விதி




வெங்கடேஷுக்கு முத்துச்சாமி சொன்னதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி!
இப்படியெல்லாம் கூட நடக்குமா? தன் வேண்டுதல்களை கடவுள் கேட்டுவிட்டது. இல்லையென்றால் முத்துச்சாமி திரும்பி வருவானா? அதுவும் ஒரு மணி நேரம் முன்னால் மீட்டுக் கொண்டு போன அதே நகையை எடுத்துக் கொண்டுவந்து திரும்பவும் அதன் பேரில் கடன் வேண்டும் என்று கேட்பானா?
இதென்ன பெரிய விஷயம் என்று நினைக்கும் நண்பர்களே, வெங்கடேஷ் செய்த காரியத்தை நீங்களும் செய்திருந்தால், இப்படி எல்லாம் நினைக்க மாட்டீர்கள் .
போன மாதம் வரை அவன் நல்லவனாகத் தான் இருந்தான். (ஒரு வகையில் இன்னமும் அவன் நல்லவன்தான்).
திடீரென்று தங்கை கணவன் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு multiple surgeryக்கு அறிவுறுத்தப் பட்டபோது பணத்துக்காக தங்கை கையை பிசைந்து கொண்டு வந்து நின்றாள்.
தன் மனைவி நகை எல்லாம் விற்றும் கொஞ்சம் பணம் தேவை இருந்தது. அதை விற்கப் போன சமயத்தில் தான் அந்தக் கடையில் அந்த தங்கச் செயினைப் பார்த்தான். ஒரு மயில் டாலர் போட்டு அழகாக கனமாக இருந்த அதன் விலையைக் கேட்ட போது, ‘வெறும் 500 ரூபாய் சார் இது’ என்று அந்த சேட்டு சிரித்தான்.
எல்லார் மனத்திலும் தூங்கிக்கிடக்கும் சைத்தான், அவன் மனதில் தூக்கம் கலைந்து விழித்தான். வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட முத்துச்சாமியின் அதே மாதிரியான மயில் டாலர் செயின் அவன் மனக்கண் முன் கண் சிமிட்டியது. எதற்கும் இருக்கட்டும் என்று அதை வாங்கிக்கொண்டான் .
அடுத்த நாள் சாயந்திரம் வங்கியில் வைத்து அதை சரி பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்தான். அச்சு அசல் அதே செயின்! மறு யோசனை வந்து அவன் மனதை மாற்றுவதற்கு முன் அசல் நகையை எடுத்து போலியை அதன் இடத்தில் வைத்தான்.
அப்புறம் எல்லா விஷயங்களும் மின்னல் போல நடந்தேறின. முத்துச்சாமியின் நகையை தங்கையிடம் கொடுத்து அடமானம் வைத்து பணம் வாங்கிக்கொள்ளச் சொன்னான். ஒரு இரண்டு மாதத்தில் அதை மீட்டு அதன் இடத்தில் வைத்து விடலாம் என்று நினைத்தான்.
ஆனால் நினைத்ததெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? நகையை மாற்றி வைத்த இரண்டே வாரத்தில் இன்று காலை முத்துச் சாமி நகையை மீட்க வந்தான். வெங்கடேஷ் காலடி நிலம் நழுவியது. என்ன செய்ய முடியும்?
‘பொஞ்சாதி களுத்து மூளியா இருக்குது சார்! கொஞ்சம் வர வேண்டிய பணமும் வந்துதா அதான்…’ என்று அவன் சிரித்தான்.
மனது நிறைய பாரத்துடன் எல்லாக் கடவுள்களையும் வேண்டிக்கொண்டு பணத்தை வாங்கிக்கொண்டு நகையைக் கொடுத்தான். மனது ஒரு நிலையில் வராமல் தத்தளித்தது. ஒரு வேலையும் ஓடவில்லை. ஒரு மிதமான ஜுரம் உடல் முழுக்கப் பரவியிருந்தது. அடிக்கடி பாத்ரூம் பக்கம் போய் வர வேண்டும் போல இருந்தது.
இப்படி அவன் தவித்துக் கொண்டு இருந்தபோதுதான் முத்துச்சாமி திரும்பி வந்தான் நகையுடன், அதைப் பார்த்த வெங்கடேஷ் பயத்தில் நடுங்கினான். எங்கே தன் குட்டு வெளிப்பட்டு விட்டதோ என்று நினைத்தான்.
ஆனால் முத்துச்சாமி சொல்ல வந்த விஷயமே வேறு. ‘ சார் மாமியா வூட்டுல ஒரு திடீர் ப்ராப்ளம். பணம் கேட்டு ஆள் வந்திருக்கு, தப்பா நினைக்கலேனா இத வச்சி மறுபடியும் பணம் குடுக்க முடியுமா’ என்று கேட்ட முத்துச்சாமி வெங்கடேஷ் கண்களுக்கு அந்த பெருமாளாகவே தெரிந்தான்.
மளமளவென்று மீண்டும் ஒரு லோன் raise செய்து நகையை உள்ளே பீரோவில் வைத்து முத்துச்சாமிக்கு பணத்தைக் கொடுத்தான். ‘ நல்லா இருக்கணம் சார் நீங்க’ என்று வாழ்த்தி விட்டு அவன் சென்றான்.
வெங்கடேஷ் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். எப்படியாவது உடனே பணம் புரட்டி அசல் நகையை மீட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தன் பால்ய ச்நேஹிதனுக்கு டெலிபோன் செய்தான்.
பாவம் மேனேஜர் சர், எவ்வளவு நம்பிக்கையோடு appriser கூட இல்லாம எனக்கு நகை பேரில் லோன் கொடுத்தார்? அவரை ஏமாற்றுகிறோமே என்று முத்துச்சாமி மனதில் ஒரு வருத்தமான எண்ணம் ஓடியது. ஆனால் அவனுக்கும் வேறு வழியில்லை. மாமியார் வீட்டுப் பிரச்சனைக்கு இது ஒன்று தான் வழியாகப் பட்டது. அதுவும் நேற்று அந்த சேட்டுக் கடையில் அந்த 500 ரூபாய் டாலர் செயினைப் பார்த்தபின் தான் அவன் மனதில் இந்தத் திட்டம் தோன்றியது.
அதன் படியே உண்மையான நகையை மீட்டு பின்னர் ஒரு மணி நேரத்துக்குள் போலி நகையை வைத்து மீண்டும் வங்கியில் லோன் வாங்கி விட்டான். இந்தப் பிரச்சனை தீர்ந்த பின்னர் ஒழுங்காக லோன் திருப்பிச் செலுத்தி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சேட்டுக் கடையினுள் நுழைந்தான்.
முத்துச்சாமி கொடுத்த நகையை கையில் வாங்கிப் பார்த்த சேட்டு சிரித்தான்.
– பெப்ரவரி 2013