விபச்சாரங்கள்





(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்பெல்லாம் கமலாவைப் போகவிட்டு, நக்கலடித்துச் சிரிப்பார்கள், இப்போது அவளுக்குப் கேட்கக் கூடியதாகவே நக்கலடிக்கின்றனர்.
இவளது அப்பன் முருகமூர்த்தி பழுத்த சைவம், அவனது இரத்தத்தில் பிறந்த இவள் கமலா இப்படி… இந்த அந்தேனியார் தேவாலயத்துள் தஞ்சம் கிடக்கிறாள். கிறிஸ்தவ முறைப்படி ஞணஸ்தானம் பெற்று மதமாற்றம் செய்து கொண்டவளுமல்ல!
முப்பத்தைந்து வயது கறுத்த மெல்லிய தோற்றம், கபால ஓட்டின் கண்குழிக்குள் வெறும் தோற்புரையில் சுழல்கின்ற பஞ்சடைந்த கண்கள், வலது கை மணிக்கட்டில் நான்கோ ஐந்து நேர்த்திக்கயிறுகள். ஒரு பெண்ணிடம் ஆகக்குறைந்தது தோடாவது இருக்கும். இவள் காதுகள் வெறுமையாகவே கிடக்கின்றன… ஒரு கறுப்புப் பாவடை, வெள்ளைச் சேட்… மிகவும் கட்டையான கருண்ட தலைமயிரைச் சேர்த்துப் பிடித்து கட்டியிருப்பாள்… இதுதான் அவளது கோலம்.
இவள் தனது இருபத்தைந்தாவது வயதில் பாலன் என்பவனைக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டாள். நண்டும் குஞ்சும் போல் ஆறு பிள்ளைகள்… மூத்தவளுக்குப் பத்து வயது, இளையவளுக்கு இரண்டு வயது.
சென்ற ஆண்டு சாவச்சேரிப் பகுதியில் பேராளிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே நடந்த யுத்தத்தில், ‘மல்ரிபரல்’ ஷெல் குண்டுகளுக்கு இரையான எண்ணுக்கணக்கற்ற பொதுமக்களில் பாலனும் ஒருவன். முன்பெல்லாம் வறுமையிலும், செம்மையாக நெற்றி நிறைந்த குங்குமப் பொட்டு வைத்திருப்பாள். இப்போது அவளின் நெற்றி ‘முற்றவெளி போல்’ கிடக்கின்றது.
வறுமை வெக்கையில் வறுக்கப்பட்டு இதயம் கருகி, உடல் வாடி, எலும்புகள் புடைத்து நிற்கின்ற பட்டமரமான அவளது உடலை ஸ்பரிசிக்கச் சில கடுவன்கள் இருக்கின்றன…! இரவோடு வந்து இரவோடு செல்கின்ற அந்தக் ‘கடுவன்களின் பெயர்களும் இலேசாக முணுமுணுக்கப்படுகின்றன. ஆனால், அவர்களை யாருமே குற்றவாளி களாக்கி விடவில்லை.
கற்பென்றால் பெண்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்ற எண்ணமோ, என்னவோ!
தினசரி ஐந்து மணிக்கு இந்த அந்தோனியார் தேவாயத்தில் பூஜை ஒப்புக் கொடுக்கப்படும். கமலா சரியாக நாலுமணிக்கு ஆலயத்திற்கு வந்து விடுவாள். ஏறத்தாழ நூறடி நீளமும், எழுபதடி அகலமும் கொண்ட இந்த ஆலயத்தின் உட்பகுதியைத் தனித்து நின்று கூட்டுவாள். உடல் வியர்த்து முதுகுப்புறச் சட்டைத்துணி வியர்வையில் ஊறி ஒட்டிப்பிரியும்.
கூட்டி முடிந்தவுடன் ஆலய ‘பைப்பில்’ முகத்தைக் கழுவிவிட்டு பலிபீடத்தை அண்மித்துள்ள தூணோடு அமர்ந்து கொள்வாள். பூஜை முடிந்து, சகலரும் வெளியேறிய பின்பு தான் கமலா வெளியேறுவாள். அதன்பின்பும் ஆலயத்தின் பிரதான வாசலை அண்மித்து அமைந்துள்ள ஒரு சிலை. ஏறத்தாழ பத்தடி உயரமான சிலுவையில் அறையப்பட்ட நிலையிலுள்ள யேசுவின் சிலை… முள்முடி தரித்த, இரத்தம் தோய்ந்த, முள்ளந்தண்டோடு வயிற்றுத் தோல் ஒட்டிப்போன நிலையிலுள்ள சிலை…!
யேசு அனைத்து மக்களின் ஆன்மீக விடுதலைக்காகத் தன்னைத் தியாகம் செய்தார்… ஆட்சியாளர்கள் அவரை நையாண்டி செய்து சிலுவையில் அறைந்து கொன்றனர். மரணத்தைக் கண்டு அவர் அஞ்சவில்லை…
மரணத்தின் பின்புதான் அவர் மகானாக்கப்பட்டார்…! அவரது போதனைகள் பூசிக்கப்பட்டன.
அந்த யேசுமகானின் சிலைக்கு முன்னால் சில நிமிடங்கள் முழந்தாளிட்டு இருப்பாள்… அதன்பின் அந்தச்
அந்தச் சிலுவையின் கால்களை முத்தமிட்டுவிட்டுப் புறப்படுவாள். தனது துன்பத்தை துன்பப்பட்ட யேசுவால் உணரமுடியும் என்று கருதினாளோ என்னவோ.
ஆலயத்துள் தனது துன்பங்களையெல்லாம் ஒப்புக் கொடுத்துக் கற்பனையான திருப்தியுடன் வெளியே வரும் அவள் அச்சத்தோடு அந்த பஸ்தரிப்பு நிலையத்தைப் பார்ப்பாள். அந்த பஸ்தரிப்பு நிலையத்துள் சில வாலிபர்கள் நிற்பார்கள்… கமலாவின் செவிப்பறையில் குருதி கசியுமளவிற்கு அவளை நக்கலடிப்பார்கள்…! கிழமைகளில் நான்கு முறையாவது இந்த நக்கலடிப்பு நடக்கும்.
முதலில் பஸ்தரிப்பு நிலையத்தைப் பார்ப்பாள், அடுத்து பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்னாலுள்ள சிவராசாக் கிளாக்கரின் கடையைப் பார்ப்பாள்… கடனுக்குச் சாமான்கள் கேட்க வேண்டுமே என்ற அச்சம்! மாதத்தில் ஒருமுறையோ, இரண்டு முறைதான் அவளது கைக்குக் காசு வரும்… ஏனைய நாட்கள் முழுவதும் கடன்தான்… தினசரி கடன்கேட்க முடியுமா?
தினசரி கடன் கேட்கலாம்… அதற்குமொரு ‘அந்தஸ்து’ வேண்டும்…! அதுதான் இவளிடம் இல்லையே!
இங்குள்ள சகல கடைக்காரகளாலும் இவளுக்குக் கடன் கொடுப்பது மறுக்கப்பட்டு, இறுதியில் சிவராசாக் கிளாக்கரின் கடைக்கு வந்தாள்.
பஸ்தரிப்பு நிலையத்திலுள்ள இளசுகளின் நக்கலைக் கேட்டு, அதன்பின்பு சிவராசாக் கிளாக்கரின் கடையில் பொருட்களையும் பெற்றுக் கொண்டு, வீட்டுக்கு வந்தால்… துணையற்ற வாழ்க்கை, பாதுகாப்பற்ற வீடு. இராணுவத்தினரின் நடமாட்டம்… சிலவேளைகளில் ‘கடுவன்கள்’ வந்துவிடுவார்களோ என்ற அச்சம்! நாளைய உணவுக்கான ஏக்கம்…!
