விதி வலியது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 5,216 
 
 

வேட்டைக்கு காட்டிற்குள் சென்ற மகத நாட்டின் மன்னர் மார்க்கண்டேயன் ஓரிடத்திலேயே திகைத்து நின்றார். இது வரை பல சுயம் வரங்களில் கலந்து கொண்டும் இப்படிப்பட்ட பேரழகு கொண்ட ஓர் இளம் பெண்ணை இதுவரை தான் பார்த்ததேயில்லை. ‘பூலோகத்தில் மட்டுமில்லை மேலோகத்தில் கூட இப்படிப்பட்ட விசித்திர அழகியைக்காணவே இயலாது’ என அவரது மனம் உறுதியாகக்கூறியதோடு சற்று சலனப்படவும் செய்தது.

அரண்மனையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குறுநில மன்னர்கள் அனுப்பி வைத்த இளவரசிகள் காத்துக்கிடக்கிறார்கள். அவர்களில் குரும்பை நாட்டின் இளவரசி மேதகி தேவதையாகத்தோன்ற அவளைத்திருமணம் செய்து தனது அரியணையின் அருகே மகாராணியாக்கி அமரவைத்துள்ளார். 

‘இவளை நம் மனம் அதிகமாக விரும்புவதால் இவளையல்லவா மகாராணியாக்க நேரிடும். இதனால் குரும்பை நாட்டு மன்னனின் வெறுப்புக்கு ஆளாக நேரும். பல மன்னர்களை சிநேகமாக்கி வைத்திருப்பவர் இதனால் நம் மீது போர் தொடுக்கவும் கூடும். இந்த மலை தேசத்துக்கு இவளை அரசியாக்கி இக்குளிர்ந்த பகுதியிலேயே வைத்துக்கொண்டால் யாருக்கும் வெறுப்பு வராததோடு, இவளது அழகுக்கும் சற்றும் பங்கம் வராது. வேட்டைக்கு வருவது போல் இங்கு வந்து வாரம் ஒரு முறை இளைப்பாற வசதியாகவும் இருக்கும்’ என யோசித்தவர், “தாகம்…தாகம்…. தண்ணீர்…. தண்ணீர்…..” என பதறினார்.

வந்திருப்பவர் இந்த மகத நாட்டின் மன்னர் என்பதைக்கூட அறியாத  வேடன் மகள் யாழினி ஓடிச்சென்று குடிசைக்குள்ளிருந்து ஒரு மண் சொப்பில் பானையிலிருந்த தண்ணீரை மோந்து கொண்டு வந்து கொடுத்தாள்.

தண்ணீரை வாங்கிய போது குறி தப்பாமல் அம்பெய்தும் மன்னனின் கை முதலாக நடுங்கியது. தண்ணீரைப்பருகிவிட்டு காலி சொப்புக்குள் தன் மனதை நிரப்பி அவளிடம் கொடுத்து விட்டார்.

அப்போது குடிசைப்பக்கம் வந்த யாழினியின் தந்தை யாகன் மன்னரைப்பார்த்தான். அவரது கையில் பச்சை குத்தப்பட்டிருந்த புலி சின்னத்தைக்கண்டவுடன் தேனெடுத்து வந்த குடுவையை பதட்டத்தில் கீழே போட்டு விட்டான். மன்னரின் பாதங்களை முழுவதும் கீழே விழுந்த குடுவைத்தேன் நனைத்திருந்தது. திடீரென கீழே குனிந்தவன் அவரது பாதத்தை நனைத்திருந்த தேனை தனது கைகளில் தொட்டு முகத்தில் பூசிக்கொண்டான்.

உடனே குடிசைக்குள் ஓடியவன் புலி உருவம் பதித்த ஒரு வாளை எடுத்து வந்து மன்னரின் கையில் கொடுத்து மண்டியிட்டு நின்ற படி ‘என் சிரசை கொய்து என்னை மன்னித்து விடுங்கள் மன்னா’ எனக்கூறிய மறு நொடி வேடனது தலை அவனது மகளது காலடியில் கிடந்தது. அவள் ‘வீல்’ என கத்தி அலறவில்லை. தனது இடுப்பிலிருந்த கத்தியை உருவினாள். பதிலுக்கு மன்னரின் சிரசை வெட்டிச்சாய்த்தாள்.

பதறியபடி படுக்கையிலிருந்து விழித்தெழுந்த மன்னர் மார்க்கண்டேயன் நடு இரவு எனவும் பாராமல் அரண்மணை ஜோதிடரை அழைத்து வரச்சொல்லி ‘கண்ட கனவின் பலன் என்ன?’ என வினவினார்.

“மன்னா நீங்கள் கண்டது கனவல்ல நிஜம்…. அதே சமயம் எச்சரிக்கை …” என ஜோதிடர் கூறக்கேட்ட மன்னர் அதிர்ச்சியுடன் “என்னது….. நிஜமா….? நிஜம் கனவிலும் வருமா…? எதற்கான எச்சரிக்கை…?” என சற்று அதிர்ச்சியடைந்தாலும் சுதாரித்து சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினார்.

“தங்களது சிரசைக்கொய்த பெண் வேடனின் வளர்ப்பு மகள்.பெயர் யாழினி. தங்களது மாமனும் நமது நாட்டின் தளபதியுமான தடகன் ஒரு முறை வேட்டைக்குச்சென்ற போது காட்டுவாசிப்பெண் மீது ஏற்பட்ட மோகத்தில் செய்த தவறால் பிறந்தவள் அப்பெண். அவள் பிறந்தவுடன் அவளது தாய் இந்த ரகசியத்தை தன் பெண்ணிடமோ, வேறு யாரிடமோ சொல்லி விடக்கூடாது, முக்கியமாக மகத நாட்டு மன்னருக்கு தெரிவிக்கக்கூடாது என சகோதரன் யாகனிடம் கூறிவிட்டு இறந்து போனாள். இதைக்கேட்ட  சகோதரன் யாகன் சகோதரியின் உடலை எரித்த பின் சபதம் எடுத்துக்கொண்டான்” என ஜோதிடர் கூறிய போது  ஆச்சர்யப்பட்டார் மன்னர்.

“என்ன சபதம்…?” என மன்னர் ஜோதிடரிடம் வினவினார்.

“காட்டுவாசிகளாக இருந்தாலும் பெண்கள் கணவனோடு மட்டுமே வாழும் கற்புள்ளவர்கள். திருமணமாகாமல் கருவாகும் நிலையை ஏற்காதவர்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு வேறு நபர்களால் இடையூறு நேர்ந்தால் அப்பெண்ணோடு தவறு செய்த நபரையும் சேர்த்து எரித்து விடும் பழக்கம் உள்ளவர்கள். தனது இறந்த சகோதரியை எரித்த அதே மயானத்தில் ஒரு வருடம் கழித்து மறுமுறை வேட்டைக்கு வந்த தங்களது மாமனை மறைந்திருந்து கொன்று எரித்துவிட்டான் யாகன். அவரது வாளை தனது குடிசையில் வைத்திருந்ததைக்கண்ட யாழினி துருவித்துருவிக்கேட்க உண்மையைச்சொல்லி விட்டவன், ‘தான் கொன்றது தனது இனத்தின் சட்டப்படி சரி என்றாலும் தான் வாழும் நாட்டின் சட்டப்படி தளபதியைக்கொன்றதால் மரணதண்டனைக்குரிய குற்றவாளி’ என்பதையும் அறிந்திருந்தான். தங்களை தனது குடிசையின் முன் கண்டதும் தாங்கள் இந்த ரகசியத்தை அறிந்தே வந்துள்ளீர்கள் என தவறாகப்புரிந்து கொண்டவன், தனக்கான தண்டனையை நிறைவேற்றும்பொருட்டு வாளை எடுத்து வந்து தங்களிடம் கொடுத்துள்ளான். வீரனிடமின்றி வேறொருவரிடம் ஒரு நாட்டின் சின்னம் பொறித்த வாள் இருக்குமானால் அவன் தலையைக்கொய்வதே நமது சட்டம் எனத்தெரிந்ததால் நீங்களும் வாளைப்பெற்றவுடன் அவனது தலையைக்கொய்து தண்டனையை உங்களையறியாமலேயே நிறைவேற்றி விட்டீர்கள்” பேசிய ஜோதிடர் தாகமெடுப்பதாக பணிப்பெண்ணிடம் தண்ணீர் கேட்க, பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த மகாராணியே தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“இவற்றையெல்லாம் கூட ஜோதிட ஓலைச்சுவடிகளில் முன் கூட்டியே எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் நானும் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்” எனச்சொன்ன மகாராணி, ஜோதிடரிடம் மேலும் கூறும்படி கூறி மன்னருக்கருகே அமர்ந்து கொண்டாலும் ‘மன்னரான தன் கணவனுக்கு அப்பெண்ணால் சிரச்சேதம் ஏற்படுமோ…?’என அச்சமும் ராணியின் மனதைக்கவலையில் ஆழ்த்தியிருந்தது.

