கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 24, 2024
பார்வையிட்டோர்: 814 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சொந்தமாகாத அந்தக் குத்தகைப் பூமிக்கு ஒன்பது வருஷங்களுக்குப் பிறகாவது ஒரு முறை போய் வர மனைவியும், ‘பதினைந்து வருஷங்களுக்குப் பிறகு’ என்ற ‘சீசா’ ஒப்பந்தமும் குருட்டாம் போக்கில் ஒரு வழி வகுத்துக் கொடுத்த போது- 

‘யாதும் ஊரே…’ என்று நாக்கில்; ‘மாத்தளை என் சொந்த ஊர்’ என்று நெஞ்சில்! என்னால் அவ்வூரோ அதனால் நானுமோ சிறப்படையாமல் இதென்ன முரண்பாட்டுப் பிரகடனம்? 

என்னூர் என்னூர்’ என்று சகபாடிகள் பாடாய்ப் பெருமைப்படுகிறார்கள்; பைத்தியமாய் ஓடுகிறார்கள். ஊரில் அப்படி என்னதான் கொட்டிக் கிடக்கிறது எனக்கு? ஒவ்வொரு முறையும் இவர்கள் இந்தச் ‘சொந்த’ ஊர்களிலிருந்து வரும்போது அப்படி என்னதான் லாட்டறித் தனமாகக் காணுகிறார்கள்? பட்டினக் காட்டானாகிவிட்ட இந்தத் தோட்டக்காட்டானுக்கு இதொரு புரியாத புதிர்! 

மாத்தளைக்கென்று பீத்திக் கொள்ளும்படி எதுவுமே இல்லாததால் எனக்கப்படித் தோன்றலாம். அப்பா – அம்மா அங்கே பிறக்கவில்லை; முன் பரம்பரையின் மூச்சே இல்லை; என் சகோதரங்களில் பலர்கூட அங்கே ‘ஃபேர்த் ஸர்ட்டிஃபிகேட்’ எடுக்கவில்லை; காணி-பூமி இல்லை; வாக்குச் சாவடி இல்லை; எனக்குத் திருமணச் சம்பந்தமும் இல்லை. ஆக- 

யாதும் ஊரே; யாவரும் கேளிர்! 

இந்தத் ‘தியறி’ சொல்கிறது முழு உலகமுமே நமக்குத்தான் சொந்தமென்று. இடுகாடு சொல்கிறது புல் முளைக்கும்வரை ஆறடிதான் என்று. ஆனால் தோட்டக்காட்டுச் செக்றோல் சொல்கிறது, ‘ஒரு மில்லி மீட்டர்கூட இல்லை; போடா!’ என்று! 

மாத்தளையில் பிறந்தேன்; உண்மை. ஓர் அட்டவணைக்காக ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதற்காகவெல்லாம் சொந்தம் கொண்டாடிவிட முடியுமா? சும்மா விடுவானா இவன்? எம்ஜியார் கூடக் கண்டியில் தானாமே பிறந்து தொலைந்தார்?…… 

டிக்கிறியாத் தோட்டத்து இஸ்ட்டோர் லயத்தின் மண்ணை மிதித்தவன் நான். பிறந்த வருஷமே பெற்றார்களின் தோட்டத்துச் சஞ்சாரம் ஆரம்பமாகிவிட்டது. மாத்தளை மாவட்டத்தின் தோட்டங்கள் சகலவற்றிலுமே எங்கள் தந்தையார் கொட்டை போட்டவர். இதனால் நான் அசல் தோவன்னா காவன்னா! கொழும்புக்கு வந்த சில ஜீவன்கள் கொள்ளுப்பிட்டியிலோ குருந்துவத்தையிலோ பிறந்து கொள்வதைப் போல் என்னால் முடியவில்லை என்பதுவும் இன்னொரு காரணம். 

பிறந்ததிலிருந்து பதினேழு வருஷங்கள் வரை, பெற்றோர்களின் நெஞ்சுகளின் மேல் நடந்து நடந்து வளர்ந்த காலத்தில்தான் எனக்கும் மாத்தளைக்கும் ஒரு குத்தகைத் தொடர்பிருந்தது. பத்தாம் வகுப்பு மூலதனத்தோடு வெளியூர்களில் சம்பாதிக்கக் கிளம்பிவிட்டதோடு அதுவும் சரி. 