அச்சமும், துயரமும் அச்சாணியாகிவிட்ட வாழ்க்கை… அதில், அந்தோனியார் ஆலயத்துள் தரிக்கின்ற சிலமணி நேரம் மட்டும்தான்… ‘மாயமான்’ மயக்கமான ஒரு ஆறுதல், அவளுக்கு… அந்த ஆறுதலும் ஆலய வாசலோடு அஸ்தமனமாகிவிடும்.
சிவராசாக் கிளாக்கர் வித்தியாசமானவர்.
அவருக்கிப்போது அறுபத்திரண்டு வயது, முப்பத்தைந்து வருடங்கள் கல்விப்புலத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். அதுமட்டுமல்ல, சிறந்த வாசகன், பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் நேரத்தை வீணடிக்கக்கூடாதென்பதற்காகவே இந்தக் கடையை போடவேண்டும் என்பது அவரது நீண்டகாலத் திட்டம். ஆனால் அவரது திட்டத்திற்கு இந்தப் பகுதி ஒத்து வராததால் பலசரக்குக் கடையைப் போட்டுக் கொண்டார். கடையிலும் புத்தகமும் கையுமாகவே நிற்பார். இலக்கிய அரசியல் விமர்சனங்களில் கைதேர்ந்தவர். பிரச்சினையின் ஆணிவேரைப் பற்றிநின்று விமர்சிப்பது, வாதிடுவதுதான் இவரிடமுள்ள தனிச்சிறப்பு! நூறுபேர் எதிர்த்து நின்றாலும் தனித்து நின்று வாதாடுவார்.
நமது மண்ணில் நடக்கின்ற யுத்தத்தினால் சிவராசாக் கிளாக்கர் பெருமளவு இழப்புக்களைச் சம்பாதித்தவர். இழப்புக்களைச் சம்பாதித்தவர்கள். யாரோ ஒரு பகுதியை நிச்சயமாக திட்டுவார்கள். ஆனால் சிவராசாக் கிளாக்கர்…. ”நாக்குப் புரளாமல்” நீதியைக் கூறுவார்.
கமலா நடத்தை கெட்டவள்தான். ஆனால் அவள் உடலிச்சையால் நடத்தை கெட்டவளல்ல… இந்தச் சமூகத்தின் இயக்கக் கூறுகளின் உந்தல்களே அவளை இந்தப் பாதையில் வழி நடத்தியிருக்கின்றன என்பதே சிவராசாக் கிளாக்கரின் முடிவு.
“மலை நாட்டிலை… பனிக்குளிருக்கையும், அட்டைக் கடியுக்கையும்… சொற்ப சம்பளத்துக்காகக் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்துகினந்தானே… அதைவிட
அதைவிட கமலாவுக்கு என்ன கஷ்டம் வந்திட்டுது…” இப்படி யாரோ ஒருத்தி சிவராசாக் கிளாக்கரிடம் கூறியதற்கு.
“யாராவது முன்வந்து அவளுக்கு உதவி செய்து அவளது இயல்புக்கேற்றதொரு வழியைக் காட்டுங்கோ… நிச்சயமாக அவள் திருந்துவாள்” இப்படித்தான் அவர் பதில் கூறினார்.
“கமலா… பக்கத்து மில்லிலை வேலையிருக்காம், செய்யிறியா…” என்று ஒருநாள் சிவராசாக் கிளாக்கர் கமலாவிடம் கேட்டதற்கு.
சில நிமிடங்கள் மெளனமாக நின்று… அவள் அழுதுவிட்டு…
“ஐயா… பாரமான வேலை செய்தால் என்ரை வலது கை தோள் மூட்டோடு கழண்டு போகிடும்” என்று அவள் கூறினாள். சிவராசாக் கிளாக்கர் திகைத்துப் போய்விட்டார்.
“பெரியாஸ்பத்திரியிலை காட்டினியா..”
“எனக்கு இது சின்ன வயதிலை ஏற்பட்டதுங்க… சத்தான சாப்பாடு சாப்பிட்டு படுக்கையிலை இருந்தால் எலும்பு வளர்ந்து பொருந்துமெண்டு சொன்னவையாம்…”
“அப்படிச் செய்திருக்கலாந்தானே..”
“பெத்ததுகள் புள்ளைக்குத் துரோகம் செய்யுங்களா… வறுமை,கஷ்டம்… பசிக்குச் சாப்பிட முடியாத நிலை… அம்மா வீடுவீடாய் மாவிடிக்கப் போவா… நான் அம்மாவோடை மா அரிக்கப் போவன்… மாவிடிக்கப்போனால்… எத்தினையோ வேலையள் சொல்லுவினம்… செய்யத்தான் வேணும்… இதுக்குப் பிறகு கை எப்படியுங்கை சுகம் வரும்…” அவளது வார்த்தையில் துயரம் கசிந்தது…
சிவராசாக் கிளாக்கர் அதற்கு மேல் எதுவும் கதைக்கவில்லை.
காய்த்தோய்ந்த பப்பாசி மரத்தில் மொய்த்திருக்கும் ‘வம்புப் பிஞ்சுகள்’ போல் அந்த பஸ்தரிப்பு நிலையத்தில் ‘வம்பளக்கும்’ அந்த வாலிபர்கள் கமலாவைத் தினசரி நக்கலடிப்பதைச் சிவராசாக் கிளாக்கர் நேரடியாகவே கண்டிருக்கிறார். ஆனால், இதுவரை அதைப்பற்றி விசாரணை செய்ததே இல்லை.
ஊரிலுள்ளவர்களில் அவளைத் தெரிந்த அனைவருமே அவளைப்பற்றி விமர்சிக்கும்போது… அந்த நாலைந்து வாலிபர்களுக்கு மட்டும் நியாயம் கூறி என்ன பலன் என்று நினைத்துக் கொண்டு மௌனமாகி விட்டார்.
கோவிலில் பூஜை முடிந்து சில நிமிடங்களில் கமலா சிவராசாக் கிளாக்கரின் கடைக்கு வருவாள். வந்து தூணோடு மெளனமாக நிற்பாள். சிவராசாக் கிளாக்கர் கதைக்கும் வரை அவள் மௌனமாகவே நிற்பாள்.
“கமலாவுக்கு என்ன வேணும்…” இப்படி அவர் கேட்டதான் பின்புதான்,
“காசில்லை… கடனுக்கு… பாண், சீனி, தேயிலை வேணும்…” ஏன்று தனக்குத் தேவையானவற்றைக் கூறுவாள். சிவராசாக் கிளாக்கர் எந்த மறுப்புமின்றி கேட்பதைக் கொடுத்து விடுவார். காசு கிடைக்கும்போது கடனைத் திருப்பிக் கொடுக்கின்ற யோக்கியமும் அவளிடமுண்டு.
பஸ்தரிப்பு நிலையத்தில் நின்று கமலாவை நக்கல் செய்பவர்கள் ஒருநாள் அளவுக்கு மீறி நக்கல் செய்துவிட்டனர். வாயில்லாப் பூச்சியான கமலா, சிவராசாக் கிளாக்கரின் கடை விறாந்தையில் வந்து நின்று அழுதாள்.
சிவராசாக் கிளாக்கர் சம்பவத்தை ஊகித்துக் கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னார்.
“கமலா… யேசு வாழ்ந்த காலத்திலை இப்பிடி ஒரு சம்பவம் நடந்ததாம்… ஒருத்தி கெட்டுப் போய்விட்டாள், அவளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென யேசுவிடம் வந்து முறையிட்டார் களாம். அதற்கு யேசு என்ன சொன்னார். தெரியுமா?
உங்களில் எவனொருவன் குற்றமற்றவனாக இருக்கிறானோ… அவனே முதற் கல்லை எடுத்து எறியக் கடவான்… என்று கூறினாராம், அங்கு முறையீடு செய்ய வந்த ஒருவனாலும் கல்லைத் தொடமுடியாமல் போய்விட்டது… தாங்களும் குற்றவாளிகள்தான் என்பதை ஒப்புக் கொண்டு மௌனமாக நின்றனர்.
யேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்களிடம் குற்றத்தை ஒப்புக் கொள்கின்ற ‘பெரும்பண்பு’ இருந்திருக்கின்றது. இந்தக் காலத்திலை குற்றத்தை ஒப்புக் கொள்கிற பண்பு கூட இல்லாமல் போய்விட்டது… ஒவ்வொருவனும் தன்னை ‘யோக்கியவானாக’ கருதிக் கொண்டு ஏனைய அத்தனை பேரையும் குற்றவாளியாக்குவான்… இதுகளைக் கவனத்திலை எடுத்தால் வாழேலாது…” சிவராசாக் கிளாக்கர் மிகவும் அர்த்த புஷ்டியாகவும், அவளது மனத்தை நோகப்பண்ணாத வகையிலும் இப்படிக் கூறினார். சிவராசாக் கிளாக்கரின் பேச்சு கமலாவுக்கு ஆறுதலை கொடுத்திருக்க வேண்டும்… கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“கமலா… நீ.. கோயில் சுவாமியாரிட்டை உன்ரை கஷ்டத்தைக் கூறி உதவி கேட்டுபார்… அவர் உதவி செய்வார்.” சிவராசாக் கிளாக்கர் ஆலோசனை வழங்கினார்.
“என்னை இந்தக் கோயிலுக்கை அனுமதிக்க வேண்டா மெண்டு எத்தினையோ பேர் சுவாமியாரிட்டை முறைப்பாடு செய்திருக்கினம்… அப்பிடியிருந்தும் சுவாமியார் இதுவரையிலை என்னோடை ஒரு வார்த்தை கூட கதைச்சதில்லை… அப்படிப்பட்ட பெரிய மனிசனுக்கு நான் கரைச்சலைக் குடுக்கக் கூடாது…” இப்படிக் கூறிய கமலாவைச் சில விநாடிகள் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டு நின்ற சிவராசாக் கிளாக்கர்… உதடுகள் பிரியாத நிலையில் மௌனமாகச் சிரித்தார்.
“என்னையா சிரிக்கிறியள்” அவள் கேட்டாள். ‘தன்னை குற்றவாளியாக்கி, ஏனையோரை நிரபராதி ஆக்குகின்ற பண்பு… வாழ்க்கையில் மிக நொந்து போனவர்களிடந்தான் ஏற்படும்…’ என்று கூற நினைத்தவர் அதைக் கூறாமல் மீண்டும் சிரித்துக் கொள்கிறார்.
நிலாவரைக் கிணறு போன்ற ஆழம் காணமுடியாத அவரின் சிரிப்பின் அர்த்தத்தை அப்பாவியான கமலாவால் புரிந்து கொள்ள முடியுமா?
சுவாமியார் கமலாவைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருந்தார். நொந்து போனவர்களுடனேயே பெருமளவு பழகி அனுபவங்களைப் பெற்றுள்ள அந்தச் சுவாமியாரின் மனதிலும் கமலா நிரபராதியாகவே காட்சி கொடுத்தாள்!
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் எல்லோரும் வாருங்கள்’ ஆலய முன் மண்டபக் ‘கேற்றில்’ இந்த வாக்கியம் கம்பிகளை வளைத்துப் பெரியளவில் எழுதப்பட்டுள்ளது. அந்தக் ‘கேற்றைத் தாண்டிக் கால் வைத்தால் பலிபீடமும் யேசுவின் சிலையுந்தான் தெரியும்… எங்களை அறியாமலேயே ஏதோ ஒருவித உணர்வு நமது பாதத்தை ஊடறுத்து உடமெல்லாம் பரவி… இதயத்தை நிறைத்து…. மேலோங்கி… நெருப்பில் மெழுகு உருகிக் கரைவது போல் நமது இதயத்திலுள்ள துயரங்கள் யாவும் கரைந்து இதயம் வெறுமையாவது போன்றதொரு உணர்வு அந்த அந்தோனியார் தேவாலயத்துள் ஏற்படுகின்றது என்ற பேச்சில் உண்மை இல்லாமலில்லை!
ஷெல் குண்டுக்கு இலக்காகி சிதறு தேங்காயாகிவிட்ட ஒரு வீடு, இங்கு தான் கமலாவும் பிள்ளைகளும் குடியிருக்கின்றனர்.
ஷெல் குண்டு விழுவதற்கு முன்பே இந்த மாடி வீட்டின் சொந்தக்காரர் இந்த மண்னை விட்டு ஓடி வேறொரு நாட்டை ‘இரவல் தாய் நாடாகக்’ கொண்டு விட்டனர். இப்போதைக்குக் கமலாதான் வீட்டின் உரிமைக்காரி.
சாவகச்சேரியிலிருந்து இடம் பெயர்வதற்கு முன் அவளுக்கென்றிருந்த இரண்டு பரப்புக் காணியில் போடப்பட்ட ஒரு கொட்டிலில் கமலாவின் குடும்பம் வாழ்ந்தது. அந்தக் காணியில் சிறியதொரு கடை, பத்தோ பதினைந்து கோழிகள்… இவ்வளவுதான் இவர்களின் பொருளாதார மூலதனம்!
ஆண்டிகளாய் வாழ்ந்தவர்கள் ஓட்டாண்டிகளாக நின்றனர்… கோவணத் துண்டோடு படுத்திருப்பவனால் இழுத்துப் போர்க்க முடியுமா? வாழ்க்கைச் சக்கரம் கறள் பிடித்து உருள மறுத்தது!… ‘தொப்புள்’ கொடி உறவுகளான அவளது பிள்ளைகளின் பட்டினி வெக்கையில் பெண்மையின் பண்பாடுகள் தானாகவே ‘பாடையில்’ ஏறிக் குந்திவிட… உணர்வுகள் மரித்த வெறும் இதயத்துடிப்போடு அவள் தனது உடலை ‘இருளுக்குள் மறைக்கத்’ துணிந்தாள்! அவளது நிர்வாணம் வியாபாரமானது.
அவளின் நிர்வாணம்… அன்றாட அவர்களின் வாழ்க்கையின் நிவாரணமானது!…
அந்த பஸ்தரிப்பு நிலையத்தில் மாலை வேளைகளில் பொழுது போக்காட்டலுக்காக வருகின்ற அந்த வாலிபர்கள் ‘பச்சையாகவே’ அவளை நக்கலடிப்பார்கள்… ஆனால், அவள் ஒரு நாளாவது இந்த வாலிபர்களைத் திரும்பிப் பார்த்ததோ அல்லது தன்னை நியாயப்படுத்தி ‘கண்ணகியாகி விட முனைந்ததோ இல்லை!
அதே நேரத்தில் அந்தோனியார் ஆலயத்திற்கு நாளாந்தம் வராமல் போனதுமில்லை.
அன்றும் வழமை போல நாலுமணியளவில் ஆலயத்திற்கு வந்தாள். சுவாமியாரின் வாகனம் விடுகின்ற கொட்டில் கிடுகுகள் நீக்கப்பட்டு புதிய கிடுகுகளால் வேயப்பட்டிருந்தது. பிடுங்கப்பட்ட பழைய கிடுகுகளுக்குள் தெரிவு செய்து ஓரளவு நல்ல கிடுகுகளாகச் சிலவற்றை எடுத்துக் கட்டி வைத்தாள்.
இடிந்து கூரையற்ற அவளது வீட்டின் மேற்பகுதியை மறைத்துப் பார்க்கலாம் என்ற எண்ணம் அவளுக்கு.
பூசை முடிந்து கிடுகுக் கட்டைத் தலையில் வைத்தபடி அவள் புறப்பட்டாள். ஆலயத்தின் பிரதான வாசலைத் தாண்டி, பிரதான வீதியில் மிதந்தாள்…
பஸ்தரிப்பு நிலையத்துள் அந்த வாலிபர்கள்… நக்கல்!
“எல்லாருக்கும் விடிஞ்சாத்தான் தொழில்… சில பேருக்குப் பொழுதுபட்டால் தான் தொழில்” ஒருவன் கூறுகிறான்.
“எல்லாரும் வேலை வெட்டியெண்டு அலையிறாங்கள் இது… வீட்டோடை வேலை…” இரண்டாமவன் கூறுகிறான்.
ஆனால் அவளது மனம் அழுகின்றது!
ஒருவன் அவளது தலையில் கிடந்த கிடுகுக் கட்டைப் பிடித்து பின்பக்கமாக இலேசாக இழுத்தான்! கிடுகுக்கட்டு பின்புறமாகச் சரிய… அவள் விழுந்து… அவளுக்கு மேல் கிடுகுக்கட்டு விழுந்து… அவளது வலதுகை தோள் மூட்டுடன் சுழன்று விட்டது!
கோவில் வாசலில் கச்சான் விற்கின்ற மூன்று கிழவிகளும், புகையிலை விற்கின்ற கிழவனும் ஓடிவந்து கிடுகுக் கட்டைத் தூக்கி அதன் பின்பு கமலாவைத் தூக்கி மதில் கரையோடு சாத்தி இருத்துகின்றனர்.
சிவராசாக் கிளாக்கரும் வந்து விட்டார்.
கமலாவின் முகமெல்லாம் வியர்த்து கண்கள் கலங்கி, உடமெல்லாம் பதற… வழமை போல் மிகவும் சிரமப்பட்டு தோற்புரையில் தொங்குகின்ற வலதுகையை, இடது கையால் தூக்கி… தோள்பட்டை எலும்பை உரிய இடத்தில் பொருத்திக் கொள்கிறாள்.
சிவராசாக் கிளாக்கர் தனது கடைக்குள் இருந்த ஒரு சோடாப் போத்தலை எடுத்து வந்து கமலாவுக்குக் குடிக்கக் கொடுக்கிறார்.
“நீங்களும் ஒரு மனிசரா…” வலது கையிலுள்ள நான்கு விரல்களையும் மடித்து சுட்டு விரலை மட்டும் உருக்குக் கம்பி போல் நீட்டி… அந்த
அந்த வாலிபர்களைப் பார்த்து சிவராசாக் கிளாக்கர் கேட்கிறார். அவரது முகத்தில் கோபத்தின் அனல்!
அந்த வாலிபர்கள் ஆளையாள் பார்த்து முழிக்கின்றனரே தவிர ஒருவராவது பேசவில்லை!
“டேய்… அவளை விபச்சாரி எண்டு சொல்ல உங்களுக்கு என்னடா யோக்கியதை இருக்கு..” கிளாக்கர் அந்த வாலிபர்களை நெருங்கி விட்டார்.
“கிளாக்கர் கதைக்கிறதை அளவோடை கதைக்க வேணும்…” அந்த வாலிபர்களில் ஒருவன் கூறுகிறான்!
“டேய்… நீங்கள் யோக்கியவான்களே… உங்கடை நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கோடா பாப்பம்…”
“கிளாக்கர்.. நீங்கள் வயதிலை மூத்த மனிசன்… கவனமாய் கதைக்க வேணும்…” ஒருவன் சேட் கையை இழுத்தபடி றோட்டில் இறங்குகிறான்.
கிளாக்கர் கலங்கவில்லை… சனங்கள் கூடிவிட்டனர்.
கமலா… அவளின் முகத்தில் வேதனை கசிந்து வழிகின்றது. தெருச் சண்டைக்கு, தான் கருப்பொருளாகி விட்டேனே என்ற வேதனை…! தட்டுத் தடுமாறி எழுப்பி கச்சான் விற்கின்ற கிழவிகளின் உதவியோடு கிடுகுக் கட்டைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கின்றாள்.
“கமலா மட்டுந்தான் விபசாரம் செய்யிறாளே… நீங்களும் தான்ரா செய்யிறியள்…” கிளாக்கர் இப்படிக் கூறியதும் அந்த வாலிபர்கள் மட்டுமல்ல அங்கு நின்ற அனைவருமே கிளாக்கரின் பேச்சின் அர்த்தம் புரியாமல் கிளாக்கரைக் கேள்விக் குறியோடு பார்க்கின்றனர்!…?
“எடேய்… எங்கடை மண்ணிலை இப்ப என்ன நடந்து கொண்டிருக்கு… நெருப்பாறு பாயுதடா… எங்கடை குடியிருப்பு களெல்லாம் காடாய் கிடக்கு… எங்கடை கல்விக் கூடங்கள் கற்குவியலாய் கிடக்கு… கோயில்கள் எல்லாம் கொட்டிண்டு போய்க் கிடக்கு… ஒரு பக்கம் பாத்தால் அகதியள்.. மற்றப்பக்கம் பாத்தால் எலும்புக் கூடுகள்…
கப்பல் வாழைக் குட்டியள் காத்துக்குச் சரியிறது போலை… எங்கடை உறவுகள்… பொடியளும், பொட்டையளும்… போட்டி போட்டு எங்கடை கண்ணுக்கு முன்னாலை மடியிதுகள்…
நீங்கள்…
மூக்கு முட்டச் சாப்பிட்டிட்டு… போறவாற பொடி பொட்டையாளை நக்கலடிக்கிறியள்.. இது என்னடா…?
ஒவ்வொருத்தனும் உங்கடை நெஞ்சிலை கைவைச்சுச் சொல்லுங்கோ…
கமலா… பெண் ஒழுங்குமுறைக்கு மாறாய் செய்யிறது விபசாரத்தனம் எண்டால்… நாங்கள்… இன ஒழுங்கு முறைக்கு மாறாய் செய்யிறது இன விபசாரத்தனம் இல்லையா…” அங்கு நின்ற வாலிபர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கிய கிளாக்கர் இப்போது அங்கு நின்ற அனைவரோடு தன்னையும் சேர்த்து ‘நாங்கள்’ என்று அழைத்து கேள்வி வலையைப் பொதுவாக விரிக்கின்றார்.
கேள்வி வலைக்குள் அகப்பட்ட மனித மனச்சாட்சிகளின் துடிப்பு… பெரும் மௌனம்!
எங்கடை அரசியல் தலைவர்கள் என்ன செய்யிறாங்கள்… கொழும்புக்குப் போய் அங்கை… அவசர காலச்சட்ட நீடிப்புக்குக் கையை உயர்த்தி ஆதரிச்சுப் போட்டு… இஞ்சை வந்து… காணாமல் போற எங்கடை புள்ளையளுக்காக ஒப்பாரி வெச்சு கண்டனம் தெரிவிக்கிறது.
இது அரசியல் தலைவர்கள் செய்யிற ‘அரசியல் விபச்சாரத்தனம்’
கொழும்புக் கயித்துக்கும்… யாழ்ப்பாணக் கயித்துக்கும் முடிச்சுப் போட்டு… எங்களைப் பலகையாக்கி… சில அனாத ரட்சகர்கள்’ ஊஞ்சல் ஆடுறாங்களே…
இதுவும் விபசாரத்தனந்தான்…!
…கமலா தன்ரை உடலை மட்டும் இருளுக்கை மறைச்சு விபசாரம் பண்ணுகிறாள். நாங்கள் எங்கடை இனத்தை இருளுக்கை மறைச்சு விபசாரம் பண்ணறம். சகலரது நாக்குகளும் வாய்க் குகைக்குள் செயலற்றுக் கிடக்கின்றன.
– வீரசேகரி, 31.03.2002.
– பாடுகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சக வெளியீடு, கொழும்பு.