விந்தை மனிதர்கள்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2026
பார்வையிட்டோர்: 4,501
பெத்த தாயே மகனைப்பற்றி இப்படிக்கேட்பாள் என நினைத்து பார்க்க முடியவில்லை பயிற்ச்சி மருத்துவர் நியாவிற்கு. பணியில் சேர்ந்த பின் பல நோயாளிகளின் வித்தியாசமான போக்கை கண்டிருந்தாலும் இன்றைய அனுபவம் மிகவும் வருத்தத்தைத்தருவதாக இருந்தது.கருவாய் உருவானதிலிருந்து பிறந்து ஓர் வாலிபனாகும் வரை அவன் வளர்ந்ததில் தாயின் பங்கை சொல்லவும் வேண்டுமா? சொல்லவும் முடியுமா?
எறும்பு கடிக்காமல், எழுந்து நடக்கும் வரை தோளிலும், மடியிலும் சுமந்து, உறக்கமின்றி, தொட்டில் அசைந்தாலே கருக்கென பயந்து, விருட்டென்று எழுந்து உதிரத்தில் விளைந்த பாலை பசிக்கு கொடுத்து, அவனது எதிர்காலம் நினைத்து, வியர்வை உடையை நனைக்க உழைத்து, சிக்கனமாக செலவழித்து சேமித்து, படிக்க வைத்து, குடியிக்கும் வீட்டை கடனின்றி உருவாக்கி கனவுகளுடன் அவனது வாரிசைக்காண மணமுடிக்கும், மருமகளை எதிர்நோக்கும் நிலை வரை வந்த பின்பு ஒரு தாயால் பேசமுடியாமா அந்த வார்த்தைகளை…? கண்கலங்கினாள் நியா.
“அந்த டாக்டர் தம்பி காத்தால பத்து மணிக்குள்ள போயிருமானாரு…. நீ பொழைச்சுக்குவான்னு சொல்லறே….?” தேம்பி அழுதாள்.
“ஏம்மா உனக்கென்ன பைத்தியமா? பெத்த மகனப்பத்தி இப்படியா பேசுவாங்க? இருபத்தினாலு மணி நேரமா நானே அன்னம் ஆகாரமில்லாம, தூக்கமும் இல்லாம அவன பொழைக்க வெச்சிடோனும்னு போராடிட்டு இருக்கேன்…. பேசறா பாரு பேச்சு… போம்மா போயி தூரமா உட்காரு. எதுன்னாலும் கூப்பிடறேன்… ” பயிற்சி மருத்துவர் நிலை இப்படியிருக்குமென தெரியாமல் பெற்றோரின் ஆசைக்காக மருத்துவம் படிக்க வந்து வடிக்க கண்ணீரே இல்லாத நிலையில் தனது ஆரோக்யத்தை துறந்து நோயாளிகளின் உயிரைக்காக்க ஒவ்வொரு நொடியும் போராடிக்கொண்டிருந்தாள்.
“டேய் அருண். அந்தக்கிழவி கிட்ட இந்த பேஷண்ட் போயிருவான்னு சொன்னையா?”
“வேறென்ன சொல்லறது. எப்பப்பாரு எப்ப போகும்? எப்ப போகும்னே வந்து கேட்டுத்தொலையுது…. அதான் நாளைக்குன்னு சொல்லி வெச்சேன். அப்புறம் பார்த்தா கொரட்டையுட்டு நிம்மதியா தூங்கிட்டாளே….”
“அப்படின்னா இவன் பெத்த தாயிக்கு எத்தன தொல்லை கொடுத்திருப்பான்?”
“இருபத்து நாலு மணி நேரமும் குடிதானாம். பணம் கொடுக்கலைன்னா அம்மான்னு பார்க்காம அடி ஒதை தானாம். இப்பவும் ஒரு ஆப் கொடுத்தம்னு வெச்சுக்கோ எழுந்திருச்சு ஓடிடுவான். அது கூடாதுன்னு தானே மருந்து மாத்திரைய கொடுத்து சரி பண்ணறோம். ஒரு வாரத்துல இதோட எனக்கு பதினாலாவது பேஷண்ட்டு இவன். ஸாரி நியா. உனக்கு இந்த வாரம் போஸ்ட் மார்ட்டம் டூட்டி வேற… போன வாரம் ஐசியூ… என்னோட அம்மாக்கு ரொம்ப முடிலையா…. அதான் ரெண்டு நாள் லீவு…”
“பொய் தானே….? போயி முழுசா பெட்லயே கெடந்திருப்பே…. எனக்கும் தூக்கத்து மேல ஒரு வெறியே இருக்கு. கொறைஞ்சது பத்து நாளாச்சும் எழுந்திரிக்காமத்தூங்கனம்னு. எதுக்குத்தான் டாக்டர் படிப்பு எடுத்தோம்னு இருக்கு. வேற எந்தப்படிப்பும் இவ்வளவு ஹெர்டிக்கா இருக்காது. உள்ள வந்தாச்சு உன்னமாதிரி பழக்கதோசக்காரங்களுக்கு டூட்டி மாத்தி விட்டு எக்ஸ்டா வொர்க் வேற…. பரவால்ல. போன மாசம் எனக்கு முடியலேன்னு நீ என்னோட வொர்க்க பார்த்திருக்கே… அதுக்கு கடன் கட்ட வேணாமா….? பிறப்பு, இறப்பு, வேதனை, சோதனை எல்லாத்தையும் பார்த்தாச்சு. இதெல்லாம் பத்தாதுன்னு என்னோட அம்மா வேற கல்யாணம், கல்யாணம்னு டெய்லியும் போன்பண்ணிட்டு டார்ச்சரு. அதுக்காகவே ஒரு நாள் போனே எடுக்கலே மாயா, சிகன்னு எல்லாருக்கும் போனு மேல போனு. அவங்க பிரச்சினை அவங்களுக்கு. அவங்களும் போன் எடுக்காததுனால பதறியடிச்சிட்டு முன்னூறு கிலோ மீட்டர் டாக்ஸி வெச்சிட்டு கண்ணீரும் கம்பலையுமா முடிய விரிச்சுப்போட்டுட்டு ஐசி வார்டுக்குள்ளேயே வந்துட்டாங்க. இதெல்லாம் இஞ்சினியர், சிஏ, ஆர்ட்ஸ் படிக்கிற ஸ்டூடண்டோட அம்மாக்கள் பாத்திருப்பாங்களா? டாக்டர் படிப்பு கெடைக்கலேன்னு சூசைடு வேற. வெகுளிப்புள்ளைங்க…. ” இடைவிடாமல் தனது மனக்குறைகளை உடல் சோர்வுடன் கொட்டித்தீர்த்தாள்.
அடுத்த சில நொடிகளில் குடிகார நோயாளியை காப்பாற்ற முடியவில்லை. கதறி அழுதே விட்டாள் நியா. ‘அவனது தாய் எதிர் பார்த்தது நடந்து விட்டது. இனியாவது நிம்மதியாக தூங்குவாள்’ என நினைத்து ஓடிச்சென்று”அம்மா உங்க பையன் போயிட்டான்” என்றாள்.
சொல்லி முடிக்கவில்லை. எழுந்தவள் “கொன்னு போட்டையா…? நான் ஒரு பேச்சுக்குத்தானே சொன்னேன். நீ நெசமாலுமே கொன்னு போட்டையா? சண்டாளி நீ நல்லாருப்பியா? ஐயையோ நான் ஒன்னி என்ன பண்ணுவேன்…. ராசாவே… நீ இல்லாம நான் எப்படி வாழுவேன்…?” நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுத பெண்ணைப்பார்த்து வாயடைத்து நின்றாள் பயிற்சி டாக்டர் நியா.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