அறுபதிலிருந்து இது வரையிலும் ஓர் இருபது தடைவைகள் அங்கே போயிருப்பேனா?….. அப்பா, தம்பி இறந்த சமயங்களில்; அவர்களின் முப்பது கும்பிடு, திவசங்கள் சிலவற்றில்; சகோதரங்கள் கொடிகளை ஏற்ற சமயங்களில், கொம்புகளைக் கண்ட சமயங்களில்; எழுபத்தேழும் எண்பத்து மூன்றும் இங்கே அடித்துப் பறித்து ஓட்டிவிட்ட சமயங்களில்… 

‘தோக்கா’ என்றைக்கு நன்றாக இருந்தான்? அவனென்ன தொழிற்சங்கமா நடத்துகிறான்? எனவே நானும் கெட்டுத்தான் போனேன்; எழுபத்து நாலில் பட்டினமும்தான் சேர்ந்தேன். 

எண்பத்து மூன்றுக்குப் பிறகு மாத்தளைக்குப் போகவே இல்லை. அம்மா அடிக்கடி இங்கே வந்து போவார்- இந்தியா பிஸ்னஸ்க்காரி மாதிரி! அதனால் நான் போக வேண்டும் என்ற பாசமில்லை. 

மாத்தளையை என்னால் மறக்க முடியாது என்பது வேறு கதை; அதைச் சொந்தம் கொண்டாட முடியவில்லை என்பது வேறு கதை. 

சுடுகந்தைத் தோட்டத்தின் இரண்டாம் நம்பர் லயம்; இரண்டாவது காம்பரா. இன்னும் அம்மா அங்கேதான். 

அம்மாவோடு, ஜித்தாவில் வேலை செய்யும் கட்டைத் தம்பியின் மனைவி, மூன்று பிள்ளைகள்; செத்துப் போன குட்டப்பன் தம்பியின் மூன்று பிள்ளைகள். இதை வைத்துக் கொண்டு சுடுகந்தையையோ அதன் தபாலாகிய மாத்தளையையோ என்னால் சொந்தங் கொண்டாட முடியுமா? 

அம்மா ஒரு யதார்த்த ஞானி. லண்டன், பாரீஸில் பிறந்திருக்க/ வேண்டியவர். எங்களுக்காக இங்கே!… கட்டைத் தம்பியின் காலமும் குட்டப்பன் தம்பியின் பிள்ளைகளின் காலமும் எப்படிப் போகும் என்றுதான், அவரி சுடுகந்தைக் கூட்டிலிருந்து அசைகிறாரில்லை! இல்லாவிட்டால் எனக்கோ மற்றைய சகோதரங்களுக்கோ கிரீடமாக அமைவார். அப்பாவையும் தம்பியையும் புதைத்த இடத்திலேயே தன்னையும் புதைக்க வேண்டும் என்பதுவேறு அம்மாவின் தனிமை விரதம். எங்களின் நகர நாகரிகத்துக்காக அவரின் இத்தகைய அந்தரங்க அற்புதங்களை மதிக்காமல் விட நாங்கள் யார்? 

‘பெத்த தாயத் தோட்டத்துல தவிக்க உட்டுப்புட்டு மகெங்காரன் டவுன்ல கூத்தடிக்கிறான்!’ என்று சுடுகந்தை வெறும் வாயையே மெல்கிறது. ஆனால் அவல் எங்கள் அம்மாவின் வாயில்! 

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு கடிதம் அம்மாவிடமிருந்து. டிக்கிறியாத் தோட்டத்தின் இஸ்ட்டோர் லயத்துப் பகுதி பர்ச்சஸ் கணக்கில் வியாபாரம் ஆகிறதென்றும் ஒரு பத்துப் பர்ச்சஸை வாங்கிப் போட்டால் நல்லதென்று கட்டைத் தம்பிக்கு எழுதியிருப்பதாகவும் தகவல். இந்த நெட்டையனை நம்புவதைவிட அந்தக் கட்டையனை அம்மா நம்புகிறார்! நானும் அவனை நம்புகிறேன். ஜித்தாப் பணம்; வாங்கிப் போடுவான். என் கொழும்புப் பணம் காற்று வாங்கவே போதாதென்று அம்மாவுக்குத் தெரியும். 

கட்டையன் இனிமேல் ‘மாத்தளை தன்னூர்’ என்று சொல்லிக் கொள்ள விரும்புவானா அல்லது என்னைப் போலவே ஓடெடுப்பானா என்றும் தெரியவில்லை! ஒரே ஓட்டாண்டியின் பிள்ளைகள்தாமே நாங்கள்! 


சொந்தமாகாத அந்தக் குத்தகைப் பூமிக்கு ஒன்பது வருஷங்களுக்குப் பிறகாவது ஒரு முறை போய் வர என் மனைவியும், ‘பதினைந்து வருஷங்களுக்குப் பிறகு’ என்ற ‘சீசா’ ஒப்பந்தமும் குருட்டாம் போக்கில் ஒரு வழி வகுத்துக் கொடுத்த போது 

தினசரி என் சேப்புகளை மேய்ந்தே மாமிக்கென்று சில புடைவை, அநாமதேயங்களை வாங்கி வைத்துக் கொண்டு, “போயிட்டு வாங்களேன்பா!” என்று புடுங்கி வைத்தாள் அவள். ஆளுமை இருந்த காலத்தில் அடக்கிவிட்டுப் பென்ஷன் வாங்கும் காலத்தில் கொடுத்திருந்த தேசியப் பதிவைப் பகிர்ந்து கொள்ளவாவது ஆகட்டுமென்று நான் என் பங்குக்கும் சில வகையறாக்களைக் கட்டினேன். இரண்டாவது மகனையும் இழுத்துக் கொண்டு என் ஓட்டை ‘ஸீ நைண்டி’யில் ஏறினேன். 

நிர்மலமான வானத்தை நம்பி, “மழ வரப் போகுது போங்க!….” என்று சிலேடை விடை கொடுத்தாள் மனைவி. 

அடுத்த மூன்றாவது மணித்தியாலத்தில் மாத்தளையின் எல்லைக் காற்று வீசியதே தவிர மழை எதுவும் வந்து விடவில்லை! 

அந்தக் காற்று என் மனத்தில் பட்டபோதே புதுமையான ஒரு கிளுகிளுப்பு ஏற்படத்தான் செய்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு போனதால் ஏற்பட்டிருக் கலாம்; சீதோஷ்ண பேதத்தாலும் அப்படி இருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் சொந்த ஊர் பற்றிய பிரக்ஞை அல்ல அது! ஒப்பந்தம் குடை பிடிக்கிறது என்பதற்காகத் தொட்டிற் பழக்கம் (உயிரோடிருக்கையில்) மாண்டு விடவா போகிறது? 

மகனுக்கு மாத்தளை புதிய பூமிதான். மூன்று வயதில் என் மார்பில் ஒரு தரம் வந்திருக்கிறான். அவனுக்கேதாவது கிளுகிளுப்பேற்பட்டதா என்று எனக்குத் தெரியாது… 

எனக்கேற்பட்ட கிளுகிளுப்பை எனக்கெதிராகவே திருப்பி, அதுதான் சொந்த ஊர்ச் சிறப்’பென்று வெந்திருப்பதில் வேல் பாய்ச்சாதீர்கள் நீங்கள்! 

என் மனத்தைப் போலவே மாத்தளையிலும் எவ்வளவோ மாற்றங்கள். சில மீதமான மரபுக் கட்டிடங்கள் தலை குனிந்து சிரித்தன. பல புதுக் கவிதைகள் ஆணவமாகப் பார்த்தன. பேசிப் பழகியிராத, ஆனால் தினசரி கண்டு பழகிய உருவங்கள் மாத்தளைப் படிமங்களாகப் பல் விழுந்தோ, கூனல், நரை, திரை விழுந்தோ அல்லது எல்லாமாகச் சேர்ந்து விழுந்தோ ஊர்ந்தன. கோம்பிலிவளைச் சிற்றாறு மகாவலி நீரால் இளமை பெற்றிருந்தது 

சவூதி போய் வந்த ஒரு கிழவியைப் போல! 

மருந்தெடுக்காத கவுருமேந்தாஸ்பத்திரி, சகவாசித்த மேடுகள், வியர்வை போக்கிய வெளிகள், பூங்கா, சாகுமுன்பே போய் வந்த மயானம், உண்ட கடை, கற்ற கூடம், (இங்கேதான் உதைக்கிறது! பழைய மாணவர்களாகப் பெருமைப்பட எங்களுக்கு விதியில்லை! காலா காலத்தில் போய்ச் சேர்ந்துவிட்ட கந்தசாமியாரின் இலட்சியத்தையும் எங்களின் உரிமையையும் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள் மண்ணாசைக்காரர்கள்! ஆண்கள் கூடம் இருந்த எங்களின் இடத்தில் பெண்கள் கூடத்தை அமைத்து எங்களின் எதிர்காலத்தைக் கொன்றுவிட்டார்கள்! பெண்களின் பழைய கூடம் அவர்களின் இரும்புப் பெட்டிக்குள் போனதில், சந்தோஷம் அவர்களுக்கும் சோகம் எங்களுக்கும் !….) என்று மகனுக்குக் காட்டியவாறே ஒரு நனவோடைக் கிளர்ச்சியோடு வட்டம் சுற்றி மீண்டும் அதே பாதையில் தேங்காய்க் கடிப் பிள்ளையார் கோவிலும் கற்ற கூடமும் ஒரு பெருமூச்சுமாக…. செந்தோமாஸ், ஆலமரம், மாரியம்மன் கோவில், பழைய சதானந்தா பீடிக் கம்பனி, :குணசேன முதலாளி வீடு, மந்தண்டாவளைச் சந்தி, என்ற அழகர் மலை அடிவாரத்தோடு இறத்தோட்டைப் பாதையின் முக்கோண மயானம், தோக்குத் துவானின் இருண்ட காணி என்ற பட்டியலும் களுதாவளை இறக்கமும் சேர்ந்தன. 

இடப் புறத்து வயல் வெளிக்கப்பால் நான் பிறந்த இஸ்ட்டோர் லயம் ஒளிந்து கிடந்தது ஏதோ எனக்கே வெட்கப்படுகிற மாதிரி! 

“அந்தா பாரு, அதுதான்!…..” என்று கட்டையன் வாங்கவிருக்கும் (வாங்குவானா?) நிலத்தையும் சேர்த்து மகனிடம் விளம்பரப்படுத்தினேன். 

இவன் எங்கே பார்த்தானோ! எனக்கு லூஸ் என்றுகூட நினைத்திருக்கலாம்! தான் பிறந்த மடுவக்கொல்லை ஆஸ்பத்திரியைப் பற்றிய நன்றியுணர்வே இல்லாத இவன், நான் பிறந்த லயத்தைப் பற்றி என்ன நினைக்கப் போகிறான்? 

தோட்டம் நெருங்க நெருங்கப் பெரிய மாற்றங்கள் தென்பட்டன. லூஸ் துரையின் தென்னந்தோப்பில் வெளிப்படாத ஏதோ வியாபார இரகஸியம். வேளாளத் தாத்தாவின் குயவக் குடிசைகளில் வெவ்வேறு சமாச்சாரங்கள். பாராவத்தை :டிவிஷனில் :பஸ் கொட்டகை. கட்டாண்டிக் கடையில் காடு… 

சுடுகந்தை ஆற்றின் மகாவலிச் சுழிப்புக்களை முன்னரே பார்த்திருந்ததால் மாற்றமாய்த் தெரியவில்லை. பாலம் தாண்டிய கையோடு- 

சுடுகந்தை! 

எட்டு வருஷங்களாக என்னை வளர்த்த பூமி… 

உள்ளே ஓர் அலை தோன்றி மறைந்தது. இடமாகப் பாதைக்கப்பால், அப்பாவையும் தம்பியையும் அடக்கிய இடங்கள் தென்படவில்லை…அவர்கள் மண்ணாகியே போய்விட்டார்கள்!…. ஆவியாகிக் கொண்டிருந்த கண்ணீரோடு மகனிடம் எட்டிக் காண்பித்தேன். 

அந்த றபரும் கொக்கோவும் எங்கே?…… பிடுங்கப்பட்ட நிலத் துண்டுகள் தாத்தாவையும் பாட்டியையும் நினைவூட்டின. வெள்ளையன் வரு முன்னர் இப்படித்தான் இந்த நிலம் இருந்திருக்க வேண்டுமோ? 

என் கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன! 

தார்ப் பாதையிலிருந்து தோட்டத்து மண் பாதையில் வண்டி விழுந்தது. பால்ய காலத்தை என் மனக் கம்பியூட்டர் முத்தமிட்டது. வாண்டுகளாய்க் கூட்டங்கள், ஜில்போலைச் சண்டைகள், கள்ளச் சினிமா விமர்சனங்கள், மலைக்குக் கொண்டு போகும் தேத்தண்ணித் தர்மங்கள்….. 

வண்டியைப் பற்றிய புதிய அச்சம் கிளம்பியது. பாதையில் குன்றுகளும் பள்ளத்தாக்குகளும்! அவை என் பால்ய நினைவுகளையே பகிடி பண்ணிய மாதிரி ஒரு பிரமை! 

வண்டியை அந்தப் பழம் பெருமையில் கொண்டு போகலாமா கூடாதா என்ற தயக்கம் பிறந்தது. தெரிந்துகொண்டுதான் போக வேண்டும். விசாரிக்கலாமென்று பாத்தால் தெரிந்த முகங்கள் இல்லை. காளிகோவில் மேட்டிலே நின்றது – நவீன சுரண்டல் ஸ்த்தூபிகளுடன். பள்ளத்திலே மண் பாதை; மடங்கிக் திரும்புகிறது. சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த மூலையைப் பார்த்தேன். வெறும் உன்னிச் செடிகள். ‘உத்தரவின்றி உள்ளே போகக் கூடாது’ என்ற பலகையைக் காணோம். போகலாம்; ஆனாலும் பாதை பயமுறுத்தியதே! 

வந்தது வரட்டும் என்று பத்தடி மேலும் சைக்கிளைப் பலாத்காரப்படுத்தினேன். 

‘பாவீ! பத்திரமடா பத்தாயிரம்!’ என்று பாதையே அலறுவதைப் போலிருந்தது! 

அட, எப்படி இருந்த பாதை; படுத்துப் புரளலாமே! ஐநூற்றுச் சொச்ச ஏக்கர்த் தோட்டத்தின் நிர்வாகப் பாதை!….. ஒரு வேலித் தோட்டம் இப்போது அறுபது எழுபது வேலிகளைக் கொண்டு பங்கப்பட்டு விட்டதாக முன்பே அம்மா விசனித்திருந்தார். இப்போது தோட்டமும் இல்லை; தொழிலும் இல்லை! பிரித்துக் கொண்ட பங்காளிகளின் பொருளாதாரமும் இவ்வளவுதான், ஐக்கியமும் இவ்வளவுதான் என்று பாதை தப்படித்துக் கொண்டிருந்தது. 

ஒரு தோட்டத்து மக்கள் பல தேசத்து மக்களாக உடைந்து போன அந்த மண்ணில், என் வண்டியும் உடையப் போகிறதே என்று நான் கவலைப்பட்டு நின்றேன். 

“சைக்கிள் ‘பெச்’ போய்றும் போலருக்கே மகன்!” என்றேன் நான். “சைக்கிளக் கோயில்ல போட்டுட்டு நடந்து போவமா?” 

“இன்னுங் கொஞ்சம் போய்ப் பாப்பமே!” என்றான் இந்தச் சோமாறி! “இதக் கோயில்ல போட்டுட்டுப் போனா எவனாவது கையடிப்பான்!…” 

“அப்ப்ப்பிடி யாருந் தொட மாட்டாங்க!…..” என்று இழுத்தேன் நான். 

கட்டைத் தம்பியின் மாமாதான் காளிப் பூசாரி. சைக்கிளுக்குப் பழுது வராது. என்றாலும் எனக்குள் திடீரென்று வேறொரு காரணம் தோன்றியது. 

மகனும் பேரனும் கொழும்பிலிருந்து வந்த சொந்த மோட்டாரு தன் காம்பறா வாசலில் நிற்பதையிட்டு மகிழாத தொழிலாளத் தாய் யாராவதுண்டா? 

நடப்பதானால் முந்தியெல்லாம் கால் மைல்தான். காளியைத் தாண்டியதும் தேரியில் குறுக்காக ஏறி அப்படி ஒரு வளைவு வந்தால் லயம். இன்று குறுக்கின் மூஞ்சியிலேயே வேலி! ஆகவே அரை மைல் ஆற்றோரமாக நடக்க வேண்டும். வெள்ளை மரம் தாண்டிய முடக்கில் ஒரு தேரிக் குறுக்கு; நூலேணி மாதிரி. ஒரு கால் மைல். முந்தியெல்லாம் ஒரு நாளைக்குப் பத்து வாட்டி ஓடியாடிய படிகள்தாம். இன்றெல்லாம் மூச்சு வாங்குவேனா என்று பயமாக இருக்கிறது! ஆனால் வண்டியில் போவதானால் மூன்று மைல் சுற்று நிச்சயம்! 

இனி விசாரிக்க ஆள் தேவையில்லை. எப்படியும் வண்டியிலேயே போவதென்று தீர்மானித்துப் புறப்பட்டு வளைவைக் கடந்தபோது- 

ஓய்வு நடையில் எதிரே வந்துகொண்டிருந்தார் அவர். எவ்வளவுதான் எண்பதுக்குக் கிழண்டு போயிருந்தாலும் எனக்குப் பிடிமானமாகிவிட்டது. அப்பாவின் அடுத்த வெட்டுக் கூட்டாளி ஜயசேகர :பாஸுன்னே! 

என்ன நரை, என்ன திரை, என்ன குளிர்ச்சி! அப்பா உயிரோடிருந்தால் இப்படித்தான் இருப்பாரோ?…. 

இல்லை, அப்பா இறந்த அறுபத்தைந்தில் ஒரு நரைகூட இல்லை! அம்மாவுக்கும் இப்போது அறுபத்தைந்து; ஒரு நரைகூட இல்லை! நான்தான் ஐம்பதிலேயே…. 

அவர் எங்களைக் கூர்ந்தவாறே அணுகினார். சைக்கிளை நிறுத்திவிட்டு, “:பாஸுன்னே!’ என்று சிரித்தேன். 

நின்றார். யாருடையவோ ஞாபகங்களையெல்லாம் என்னில் பொருத்தினார்…. “மாத்தியா… கவத….?…” என்று துழாவினார். அந்தத் தடுமாற்றம் குரூரமான ஒரு புளங்காங்கிப்பை என்னுள் மூட்டியவுடனேயே –

தவறென்று பட்டு- 

ஹெல்மட்டைக் கழற்றினேன். ஒரு வினாடி என் மூச்சுக்கு மேல் குறுகியவர்- 

“ஹா ஹா ஹா!…” என்று நிமிர்ந்து, “ஷா ஷா ஷா!….” என்று வெடித்துப் பின்னால் வீசுண்டார். “அப்ப்ப்பே!….” என்று முகம் விரியத் தன் கவலைகளைத் தொலைத்தார். ‘இதி நம்ப மலயாலங் பொன்னையா ஐயாவோடே பெரிய மகேங் இல்லியா!….” என்று அறிமுகம் செய்தார். “நாங் யாரோதான்னு இல்லியா பார்த்ததி!.. ஆஹாஹாஹா!” என்று நொந்தார். “இப்பதாங் வாரதா? நல்ல ஸொகந்தானே? கொலம்புலதானே இரிக்கறது?….. அதி யாரி?……” என்றெல்லாம் அடுக்கினார். 

“ரெண்டாவது மகன்!” என்றேன் நான். 

“ஷா, அப்பிடியா! இவ்ளோவ் பெரிய மகேங் இரிக்கறதா!” என்று தன் கண்களையே கடையடுப்பில் பிடுங்கிப் போடச் சொன்னார். 

மூத்தவனைத் தாடியும் மீசையுமாகக் கண்டாரானால் என்ன புலம்புவா ரென்று நான் தேடினேன். 

என் மேல் விழாத குறையாகக் குசலத்தின் குரல் உயர்ந்துயர்ந்து போனது. குடும்ப எண்ணிக்கை, வரவு, செலவு, தொழில், வீடு, சொத்து, சுகம் என்று என் மர்மங்கள் எல்லாவற்றையுமே அந்த முச்சந்தியில் நின்று கிராமிய இலக்கியமாகக் கிண்டி எடுத்துவிட்டார்! எனக்கும் மாற்றமான ஒரு கிளர்ச்சியாகவே அது இருந்தது. 

அரை மணித்தியாலம் போல நானும் அப்பாவின் கையடக்க மகனாக மாறியிருக்க 

இவன், ‘நாசமாப் போச்சி!’ என்ற மாதிரி, ஒரு கல்லின் மேல் முக்காலியாகிவிட்டான்! 

எங்கள் சம்பாஷணையில் இருந்த உள்ளோட்டத்தையோ பெறுமதியையோ எனக்கேற்பட்டிருந்த ஃப்ளேஷ் பேக்கையோ இவன் உணர வேண்டும் என்பதில்லையே! 

முச்சந்தியில் கூட்டம் சேர்ந்தது. தனியாகவும் ஜோடியாகவும் வந்த ஏழெட்டுப் பேர்கள். வினா வாரியமொன்றே உருவாகிவிட்டது. அம்மா இவர்களுடன் அடிக்கடி கதைப்பார் போல் தெரிந்தது. அந்த அபிமானத்துக்கு நானும் உரம் பரப்பி வைத்தேன். என் ஆரம்பக் காலத்துத் தவழுகை வேதனைகளும் அப்பாவின் கனவுகளும் அவர்களுடைய வினாக்களில்; அவற்றின் பென்ஷன் என் விடைகளில். 

சலிப்பேற்படுவதற்கு முன்பாகப் பாதையில் இறங்கினேன். 

“வெள்ள மரத்துக்கிட்ட மோட்டார நிப்பாட்டீட்டுத் தேரீல நடந்து போலாந்தான்! ஆனா ஒராளு காவலு நிக்கிணுமே!” என்று செவிட்டுத் திருமலை, மனைவியிடம் தான் எப்படி மொத்து வாங்குவது என்பதை விளக்கினார். 

“நம்ப பங்களாத் துண்டு தொரகூட இந்த மாதிரிச் சைக்கிள்லதானே தெனம் அஞ்சாறு வாட்டி போறாரு, வாராரு!” என்று ஊக்குவித்தார் முத்துவேல் ஓச்சரையா. 

“றோட்டுன்னா அவ்ளோக்கு மோஷமில்லே!…. கொஞ்சம் சறுக்கறது! மொல்லப் போனா ஷரி!” என்றார் ஜயசேக்கர ஃபாஸுன்னே. 

“நேராப் படமாத்திச் சந்திக்குப் போங்க! பங்களா றோட்ல உடுங்க! அப்பிடியே போயி லயத்துக்குப் போற பாதைல உட்டீங்கனாத்தான் நேரா ஊட்டுக்கே வண்டியக் கொண்டுகிட்டுப் போய்றலாமே! என்னா, ஒங்களுக்குத் தெரியாத சுடுகந்த றோட்டா!” என்றார் வேலண்ணன். 

சத்தியக் கடதாசிகளை அடுக்கிக் கொண்ட நான் வண்டியைக் கிளப்பினேன். ஒரு புதிய உற்சாகம் இருந்தது. 

வெள்ளை மரத்தைக் கடந்த பிறகுதான் பாதையின் ஆழம் தெரியவந்தது. பங்களாத் துண்டுத் துரை ‘யக்கா’ பைக்தான் ஓட்ட வேண்டும்! 

சோம்பேறிக் கொள்கையைக் கை விட்டதைப் போல் மகன் இறங்கிக் கொண்டான். டியூபில் எத்தனை ஓட்டைகள் என்பது மனப் பாடமாதலால் நானும் இறங்கிக் கொண்டேன். எஞ்சினை ஓட விட்டு ‘த்றொட்’ டிலை இலேசாகத் திருகி வண்டியோடு நடந்தேன். 

சத்தியக் கடதாசிக்காரர்களை நொந்து கொள்வதில் புத்தியில்லை. அவர்களது வாழ்க்கைப் பாதையைவிட இந்த மண் பாதை அவர்களுக்கு மேலானதாக இருக்கலாம். 

அஞ்சலுக்கு மகனும் சேர்ந்த ஒன்றேமுக்கால் மைலில் பாடமாத்தி. வியர்வைக் குடம் உடைத்து :பங்களாப் பாதையில் ஏற்றினோம். இன்னும் முக்கால் மைலில் லயம் பார்த்து இறங்கும் அந்தக் குறுக்கு. சர்வமும் ஜாக்கிரதை மயமாக அதில் வண்டியை அமுக்கினேன். 

‘கார்ட் றோட்’ போல அக்காலத்திலிருந்த குறுக்கு, காட்டு றோடாக இன்று! பாம்புகளைப் போல் நீண்டு கிடந்த செடி, கொடிகளுக்கு மகனின் வெள்ளைக் காற்சட்டை பலி! 

அவன் பின்னாலிருந்து இழுக்கவும் நான் முன்னால் தள்ளவுமாகப் பள்ளக் குறுக்கில் கால் கட்டை போனபோது, எங்கள் லயத்தின் எல்லை, சகல அசௌகரியங்களுடனும் கிழண்டு கிடந்தது. 

வலப்பக்க மேட்டில் லயம்; குறுக்குப் பாதை ஒன்று பதினைந்தடியில் நாங்கள் வந்த குறுக்கு, அதுபாட்டுக்கு கீழே ஓடியது – காளியம்மனைத் தேடி! மேட்டுக் குறுக்கில் என் ஸீ நைண்டீக் குஞ்சு ‘டூ ஹண்றட்’ எருமையாய்க் கனத்த மேடு அது. 

சர்க்கஸ் சாகசத்தில் அந்தப் பதினைந்தடிகளையும் கடந்த போது, லய முற்றத்தின் விளிம்பு அழகர் மலைக்கு எதிர் மலை போல் உயர்ந்து நின்றது! ஒன்றரை அடி உயரச் சிமிந்திக் கட்டிட எல்லை. ஏற்றிவிட்டால் ‘ஜெக் பொட்’ தான்!… 

பழைய தொங்கல் காம்பறா சிதிலமாகிக் கிடந்தது. நாங்கள் இருவரும் மூச்சுக்களைத் தேடிக் கொண்டிருந்தபோது, தொங்க வீட்டுக் காமாச்சி சமுசயமாக எட்டிப் பார்த்தாள். மத்திய கிழக்கிலிருந்து ‘பரோ’ லில் வந்திருப்பதாகக் காட்சி தந்தாள். 

“…..யாரு?… அட, சரசுவுங்க அண்ணனா!…. வாங்க வாங்க!…” என்று தோரணத்தைத் தொங்கவிட்டாள் அவள். “சரசுவுங்க அம்மோவ்!….. 

காமாச்சியின் அந்தக் கிணற்றுக் குரலைவிட ஜெயாவின் குரல் செகுட்டுக் கங்காணியினுடையதைப் போலிருக்குமே என்று பழங்காலத்தில் நான் சிரித்த போது, லயத்தின் நடுப் பகுதியிலிருந்து அந்த ஜெயாவே கதறிக் கொண்டு ஓடி வந்தாள். 

“அடேஏஏஏய்ய்ய்…… ராதாஆஆஆஆ!….. எங்கடா போய்ட்ட? ஒங்க பெரியப்பாவும் யாரோ ஒரு பொடியனும் வாராங்கடா!… சைக்கிளத் தூக்க வாடோஓஓஓஓய்ய்ய்…..” 

கட்டைத் தம்பியின் சரோஜினி திண்ணையிலிருந்து பாய்ந்து இறங்கினாள். 

“யாரோ ஒரு பொடியனில்ல புள்ள; மச்சானுட்டு ரெண்டாவது மகேன்!” மளமளவென லயம் களை கட்டியது கிழடு தட்டிப் போன ஆதிகளும் குஞ்சு குழுவான்களுமாக. 

“இப்பத்தான் வாறியளா”க்கள், “இதொங்க மகனா’க்கள், “அக்கா வரலியா அண்ணேன்’ கள், “அடே ராதா, நீ முன் ரோதயப் புடிடா”க்கள், ”இன்னைக்கிக் காலைல காக்கா கரயக்குள்ளயே யாராச்சும் வருவாங்கன்னு சரசுவுங்கம்மா சொல்லிகிட்டுத்தான் இருந்திச்சி”கள்…. 

அனாயாசமாக லய முற்றத்தில் பவனி வந்தது ஸீ நைண்டி. 


அம்மாவின் மௌன மகிழ்ச்சிக்கு எல்லை இருக்கவில்லை. மருமகளின் அன்பளிப்புகளால் உடல் பூரித்தார். தான் சமைத்தவற்றை மூத்த மகனும் பேரனும் உண்டதால் பெற்ற வயிறு குளுகுளுத்தது. இரு லயத்தார்களும் வந்து முறை வைத்துக் கதைத்துச் சென்றதால் மனம் பெருமிதப்பட்டது. நள்ளிரவு நெருங்குமுன் முச்சந்தி மண் களவெடுத்து வந்து திட்டி சுற்றிப் போட்டதால் கலக்கமும் அறுந்தது. 

தாயாரின் இத்தகைய நிறைவுகளுக்காக, அவர் அங்கே தலையாட்டிக் கொண்டிருக்கும் வரையிலுமாவது அந்த ஊரை நான் குத்தகைச் சொந்தம் கொண்டாடினாலும்…. 

தாயோடு அறுசுவை மட்டுமா போகும்?….. 

மறுநாள் நாங்கள் புறப்பட்டபோது அம்மா ஒரு தசாப்தத்தை அடக்கி வினவினார்:- 

“…….இனி எப்ப வருவீங்க?………..” 

– 1993ல் ‘கலை ஒளி’ முத்தையாப் பிள்ளை அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட மலையகச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு ரூபா 7500.00 பெற்ற சிறுகதை. 

– 1999ல் சார்க் நாடுகளுக்கிடையிலான மொழிபெயர்ப்புச் சிறுகதைப் போட்டிக்காகச் சிறந்த சிறுகதையாகப் புதுடெல்லி ‘கதா’ இயக்கத்தால் தெரிவு செய்யப்பட்டுப் பரிசளிக்கப்பட்டது. 

– வீரகேசரி, மலையகப் பரிசுக் கதைகள் தொகுதி, வெள்ளிப் பாதரஸம் தொகுதி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *