விருந்தனுபவம்




(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புறப்படும்பொழுதே அவள் கணவர் ‘அஸ்து’ என்று ஆக்ஷேபங்களைக் கிளப்பினார். “அம்மாஞ்சி கூட ஸிம்லாவுக்கு மாத்தலாகிப் போய்விட்டான். நீ யாராத்தில் போய்த் தங்குவாய்? சர்மா வீட்டார் ஒரு மாதிரி மனிதர்கள். உனக்குச் சரிப்பட்டு வருமா?” என்றார்.
அவளென்ன, ஏதாவது சம்பந்திகள் உபசாரத்தை எதிர்பார்த்துப் போகிறாளா ? ஸங்கீத விழாவுக்கு அதி லும் முக்கியமாக அங்கு நடக்கப்போகும் சர்ச்சைகளுக்குப் போகவேண்டும். தனிச் சௌகரியம் ஒன்றையும் அவள் கோரவில்லை. தங்குவதற்கு ஓரிடம்; அவ்வளவு தான் அவள் கேட்பது.
இந்தத் தீர்மானத்தோடு சர்மாவின் மனைவிக்குத் தன் வரவைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதி முதல் நாளே போட்டுவிட்டு மறுநாள் பட்டணம் கிளம்பிவிட்டாள் ஜானகியம்மாள். அவள் தந்தை அவர் காலத்தில் பெரிய ஸங்கீத வித்துவான். அவர் தம் அருமையான ஒரே பெண் ணுக்கு மிகுந்த ஆசையுடன் சாஸ்திர ரீதியோடு ஸங் கீதத்தை நன்கு கற்பித்தார். வித்தை என்னவோ பூர்ணமாகத்தான் அவளுக்கு வந்தது. ஆனால் அதற்கு ஏற்ற குரலைத்தான் ஈசுவரன் அவளுக்கு அளிக்கவில்லை. ஸங்கீதத்தில் விஷயங்கள் எவ்வளவு தெரிந்தபோதிலும் அதை வெளிக்காட்டிச் சோபிக்கச் செய்யக் குரலன்றோ முக்கியமாக அமையவேண்டும் ! இருப்பினும் அவளுக்கு ஏற்பட்டிருந்த ஞானமிகுதியால் ஒருவாறு சமாளித்து வந்தாள் என்றுதான் கூறவேண்டும். இப்பொழுது வயசு ஆனதில் அது பின்னும் கொஞ்சம் குறைந்து போயிற்று. அதை அவள் அறிந்திருந்தாளோ என்னவோ ?
அவளுக்கு இருக்கும் வித்வத்துக்காக வேண்டி வருஷா வருஷம் விழாவின் பொழுது நடக்கும் சர்ச்சைகளுக்கு அவளுக்கு அழைப்பு வருவதும் அவளும் சென்று தனக் குத் தெரிந்த விஷயங்களைச் சபையில் வித்துவான்களான பல ஆடவர்கள் முன்னிலையில் விவாதித்துக் கௌரவம் பெறுவதும் வழக்கமாக இருந்தது. ஒரு ஸ்திரீக்குத் தெரிந் திருப்பவைகளுக்கு மதிப்பு அதிகந்தானே. அதில் அவ ளுக்கு இருந்த பெருமை மற்ற ஸ்திரீகளை எல்லாம் சிறிது தாழ்வாகவே கருதச் செய்தது. எல்லாருடைய படிப்பும் பாட்டும் அரைகுறைதான். வித்துவான்களுக்குச் சரியாக விவாதிக்கும் அவள் சக்தி யாருக்கு உண்டு?
பெருமை கொள்வ தென்னவோ நியாயமானதே. ஆனால் அதற்காக அவள் யார் ஸங்கீதத்தையும் காது கொடுத்துக் கேளாமலிருந்தது பெரும் தவறாக இருந்தது. எதுவும் ‘குப்பை’ என்பது அவள் கேளாமலே கொண்ட தீர்மானம். அவள் பெண்கள் இருவருக்கும் பாட்டு லவ லேசமும் வராததுடன் அதில் ஞானமும் ஏற்படாமல் போகவே இப்பொழுது எல்லோருமே ஒன்றும் தெரியா தவர்கள் தாம் என்பதாக ஜானகியம்மாள் சந்தேகமறத் தீர்மானித்துவிட்டாள். அப்படி அவள் தீர்மானித்தது அவளுக்கு மிகுந்த நன்மையாயிற்று. இல்லாவிடில் தன் தந்தைக்குப் பிறகு அவருடைய வித்தை அவ்வளவுக்கும் அவர் வம்சத்தில் ஒரு வார்சு இல்லாமல் போனதை நினைத்து அவள் மனம் உடைந்தே போயிருப்பாள்.
எழும்பூர் ஸ்டேஷனில் அவளுக்காகச் சர்மா வீட்டு வேலையாள் தான் காத்திருந்தான். வீட்டு மனிதரோ அவர் காரோ வரவில்லை. வாடகை மோட்டார் பேசி வீடுபோய்ச் சேர்ந்தாள் ஜானகி. இக்காலத்துப் ‘பெட்ரோல்’ நெருக்கடிக்கு அவள் கடிதப்படி வரத் தவறினால் எண்ணெய் வீணாகிவிடுமே என்கிற அவர்கள் சிக்கனம் அது. ஸ்டேஷன் சிற்றுண்டிச் சாலையில் காபி சாப்பிட்டதாகச் சொல்லவும், அவர்கள் மறுபடியும் தங்கள் வீட்டு நல்ல காபியைக் கொஞ்சம் கொடுத்து, உபசரிக்க முன் வரவில்லை. ஒவ்வொருவருக்குப் போல ஜானகியம்மாளுக்குக் காபி முக்கியமில்லை யாதலால் அவளும் அதைப் பொருட் படுத்தவில்லை. ஒவ்வொரு காரியத்திலிருந்தும் அவர்கள் மிகுந்த செட்டும் கட்டுமான பேர்வழிகள் என்பது அவளுக்கு நன்கு தெரிந் தது. கணவர் எச்சரித்ததன் நோக்கமும் இதுதான் என்று கண்டுகொண்டாள். மரியாதைக்குக்கூடச் சர்ச்சைகள் நடக்கும் வேளைகளில் சபாவுக்குப் போக அவர்கள் மோட் டாரை அவளுக்குக் கொடுப்பதுபற்றிப் பேச்சே எடுக்க வில்லை.
அவர்கள் கொடுத்திருந்தால் மட்டும் ஜானகியம்மாள் அதை உபயோகப் படுத்திக் கொண்டிருப்பாளா? மாட்டாள். இப்பொழுதிருக்கும் ‘பெட்ரோல் ‘ அருமை அவள் அறியாததல்ல. அதுவும் தன் வருகையினால் அவர்களுக்குச் சிறிது சிரமம் கொடுக்கவும் அவள் விரும்பவில்லை. காசை எறிந்தால் வாடகை வண்டிகள் கிடைத்துவிட்டுப் போகின்றன என்பது அவள் சித்தாந்தம். ஒன்றையும் அவர்களிடம் அவள் எதிர்பாராததனால் அவளுக்கு ஏமாற்றமோ வருத்தமோ உண்டாவதற்கில்லை.
சர்மாவின் பெண் ஸரோஜா வெகு நன்றாகப் பாடுவ தாக அவர்கள் வீட்டில் எல்லோருடைய அபிப்பிராய மும். நல்ல கச்சேரி கேட்கவேண்டியது அவளுக்கு முக் கியம் என்பதற்காகச் சர்மா பத்துநாள் கச்சேரிக்கும் தனக்கு, பெண்ணுக்கு, மனைவிக்கு மூன்று பேருக்கும் டிக்கெட்டுகள் வாங்கியிருந்தார். சாயங்காலம் மட்டும் எல்லாரும் தவறாமல் போய் வந்தார்கள். ராகங்களின் அபூர்வ சஞ்சாரங்கள் முதலியவைகளைப் பற்றி அவர்கள் துளிக்கூடச் சிரத்தை காண்பிக்கவே இல்லை. ” பாடுகிற தாகச் சொல்லப்படும் பெண்ணே கவனிக்கவில்லையே ” என்று ஜானகியம்மாள் அங்கலாய்த்தாள். ஏனெனில் அன்றன்று சர்ச்சையில் ஏதாவது விசேஷங்கள் அவள் சொல்ல நேர்ந்தால் அது செவிடன் காதில் சங்கு ஊதி னதுபோல்தான் இருந்தது. ‘சாஸ்திரம் தெரியாமல் எனன ஸங்கீதம் வேண்டியிருக்கு? அதற்கு ஏற்ற ஞானந்தான் இருக்கும்” என்று நினைத்தாள்.
“அம்மா! ஸரோஜா பாட்டை நீங்கள் ஒரு நாள் கட்டாயம் கேட்கவேண்டும் என்று கணவனும் மனை வி யும் ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்து ஒரு நாள் காலை அதற்கு ஏற்பாடும் செய்தார்கள். சில சிநேகிதர்கள், சபாவிற்கு வந்திருக்கும் ஒன்றிரண்டு வித்துவான்கள், இப் படியாக ஏழெட்டுப் பேர்கள் கொண்ட ஒரு சிறு கூட்டம். ஜானகியம்மாள், ‘ஸங்கீத விஷயம் ஒன்றும் தெரியாமல் இந்தப் பெண் என்ன பாடப் போகிறது?’ என்று நினைத் தாள். தன்னைக் கட்டாயத்தின் பேரில் கேட்கவைப்பார்களே என்பது அவள் கவலை. “வயிறு நிரம்பும்படிகூட அவர்கள் வீட்டில் விருந்தினருக்குச் சாப்பாட்டு உபசரணை இல்லை. அதற்கு மேலாக இந்தப் பாட்டை வே று கேட்க வேண்டுமே” என்பது அவள் விசாரம்.
ஆனால் அவளையும் அறியாமல் அவள் இரண்டுமணி தேசகாலமல்லவோ பாட்டைக் கேட்டிருக்கிறாள்! என்ன அதிசயம்! அந்தப் பெண்ணின் குரல் அவ்வளவு இனிமை யாக இருந்தது. ஸ்வரங்கள் சுத்தம், வார்த்தைகள் சுத் தம், தான சுத்தம், யாவும் நன்கு பொருந்தியிருந்தன. சாஸ்திரம் என்பதாக ஒன்றைத் தனியாகக் கற்காமலே இவ்வளவும் அதில் அமைந்திருந்தது. வந்திருந்த வித்து வான்களும் ஸபாஷ் என்றுதான் தலையாட்டினார்கள். சர்மாவுக்கும் அவர் மனைவிக்கும் பெருமையும் ஆனந்தமும் சொல்ல முடியாது. ஜானகியம்மாளுக்கு மட்டும், “உன் னுடைய சாஸ்திர அறிவு என்னத்திற்குப் பிரயோஜனம்! இதன் இனிமைக்கு ஈடாகுமா!” என்று தன்னையே ஏளனம் செய்வதுபோல் இருந்தது அது. இதற்குமுன் எந்தப் பெண் பாடுவதையாவது அவள் நிதானித்துக் கேட்டிருந்தாலல்லவா இந்த நாளில் ஸங்கீதக் கலை எல்லாரிடமும் எவ்வளவு விருத்தி பெற்றிருக்கிறதென் பது அவளுக்குத் தெரியவரும், அவள் ‘கிணற்றுத் தவளையாக’ இருந்ததை அவளே அறிந்திருந்தால் அன்றோ! ‘யாருக்கும் எதுவும் தெரியாது’ என்பதுதான் அவள் சித்தாந்தமாயிற்றே.
ஏதோ கட்டாயத்தின்பேரில் கேட்டது பிரமாத மாகத் தோன்றிவிட்டது. கவிதை எழுதுவதின் நியதி களை உணராவிடினும், பிறவிக் கவிக்கு அந்த நியதிகள் தாமாகவே வரையறை செய்து கொள்வதுபோல அந்தப் பாட்டும் தனி இனிமையுடன் பிழை சிறிதும் இல்லாமல் அவள் செவிகளில் தொனித்தது. அவள் இருதயத்தைப் பாரமாய் ஒன்று அழுத்துவதாக உணர்ந்தாள். தன் ஏகபோக உரிமையான சொத்தை யாரோ அயலார் அபகரித்துக் கொண்டதுபோல் அவள் மனம் பெரிதும் வருந்திற்று.
சர்மாவும் அவர் மனைவியும் விஷயமொன்றும் புரியா மல் தங்கள் பெண் பாடுகிறாளென்கிற ஒரே மூட ஆனந் தத்தில் முழுகியிருப்பதைப் பார்க்கவும் ஜானகியம்மா ளுக்கு வெறுப்புத் தாங்கவே இல்லை. ‘நத்தை வயிற்றில் முத்து ஜனித்ததுபோல இந்த ஞானசூன்யங்களுக்கு இவ் வளவு ஞானோதயம் எவ்விதம் உதயமாயிற்று ? சேற்றில் தாமரை மலர்வது போலவா ?’ என்று நினைத்தாள். அவர் கள் எதிரில் பெண்ணைச் சிலாகிப்பதுகூட அவளுக்குப் பிடிக்கவில்லை. அதில்லாமலே அவர்கள் ஜம்பம் தலை தாங்கவில்லையே! அப்படியும் அவள் புகழ்ச்சியை மதிக் கத்தான் அவர்களுக்குத் தெரியப்போகிறதா? வெறும் மூடாத்மாக்கள், லோபிகள். அதிகம் செலவழிந்துவிடும் என்கிற பயத்தில் வயிற்றுக்குக்கூட அளந்து கணக்குப் பார்த்துச் சாப்பிடுபவர்கள். சீ ஜானகியம்மாளுக்கு உண் டான வெறுப்பிற்கும் கோபத்திற்கும் அளவே இல்லை. அவர்கள் வீட்டில் இன்னும் ஒரு வேளை உண்பதும் விஷம் அருந்துவதுபோல்தான் என்று அவளுக்குப்பட்டது. ‘இந்த ஒரு வாரத்தை இந்த அல்பங்களுடன் எவ்விதம் கழித்தோம்’ என்று தானே அதிசயித்தாள். அர்த்த மற்ற அவர்கள் ஜம்ப வார்த்தைகளைச் சகிப்பதென்பது இனிச் சாத்தியமே இல்லை.
இன்னும் இரண்டுநாள் வித்வத் சபை இருக்கிறதே ; அதற்குள் ஊர் திரும்புவது எப்படி? ஆனால் அவளுக்கு அவைகளிலுள்ள ரசமே போய்விட்டது. அதன் முக்கி யத்வம் எல்லாம் எங்கோ பறந்துசென்றது. ஊருக்குத் திரும்பியேவிட்டாள்.
அவள் அவ்விதம் திடீரென்று கிளம்பினது சர்மா வீட்டாருக்குத்தான் ஆச்சரியமாக இருந்ததென்றால் வீட் டில் அவள் கணவர், பிள்ளை, பெண்கள் எல்லாருக்கும் ஆச்சரியந்தான். இதற்குமுன் ஒரு தடவையும் அவள் அவ்விதம் செய்ததே இல்லை.
“ஏன் இந்த அவசரம்?” என்று அவள் கணவர் கேட்டதற்கு, “ஐயோ, அந்த அல்பங்கள் வீட்டில் மனி தர்கள் இருப்பார்களோ? நீங்கள் தாம் நான் புறப்படும் பொழுதே சொன்னீர்களே. நான் கேட்காமல் போனது பிசகு” என்றுதான் ஜானகியம்மாள் தயங்காமல் பதில் சொன்னாள்.
சர்மா வீட்டார் தங்கள் பெண்ணுடைய பாட்டைக் கேட்டு ஏற்பட்ட பொறாமைதான் ஜானகியம்மாளைத் தங் கள் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் செய்துவிட்டதாகச் சொன்னார்களென்று அவள் காதுகளில் விழுந்தால் அதை அவள் ஒப்புக்கொண்டிருப்பாளா?
– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.
– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.