விண்ணிலே ஓர் வழிகாட்டு தாரகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2025
பார்வையிட்டோர்: 1,475 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(கிறிஸ்துமஸ் சிறுகதை)

ஊர் முழுவதும் கிறிஸ்துமஸ் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. கடற்கரையின் தூரத்தில் தெரிந்த அடிவான நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த விக்டர், ஒரு முறை இந்த கடல் அலைகள் நம்மை இழுத்துக் கொண்டு போய் விடாதோ என்று நினைத்தவன், ‘சே! என்ன வாழ்க்கை! நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் விழா. நாளை எல்லோரும் நடுநிசி திருப்பலிக்குத் தேவாலயம் செல்லும் போது என்னை எவ்வளவு ஏளனமாகப் பார்ப்பார்கள்? இந்த சில்வியா இப்படி பண்ணி விட்டுப் போய் விட்டாளே… இவள்தான் உலகம் என்று கனவுகளிலே வாழ்ந்திருந்தேனே… எங்காவது மும்பை அல்லது சென்னைப் பக்கம் புறப்பட்டு போய் விடலாமா?’. அவன் நினைவுகளை கடலலைகளின் பேரிச்சல்கள் வந்து கலைத்து விட்டுப் போனது. 

காலைத் தழுவிவிட்டுப் போன அலை நீரின் நுரையில் கையைக் கழுவிக் கொண்டு திரும்பியபோது, மோகனும் ஜோசப்பும் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு லுங்கியை எடுத்துக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

“என் தங்கை சில்வியா எங்கேடா?” என்றான் ஜோசப். 

“நான் கல்யாணம் செய்து கொள்ள இருந்த என் வருங்கால மனைவி சில்வியாவை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?” என்று கேட்டான் மோகன். 

“மோகன், ஜோசப்… நான் சொல்வதைக் கேளுங்கள். சில்வியாவை நேற்றிலிருந்து காணாமல் நான் துடித்துக் கொண்டிருக்கிறேன். ஊரிலே எல்லோருமே நான் தான் அவளை எங்கேயோ கொண்டு போய் தனியாக அடைக்கலம் தந்து வைத்திருக்கிறேன் என்று பின்புறமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.”  

“ஜோசப்… உன் தங்கையை நான் காதலித்தது உண்மை. அவளும் என்னை விரும்பினாள். ஆனால், அப்பா, அம்மா சம்மதத்தோடு தான் அவள் கரம்பிடிக்க விரும்பினேன். அவள் கூட நான் ஓடிப்போகலாமா என்று அழைத்திருந்தால் வந்திருக்க மாட்டாள். நாங்கள் எப்போது பேசினாலும் நமது பெற்றோர் களின் சம்மதத்தோடும், உற்றார் உறவினர் புடைசூழ மகிழ்ச்சியாக பெரிய அளவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தான் பேசுவோம்.. 

“இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓடிப் போயிருந்தால் நானும் அவளோடு போயிருக்க வேண்டாமா? நான் அவளை ஒளித்து வைத்துக் கொண்டு இங்கே நம் ஊரில் இவ்வளவு தைரியமாக அலைய முடியுமா?” என்றான்.

“இவன் ஒழுங்காக எதையும் சொல்லமாட்டான். நான் திருமணம் செய்ய இருந்த பெண்ணை கூட்டிக் கொண்டு போய் எங்கேயோ அடைத்து வைத்துவிட்டு இப்போது பொய் சொல்கிறாயா” என்று கூறி ஓங்கி ஒரு அறைவிட்டான் மோகன்.

கன்னம் விண்ணென்று வலிக்க தலைக்குள் நட்சத்திரங்கள் சுழன்றது. “ஏய்.. வீணாக அடிக்காதே. உண்மையைத்தான் சொல்கிறேன்” என்றான் விக்டர்.

“சும்மா கேட்டால் இவன் பதில் சொல்லமாட்டான். மயிலே… மயிலே… என்றால் இறகு போடாது. என்னிடமே என் தங்கையைக் காதலித்தது பற்றி பெருமையடிக்கிறாய் என்றால் உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும்?” அருகில் கிடந்த கம்பை எடுத்து வீசினான் ஜோசப். 

தடுத்துக் கொண்ட விக்டர் “கொஞ்சம் யோசித்துப் பார். உன் தங்கையை காதலித்ததை இப்போது நான் மறுக்க முடியாது. அதே நேரத்தில் உன்னிடம் நான் பொய் சொல்லவும் விரும்ப வில்லை.” 

“கொஞ்சம் யோசித்துப் பார். இந்த வருடக் கிறிஸ்துமஸ் அன்று உனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியான விஷயம் சொல்லப் போகிறேன் என்று நான் சொல்லும்போதெல்லாம் என்ன பெரிதாக மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கிண்டலடித்தாயே…”

“ஒரு நடுநிசி திருப்பலி முடிந்ததும் எங்கள் காதலை உன்னிடம் சொல்லி சம்மதம் வாங்கக் காத்திருந்தேன். உண்மையாகச் சொல்கிறேன்… என் வீட்டில் கூட  சில்வியா எங்கே என்று என்னிடம் கேட்கிறார்கள். எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ அவள் போய்விட நான் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உண்மையிலே அவள் எங்கே போனாள் என்று தெரியாது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மோகன் அவனை உதைத்துத் தள்ளி விட்டு, “இவனை இப்படிக் கேட்டால் சொல்லமாட்டான்” என்று இடுப்பிலிருந்த மீன் கத்தியை எடுத்துக் குத்த வந்தான்.  

வேகமாக ஓடி வந்த சில்வியா கையிலிருந்த டார்ச் லைட்டால் கத்தியைத் தட்டி விட்டு, “என்னண்ணா… உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கிறது… இப்படி மோகனை கூட்டி வந்து விக்டரை கொலை செய்ய பார்க்கிறாய்” என்று கத்தினாள். 

“சில்வியா… நீ எங்கே போயிருந்தாய். இரண்டு நாட்களாக நாங்கள் உன்னைத் தேடாத இடமேயில்லை” என்றான் ஜோசப்.
 
“நான் வேலைக்குப் போவதில் யாருக்கும் விருப்பம் இல்லை. மதுரையில் எல்.ஐ.சி.யில் இன்டர்வியூவிற்கு யாரிடமும் சொல்லாமல் கிளம்பி விட்டேன். அதற்குள் இப்படி ஒரு பெரிய பூகம்பத்தையே கிளப்பி விட்டீர்கள். இப்போது ஒரு கொலை செய்திருந்தால் நம் வீட்டில் கிறிஸ்துமஸ் எப்படி இருக்கும்” என்று கத்தினாள். 

“ஸாரி… சில்வியா… அவசரப்பட்டுவிட்டேன். நீயும், விக்டரும் உள்ளம் திறப்பதற்கு இதுகூட ஒரு வாய்ப்பு தான். மோகன் உன்னை விரும்பியதால் தான் இப்படி” என்றவன் “வாடா மோகன்” என்று அவனை இழுத்துக் கொண்டு செல்ல, “என்னை மன்னித்து விடுங்கள் விக்டர்” என்றாள் சில்வியா கண்ணீருடன்.

“எல்லாம் நல்லதுக்குத் தான். கிறிஸ்து பிறப்பில் இறைவன் நம்மை இணைக்க மனமுவந்துள்ளார்” என்றான் மகிழ்ச்சியுடன். 

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *