிர்மாணித்த மகா புருஷர்களின் சக்திகூட எங்களுக்கு அவ்வளவு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. தாளிக் கோட்டை யுத்தத்திற்குப் பிறகு அந்த நிகரற்ற நகரத்தை தரைமட்டமாக்கிய எதிரிகளின் அசுர வெறியை யும் உணர்ச்சி யின்மையையும் பற்றித்தான்! அவர்களாலும் அவர் களுடைய குரூர ஆவேசத்தாலும் தகர்த்துத் தள்ள முடியாமற்போய் மிஞ்சியதா இப்பொழுது அந்த நகரத்தின் பாழடைந்த கோவில்களும், மண்டபங்களும், அரண்மனைப் பாகங்களுமாக நின்று நமக்கு பலத்தை யும் பக்தியையும் ஊட்டுகின்றன!
– 1963