விசாரணை




(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரெக்கைகளை அடித்துக் கூவிய சேவலின் சத்தத்தில் முழிப்பு தட்டிவிட்டது. முற்றத்தில் லட்சுமி சாணிப்பால் தெளிக்கிற சளப், களப்!
கனியப்பனுக்கு எந்திரிக்க மனசில்லை. மனசுக்குள் ஓடுகிற எண்ணத்தின் கையைப் பிடித்துக்கொண்டு, அதன் போக்கிலேயே மிதக்க வேண்டுமென்ற ஆசை. மனசுக்குள்ளேயே கதை தேடி அலைகிற எண்ணம்.
உள்ளுக்குள் நிறைய கதைப் பிண்டங்கள். இன்னும் வடிவம் கொள்ளாத அரைகுறையான பிண்டங்கள். ஏதாச்சும் ஒரு பிண்டத்தை எடுத்து, முழுசாக வார்த்து, வர்ணம் தீட்டி, இன்னிக்கே தபால்ல அனுப்பியாகணும். பொங்கல் மலருக்குக் கதை தர்றதாக ஒப்புக்கொண்டாச்சு. தேதி நெருங்கி வந்து நின்னு மிரட்டுது.
எந்தப் பிண்டத்தை எடுக்கலாம்! உள் உலகத்திற்குள் நிறைய கதைகள். அரையும் குறையுமாய் சிதிலமாய் கதைகள். மூடிய கண்ணுக்குள் ஏதேதோ காட்சிகள்.
தகரக் கதவு தடதடக்கிற சத்தம். உள் உலகத்திலிருந்து கனியப்பனை வெளியே இழுத்துப்போட்ட சத்தம்.
”யாரது?” முகச் சுளிப்போடு கண்ணைத் திறந்தான்.
அழுக்கான இருட்டில் ராமசாமி தெரிந்தான். அவனைக் கண்டவுடன் புரிந்துகொண்ட மனசுக்குள், சண்டாளமாக எரிச்சல். இவன் நிஜ உலகத்தின் நிதர்சனம்.
“என்னப்பா?”
“இன்னிக்குக் காலைக் கரண்டு, எனக்கு நேத்தே பாய்ஞ்சு போச்சு.நீங்க இப்ப தண்ணி பாய்ச்சப் போறீகளா? இல்லே, உங்க தம்பிகிட்டே சாவியைக் குடுத்து தண்ணிப் பாய்ச்சச் சொல்லவா?”
மனசுக்குள் அழுத்துகிற ஒரு பாரம்.
நாலைந்து நாட்களுக்கு முன்பே பாய்ந்திருக்க வேண்டும். வாடித் துவண்டு கிடக்கிற பருத்திச் செடிகள். உச்சிப் பொழுதில் பார்த்தால்…குலை பதறுகிறது. இலைகள் எல்லாம் முகம் செத்துச் சாம்பலாய்த் தொங்குகிற கோரம், சாகக் கிடக்கிற குழந்தைகளைப் போல மனசைத் துடிக்கச் செய்கிற சோகம்.
“என்ன சொல்றீக?” நெருக்குகிற நிஜ உலகம்.
“ஐயய்யோ, நா பாய்ச்சணுமய்யா. வாடிப் பொசுங்குது”
“காலைக் கரண்டு, சீக்கிரம் போங்க. இந்தாங்க கரண்டு ரூம் சாவி. ”
வழக்கமாய் உட்கார்ந்து கதை எழுதுகிற சாய்வு பெஞ்ச்சையும், பேடையும் பார்த்தான். அவை, இவனைப் பரிதாபமாய்ப் பார்ப்பது போலிருக்கிறது. நெருங்கமாட்டாயா, தொடமாட்டாயா என்று கெஞ்சுவதுபோல் இருக்கிறது.
வெள்ளாமையைப் பொசுங்கவிட்டுட்டு, உட்கார்ந்து கதை எழுதவா முடியும்? கூலியாளைவிட்டுத் தண்ணி பாய்ச்சறாப்புலே பொழப்பு ஞாயமும் இல்லியே…
அவனுக்குள் சண்டாளமாய்ப் பொங்கிப் பொருமிய கோபம். யார் மீது மோதுவது என்று தெரியாமல் சீறுகிற குருட்டுக் கோபம். ‘ச்சீய், நாய்ப்பய பொழப்பு!’
எதையோ எதற்கோ திட்டிவிட்டு, மம்பட்டியை எடுத்தான்.
“ஆசையிருக்கு பேனா எடுக்க… யோகமிருக்கு மம்பட்டி பிடிக்க!”
நீச்சுத் தண்ணியைக் குடித்துவிட்டு வெளியே வந்தால், முகம் தெரிகிற வெளிச்சம். மட்டு மரியாதையற்ற மேல் காற்று. கோடையிலும் கோடையான வறண்ட கோடை. நிஜ உலகத்தின் அக்கினிக் கோடை.
கனியப்பன் அவசரமாய்ப் புஞ்சைக்குள் நுழைந்தான். பெரு வாய்க்காலை மண் வெட்டியால் செதுக்கி ஒழுங்குபடுத்தினான். வாய்மடைகளை விலகி வைத்தான். தொட்டியில் கிடந்த தண்ணீரை அள்ளி அள்ளிக் குழாய்க்குள் ஊற்றினான். எல்லாம் துரிதகதி.
பரபரப்பாய் ஓடி பம்ப்ஷெட்டைத் திறந்தான். குப்பென்று மூஞ்சியில் மோதுகிற புழுக்க நெடி. நாசி கமறலெடுக்கிறது. உள்ளுக்குள் இறங்கி, ‘அடிபெட்டுக்குள்’ வந்து, ‘ஏர்வாசை’ பிடுங்கிவிட்டான்.
தவ்வி, மேலேறி, பச்சை பட்டனை அழுத்தினான். சவமாய் படுத்துக்கிடந்த மோட்டார், வேதாளப் பேரிரைச்சலாய் உயிர் பெற்றது. அள்ளி இறைத்த நீர், வெள்ளிக்கற்றையாய்ப் பாய்கிறது.
தொட்டியில் நுரை பொங்கிப் பெருகி, வாய்க்காலில் ஓடத்துவங்கியது. பாம்புகள் போட்டி போட்டுக்கொண்டு ஊர்ந்து ஒடுவது போலிருந்தது.
வேலைப் பரபரப்பில் தெரியாமலிருந்த களைப்பு, இப்போது முழுசாக உணர வைக்கிறது.
டிராயர் பாக்கட்டில் நெளிந்து கிடந்த சிகரெட்டை எடுத்தான். ஆசையோடு பற்றவைத்துக்கொண்டான்.
தோட்டத்திற்குள் தலைவைத்த தண்ணீர், கழுத்தடி பாத்திக்குள் முதலில் பாய்ந்து பரவியது. இலைச் சருகுகளை இழுத்துச் செல்கிற சரசர சத்தம்; வெடிப்புகளுக்குள் பாய்ந்து, டிப் டிப் டிப்பென்று நுரை விடுகிற சத்தம்.
கயலியை அவிழ்த்துச் சுருட்டினான். டிராயர் பனியனுடன் வாய்க்காலுக்குள் ஓடினான். வாய்மடையை கொத்தி விலக்க, அடுத்த பாத்திக்குள் தலை நுழைக்கிற பாம்புத் தண்ணீர்.
மஞ்சணத்தி மரத்தில் வந்து நின்று கரைகிற பனங்காடை, குஞ்சைப் பறிகொடுத்த தாயின் பரிதவிப்பாக அதன் கதறல். இவன் மனசைக் கலங்க அடிக்கிற கதறல். வேலிப் புதருக்குள் செம்போத்துப் பறவையின் இனிய கூவல்.கூக்கு, குக்கூ… கூக்கூ, குக்கு…குயிலை ஞாபகபடுத்துகிற இனிய குரல். காதலியைத் தேடி ஏங்கிக் கூவுகிற, தாபக் கூவல்.
கதை எழுதிக்கொண்டிருக்கவேண்டியவன், இங்கே சகதியை வகிர்ந்து கொண்டிருக்கிறான். தூரத்து மலையையும், சூரியனையும் பறவைகளையும், அதன் உள் உலகங்களையும் ரசித்துக் கொண்டிருக்கிறான். நல்ல கூத்துதான்.
டீக்கடையில் டேப் ரிகார்டு பாடுகிற சத்தம், டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிற மனசு. ஊரைப் பார்த்தான். காலை வெயிலின் தங்கப் பிரகாசத்தில் துல்லிய அழகுடன் தெரிகிற கிராமம். காரை வீடுகள், ஓட்டு வீடுகள், ஏராளமாய்க் கூரை வீடுகள்.
ஊரிலிருந்து வருகிற ஒற்றையடிப்பாதை. ஏமாற்றத்தைத் தருகிறது. லட்சுமி வரவில்லை. வந்தால்…டீ வரும். கொஞ்சம் தெம்புவரும்.
நிறை நிறையாய்ப் பாய்ந்து, அடுத்த வாய்க்காலுக்கு வாய் மடையைக் கொத்தினான். சொத சொதப்பான ஈர மண். பதிந்த மம்பட்டியை இழுக்க முடியவில்லை. ஈரத்தில் கனமேறிப்போன மண், இவன் பலத்தைச் சோதிக்கிறது. மூச்சுப்பிடித்துக் கொத்தி இழுத்தான். புஜமெல்லாம் வலி. நெஞ்சுக்கூடு உலர்ந்துபோய் காந்துகிறது. தொண்டையில் கமறலான எரிச்சல்.
சிரமப்பட்டு வாய் மடை கொத்தி வைப்பதற்குள், ஏற்கனவே பாய்ந்த பாத்தியில் உடைப்பு. ஓடுகிறான் அடைக்க. சேற்றுத் தண்ணீர்’ சளப்பென்று முகத்தில் மோதுகிறது. கடைக் கண்ணில் காந்தல். அதைக் கழுவிக்கொண்டு வியர்வை.
அலுத்துப் போச்சு. ச்சீய்யென்றாகிவிட்டது. உசுரை வதைக்கிற ரணகளமாய்ப் புஞ்சை. பருத்திச் செடிகளைக் கண்டாலே எரிச்சலாக வருகிறது.
பேனா பிடிச்சு எழுத்துக்களை ஆட்டுவிக்க வேண்டியவன், மம்பட்டியைப் பிடிச்சு ஓடுற தண்ணியோட போட்டி போட முடியுமா? கனியப்பனுக்கு உள்ளங்கையெல்லாம் தீப்பிடித்த மாதிரி காந்துகிறது. குனிந்து குனிந்து நிமிர்வதில் இடுப்பெல்லாம் கடுக்கிறது. தொடைச் சதையெல்லாம் முறுக்கிப் பிழிகிற வேதனை.
எரிச்சலில் கண்மூடித்தனமாய் மனசு அலறுகிறது. மோட்டாரை ஆஃப் செய்துவிட்டு ஓடி விடலாமா, என்று கசந்து போய் நினைத்தபோது-
ஒற்றையடிப் பாதையில் உயிர் வந்தது. கையில் காபித் தூக்குச்சட்டியுடன் லட்சுமி வந்தாள். பாலூற்றிய நல்ல காபி. வெல்லமும், தேயிலையும் போட்டு கொதிக்க வைத்த காபி. மனசுக்குள் ஆறுதலாய் ஒரு தென்றல்.
“என்ன இம்புட்டு நேரம்?”
“வீட்லே வேலையை முடிச்சுட்டுத்தானே வரனும்! என்ன இது, இப்படி வேர்த்துக்கிடக்கு? ‘கேஸு, பூஸு’ன்னு இளைக்குது?”
“அதை ஏன் கேக்கே? மனுசனுக்கு உயிர் போகுது.”
“காட்டு வேலைகள்லேயே லேசான வேலை தண்ணி பாய்ச்சுறதுதான். இதுக்கே இப்படி ஓடித்தவிச்சா… மத்த வேலைகளையெல்லாம் எப்படிச் செய்வீக?”
“கதை எழுதுறவனை, தண்ணி பாய்ச்சச் சொன்னா முடியவா செய்யுது?”
“கதை எழுதுனா ஆயிரம் ரெண்டாயிரமா வருது? வருசத்துக்கொருதடவை எப்பவாச்சும் ஒரு எழுபத்தைஞ்சு ரூவா. அதை வைச்சு புள்ளை குட்டிகளைக் காப்பாத்த முடியுமா? காடுகரையைக் கவனிச்சாத்தான் நடக்கும்”
“சக மனுசங்களுக்கு நல்லது சொல்றதுக்கெல்லாம் கூலி எதிர்பார்க்கக்கூடாதும்மா…”
“கதை எழுதறேன்னு சொல்லிக்கிட்டு, இரவும் பகலுமா உறக்கமில்லாம உக்காந்து, சீரட்டை ஊதி ஊதி ஒடம்பைக் கெடுத்துக்கிடுதீக.அப்புடி ஒழைக்கிற ஒழைப்புக்கு ஒரு வருமானம் வரவேண்டாமா? ஒரு கூலி வரவேண்டாமா? வரலேன்னா, எதுக்காக ஒழைக்கணும்? எதுக்காக எழுதணும்? நாலு பேரைப்போல, காடு கரையிலே பாடுபட்டுட்டு இருக்க வேண்டியதுதானே?”
“ஐயோ…ஒனக்கு இதை எப்புடிப் புரிய வைக்கப் போறேன்?”
“எனக்குப் புரியவும் வேண்டாம். நீங்களும் உருப்பட மாட்டீக. சரி, சரி… காபியைக் குடிங்க.
அவள் இரண்டு பாத்திகளுக்குக் கொத்திவிட்டாள். காபியைக் குடித்தபின், கனியப்பன் சிகரெட்டைப் பற்றவைத்துப் புகையை ஊதினான். நெஞ்சுக்குள் மயிலிறகால் உரசுகிற சுகம். உடம்புக்குள் கொஞ்சம் தெம்பு வந்திருந்தது.
லட்சுமி போய்விட்டாள். மறுபடியும் தனியனானான். அவன், அவனுக்குள் உலவினான்.
காலுக்கடியில் ஓடுகிற வாய்க்கால் தண்ணீரின் பாஷைக்கு அர்த்தம் கற்பித்துப் பார்த்தான். பாத்தி நீரில், கோர ஜ்வலிப்பாக பிரதிபலிக்கிற சூரிய கிரணத்தை வார்த்தைப்படுத்திப் பார்த்தான்.
நீருக்கடியில் ஓடுகிற மண் துகள்களையும், கரைகிற மண்கட்டிகளையும், அசையாமல் நிற்கிற கற்களையும் பார்த்து… இவற்றையெல்லாம் எதற்கு உவமைப்படுத்தலாம் என்று மண்டைக்குள் குடைந்துகொண்டிருந்தான்.
பொங்கல் மலருக்குக் கதை தருவதாக ஒப்புக்கொண்டு கடிதம் எழுதி, ஒரு மாதம் ஓடிவிட்டது. ஒன்று மாற்றி ஒன்றாக ஒவ்வொரு நாளும் இடைஞ்சல். உர உப்பு வாங்க பணம் வாங்கணும். சிம்புஷ் மருந்தடிக்க ஆள் பார்க்கணும். களைவெட்ட ஆள் கூப்பிடணும். கடன் கேட்டு எவனெவன் முகங்களையோ பார்த்து அலையணும். குழந்தைக்குக் காய்ச்சல், தலைவலின்னா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். வந்திருக்கிற பாராட்டு விமர்சனக் கடிதங்களுக்குப் பதில் போடணும்.
இப்படி நித்தம் ஒரு நச்சுப் பிடுங்கல். ஒரு இச்சிலாத்தி. நாளைதான் கடைசித் தேதி. இன்றைக்கு எழுதி முடித்துவிட நினைத்தால்…வந்து சேர்ந்தது, தண்ணீர் பாய்ச்சுகிற உத்யோகம். கொடுமை! நிஜ உலகத்தின் நிர்த்தாட்சண்யமான கொடுமைகள்… சராசரி சம்சாரிக்குரிய சகல சங்கடங்களும், பிக்கல் பிடுங்கல் கடமைகளும், இவனையும் போட்டு அமுக்கிக்கொள்கிறது. ஏறிக் . கொண்டு ‘தங்கு, தங்கு’ என்று குதியாட்டம் போடுகிறது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் புறம் தள்ளி, ‘எழுத்தே லட்சியம்’ என்று இருக்க முடிகிறதா என்ன?
லட்சுமி சொல்றதும் ஞாயம்தானே! கதை எழுதறதைவிட, தண்ணி பாய்ச்சுறது எம்புட்டோ மேல். பொங்கல் மலர் வந்தா வந்துட்டுப் போகட்டும். அதுக்காகப் பதறிப் பதைச்சு எழுதி ஆகப் போறது என்ன? கிடைக்கப்போறது என்ன? ஒன்றுமில்லே.
புகழையும் பெருமையும் வைச்சுக்கிட்டு மாரடிக்கவா? அரைப்படி அரிசிக்குக்கூட ஆகாது. உப்புக்கல்லுக்குப் பெறாத ஒரு விஷயத்துக்காக…எதுக்காக பதறிப் பதைச்சு, வீணா மனசை அலட்டிக்கணும்?
திடுக்கிட்டுக் காலடியைப் பார்த்தான் கனியப்பன். வாய்க்காலில் தண்ணீரைக் காணோம். என்ன ஆயிற்று? விருட்டென்று கிணற்றுப் பக்கம் பார்த்தான்.
மோட்டார் ஓடுகிற இரைச்சல். வெள்ளிக் கற்றையாய்த் தொட்டியில் பாய்கிற நீர்.அப்போ… தண்ணீர் எங்க போகிறது?
அலையக் குலையப் பெரு வாய்க்காலுக்குள் ஓடினான். உடைப்பு. பெரிய உடைப்பு. அசந்த ஆட்டுக்காரனை ஏமாற்றிவிட்டுப் பயிரில் மேய்கிற கள்ள ஆடுகளைப் போல, தண்ணீர் ஆத்திர அவசரமாய் ஓடிக்கொண்டிருந்தது.
திரும்பவும் பாத்திக்கு ஓடி, மம்பட்டியை எடுத்து வந்து, பக்கத்து மண்ணை வெட்டி வெட்டி அள்ளி, கரடுகளை எடுத்துப்போட்டு அடைத்து முடிப்பதற்குள், ‘ஆத்தாடி அம்மாடி, என்றாகிவிட்டது. கையெல்லாம் உளைச்சல். ஓய்ந்துபோன மாதிரி அயற்சி. தொடையெல்லாம் பிசைகிற வலி.
மறுபடியும் பாத்திக்கு ஓட்டம். சகதிக்குள் சளபுளத்து ஓடி, வழுக்கி, சாயாமல் பாலன்ஸ் பண்ணி, அங்கும் ஈர மண்ணைக் கொத்தி, வாய்மடையை விலக்கி..
ச்சே! வாழ்க்கையே வெறுத்துப்போன மாதிரி இருந்தது. இயலாமையின் எரிச்சலில் யார் யாரையோ திட்டினான்.
நடுமுருசலுக்கு வந்தாயிற்று. அப்பாடி… கொஞ்சம் நிம்மதி. இந்த முருசலில் சிரமமில்லாமல் நீர்ப் பாய்ச்சலாம். வாய் மடையைக் கொத்தி விட்டுவிட்டு, கொஞ்ச நேரம் இடுப்பு ஆற்றலாம். தேங்காது. உடைக்காது. ஒழுங்காகப் பாயும். தார் ரோட்டில் மாட்டு வண்டி பற்றுவது மாதிரி… சுலபமாக இருக்கும்.
கதை எழுத வேண்டியதில்லை என்று முடிவு செய்து கொண்டதால்… மனசுக்குள் ஒரு விடுதலை பெற்ற சிலாக்கியம். மூச்சுத்திணறல் குறைந்திருந்தது. பிக்கல் பிடுங்கல் இல்லை. தவிப்பு – குமைச்சல் தணிந்திருந்தது.
தீக் கோலமாய் எழுந்த சூரியன், உலகைக் கண்டு பயந்து முகம் வெளுத்து மேலேறுகிறது. பால் கேனும், காலைப் பஸ்ஸும் வந்துவிட்டுப் போய்விட்டன. மணி எட்டுக்கு மேலிருக்கும்.
வடக்கே ஆறு. ஆற்றங்கரையில் பனந்தோப்பு. தோப்புக்குக் கிழக்கே மயானக்கரை.
தற்செயலாக மயானக்கரையைப் பார்த்தான். பார்வையைப் பிடுங்கமுடியவில்லை. அங்கே..
மஞ்சனத்தி மரத்தை அடையாளமாகக் கொண்டிருந்த சமாதியின் முன்னால் ஒரு சிறுவன். நீல நிற டவுஷர். மேலே வெற்று உடம்பு. செம்பட்டை ரோமம். சமாதி முன்னால் நின்று, நெஞ்சில் அடித்துக் கொள்கிறான். கண்களைத் துடைத்துக் கொள்கிறான். ஏதோ சொல்லிப் புலம்புகிறான். அழுகிறான். யாரிது? யார் இந்தப் பையன்? கனியப்பன் மனசுக்குள், கூடு கட்டுகிற சோகம்.
சூரியப் பிரகாசம் கண்களை அம்பாகக் குத்துகிறது. பார்க்கவிடவில்லை. இடது கையைக் கண்ணுக்குக் குடையாக்கி, பார்வையைத் தீட்சண்யப்படுத்திக்கொண்டு-
அட, நம்ம மணிமுத்து!
போன வருஷம்தான், முல்லைக் கொத்துப்போல மூன்று பிள்ளைகளை விட்டுவிட்டு ராசாத்தி, போய்ச் சேர்ந்தாள். மூன்றில் கடைக்குட்டி மணிமுத்து.
இன்பத்தின் – துன்பத்தின் – வாழ்க்கையின் பங்காளியாக இருந்த ராசாத்தியைப் பறிகொடுத்துவிட்டுத் தவித்து நின்ற முருகையா, சொந்த இழப்புச் சோகத்தை விழுங்கிக் கொண்டார். தாயற்ற பிஞ்சுகளின் ஏங்கிய கண்களைப் பார்த்துப் பார்த்து மனம் கலங்கினார். நெருப்புக்குள் இருந்த மெழுகாக உருகிக் கரைந்தார். உள்ளுக்குள் உடைந்து நொறுங்கிக் கலகலத்துப் போனார்.
ஏழ்மையோடு, இந்தக் கொடுமையும் சேர்ந்து, அவரது கழுத்தைப் பிடித்து நெரித்தது. அவரது ஒரே குறி, பிள்ளைகளின் பூ மனசு வாடிவிடக்கூடாது, ஏங்கிச் சாம்பிவிடக்கூடாது, தாயில்லாக் குறை அதுகளுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதுதான்.
ராசாத்தி இருந்து காட்ட வேண்டிய பரிவு, பாசம், அன்பு முழுவதையும் சேர்த்துப் பிள்ளைகளின் மீது கொட்டினார். வாழ்வின் வெக்கை பிள்ளைகள் மீது பட்டுவிடாமல், தன் அன்பு ரெக்கைக்குள் அந்தக் குஞ்சுகளை அரவணைத்துப் பொத்திக்கொண்டார்.
பிள்ளைகள் கண்கலங்கச் சம்மதிக்கவே மாட்டார். அப்பேர்ப்பட்டவரின் அருமைப் பையன், தாயின் சமாதியில் வந்து அழுது புலம்புவது என்றால்…
அந்தப் பூ மனசில் எவ்வளவு கொடிய நிராதரவு உணர்ச்சி!
கனியப்பன் பார்வை, அந்தச் சிறுவன் மீதே நங்கூர மிட்டிருந்தது. இடையில் சில பத்து மீட்டர் தூரம். மனசளவில் இடைவெளியில்லை. மனசுக்குள் மணிமுத்து இருந்தான். சிறுவனின் கண்ணீர், உள்ளே இறங்கிச் சுட்டது. மனசை அறுத்தது.
இதயமில்லாத உலகில், இந்தச்சிறுவனுக்குத் தாயின் சமாதியே இதயமாகியிருக்கிறது.
இப்படி நிராதரவுணர்ச்சிக்காளாகி, மயானக் கரையில் வந்து புலம்பி அழுகிற அளவுக்கு இந்தப் பூவை எந்தப் பாவி கிள்ளியது? வேறு யார் கிள்ளியிருந்தாலும், மணிமுத்து தகப்பனிடம் முறையிட்டிருப்பான். முருகையாவும் சண்டாளமாகிச் சண்டைக்குக் கிளம்பி இருப்பார்.
முருகையாவே கிள்ளியிருப்பாரோ…! அதனால்தான் இந்தப் பூ, அம்மாவை நினைத்துப் புலம்பியழுக இங்கு வந்திருக்கிறதோ…?
பிள்ளைகள் கண்கலங்கக்கூடச் சம்மதிக்காத முருகையாவாகை நீட்டி அடித்திருப்பார்? அவரால் அடிக்கமுடியுமா? அடிக்க மனம் வருமா? அவர் அவராக இல்லாத நிலையில்… முறுக்கேறிய மனநிலையில் அடித்திருப்பாரோ?… வேறு யாரையோ அடிக்க வேண்டிய அடியை அடிக்க முடியாமல்… இவனிடம் வந்து ஆத்திரத்தைக் காட்டியிருப்பாரோ?
கடையிலோ… தெருவிலோ… தோட்டத்திற்குப் போகும் வழியிலோ… எவனோ ஒருவன் மூலமாகச் சமுதாயம் இவரது மடியைப் பிடித்து இழுத்துச் செவிட்டில் அறைந்து, அவமதித்து மகிழ்ந்திருக்கும். அவரது ஆன்மாவைக் கடித்துக் குதறியிருக்குமோ…?
கொதிப்பேறிப்போன -குழம்பிப்போன – மனநிலையோடு வீட்டுக்கு வந்திருப்பார். வழக்கம்போலே மணிமுத்து கெஞ்சியிருக்கலாம். அண்ணனைப்பற்றி அபத்தமாய்ப் புகார் செய்திருக்கலாம். அடம்பிடித்திருக்கலாம்.
சகித்துக்கொள்கிற வழக்கத்திற்கு மாறாக… அவர் அவராக இல்லாமல் – இன்று அவனை ஆத்திரத்தில் அடித்திருப்பாரோ?…
வெலவெலத்துப்போய் வெம்பிப்போய் – அன்பான ஆதரவுக்காக ஏங்கி, இந்தச் சிறுவன் இங்கு வந்து நிற்கிறானோ…
அடப் பாதரவே… இந்தச் சின்ன மலர் என்ன பாவம் செய்தது? இதற்கு இந்த வயசில் இந்த நிராதரவுணர்ச்சியா? நாதியற்றுப்போன உணர்வா? அடக் கொடுமையே!
சம்பந்தமில்லாத தூரத்தில் ஒதுக்கத்தில் – இருககிற இந்தச் சிறுவனைக்கூட, தனது நீசக் கரத்தினால் தீண்டியிருக்கிறதே, கோர நகங்களால் இந்தப் பிஞ்சின் இளநெஞ்சைக் கீறியிருக்கிறதே… இந்தப் பிணம் தின்னும் சாஸ்திர சமுதாயம், எழுத்தாளனுக்கு மட்டும் இரக்கம் காட்டவா செய்யும்? இரக்கம் காட்டுறதுக்கு இதனிடம் ஈரம் ஏது? ரத்தப்பசியைத் தவிர வேறு எந்த நாகரிகமுமில்லாத இதனிடம், அரவணைப்பை எதிர்பார்ப்பதே எவ்வளவு அசட்டுத்தனம்? அப்பாவித்தனம்?
மனுசத்தன்மைக்காக ஏங்குகிற மனிதர்களை, மனுசத் தன்மையோடு வாழவிடாத இந்த ராட்சசனோட, எனக்கு எதுக்கு விசனம்? விசனப்பட்டு எதுக்காக ஒதுங்கணும்? எதுக்காக எழுதாம் ஒடுங்கிக்கணும்?
ஓங்கியடிச்சு நொறுக்கித் தீரவேண்டிய பகைவனோட, என்ன ஊடல் வேண்டிக்கிடக்கு?
தோட்டம் தண்ணீர் பாய்ந்து முடிந்து… குளித்துவிட்டு வீடு திரும்புகிறவரை, மனசுக்குள் மணிமுத்து. துவண்டு சிடந்த உணர்வுகளைத் துடிக்க வைக்கிற மணிமுத்து. ஓய்வறியா போராவேசத் தீயை ஊதி ஊதிப் பெருக்குகிற மணிமுத்துக்கள்…
இரவு பத்து மணிக்கு மேல்-
ஓர் உறக்கம் உறங்கிவிட்டு விழித்த லட்சுமி, எரிச்சலுடன் முகத்தைச் சுளித்தாள். கண்களைச் சுளித்தாள். கனியப்பன் பிரம்மக்கலை நிகழ்த்திக்கொண்டிருந்தான்.
“லைட்டைப் போட்டுக்கிட்டு இதென்ன – சாமக்கூத்து? இப்படி ஒடம்பைக் கெடுத்துக்கிட்டு எழுதுறதாலே… என்ன லாபம்?”
“லாப நஷ்டக் கணக்குப் பாக்குற யாவாரமில்லே லட்சுமி, எழுத்துங்கிறது ஞாயத்துக்கான கலகம்.”
“இப்படி எழுதி எழுதி என்னத்தைக் கிழிச்சீக?”
‘கிழிக்கலே. கிழிஞ்சு கிடக்கிறதையெல்லாம் சுட்டுப் பொசுக்கிட்டுப் புதுசாத் தைக்கணும். தைச்சுக்கிட்டிருக்கேன்.’
அவளுக்குப் புரியவில்லை. இச்சிலாத்தியோடு முணுமுணுத்துவிட்டு, உறக்கத்தில் உறைந்தாள். கனியப்பன், மணிமுத்துக்களின் கண்ணீரை விசாரணை செய்துகொண்டிருந்தான்.
– மூட்டா மாநாட்டு மலர், 1990.
– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு: 2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |