விளக்கேற்ற வந்தவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 8, 2025
பார்வையிட்டோர்: 61 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மணம் செய்யாது என்றும் கன்னியாகவே உள்ள பெண் களை, ஆண்கள் சமுதாயம் சற்றுச் சந்தேகக் கண்களுடனேயே பார்க்கும். ஆனால் தமிழ் இனமோ, மணமாகாத பெண்களை அவ்வளவாக மதிப்புக் கொடுக்காததோடு அவர்களைப் பூர்ணத்து வம் பெற்றவர்களாக அங்கீகரிப்பதும் இல்லை” என்ற இந்த வார்த்தைகளை யாரோ யாருக்கோ சொன்ன வார்த்தைகளாக ஒதுக்கித் தள்ள முடியவில்லை, மிஸ். சாந்தா, எம். ஏ., அவர் களால். கோமதி ஈஸ்வரர் பெண்கள் கல்லூரியின் பிரின்ஸ்பால் சாந்தாவின் உள்ளமும் சிந்தனையும் இந்த வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பித்ததே சென்ற இரண்டு ஆண்டுகளா கத் தான். 

இருபத்து மூன்றாம் வயதில் எம்: ஏ. பட்டம் பெற்ற சாந்தா, இரண்டு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்த பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக கல்லூரி பிரின்ஸ்பாலாக பணிபுரிந்து வருகிறார். பிரபல வழக்கறிஞர் ரத்தினவேல் முதலியாரின் மூத்தமகளான சாந்தாவுக்கு, இரு சகோதரர்களும் ஒரு சகோ தரி யும் உண்டு. சகோதரர்கள் இருவரும் வழக்கறிஞர்களாகப் பெரும் புகழும் பணமும் பெற்று வாழ்ந்து வந்தனர். சகோதரிக்கு மணமாகி மூன்று குழந்தைகளும் இருந்தன. ஆனால் எல்லோருக் கும் மூத்தவளான சாந்தா மட்டும் மணம் ஆகாத கன்னியாகவே இருக்கிறாள். கல்லூரியில் படிக்கும் பொழுது படிப்பினால் ஏற்பட் டுள்ள கர்வத்தினால் ஆண்களை அலட்சியம் செய்தாள். ஒருவனை மணந்து கொண்டு அவனுக்கு மனைவியாக அவனது ஆசாபாசங் களுக்கு, கட்டுப்பட்டு அடங்கி நடக்க அவளது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. உணர்ச்சிகளை அடக்கி வாழ்வு முழுவதும் வடுப்படாத கன்னியாகவே வாழ ஆசைப் பட்டாள்; வாழ்ந்தும் வந்தாள் கடந்த பல ஆண்டுகளாக. முப்பத்திரண்டு வயதைத் தாண்டிய அவளது உள்ளத்தில் மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகம் ஏற்பட்டதேயில்லை. பருவத்தின் கொந்தளிப்பு அவளைப் பல முறை வாட்டி வதக்கிய போதெல் லாம், மகாத்மா காந்தியடிகளின் பிரம்மச்சரிய ஆலோசனை கள் அவளது சுய உணர்வைத் தட்டி எழுப்பி நேர்மைப் பாதை யில் அவளை அழைத்துச் செல்லும். 

அன்ன நடை, பின்னல் சடை, வண்ண உடை, சின்ன இடை, இவை அவளிடம் இன்னும் இருந்தன. புன்னகை புரியும் சந்திர வதனம், கயல் கண்கள், கட்டமைந்த மேனி, பொன்னைத் தோற்கடிக்கும் பளபளப்பான நிறம் இவை அவளை விட்டுச் செல்லவில்லை. பசுமை மறைந்து காய் கனியானதும் உள்ள கவர்ச்சி, சுவைக்கப்படாத கனியின் ஈர்ப்பு, அவளிடம் சரண டைந்தே இருந்தன. அவளது பள்ளிப் படிப்பிலே பார்த்து மயங்கியவர் பலர். கல்லூரி வாழ்விலே கட்டிளம் காளையரின் அம்புவிழிகள் பல அவளைத் தாக்கி உள்ளன. விரிவுரையாள ராகப் பணிபுரியும் பொழுதும், பிரின்ஸ்பாலான பிறகும் பல உயர்தரமானவர்களின் பார்வையின் ஈட்டி அவளை நோக்கி வீசப்பட்டதுண்டு. ஆனால் எந்த அம்பு விழிகளோ, பார்வை ஈட்டிகளோ அவளது மூடிய இதயக் கோட்டையின் முன் செய லற்றுத் தான் போயின. எட்டாத உயரத்தில் அவள் இருப்ப தாக எண்ணிக் கொண்டனர், அவளை நாடினர். ஆம், அவளும் எட்டாக் கனியாகவே தான் இருந்தாள். அப்படி இருக்கத்தான் ஆசைப் பட்டாள். ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் மணம் செய்து கொள்வதற்காகவே பிறக்கவில்லை. பிரம்மச்சரிய வாழ்க்கையை மேற்கொண்டு பாரதப் பூமிக்குப், பெருமை தேடித் தரப் பிறந்தவளே ” என்ற காந்தியடிகளின் பொன் மொழியை அடிக்கடி தன் மனத்தில் எழுதிப் படித்துப் பார்த்துக் கொள்ளுவாள். 

இந்த ஆண்டு, கல்லூரி தமிழ்ப் பேரவையின் கூட்டத்திற்கு பிரபல பேச்சாளர் கோபாலன் அழைக்கப்பட்டிருந்தார். பிரபல கதாசிரியர். பெரிய பத்திரிகை ஒன்றின் உதவி ஆசிரியர். தூயதமிழில் மடைதிறந்த வெள்ளம் போன்று பேசும் இயல் பினர். காந்தியக் கருத்துக்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர். முப்பது வயது குறுக்கிப் பிடித்துள்ள இளைஞர். பார்ப்பதற்குக் கம்பீரமான தோற்றம் கொண்டு இருந்ததே போல், கம்பீரமான பேச்சு வன்மையும் அவரிடம் அடைக்கல மடைந்திருந்தது. தமிழ்ப் பேரவையிலே முழங்கினார். அவரது முழக்கத்தின் ஒலி அலைகள், தன் அறையில் அமர்ந்திருந்த சாந்தாவின் செவிகளை மெதுவாக எட்டின. அந்த ஒலியின் முதல் அலையே அவளை மெய் சிலிர்க்க வைத்தது. தன்னையறியாமலேயே அக்குரலில் ஒரு மயக்கம் ஏற்பட்டது. தன் அறையிலிருந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த சாந்தா, சுவாரஸ்யமாக மேடையில் பேசிக்கொண்டிருக்கும் கோபாலனைப் பார்த்தாள். அந்தப் பார்வையை அவளால் அவனிடமிருந்து அகற்றவே முடிய வில்லை. அந்த நினைவை அடக்கி ஒடுக்க முயன்றது அவளது மனச்சாட்சி. மனச்சாட்சியை வென்ற அந்த நினைவு அவனோடு நீண்டநேரம் பேச, அவனைப்பற்றி அறியத் துடித்தது. கூட்டம் முடிந்ததும் அவனுடன் நீண்ட நேரம் பேசினாள். அவளை அணு அணுவாக உணர்ந்து இருந்தான் கோபாலன். அவளைப்பற்றி மிக உயர்ந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தான். ஆனால் அவளோ இன்றுதான் முதன் முதலாக அவனைப் பார்க்கிறாள். பலர் போற்றும் பெருங்குணம் கொண்ட பிரின் ஸ்பாலுடன் பேசுவதில் அவனுக்கு அளவற்ற ஆனந்தம். ஆனால் அவளுக்கே புரியாமல் அவள் மனம் அவனிடம் ஈடுபட்டு விட்டது என்று எண்ணும் அளவுக்கு அவள் உள் மனத்தின் தூண்டுதலால் நேரம் போவதே தேரியாமல் நீண்ட நேரமாக உரையாடினாள். அடிக்கடி தன்னைவந்து சந்திக்கும்படி வற்புறுத்தினாள். அவளது வற்புறுத்தல் அவனுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. 

கோபாலன் போன பிறகு மனச்சாட்சி அவளை மறுபடியும் கண்டித்தது. அவனுடன் இவ்வளவு பேசியது, அவன் மேல் இத்தனை அன்பு கொண்டது தவறு என்று மனச்சாட்சி, கண்டித்ததை, மனம் உதாசீனம் செய்ததோடு, மீண்டும் மீண்டும் சந்திக்க ஆசைப்பட்டது; 

தன்னிடம் படித்துப் பட்டம் பெற்ற பெண்கள் பலர் எவ்வளவோ பெரிய பெரிய பட்டங்கள் எல்லாம் பெற்றுப் பிறகு ஆணுக்குத் துணையாய் குழந்தைகளைப் பெற்றுக் குடும்பம் நடத்துவதைப் பார்க்கும் போதெல்லாம் கோபாலனைப் பற்றிய எண்ணம் உள்ளத்தை ஆக்கிரமித்தது. இதுவரை குடும்பம் நடத்தும் பெண்களை அவ்வளவாகப் பொருட்படுத்தாத அவள் உள்ளம் இப்பொழுது குடும்பம் நடத்தும் பெண்களைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்தது. இளம் உள்ளத்து இளமை ரத்தம் முறுக்கேறி, அந்த இளம் ரத்தக் கொதிப்பை, பருவத் தின் கொந்தளிப்பை, இதுவரை அடக்கி ஒடுக்கிக் கட்டுப் படுத்தியிருந்த அவளது உணர்வு இப்பொழுது கட்டு மீறிச் செல்ல ஆரம்பித்தது. 

தன் தம்பிமார்களின் குழந்தைகளும் தங்கையின் கைக் குழந்தையும் தன்னைச் சுற்றி வளைய வரும்பொழுது முன்பெல் லாம் மகிழ்ச்சி கொள்ளுவாள். ஆனால் தனக்கென்று ஒன்று வேண்டும் என்ற ஆசை அவள் விரும்பாமலேயே அவள் அடி மனத்தின் ஆழத்தில் கோபாலனைச் சந்தித்ததில் இருந்து பதிந் தது. துணை வேண்டாம் என்ற அவளது வைராக்கியம், மட மடவெனச் சிதைந்து, அறிவின் அஸ்திவாரத்துடன் அவள் கட்டியிருந்த வைராக்கியக் கோட்டையைத் தகர்த்து விட்டது. அவளது ஆசையின் கொடும் தாக்குதலைத் தன்னால் இயன்ற மட்டும் தடுத்து நிறுத்தப் போராடிற்று. அவள் கொண்ட வெறி ஆசை, வெற்றிபெற, அறிவும், உள்ளக் கட்டுப்பாடும், தோல் வியை அணுகிக்கொண்டே வந்தன. 

தன் உள்ளம் பேதலிக்கும்பொழுது எல்லாம் மன அமைதி யையும், தெளிவையும் தன்னம்பிக்கையையும் கொடுத்து வந்த மகாத்மாவின் பிரம்மச்சரியக் கொள்கைகள் இப்பொழுது பலன் கொடுக்கவில்லையே என்று மனம் புழுங்கினாள். புதியதாகச் சஞ்சலமுற்றுவிட்ட அவள் உள்ளம் அவளைக் கோழை என்று குற்றம் சாட்டிற்று. குடும்பக்காரியங்களிலும், தன் தங்கைக்கு இருந்த செல்வாக்கு, தனக்கு இல்லை என்பதை உணரப் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. சாதாரண வெறும் உடல் உணர்வு என்று எண்ணிக் கேலி செய்து கொண்டிருந்தாளே, தாம்பத்ய உறவு, அந்த உறவு எவ்வளவு தெய்வீகமானது என்பதைப் படிப்படியாக அவள் மனம் உணர்ந்தது. யாருக்கும், பலனில் லாது காட்டில் அடித்த நிலவாய், பாலைவனத்தில் வீசிய தென்றலாய்த் தன் வாழ்வு நடந்து வந்திருப்பதை அடிக்கடி எண்ணிப்பார்த்தாள். அவள் உள்ளம் துணை தேவை ……. துணை தேவை’ என்று ஓங்கார மிட்டது. அந்த ஓங்காரத்தின் ஒலி அவளது நாடி நரம்புகளிலெல்லாம், தசை அணுக்களிலெல் லாம், பிரதிபலித்தது.

அவனைத் தேடிச்சென்று பேசினாள். அன்பு செலுத்தினாள். அவளது அன்பு உள்ளத்தின் செய்கையில் அவன் திக்குமுக்காடிப் போனான். அவன் வேண்டாம் என்று மறுத்தும் அவனது பொருளாதாரத்தைப் பெரிதும் பெருக்கினாள். பொருளாதாரத் தில்’ தனக்குச் சமமாகக் கொண்டுவந்துவிட ஆசைப்பட்டாள்: கொண்டுவந்தும் விட்டாள். 

பிரின்ஸ்பால் தன்னை விரும்புகிறாள் என்பதை அறியும் பொழுது நடைமுறை நிகழ்ச்சிகளை அவனால் நம்பவே முடிய வில்லை. ஆனால் அவனது அன்பிற்கு ஏங்கிய அவளது ஒவ்வொரு வைத் செய்கையும் அவளை முழுவதும் அவனிடம் சரணடைய தது. அவனிடம் அவள் வாழ்வுத் துணையைக் கண்டாள். 

மீண்டும் மனச் சாட்சி குமுறிய பொழுது, தற்செயலாக அன்றுவந்த ஒரு தினசரிப் பத்திரிகையில் வெளியாகி இருந்த மகாத்மாவின் பொன்மொழி அவள் கண்களில் தென்பட்டது. 

“காம உணர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியாத ஒருவர் திருமணம் செய்து கொள்வது தவறானதல்ல” என்ற பொன் மொழி அவள் மனச்சாட்சியின் குமுறலை அடக்கி விட்டது. மீண்டும் அவள் கைகள் காந்தியடிகளின் பிரம்மச்சரிய நூலை எடுத்துப் புரட்டின. 

நிலைக்கண்ணாடி முன்பு, எந்தத் தோற்றத்துடன் நிற்கி றோமோ, அந்தத் தோற்றமே நிலைக்கண்ணாடியில் பிரதிபலிப்பது போன்று முன்பு அவளது பிரம்மச்சரியக் கொள்கைகளுக்கு ஊக்கம் கொடுத்த அதே நூல், இன்று அவளது திருமண ஆசை களுக்கு ஊக்கம் கொடுப்பது போன்று தோன்றிற்று. 

ஆடம்பரமற்ற முறையிலே கோபாலனைத் தன் கணவராக, ஆலயமணி ஒலிக்கும், அறிந்தவர்களின் ஆசி வார்த்தை ஒலிக்கும், நாதஸ்வர இன்னிசை ஒலிக்குமிடையே, ஏற்றுக் கொண்டாள் சாந்தா. அவளது வீழ்ச்சியைச் சிலர் கேலி செய்தாலும் வயது சென்ற, அவள் பெற்றோரும், தம்பிகளும், தங்கையும், மனப் பூர்வமாக ஆதரித்தனர். வீழ்ச்சியாகச் சிலர் சொல்ல, வாழ்வு மலர்ந்ததாக அவள் உள் மனம் கூத்தாட இன்ப இசை பரவிற்று அவர்கள் வாழ்க்கையிலே. 

அவர்கள் இருவரின் திருமண வாழ்த்துக்களிடையே மகாத்மாவின் ‘“இல்லறமும் பிரம்மச்சரியமும் ” என்ற நூலும் இருந்தது அவளுக்கு ஒரு வியப்பையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது: இல்லறத்தில் இருந்து கொண்டே பிரம்மச்சரியத் தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவுசெய்து கொண்டாள் தனக்குள்ளாகவே. 

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *