விளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2025
பார்வையிட்டோர்: 354 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மெழுகுவர்த்தி வரிசையை ஒவ்வொன்றாகக் கொளுத்தி வைத்தது போல, ஒவ்வொரு பாடகராக மல் ஹார் ராகத்தை ஆலாபனை செய்துகொண்டு வந்தனர். தர்பார் மண்டபத்தில் இசை வெள்ளத்தின் அலைகள் எழுவதும் விழுவதுமாக இருந்தன. உள்ளக் கடலில் சிற்றலையாக எழுந்த நாத இன்பம் வரவரப் பேரலை யாகி, சபையில் உள்ளவர்களைப் பிரமிக்க வைத்துக் கொண்டிருந்தது. முதலில் பாடியவரைவிட என்ன தான் அடுத்தவர் பாடிவிட முடியும் என்று ரஸிகர்கள் சர்ச்சை செய்து கொண்டிருக்கும் பொழுதே இரண்டாவது அலை முதல்அலையை விழுங்கிவிடுவது போலப் பாட்டின் தரம் ஏறிக்கொண்டே வந்தது. சபை யின் உற்சாகமும் கரைபுரண்டு கொண்டிருந்தது. 

கடைசியாகப் பாட ஆரம்பித்தார் தான்சென். தான் சென் அரைப் பைத்தியம் என்று பெயர் வாங்கியவர். இரண்டு கால்களையும் மண்டி இட்டுக்கொண்டு உட் கார்ந்த உடனே புலியைப்போல் இரண்டுதரம் உறுமினார். மலைக் குகையில் ஆண் புலி தரைக்கருகில் வாயை வைத்துக்கொண்டு உறுமும் பொழுது எழும் அதிர்ச்சி திக்குகளையும் காட்டையும் கலங்க வைப்பது போன்று ஓசை பரவிற்று. புலியும் இல்லை; ஒன்றும் இல்லை என்று சபையினருக்கு நன்றாகத் தெரிந்த போதிலும் தங்கள் குலைநடுக்கத்தைத் தடுக்க முடியவில்லை. மேதையின் சேஷ்டை என்ற எண்ணத் தையும் விலக்க முடியவில்லை உண்மையை அவர்கள் கண்டார்களா? அதுதான் அவருடைய குரு வணக்கம்! அந்த உறுமல் காரணமாகத்தான் இந்த இசை உலகத்திலே அவர் புகும்படி நேர்ந்தது. அந்தச் சம்பவத்தை அவரால் எப்படி மறக்க முடியும்? 

தான்சென் சிறு பிள்ளையாக இருக்கும்பொழுது அவர்கள் குடும்பத்திற்கு ஒரு புன்செய்த் தோட்டம் சொந்தமாகஇருந்தது. வெகுசிரமப்பட்டுக் குடும்பத்தினர் அதில் பயிரேற்றி மரம் நட்டு வளர்த்து வந்தனர். ஆனால், அதனுடைய பயன் அவர்களுக்குக் கிட்டு வதில்லை. தோட்டம் ரஸ்தா ஓரமாக இருந்தபடியால், வழிப்போக்கர்கள் தோட்டத்தில் கை வைக்காமல் போவதே இல்லை. 

தோட்டத்திற்குக் காவலாக இருக்கும்படி தான் செனை அவனுடைய தகப்பனார் நியமித்திருந்தார். சிறு பையனாக இருந்த போதிலும் தான்செனுக்கு ஒரு யுக்தி தோன்றிற்று. தோட்டத்திற்குள் செடி மறைவில் ஒளிந்துகொண்டு ஆண் புலியைப்போல் உறுமினான் கண்ணால் தோட்டத்தைப் பார்த்த வழிப்போக்கர்கள் காதில் புலியின் உறுமல் விழுந்ததும் அவர்களைப் பயம் கவ்விக்கொண்டது. தோட்டத்திற்குள் எங்கோ புலி இருக்கிறதென்று கருதினார்கள். நாளா வட்டத்தில் அந்தப் பாதை வழியே ஜனங்கள் செல்வதுகூட அருகி விட்டது, 

ஒருநாள் இரண்டு சாதுக்கள் பாதை வழியே சென் றனர். அவர்களைக் கண்ட தான்சென் புலியைப்போல் உறுமினான். ஒரு சாது பிழைத்தேன் என்று ஓடிவிட் டார். சாது ஹரிதாஸ்மட்டிலும் தைரியமாகத் தோட் டத்திற்குள் நுழைந்து பார்த்தார். தான்சென் செடி மறைவில் ஒளிந்து கொண்டிருந்தான்! சாது ஹரிதா ஸுக்குத் தான்செனுடைய திறமையில் அபார பற்று உண்டாயிற்று. எனவே, தனக்குத் தெரிந்த இசைக் கலையைப் பையனுக்கு அன்றுமுதல் புகட்டி வைக்க ஆரம்பித்தார். வெகு சீக்கிரத்தில் அவன் ஒப்பற்ற இசை மேதையாகி விட்டான். மேதையாய்ப் போய் விட்ட பிறகும்கூட, தோட்டத்துக் காவல் வேலை ஒரு கதையாகப் போய்விட்ட பிறகும்கூட, தான்சென் பாட ஆரம்பிக் தம் பொழுதெல்லாம் புலியைப்போல் உறு மாமல் துவங்குவதில்லை. உறுமலே தான்செனின் குரு வணக்கம்! ஆனால், சபையினர் இந்த ரகசியத்தைக் கண்டார்களா? 

மூன்றாம் தரம் உறுமிவிட்டு, தான்சென் மல்ஹாரை யே பாட ஆரம்பித்தார். விளம்ப காலம் ! தொடங்கிய சில நிமிஷங்களுக்குள் இவருக்கு முன்பு பாடியவர்கள் ஆலாபனை எல்லாம் சுத்தமாக மறந்து போய்விட்டது. மண்டபத்தின் சம்கி வேலை செய்த விதானத்திலிருந்து தொங்கிய வெல்வெட் பாபட்டாக்கள் காற்றில் ஊசலாட வில்லை, பாட்டில் ஆடுகின்றன என்று ஒரு ரசிகர் தன் உணர்ச்சியை உருவகப் படுத்திக்கொண்டிருந்தார். கல் தூண் குதிரைகள் காதை நெறிக்குமா என்று மற்றொரு வர் எண்ணமிட்டுக் கொண்டிருந்தார். இப்படியே ஒவ் வொருவரும் ஒவ்வொரு பிரமையுடன் தடுமாறிக் கொண் டிருந்தனர். 

விளம்ப காலம் துரித காலமாக மாறிற்று. நள்ளிர வில் புதை வாணங்களைக் கொளுத்தியது போல சாரீரம் விசும்பி எழுந்து, ஒலி மலர்களாக உதிர்ந்தது சீர் வாணங்களைப் போல் ஜாருக்கள் விரைந்து நெளிந்து சரிந்து விழுந்தன. பிர்காக்கள் அவுட் வாணத்தைப் போல் உணர்ச்சி பொதிந்த இன்னிசையைக் கொட்டின. மண்டபம் வானமாகிவிட்டது. ரசிகர்கள் தேவர்களாகி விட்டனர். 

சமயம் பார்த்துத் தான் சென் ஒரு விநாடி ஓய்ந்தார். யாரோ ஒருவர் அவரை நெருங்கி, ‘தங்கள் காதலி வந்திருக்கிறார். அரண்மனைச் சேவகர்கள் உள்ளேவிட மறுக் கிறார்கள்’ என்றார். ‘யாரிடமாவது சொல்லி, எப்படியாவது அழைத்து வந்துவிடு’ என்று சொல்லிவிட்டு, தான் சென் சபையினரைப் பார்த்தார். அகல விரித்த ஆயிரம் கண்கள் அந்தரத்தில் நிற்கிறோமே என்று முறை இடு வது போலிருந்தது. 

மல்ஹாரை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பாடி முடித்தார். சபையினரின் கரைகடந்த இன்ப வெறி பெருத்த ஆரவாரமாக மாறிற்று. 

அப்பொழுது ஒரு பாடகர் எழுந்து தலையைச் சிலுப் பிக் கொண்டார். அவர் கட்டியிருந்த சிகப்புத் தலைப் பாகை சண்டைக் கோழியின் கொண்டையைப் போலத் திகழ்ந்தது. 

‘கலைஞரே! மல்ஹார் ராகத்திற்குக் காந்தாரம் உண்டா? காகலி நிஷாதமும் கைசிக நிஷா தமும் உண்டா?’ என்று வினவினார். 

இதற்குப் பிறகுதான் சபையிலிருந்த வித்வான்களுக் கெல்லாம் சுய உணர்வு திரும்பிற்று. கண்திறந்தது. ‘ராகமோ மாறவில்லை. பாவமோ குன்றவில்லை. ஆனால் மரபுக்கு ஒவ்வாத ஸ்வரங்கள் மட்டும் எப்படிச் சேர்ந்தன அப்படிச் சேர்ந்தும் ராகத்தின் தன்மையைக் குலைக் காமல் ஒன்றி ஏமாற்றிவிட்டனவே, என்ன விந்தை!” என்று இசை நுணுக்கப் புதிரை விடுவிக்க முயன்று கொண்டிருந்தனர். 

தான்சென் தனக்குத்தானே சிரித்துக்கொண்டே பதிலளித்தார். 

“மிதந்தாலும் மல்ஹார்தான். நிலைத்தாலும் மல் ஹார்தான். படுத்தாலும் மல்ஹார்தான். மாற்றம் தான் புதுமையின் பிறப்பிடம். விரிவுற்றுப் பரவு வதற்கான கால்வாய். இதற்குப் பெயர்தான் மியான்கி மல்ஹார்.’ 

‘பெரியவர்கள் தடுக்கி விழுந்தால் கூட-‘ என்று மேலே வாதமிட முயன்ற வித்வானுக்கு, சபையினர் இடம் தரவில்லை. மூலைக்கொரு குரல் எழுந்து அவரை உட்கார்த்தி வைத்து விட்டது. 

தான்சென் யாரையோ எதிர்பார்ப்பது போலக் கூட்டத்தில் கண்ணோட்டம் விட்டார். பக்கத்திலிருந்த வரையும் குறிப்பிட்டுப் பார்த்தார் ‘தர்பாருக்கு வரும் படியான உடை இல்லை என்று திருப்பி அனுப்பிவிட் டார்களாம்’ என்று அவர் தான்செனிடம் குசுகுசுத்தார். 

‘திருப்பி அனுப்பி விட்டார்களா?’ தான்சென் மனம் இருண்டது. கண்கள் இருண்ட மண்டபம் இருண்டது. உட்கார்ந்திருந்தவர்கள் எல்லோரும் நிழ லானார்கள். என்ன சொல்கிறோமென்று அவருக்கே தெரியவில்லை. 

‘திருப்பி அனுப்பி விட்டார்களா? இருட்டில் உடையை எப்படிப் பார்க்க முடியும் ? இருட்டில் எப்படிப் பாட முடியும்? அரண்மனையில் கூடவா இருட்டு? இங்கு கூடவா கடமையில் வழுவல்? விளக்கை ஏற்றச் சொல்லுங்கள். இருட்டு தெரியாவிட்டால், கண்ணால் என்ன பயன்? விளக்கைப் போடட்டும்’ என்று தான்சென் உறுமினார். 

சபையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் விளங்க வில்லை. எப்படி விளங்கும் ? மாலை வெயிலின் மஞ்சள் பாளம் மண்டபத்து வளைவுகளூடே புகுந்து சபையின ருடன் இசையை மாந்திக்கொண்டு கண்ணெதிரே கிடக் கும்பொழுது தான் சென் சொல்வதற்காக இருட்டி விடுமா? விளக்கேற்றச் சொல்ல முடியுமா? அந்திக்கு முந்தி யார்தான் விளக்கேற்றுவார்கள் ? பைத்தியத்தி னுடைய வாடைக் காற்றோ என்றஐயம் சபையினர் நெஞ்சில் எழுந்த போதிலும்,இனமறியாத உண்மை ஒன்று அவருடைய பேச்சில் ஒலித்தது போலவும் தோன்றிற்று. ‘ஆனால், விளக்கை ஏற்ற மாட்டீர் களா? திரியைத் தூண்டி ஒளியைக் கட்ட விழ்த்து விடமாட்டீர்களா? மாட்டீர்களா? வேண்டாம். கொளுத்த வேண்டாம். நானே கொளுத்தி விடு கிறேன்’ என்று கூறிக் கொண்டே, மறுமுறை தான்சென் உறுமினார். 

ஒரு விநாடி அமைதி வழிந்தது. மறு விநாடி தான்சென் முனகினார். பிறகு தொடர்ந்து பாட ஆரம் பித்து விட்டார். உலைக் கூடத்தின் அடியிலிருந்து துருத்தியின் காற்று உந்தித் தள்ளும் ஜ்வாலையின் கொழுந்துகள் முதலில் தலை காட்டின. தான்செனின் குரல் வரவர உருகிக் கம்பியாகி, மேல் எல்லையில் புகை யாகி மருகிற்று. ‘தீபக்’ ராகமல்லவா உலவுகிறது? நெருப்பல்லவா எரிகிறது? ஒளி அல்லவா சுடர் விடு கிறது? உண்மையில் இங்கு இருட்டுத்தான். தான்செ னுக்குப் பைத்தியமில்லை. இப்படி ஒரு தோற்றம் சபை யினரைப் பற்றிக் கொண்டது. 

ஆனால், தான்சென் இந்த உலகத்தில் இல்லை. தீப லோகத்தில் மிதந்து சென்று கொண்டிருந்தார். குரலா, மின்னலா என்றே தெரியவில்லை. பயங்கரமான இடி யின் குமுறல் மண்டபத்தின் எதிரொலித்தது. மின்னல் வெட்டியது. மண்டபத்தில் தொங்கிக்கொண்டிருந்த லஸ்தர்களும் குளோபுகளும் திடீரென்று சுடர்விட் டெரிந்தன ! தீபக் ராகம் விளக்குகளை ஏற்றிவிட்டது! 

சபையினர் பிரமித்தனர், திகிலடைந்தனர். இருட் டில்லா விட்டால் சுடர்கள் முத்தைப்போல் எரியுமா? மண்டபம் இருட்டுத்தான். நாமும் நிழல்தான். தான் சென்தான் விளக்கு என்று ஒவ்வொருவர் மனத்திலும் தோன்றிற்று. 

விளக்குகள் சுடர் விட்டு எரியத் தொடங்கிய உடனே தான்சென் மூர்ச்சையாகி விட்டார். முகம் கன்றிவிட்டது இந்த உண்மை நிலையை உணர்வதற்கே சபையினருக்குச் சில நிமிஷங்கள் ஆகிவிட்டன. பரபரப் படைந்த சிலர், தான்சென் முகத்தில் பன்னீரை வாரி இறைத்தனர். 

தான்சென் கண்களை மெதுவாகத் திறந்தார். ஆனால், கைகள் மட்டும் அவர் வயிற்றைப் பிடித்த படியே இருந்தன! கொடிய சூலை நோய் அவரைத் திருகிப் பிழிந்துகொண்டிருந்தது கன்னத்தின் கதுப்பு களும் முகமும் வேதனையின் அலைகளை ஏந்தித் தவித்தன. 

சபையினருக்கு இந்த அனுபவம் புரியவில்லை. அரண்மனை வைத்தியர்கள் தான்செனின் நாடிகளைப் பிடித்துப் பார்த்தனர். நாடிகள் சரியாகப் பேசவில்லை! நோயின் மூலமும் தென்படவில்லை! வைத்தியர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். ஆனால், யார் முகத்திலும் தெளிவு தோன்றவில்லை. ஒரு வைத்தியர் மட்டும் தன் பையிலிருந்த கஸ்தூரியை எடுத்து வெற்றிலையில் தடவி, தான்செனிடம் நீட்டினார். 

நெருப்பில் நெய்யை விட்டால் அணையுமா?’ என்று தான்சென் தணிந்த குரலில் வெட்டிக் கேட்டார். 

‘எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லையே !” 

‘இதற்கு மருந்து உங்களிடம் இல்லை. தீபக் ராகத் திற்கு மருந்து மேக மல்ஹார்தான். யாரேனும் மேக மல் ஹார் பாடுவார்களா?’ 

இசைப் புலவர் யாரும் வாயைத் திறக்கவில்லை, தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார்கள். 

இரண்டு பேருக்குத்தான் மேக மல்ஹார் பாடத் தெரியும். ஒருவர் பாடும் நிலையில் இல்லை. மற்றொருத்திக்குத் தெரியும். ஆனால், அவளை இங்கு வரமுடியாத படி ஆசார வாசலிலேயே விரட்டி விட்டார்கள். இனி என்ன நடந்தால் என்ன?’ என்று தான்சென் வருந்தினார். 

அதற்குள் ஆசார வாசல் சம்பவத்தைப் பற்றிச் சபையினர் அறிந்துகொண்டு விட்டனர். உடனே அரண்மனைச் சேவகர்கள் பல்லக்குடன் சென்று, அவளைத் தேடிப் பிடிக்க முயன்றனர். 

பாதையோரத்தில் ஒரு கிராமக் கிணற்றண்டை அவள் தண்ணீர் இழுத்துக் கொண்டிருந்தாள். அரண் மனைச் சேவகர்களைக் கண்டதும் அவளுக்குப் பயம் உண்டாகவில்லை. 

‘என்னை உள்ளே போகக் கூடாதென்று அரண் மனையில் சொன்னார்கள். திரும்பி வந்துவிட்டேனே! இன்னும் என்ன?” 

‘உங்கள் மேல் குற்றமில்லை. அவர் எங்கள் அறி யாமையைச் சுட்டிக் காட்டினார். எங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. தீபக் ராகத்தைத் தான்சென் பாடியபொழுது புரிந்து கொண்டோம். அதனால்-‘ 

‘தீபக் ராகத்தையா பாடினார் ? தீபக்கையா ? நானில் லாத போதா?’ என்று புலம்பிக் கொண்டே, பல்லக்கில் ஏறி அமர்ந்து கொண்டாள். 

‘ஓடு ஓடு ஓடு ஓடு! அது, கொள்ளிவாய்ப் பிசாசா யிற்றே! ஓடு! ஓடு!’ 

பல்லக்கு அரண்மனை வாயிலை அடைந்ததும், கரு. முகிலைத் துரத்தும் பேய்க் காற்றைப்போல், அவள் தர்பார் மண்டபத்திற்குள் புகுந்தாள். 

மண்டபம் முழுவதும் வேதனைப்படும் முகங்கள் ! இசை மேடையின்மேல் தான் சென் வெல்வெட் திண்டின் மீது சாய்ந்து கொண்டிருந்தார். கண்கள் மூடி இருந்தன. கைகள் வயிற்றைப் பிடித்தபடியே இருந்தன. 

‘ஆ’ என்று ஆரம்பித்தாள். மேக மல்ஹார் ராகம் இனிய காற்றாய், நீர்த் துளியாய், ஆவியாய், மேகமாய் மண்டபத்தைக் கப்பிக் கொண்டது. வேதனைப்பட்ட சபையோர்கள் முகத்தில் கூட ஒரு அசைவு கண்டது. மேக மல்ஹாரை அவள் பாடிக்கொண்டே இருந்தாள். திடீரென்று உண்மையாகவே மழை பொழியத் தொடங்கி விட்டது. மழையைக் கண்ட கூட்டம் திகைத்தது, பிரமித்தது, தான்செனை நோக்கிற்று. 

அவளும் பாடிக்கொண்டே. தான்செனை நெருங்கினாள். மேக மல்ஹார் மழையை வரவழைத்துவிட்டது. ஆனால், தான்செனின் இமைகளைத் திறக்க முடியவில்லை. 

– பிச்சமூர்த்தியின் கதைகள்‌, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1960, ஸ்டார்‌ பிரசுரம்‌, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *