விதியின் விதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 9, 2025
பார்வையிட்டோர்: 219 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மனிதர்களுடைய வாழ்க்கை வரலாறுகளையும். எதிர்கால நிகழ்ச்சிகளையும் ஊர் பெயர் முதலிய விவரங்களோடு கூறுகிற நாடி சோதிட ஏடுகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களோ, இல்லையோ. சில ஆண்டுகளுக்கு முன்பு நாடி சோதிடம் நவரத்தின முதலியாரைச் சந்திக்க நேரிட்டபோது முதன் முதலாக அவரிடம் நான் கேட்ட கேள்வி, “ஐயா, இந்த ஏடுகள் எல்லாம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?” என்பதுதான். இதற்கு முதலியார். சொன்ன பதில் விந்தையாக இருந்தது. 

ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சாவூர் நூல் நிலையத்தில் புழுதி மூடிச் செல் லரித்துக் கொண்டிருந்த ஏட்டுக் குவியல்களை ராத்தல் கணக்காக நிறுத்து ஏலம் போட்டார் களாம். அந்த ஏலத்தில் நம்முடைய முதலியாரும் சில ராத்தல்கள் நிறுத்து வாங்கிக் கொண்டு வந்தாராம்! 

இந்த நிகழ்ச்சியை ஆராய்வதற்கு இது இடம் இல்லை. அந்த ஏடுகளின் தலையெழுத்து- அவற்றின் ஜாதகம் – எப்படி யெல்லாம் இருக்கிறதோ, யார் கண்டார்கள்! ஆனால் இங்கு குறிப்பிடவேண்டிய விஷயம் அந்த ஏடுகளின் நுண்ணிய சின்னஞ் சிறிய கூட்டெழுத்துக்கள் தான்! 

அவற்றைப் பார்த்து அதிசயித்துப் போன வனாக, சோதிடர் அவர்களிடம் அவருக்குப் பயன் படாத ஏதாவது ஒரு கட்டு ஏட்டை எனக்குத் தர முடியுமானால் தராசும் படிக்கல்லும் இல்லாமல் கொடுக்கும்படி தயவாகக் கேட்டேன். அதன் பயனாக ஒரு ஏட்டுத் தொகுதி கிடைத்தது. அதில் ஜா தகங்களின் குறிப்பே இல்லை. “கிரக சாந்தி” என்று தலைப்பிலே மகுடம் சூட்டி யிருந்தது.கிரகங் களுக்குத் தோஷ பரிகாரம் செய்கிறார்களே அதைப் பற்றி விரிவாகச் சொல்லி யிருக்கிறது போலும் என்று நினைத்தேன். ஆனால் படித்துப் பார்த்தால் அது ஒரு கதையாக இருந்தது. “கட்டளைக் கலித் துறை” என்ற யாப்பு முறையில் அந்தாதி வரிசை யில் எழுதப்பட்டிருந்தது அது. 

சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஒரு விநோதமாகவும், நம்பிக்கை உள்ளவர்களுக்கு மேலும் ஒரு உறுதிப் பாடாகவும் இருக்கும் என்று கருதிக் கதையின் சாரத்தைக் கீழே தருகிறேன். 

2

பொதிகைமலைச் சாரலில் மாலைநேரம். இன்ப மான தென்றற் காற்றிலே எங்கிருந்தோ புல்லாங் குழலின் ஒலி சுகமாக வருகிறது. அந்த ஒலியோடு இணைந்து ஆடுமாடுகளின் கழுத்திலே கட்டியுள்ள மணிகளும் சலங்கைகளும் ‘கண கண’ வென்று ஒலி செய்கின்றன. புல்லாங்குழலின் ஓசை நின்றபோ தெல்லாம் ஊடே ஊடே ஒரு பாடல் கேட்கிறது : 

“மோன நிலையினில் முத்தியுண்டாமென்றே 
கானமாய் ஊதுகுழல் — கோனே
கானமாய் ஊதுகுழல்” 

