விருப்பப்படி!





ஏழுகிணறு என்ற ஊரில் பக்தவச்சலம் என்ற ஒரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவர் தன் நேர்மையான வணிகத்தின் மூலம் ஏராளமான செல்வத்தை சேர்த்து வைத்திருந்தார். தன் கடுமையான உடல் உழைப்பால் அவருக்கு பல நோய்கள் வந்தன. அந்த நோய்களுக்கான மருத்துவ செலவுகள் கூடியதால் சேர்த்து வைத்த செல்வம் கரைந்து கொண்டே வந்தது.
மனைவியை இழந்த அவருக்கு பிரபு என்றொரு பத்து வயது மகன் இருந்தான். தான் இறந்து விட்டால் தன் மகனின் நிலை என்னவாகும்? என்று நினைத்து வேதனை அடைந்தார். தன்னிடம் பணம் இருக்கும்போது வந்த சொந்தங்கள்… நோய் வந்து பணம் கரைந்தபோது எவரும் வராதது கண்டு மிகவும் வேதனைப்பட்டார். உலக அறிவு இல்லாத பத்து வயது மகனின் எதிர்காலத்தை எண்ணி மனம் கலங்கினார். மகனை எவர் பொறுப்பில் விட்டுச் செல்வது? அவருக்கு வியாபாரத்தின் மூலம் பழக்கமான “அனந்து’ என்பவர் நினைவுக்கு வந்தார். அவரை காண இல்லத்திற்கு சென்றார்.
ஒரு அரசு அதிகாரியான அனந்து நண்பனை அன்புடன் வரவேற்றார்.
“”நண்பரே! என் உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தே வருகிறது. நீண்ட நாட்கள் வாழ ஆசைதான். ஆனால், என் நோய்கள் என்னை விரைவில் மரணத்திற்குள் தள்ளி விடும் போலிருக்கிறது.
என்னுடைய மகன் பத்து வயது பாலகன்… அனாதையாக விட்டுச் செல்ல வேண்டியதாக இருக்கிறதே… என்று நினைக்கும் போது வேதனையளிக்கிறது. என் மகனை உங்களால் மட்டுமே, நன்கு வளர்த்து நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என, நம்புகிறேன். அவனுடைய எதிர்கால வாழ்விற்காக, உங்களிடம் பத்தாயிரம் வராகன் பொன்னை கொடுத்துவிட்டு போகிறேன்…” என்று சொல்லிக் கொண்டிருந்தபோது லேசாக, இருமல் வந்தது. வலித்த நெஞ்சை தடவிக் கொடுத்தார்.
“”கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள்.” என்றார் அனந்து.
“” நண்பரே… நான் ஒருவேளை இறந்துவிட்டால், தங்களிடம் கொடுக்கும் பொன்னை அவன் இளைஞனான பின்னர்… உமது விருப்பம் போல கொடுங்கள்… போதும்,”என்றார்.
“”தாங்கள் சொன்னது போலவே செய்கிறேன்.” என்றார் அனந்து.
இருவரும் ஒப்பந்தம் எழுதிக் கொண்டனர். பத்தாயிரம் வராகன் பொன்னை அனந்துவிடம் கொடுக்க, அவர் அதை வாங்கிக் கொண்டார்.
“”நண்பரே… என் மகனுக்கு உங்கள் விருப்பப்படி பொன்னைக் கொடுங்கள்.” என்று பக்தவச்சலம் கூறிவிட்டு எழுந்தார்.
அனந்து அரசு அதிகாரியென்றாலும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவார். நண்பன் வழங்கிய பணத்தை பல மடங்கு பெருக்க அப்பணத்தை வட்டிக்கு கொடுத்தார்.
சில நாட்களில் பக்தவச்சலம் இறந்து போனார்.
அனந்து, அவரின் மகனை தன் இல்லத்திற்கு வருமாறு கூப்பிட, அவன் தாய்மாமன் சோமாஸ்கந்தனோடு செல்வதாக கூறி அவருடன் சென்றான் பிரபு.
நூருடங்கள் ஓடின-
பிரபு இருபத்தைந்து வயது வாலிபனானான். அவன் அப்போதுதான் சிறு பலசரக்கு கடையை ஆரம்பத்திருந்தான். அக்கடையை மேலும் விரிவாக்கம் செய்ய சற்று பணம் தேவைப்பட்டது. அதைக்குறித்து மாமனிடம் பேசினான்.
அப்போது அவர், “”பிரபு… உன் தந்தை தான் இறப்பதற்கு முன்னர்… உன் எதிர்கால வளர்ச்சிக்காக… அவரின் நண்பர் அனந்துவிடம் பத்தாயிரம் வராகன் பொன்னை கொடுத்து விட்டு, நீ வாலிபனான பின்னர் அப்பணத்தை பெற்றுக் கொள்ளும்படியாக எழுதிக் கொடுத்து விட்டு, சென்றிருக்கிறார். அதை பெற்று வந்து தொழிலை பெருக்கு,”என்றார்.
“”மாமா… நல்ல நேரத்தில் நினைவுபடுத்தினீர்கள்,” என்று அவருக்கு நன்றி கூறிவிட்டு, அனந்தின் இல்லத்திற்கு சென்றான்.
தன் வீட்டு வாசலில் இளைஞன் ஒருவன் நிற்பதைக் கண்ட அனந்து, “”யாரப்பா நீ. உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். தந்தை இறந்த பிறகு இவரை அவன் 15 வருடங்களாக பார்க்கவே இல்லை.
“”வணக்கம் ஐயா… நான் பக்தவச்சலம் அவர்களின் மகன் பிரபு. என் தந்தையார் தங்களிடம் பத்தாயிரம் வராகன் பொன் கொடுத்ததாகவும், அப்பணத்தை நான் இளைஞன் ஆன பின் தங்களிடம் வாங்கிக் கொள்ள சொன்னதாகவும் என் மாமா கூறினார்.” என்றான்.
“”தம்பி… உன் மாமா கூறியது உண்மை. உன் தந்தையார் உனக்காக என்னிடம் பத்தாயிரம் வராகன் பொன் கொடுத்தது உண்மை. ஆனால், நானும் உன் தந்தையும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி உனக்கான பணத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன்… பெற்றுக் கொள்கிறாயா?” என்று கேட்டார் அனந்து.
“”ஐயா… என் தந்தையார் கொடுத்த பணத்தை இப்போது கொடுத்தால் அதை வைத்து வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வேன்.”என்றான் அனந்து.
“”தம்பி… இதோ உன் பணம்,” என்று அவனிடம் கொடுக்க, அப்பணத்தை வாங்கி எண்ணிப் பார்த்து விட்டு, “”ஐயா… இதில் ஆயிரம் வராகன் தானே இருக்கிறது. என் தந்தை பத்தாயிரம் வராகன் பொன்னல்லவா தங்களிடம் கொடுத்து சென்றிருக்கிறார்,” என பிரபு கேட்டான்.
“”தம்பி… உன் தந்தை பத்தாயிரம் வராகன் பொன் கொடுத்தார். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால், உன் தந்தையும், நானும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி என்னால் உனக்கு எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ… அவ்வளவு உனக்கு கொடுக்கவே ஒப்பந்தம் செய்துள்ளோம். எனவே, எனக்கு விருப்பமான அளவாக உனக்கு ஆயிரம் வராகன் பொன் கொடுத்திருக்கிறேன். உனக்கு இப்பணம் தேவையில்லை எனில் என்னிடம் கொடுத்து விட்டுச் செல்.” என்ற அனந்து பிரபுவின் கையிலிருந்த பணத்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார்.
“”ஐயா… நீங்கள் செய்தது துரோகம்… என் தந்தையை ஏமாற்றி விட்டீர்கள்… நான் மரியாதைராமனை சந்திக்கப் போகிறேன்,” என்று சற்று கோபமாய் கூறினான் பிரபு
“”தம்பி… யாரை வேண்டுமானாலும் சந்தித்துக் கொள்.” என்று அனந்து கூற பிரபு வெளியே வந்தான்.
மறுநாள் பிரபு, தன் மாமனோடு மரியாதை ராமனிடம் சென்று தனது பிரச்னையை கூறி வேதனைப்பட்டான்.
அனந்துவை அழைத்து வரச் சொன்னார் மரியாதைராமன்.
அனந்து நீதிமன்றம் வந்தார்.
“”அனந்து அவர்களே… பிரபுவின் தந்தை தங்களிடம் பத்தாயிரம் வராகன் பொன் கொடுத்தாகவும், அதை திரும்பி கேட்டதற்கு ஆயிரம் வராகன் பொன்னை கொடுத்ததாகவும் சொல்கிறார். இது தவறல்லவா?” என்று கேட்டார் மரியாதைராமன்.
“”மரியாதைக்குரிய நீதிபதி அவர்களே… நான் அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவன். நேர்மையான அதிகாரி என பெயரெடுத்தவன்… அப்படி நான் ஏமாற்று வேலையில் இறங்குவேனா? சொல்லுங்கள்! நண்பரும் நானும் ஒப்பந்தம் போட்டபடிதான் இவருக்கு பணம் கொடுத்தேன்,” என்றார் அனந்து.
“”உங்கள் ஒப்பந்தம் தான் என்ன… சொல்லுங்கள்?” என்று கேட்டார் மரியாதைராமன்.
“”மரியாதைக்குரிய நீதிபதி அவர்களே! பக்தவச்சலம் என் இல்லம் வந்தார். என்னிடம் பத்தாயிரம் வராகன் பொன் கொடுத்தார். பிறகு தன் மகன் வளர்ந்து வாலிபன் ஆன பின் அவன் வந்து பணம் கேட்டால் என் ஆசைப்படி, அவனுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று, கேட்டுக்கொண்டார். நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். பக்தவச்சலம் சொல்லியவாறே ஒப்பந்தம் எழுதிக் கொண்டோம். இதோ, அந்த ஒப்பந்த ஓலை. ஒப்பந்தத்தில் சொல்லியவாறே எனக்கு விருப்பமான ஆயிரம் வராகன் பொன்னை பிரபுவிடம் கொடுத்தேன். இதோ, அந்த ஒப்பந்த ஓலை,” என்ற அனந்து அந்த ஓலையை மரியாதைராமனிடம் கொடுத்தார்.
ஓலையை வாங்கிப் பார்த்த மரியாதைராமன் அந்த ஒப்பந்தத்தை பலமுறை படித்து பார்த்து விட்டு, “”அனந்தன் அவர்களே… தாங்கள் ஒப்பந்தப்படி சரியான முறையில் செயல்படவில்லை என்றே கூறுகிறேன்,” என்றார் மரியாதைராமன்.
“”நீதிபதி அவர்களே… நான் தவறு செய்து விட்டேனா?”
“”ஆம்.”
”எவ்வாறு?”
“”நேற்று பிரபுக்கு எவ்வளவு வராகன் பணம் கொடுத்தீர்கள்?”
“”ஆயிரம் வராகன்.”
“”பக்தவச்சலம் பொன்னில் நீங்கள் ஆசைப்பட்டு எடுத்தது எவ்வளவு?”
“”ஒன்பதாயிரம் வராகன்.”
“”அதாவது தாங்கள்… உங்களுக்கு விருப்பமான பொன் ஒன்பதாயிரம் வராகன் அப்படித்தானே…”
“”ஆமாம்.”
“”ஒப்பந்தப்படி உங்களுக்கு விருப்பமான ஒன்பதாயிரம் வராகன் பொன்னை பிரபுவிடம் ஒப்பந்தப்படி ஒப்படைக்க வேண்டியதுதான் முறையாகும். அதாவது ஒன்பதாயிரம் வராகன் பொன்னை தாங்கள் பிரபுவிடம் கொடுக்க வேண்டும். மேலும், தாங்களாகவே அவருக்கு கொடுத்த 1,000 வராகனும் பிரபுவையே சேரும். ஆகமொத்தம் 10ஆயிரம் வராகன் பொன்னை கொடுக்க வேண்டும். அடுத்து பக்தவச்சலம் கொடுத்த பத்தாயிரம் வராகனை வட்டிக்கு கொடுத்து வாங்கியிருக்கிறீர்கள். இந்த 15 வருட காலத்தில் அவை பல லட்சம் வராகன்களை உங்களுக்கு பெற்று தந்திருக்கிறது. எனவே, அதிலிருந்து ஒரு லட்சம் வராகனையும் அவனுக்கு கொடுக்க வேண்டும். பிரபுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் வராகனை நாளையே கொடுத்து விட வேண்டும். அப்படி செய்யாவிடில் ஒப்பந்தத்தை மீறிய குற்றத்திற்காக மூன்று வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.” என்று எச்சரித்தான் மரியாதைராமன்.
தீர்ப்பைக் கேட்டு அதிர்ந்த அனந்து, ஐயோ! கடவுளே… பிரபுவிடம் பத்தாயிரம் வராகனை ஏமாற்றாமல் ஒழுங்காய் கொடுத்திருந்தால் ஒரு லட்சம் மீந்திருக்குமே… என்று தனக்குள் புலம்பியபடி நடந்தார்.
– May 2011