“வேட்டைக்கு சென்றால் தானே இச்சம்பவங்கள் நடக்கும். போகாமலிருந்து விட வேண்டியது தான்” என மன்னர் சொல்ல, “விதி வலியது மன்னா… ஆனால் பரிகாரம் உள்ளது” எனக்கூறிய ஜோதிடரைப்பார்த்து, “உடனே கூறுங்கள். அந்தப்பரிகாரத்தை செய்து விடலாம்” என்றார் மன்னர்.

“ஒரே பரிகாரம் அப்பெண்ணை நீங்கள் நாடறிய திருமணம் செய்து கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு மரணதண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்குவதாக அறிவிக்க வேண்டும். இவையிரண்டும் நடந்தால் யாகனுக்கும், தங்களுக்கும் உயிர் மிச்சம்” கூறிய ஜோதிடர் மன்னரை விட மகாராணியின் முகபாவனையை பார்க்கும் பொருட்டு ஏறிட்டார்.

“பலதாரம் என்பது மன்னர்களுக்கு புதிதல்ல. ஆனால் ஒரு காட்டுவாசிப்பெண்ணைத்திருமணம் செய்வதைத்தான் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” எனக்கூறிய மகாராணியின் பேச்சை மறுத்தார் மன்னர்.

“மன்னர் என்பவருக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதான். அவர்கள் நாட்டில் வாழ்ந்தாலும் சரி, காட்டில் வாழ்ந்தாலும் சரி. ஜோதிடர் கூறும் பரிகாரத்தை உடனே நிறைவேற்றக்கட்டளையிடுகிறேன்” கூறிய மன்னரை விட, ஜோதிடரைப்பார்த்து ‘வேறு பரிகாரம் கூறியிருக்கக்கூடாதா?’ என்பது போல் பார்த்தாள் குரும்பை தேசத்து வாரிசும், மகத தேசத்து மகாராணியுமான மேதகி.

முதலில் குற்றவாளிகளுக்கான தண்டனை மன்னிக்கப்படுவதாக கூறி பலரையும் சிறையிலிருந்து விடுதலை செய்தனர். பின்னர் காட்டில் வாழும் மக்களை மன்னர் சந்தித்து பொன், பொருள் வழங்கப்போவதாக அறிவித்தனர்.

முதல் செய்தியால் மகிழ்ச்சியடைந்தனர் நாட்டு மக்கள். இரண்டாவது செய்தியால் மகிழ்ச்சியடைந்தனர் காட்டு மக்கள். 

மன்னர் காட்டு வாசிகளுக்கு பொன் பொருள் வழங்கியபோது காட்டுவாசிகளுடன் வந்திருந்த இளம்பெண்ணின் பேரழகைக்கண்டு பெண்களே அதிசயத்தனர். மகாராணி மேதகி மாளிகையின் மேலிருந்து கவனித்துக்கொண்டிருந்தாள். காட்டு வாசிப்பெண் யாழினிக்கு மட்டும் அரண்மனைக்குள் உதவி வழங்கப்படுவதாக அரண்மனைக்காவலர்கள் வந்து கூறிய போது, உடன் வந்த அவளது தந்தை எனக்கூறிய யாகன் தானும் கூட வருவதாகக்கூற, இருவரையும் அரண்மனைக்குள் அழைத்துச்சென்று உட்பக்கமிருந்த சிறையில் அடைத்தனர்.

அன்று இரவோடு இரவாக குரும்பை நாட்டிற்கு காவலர்களால் குதிரைகளில் அழைத்துச்செல்லப்பட்டு அங்குள்ள சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர். 

இந்த சம்பவங்கள் எதுவும் மன்னருக்குத்தெரியாமல் மகாராணியாரால் நடத்தப்பட்டவை.

அனைத்து சாமுத்திரிகா லட்சணமும் பொருந்திய ஒரு பெண்ணைக்கண்ட குரும்பை நாட்டு இளவரசரும், மாதகியின் சகோதரருமான குபேரன் மதி மயங்கியவனாய் அப்பெண்ணை ரகசியமாய் தனது தனி மலை தேசத்து அரண்மனைக்கு கடத்திச்சென்று அவளது தந்தையை மலை தேசத்துக்கு அரசனாக்கிவிட்டு முறைப்படி சுயம்வரம் நடத்தச்செய்து அம்மன்னன் யாகவனுடைய பெண்ணான இளவரசி யாழினியை மணந்து ராணியாக்கிக்கொண்டான்.

இதனால் கனவில் கணவனுக்கு நடந்த கெடுதல்கள் இனிமேல் நனவில் நடக்காது என நிம்மதிப்பெருமூச்சு விட்டாள் மகத நாட்டு ராணி மாதகி. தவிர தன்னை விட பல மடங்கு பேரழகியான யாழினியை மன்னர் நேரில் சந்திக்க நேர்ந்திருந்தால் கண்டிப்பாக அவளைத்திருமணம் செய்து ராணியாக்கியிருப்பார். அதனால் தனது ராணி பதவி பறிபோகும். எனவே தான் செய்தது மிகவும் சரியான செயல் என நினைத்தாள்.

‘தனது மனைவி தனக்குத்தெரியாமல் சகல சாமுத்திரிகா லட்சணமும் பொருந்திய தான் கனவில் கண்டு அதிசியத்த பெண்ணை தான் அடைய முடியாமல் செய்து விட்டாளே…. அவளை மணப்பதால் மட்டுமே அவளால் தனக்கு நேரவிருக்கும் ஆபத்தும் நீங்கி விடும் என நாம் திட்டமிட்டதை தலைகீழாக மாற்றி விட்டாளே…’ என கோபம் கொண்ட மன்னர், குரும்பை நாட்டின் மீது போர் தொடுத்து யாழினியைக்கவர்ந்து வர முயன்ற போது, போரில் மன்னரும் மைத்துனனுமான குபேரனைக்கொல்ல நேர, வெகுண்டெழுந்த போர்கலைகளைத்திறம்படக்கற்ற யாழினி போருக்கு தலைமையேற்று, தனது கணவனைக்கொன்றவனைக்கொல்வதாக சபதமேற்றபடியே மார்க்கண்டேயனை தனது வாளால் வெட்டிச்சாய்த்தாள்.

‘விதி வலியது’ என்றார் மகாராணி மாதகியிடம் ஜோதிடர் வியம்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *