வீட்டுக்கு ஒரு புலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2025
பார்வையிட்டோர்: 86 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கீதா!… நாளைக்கு எனக்கும் ஜெகனுக்கும் பகல் சாப்பாட்டைக் கட்டித் தந்துவிடு. வீட்டுக்கு வந்து போக முடியாது. இந்த பாழாப்போன மிலிட்டரிக்காரன் சட்டத்தினால் சைக்கிளும் ஓட முடியாது!” இரவு படுக்கைக்குப் போகும் முன்னர் தந்தை வேலுப் பிள்ளை கூறியதை மனதில் வைத்துக் கொண்டே படுக்கையில் சரிந்தாள், கீதா. 

அவர்கள் வயலில் அப்பொழுதுதான் அறுவடை ஆரம்பமாகியிருந்தது. 

அவரது வயல்வெளிக்கு ஏழெட்டு மைல்கள் தள்ளித்தான் முல்லைத்தீவென்ற கிராமம் இருந்தது.

அவரது வயலோரம் செல்லும் நெடுஞ்சாலை வழியால்தான் ராணுவ ஜீப்புகள், டிரக்குகள் அடிக் கொருதடவை இரைந்து கொண்டு செல்லும். 

அவர் தன்னைப்பற்றியும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை தான் வயலில் வேலை செய்ய இறங்கினால் ஜெகன் பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை. உதவிக்கு வரத்தான் செய்வான். இருபத்திரண்டு வயது நிரம்பிய தன் மகன் ராணுவத்தினரின் கண்களில் எதேச்சையாய் பட்டுவிட்டாலும் ஆபாத்தாகிவிடுமே என்கின்ற அச்சத்தில் இந்தத் தடவை பட்டினி கிடந்தாலும் வயலில் நெல்லுப் போடுவதில்லையென முடிவு பண்ணிக் கொண்டார். 

ஆனாலும் அம்முடிவை அவர் வெளியிட்டபோது ஜெகன் கொதித்தான். 

“நம்ம பூமி, நம்ம உழைப்பு. அவங்களுக்குப் பயந்து வாழாதிருக்க முடியுமா? இப்படிக் கோழை யாக என்னால் வாழமுடியாது. ஒன்றில் வீட்டுக்கு உழைக்க விடுங்கள்; இல்லை என் மண்ணைக்காக்க துப்பாக்கி தூக்குவதற்காகவாவது அனுமதியுங்கள் எனப் பிடிவாதமாகப் பேசினான். 

தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராட ஆரம்பித்த காலத்திலிருந்தே, ஜெகன் இந்தக் கேள்வியை தந்தையிடம் கேட்டுக்கொண்டேயிருக்கிறான். 

சில நாட்கள், தொண்டையில் புற்றுநோய் பரவி யிருந்த தாயாரைக் காட்டி; 

“நீ விரும்பிய மாதிரி உன் மண்ணுக்காகப் போராடப்போய் விட்டால் அந்த ஏக்கத்திலேயே உன் தாய் சீக்கிரமாகப் போய் விடுவாள். உன்னைப் பெற்று வளர்த்த அன்னையை அப்படி வருத்திவிட்டு நாட்டுக்கு உழைப்பது சரியாகத் தெரிந்தால் செய்; நான் தடை சொல்லவில்லை” நாசூக்காய் அவனிடம் பேசி அவனை அடக்கி வைத்திருந்தார் வேலுப்பிள்ளை. 

தாயார் இறந்ததற்குப் பின்னர், “உன் தங்கை கீதாவின் கல்யாணம் முடியட்டும். நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள். தாயில்லாத பொண்ணு. என்னைப்போல் உனக்கும் சில கடமையிருக்கிறது பார்” என சொல்லிச் சொல்லியே அவனைத் தடுத்து வைத்திருந்தார். 

இருந்தாலும் சில சமயம் தன் பையன் தனக்கும் தெரியாமல் போராட்ட இயக்கங்களில் சேர்ந்து விடுவானோ என்ற அச்சத்தில் எப்பொழுதும் அவனைத் தன்னுடனேயே வைத்துக்கொள்ள முயல்வார். 

படுக்கையில் படுத்த பின்னரும் கீதாவுக்குத் தூக்கம் வருவதாக இல்லை. இமையோடு இமை சேர மறுத்தன. கிராமம் கிராமமாகப் புகுந்து தமிழ்ப் போராளிகளை ராணுவம் தேடத்தொடங்கியதிலிருந்து கீதா இரவில் தூங்குவதைத் தவிர்த்து வந்தாள். இப்போது அதுவே பழக்கமாகி விட்டது. 

தூரத்தே எங்கோ சுவர்க் கோழியொன்று கூவியது. கீதா தலையணையை அணைத்துக்கொண்டு புரண்டு படுத்தாள். 

சேவலின் கூவலைத் தொடர்ந்து வெடிச் சத்த மொன்று கேட்டது, கீதா தலையணையில் கையையூன்றிக் கொண்டு தலையை நிமிர்த்தினாள். பின்னரும் தான் கைந்து வெடிச்சத்தங்கள் படபடவென்று விடாமல் கேட்டன. 

‘விர்’ரென்று படுக்கையை விட்டி எழுந்தவள் நேரே ஜெகனின் படுக்கையை நோக்கி ஓடினாள். 

காலில் இருந்து தலைவரை மூடிக்கொண்டு தூங்கிய ஜெகனின் போர்வையைத் தூக்கியெறிந்தவள்- 

“அண்ணா… நம்ம அத்தைவீட்டுப் பக்கமாக வெடிச் சத்தங்கள் கேட்கின்றன… உன் அடையாள அட்டை எங்கே? ராணுவம் வந்து கூப்பிட்டால் எவ்விடத்திலாவது மறைந்திரு அண்ணா… என்னைத் தனியாக விட்டு விட்டுப் போகாதே; நானும் உன் கூடவே வந்து விடுகிறேன். அந்தக் கொலைகாரப் பாவிகளிடம் உன்னையனுப்ப மாட்டேன்…” ஜெகனின் கைகளை இறுகப்பற்றியபடி கீதா குமுறிக் குமுறியழுதாள். 

“அப்படியெல்லாம் நேராது கீதா! வீணாக கற்பனை பண்ணாதே! தமிழனாகப் பிறந்து விட்டால் இப்படித் தினம் தினம் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கு… தெரு நாய்கள் போல் சிங்களவனின் துப்பாக்கிக்குப் பலியாகி மடிவதை விட… ஒரு வீரனாகச் சாவதே மேல்… இன்றைக்கு எத்தனை இளைஞர்கள் தமிழ் மண்ணிற்காகத் தங்கள் உயிரைப் பலி கொடுத்து விட்டார்கள்! இவர்கள் எல்லாம் அக்கா, தங்கையுடன் பிறக்கவில்லையா…?”

ஆத்திரத்துடன் எழுந்த ஜெகன், தங்கையை அணைத்து அவள் முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான். 

கீதாவின் அழுகை சற்று அடங்கியது. 

காலையில் எழுந்து பச்சைத் தண்ணீரில் குளித்த பின்னர்தான் கீதாவின் கண் எரிச்சல் குறைந்தது. 

ஏற்கனவே திட்டமிட்டபடி காலையிலேயே பகல் உணவையும் தயாரித்து அவர்களுக்குக் கட்டிக் கொடுத்து விட்டு உட்கார்ந்திருந்தாள். பொழுது போவதாகவேயில்லை. உணவை முடித்துக் கொண்டவளுக்கு வீட்டுக்கு முன்னால் ‘கேட்’டருகே வளர்ந்திருக்கும் கோரைப்புற்களை வெட்டிவிடலாமென்ற யோசனை திடீரெனத் தோன்றியது. 

இருந்தாலும், அப்பா வந்துவிட்டால்… என்ற பயம் மனதை உறுத்தியது. அப்பா வெளியே காலடி எடுத்து வைக்கவே விடமாட்டார். அப்பாதான் இல்லையே… 

இடுப்புக்குக் கீழே தொங்கிய நைலக்ஸ் சாரியை எடுத்து இறுக்கமாகச் செருகிக் கொண்டு புல்லு வெட்டும் கத்தியுடன் சென்று அமர்ந்து கொண்டாள். 

பாதிப் புல் வெட்டியாகி விட்டது. 

அதற்குள்ளாகவே ஏதோ ஒரு இரைச்சல் கேட்டது. வெட்டிய புல்லைக் கையிலெடுத்தபடி நிமிர்ந்தாள். 

“ஜீப்”பொன்று வருவது போன்ற சப்தம். நினைவா, பிரமையா, நிஜமா? ஒரு நிமிடம் தயங்கியவளுக்கு இரைச்சல் அதிகரிப்பது போலிருக்கவே உள்ளூரப் பயம் பிறந்தது. 

“பட்”டென்று கத்தியை எறிந்துவிட்டு உள்ளே ஓட முயல்வதற்குள் அவள் வீட்டைக் கடந்து சென்ற ராணுவ ஜீப்பில் இருந்தவர்களின் கண்களில் கீதா பட்டுவிட்டதற்கு அடையாளமாய் விரைந்து சென்ற ஜீப் திடீரெனத் தன் வேகத்தைக் குறைத்தது. 

அதற்கிடையே உள்ளே ஓடி விட்ட கீதா, கதவைச் சாத்தி இரும்புத் தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு நிமிர்ந்தாள். பயத்தினால் வியர்த்துக் கொட்டியது. அடுத்து என்ன நடக்குமோ என்று விளித்துக் கொண்டாள்.

அதற்குள்ளாகவே ஜீப்பிலிருந்து குதித்த சிங்கள ராணுவ வீரர்கள் உள்ளே வந்து கதவைத் தட்டவே, இனிமேலும் தாமதித்தால் ஆபத்தென்பதை தீர்மானித்தவளாய் விடுவிடென பின்பக்கத்தால் ஓடிவிட எத்தனித்தாள். 

ம்ஹும் முடியவில்லை; பயத்தில் கால் நகர மறுத்தது. 

“இன்னும் ஒரு நிமிடத்திற்குள் உள்ளேயிருப்பவர்கள் வெளியே வந்துவிட வேண்டும். எவராவது ஓட முயன்றால் சுட்டுத் தள்ளப்படுவீர்கள்”

முற்றத்தில் நின்ற ராணுவத்தினர் எச்சரித்தனர். எச்சரிக்கையைத் தொடர்ந்து துப்பாக்கி வேட்டொன்றும் கேட்டது. வேறு வழியொன்றும் அற்ற நிலையில் என்ன செய்வதென்று தெரியாது நடு நடுங்கிய வண்ணம் வெளியே வந்தாள் கீதா. 

அவளது சக்தியெல்லாம் பூமிக்குள் இறங்கி விட்டது மாதிரியும், உடனே ஒரு பாரமாய், கனமாய் அழுத்துவது போலவுமிருக்கவே-பக்கத்தில் நின்ற கல்யாண முருங்கை மரத்தை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள். 

“இப்ப யாரு உள்ளே ஓடினது? புலிதானே”- கொச்சைத் தமிழில் கேட்டான், ராணுவ அதிகாரிபோல் தென்பட்ட ஒருவன். 

“யாருமேயில்லை. நான்தான் ஓடினேன்.” 

பயத்தில் பட படத்த இதழ்களைக் கூட்டிக் கூறினாள். 

“பொய் சொல்கிறாய், பொய்.. பொறுக்கியனவா…?” என்று சிங்களத்தில் சப்தம்போட்ட அதிகாரி கீதாவை நெருங்கினான். அவள், பின்னால் ஓடிவிடலாமா என எண்ணி ஓர் அடி எடுத்து வைத்தாள். 

 மறுகணம் அதிகாரியின் துப்பாக்கி முனை அவளது மார்புக்கு நேரே நீண்டது. இன்னொரு அடி எடுத்து வைத்தால் போதும் அதிலிருக்கும் ரவைகள் அத்தனையும் அவள் மார்பைத் துளைத்துக் கொண்டு போய்விடும். 

‘ம்… சாவு ஒரு தடவைதானே. இவன் கையில் சிக்கு, வதைவிட அதுவே மேல்.’ 

தைரியமாய்க் கால்களை அசைத்தாள் அந்தக் கணத்துக்குள் அவ்வதிகாரி மற்றவர்களுக்கு கண் ஜாடையில் ஏதோ தெரிவித்தான். மறுவினாடி இரண்டு பேர் முன்னால் வந்து அழுத்தமாக அவளைப்பிடித்துக் கொள்ள இன்னொருவன் அவள் புடவையில் கைவைத்தான். 

அடுத்த கணம் நடைபெறப் போவதைப் புரிந்து கொண்ட கீதா, “அடச்சீ… சிங்கள நாய்களே” என அவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு பெண் புலி போல் அவர்களையும் மீறிப் பாய்ந்தோட முயன்றாள். 

அப்பொழுது பிடரியில் ஓர் அடி பலமாக விழுந்தது. துவண்டு விழுந்த கீதாவை தரதரவென்று காலில் பிடித்து இழுத்துச் சென்று ‘ஜீப்’பில் தூக்கிப் போட்டார்கள். 

பொழுது சாயத் தொடங்கியதுமே ஜெகனை வீட்டிற்கு முதலில் போய்விடும்படி கூறினார் வேலுப்பிள்ளை. கிட்டத்தட்ட ஒரு மைலளவு நடந்து போகவேண்டும். இடையே ஓரிரு வீடுகள் தான் இருந்தன. ஜெகன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஐந்தே காலாகி விட்டது. ‘பாவம் கீதா. நாள் முழுவதும் தனி யாகப் பயந்து போய் உட்கார்ந்திருப்பாள்’ என்று நினைத்துக் கொண்டு வேகமாக நடந்தான் ஜெகன். 

வீட்டையடையும் பொழுது உள்ளே எந்தவிதமான சந்தடியும் இருப்பதாகத் தெரியவில்லை. அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. வழக்கமாகப் பூட்டியிருக்கும் முன் கதவில் மெதுவாகத் தட்டி ‘கீதா’ என்றால்தான் சிரித்த முகத்துடன் ஓடி வந்து ஜன்னலால்  பார்த்துவிட்டு கதவுத் தாழ்ப்பாளை நீக்குவாள் கீதா. இன்று என்ன… வாசல் கதவு நிர்க்கதியாய் ஓவென்று திறந்து கிடந்தது. 

“கீதா…கீதாம்மா…” உரக்க அழைத்தபடியே ஒரு தடவை பின்வாசல்வரை போய் வந்தான். எங்கே போயிருப்பாள்…? மீண்டும் ஒரு தடவை சற்றுப் பலமாகக் “கீதா” என கத்தினான். 

பதிலேயில்லை. தலைக்குள் ரத்தநாளம் வெடித்துச் சிதறுவது போலிருந்தது. ஒவ்வொரு அறையாகத் தேடிக் கொண்டு வந்தவனின் மனதில் பகலில் சில இடங்களில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக வழியில் யாரோ கூறியது ஞாபகத்துக்கு வரவே, இதுவரையில் இல்லாத திகில் மனதைக் குடைந்தது. 

ஓட்டமும், நடையுமாகச் சுற்றி வந்தவன் எதேச்சை யாய் கிணற்றருகே சென்றான். அதென்ன…. கிணற்றுக் கட்டில் இரத்தக்கறைகள் மாதிரி…! 

சந்தேகம் வலுக்கவே கிணற்றை எட்டிப்பார்த்தான். உள்ளே அவனது தங்கை ‘கீதா’ … நெஞ்சே வெடித்து விடும்போல் கதறினான். வாசலில் வந்த வேலுப்பிள்ளை கையிலிருந்த மண்வெட்டியை தூர எறிந்து லிட்டு ஓடி வந்தார். 

கீதாவின் உடலை வெளியே எடுத்தார்கள் ஆடைகள் எதுவுமின்றி வெறுமனே கிடந்த அவள் உடலில் ஆயிரம் கீறல்கள்… இரத்த உறைவுகள்… அவளது மென்மையான இதழ்களில், மார்பில், உடலில் இடையீடில்லாமல் ‘சிகரெட்’டினால் சுட்ட வடுக்கள். 

நெஞ்சம் குமுறிய ஜெகன் ‘சட்’ டென்று தன் ‘ஷேர்’ டைக்கழற்றி தங்கையின் உடலை மூடி விட்டு ரத்தம் கக்கும் கண்களுடன் தந்தையை நிமிர்ந்து நோக்கினான். 

மகனின் இதயத் துடிப்பை அறிந்ததுபோல் மவுனமாக நின்ற தந்தை, “இப்பொழுது நீ போகலாம். ஆனால் மீண்டும் நீ வரும்போது உன் மண்ணை – தமிழ் ஈழத்தை மீட்டு வரவேண்டும்… இல்லையேல் உன் உதிரத்தையாவது அதற்காகக் கொட்டி விடு” என ஆணித்தரமாகச் சொல்லிவிட்டு மகளின் உயிரற்ற உடலைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டார்.

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *