விருந்து





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டின் முன் தெருவில் சின்னச் சின்னக் குழுக்களாய் நின்று பேசிக் கொண்டிருப்பவர்கள் தன்னை வினோதமாய்ப் பார்ப்பதாய் இவனுக்குத் தோன்றியது. படியேறி அந்த வீட்டுக்குள் நுழையும்போது, முன்னறையில் தன் மாமனாரின் கடையில் வேலை பார்க்கும் கசங்கிய உடை தரித்த சில தொழிலாளர்கள், சுமை தூக்கும் கூலிகள், பிறகு உஞ்ச விருத்திக்கு ஏதாவது கிடைக்காதா என்று குழிந்த விரிந்த விழிகளுக்குள் ஏக்கத்தின் நிழலைச் சுமந்துகொண்டு, அடிக்கடி உள்ளே எட்டிப் பார்த்து நிற்கும் சிலர்.
வீட்டு மாப்பிள்ளை தன்னை வாவென்று யாரும் சொல்லாதிருந்தும், திறந்து கிடக்கும் வீட்டுக்குள் நுழையும் நாயாய் எப்படி மேலும் உள்ளே நுழைவது என்ற ஒரு ஆதங்கம் உள்ளுக்குள்ளே குடைந்தாலும், அந்நியர்களை உபசரிப்பதில் ஈடுபட்டிருக்கலாம். நான்தான் உரிமையுள்ளவனாயிற்றே என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிச் சமாளித்து, செருப்பை அங்கே ஒரு மூலையில் கழற்றிப் போட்டுவிட்டு, நடு முற்றத்தில் இறங்கி, கூடத்தை நோக்கி மெல்ல நடக்கும்போது…
அங்கே குழல் விளக்கின் வெண் வெளிச்சத்தில் நனைந்து, சுழன்றுகொண்டிருக்கும் மின் விசிறிக் காற்றில் உலர்ந்து, ஸெட்டியில் உட்கார்ந்திருப்பவர்களை இவன் விழிகள் வெறிக்கின்றன.
தன் மாமியாரின் அண்ணா… அவரை அடுத்து தன் பிராயம் வரும் அவர் மூத்த மகன், தன்னைவிட பத்து வயசுக்காவது இளைய அவர் கடைசி பையன், தன் மாமனாரின் தம்பி, அவர் மகள், பிறகு தன் மனைவி மல்லிகாவின் தங்கை கமலத்தின் கணவன் ரங்கன், ரங்கனின் அப்பா,
ரங்கனின் தம்பிமார்கள் அவர்கள் எல்லோரும் தன் கடைசி தம்பியைவிடப் பிராயம் குறைந்தவர்கள். தன் மைத்துனனின் நண்பன், மைத்துனனின் மனைவியின் தம்பி, நடையில் ஓரிரு பெண்கள் எல்லோரும் தன்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு அவர்கள் பேச்சில் ஈடுபட்டார்கள். பெண்கள் இவனைக் கண்டதாகவே பாவிக்கவில்லை. இவனுக்கு உட்கார நாற்காலி எதுவும் மீதியில்லை. பொடிப் பையன்களை எழுந்திருந்து இவனுக்கு இடம் கொடுக்க யாரும் சொல்லவும் இல்லை. ரங்கன் அவன் அப்பா தம்பிமார்கள் இவர்களின் முகங்களிலிருந்து தன்னை நோக்கி ஒரு இளக்காரம் பிரவகிப்பது போல்…
ஒரு கணம் அங்கே நிற்பதற்குள் தன் எண் சாண் உடம்பும் ஒரு சாணாகி விட்டதுபோல் ஒரு குமைச்சல்.
மெல்லத் திரும்பி இவன் முற்றத்தில் இறங்கினான். முன் அறையில் தன் செருப்புக்களைக் கழற்றிப் போட்டிருந்த மூலையில் வந்து, கீழே தரையில் உட்கார்ந்தான். கொட்டு, நாதஸ்வரம், சிங்கி இவைகளுடன், வாசிப்புத் தொடங்க நேரமாயிட்டுதா, இல்லையா என்று யோசித்தவாறு பரக்க பரக்கப் பார்த்துக்கொண்டு, அந்த அறையில் எதிர் கோடியில் உட்கார்ந்திருந்த மேளக்காரர்கள் இவனை உற்றுப் பார்த்தார்கள்.
மனத்தில் தாறுமாறாகச் சில காட்சிகள்.
கமலத்தைப் பெண் பார்க்க ரங்கன் வரும்போது கமலத்தை அற்புதமாக அலங்கரிக்க மல்லிகா மேற்கொண்ட சிரமம்.
பிறகு, கல்யாணத்திற்குப் பிறகு, வேலை உயர்வு கிடைத்து வெளியூர் செல்வதை முன்னிட்டு விடைபெற, ரங்கன் இவன் காரியாலய நேரம் தெரிந்திருந்தும் இவன் இல்லாத நேரத்தில் இவர்கள் வீட்டுக்கு வந்து விட்டுச் சென்றது, ‘இது ஏன்?’ என்று கேட்டதற்கு, ‘கல்யாணம் கழிந்த பிறகு என் தங்கையையும் அவ புருஷனையும் நம்ம வீட்டுக்கு நீங்க கூப்பிட்டு விருந்து வைத்தேளா? வெகுமதி கொடுத்தேளா?’ என்று மல்லிகா குத்திக் காட்டியது, ‘வீட்டுக்கு யார் வந்தாலும் அவனுக்குச் சந்தேகம் தான், மகா சந்தேகப் பிராணி’ என்று தன் மாமனார் ஊர் முழுவதும் வதந்தியைப் பரப்பியது, இவனைக் கண்டால் உடனேயே முகத்தைத் திருப்பிக்கொண்டுவிடும் ரங்கன் உட்பட்ட அவன் குடும்பத்தார்களை, ஓரிரு தடவை அவர்கள் தங்கள் வீட்டு நடை தாண்டிச் செல்லும்போது மல்லிகா ஓடிப்போய் வீட்டுக்குக் கூப்பிட்டு உபசரித்தது.
‘இப்போதான் ஊர் அழைத்து விட்டுத் திரும்ப வாறாங்களா?’ என்று யாரோ சொல்வது கேட்கிறது. இவனைத் தாண்டிக் கலகல வென்று பேசிச் சிரித்தவாறு வெளியிலிருந்து வீட்டினுள்ளே பட்டும் பவிசுமாகச் செல்லும் மல்லிகா, கமலம், தன் மாமனாரின் சகோதரர்களின் பெண்கள்! அவர்கள் யாருமே குறிப்பாக மல்லிகா தன்னைக் கண்டிருக்க மாட்டாளா இவன் நெஞ்சுக்குள் உறுத்தல்.
இவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்தாகிக் கொண்டி ருக்கிறது. அன்று மத்தியானம், அனுமதித்திருக்கும் முக்கால் மணி நேரத்திற்குள் சாப்பாட்டை அள்ளிப் போட்டு விட்டுக் காரியாலயத்திற்கு ஓட இவன் பரபரத்துக் கொண்டிருக்கையில், இவன் மைத்துனன் சுந்தரமும், அவன் மனைவி கனகமும் காரில் வந்து இறங்கினார்கள். ‘இங்கேதான் முதலில் வாறோம். மகள் ராஜம் சமைந்தாள். ராத்திரி ஒன்பது மணிக்குத் தலைக்குத் தண்ணி ஊற்றணும், ஊர் அழைக்க மல்லிகாவை இப்பவே அனுப்பணும்…’
இவன் ‘சரி’ என்றான். அவர்கள் போனவுடன், ‘எங்க அம்மா அன்னிக்கே சொல்லியிருக்கிறாள். ஒரு குலைப் பழமும் அஞ்சு செட்டு வெற்றிலையும், ஒரு கிலோ சர்க்கரையும் நான் போகும்போது கூடகொண்டுபோகணும்’ என்றாள் மல்லிகா.
மாசக் கடைசி. இவன் பர்ஸில் கூடிப் போனால் இரண்டு ரூபாய்க்கு மேல் இருக்காது. இதை அவளிடம் சொல்வதில் பயனில்லை.
‘சரி சரி நீ புறப்படு’ என்று விட்டு இவன் செட்டியார் கடைக்கு ஓடினான். காரியாலயத்திற்கு வேறு நேரமாகிக் கொண்டிருக் கிறது. எப்படியோ அவள் சொன்ன சாமக் கிரியைகளை எல்லாம் வாங்கி அவளையும் குழந்தைகளையும் இங்கே அனுப்பி வைத்து விட்டு, இவன் ஓடும்போது,
‘ஆபீஸிலிருந்து நீங்க நேரா அங்கே வந்து விடுங்கோ’ என்று உத்தரவிட்டாள் அவள்.
இப்போது கொட்டு வாத்தியக்காரர்கள் அமர்க்களமாய் ஜமாய்க் கத் தொடங்கி விட்டார்கள். வெளியில் இருந்து யார் யாரோ விருந்தினர்கள் வருகிறார்கள். அவர்கள் உள்ளே போய்ப் பார்த்து விட்டு, இங்கே மறுபடியும் திரும்ப வந்து, இங்கே எப்படிக் கீழே உட்காருவது என்று கீழே உட்கார்ந்திருந்த இவனை வியப்புடன் பார்த்துவிட்டுத் தயங்கி நிற்கிறார்கள்.
இவன் மாமனாரின் தலை தெரிகிறது. ‘ஏய் யாரங்கே… சும்மா பார்த்துக்கிட்டு நிற்கிறீங்களா! அந்தப் பெஞ்சியை எடுத்துப் போடு, உட்கார இடம் இல்லாமல் பெரியவங்க நிற்பது தெரியல்லையா…?’ என்று அதட்டியதும், கடைப் பையன்கள் சுறுசுறுப்பானார்கள். கீழே உட்கார்ந்திருந்த அவனை அப்போது தான் பார்த்தவராய், ‘என்னா… இங்கே உக்காந்துட்டீங்க…’ என்று பக்கத்தில் வந்து கேட்க, ‘அதுக்கென்ன’ என்று கூறி விட்டு, ஒரு புன்முறுவல் பூக்க இவன் முயற்சித்தான். புதுசாய் அங்கே கொண்டு போடப்பட்ட பெஞ்சியில், நின்று கொண்டிருந்தவர் கள் எல்லோருக்கும் உட்கார இடம் போதவில்லை. பெஞ்சில் உட்கார்ந்தவர்கள் போக ஓரிருவர் இவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்திருந்தார்கள். மீதியுள்ளவர்கள் நின்று கொண்டிருந்தார் கள். பெஞ்சில் உட்கார இவனிடத்தில் மாமனார் சொல்ல வில்லை. இதற்கிடையில் காரில் வந்திறங்கிய இரண்டு மூன்று பேர்களை அவர், ‘வாங்கோ… வாங்கோ… என்னா அங்கே நிண்ணுட்டீங்க… உள்ளே போய் உட்காரலாமே…’ என்று அமர்க்களமாய் வரவேற்று உள்ளே கூட்டிக்கொண்டு போகிறார். அவர்களுக்கு உட்கார அங்கே இப்போது எப்படி இடம் வந்தது என்று இவனுக்குத் தெரியவில்லை.
இப்போது முற்றம் அமர்க்களப்பட்டது. அங்கிருந்த யாரோ, ‘தலைக்கு தண்ணி ஊத்தப் போறாங்க… கெட்டி மேளம்… கெட்டி மேளம்’ என்று சத்தம்போட, மேளக்காரர்கள் அப்பாடா… தீர்ந் ததே என்று தம் வாத்தியங்களில் கை வரிசையைக் காட்டினார்கள்.
இவனைச் சுற்றியிருந்த கடை சிப்பந்திகள், கூலியாட்களுடன்கூட இவனுக்கும் வெற்றிலை, பழம், சர்க்கரை வழங்கப்பட்டது. அவன் அதை வாங்கித் தன் செருப்புகள் கிடந்த இடத்தில், மிதிபடாதிருக்க ஒதுக்குப்புறமாய் வைத்தான்.
ஒவ்வொருவராய் விடை பெற்றுக்கொண்டு இறங்கிச் செல்லத் தொடங்கினார்கள். சிலர் அடுத்த நிகழ்ச்சி நிரலுக்காக உள்ளே பார்த்துக்கொண்டு ஒன்றும் தெரியாதவர்களைப்போல ஒதுங்கி நிற்கிறார்கள்… இவனும் வெளியேற மெல்லத் திரும்பிய போது, சுந்தரம் எதிர்ப்பட்டான்.
‘என்ன காணவே இல்லையே… எப்போ வந்தேள்…?’
‘நான் எட்டு மணிக்கே வந்தாச்சு… உங்களைத்தான் காணல்லே…’
‘சரி… சரி… போய் விடாதீங்க… சாப்பிட்டு விட்டுத்தான் போகணும்…’ என்று அவன் உபசரித்தபோது இவனுக்கு வயிற்றில் பகீரென்றது.
கைக்கடிகாரத்தில் மணி பதினொன்றரை தாண்டி விட்டிருந்தது. இந்த நேரத்தில், ஒரு பெப்டிக் அல்ஸர் பேஷண்டான தான் சாதம் சாப்பிட்டால், பிறகு சரிதான்…!
‘இல்லை… நான் ராத்திரி சாப்பிடுவதில்லை… அதுவும் இந்த நேரத்தில்…! காப்பியானாலும் பரவாயில்லை…’ என்று இவன் சொல்வதை சுந்தரம் செவிமடுத்ததாய்த் தெரியவில்லை. பக்கத்தில் கையில் பெரிய ஒரு பொட்டலத்துடன் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒருவனிடம், ‘கோதண்டம்… மணி பதினொன்ணாச்சு… நீ இப்போ நடந்து போகவேண்டாம்… காரை அனுப்புகிறேன்’ என்று விட்டு டிரைவரைக் கூப்பிட்டு அவனை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வரக் கட்டளை இட்டுக் கொண்டிருந்தான்.
இப்போது எங்கிருந்தோ மல்லிகா இங்கே ஓடி வந்தாள். இவனைத் தனியாகக் கூப்பிட்டு, ‘நீங்க சாப்பிடாமல் போகக் கூடாது… என் அண்ணாவும் அப்பாவும் என்ன நினைப்பாங்க… பெயருக்காவது உட்கார்ந்து எழுந்திருங்கோ…’ என்றாள்.
இவனுக்கு நெஞ்சுக்குள்ளிருந்து குபீரென்று ஆத்திரம் பீறிட்டுக் கொண்டுவந்தது. மற்றவர்கள் போகட்டும். இவளுக்குத் தன் உடல் நிலைமை சரிவரத் தெரியும். அடிக்கடி இவனுக்கு நேரும் ப்ளீடிங்குக்கு நேரடி சாட்சி; அப்படி இருந்தும் இப்படித் திடீரென்று உபசரிக்கத் தொடங்கி விட்டாளே.
கூடத்தில் இலைகள் போடப்பட்டிருந்தன. இவன் உட்கார்ந்து விட்டுப் பார்த்தபோது எதிர் வரிசையில் உட்கார்ந்திருக்கிறான் ரங்கன். கூட்டுக்குள் விளிம்பிக் கொண்டிருந்த மல்லிகா, இவனுக்கு முந்திய இலைவரை விளம்பி விட்டு, எதிர் வரிசையில் ரங்கன் இலையில் விளிம்பியபின், இவன் இலையில் போட்டாள். ரங்கன் முகத்தில் தொனிக்கும் குறும்புச் சிரிப்பைப் பார்க்காதவனைப் போல், வேறெங்கோ சூன்யத்தில் கண் நட்டு இவன் உட்கார்ந்திருந்தான். இருந்தும் பக்கத்தில் உட்கார்ந்திருப் பவர்கள் தன் முகத்தை உற்றுப் பார்ப்பதை உணர இவனால் முடிகிறது.
சாதம் போடும்போதும், சாம்பார் ஊற்றும்போதும் இதுவே திரும்ப நடந்தது. கமலம் சாமர்த்தியமாக அவள் கணவன் இலைக்கு விளிம்பி விட்டு, இவன் இலைக்கு வந்து கொண்டிருந்ததையும் கவனிக்காமல் இருக்க இவனால் முடியவில்லை.
சாப்பிட்டதாய் பெயர் பண்ணி விட்டு இவன் கை கழுவிக் கொண்டிருக்கும் போது மல்லிகா மறுபடியும் பக்கத்தில் வந்து சொன்னாள்.
‘சங்கதி எல்லாம் சரி. சடங்கு அன்னிக்கு ஒரு பவுனாவது நாம் கொடுக்கணும். எனக்கு ஒரே அண்ணன். அண்ணனுக்கு ஒரே மகள் ராஜம். ஸ்வீட் ஐந்நூறாவது வேணும். இப்பவே சொல்லி விட்டேன், கேட்டேளா!’
இவனுக்குத் தலை சுழன்றது.
‘சரி, சரி நான் போறேன்.’
‘நீங்கள் போங்க. நான் ரெண்டு நாள் இங்கே நிண்ணுட்டு வாறேன்.’
சென்ற மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சி, இவன் அகக்கண்ணில் மின் வெட்டியது.
அர்த்த ராத்திரி வந்து படபடவென்று வெளிக் கதவைத் தட்டினார் அவன் மாமனார். கதவைத் திறக்கும் போது காருக்குள் இருளில் தெரியும் கமலம், ரங்கன் முகங்கள். அவள் அக்காவுக்கு சுகக் கேடு ரொம்ப கூடுதலா இருக்குது. ‘மல்லிகாவை கூட்டிக்கிட்டுப் போய்விட்டு, கொஞ்சம் கழிந்து திரும்பக் கொண்டுவந்து விட்டு விடுகிறேன்’ என்கிறார் மாமனார் கலவரத்துடன். ‘சரி இங்கே குழந்தைகள் எல்லோரும் தூங்குகிறார்கள். நான் பார்த்துக் கறேன். தகவல் சொல்லி விடுங்கள்’ என்று சொல்லி மல்லிகாவை மாமனார்கூட அனுப்பி வைக்கிறான். அன்று இரவு முழுவதும் லைட் எல்லாவற்றையும் போட்டுக்கொண்டு குட்டி போட்ட பூனையாய் மனம் படபடக்க வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாய் அவன் நடந்துகொண்டிருந்தான். மல்லிகாவும் வரவில்லை. தகவலும் இல்லை. பிறகு தெரிந்தது. அவள் அக்கா வீட்டில், இவனைப் பற்றி ஞாபகம் இல்லாமல் மல்லிகா, கமலம், ரங்கன், இவன் மாமனார், மாமியார் எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் என்று.
கமலம் இப்போது வெளியில் வந்து தன் அக்காளுக்காக இவனிடம் சிபாரிசு செய்தாள்:
‘அக்கா இங்கே நிற்கட்டும். நானும், ரெண்டு நாள் கழிஞ்சுதான் போவேன். சரிண்ணு சொல்லுங்கோ.’
தன்னைப்போல் பெண்டாட்டியையும் கூட்டிக்கொண்டு ரங்கன் தனிக் குடித்தனம் போகவில்லை. வீட்டில் கமலம் இல்லா விட்டாலும் அவள் காரியங்களைப் பார்க்க அவன் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
‘அங்கே எனக்குப் பொங்கிப் போட யார் இருக்கிறாங்க. நான் ஒரு சீக்காளி. ஹோட்டலில் சாப்பிட்டால் சரிப்படாது.’
விருந்துக்கு வந்திருக்கும் மற்ற ஆண்கள், பெண்கள் தன்னைக் கேலியாய்ப் பார்ப்பதில் கூச்சப்பட்டுக்கொண்டு அவன் இப்படிச் சொன்னபோது, ‘உங்களுக்கு எப்போதும் உடம்புக்கு இப்படித் தான். பாவம், எப்போதும் வீட்டோடு அடைஞ்சு கிடக்கத்தான் அவளுக்கு விதிச்சிருக்குது’ என்று சொல்கிறாள் மாமியார்.
இவன் முகத்தில் சம்மத பாவத்தைக் காணாமல் வெகுண் டெழுந்த மல்லிகா சத்தம் போட்டாள். ‘நீங்க என்னை இப்படிக் கஷ்டப்படுத்துவதினாலெத்தான், உங்க உடம்பிலெ சுகக்கேடு விட்டு மாறாமல் இருக்கு. நாளைக்கு உங்க அஞ்சு தங்கச்சி மார்களும் நாசமாகத்தான் போறாங்க. பெண்ணடி பாவம் சும்மா விடாது. ஊர் முழுவதும் சிரிக்கப் போறது.’
இவன் செருப்பில் காலை நுழைத்தவாறு, ‘நான் முன்னால் போறேன். சாப்பிட்டுவிட்டு நீ இன்னிக்கு வராட்டி, பிறகு அங்கே வரவே வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுப் படி இறங்கும் போது, அவன் மாமனார் யாரிடமோ, ‘இந்த மாப்பிள்ளைக்கு எப்போதுமே முன் கோபம் கொஞ்சம் ஜாஸ்தி, ஒரு பொறுமை இல்லை’ என்று ஒரு சகஜ பாவத்துடன் சொல்லிக் கொண்டிருப் பது இவன் செவியிலும் விழுந்தது.
– 23.08.1975 – தீபம் 11/1975.
– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.