அருகிலே சென்று பார்த்தால், உலகப்பற்றை யெல்லாம் துறந்த மகான் ஒருவர், மரவுரியே உடை யாகவும் உடலின் தோற்-போர்வையை ஊடுருவித் தென்னிக்கொண்டு நிற்கும் எலும்புப் பூட்டுக்களே. கவசமாகவும், வெயிலையும் குளிரையும் காற்றையும் கனலையும் மழையையும் கண்டு சிரிக்கிற ஒரு அசா தாரணப் புன்னகையே முகத்திற்கு ஒப்பற்ற ஆபரணமாகவும் விளங்கும்படியாக அந்த மந்தையை நடத்திக் கொண்டு செல்கிறார். மாலை வெயிலின் மஞ்சள் நிறம் அவர் உடம்பில் படரும் போதெல் லாம் ஒரு குதி குதித்துக் கொண்டே புல்லாங்குழலை ஊதுகிறார். அதிலிருந்து வருகிற ஒலி, இரு வினை களையும் வென்ற ஞானியின் பேச்சைப் போல, ராகம் தாளம் என்ற மனித வரம்புகள் இரண்டை யும் கடந்து அந்த இரண்டினாலும் அளக்க முடியாத விரிவும் ஆழமும் உள்ளதாய், எங்கோ மன உலகின் ஒரு எட்டாத தொலைவிலிருந்து புறப்பட்டு வரும் ஆன்ம கீதமாக இருக்கிறது! இடையிடையே அந்தப் புல்லாங்குழலை உதட்டிலிருந்து எடுத்து விட்டு, ஒரு குழந்தை சிரிப்பதைப் போன்று கபடமற்ற சிரிப்புச் சிரித்துக்கொண்டே பாடுகிறார் அவர்! 

“என தென்றும் யான் என்றும் இல்லா திருக்கவே
தனதாக ஊது குழல்!- கோனே 
தனதாக ஊதுகுழல்!” 

இப்படிப் பாடி விட்டுத் தானே தனதான ஒரு ராகத் தில், ஒரு ஒலி -ஒழுங்கில், புல்லாங்குழலில் இருந்து அமானுஷ்யமான வேகத்தில் ஒரு கீதம் சிறகடித் துப் பறந்து வருகிறது. அது நின்றதும் மீண்டும் பாடல்: 

“ஓடித் திரிவோர்க்கு உணர்வுகிட் டும்படி 
சாடியே ஊதுகுழல் – கோனே 
சாடியே ஊதுகுழல்!” 

அடுத்த கணம் நடந்து செல்கிற ஆடு மாடுகளைச் சாடி ஓடும்படி துரத்திவிட்டு, அந்தச் சாட்டத்தில் தானும் சேர்ந்து குதித்துக் குதித்து விளையாடிக் கொண்டே சிரிக்கிறார் அந்த ஞானி-இடைக் காட்டுச் சித்தர். 

ஆமாம். ‘இடைக் காடர்’ என்றும் ‘இடைக் காட்டுச்சித்தர்’ என்றும் வழங்கும் மகான். சிறு பிரா யத்தில் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டே மலைப் பக்கமாக வந்தபோது, நவ நாத சித்தர்களில் ஒருவர் எதிர்ப்பட அவருக்குப் பால் கறந்து கொடுத்து உபசரித்து அதற்கு வெகுமதியாக ஞானப் பாலையே பருகிக் கொண்டவர்! அன்றிலிருந்து, 

“மனம் எனும் மாடு அடங்கில் 
தாண்டவக்கோனே!- முத்தி 
வாய்த்தது என்று எண்ணேடா 
தாண்டவக்கோனே!” 

என்று பாடியவாறு ஆடு மாடுகளுடன் அதே பொதிகை மலைச் சாரலில் நிரந்தரமாக இருந்து விட்டார். ஜீவப் பசுக்களை மேய்த்துத் திரியும் பசு பதியான இறைவனைக் கண்டு களிக்கும் ஆனந்த அநுபவத்தில், இந்தப் பசு மந்தைகளோடு சேர்ந்து தானும் எத்தனையோ ஆண்டுகள் புல்லாங்குழலை ஊதியவாறு அந்த மலைப் பிரதேசத்திலேயே கழித்து விட்டார் அவர்! இப்பொழுதோ உலகத்தில் “கோளாறு” ஆரம்பம் ஆகிற காலம் என்று. தெரிந்து கொண்டு விட்டார். எனவே, அவருடைய தீர்க்கதரிசனமான ஞானம் ஒரு வழிவகுக்க முனைந்தது! 

3

நாடெங்கும் பன்னிரண்டு ஆண்டுகள் கடுமை யான பஞ்சம் வர இருக்கிறது என்றும், கிரகங்கள் நூதனமான முறையில் பயங்கரமாக வக்கரிக் கின்றன என்றும், வான சாஸ்திரிகளும் சோதிடர் களும் எச்சரிக்கை செய்தார்கள். அரசாளும் மன்னரும் நிலத்தை ஆளும் வேந்தர்களும் நிலை கலங் கினார்கள். இயற்கையை எதிர்த்து நிற்கக் கூடிய வலிமை யாருக்குத்தான் உண்டு? 

“சாதனங்கள் செய்தவர்கள் 
சாகார் குயிலே – எல்லாத்
தத்துவங்கள் தேர்ந்தவர்கள் 
வேகார் குயிலே!’ 

என்று மரக்கிளைகளில் உள்ள குயில்களோடு பேசிக்கொண்டே எருக்கின் இலைகளைப் பறிக்க ஆரம்பித்தார் இடைக்காடர். பறித்து அவைகளைக் கட்டுக் கட்டாக வாழை நாரினால் இறுக்கிப் பிணைத் துத் தோளிலே சுமந்து கொண்டு மலைச்சாரலிலே தமது குடிசையிலே கொண்டு கொட்டினார், அம்பாரம் அம்பாரமாகக் கொட்டினார்! 

எருக்கின் இலைகளை ஆடுமாடுகள் பிரியத்தோடு தின்னவா செய்யும்? ஒவ்வொரு ஆட்டுக்கும் மாட் டுக்கும் பக்கத்திலே போய் நின்று கொண்டு புல் லாங்குழலை ஊதினார். எருக்கின் இலையை ஒவ் வொன்றாய் எடுத்து இசைக்கிறக்கத்திலே நிற்கும் ஆடுகளின் வாயிலே கிறக்கத்தோடு கிறக்கமாய்க் கொடுத்தார். பசுக்களின் பக்கத்தில் நின்று கொண்டு, 

“ஒன்றைப் பிடித்தோர்க்கே-பசுவே 
உண்மை வசப்படுமே! 
நின்ற நிலைதனிலே- பசுவே 
நேர்மை அறிவாயே!” 

என்று பாடிக் கொண்டே எருக்கிலையைக் கொடுத்தார்! 

நாட்பட்ட நாட்பட ஓர் இலை, இரண்டு இலை,மூன்று இலை என்றாகிச் சில தினங்களில் கொப்புக் கொப்பாகவே கொடுக்க ஆரம்பித்து விட்டார். புல்லாங்குழலும் பாட்டுமாகச் சேர்ந்து அந்த ஆடு மாடுகளுக்கு எருக்கிலையிலே ஒரு அபாரமான பிரியத்தையே உண்டாக்கு விட்டன!

4

கோளாறான பெரும் பஞ்சம் வந்தது. இந்த உலகத்தின் மக்களை மட்டும் அல்லாமல், வானையும் பூமியையுமே ஆட்டி வைக்கும் ஒன்பது பேர்களும், படி அளக்கும் நவக்கிரக மூர்த்திகளும், தங்களுடைய சாரத்திலே வக்கரித்து நின்றார்கள். பஞ்சம் கோரதாண்டவம் ஆடியது. 

நிலம் எல்லாம் தீய்ந்தது. மக்கள் பசியால் மடிந்தனர். செடி கொடிகள் எல்லாம் கருகி விழுந்தன. மரம் மட்டைகள் எல்லாம் வெயிலிலே பாளம் பாளமாக வெடித்துச் சிதறின. ஆறுகளும் குளங்களும் நீர்ச் சுனைகளும் அக்கினி வெள்ளத்தில் உருகி ஓடின. பொதிகைச் சாரலில் கானல் காய்ந்தது; மலையின் பாறைகளில் எல்லாம் பெரிய பெரிய வெடிப்புக்கள் விழுந்து அவற்றிலிருந்து தீப்பிடித்து எரிந்த மாதிரி வெப்பம் கொப்புளித்தது. 

நவக்கிரக நாதர்கள் நிற்கும் கோசாரத்திலே வக்கரித்துக் கொண்டு பயங்கரமாகச் சிரித்தார்கள். அப்படிச் சிரிக்கும் போதே ‘சட்’ டென்று சூரியன் சிரிப்பை நிறுத்தினான். எப்பொழுதும் அவனைப்பின் தொடரும் சந்திரன் இது கண்டு தானும் வாயடைத்து தான். செவ்வாயோ கையிலே தாங்கிய வேலைச் சுழற்றிக் கொண்டே தீக்ஷண்யமான கண்களால் என்ன வென்று உற்றுப் பார்த்தான். ஒப்பற்ற ரூப வானான புதன் மௌனமாக விஷயத்தை உணர்ந்த வனாய், ஸௌம்யமாக நின்றான். தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் குருவும் இந்தத் திரிலோகத்துக்குமே புத்திமயமாக இருப்பவனுமாகிய வியாழனோ, பூமியி லிருந்து வக்கரித்துக் கொண்டு நின்ற தனது பார் வையை மீண்டும் திருப்பாமல், கையை முதுகுப் புறமாகக் கொண்டு வந்து கீழே சுட்டிக் காட்டினான். ஸர்வ சாஸ்திர ஸம்பன்னனாக விளங்கும் சுக்கிர ே னா என்றால், பனியைப் போன்றும் மல்லிகையைப் போன்றும் வெண்மையான காந்தியை வீசும் தனது சரீரத்தை அசைக்காமலே சிரித்தான். ராகு தன்டைய பாதி உடம்பை மகா வீரியத்தோடு ஆட் டினான். கேதுவோ ரௌத்ராகாரமாக அட பிருகஸ்பதிகளே!” என்று சினத்தோடு பிருகஸ்பதி உள்ளிட்ட மற்ற எட்டுப் பேரையுமே சீறினான்! சனி “என்ன விஷயம்?” என்று கேட்டுக்கொண்டே சம்மணம்போட்ட காலைச் சுடக் குப் போட்டுக் கொண்டான்! 

செவ்வாய் சொன்னான்: “கீழே பூமியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் நம்முடைய ஆளுகை நடக்க வில்லை.என்ன அக்கிரமம் இது!” 

செவ்வாய் சுட்டிக் காட்டிய இடத்தில் இடைக் காட்டுச் சித்தர் நின்று பால் கறந்து கொண்டிருந் தார். 

“சாவாது இருந்திடப் பால்கற – சிரம் 
தன்னில் இருந்திடும் பால்கற!
வேவாது இருந்திடப் பால்கற – வெறும்
வெட்ட வெளிக்குள்ளே பால்கற!’ 

என்று உற்சாகமாகப் பாடிக்கொண்டே எந்தக் கோடையிலும் பஞ்சப்படாத தம்முடைய எருக் கிலையை ஆடு மாடுகளின் வாயிலே கொடுத்துக் கொண்டே அவற்றின் முதுகைத் தட்டிக் கொடுத் துப் பால் கறந்து கொண்டிருந்தார். 

“புறப்படுங்கள் அங்கே!” என்றான் கேது ரௌத்ராகாரமாக. 

“புறப்படு!” என்றான் ராகு. 

“அது மட்டும் இல்லை, இப்பொழுது நாம் எந்த வரிசையில் எந்த அணிவகுப்பில் நிற்கிறோமோ அதே கிரமத்தில் செல்ல வேண்டும்!” என்றான் வியாழன். 

“ஆமாம். அதுதான் முக்கியம். ராசி புரண்டு விடாமல்!” என்று எச்சரிக்கை செய்தான் சுக்கிரன். “சரி” என்று அங்குமிங்கும் இழுத்தான் புதன்.

கிரக மூர்த்திகள் ஒன்பது பேரும் அப்படியே இடைக்காட்டுச் சித்தருடைய ஆசிரமத்துக்கு விரைந்தார்கள்! 

5

“வருக! வருக! நவ நாத மூர்த்திகளே! வருக. உங்கள் வரவு நல்வரவு ஆகுக!” என்றார் சித்தர். பால் கறந்து கொண்டிருந்தவர் கைக்கலசத்தோடு எழுந்து விட்டார்! 

“இருவினையாம் மாடுகளை 
ஏகவிடு கோனே! 
அடங்கும் மன மாடுதனை 
அடக்கிவிடு கோனே!” 

என்று பாடிக்கொண்டே அந்தப் பசுமாடுகளையும் ஆடுகளையும் ஓட்டி விட்டு, ஒரு கலசத்தில் பசுவின் பாலும் இன்னொரு கலசத்தில் ஆட்டின் பாலுமாக எதிர் கொண்டு உபசாரத்தோடே வந்தார். 

“இந்தக் குடிசை இன்று புனிதம் அடைந்தது. ஏதோ இந்தப் பஞ்சக்காலத்தில் என்னால் முடிந்த அதிதி மரியாதை இதுதான். உண்டு கௌரவிக்க வேண்டும்!” என்றார் இடைக் காடர். 

வேகமாக வந்த சூரியன் உபசாரத்தைக் கண்டு திகைத்தான்.சந்திரனுக்கோ பால் என்றால் கொண் டாட்டம். ராகு கேதுகளுக்குச் சொல்லவே வேண் டியதில்லை. புதன் புத்திசாலி யாகையால், எப்பொழுதுமே பால் இந்த உடம்புக்கு எவ்வளவு இத மான பொருள் என்பதையும் நன்கு உணர்ந்தவன். செவ்வாய்க்கு ஆட்டின் பால் என்றால் நாக்கிலே தண்ணீர் சொட்டும். சனி வேகமாக ஒரு முடிவுக்கு வருவதில்லை. ஆனாலும் பால் சாப்பிடயார் மறுப் பார்கள்? வியாழனோ அதிதி மரியாதை’ ‘விருந்து உபசாரம்’ என்றால் அதை அவமதிக்கிறதே இல்லை! 

ஒன்பது பேரும் பால் பருகினார்கள். சுத்தமான பசுவின் பால். ஆரோக்கியமான ஆட்டின் பால். அதுவும் எருக்கின் இலைகளையே உட்கொண்டு சுரந்த அபூர்வமான பால்: சித்தருடைய உபசரிப் பிலே திவ்வியமாக இருந்தது அதைச் சாப்பிட! 

சற்று நேரத்திலே செவ்வாய்க்குக் கொஞ்சம் சிரம பரிகாரம் செய்து கொள்ளலாம் என்று தோன்றியது. புதனுக்குப் புத்தி மயங்குவது போல இருந்தது. சனியோ உட்கார்ந்தவாறே மெதுவாகச் சாய்ந்தான். குரு மௌனமாகக் கிறங்கினான். மற்றவர்களும் அப்படியே! 

ஒன்பது மூர்த்திகளுக்குமே அந்தப் பால் ஒரு வகையான கிறக்கத்தைக் கொடுத்தது. அப்படியே மயங்கிப் போய் உறங்கி விட்டார்கள். 

சித்துக்கள் விளையாடுகிற ஒரு ஞானப் பித்த னுடைய புன்னகை முகத்திலே ஓடுகிறவராய், அந்த மகான் இடைக்காட்டுச் சித்தர் மெதுவாக நடந்து வந்தார். ஒன்பது பேரும் தங்களுக்குள்ளே கிரமப் படுத்தி வக்கரித்திருந்த அந்த ராசி வகுப்பைப் பார்த்தார். அவர் முகத்தில் புன்னகை அரும்பியது. அவருடைய மனத்தினுள்ளே ஒரு வினாடி கணிதம் ஓடியது. புல்லாங்குழலை எடுத்து ஏதோ கோடு போடுபவர் போலக் காற்றிலே கீறிப் பார்த் தார். மறு விநாடி மெதுவாக அவர்களை ஒவ்வொரு வராகத் தூக்கினார். தம்முடைய கணித வரம்புப் படி வேறு ஒரு ராசிக் கிரமத்திலே படுக்க வைத் தார். நகர்ந்து நின்று புல்லாங்குழலை எடுத்து ஊத ஆரம்பித்து விட்டார்! 

அவ்வளவுதான் என்ன ஆயிற்று? 

“மட மட’ வென்று வானத்திலே இடி இடித்தது.’பளீர் பளீர்’ என்று கண்ணைப் பறிக்கிற மின்னல்கள். ‘ஓ’ என்று மேகத்தையே கிழித்துக் கொண்டு ஒரு காற்று. மறு கணம் ‘தட தட’வென்று மழை: பிரளயாகாரமாகக் கொட்டுக் கொட்டென்று கொட்டியடித்தது! 

‘ஆடு மயிலே – நடம் 
ஆடு மயிலே – எங்கள் 
ஆதியணி சேடனைக் கண்டு 
ஆடு மயிலே – நடம் 
ஆடு மயிலே!” 

என்று அந்த மேகத்தையும் மழையையும் பார்த்துப் பாடிக்கொண்டே ஆட ஆரம்பித்து விட்டார். இடைக்காடர்! 

நவக்கிரக நாதர்கள் தங்கள் மயக்கத்திலிருந்து எழுந்தபோது ஆற்றிலே வெள்ளம் ஓடிக் கொண் டிருந்தது. சுனைகளிலே தண்ணீர் அலைவீசிக் கொண்டிருந்தது! அருவிகள் எல்லாம் ‘திண் திண்’ என்று விழுந்து கொண்டிருந்தன. 

“என்ன அக்கிரமம்!” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான் செவ்வாய். ” கிறக்கந்தான். ஆனாலும் எத்தனை சுகமாக இருந்தது!” என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தான் சுக்கிரன். போதை இன்னும் சரியாகத் தெளியாமல் உடம்பை நெளித் துக் கொடுத்தான் சனி. மற்றவர்களும் விழித்து விட்டார்கள். 

“என்ன நடந்தது?” என்று கேட்டுக்கொண்டே கவர்ச்சிகரமான புன்னகையோடு சித்தரைப் பார்த் தான் புதன். 

“விழித்திருக்கும் போது உங்கள் இஷ்டத் துக்கு நீங்கள் விளையாடுகிறீர்கள். என் இஷ்டத் திற்கு நான் விளையாட வேண்டும் என்றால் நீங்கள் அயர்ந்து தூங்குகிற சமயமாகத்தான் பார்க்க வேண்டியதிருக்கிறது.” 

வேறு என்ன செய்ய? உபசாரத்திலே உங்களை மயக் கினால்தான் நாங்கள் எங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடிகிறது!” என்றார் சித்தர். 

சுக்கிரனும் சந்திரனும் மொதுவாகச் சிரித்தார் கள். வியாழனோ சித்தரையும் அவருடைய விளை யாட்டினால் நேர்ந்த மாறுதலையும் கண் கொட்டாமல் இமையை நன்றாக அகல விரித்து, நீண்ட நேரம் பார்த்தான். அந்தக் குரு-பார்வையில் பூமியைப் போலவே கிரக நாதர்களின் உள்ளமும் குளிர்ந்து விட்டது! 

அந்தக் குளிர்ந்த தருணத்திலேயே சித்தர் அவர் களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். மறு வினாடி வேதப் பொருளை ஒலிக் கோவையிலே உரை செய் யும் அந்த அற்புதமான புல்லாங்குழலின் மாய கீதம் பொதிகைச்சாரலிலே ஒலிக்கத்தொடங்கியது. அந்த ஒலியின் இணைப்பாக ஆடு மாடுகளின் சலங்கைகள் ஒலித்தன. அந்த இன்னொலியிலே சொக்கியவாறு, மனம் என்ற வண்டின் ரீங்காரமாக அந்த மகா னுடைய தெய்விகப் பாடலும் அங்கங்கே கேட்டது: 

அல்லல்வினை இல்லை என்று
தும்பீ பற – பரம 
ஆனந்தம் கண்டோம் என்று 
தும்பீ பற! 
தொல்லை வினை நீங்கிற் றென்று 
தும்பீ பற – பரஞ் 
சோதியைக்கண் டோம் என்று 
தும்பீ பற! 

– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *