விவரமான வேலைக்காரன்!




ஓரு ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார். அவர் பலே கில்லாடி. வேலைக்காரர்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவதில் பெயர் பெற்றவர். ஆனால் வேலைக்கு ஏற்ற கூலி கொடுக்க மாட்டார்.
அதே ஊரிலிருந்த தனசேகரன் என்பவன் அவரிடம் ஒரு நாள் வேலை கேட்டுப் போனான்.
அவனிடம் பண்ணையார், “”ஒரு நாளைக்கு நூறு குடம் தண்ணீர் எடுக்க வேண்டும்; நூறு கட்டுப் புல்லு சேகரித்துக் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்தால் உனக்கு மூன்று வேளையும் வடை பாயசத்தோடு சாப்பாடு போடுகிறேன்” என்றார்.
தனசேகரன், “”நடுவர் முன்னிலையில் இதைக் கூறி ஒப்புக் கொள்ள வேண்டும்” என்றான்.
பண்ணையாரும் ஒப்புக் கொண்டார். இருவரும் நடுவர் முன் சென்று இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்து கொண்டனர்.
மறுநாள் காலையில், தனசேகரன் சிறிது புல்லை அறுத்து எடுத்துக் கொண்டான். தன்னுடைய சுண்டு விரல் அளவுக்கு அவற்றைச் சிறிது சிறிதாக நறுக்கி, அவற்றைக் கொண்டு மிகச்சிறிய அளவில் நூறு புல்லுக்கட்டுகளைச் செய்தான். அதன் பிறகு ஒரு வாளித் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்தான். அதை நூறு குடங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினான். இதைச் செய்து முடித்துவிட்டுப் பண்ணையாரிடம் போய் சாப்பாடு கேட்டான்.
பண்ணையார், வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறானா என்று கவனமுடன் பார்த்தார்.
சிறிது சிறிதாக நூறு புல்லுக் கட்டுகளையும் நூறு குடங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் மட்டுமே இருப்பதையும் பார்த்தார். அவருக்குக் கோபம் தலைக்கேறியது!
“”நீ வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை… அதனால் உனக்கு சாப்பாடு கிடையாது” என்றார் பண்ணையார்.
தனசேகரன், நடுவரிடம் சென்று முறையிட்டான்.
நடுவரும் எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்துவிட்டு, பண்ணையாரிடம், “”நீர் நூறு கட்டுப் புல் என்றுதான் கூறினீர்… அதன் அளவு குறித்துச் சொல்லவில்லை. அதே போல நூறுகுடம் தண்ணீர் வேண்டும் என்றுதான் சொன்னீர்… அதன் அளவு குறித்தும் ஒப்பந்தத்தில் ஒன்றும் உறுதி செய்யப்படவில்லை! எனவே, ஒப்பந்தப்படி நீர், தனசேகரனுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார்.
பண்ணையார் தனது தவறை உணர்ந்தார். வேலைக்காரர்களுக்கு செய்கிற வேலைக்கு ஏற்ற கூலி கொடுப்பதுதான் நல்லது என்பதை உணர்ந்து கொண்டு அன்றிலிருந்து வேலைக்காரர்களுக்கு நியாயமான கூலியைக் கொடுக்கத் தொடங்கினார்.
இனி விடியல் பிறந்துவிட்டது என்ற மகிழ்ச்சியுடன் சென்றான் தனசேகரன்.
– எஸ்.உத்ரா, மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளி, மதுரை.
மார்ச் 2012